கச்சபால ஐயர் பாடல்கள்

விக்கிமூலம் இலிருந்து
விக்கிப்பீடியாவில் பின் வரும் தலைப்புக்கான தகவல் தொகுக்கப்பட்டுள்ளது:
காஞ்சிபுரம் வித்வான் கச்சபால ஐயர்
அவர்கள்
இயற்றிய
தனிப்பாடல்கள்
பாடல்கள் 5
தனிப்பாடல் திரட்டு மூலம் பக்கம் 113
பாடல் வரிசை எண் அம்மானைப் பாடல் எண் 86-ஐத் தொடர்ந்து
87 முதல் 91 வரை தரப்பட்டுள்ளது
பாடல்களுக்குக் குறிப்புரை – செங்கைப் பொதுவன்

87[தொகு]

கந்தித்தாளை யடுத்தணிசங்கினங் கான்றநித்திலக் கச்சிட்டுக் கைகளால்
பந்தித்தாளை மருட்டு முலைச்சியைப் பாரையா வுன்றன் பாதத்திலே வந்து
வந்தித்தாளை யினிக்கை விடாமலே மஞ்சமீதில் இருத்தி மகிழ்ச்சியாய்ச்
சந்தித்தாளைய மேனினஞ் சித்திர சத்ரமேவும் விநாயக தூதனே, (87)
இது ஒரு அகப்பொருள் பாடல். 'சித்திர சத்திரம்' என்பது ஓர் ஊர். அந்த ஊர் விநாயகனைத் தூது விட்டதன் விளைவாகத் தலைவி தன் ஊடல் தணிந்து தலைவனை ஏற்றுக்கொண்டதாக இந்தப் பாடலின் கருத்து அமைந்துள்ளது.
கந்தி என்பது ஒரு கடல் பயிரினம். அதன் தாளை அடுத்து சங்கு இனம் முத்துகளை ஈன்றன. அந்த முத்துக்களைத் தன் கச்சு ஆடையில் தன் கைகளால் கோத்து வரிந்து கட்டிக்கொண்டு இந்த 'முலைச்சி' மருட்டுகிறாள். விநாயகனே! அவளைப் பார் ஐயா. அவள் உன் பாதத்தை வணங்குகிறாள். இனி என்னைக் கைவிடாமல் என் மஞ்சத்திலே இருக்கச்செய். (என வேண்டினேன்) ஐய! அவளும் என்னைச் சந்தித்தாள்.

88[தொகு]

திருக்கோலம் பாரதத்தை மருவ வகழ்ந்தும் காணாச் சிவனுக்கேற்பப்
பெருக்கோலம் பாரதத்தை யகற்றென மானே மதவேள் பிறங்கத் தூண்டும்
மருக்கோலம் பாரதத்தை மருவும் உணவையும் மாற்ற மருவியுன்னைத்
தெருக்கோலம் பாரதத்தைப் பொருவ வைத்தான் வினாயகனாம் சீர்மையோனே. (88)
இதுவும் வினாயகன் மீது பாடப்பட்ட அகப்பொருள் பாடல். திரிபு-அணியாக எதுகை வர ஆசிரியர் தன் தமிழ்ப் புலமையைக் காட்டிப் பாடிய பாடல்.
திருமால் திருக்கோலம் பாரத மண்ணை அகழ்ந்தது. சிவன் அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்தான். பாரதத்தில் மக்கள் பெருக்கக் கோலம் உள்ளது. அதனை அகற்ற வேண்டும். அதற்கு ஒரு வழி காமன் வெளிச்சம் போட்டுக்கொண்டு வரவேண்டும். அவன் வருவதற்கு அழகியரின் கோலம் வேண்டும். அந்த அழகுக் கோலத்தைப் பார்த்து ஆசை நிறைவேறாமல் ஆடவர் சாக வேண்டும். இந்தச் சாக்காட்டைத் தோற்றுவிப்பதற்காகப் படைக்கப்பட்ட உருவமே 'மருக்கோலம் பூண்டுள்ள பார தத்தை' (மணம் மிக்க பொருள்களைப் பூசிக்கொண்டுள்ள பாரமான முலைகளைத் தாங்கிய கிளியாகிய இந்த தத்தை) இவள் மருவி வரக் கண்டதும் எனக்கு உணவு செல்லவில்லை. இதனை மாற்றி அருளும்படி உன்னை வேண்டுவதற்காக பராரியாகத் தெருக்கோலம் பூண்டு, வினாயகனே! உன்னிடம் வந்துள்ளேன்.

89[தொகு]

அஞ்சனத்தை அணிவிழி மான்மயிலை விநாயகதுரை மேலாசையாலே
நஞ்சனத்தையும் விடுத்தாணான் சமைத்துத் தருமினிய நலத்த தீம்பால்
மிஞ்சனத்தையும் வெறுத்தாள் அவன்குவளைத் தாரினையே வேண்டுகின்றாள்
கஞ்சனத்தையலை அவ்வாறு அலைய அமைத்தான் எனில்யான் கருதலென்னே. (89)
மயிலை விநாயகதுரை (பிள்ளையார்) திருவிழாக் காலங்களில் வீதியில் முதல்வனாக உலா வரும்போது கண்ட ஒருத்தி அவன்மீது காதல் கொண்டு அவன் கழுத்தில் கிடக்கும் குவளை மாலை வேண்டும் வேண்டும் என்று அடம் பிடிக்கும் செய்தியைச் செவிலி கூறுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
இந்த மான் கண்ணில் மையைப் பூசிக்கொண்டுள்ளாள். உலா வரும் விநாயகன்மீது அவளுக்கு ஆசை. நஞ்சனத்தை (நம் சனங்களை) அவள் விட்டுவிட்டாள். நான் (செவிலித்தாய்) சமைத்துத் தரும் இனிய பாலோடு கூடிய உணவை, 'மிஞ்சனத்தை', சுவை மிஞ்சும் அன்னத்தை, வெறுக்கிறாள். விநாகன் அணிந்துள்ள குவளை மாலையையே வாங்கித் தரும்படி வேண்டுகின்றாள். அவள் கஞ்சனத் தையல், தாமரைத் திருமகள். விநாயகனே! நீதானே இவ்வாறு அவளை அலைய விட்டாய்?

90[தொகு]

காத்தவளைக் காவெனுங் கண்ணன் மயிலை விநாயகவேள் இனிதினெல்லாம்
பூத்தவளைக் காத்தவளைப் பொடித்தவளைப் புணர்ந்தவளைப் போற்றும் அனபன்
நீத்தவளைச் செவிமடவார் பலகோடி சிலகோடி நேர்ந்த மாதர்
கோத்தவளைக் கரமடவாள் இதுதெரியாது ஆசைகொண்ட கொள்கையேதோ. (90)
மயிலை விநாயகப் பெருமான் உலா வருகையில் அவன்மீது காதல் கொண்ட மாது ஒருத்தியின் நிலையைக் கூறும் பாடல்.
மயிலை விநாயகன் 'காத்தவளைக் கா (தன்னகாகக் காத்திருப்போரைக் காப்பாற்று) எனும் அருள்-கண்ணை உடையவன். இவள் இனிமை எல்லாம் பூத்திருக்கிறாள். விநாயக் பெருமானுக்காகக் காத்திருக்கிறாள். மற்ற ஆடவர் கண்களைப் பொடியாக்கிக்கொண்டிருக்கிறாள். புணர்ந்து அவளைப் போற்றும் அனைவரையும் அவள் விட்டுவிட்டாள். அவள் சொல்லுக்கெல்லாம் செவி சாய்க்கும் மாதர்கள் கோடிக் கணக்கில் அவளைக் கோத்துக்கொண்டும் கரம் பிடித்துக் கொண்டும் உள்ளனர். இது தெரியாமல் உன்மீது ஆசை கொண்டுள்ளாள். (அருள்க).

91[தொகு]

தித்திக்கத் திரிபுகவி புனைபுலவோர் உளங்களிக்கத் தியாகமெங்குஞ்
சத்திக்கத் திரிதலிலாது அளிக்கும் விநாயக முகிலே தகைசேர் காது
குத்திக்கத் திரிபாகல் செவிபுனையாக் குழன் முடியாக் கோதையின்பஞ்
சித்திக்கத் திரிதலினால் பயனிலை சற்றே மனந்தாள் சீர்மையோனே. (91)
சிற்றின்பம் விடுத்துப் பேரின்பம் பெற அருள் தரவேண்டும் என ஒருவர் விநாயக-முகிலை வேண்டுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
திரிபு அணி வரும் கவிகளைத் தித்திக்கப் பாடவல்ல புலவர் உளம் களிக்கும்படி தன்னைத் தியாகம் செய்திருப்பவன் விநாயக-முகில். அவன் உடலிலும் உள்ளத்திலும் சத்திக்க (சத்தி வர) உள்ளம் கோணாமல் அருள் புரிபவன். (மற்றவர்களின் சொல் தன் காதுகளில் விழவேண்டும் என்பதற்காகத்) தன் காதுகளைக் குத்திக் கொளாமல் இருப்பவன். தலையை முடிந்துகொள்ளாமல் இருப்பவன். கோதை (மகளிர்) இன்பம் தித்திக்க வேண்டும் எனத் திரிவதனால் பயனில்லை. மனந்தான் சீர்மை பெறவேண்டும். (அருள்க)
"https://ta.wikisource.org/w/index.php?title=கச்சபால_ஐயர்_பாடல்கள்&oldid=25049" இலிருந்து மீள்விக்கப்பட்டது