உள்ளடக்கத்துக்குச் செல்

ஔவையார் தனிப்பாடல்கள்/புறங்காட்டல் தகுமோ?

விக்கிமூலம் இலிருந்து

96. புறங்காட்டல் தகுமோ?

ரு காதலன் தன் அன்புக் காதலியை நாடி ஆவலுடன் வருகின்றான். குறித்த காலத்து வாராது போயின. அவனுடைய பிழையினை நினைத்து அவள் வருந்தியிருந்தனள். அதனால், அவள்மனத்தே கூடலின் விழைவைக்காட்டிலும் ஊடலின் சினமே மிகுதியாக இருந்தது. அவனும் அதை உணர்ந்தான். அவளுடைய ஊடலைத் தெளிவித்துக் கூடுவதற்கான பல முயற்சிகளையும் செய்து கொண்டிருந்தான்.

இந்நிலையிலே, இரவு வேளையும் வந்தது. இருவரும் பஞ்சணையிற் சேர்ந்தும் இருந்தனர். அவன் ஆர்வமுடன் அணைக்க, அவள் அவன் கைகளை ஒதுக்கியவளாகப் புறமுதுகை அவன் பக்கம் காட்டியவளாகப் படுத்துக் கொள்கிறாள். அப்போது, அவன் அவளைத் தெளிவிக்கக் கூறுகின்ற துறையிலே அமைந்த செய்யுள் இது.

அறங்காட் டியகரத் தைவே, லசதி யகன்சிலம்பில்
நிறங்காட்டுங் கஞ்சத் திருவனை யீர்முக நீண்டகுமிழ்த்
திறங்காட்டும் வேலும் சிலையும் கொல்யானையும்
தேருங்கொண்டு
புறங்காட் டவுந்தகு மோசிலைக் காமன்தன் பூசலிலே?

“ஐவேல் அசதி, அறம் இதுவென அறத்தின் தன்மை தோன்றுமாறு வழங்கிக் காட்டிய கரங்களை உடையவன். அவனுடைய அழகியதான இம் மலை நாட்டிடத்தே, எனக்கு முதுகினைக் காட்டியபடியே படுத்திருக்கும் பெண்ணே! தாமரையிடத்துத் தங்கியிருக்கும் திருமகளைப் போன்றவளே! அவள் போன்ற முகமும், அதனிடத்தே நீண்ட குமிழ மலரைப் போன்ற மூக்கும், என்பால் தம் தொழில் வரிசையைக் காட்டும் வேல் போன்ற கண்களும், சிலை போன்ற புருவமும், கொல்லுந் தன்மையுடைய யானையின் மத்தகங்கள் போன்ற தன பாரங்களும், தேர் போன்ற அல்குல் தடமும் கொண்டவளே!

இவை அனைத்தும் இருந்தும், கரும்பு வில்லியான காமனுடைய இந்தப் போராட்டத்திலே, எதிர்நின்று வெற்றி கொள்ளாமல், புறமுதுகிட்டு ஒதுங்குதல் நினக்குத் தகுதியாகுமோ?” என்றான்.

‘வேற்படையும், வில்லும், களிறும், தேரும் கைக்கொண்டிருந்து பூசலில் புறங்காட்டலாமே?' என அவளைப் புகழ்ந்து கூறிக் களிப்புறச் செய்து, அவளைத் தெளிவிக்கின்றான் அக் காதலன்.