ஔவையார் தனிப்பாடல்கள்/வாய் மொழிகள்!
81. வாய் மொழிகள்!
ஔவையாரின் கருத்து கோயிலைச் சார்ந்தவர்க்குப் பொருந்துமாறில்லை. இன்றைக்கு நாலாயிரம் ஆகிய தமிழ் வேதம் திருப்பதிகளிலே முழங்குகின்றது.எனினும், அன்று வடமொழியை விரும்புவோரும் பலர் இருந்தனர். தாய்மொழிதான் வழிபாட்டிற்கு உகந்தது என்றவர், மேலும் அதனையே வலியுறுத்தி மற்றொரு செய்யுளையும் சொல்லுகின்றார்.
அந்நிய மொழியானாலும் சரி, தாய்மொழியானாலும் சரி, சொல்லப்போனால் இறைவனுக்கு இரண்டுமே ஒன்றுதான்.
வேதங்கள் வடபுலத்து ஆன்றோரின் வாய்மொழிகள்; அவர்களுடைய தாய்மொழியும்கூட அது மக்கட்குப் புரியாதபடி இருப்பதனால், அதனை மறை என்றும் சொன்னார்கள்.
அவர்களுடைய தாய்மொழியான வடமொழியைப்போல, மற்றும் சிறந்த பல மொழிகளும் காலந்தோறும் இறைவனைத் துதிக்கப் பயன்பட்டுள்ளன.
இப்படித் துதிக்கப் பயன்பட்ட மொழிகள் பலவாக உள்ளன என்றாலும், அனைத்தும் ஒழித்தற்கு உரியவை என்பேன் நான். தாய்மொழியே பிற அனைத்திலும் சிறந்தது. இதனை வலியுறுத்தியும் யான் உரைப்பேன்.ஔவையாரின் தமிழ்ப்பற்றும் புலமையும் நல்ல நோக்கமும் பாடலிலே திருநடனம் செய்கின்ற சிறப்பை நாமும் கண்டு களித்துத் தெளிவு பெறலாம்.
சேய்மொழியோ தாய்மொழியோ செப்பில் இரண்டுமொன்றே
வாய்மொழியை யாரும் மறையென்பர்-வாய்மொழிபோல்
ஆய்மொழிகள் சால உளவெனினும் அம்மொழியும்
சாய்மொழிய வென்பேன் தகைந்து.
“தூரத்து மொழியோ தாய்மொழியோ சொல்லப் போனால் இறைவனுக்கு இரண்டுமே ஒன்றுதான். முனிவர்களின் வாய்மொழியான வேதங்களை எவரும் மறை என்று சொல்லு கின்றார்கள். அவர்கள் வாய்மொழிபோல மேலும் காலந் தோறும் ஆய்ந்துரைத்த மொழிகள் பலவாக உள்ளன. எனினும், அம் மொழிவகை அனைத்தும் தள்ளப்பட வேண்டியன. எனவே வலியுறுத்தி உரைப்பேன்" என்பது பொருள்.