உள்ளடக்கத்துக்குச் செல்

கடவுள் கைவிடமாட்டார்/பேராசை பெரு நஷ்டம்!

விக்கிமூலம் இலிருந்து
5. பேராசை பெருநஷ்டம்!


தொப்பென்று யாரோ குதிக்கும் சத்தம் கேட்டது. யாரென்று திரும்பி பார்ப்பதற்குள்ளே, இரண்டு மனிதர்கள் இருபக்கமும் வந்து, துரைசாமியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள்.

தங்கள் கையிலிருந்த கயிற்றால், துரைசாமியின் கால்களையும் கைகளையும் சேர்த்துக் கட்டி, கீழே உருட்டி விட்டார்கள்.

யார் இவர்கள்? எங்கிருந்து இந்த நேரத்தில் இங்கு வந்தார்கள்? என்பது துரைசாமிக்குப் புரியவில்லை. அவர் பேச ஆரம்பித்தாலோ, அவர்கள் கால்களால் மாறி மாறி துரைசாமி முகத்திலே உதைத்தனர். அதனால், துரைசாமியால் கோபமாகப் பார்க்கமுடிந்ததே ஒழிய, ஏதும் பேச முடியவில்லை.

அவர்கள் இருவரும் பக்கத்து ஊராகிய வயலூரைச் சேர்ந்தவர்கள். மாலை நேரத்தில் மீன் பிடித்து, அவைகளை விற்று வாழும் விவசாயிகள்.

அன்று இருவரும் தூண்டில்போட்டு, மீன் பிடித்து, அவைகளைக் கொண்டுபோய் பேரூரில் விற்றுவிட்டு, கரும்புக் காட்டுவழியாக வீட்டுக்குப் போகலாம் என்று புறப்பட்டவர்கள்தான்.

‘ஐயோ புலி’ என்று நடேசன் போட்ட கூக்குரலைக் கேட்ட இருவரும், பயந்து ஓடிப்போய், உயர்ந்த அந்த மரத்தின்மீது ஏறிக் கொண்டார்கள். துரைசாமி வருவதும் அவர்களுக்குத் தெரிந்தது. துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டது. அவர் அந்த மரத்தடிக்கு வந்து நின்று, அந்த வைரக் கற்களை எண்ணியதும் தெரிந்தது.

பிறகு என்ன? வைரக் கற்கள் வயலூர் ஆட்களிடம் சிக்கின.

‘நம் தூண்டிலில் இதுவரை மீன்கள்தான் சிக்கின. இப்படி வைரக் கற்கள் சிக்கும் என்று நாம் எண்ணியதே இல்லை’ என்று ஒருவன் சிரித்தான்.

‘சத்தம் போட்டு சிரிக்காதே! இந்த ஆள் சிரித்துத்தான் நம்மிடம் சிக்கிக்கொண்டான். நம்மை யாராவது... என்று முடிப்பதற்குள், “ஆமாம்! மூச்சுவிடும் சத்தம் கூட இனி கேட்கக் கூடாது. பகலில் பக்கம் பார்த்துப் பேசு. இரவில் அதுவும் பேசாதே! என்று இருவரும் புறப்படத் தொடங்கினர். நடையில் வேகம் இருந்தது.”

துரைசாமி கெஞ்சினார். ‘என்னை அவிழ்த்து விடுங்கள். நான் என் வழியே போய்விடுகிறேன். உங்களை ஒன்றும் செய்யமாட்டேன்’ என்று அழுது கொண்டே கேட்டார். கெஞ்சக் கெஞ்ச, அவர்களுக்குக் கோபம்தான் வந்தது.

‘எங்களை ஏமாற்றப் பார்கிறாயா? என்று இருவரும் களைத்துப் போகும் அளவுக்கு துரைசாமிக்கு, தங்களால் முடிந்தவரை உதை கொடுத்துவிட்டுப் போனார்கள். உதை வாங்கிய துரைசாமி, ‘மனிதனை மதிக்காமல், வெறும் வைரக் கற்களுக்கா குற்றுயிராக விட்டுவிட்டு வந்தேனே! அதற்கு இது சரியான தண்டனைதான்’ என்று அழத் தொடங்கினார்.

துரைசாமியின் அழுகைக் குரலைக் கேட்டாலும், திரும்பிப் பார்க்கக்கூட, அவர்களுக்கு விருப்பமில்லை. வைரமல்லவா மடியில் இருக்கிறது!

‘பேரூருக்குப்போய் வைரக் கற்களை விற்று, வரும் பணத்தை சரிபாதியாகப் பிரித்துக் கொள்வோம். இனி, சேற்றில் வேலை செய்கின்ற சின்னத் தொழிலையும், மீன்பிடிக்கும் மோசமான வேலையையும் விட்டுவிட்டு, கௌரவமாக ஒரு கடை வைத்துப் பிழைப்போம் என்று ஒருவன் கூற, மற்றொருவன் ‘ஆமாம்’ என்று ஆமோதித்தான்.

வெளியிலே அவர்கள் சந்தோஷமாகப் பேசிக் கொண்டாலும், மனதிலே அத்தனை வைரக்கற்களும் தனக்கே கிடைக்காமற் போயிற்றே என்ற கவலையுடன், எச்சிலை விழுங்கிய வண்ணம் ஏக்கத்துடனேயே நடந்தனர்.

‘தக்க சமயம் கிடைத்தால், அடுத்தவனை ஏமாற்றி வைரக் கற்களைத் தட்டிக் கொண்டுபோய் விட வேண்டும்’ என்று சந்தர்ப்பத்தை இருவரும் எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

புலி மீண்டும் அந்தப்பக்கம் வந்தாலும் வரும். ஆகவே, ஆற்றங்கரை வழியாகப் போவதுதான் நல்லது என்று, தாங்கள் வந்த வழியே சென்று ஆற்றங்கரைமீதே நடந்து போய்க் கொண்டிருந்தனர்.

பேருரும் வந்து விட்டது என்பதை ஒரு டீக்கடையிலிருந்து வந்த ரேடியோ சத்தம் ஒலிபரப்பிக் கொண்டிருந்தது. ‘வா ராஜா வா, என்ற பாட்டு அவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தது.’

பங்கு போட்டுக் கொள்வதற்கு முன்னர், ஆற்றங்கரை படித்துறையில் இறங்கி, கைகால் முகம் கழுவி, சுத்தமாக வரவேண்டும் என்று இருவருமே விரும்பினர். வயல் வரப்பில் நடந்தபோது, சேறுபட்டு விட்டதாம். அந்த, சேறு அவர்களுக்கு அன்றை தினம் அருவெறுப்பாக இருந்தது.

ஆற்றங்கரையில் படித்துறையில் இருவருமே நின்றனர், பேச்சு தொடங்கியது. பிரிப்பதற்கு முன், எத்தனை வைரக் கற்கள் இருக்கின்றன என்று எண்ணத் தொடங்கினான் ஒருவன். முத்தையா என்பது அவன் பெயர்.

வைரக் கற்கள் ஒற்றைப் படையிலான எண்ணிக்கையில் இருந்தன. பதின்மூன்று என்று முத்தையா எண்ணிச் சொன்னான்.

எப்படித்தான் பிரித்தாலும், மீதி ஒன்று வருமே! அந்த மீதியுள்ள வைரக்கல்லை யார் எடுத்துக் கொள்வது? ஏகாம்பரம் எதிர்க் கேள்வி போட்டான்.

பிரச்சினை அங்கு பெரிதாக எழுந்தது. வரவர பேச்சில் சூடேறியது.

‘நான் தான் அந்த துப்பாக்கிக்காரனை முதன் முதலாகப் பார்த்தேன். அதனால் எனக்குத்தான் மீதியுள்ள ஒரு வைரக்கல் சேர வேண்டும்! என்றான் ஏகாம்பரம்.

மரத்தில் இருந்து குதித்து, அவனை மிதித்துக் கட்டியவனே நான்தானே? அதனால் எனக்குத்தான் அதுசேர வேண்டும் என்றான்.



‘முடியாது’ என்று ஆற்றுப் படிக்கட்டில் இருந்த ஏகாம்பரம் அலறினான்.

‘அப்படித்தான் எடுத்துக் கொள்வேன்’ என்று கரையில இருந்த முத்தையா, பொட்டலத்தை மடித்து, மடியில் வைக்க ஆரம்பித்தான்.

‘எங்கே தன்னை ஏமாற்றி விட்டுப் போய் விடப் போகிறானோ’ என்று படிக்கட்டில் நின்ற ஏகாம்பரம் பதறிப் போய், கரைக்கு வந்து, முத்தையாவின் கையைப் பிடிக்க, பொட்டலம் கீழே விழுந்து விட்டது.

ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு, பொட்டலத்தை எடுக்கப் போய் கட்டிப் புரண்டார்கள். தடுத்தார்கள் கையைப் பிடித்து மடக்கினார்கள். அது பயங்கர மல்யுத்தமாக மாறியது. ஒருவரை ஒருவர் கொல்ல முயல்வது போல தாக்கிக்கொண்டார்கள்.

ஆற்றின் கரை சரிவாக இருந்ததால் கரையிலிருந்து இருவரும் கட்டிப் புரண்டபடி, ஆற்றில் விழுந்தார்கள். ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது.

யாரும் கரையேறாதபடி இருவரும் ஒருவரை ஒருவர் கெட்டியாகப் பிடித்து மடக்கிக் கொண்டார்கள்.

வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்ததால், இருவரையும் ஆற்று வெள்ளம் வேகமாக அடித்துக் கொண்டு சென்றது.

கரை மேல் அவிழ்ந்த நிலையில் பொட்டலம் கிடந்தது. லட்சக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரக்கற்கள், ஒரு கசங்கிய காகிதத்தில் குப்பைக் கூளம்போல கவனிப்பாரற்றுக் கிடந்தது.

இந்த வைரக் கற்களுக்கு ஆசைப்பட்ட ஒருவர், புலியால் அறையப்பட்டு அநாதையாக கரும்புக் காட்டிலே கிடக்கிறார். அவரை உதாசீனம் செய்து வந்த துரைசாமியோ, கையும் காலும் கட்டப்பட்டு உதைவாங்கிக் களைத்து போய்கிடக்கிறார். அவரை அடித்துத் துன்புறுத்திய இருவரும், இப்பொழுது ஆற்றோடு போய்க் கொண்டிருக்கிறார்கள்.

யார் பிழைப்பார் யார் இறப்பார் என்று யாருக்குத் தெரியும்? தேள் கொட்டிய திருடன் போல, இருவரும் மரணப் போராட்டத்தை மௌனமாக அல்லவா நடத்திக் கொண்டு ஆற்றோடு போகின்றார்கள்!