கடவுள் கைவிடமாட்டார்/யோசனையும் வாசனையும்!
அற்புதசாமி இரவில் சாப்பிடுவது இல்லை. இட்லி, தோசை, ஆப்பம் போன்ற பலகாரங்களைத்தான் மிகவும் விரும்பி இரவில் சாப்பிடுவார். அதற்குப் பெயர் விரதம் என்பார். தான் பெரிய பக்திமான் என்று பெருமையாக மற்றவர்களிடம் சொல்லிக்கொள்வார்.
அவரது தங்கையும் வந்து சாப்பிடுவதற்காக அழைத்தாள். எதிரே இட்லி வைக்கப்பட்டிருந்தது. அதைப் பிட்டு வாயில் போட்டு சுவைத்துக்கொண்டு இருக்கும் பொழுதே, அவரது மனமும் திட்டம் போட்டுக் கொண்டே இருந்தது. யோசனை சிகரமாக உட்கார்ந்து கொண்டிருந்தார்.
மறுநாள் காலை, அவசரம் அவசரமாக எழுந்தார் அற்புதசாமி, சமையலறைக்குள் நுழைந்தார். அவரது தங்கை சிவகாமி, காலை ஆகாரமாக இட்லியை தயார் செய்துகொண்டிருந்தாள் இரவில் மீதியாகி இருந்த மாவைத்தான் காலையிலும் இட்லியாக்கிக் கொண்டிருந்தாள்.
‘இன்றுதான் நான் இலங்கைக்குப் போகப் போகிறேனே! என் கையால் உனக்கு இட்லி சுட்டுத் தருகிறேன். சாப்பிட்டுவிட்டு என் சமையலைப் பற்றி உன் பாராட்டைக் கூறு’ என்று சாகசமாகப் பேசினார் அற்புதசாமி!
அடுப்படிக்கே எப்பொழுதும் வராத தனது அண்ணன், எப்படி இன்றைக்கு இவ்வளவு பொறுப்பாக வந்து பேசுகிறார்! சிவகாமிக்கு ஒரே ஆச்சரியம்.
‘பரவாயில்லை, அண்ணா! நீங்கள் போய் பயணத்துக்கு வேண்டியவைகளை தயார் செய்யுங்கள். இன்னும் ஒரு நிமிஷத்தில் இட்லி தயாராகிவிடும்’ என்றாள்.
கேட்பாரா அற்புதசாமி கடைசி வரை சிவகாமி எவ்வளவோ மறுத்துக் கூறியும், திரும்பத் திரும்பப் பேசி, தன் எண்ணத்திற்கே தன் தங்கையை சம்மதிக்கச் செய்தார்.
பயணத்திற்கு வேண்டிய பொருட்களை எடுத்து வைக்கும் பொறுப்பு சிவகாமியிடம் சேர, இட்லி தயாரிக்கும் பொறுப்பு அற்புதசாமிக்கு வந்தது.
தங்கை இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு, ஒரு இட்லிக்குள்ளே வைரக்கற்களைப் பதித்து வைக்க ஆரம்பித்தார்.
அவரது அன்பு மகனும் அப்பா தயாரிக்கும் அற்புதமான இட்லியையும், ஆசையோடு பார்த்துக் கொண்டேயிருந்தான்.
இரண்டு இட்லிக்குள்ளே எல்லா வைரக்கற்களும் சங்கமமாயின. அவைகளின் மேலே மிளகாய் பொடி, எண்ணெய், சட்டினி வகையறாக்களை இட்டு, அவற்றின் மேலே மேலும் பல சாதாரண இட்லிகளை மேலோட்டமாக வைத்து, ஒரு அருமையான பொட்டலமாகக் கட்டினார். அதற்குப் பிறகுதான் அற்புதசாமியின் நெஞ்சின் பாரம், கொஞ்சம் குறையத் தொடங்கியது.
எந்தப் பயலாலும் இதைக் கண்டுபிடிக்கவே முடியாது? என்று மனதுக்குள்ளே சவாலும் விட்டார்.
தங்கையிடம் வைரக் கற்களைப் பற்றி கூறினால், எங்கே தனக்கும் பங்கு வேண்டுமென்று கேட்டுவிடுவாளோ என்ற பயத்தினாலே, தங்கையிடம் பேச்சையும் சிக்கனமாகவே பேசி வைத்தார்.
தன் மகன் எங்கே அவளிடம் ஏதாவது உளறி விடுவானோ என்று அஞ்சி, அவளிடம் தனியே இருக்காதவாறு, தன் மகன் முருகனையும் பார்த்துக் கொண்டார்.
‘இரவு முழுவதும் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான், இந்த பலகாரப் பொட்டலம் தேவைப்படுகிறது’ என்று பைக்குள்ளே பொட்டலத்தை வைக்கும்பொழுது கூறினார். அவருக்கு ஒரு ஆறுதல், சிவகாமிக்கோ முகம் மாறுதல்.
அண்ணனின் பேச்சும் நடத்தையும் அவளுக்கு சந்தேகத்தை ஊட்டியது. இருந்தாலும், என்ன இப்படிப் பேசுகிறீர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? என்று கேட்கப்பயந்து, அவளும் பேசுவதை நிறுத்திக் கொண்டாள்; ஆசை வந்துவிட்டால், பாசம் எப்படி மறைந்து போகிறது பார்த்தீர்களா!
இராமேசுவரம் இரயிலில் ஏறிக் கொண்டு, கையசைத்து விடை கொடுத்தார் அற்புதசாமி, தங்கை சிவகாமியும் ஏதோ கையை ஆட்ட வேண்டும் என்பதற்காக, சிரிப்பை வலிய வரவழைத்துக் கொண்டு, விடை கொடுத்தாள். மௌனமான போராட்டம் அண்ணன் தங்கையை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.
இரயில் புறப்பட்டபோது, புகையாகக் கக்கியது ரயில் எஞ்சின், அற்புதசாமியின் இதயமும் கவலையைப் பெருமூச்சாகக் கக்கிவிட, நிம்மதியாக பயணத்தைத் தொடர்ந்தார். தங்கையிடம் தப்பி வந்துவிட்டோம் என்பதுதான் அவர் பெருமூச்சு வெளியிட்ட சேதியாக இருந்தது.
அவர் வாய் இப்பொழுது அடிக்கடி ‘முருகா, முருகா’ என்று அழைக்கத் தொடங்கியது.
ஒவ்வொரு தடவை ‘முருகா’ என்கிறபொழுதும், ‘ஏன்பா’ சும்மா கூப்புடுறெ என்று வந்து எதிரே நிற்பான் மகன் முருகன்.
ஒன்றும் கூறாமல் அசட்டுச் சிரிப்புச் சிரிப்பார் அற்புதசாமி.
‘கல்யாண வீட்டிலே கட்டிப் பிடித்துக் கொண்டு அழுபவன், இழவு விழுந்த வீட்டிலே எப்படி அழுவான்?’ என்பது ஒரு பழமொழி. அதைப் போல, பைசாவைப் பார்த்தாலே பேயாய்ப்பிடித்துக் கொள்பவர், லட்சக் கணக்கான வைரக் கற்கள் வந்த பிறகு சும்மா இருப்பாரா?
அதனால்தான் முருகனைத் துணைக்கழைத்து உதவி செய்ய கேட்டுக் கொள்கிறார். சின்னப் பையன் முருகனுக்கு அது எப்படி புரியும்?
இராமேஸ்வரத்தில் இறங்கியவுடன், கோயில் இருக்கும் திசையைப் பார்த்து பெரிய கும்பிடு ஒன்றைப் போட்டுக் கொண்டார்.
படகுத் துறைக்குப் போவது போன்ற வேலைகளையெல்லாம் பதறாமல் பக்குவமாகவே செய்தார்.
அவருடைய பயணச் சீட்டு, இலங்கைக்குப் போகவேண்டிய அனுமதிச் சீட்டு, அதற்கேற்ற விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வது, காலரா போன்ற தொத்துநோய் இல்லாமல் இருக்கிறாரா என்பதற்குரிய இரத்தப் பரிசோதனைகள் எல்லாவற்றையும் கனகச்சிதமாகவும் முடித்துக் கொண்டார்.
ஏதாவது ‘கடத்தல் பொருட்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் சாமான்கள் ஏதாவது எடுத்துப் போகிறாரா என்று சுங்க இலாகா அதிகாரிகள், அவருடைய பெட்டி படுக்கை அத்தனையையும் பரிசீலித்தார்கள்.
எல்லாம் எந்தவிதமான தடையுமின்றி நடந்தேறியது. அங்கு இருந்த ஒரு அதிகாரி, என்ன பொட்டலம் என்று கேட்டு விசாரித்தார்.
“எல்லாம் இந்தப் பையனால்தான் சார், பத்து நிமிடத்திற்கு ஒரு முறை பசி பசியென்று கத்தி, பாடாய் படுத்திவிடுவான். அந்த அட்டகாசத்தை அடக்கத்தான், இந்தப் பொட்டலம் கொஞ்சம் தாமதம் செய்தால்கூட, ‘கத்தோ கத்து’ என்று கத்தி ஊரையே கூட்டிவிடுவான். தாயில்லாத பையன். அதனால்தான் அதட்டாமல் வளர்க்கிறேன்” என்று சொல்லிக் கொண்டே, ஒரு இட்லியை எடுத்துப் பிட்டு, முருகனுக்கு ஊட்டினார்.
பையனும் கை கொட்டி சிரித்துக் கொண்டே, இட்லியை மிகவும் விருப்பத்துடன் உண்டான்.
வேடிக்கை பார்த்து நின்ற அதிகாரியும், தன் மகன் மேல் அவர் வைத்திருக்கும் பாசத்தில் நெஞ்சுருகிப் போனார். சிரித்துக் கொண்டே அற்புதசாமியைப் போகும்படி பணித்தார். பொட்டலத்தைக் கட்டிக் கொண்டு, மற்றவர்கள் இருக்கும் இடத்திற்குப் போனார். கப்பல் புறப்படுவதற்கு இன்னும் அரை மணி நேரம் இருக்கிறது என்று அக்கம் பக்கம் உள்ளவர்கள் பேசிக் கொண்டார்கள்.
அற்புதசாமிக்கோ ஆனந்தம் தாங்க முடியவில்லை, வாயை விட்டு வெளியே வந்து விடாமல், பல தெய்வங்களை வேண்டிச் கொண்டார்.
ஆயிரக் கணக்கான ரூபாய்களுக்கு சொந்தக்காரராக இருக்கும் அற்புதசாமி, இன்னும் இரண்டே நாளில் இலட்சக்கணக்கான ரூபாய்களுக்கு அதிபதி என்று எண்ணியதும், லட்சாதிபதி தோரணையில் ஜம்மென்று உட்கர்ந்து கொண்டார்.
இன்னும் அரைமணி நேரந்தான் இருக்கிறது. வாழ வந்தபுரம் தருமலிங்கத்தின் முன்னோர்கள், தங்கள் பரம்பரைச் சொத்தாக மிகவும் பாதுகாப்புடன் பத்திரப்படுத்திக் கண்ணேபோல் காத்திருந்த வைரங்கள், இலங்கைக்குப் போய்விடும்!
அப்புறம் யார் கையில் இருக்குமோ! யார் பெட்டியில் உறங்குமோ? என்ன ஆகுமோ யார் கண்டார்? அந்த அம்பிகைக்கே வெளிச்சம்! மகன் இட்டிலி வாசனையிலும் அப்பாவோ வைரயோசனையிலும் மூழ்கிக் கிடந்தனர். அவர்களை விட்டுவிட்டு இந்த அரைமணி நேரத்திற்குள் நாம் வாழவந்தபுரம் போய், தருமலிங்கம் எப்படி இருக்கிறார் என்று பார்த்து வருவோமா!