ஔவையார் தனிப்பாடல்கள்/வெட்டுண்டன!
94. வெட்டுண்டன!
அலைகொண்ட வேற்கரத் தைவே லசதி அணிவரைமேல்
நிலைகொண்ட மங்கைதன் கொங்கைக்குத் தோற்றின
நீரினங்கள்
குலையுண் டிடியுண்டென் கையினி லெற்றுண்டு
குட்டுமுண்டு
விலையுண் டடியுண்டு கண்ணிர் ததும்பவும்
வெட்டுண்டவே.
“ஐவேலசதியின் கையிடத்து வேல் பகைவரை நோக்கி அசைந்து கொண்டிருக்கும் தன்மையும் கொண்டது. அவனுடைய அழகிய மலை மேல் குடியிருப்பினைக் கொண்ட மங்கை நல்லாள் என் காதலி. இந்த இளநீர்க் காய்கள் அவளுடைய கொங்கைகளின் உருவ எழிலுக்கு ஒப்பாகாமல் தோற்றுப் போயின. அதனால்தான் தம் நிலைகுலைந்து, தம்முள் இடியுண்டு, என் கையால் எற்றும் உண்டன. பின் குட்டுதலையும் பெற்று, விலை கூறலையும் பெற்று, அடிகளையும் பெற்றுக் கண்ணிர் ததும்புமாறு வெட்டுண்டும் போயின" என்பது பொருள்.
வேல் அலைகொள்ளல், பகைவரை நோக்கிச் செலுத்தப் படும் போது, நிலைகொண்ட மங்கை என்றது நிலையான காதல் கொண்டவளையும் குறிப்பிடும். 'விலையுண்டு' என்றது, அவன் அக் காய்களை விலைக்குப் பெற்றுதான் குடித்ததனையும் காட்டும்.