உள்ளடக்கத்துக்குச் செல்

ஔவையார் தனிப்பாடல்கள்/விலக்குதல் அரிது!

விக்கிமூலம் இலிருந்து
566400ஔவையார் தனிப்பாடல்கள் — விலக்குதல் அரிது!ஔவையார் (தனிப்பாடல்கள்)

97. விலக்குதல் அரிது!

ரு காதலன், தன்னுடைய காதலியின் நோக்கினிற்பட்டுத் தன் காமமிகுந்து செயலிழந்து நின்ற நிலையைக் கூறுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.

ஆலவட்டம் போன்ற முழுநிலவு தங்கியிருக்கும் அழகிய மலைப் பகுதிக்கு உரியவன் ஐவேல் அசதி என்பவன். அவனுடைய மலைச்சாரலில்.

நீலவட்டம் போன்று விளங்கும் கண்கள் நேராக ஒத்து நோக்குகின்ற அந்த நேரத்தில், அந்த நேரிய இழைகளை அணிந்த அவள்...

என்பால் மயக்கத்தை எழச்செய்து என் மனத்தைச் சுழலவும் செய்தனள். பின் என்னிடமிருந்து தான் வட்டமிட்டு ஓடவும் செய்தனள். மீளவும் என்னைத் தானிருந்த இடத்திற்கே வரவழைக்கவும் செய்தனள்.

இன்றும் அவள் தன் வேல்போன்ற கண்களை என்பால் செலுத்தி என்னை வெட்டுவாளானால், என்னால் அதற்கு இலக்காகி அழிவதன்றி, அதனைத் தடுத்து வெற்றி பெறுதல் அரிதாயிருக்குமே?” என்பது பொருள்.

ஆலவட் டப்பிறை யைவே லசதி யணிவரைமேல்
நீலவட் டக்கண்கள் நேரொக்கும் போதந்த நேரிழையாள்
மாலைவிட் டுச்சுற்றி வட்டமிட் டோடி வரவழைத்து
வேலைவிட் டுக்குத்தி வெட்டுவ ளாகில் விலக்கரிதே.

ஆலவட்டம் - ஒருவகை விசிறி. மால் - மையல், வேல் வேல் முனை போன்ற கண்கள். விலக்கல் - தடுத்து நீக்கல்.