கட்டுரைக் கதம்பம்/இனிய தமிழும் இஸ்லாமியர்களும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

10. இனிய தமிழும் இஸ்லாமியர்களும்

பசுந்தமிழ் பண்டும் இன்றும் என்றும் ஏற்றம் பெற்று வந்தமைக்கும், வருகின்றமைக்கும், வரப்போகின்றமைக்கும் பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றுள் தலையாய ஒன்று, தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழர்கள் தாம் தாம் எம்மதத்தினராயினும், தமிழ் மொழியைப்பேணி வளர்த்திருக்கின்றமையே என்று அறுதியிட்டு உறுதியாகத் கூறிவிடலாம். இந்நோக்கங்கொண்டு உழைத்திலரெனில், நாம் நம் பழம் பெரு இலக்கியங்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு முதலான சங்க மருவிய நூற்களைப்பெற்று இருக்க இயலாது; பழம்பெருமையையும் அறிந்திருக்க இயலாது. இச்சங்கமருவிய நூற்களைத் தந்தவர்கள் ஒரு குலத்தவர்கள் அல்லர். ஒரு சமயக் கொள்கையினர்கள் அல்லர். வெவ்வேறு குலத்தவர்களும் சமயத்தவர்களுமே ஆவர். அன்னார் அமைத்த இலக்கிய அணிகலன்களையே தண்டமிழ் அணங்கு தாங்கி நிலவி வருகின்றாள். இங்ஙனமே தமிழ் மகட்குப் பணி பூண்ட பிற்கால இஸ்லாமியர்களும் எம்முறையில் தம் கடனை ஆற்றியிருக்கின்றனர் என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் ஒருபுடை நோக்கமாகும். பற்பல தமிழ்ப் புலவர்கள் இஸ்லாமியர் இனத்தில் பெருகத் தொடங்கினர். இஸ்லாமிய சமூகத்தவரைத் தமிழ் மொழி தன் இனிமைப் பண்பினால் ஈர்த்துவிட்டது. இதனால்தான் தாமாகக் கவிபுனையும் நிலையிலும் பல புலவர்கள் அச்சமூகத்தில் தோன்றத் தொடங்கினர்

இங்ஙனம் புலவர் திலகங்களாக இருந்தவர்களின் வரலாற்றுக் குறிப்பினையும் அன்னார் யாத்த நூற்கள் சிலவற்றினையும் ஈண்டுக் குறிப்பிட்டால், உண்மை நன்கு புலனாகும்.

சவ்வாதுப் புலவர் என்பார் அரேபியாவில் இஸ்லாமியர்களுக்குச் சிறந்த யாத்திரைத் தலமாக உள்ள மெதினாமீது ஓர் அந்தாதியும், முஹ்யித்தீன் ஆண்டவர் மீது ஒரு பிள்ளைத்தமிழ் நூலும் பாடியுள்ளார்.இவ்விரு நூற்களே அன்றிச் சில தனிப் பாடல்களும் இவரால் பாடப்பட்டுள்ளன. அவற்றைக் காண விழைவார் தனிப் பாடற்றிரட்டில் கண்டு உணர்வார்களாக. இவற்றினோடு இவர் காலத்துச் சேதுபதி மகாராஜா வைசூரியால் வருந்திய காலத்தில் அவ்வைசூரி நீங்கும் பொருட்டு, இராஜராஜேஸ்வரியை வேண்டி ஒரு நூல் பாடியதாகவும் அறிய வருகின்றது. அதுவே, இராஜ ராஜேஸ்வரி பஞ்ச இரத்தின மாலை என்பது. இதன் பொருட்டு இவர் அம் மகாராஜாவால் சுவாத்தான் என்னும் நிலத்தையும் முற்றூட்டாகப் (வரியிலா நிலமாக) பெற்றதாக உணர்கிறோம்.

முகம்மத் இப்ராஹிம் என்னும் பெயருடைய பெரியாரும் தமிழ்ப் புலமை மிக்கவராய்த் திகழ்ந்துள்ளார். இவர் வண்ணங்கள் பாடுவதில் வல்லவராய்த் திகழ்ந்தவர். அதன் பொருட்டு இவர் தம் பிள்ளைத் திருநாமமாகிய முகமத் இப்ராஹிம் என்னும் இயற் பெயர் மாறி, வண்ணக் களஞ்சியப் புலவர் என்றே புலவர் பெருமக்களால் புகழப்பட்டு வரலானார். இன்னார் பிறந்த ஊர் மதுரைக்கு அண்மையதான மீசல் என்னும் ஊர் ஆதலின், மீசல் வண்ணக் களஞ்சியப் புலவர் என்று சுட்டப்பட்டும் வந்தனர். பல வண்ணங்களே அன்றி, முஹ்யித்தீன் புராணமும் பாடியுள்ளார். இதனை நாகூர் மகுதியில் அரங்கேற்றம் செய்தனர். அக்காலங்களில் பல தடைகள் எழுந்தன. அவற்றிற் கெல்லாம் தக்க  விடைகளை அமைதியாக ஈந்தனர். பல்லாண்டு நில உலகில் வாழ்ந்தனர். இவரது இறுதிக்காலம் எண் பத்து ஒன்பது எனில், இவரது முதுமையை உணர்ந்து கொள்ளலாம்.

அலியார் புலவர் என்பரும் இஸ்லாமிய இனத்துப் புலவரே. இவர் இந்திராயன் படைப்போர், இபுனியாண்டான் படைப்போர் என்னும் நூல்களைச் செய்திருப்பதாக அறிகிறோம். இவ்விரு நூற்களும் எவரும் வெருக்கொளத்தக்க அரக்கப் போரை வருணித்திருப்பனவாகும்.

முகம்மத் ஹ"சேன் என்பாரும் ஒரு நூல், தமிழ் மொழியில் யாத்துள்ளனர். அது பெண் புத்தி மாலை என்பது.

மதாறு சாகிபுப் புலவர் மிதிறுசாநா என்னும் தமிழ் நூல் பாடியிருப்பதாகவும் அறிகிறோம்.

எவரும் மறக்கமுடியாத தமிழ்ப் பெரும் இஸ்லாமிய இனத்துக் காவியப் புலவர் உமறுப் புலவர் ஆவார். இன்னர் பாடிய நூலே சீறாப் புராணம் என்னும் சீரிய புராணம் ஆகும். இச்சீறாப் புராணமே முகம்மது நபியின் வரலாற்றையும் அவரது வீரதிரச் செயல்களையும் அறிவிப்பதாகும். நவரசங்களும் அமையப்பெற்ற இஸ்லாமிய இனத்துத் தமிழ்க் காவியம் இதுவே. காவியப் பண்பு அத்துணையும் அமையப் பெற்றுக் கவினுற விளங்கும் காவியமும் இதுவே. -

மஸ்தான் சாயபு என்பாரும் மாபெருங் தமிழ்ப் புலவர். தாயுமானவரைப் போன்ற தகைமை படைத்தவர். அவர் யாத்த நூல் போலவே தாமும் ஒரு நூலைப் பாடியவர். தாயுமானவர் பாடிய நூல் எங்ஙனம் தாயுமானவர் பாடல் எனப் பெயரினைப்  பெற்றுள்ளதோ, அங்ஙனமே இவர் யாத்த பாடலும் மஸ்தான் சாயபு பாடல் என்னும் பெயரினைப் பெற்று விளங்குவதாகும். இப்பாடல் நூலேயன்றி நந்தீசர் சதகம், அகத்தீசர் சதகம் என்ற பெயரால் இரு நூல்களையும் பாடித் தமிழ் அன்னையை அலங்கரித்துள்ளார் என்பர்.

குலாம் காதிர் நாவலர் என்பாரும், புலவர் ஆற்றுப்படை பாடிய குலக் கவியே ஆவர்.

இன்னோரன்ன அருந் தமிழ் இஸ்லாம் இனத்துப் புலவர்கள் தமிழ் அன்னைக்குப் புரிந்த தமிழ்ப் பணியினை யாரேனும் பாராட்டாமல் இருக்க ஒண்ணுமோ ? ஒண்ணாது.

இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் மட்டும் தாம் தமிழ் மொழியினிடத்து அன்பும் ஆதரவும் காட்டி வந்தனர் என்று கூற இயலாது. பல இஸ்லாமிய வள்ளல்களும் தமிழ் மொழியினையும் சைவத் தமிழ் புலவர்களையும் ஆதரித்து இருக்கின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக ஒன்றினை ஈண்டுக் குறிப்பிடுவோமாக.

ஷெய்கு அப்துல் காதர் மரைக்காயர் ஒரு பெரும் இஸ்லாமியப் பெரியார். இவரைப் பெரிய தம்பி மரைக்காயர் என்றும் அழைப்பர். இவரே சீதக்காதி என்று சிறப்பித்துக் கூறப்படும் சீரிய வள்ளல். இவருக்கும் படிக்காசுப் புலவர்க்கும் நெருங்கிய நட்பு இருந்தது என்பதைச் சீதக்காதி மறைவு குறித்துப் படிக்காசுப் புலவர் பாடியுள்ள கையறுநிலைச் செய்யுட்களால் நன்கு அறியலாம். படிக்காசுப் புலவர் மறந்தும் புறந்தொழா மாந்தர். மேலும் பெரியபுலவர். அவர் தம் கவியின் சிறப்பினை,

மட்டாரும் தென் களங்தைப் படிக்காசன்
உரைத்ததமிழ் வரைந்த ஏட்டைப்
பட்டாலே சூழ்ந்தாலும் மூவுலகம்
பரிமளிக்கும் பரிந்த ஏட்டைத்
தொட்டாலும் கைமணக்கும் சொன்னாலும்
வாய்மணக்கும் துய்ய சேற்றில்
நட்டாலும் தமிழ்ப்பயிராய் விளைந்திடுமே
பாட்டினுடை நளினம் தானே

என்னும் செய்யுளால் அறியலாம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த புலவர் சிகாமணி யார் சீதக்காதி இறந்தமை குறித்துப் பல பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றுள் ஒன்று,

பூமா திருந்தென்ன புவிமா திருந்தென்ன பூதலத்தில்
நாமா திருந்தென்ன காமிருந் தென்னநன் நாவலர்க்குக்
கோமான் அழகமர் மால்சீதக் காதி கொடைமிகுந்த
சீமான் இறந்திட்ட போதே புலமையும் செத்ததுவே.

என்பது. இப்பாடலில் சீதக்காதி இறந்ததால் புலமையும் இறந்தது என்று புலவர் கூறுவாராயின், இதிலிருந்து சீதக்காதி தமிழ்ப் புலவர்களை எந்த அளவுக்கு ஆதரித்து வந்தார் என்பது புலனாகிறதன்றோ?

மேலும், தமிழ் மக்களும் இஸ்லாமிய மக்களும் தமக்குள் சமய வேற்றுமை பெரிதும் கருதியவர் அல்லர் என்பதும் நமக்குப் புலனாகிறது. சமய வேற்றுமை கருதியிருப்பாராயின், சேதுபதி மக ராஜர் வைசூரியால் வருந்திய காலத்து, சவ்வாதுப் புலவர் அந்நோய் நீங்க இராஜராஜேஸ்வரி மீது பஞ்சரத்தினமாலை பாடியிரார். இது மட்டும் ஒர் எடுத்துக்காட்டு ஆகாது. தமிழர்கட்கும் இஸ்லாமியர்கட்கும் சமயநெறியில் வேறுபாடில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக அய்யாசாமி முதலியார் என்பவர், குணங்குடி மஸ்தான் சாகிபு மீது குணங்குடி நாதர் பதிற்றுப்பத்து அந்தாதி பாடியிருப்பதாலும் அறியலாம். மஸ்தான் சாகிபு பாடிய அகத்தீசர் சதகமும், நந்தீசர் சதகமும் இதற்குச் சான்றாகக் கூறலாம்.

சைவப்பெரும் புலவர்களும் இஸ்லாமிய இனத்தவர்களும் மிக நெருங்கி நட்பு முறையில் பெரிதும் இயைந்து வாழ்ந்திருக்கின்றனர் என்பது சைவப் புலவர்கள் தம் தெய்வீக நூற்களில் இந்துஸ்தான் மொழியினைத் தங்கு தடையின்றி ஆண்டு இருப்பதாலும் நன்கு உணரலாம். இங்ங்னம் தம் அருமை நூல்களில் ஆட்சி காட்டியவர்கள் அருணகிரி நாதரும், குமரகுருபர சுவாமிகளும் ஆவர். அருணகிரிநாதர், ஆண்ட இந்துஸ்தான் சொற்கள் சலாம், சபாஷ் என்பன. சலாம், சபாஷ் என்னும் இரண்டு சொற்களைச் சுவாமிமலைத் திருப்புகழில்,

“சுராதிய திமாலய னுமாலொடு சலாமிடும்
சுவாமிமலை வாழும் பெருமாளே.”

என்றும் “சபாஷ்” என்னும் மொழியினைக் திருநள்ளாற்றுத் திருப்புகழில்.

“கற்ப கங்திரு நாடுயர் வாழ்வுறச்
சித்தர் விஞ்ஞையர் மாகர் சபாசென
கட்ட வெங்கொடு சூர்கிளை வேரற
விடும்வேலா”

என்றும் அமைத்துப் பாடியுள்ளார்,

குமரகுருபர சுவாமிகள் தம் முத்துக்குமார சுவாமிப்பிள்ளைத் தமிழில் சலாம் என்னும் இந்துஸ்தான் கிளவியினைப் பயன் படுத்தியுள்ளார். அதுவே, 

 “குமரி இருக்கக் கலாமயில் கூததயர்
குளிர்புனம் மொய்த்திட்ட சாரலில்போயக்
குறவர் மகட்குச் சலாமிடற் கேக்கறு
குமரனை முத்துக் குமரேசனைப் போற்றுதும்”

என்பது.

பட்டினத்தார் பாடலிலும் “குலாம்” என்னும் இந்துஸ்தான் மொழி காணப்படுகிறது. “கொடுக்க அறியாது இறக்கும் குலாமர்க்கு என் சொல்வேன்” என்ற அடியில் காண்க. இப்படிச் சில எடுத்துக் காட்டுக்கள் உண்டு.

இங்ஙனம் எம்மதத்தினரும் ஒற்றுமையுடன் தமிழ் நாட்டில் நிலவித் தமிழ்மொழியினைப் பேணிப் போற்றி வந்தனர் என்பதை நாம் உணர்கையில், நாமும் நம்தமிழ் அன்னைக்கு நம்மாலான தொண்டினைச் செய்யக்கடமைப் பட்டுள்ளோம் என்பதை மறவாமல், ஆவணசெய்தற்கு அரும்பாடுபடுவோமாக.