உள்ளடக்கத்துக்குச் செல்

ஔவையார் தனிப்பாடல்கள்/கோதினள்!

விக்கிமூலம் இலிருந்து

95. கோதினள்!

ரு மங்கை நல்லாள் தன்னுடைய மாளிகையின் நிலா முற்றத்திலிருந்து தன்னுடைய தலைமயிரைக் கோதிக் கொண்டிருக்கின்றாள். தெருவூடே சென்று கொண்டிருந்த ஒருவன் அந்தக் காட்சியைக் கண்டான். அவளுடைய அழகிலும், அவள் மயிர் கோதுகின்ற அந்த நளினத்திலும் தன் மனத்தைப் பறி கொடுத்தான். அவன் சொல்வதுபோல அமைந்த செய்யுள் இது.

அழற்கட்டுக் கட்டிய வைவே லசதி யணிவரையின்
மழைக்கட்டுக் கட்டிய மாளிகை மேலொரு மங்கை
நல்லாள்
உழக்கிட் டுரியிட்டு முவ்வழக் கிட்டுரி நாழியிட்டுக்
குழற்கட் டவிழ்த்துட னங்ஙனின் றேமயிர் கோதினளே.

ஐவேலசதியின் மலை நாட்டில் கொடு விலங்குகளும் உள்ளன. ஆதலால் எப்புறமும் நெருப்பிட்டுக் காவல் செய்திருப்பார்கள். இப்படி அழற்கட்டுடன் விளங்குவது அவனுடைய அழகிய மலை.

அந்த மலையிடத்தே மேகத்திரள்கள் வந்து படிந்துள்ளதான ஒரு பெரிய மாளிகை ஒன்றின் மேல்தளத்திலே ஒரு சாரிகை வந்து நின்றாள்.

ஒயிலாக வந்து நின்ற அவள் தன்னுடைய கொண்டையை அவிழ்த்துவிட்டுத் தன்னுடைய தலைமயிரை அம் மாளிகை இடத்தில் இருந்தபடியே கோதவும் தொடங்கினாள்.

'அவளிடத்தே யான் நெஞ்சினைப் பறிகொடுத்தேன்!'

உழக்கு என்பது கால்படி; உரி அரைப்படி; மூவுழக்கு முக்காற்படி; நாழி படிக்கு ஒரு பெயர். அனைத்தும் கூட்டினால், முந்நாழி ஆகும்; மூன்று நாழி மூன்று நாழிகையும் ஆகும். காலை மூன்று நாழிகை அளவில் எனலாம். மேகம் தோன்றத் தன் தோகையை விரித்து ஆடத் தொடங்கும் மயில், அதனைக் குழல் கோதும் அவளுடன் உவமித்தனர்.