உள்ளடக்கத்துக்குச் செல்

ஔவையார் தனிப்பாடல்கள்/தாய்மொழியது!

விக்கிமூலம் இலிருந்து

80. தாய் மொழியது!

ன்று இறைவனை வணங்குவதில் அவரவர் தத்தம் தாய் மொழியினைப் பயன்படுத்த வேண்டுமா, அல்லது வழக்கில் புகுந்துவிட்ட வடமொழியையே தொடருதல் வேண்டுமா என்றவொரு விவாதம் நடைபெறுகின்றது. தாய்மொழியையே ஆதரிப்பாரும், வழக்கத்தை மாற்ற வேண்டாம் என்பாரும் பலர். இறைவன் அனைத்துமே அறிந்தவன்; அவனுக்கு எந்தமொழியும் ஒன்றே. இவ்வாறு பட்டும்படாமலும் கூறி ஒதுங்குவார்கள் சிலர். இப்படி ஒரு சர்ச்சை ஔவையாரின் காலத்திலும் நடந்துள்ளது. அதற்கான ஒரு நல்ல முடியினை அவரும் வகுத்துக் கூறியுள்ளார். அதனை நாமும் காணலாம்.

ஔவையார், குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரித் திருமால் திருப்பதிக்குச் சென்றிருந்தபோதுதான் இந்தச் சர்ச்சை எழுந்தது. திருக்கோயிலிலே அந்நிய மொழியான வடமொழியினைப் பயன்படுத்துவது கூடாது' என்று சிலர் வாதிட்டனர். பழக்கத்தை மாற்றமாட்டோம் என்றனர் கோயிலார், ஔவையார் இருவரின் வாதத்தையும் கேட்டு அறிந்தபின் பாடுகிறார்.

'வான் வளி தீ நீர் நிலம் என்பன பஞ்சமகா பூதங்கள். அறம் பொருள் இன்பம் வீடு என்பன வாழ்க்கைப் பேறுகள், அரன் அரி அயன் என்பவர் மூன்று கடவுளர்கள். இவை யாவும் பெய்து அமைந்த செம்பொருளாக விளங்குபவன் இறைவன்.

இவன் எந்த வேதங்களுக்கும் தொலைவாகி, அவற்றைக் கடந்து நிற்பவனும் ஆவான். தண்மை பொருந்திய குருகூரினிடத்தே இவனை வணங்குவதற்குப் பயன்படுத்துவது அந்நிய மொழியே என்று சிலர் சொல்லுகின்றனர். அதுதான் முறையெனவும் சொல்லுகின்றனர். ஆனால், யானோ, வழிபாட்டின் சிறப்பு தாய்மொழியினைப் பயன்படுத்துவதனால் தான் அமையும் என்று, அவர் கருத்தை மறுத்து உரைப்பேன்.'

ஐம்பொருளும் நாற்பொருளும் முப்பொருளும் பெய்தமைத்த
செம்பொருளை எம்மறைக்கும் சேட்பொருளைத் தண்குருகூர்ச்
சேய்மொழிய தென்பர் சிலரியான் இவ்வுலகில்
தாய்மொழிய தென்பேன் தகைந்து.

"ஐவகைப் பெரும் பூதங்களும், நால்வகைப் பேறுகளும், மூவகை மெய்ப்பொருள்களும் ஆகியவற்றைப் பெய்து அமைத்த செம்பொருள் தண் குருகூரின்கண் கோயில் கொண்டிருக்கும் இறைவன். அவன் எந்த வேதங்களாலும் அறிந்துணரவியலாதபடி அவற்றைக் கடந்தும் நிற்பவன்.

அவனை வழிபடும் மரபு வேதமொழியாகிய அந்நியமொழி என்பார்கள். யானோ, இவ்வுலகில் அவரவரின் தாய்மொழியே வழிபாட்டிற்கு உகந்தது என்பதனை வலியுறுத்திச் சொல்வேன்' என்பது பொருள்.

தாய்மொழி வழிபாட்டை ஆதரித்து, இவ்வளவு தெளிவாக வேறு எவருமே கூறவில்லை. குருகூர், நம்மாழ்வார் பிறந்த ஊர்; ஆழ்வார் திருநகரி என வழங்குவது.