கடல்வீரன் கொலம்பஸ்/மனங் கசிந்தது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
7
மனங் கசந்தது

கொலம்பஸ், அரண்மனை விருந்தாளியாய், பார்சலோனா நகரில் தங்கியிருந்தபொழுது அவனுக்கு மிக மகிழ்ச்சியளித்த நிகழ்ச்சி தன்னுடன் வந்த ஆறு இந்தியர்களையும் கிறிஸ்தவர்களாக மாற்றி ஞான நீராட்டியதுதான். கிறிஸ்தவர்களாக மாறிய அவர்களுக்கு ஞானத்தாய் தந்தையராக இருக்க அரசர் பெர்டினாண்டும், அரசி இசபெல்லாவும், இளவரசர் டோன் ஜுவானும் அருள் கூர்ந்து இசைந்தார்கள். அந்த ஆறு இந்தியர்களுக்கும் கிறிஸ்தவப் பெயர்கள் சூட்டப்பட்டன. அவர்களில் ஒருவன் தலைவன் குவாக்க நாகரியின் உறவினன். அவன் அரண்மனையிலே வேலைபார்த்துக் கொண்டிருந்து இரண்டாண்டுகளுக்குப் பின் இறந்துவிட்டான். மற்ற ஐந்து பேரும் மீண்டும் கொலம்பஸ் தான் கண்டுபிடித்த இடங்களுக்குப் புறப்பட்டபொழுது கூடச் சென்றார்கள்.

கொலம்பஸ் தன் பயணத்தைப்பற்றி எழுதிய அறிக்கை, அவன் பார்சலோனா சென்ற சிலநாட்களில் அச்சிடப் பெற்றது. அச்சிட்ட பிரதிகள் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் பரப்பப்பட்டன. ஒரு பிரதி ரோம் நகருக்கு ஏப்ரல் மாதம் 18- ம் நாள் போய்ச்சேர்ந்தது.

செய்தி பரவவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு மட்டும் அது அச்சிடப்படவில்லை. அக்காலத்தில் ஐரோப்பிய நாட்டரசர்கள் புதிய நிலங்களைக் கண்டுபிடித்துத் தங்கள் ஆட்சியில் இணைத்துக் கொள்வதில் மும்முரமாயிருந்தார்கள். தாங்கள் கண்டுபிடித்த நாடுகள் தங்கள் உடைமை என்று நிலைநாட்ட இப்படிப்பட்ட சான்றுகள் இன்றியமையாதவையாய் இருந்தன. இந்தியத் தீவுகளில் ஸ்பெயினுக்குள்ள ஆதிக்கத்தை நிலைநாட்டவே இவ்வறிக்கை அச்சிட்டுப் பரப்பப்பட்டது.

கொலம்பஸ் அறிக்கை இலத்தீன் மொழியிலும் பெயர்த்தெழுதப் பெற்று அச்சிட்டுப் பரப்பப்பட்டது.

கொலம்பஸ் இரண்டாவது முறையாகத் தன் பயணத்தைத் துவக்க இருந்தபொழுது அவன் புகழ் எங்கும் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்களும் முதியவர்களும் அவனுடன் புறப்படத் தயாராயிருந்தனர். தங்கங் கிடைக்கும் தீவுகளுக்குச் சென்று தங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ளப் போட்டி போட்டுக் கொண்டு பலர் முன்வந்தனர். முதலில் ஆள் கிடைக்காமல் சிறையில் இருந்த கைதிகளைக் கூட விடுவித்துத் தன்னுடன் அழைத்துச் சென்ற கொலம்பஸ் இப்போது யாரைத் தன்னுடன் அழைத்துச்செல்வது என்று தேர்ந்தெடுக்கவேண்டிய நிலையில் இருந்தான்.

1498 ம் ஆண்டு மே மாத இறுதியில் பேரரசரும் பேரரசியும் கொலம்பசுக்கு, குடியேற்ற நாட்டில் என்னென்ன செய்ய வேண்டும் என்று குறிப்புக்கள் வகுத்துக் கொடுத்தார்கள். இஸ்பானியோலாவை, வாணிகக் குடியேற்ற நாடாக்கும் அவனுடைய, திட்டத்துக்கு அவர்கள் அனுமதி யளித்தார்கள். முக்கிய குறிக்கோளாக, அந்தத் தீவுகளின் உள்ள மக்களை கிறிஸ்தவர்களாக்கவேண்டுமென்று கூறி அதற்காக ஆறு மதகுருமார்களை அவனுடன் அனுப்பிவைத்தார்கள். இந்தியர்களை நன்றாகவும் அன்பாகவும் நடத்த வேண்டும் என்றும் இதில், பெருங்கடல் தளபதி கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். சீன நாட்டின் பொன்மயமான கத்தே மாநிலத்திற்குக் கியூபாவின் வழியாகச் செல்ல முடியுமா என்பதை ஆராயும்படி அவர்கள் கொலம்பசைக் கேட்டுக்கொண்டார்கள்.

கொலம்பசின் இரண்டாவது பயணம் காடிச் துறை மூகத்திலிருந்து புறப்படுவதாயிருந்தது. கொலம்பஸ் காடிச் துறைமுகத்திற்கு ஜூலை மாதத் துவக்கத்தில் வந்து சேர்ந்தான். அவன் இந்தப் பயணத்திற்கு மிகப் பெரிய ஏற்பாடுகளைச் செய்தான். பதினேழு கப்பல்களை ஆயத்தப்படுத்தினான். ஆறுமாதத்திற்கு வேண்டிய உணவுப் பொருள்களைச் சேமித்தான். மாலுமிகளும், படைவீரர்களும், குடியேறி வாழ முன்வந்த மக்களுமாக ஆயிரத்து இருநூறுபேருக்கு அவன் பயிற்சியளித்தான். குடியேற்ற நாட்டில் தேவைப்படக் கூடிய ஆடுமாடுகளையும், விவசாயக் கருவிகளையும், கொத்து வேலைக்கு வேண்டிய சாமான்களையும், பிற தொழில்களுக்கு வேண்டிய கருவிகளையும், ஆயுதங்களையும், வெடி மருந்துகளையும், விதைகளையும் செடிகளையும் ஒன்று பாக்கி விடாமல் சேகரித்தான். அரசரும் அரசியும், நடப்பு விலையில் எல்லாப் பொருள்களும் கப்பலுக்கு வாங்கிக் கொடுக்கும்படி அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருந்தார்கள். கோதுமை வாங்கிக் கட்டப்பட்டது. மாட்டிறைச்சியும் பன்றிக்கறியும் நிறைய வாங்கி, கெட்டுப்போகாமல் இருப்ப ற்காக உப்பில் ஊறவைக்கப்பட்டன. பீப்பாய்களில் திராட்சை மது வாங்கி நிரப்பப்பட்டது.

பதினேழு கப்பல்களில் மிகப் பெரிய கப்பலுக்கு முதற்பயணத்தில் உடைந்து போன சாண்டாமேரியாவின் பெயரே வைக்கப்பட்டது. ஆனால் மாலுமிகள் அதை மரியாலாண்டி என்று அழைத்தார்கள். இவற்றில் பழைய கைனா கப்பலும் இருந்தது. இந்தக் கப்பல்களில் சென்ற ஆயிரம்பேருக்கு அரசினரின் சம்பளம் கிடைத்தது. இருநூறு பேர் தொண்டர்களாகப் புறப்பட்டனர். பெண்கள் யாரும் ஏற்றிச் செல்லப்படவில்லை.

1493 - ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25உ எல்லாக் கப்பல்களும் காடிச் துறைமுகத்திலிருந்து புறப்பட்டன. பதினேழு கப்பல்களிலும் வண்ணக் கொடிகள் கட்டியிருந்தது. பார்க்க மிகப் பிருமாண்டமான அழகுக் கண்காட்சியாக இருந்தது. ஒவ்வொரு கப்பலின் முன் கம்பத்திலும் ஸ்பெயின் அரசுக் கொடி கம்பீரமாகப் பறந்துகொண்டிருந்தது. பீரங்கி வேட்டுடன் தாரை தப்பட்டைகள் முழங்க வீணையின் இன்னிசையோடு கப்பல்கள் புறப்பட்ட காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

கானரித் தீவுகளையடைந்த கப்பல்கள், கடைசியாகக் கோமாராத் தீவுகளிலிருந்து புறப்பட்டன. அங்கிருந்து புறப்பட்டுச் சரியாக 22வது நாளில் டொமினிக்காத் தீவையடைந்தன. அந்தப் பயணத்தில் ஒரு நாள் இடிவிழுந்து சில பாய்களை முறிந்ததைத் தவிர வேறு எவ்விதமான இடையூறுகளும் ஏற்படவில்லை. பயணம் மிக இனிமையாக இருந்தது.

டொமினிக்காவைச் சேர்ந்த கப்பல்கள் அங்கு கரை பிடிக்கவில்லை. சரியான நுழைவாயில் இல்லாத்தால் அங்கிருந்து புறப்பட்டு மற்றொரு பெரிய தீவையடைந்தன. அந்தத் தீவிற்கு சாண்டாமேரியா டி குவாடலூப் என்று கொலம்பஸ் பெயரிட்டான். குவாடலூப் கரும்பு விளையும் நிலம்; வளம் பொருந்திய தீவு. கடற்கரையோரமாக குவாடலூப் மலையிலிருந்து விழுந்த ஒரு. நீர்வீழ்ச்சி வெள்ளிக் கம்பிபோல் மெல்லியதாக விழுந்து கொண்டிருக்கும் அழகை நேரில் பார்த்துத்தான் அனுபவிக்க வேண்டும். மலையைத் தொட்டுக்கொண்டு நிற்கும் மேகங்களிலிருந்து நூலிழை ஒன்று. நழுவி விழுவது போல அந்தச் சிறு நீர்வீழ்ச்சி வீழ்ந்து கொண்டிருக்கும். தீவின் தென்பகுதியில் இருந்த ஒரு வளைகுடாவில் கப்பல்கள், ஐந்தாறு நாட்கள் நங்கூரம் பாய்ச்சிக்கொண்டு நின்றன.

கொலம்பஸ் அங்கு ஒருநாள் மட்டுமே தங்க முடிவு செய்திருந்தான். ஆனால் கரையில் இறங்கி உள்நாட்டைச் சுற்றிப்பார்க்கச் சென்ற சிலர் காட்டுக்குள் வழிதெரியாமல் மாட்டிக்கொண்டு விட்டபடியால், அவர்கள் திரும்பிவரும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. விட்டுவிட்டுப் போய், மறுபடி அந்தப் பக்கம் வரும்போது அவர்களை அழைத்துக் கொள்ளலாம் என்று புறப்படுவதற்கு கொலம்பஸ் மனம் இடந்தரவில்லை. ஏனெனில் அந்தத் தீவில் வாழும் கரீபியர்கள் மனித இறைச்சி தின்னும் பயங்கர மனிதர்கள் காணாமற் போனவர்களை விட்டுவிட்டுச் சென்றால், திரும்பி வரும்போது அவர்கள் எலும்புகளைக் கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. காணாமற் போனவர்களைத் தேடி ஐம்பது ஐம்பது பேர் அடங்கிய நான்கு குழுக்கள் நான்கு வேறு வழிகளில் புறப்பட்டன. கடைசியில், அவற்றில் ஒரு குழு அவர்களைக் கண்டுபிடித்துக் கரைக்கு அழைத்து வந்தது.

ஸ்பானியர்கள் இவ்வாறு சுற்றித் திரிந்தபோது. கரீபியர்களைப் பற்றிய பல விவரங்களைத் தெரிந்து கொண்டார்கள். கரீபியர்களின் சில குடிசைகளுக்குள் அவர்கள் இல்லாத பொழுது. நுழைந்து பார்த்த போது, அங்கு மனித எலும்புகளையும், வெட்டிவைக்கப்பட்ட மனித இறைச்சியையும், பாதி உண்ணப்பட்ட கறித்துண்டுகளையும் கண்டரர்கள். சில குடிசைகளில், இறைச்சிக்கா வளர்க்க கப்பட்டு அடைபட்டுக்கிடந்த இளைஞர்களையும், இளம் பெண்களையும் கண்டார்கள். அப்படி அடைபட்டுக்கிடந்த சில பெண்களையும் பையன்களையும் ஸ்பானியர்கள் விடுவித்துத் தங்கள் கப்பல்களுக்கு அழைத்து வந்தார்கள். அவர்கள், பின்னால், மொழி பெயர்ப்பாளர்களாகவும் வேறு பல வேலைகளுக்கும் பயன்படுத்தப்பெற்றார்கள்.

கன்னிமேரியிடம் பக்தி கொண்ட கொலம்பஸ், அப்போதுதான் கண்டு பிடித்த தீவுகளுக்கெல்லாம் அவளுடைய வெவ்வேறு திருப்பெயர்களைச் சூட்டிக் கொண்டே சென்றான்.

சாண்டாகுரூஸ் என்ற தீவையடைந்த பொழுது, முதன் முதலாக ஸ்பானியர்கள் கரீபியர்களுடன் சண்டையிட நேர்ந்தது. கப்பலிலிருந்து இறக்கிய ஒரு படகில் இருபத்தைந்து பேர் கரையை நோக்கிச் சென்றார்கள். கரையில் நின்ற கரீபியர்கள் நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் தான். முதலில் பெரிய பெரிய கப்பல்களைக் கண்டவுடன் அவர்கள் பயந்து ஓடினார்கள். ஆனால், பிறகு தெளிந்து திரும்பிவந்தார்கள். தங்கள் ஒடத்தில் ஏறித் திரும்பிக் கொண்டிருந்த படகை விரட்டிக் கொண்டு வந்தார்கள். வரும்போதே, வில்லில் அம்புகளை நாணேற்றி ஸ்பானியர்களை நோக்கி எய்தார்கள். இரண்டு ஸ்பானியர்கள் காயமுற்றார்கள். ஒருவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்தான். நெருங்கிவந்தவுடன், கப்பல் படகு திருப்பித் தாக்கிய வேகத்தில், ஓடம் கவிழ்ந்தது. கடலில் வீழ்ந்த கரீபியர்கள் நீந்திச் சென்று ஒரு பாறையை' அடைந்தார்கள். ஸ்பானியர்கள் விரட்டிக் கொண்டு சென்று அவர்களைப் பிடித்துக் கப்பலுக்குக் கொண்டு வந்தார்கள்.

அந்தக் கரீபியர்களில் பெரு முரடனான ஒருவனைக் கப்பல் மேல் தட்டில் நிற்கவைத்துச் சுட்டார்கள். குண்டு துளைத்து அவன் குடல் வெளிவந்துவிட்டது. அவனைக் கடலில் தூக்கி எறிந்தார்கள். அவன் தன்குடலை ஒரு கையால் அழுத்திப் பிடித்துக் கொண்டே கரைநோக்கி நீந்தினான். மீண்டும் அவனைப் பிடித்துக் கயிற்றினால் கற்றிக் கட்டிக் கடலுக்குள் எறிந்தார்கள். அவனோ, தன் கட்டுக்களை அவிழ்த்துக் கொண்டு மீண்டும் குடலை அழுத்திப் பிடித்தபடி கரைநோக்கி நீந்தத் தொடங்கினான். அதன் பின் பல முறை அம்பெய்துதான் அவனைக் கொன்றொழிக்க முடிந்தது. இந்தக் காட்சியைக்கண்ட, கரையில் இருந்த ஒன்றிரண்டு பேர் மூலம் செய்தியறிந்த கரீபியர்கள் கூட்டமாகத் திரண்டு பழிவாங்க ஓடிவந்தார்கள். ஆனால் அவர்கள், கப்பல்களை நெருங்கமுடியாததாலும் கப்பல்கள் நின்ற இடம்வரை எட்டிப் பாயக் கூடிய ஆயுதங்கள் இல்லாததாலும் ஒரு கெடுதலும் செய்யமுடியவில்லை.

கரீபியர்கள் மேலும் திரண்டு உண்மையில் ஒரு போர் மூளும் வரை கொலம்பஸ் காத்திருக்க விரும்பவில்லை. வடதிசை அடிவானத்தை யொட்டிப் பலப்பல தீவுகள் தென்படுவதைக் கண்டு அத்திசையில் தன் கப்பல் கூட்டத்தைச் செலுத்திக் கொண்டு சென்றான். கப்பல்கள் நெருங்கிச் செல்லச் செல்ல மேலும் பல தீவுகள் கண்ணுக்குத் தோன்றின. அந்தத் தீவுகளுக்கெல்லாம் பதினோராயிரம் கன்னிகள் என்று பெயரிட்டான் கொலம்பஸ்.

பலப்பல புதிய தீவுகளைக் கண்டுபிடித்து. அவற்றிற்கெல்லாம் புதுப்புதுப் பெயர்கள் வைத்துக் கொண்டு கடைசியில் தான் முதற்பிரயாணத்தில் கண்டுபிடித்த இஸ்பானியோலாவை யடைந்தான் கொலம்பஸ். கப்பலில் கூடவந்த சிவப்பு இந்தியன் ஒருவன் அதை அடையாளங் கண்டு கொண்டு, தன் சொந்த ஊர் இருக்கும் சாமனா வளைகுடாவிற்கு வழிகாட்டினான். அங்கு கரைபிடித்தவுடன், அவனைப் பல வியாபாரப் பொருள்களுடன் இறக்கிவிட்டுத் தன் ஊருக்கு செல்லவிடுத்தான்.

இந்தச் செயலினால் அவன் எதிர்பார்த்தது நடந்தது. பல இந்தியர்கள் தங்கள் பயத்தை யெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டுக் கப்பல்களுக்கு வந்தனர். நல்ல வியாபாரம் நடந்தது. சாந்தா குரூசில் கரீபியர்களால் காயப்படுத்தப்பட்ட மாலுமி, பின்னால் இறந்துபோனான். அவனுடைய உடல் இங்கே ஒரு கிறிஸ்தவனுக்குரிய கிரியைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது.

தனக்கு ஏற்கனவே பழக்கமான பகுதிகளுக்கு வந்தவுடன், கொலம்பஸ், நாவிடாடிலுள்ள தன் ஆட்களுடன் தொடர்புகொள்ள ஆவல் கொண்டான். இருந்தாலும் புதிதாகக் குடியேற்றம் செய்வதற்குத் தகுந்த இடத்தைக் கண்டு பிடிக்கவேண்டிய வேலையிருந்ததால் உடனடியாக அவன் நாவிடாடுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால், நாவிடாடில் தான் விட்டுவந்த ஸ்பானியர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை ஒருவாறாகச் சொல்வது போல் ஒரு குறிப்புக் கிடைத்தது. மாண்டிகிரிஸ்டி என்ற இடத்தில் கரையோரத்தில் அடையாளம் தெரியாத இரண்டு பிணங்களைக் கரைக்குச் சென்றுவந்தவர்கள் கண்டுபிடித்தார்கள். சிவப்பு இந்தியர்கள் தாடி வளர்ப்பதே கிடையாது. அந்தப் பிணங்களுக்கு தாடியிருந்தது. ஆகவே அவை ஸ்பானியப் பிணங்களாக இருக்கக்கூடும் என்று அனுமானிக்க இடமிருந்தது.

இந்த அனுமானம் சரிதானென்று சில நாட்களிலேயே தெரிந்துவிட்டது. நவம்பர் மாதம் 27-ம் நாள் காரகோல் வளைகுடாவைச் சேர்ந்த ஹைட்டியன் முனைத் துறைமுகத்தையடைந்தது. கப்பல் கூட்டம் இரவில் கரைக்குச் செல்லவேண்டாம் என்று எல்லோருக்கும் ஆணையிட்டான் கொலம்பஸ். இரவில் வெகுநேரங் கழித்து சிவப்பு இந்தியர்கள் நிறைந்த ஓர் ஓடம் கப்பல்களை நோக்கி வந்தது. அந்த இந்தியர்கள் கொலம்பசை அடையாளம் கண்டு கொண்டார்கள். உடனே தலைவன் குவாக்கநாகரியின் சார்பாக பல பரிசுகளைக் கொடுத்தார்கள். நாவிடாடில் உள்ள ஸ்பானியர்களைப் பற்றி விசாரித்தபோது சில பேர் இறந்து விட்டதாகவும், மீதி எல்லோரும் நலமாக இருப்பதாகவும் உறுதியாகக் கூறினார்கள்.

ஆனால் அவர்கள் கூற்றில் ஏதோ ஒருவிதமான ஐயம் ஏற்படும்படியாக இருந்தது. கொலம்பஸ் தன்னுடன் கூட்டிச் சென்று. ஸ்பெயினில் கிறிஸ்தவனாக்கிய இந்தியன் டீகோகோன் அவர்களிடமிருந்து, உண்மையை வரவழைத்தான். என்ன பயங்கரமான உண்மை அது. அதைக் கேட்டுக் கொலம்பஸ் திடுக்கிட்டுப் போனான். அவன் உள்ளம் கொந்தளிப்படைந்தது.

அவர்கள் சொன்ன கதை இதுதான்

நாவிடாடில் இருந்த ஸ்பானியர்கள் நேர்மையற்ற முறையில், நடந்து கொண்டார்கள். தலைவன் குவாக்கநாகரி கொடுக்க முடிந்த அளவைக் காட்டிலும் அதிகமான தங்கம் பெற ஆவல் கொண்டு அவர்களில் இரண்டுபேர் ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு தீவைச் சுற்றிவந்தார்கள். மகுவானா இனத்தின் தலைவனான சோனாபோ விடம் அவர்கள் முறையற்ற முறையில் சென்று சண்டையிட்டுக் கொண்டார்கள். ஆத்திரக்காரனான அவன் அவர்களையெல்லாம் பிடித்துக் கொன்றுவிட்டான். அது மட்டுமல்லாமல் நாவிடாடுக்குப் படையெடுத்து வந்து அங்கிருந்தவர்கள் அனைவரையும் கொன்று விட்டான். தப்பியோடியவர்களையும் வேட்டையாடிக் கொன்றுவிட்டான். இந்தக் கதையைக் கேள்விப்பட்ட கப்பலில் வந்திருந்த மதகுருக்களின் தலைவர், குவாக்கநாகரியைப் பிடித்துக் கொன்றால் மற்றவர்களுக்கெல்லாம் புத்திவரும் என்று கூறினார். ஆனால் கொலம்பஸ் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. உண்மையில் தலைவன் குவாக்கநாகரி கடைசிவரை ஸ்பானியர்களின் நண்பனாக இருந்தான். ஆனால் இந்நிகழ்ச்சி கொலம்பசுக்கு ஸ்பானியர்களிடையே இருந்த செல்வாக்கைக் குறைத்து விட்டது என்றே சொல்ல வேண்டும். கொலம்பசுக்கும் இந்தத் துயரக் கதையைக் கேட்டது முதல், உள்ளத்தில் கவலை பீடித்துக்கொண்டது.