கட்டுரைக் கதம்பம்/தேவர் கண்ட நாடு

விக்கிமூலம் இலிருந்து


12. தேவர் கண்ட நாடு

சீரும் சிறப்பும் மிக்கது நம் செந்தமிழ் மொழி. இக் காரணங்கண்டே இதன்பால் ஆர்வமும் அன்பும் கொண்டு இதனைப் பயின்றவர் பலர். அப்பலர் இனத்தாலும், சமயத்தாலும் வேறுபட்ட கொள்கையினர் ஆவர். இங்ங்னம் வேறுபட்டவராயினும், அவர்கள் இம்மொழியை வளம்படுத்தவோ, இதற்குப் பணி பல புரியவோ, நூல் பல யாக்கவோ பின்வாங்கியவர் அல்லர். இம் முறையில் பண்ணியல் தமிழ்க்குப் பணி புரிந்தவருள் சைனரும் அடங்குவர். அவர்கட்குத் தமிழ் நாட்டவர் என்றென்றும் கடமைப்பட்டவர் என்று கூறல் மிகையாகாது.

சமணப்புலவர்_ பெருமக்களுள் திருத்தக்க தேவரும் ஒருவர். இவர்க்கு அமைந்த அடைமொழிகளின் சிறப்பினின்றே இவ்வறிஞர் பெருமானாரது மாண்பினை நன்கு உணரலாம். இவர் துறவுக் கோலம் பூண்ட தூயர். இவர் பெருந்துறவியராதலின், பேரின்ப நிலையைப் பேசுந்திறத்தினர் போலும் ! காவியம் பாடிக் கவிஞரைக் களிக்கச் செய்யும் ஆற்றல் அற்றவராய் இருப்பர் போலும் : என்று எண்ணுவதற்கு இடங் கொடாதவர் என்பதைக் காவியச் சுவை கனிந்து ஒழுகும் வண்ணம் சீவக் சிந்தாமணி என்னும் சீரிய நூலைச் செய்திருப்பதினின்றும் அறிந்து கொள்ளலாம்.

இவர் சொல்லையும் பொருளையும் எடுத்து ஆண்ட புலவர் பலர், புலவர் பெருமானார் சேக்கிழார்க்கும், கல்வியில் பெரியராம் கம்பர்க்கும், ஆற்று வளன், நாட்டுவளன், நகர்வளன் எவ்வெம் முறையில் கூறுவது என்பதை எடுத்துக் காட்டியவர் தேவரே எனில், வேறு என் கூறுவது! இக் கூற்றின் உண்மையை அப்புலவர் பெரு மக்கள் பாடியுள்ள காவியங்களை ஒத்திட்டுக் கற்பின் புலனுகாமற் போகாது.

"பத்தியின் பாலர் ஆகிப்
பரமனுக் காளாம் அன்பர்
தத் தமிற் கூடி னார்கள்
தலையினால் வணங்கு மாபோல்
மொய்த்தநீள் பத்தி யின்பால்
முதிர்தலே வணங்கி மற்றை
வித்தகர் தன்மை போல
விளைந்தன சாலி எல்லாம்"

என்னும் சேக்கிழார் பெருமானரது செவ்விய வாக்கு.

"சொல்லருஞ் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருவிருங் தீன்று மேலலார்
செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்த நூல்
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே"

என்னும் தேவர் செய்யுளின் கருத்தை ஒட்டியது என்பதைச் சுட்டவும் வேண்டுமோ! இவ்வாறே கம்பர் என்னும் கவி குஞ்சரத்தின் பாடலாகிய,

என்பது, திருத்தக்க தேவர் பெருமானரது திருந்திய மொழியாகிய,

என்பதன் சாயை அன்றோ? இப்படிப் பல சான்றுகளைக் காட்டிச் செல்லலாம். ஆயினும், பரக்குமென இத்துடன் தருக்கப் பட்டது. ஆகவே, திருத்தக்க தேவரது சிறப்புக் குன்றின்மேல் இட்ட தீபம் போல என்றும் குறையா ஒளியுடையதாகும்.

இது காறும் கூறப்பட்ட பெருமை வாய்ந்த புலவர் திலகராற்பாடப்பட்ட நூலே சீவக சிந்தாமணி என்பது. இதனைத் தமிழ் அறிவு படைத்த எவரும் அறிவர். இந்நூல் எல்லாப்படியாலும் ஈடும் எடுப்பு அற்ற ஒரு தனி நூல். தன்மையால் பெயர் பெற்ற நூல் இன்ன என்பதை மயிலை நாதர் குறிப்பிடுகையில், 'சிந்தாமணி, சூளாமணி, நன்னூல்' என்று கூறுவதால் நன்கு விளங்கும். இந்நூளை எச்சமயத்தவரும் எப்புலவரும் பாராட்டாமல் இரார். இதற்குரிய காரணம், இந்நூற்கண் அமைந்த பொருட் சிறப்பே அன்றி, வேறு அன்று. சிவப் பிரகாச சுவாமிகள் இந்நூற் பொருளை நன்கு துய்த்து அறிந்தவர் என்பது, அவர் யாத்த திருவெங்கைக் கோவையில் காணப்படும் ஒரு செய்யுளினின்றும் நன்கு புலனாகிறது.

"சிந்தா மணியும் திருக்கோ வையும் எழு திக்கொளினும்
கந்தா உரையை எழுதல் எவ் வாறு நவின்றருளே !'

'என்பன அப்பாடலின் அடிகளாகும். இதனால், சிந்தாமணியின் உரைப் பொருளைக் கற்பனைக்கு ஊற்றாம் துறைமங்கலம் சிவப்பிரகாசரே, இங்ஙனம் இந்நூலின் நுட்பத்தினைத் தெரிவிப்பாராயின், மற்றப் புலவர் எத்துணை அளவிற்கு இதனைப் பாராட்டுவர் என்பதை உணந்து மகிழ்வோமாக !

இன்னோரன்ன இயல்பு வாய்ந்த நூலிலிருந்து ஏதேனும் ஒரு பகுதியை ஆராயவேண்டிய உள்ளம், திருத்தக்க தேவர் கண்ட நாடாகிய ஏமாங்கத நாட்டின் மீது சென்றது. இதன்மீது கருத்துச்  என்பதற்குப் பல காரணங்கள் இருபபினும், அவற்றுள் தலை சிறந்த காரணங்கள் சில அவை, தேவர் எம் முறையில் தாம் கூறப்புகுந்த நாட்டின் வளத்தையும் சிறப்பையும் கூறியுள்ளாரோ, அம் முறையைப் பிற நாடுகளும் பெறவேண்டும் என்பதும், அவர் எத்தகைய நாட்டை விழைகின்றார் என்பதும், அந்நிலை அமைவதற்கு யார் யார் எவ்வெம்முறையில் உழைக்க வேண்டும் என்பதும் ஆகும்.

நாடு என்றதும் சிலருக்கு மண்ணும் மரமும் மட்டைகளுமே முன்வந்து நிற்கும். இவைமட்டும் அல்ல நாட்டிற்குரிய பண்புகள். நாட்டின் இலக்கணம் காண விழைவார், வள்ளுவர் வகுத்த நாடு என்னும் தலைப்பின்கீழ் உள்ள குறட்பாக்களே ஊன்றிப்பார்ப்பார்களாக ! ஆனால், தேவரும் நாட்டைக் காண முயல்கின்றனர்; வகுக்க முன் வருகின்றார். அவர் கண்டது என்ன ? வகுத்தது யாது? இவையே ஈண்டு ஆராய்வதற்குரியவையாகும்.

நாட்டிற்கு இன்றியமையாதது செல்வம் என்பதை மறுக்க எவருக்கும் எண்ணம் எழாது. செல்வம் நிறைந்த நாடே செழிப்புற்ற நாடு. அச் செல்வம் எது? பொருட் செல்வம் மட்டுமா? அன்றிக் கல்விச் செல்வமும் வேண்டற்பாலதோ ? எனில் இரண்டுமே ஈண்டுச் செல்வம் என்று குறிக்கப்பட்டவையாகும். பொருட் செல்வத்திலும் கல்விச் செல்வமே தலை சிறந்தது, 'அறிவுடையார் எல்லாம் உடையார்' என்பதன்றோ வள்ளுவர் கருத்து ? 'விழுச்செல்வம்' என்று கல்வியைத் தானே கவிஞர் பலரும் கழறுவர்? இதனால். பொருட்செல்வம் பொலிவுறுதல் வேண்டாவோ ? என்ற வினா எழ வேண்டா. இரண்டும் ஒரு நாட்டிற்குக் கண் போன்றவை. இதனை மறவாத நம் முனிவர் பெருந்தகையார், தாம் காணும் நாட்டைக் குறித்துக் கழறும்போது,

‘’நாவிற் றிருந்த புலமா மகளோடு நன்பொன்
பூவிற் றிருந்த திருமா மகள் புல்ல நாளும்‘’

என்று குறிப்பிட்டுத் தொடங்கியதினின்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு இவை இரண்டும் மிகமிக இன்றியமையாதவை என்பதைத் தேவர் வற்புறுத்தி இவை விளக்க முற்றுப் பெருகுதற்கானவழி வகைகளை காட்டு ஆட்சியாளரும் பொது மக்களும் நாட வேண்டும் என்பதை அறிவுறுத்துகின்றார்.

கல்வியறிவு நிரப்பப் பெற்றவர், தாம் வாழும் நாட்டிற்கு ஆக்கம் தேடுவரே அன்றி, அழிவைத் தேடார்; வாளா இருக்க ஒருகாலும் ஒருப்படார். செடிகளை நட்டுச் சிறக்க வாழ்வர். இம் முறையே பண்டைய முறையாகும். இதனை நாம் செய்யாது மறந்ததனால் அன்றோ, பசியும் வறுமையும் கொண்டு இந் நாள் வாடி வதங்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம்: நடுதற்கும் வளர்த்தற்கும் முன் வராவிட்டாலும், அழித்தற்கு முன் வருவதுதான் வருந்தத்தக்க செயலாகும். வீடு கட்டுதற்கும், சூளை இடுதற்கும், காற்றும் நிழலும் கனியும் தரும் தருக்களை வெட்டி வீழ்த்துநரைக் காணின், எத்துணைத்துன்பம் உண்டாகிறது? ஏன்சினமும் எழுகின்றது! அந்தோ! அவர்தம் அறியாமை என்னே! மரஞ் செடி கொடிகளின் அடர்த்தி நாட்டுவளத்திற்கு அறிகுறிஅன்றோ? மேகக் தவழ்ந்து மழை சொரிதற்கு மார்க்கமன்றோ ? இதனாலன்றோ இன்மொழிப்புலவர்யாவரும் தத்தம் நாட்டை வருணிக்கும் காலத்து, மரஞ் செடி கொடிகளை மாண்புறப் பாடத் தொடங்கினர்: அவை செறிந்த நாடே நாடு என்பதை அறிவுறுத்த அன்றோ திருத்தக்க தேவரும்,

காப்மாண்ட தெங்கின் பழம்வீழக்
கமுகின் நெற்றிப்
பூமாண்ட தீந்தேன் தொடைகீறிப்
வருக்கை போழ்ந்து
தேமாங்கனிசிதறி வாழைப்
பழங்கள் சிந்தும்
ஏமாங் கதமென் றிசையால்
திசைபோய துண்டே."

என்று மர வளத்தைப் பாடிக் களிக்கிறார் ?

மரம் செடி வளர்ப்போடு விளைவினை விருத்தி செய்து நாட்டில் பசியை நாடவொட்டாது செய்வதும் மக்கள் கடமையாகும். கடமைப் பண்பை மேற் கொண்ட போது ஒற்றுமைக் குணமும் ஓங்க வழி ஏற் டுகிறது. உயர்திணைப் பொருள்கள்பால் இப்பண் பாடுகள் ஒருங்கே அமையின், அஃறிணைகளிடத்தும் அமைந்து காணப்படும்.என்பதை நாம் எதிர் பார்க்க லாம். இஃது உண்மை என்பதைத் தேவர் உழவு மாடுகளின் மூலம் உணர்த்துகிறார். விளைவுக்கு உறுதுணையாய் இருப்பன அவையே அல்லவா? கடமைப் பண்பை உணர்ந்தவர் காளைகளைக் கண்ணுங் கருத்துமாய்ப் பேணுவர் என்பதைக் கழறவும்வேண்டுமோ? உழுகின்ற எருதுகள் சூம்பற் காளைகளாயும், சோம்பற்காளைகளாயும், ஒற்றுமை அற்றனவாயும் இருப்பின், உழவும் இயலாது; விளைவும் பல்காது. இவை இரண்டும் நடவா எனில், "பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க", என்னும் முது மொழியும் பாழ்படும் 'மாடு' என்னும் சொல்லும் 'செல்வம் ” என்னும் பொருளை இழந்து நிற்கும். ஒற்றுமைப் பண்புடையனவாய் இருத்திலை வற்புறுத்தவே தேவர்,

‘’மாமனும் மருகனும் போலும் அன்பின,
காமனும் சாமனும் கலந்த காட்சிய,
பூமனும் அரிசிப் புல்.ஆர்ந்த மோட்டின
தாமினம் அமைந்துதம் தொழிலின் மிக்கவே‘’

என்று கூறிக் களிக்கின்றார். நாட்டிற்கு இத்தகைய காளைகள் தேவை என்பதைச் சுட்டிக் களிக்கின்றார்!  உழவர்கள் இன்னோர் அன்ன பண்புடையகாளைகளைப் பெறுதற்கு அரசாங்கம் துணைபுரிய வேண்டும் என்பதைத் தேவர் சொல்லாமல் சொல்லிக் காட்டுகிறார், இத்துடன் நில்லாமல், அரிசிப் புல் ஆர்ந்து என்னும் தொடரால், யார் ஒருவர் உள்ளம் உவக்க உழைத்துப் பாடுபடுகின்றனரோ, அவர்கள் தாமும் உண்டு பிறரையும் உண்ணச் செய்யும் பேருபகாரியாவர் என்பதையும் காளைகளின் குணங்களினின்றும் குறித்துக் காட்டுகின்றார். இன்னமும் இதன்பால் உள்ள நய முடைப் பொருளை நன்கனம் ஒர்ந்து சுவைப்பீராக.

இங்ஙனம் இயற்கை வளனும் செயற்கை நலனும் ஒருங்கே அமையப் பெற்ற நாட்டில் அன்பும் வீரமும் குடிகொண்டு நிலவும். இவை நிலவப் பெற்ற நாட்டை எவரும் விரும்புவர். 'மண்ணவரே அன்றி விண்ணவரும் விழைவர்', என்பது அறிஞர்களின் கருத்தாகும். நம்தேவர்பெருமானார் இதனைச் சுட்டிக் காட்டுகின்றார். அப்படிச்சுட்டும் போது ஒர் அழகும் பொலிய அமைத்துக் காட்டுகின்றார், புலவர்கள் கற்பனைக் களஞ்சியம் என்பதை எவராலும் மறுக்க இயலாது. அம் முறையில் வானவர் கண் இமையாமல் இருத்தற்கும் தற்குறிப்பேற்ற அணியாகப் பல காரணங்களைக் காட்டுவர். ஈண்டுத் தேவர் காரணம் காட்டும் வகை அருமைப்பாடுடையது. அவ்வருமைப் பாடு நாட்டின் சிறப்பு கனிமிகச் சிறப்பதற்காகவே கூறும் கூற்றாகும்.

'விண்ணவர்க்கு யாதொரு குறைவும் தம் விண்ணுலகில் இல்லாதிருந்தும், ஏமாங்கத காட்டில் அமைந்துள்ள செல்வப் பெருக்கையும், வீரப் பண்பையும், கண்டு அங்காட்டை இமை கொட்டாது நோக்குதலால்தான் கண் இமைத்திலர்' என்று தேவர்.தீட்டும் ஒவியம் எத்துணை இன்பம் பயக்க வல்லதாக இருக்கிறது பாருங்கள்! 

மல்லல் மாநகர்ச் செல்வமும் வார்கழல்
செல்வர் செல்வமும் காணிய என்பர்போல்
எல்லியும் இமையார் .

ஈண்டு எல்லி என்னும் சொல்லை இரவு பகல் என்னும் இருபொருள் தரும் முறையில் அமைத்துப் பாடிய சிறப்பைக் காண்க.

நாடென நவிலப்பெறும் பேறுபெற வேண்டும் மாயின், எல்லா நலனும் வளனும்ஒருங்கே பொலிதல் வேண்டும். எவர் எதைவிழையினும் அதைத் தரும் நாடே நாடு. அறவோர்க்கு இடம் தரும் நாடே, துற வோர்க்கும் இடந்தருதல் வேண்டும். வறுமையால் சிறுமையுற்று வாடி வருவார்க்கும் இடம் தந்து, இழந்த பொருளை ஈட்டுதற்கும் ஏற்ற வசதிதருவதாய் வாய்ந்ததே நாடாகும். இன்னோரன்ன இயல்புடைய நாட்டையன்றோ தேவர் நமக்குக் காட்டுகின்றார் ?

"நற்ற வம்செய் வார்க்கிடம் :
தவம்செய் வார்க்கு மஃதிடம்
நற்பொருள்செய் வார்க்கிடம் :
பொருள்செய் வார்க்கு மஃதிடம் :
வெற்ற இன்பம் விழைவிப்பான்
விண்ணு வந்து வீழ்ந்தென
மற்ற நாடு வட்டமா
வைகும் மற்ற காடரோ."

என்று கூறியும் குதூகலிக்கிறார்.

இவ்வாறு தேவர் வகுத்துத் தந்த காட்டின் இயல்பை ஏனைய நாடுகள் அமையப் பெறுதற்கான வழிவகைகளே நாடுதற்கு அரசியலார் முந்தவேண்டும். இ.து அரசியலார் பணி, என்று பொதுமக்கள் வாளா இருத்தல் அன்றி அவ்வரசியலாருடன் ஒற்றுமைகொண்டு உழைக்கவும் வேண்டும்.

"தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு."