உள்ளடக்கத்துக்குச் செல்

கட்டுரைக் கதம்பம்/மணிமேகலை பாடிய மாபெரும்புலவர்

விக்கிமூலம் இலிருந்து

7. மணிமேகலை பாடிய மாபெரும் புலவர்

மணிமேகலை எனனும் மாபெரும் நூலைப் பாடிய புலவர் யார் எனில், அவரே மதுரைக் கூலவாணிகச் சீத்தலைச் சாத்தனராம் சங்ககாலச் சான்றோருள் பெருமதிப்புப் பெற்ற பெருந்தகையராவார். இவர் பெரும் புலவராயும், பெரும் வணிகராயும் திகழ்ந்தவர். இவரது இயற்பெயர் சாத்தனார் என்பது. ஆனால், இவருடைய பெயர்க்கு முன் உள்ள அடை மொழிகளால் பல அரிய குறிப்புக்கள் நமக்கு அறிய வருகின்றன. இப்புலவர் வணிகர் தொழிலே மேற்கொண்டு இருந்தவர் என்பதை இவர் பெயர்க்கு முன் வாணிகச் சீத்தலைச் சாத்தனர் என்று குறிப்பிடப்பட்டிருப்பதனால் நன்கு உணரலாம், வாணிபம் பல துறையில் செய்யப்படும். அது பொன் வாணிபமாக வேனும், அறுவை (ஆடை) வாணிபமாகவேனும் மற்றும், வெவ்வேறான வாணிபமாகவேனும் இருக்கலாம். ஆனால், இப்புலவர் சிகாமணியார் தான்ய வியாபாரியாக இருந்தார் என்பதை இவர் கூலவாணிகச் சீத்தலைச் சாத்தனர் என்ற பெயர் பூண்டு இருப்பதால் உணரலாம். கூலம் என்பது நெல் முதலிய தான்யம் ஆகும்.

அடுத்தபடியாக இவர் பெயருடன் இணைத்துப் பேசப்பட்டுள்ள மதுரை என்னும் சொல்லைக் குறித்தும் சீத்தலை என்னும் மொழியைக் குறித்தும் சிறிது ஆராய்ச்சி செய்ய வேண்டியவராய் இருக்கின்றோம். இவர் தாம் மேற்கொண்ட தான்ய வியாபாரத்தினை மதுரையில் நடத்தி வந்தமையின் மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று குறிக்கப்பட்டு வந்தனர். சீத்தலைச் சாத்தனார் என்று ஏன் இவர் அழைக்கப்பட்டார் என்பதையும் ஈண்டே உணர்ந்து கொள்வது உசிதமாகும்.

சாத்தனார் சீத்தலைச் சாத்தனார் என்று பெயர் பூண்டமைக்கு நம் தமிழகத்தில் இரு காரணங்கள் இயம்பப்பட்டு வருகின்றன. ஒன்று, சீத்தலை என்பது ஒர் ஊர். இவ்வூரில் சிறப்புற்று விளங்கிய தெய்வம் ஐயனார் என்பது. அத் தெய்வத்திற்குச் சீத்தலைச் சாத்தனார் என்ற பெயர் வழங்கப்பட்டு வந்தது. அப்பெயரையே இவருக்கு இட்டு வழங்கினர் ' என்பது. சீத்தலைச் சாத்தனார் என்ற பெயருக்கு மற்றொரு காரணமாகக் கூறப்படுவது யாதெனில், அதுதான் பின்வரும் குறிப்பாகும். அதாவது, "சீத்தலைச் சாத்தனார் சங்கிகால அறிவுடைச் சான்றோர் அல்லரோ? "அவர் தமிழ்ச் சங்கத்தில் இருக்கும்போது புலவர் என்று பெயரை வைத்துக் கொண்டு சிலர் பாடல்களைப் பாடிக்கொண்டு வந்து படித்துக் காட்டும்போது, அப்பாடல்களில் சொற் குற்றம், பொருட் குற்றம் முதலிய பல குற்றங்கள் மலிந்து இருந்தமையினக் கேட்கும் தோறும், சகிக்க முடியாத காரணத்தால், தாம் எழுதும் இருப்பு ஆணியாகிய எழுத்தாணியைக் கொண்டு ' இத்தகைய தவறுடைய பாடல்களையும் நாம் கேட்க நேர்ந்ததே என்று தம்தலையில் குத்திக் குத்தி வந்த காரணத்தால் குத்துண்ட இடம் புண்ணாகிச் சிழ் ஒழுகும் இடமாக இருந்தமைப்பற்றி, இவர் சீத்தலைச் சாத்தனார் என்று அழைக்கப்பட்டனர் ." என்பதாகும், ஆனால் இக்குத்து இப்புலவர்க்கு நின்றபாடு இல்லையோ என்று நீங்கள் எண்ணக் கூடும். இவர்க்கு இவ்வாறு தம் தலையில் குத்திப் புண்ணாக்கிக் கொண்ட செயல் முற்றுப் பெறும் காலமும் வந்து சேர்ந்தது. வள்ளுவப் பெருந்திகையார் வரைந்த வாய்மொழியாகிய திருக்குறட்பாக்களைக் கேட்டபின்னர், அக்குறட்பாக்களின் பொருள் செறிவு, இவர் குத்திப் புண்ணாக்கிக் கொள்வதை நிறுத்தச் செய்தது. இதனை அழகுபட இவர் காலத்துப் பெரும் புலவர் மருத்துவன் தாமோதரனார் தமது அருமைப் பாடல் ஒன்றால், "வள்ளுவர் முப்பாலால் தலைக் குத்துத் தீர்வு சாத்தற்கு" என்று விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, மேலே காட்டிய காரணங்களால் இப்புலவர் பெருந்தகையார் மதுரைக் கூலவணிகச் சீத்தலைச் சாத்தனார் என்று குறிக்கப்பட்டு வந்துள்ளார். இவர் மதுரைச் சீத்தலைச் சாத்தனார் எனவும், சீத்தலைச்சாத்தனார் எனவும், சாத்தனார் எனவும் அழைக்கப்படுவாரானார்.

சாத்தனார், இவரைப்போன்ற புலவர்களால் சிறப்பிக்கப்பட்ட சீர்மையோர் ஆவார். இவரோடு இணைந்து நட்புக் கொண்டிருந்த புலவர் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ அடிகளார் ஆவார். அவர் இவரைக் குறிப்பிடும் போதெல்லாம் "நன்னூல் புலவன்" என்றும், "தண்டமிழ் ஆசான் சாத்தன்" என்றும் குறிப்பிட்டு இவர்க்கு இருந்த தண்தமிழ் அறிவையும், நல் நூல்களே இயற்றும் வன்மையினையும், ஆசிரியர் என்று போற்றத்தக்க பெருமைசான்றவர் என்பதையும் நன்கனம் புலப்படித்தியுள்ளார்.

சீத்தலைச் சாத்தனார் இளங்கோ அடிகளின் தமையனை சேரன் செங்குட்டுவனிடத்தில் நட்புக் கொண்டிருந்தனர். அந்நட்புக் காரணமாகக் கண்ணகி என்பாளது பிறப்பின் மேம்பாட்டை எடுத்துக்கூறியவர். மேலும், அவளுக்குக் கோயில் கட்டு வித்து நித்தியபூசைகள் நியமமாக நடத்தக் காரணமானவர். சாத்தனார் வேண்டுகோளுக்கு இணங்கியே இளங்கோ அடிகளார் சிலப்பதிகாரமாம் சீரிய நூலை யாத்தனர். ஆகவே, கற்புடைக் கடவுளாம் கண்ணகியின் கோயில் எடுப்புக்கும் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமாம் காவியத்தை நாம்பெறு தற்கும் பெருங்காரணர் சீத்தலைச் சாத்தனார் என்பதை அறிந்து நாம் இன்புற வேண்டியவராகின்றோம்.

சாத்தனார் பெரும் புலவராக இருந்தும், திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் மிகுந்த ஈடுபாடு உடையவராய் இருந்தார் என்பதை முன்னர்க் கண்டோம். திருவள்ளுவரிடத்திலும், அவர் செய்த நூலிடத்திலும் இவர் கொண்டிருந்த மதிப்பு இவர் எழுதியுள்ள நூலில் சமயம் வந்தபோது, திருவள்ளுவரையும், திருக்குறளையும் புகழ்ந்து பேசுவதிலிருந்து நன்கு உணரலாம். திருவள்ளுவரைப் பொய்யில் புலவன் என்று கூறிப் போற்றுகிறார். திருக்குறளைப் 'பொருள் உரை' என்று புகழ்கிறார். திருக்குறள்களில் ஒரு குறளை எடுத்து ஓர் எழுத்தும் ஒரு சொல்லும் சிதையாதவாறு தம் நூலில் அமைத்தும் பாடியுள்ளார். அதுவே, மணிமேகலையில் சிறை செய் காதையில்,

'தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றஅப் பொய்யில் புலவன் பொருள்உரை தேருப்"

என்று கூறப்பட்டதாகும். சீத்தலைச் சாத்தனார்க்குத்_திருக்குறளினிடத்தில் இருந்த பெருமதிப்புக்கு மேலே காட்டிய சான்று மட்டும் போதாது. நாடு, மலை, நதி, ஊர், முரசு, தமிழ், கொடி, ஊர்தி முதலிய ஒவ்வொன்றும் மும் மூன்றாகப் பெற்றிருந்தாலும் முப்பாலாகிய திருக்குறள்தான் மன்னர்கட்கு முடியில் மாலையாக விளங்க வல்லது என்பதை,

"மும்மலையும் முங்காடும், முந்நதியும் முப்பதியும்
மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும்-மும்மாவும் தாமுடைய மன்னர் தடமுடிமேல் தார் அன்றோ பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்’

என்று பாடியுள்ள பாராட்டுரையைப் பாருங்கள். இதன்பொருள், "இக்குறள் கொல்லிமலை, நேரிமலை, பொதிகைமலை எனப்படுகின்ற மூன்று மலைகளையும், சேரநாடு, சோழ நாடு, தென்னாடு எனப்படுகின்ற மூன்று நாடுகளையும். பொருநை நதி, காவிரி நதி, வைகை நதி எனப்படுகின்ற மூன்று நதிகளையும், கொடை முரசு, படை முரசு, மண முரசு என்ற மூன்று முரசுகளையும் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் எனப்படுகின்ற மூன்று தமிழ்களையும் வில் கொடி, புலிக் கொடி, மீனக்கொடி எனப்படுகின்ற மூன்று கொடிகளையும் பாடலம், கனவட்டம், கோரம் எனப்படுகின்ற மூன்று குதிரைகளையும் தாம் முறையாகப் பெற்ற சேர, சோழ, பாண்டியர் எனப்படும் மூவரசர்கள் தம் தம் முடிகளில் மேலும் கொள்ளப் பட்ட மாலை அன்றே என்பது.

சீத்தலைச் சாத்தனார் அறிவு ஆற்றலைக் காண விழையும் நாம், இப்புலவர் பாடியுள்ளனவாகக் கிடைத்துள்ள பாடல்களை நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு புறநானூறு திருவள்ளுவமாலே நூல்களில் பரக்கக் காணலாம். இப்பாடல்கள் தனித் தனிப்பாடல்கள். இவர் ஒரு பெருங்காவிய நூலாகச் செய்ததே மணிமேகலை என்னும் பெயருடைய நூலாகும். இம்மணிமேகலை என்னும் நூலில் இவர் கூறியுள்ள கருத்துக்களில் புத்தமதக் கருத்துக்களை ஆழ்ந்த அனுபவ முறையில் கூறியிருப்பது கொண்டு இப்புலவர் பெருமானார் புத்த மதத்தினர் என்பது புலனாகிறது. ஈண்டு நாம் இப்பெருந்தகையாரது புலமைப் பெருக்கை அறிந்து இன்புறுதற்கு இவர் பாடியுள்ள புறநானூற்றுப் பாடலையே பற்றுக் கோடாகக் கொள்வோமாக. இவரது ஏனைய பாடல்களின் இன்சுவையினை நுகர்தற்கு இவ்வேடு இடந் தராது. பின்னால் நீங்களே அப்பாடல்களைப் படித்துப் பெரும்பயன் பெறுவீர்களாக.

சாத்தனார் பாடினதாகப் புறநானூற்றில் காணப்படும் பாடல் ஒன்றே ஆகும். அப்பாடல் பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் மீது பாடப்பட்டது. இம்மன்னனுக்கு முன்னும் பின்னும் அமைந்த சொற்களாகிய பாண்டியன் மாறன் என்பன அவன் மூவேந்தர் குடிகளுள் ஒன்றான பாண்டியர் குடியினன் என்பதைப் புலப்படுத்துகின்றன. இவனை பாண்டியர் குலத்து மன்னர்களுள் நற்பெயர் எடுத்த கல்லரசன்போலும் ! அதனால்தான் நன்மாறன் என்று கூறப்பட்டுள்ளான். இவன் வாழ்ந்த இடம் ஒரு பேர் அரண்மனை. அது பல விதமான அழகிய சித்திரங்களைக் கொண்டிருந்தது. அவ்விடத்தில் இவன் இருந்து வாழ்கையில், இவனது வாழ்நாட்கள் உலந்தபின் மண்ணுலகிலிருந்து விண்ணுலகிற்கு விருந்தாகச் சென்றவன். இவ்வாறு இப்பாண்டிய மன்னன் தான்வாழ்ந்திருந்த மாளிகை யாகிய சித்திரமாடத்தில் உயிர்விட்ட காரணத்தால் பாண்டியன் சிந்திரமாடத்துத்துஞ்சிய நன்மாறன் என்று கூறப்பட்டனன். இவ்வாறு மன்னர்கள் எங்கெங்கிருந்து இறந்தனரோ, அவ்வவ்விடங்களையும் இணைத்து இன்ன இடத்தில் இறந்தமன்னன் என்று குறிப்பிட்டுவந்த வழக்கம் தமிழகத்துத் தொன்று தொட்ட வழக்கமாகும். இதனைப் பண்டைக்கால மன்னர்கட்கு அமைந்திருந்த பெயர்களைக் கொண்டு நன்கு உணரலாம். எடுத்துக்காட்டாகக் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, சேரமான் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், சேரமான் சிக்கல் பள்ளித்துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன், சோழன் இளவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங் கிள்ளி சேட் சென்னி, சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன், சோழன் குள முற்றத்துத் துஞ்சியகிள்ளிவளவன், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன், பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி, பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி 

முதலிய பெயர்களைக் காட்டலாம். எனவே, சீத்தலைச் சாத்தனாரால் பாடப்பட்ட பாண்டியன் சித்திரகூடத்தில் பூத உடல் நீத்துப் புகழ் உடல் பெற்றவன்.

இம்மன்னனைப் பற்றி இப்புலவர் பாடியுள்ள புறநானூற்றுப் பாடல் நீண்ட பாடலும் அன்று; குறுகியபாடலே. அக்குறுகிய பாடலில் இம்மன்னன் வீரம், கொடை முதலியன சுருங்கச் சொல்லி விளங்க வைத்த பெருமை சீத்தலைச் சாத்தனாரையே சாரும். சுருங்கச்சொல்லி விளங்க வைக்காதார் அல்லரோ ஒன்றைப்பாரித்துக் கூறுவர். இவ்வாறு பாரித்துக் கூறுபவரையே வள்ளுவனார் இழித்துக் கூறுகிறார். அவர்களை எத்துணை நாகரிகமான முறையில் பழித்துக் கூறுகின்றார் பாருங்கள்!

"பலசொல்லக் காமுறுவர் மன்றமாசு அற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்"

என்பது சுருங்கச் சொல்லி விளங்க வைக்காத வரைப்பற்றி வள்ளுவர் கொண்ட கருத்து.

பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன் மாறன் நல்ல கம்பீரமான தோற்ற முடையவனாய் இருந்திருக்க வேண்டும். அவன் தோற்றப் பொலிவை நம் கண்முன் கொணர்ந்து காட்ட, அவனைப் பற்றிக் கூறும்போது, சீத்தலைச் சாத்தனார், மாலை தொங்கப்பட்ட அழகு விளங்கப்பட்ட மார்பையும், முழந்தாள் வரை நீண்ட கையையும் உடைய மாட்சிமைப்பட்ட பாண்டியன் எனபதை,

" ஆரம் தாழ்ந்த அணிகிளர் மார்பில்
தாள்தோய் தடக்கைத் தகைமாண் வழுதி'

என்று கூறிச் சிறப்பித்தார். இத்தகைய தோற்றப் பொலிவுடைய மன்னன் வீரம் உடையனாய் விளங்கி 

இருந்திருப்பான் என்பதை விதந்து கூற வேண்டா அன்றே ! உண்மையில் இவன் வீரம் செறிந்த விடலையாகவே இருந்தனன்.

இவன் பகைவர்கட்கு ஞாயிறுபோன்று வெப்பம் தருபவனாக இருந்தான் என்று தண்டமிழ்ச் சாத்தனார் தயக்கம் இன்றிக்கூறும் கூற்றே போதிய சான்றாகும். இதன் கருத்துச் சூரியன் எப்படித் தனது சுடும் இயல்பாகிய வெம்மையில்லை பொருள்களைச் சுட்டு அழிக்கின்றானே, அதுபோல இப்பாண்டியன் பகைவர்களைத் தன்சினமாகிய வெம்மையினால் சுட்டழிப்பவன் என்பதாம். இவ்வாறான வீரமும் சினமும் இவன் கொண்டிருந்ததனால், இவன் ஈரம் நெஞ்சம் இல்லாதவனாய் இருந்திருப்பானே என்று எண்ணவேண்டா. வீரமுள்ள இடத்தில் நிச்சயமாக ஈரம் இருந்தே தீரும். ஈரமாவது அன்பு: இந்த அன்பு இப்பாண்டியனிடம் குடி கொண்டிருந்தது. இதனைக் குறிப்பிடாமலும் விட்டிலர் புலவர் சீத்தலைச் சாத்தனார். இச்செழியன் பால் அமைந்த அன்பு தம்மிடத்தில் மட்டும் காட்டப் பட்ட அன்புபோலும் என்று நாம் உணர்தல் கூடாது. இத்தென்னவன் கொண்ட அன்பு சீத்தலைச் சாத்தனார் போன்ற புலவர்கள் யாவரிடத்தும் காட்டி வந்த அன்பாகும். இப்பாண்டியன் காட்டிய அன்பு தண்ணிய அன்பு : இன்பம் தரும் அன்பு. இக் கருத்து இப் புலவர் கூறும் உவமை வாயிலாக உணரக் கிடைப்பது. குளிர்மைக்கும் இனிமைக்கும் ஏற்றதான சந்திரனையே இப்பாண்டி மன்னன் அன்புப் பண்புக்கு அமைந்த உவமையாக அறிஞர் சீத்தலைச் சாத்தனார் அறைந்துள்ளார். இவ்வாறு பகைவர்க்கு ஞாயிறு அனையனாகவும், புலவர்கட்குத் திங்கள் போன்றவனாகவும் இருந்தான் என்பதைப் இப்புலவர் புலப்படுத்தும் புறநானூற்று அடிகள், 

'ஞாயிறு அனையைநின் பகைவர்க்குத் ! திங்கள் அனையை எம்ம னோர்க்கே!'

என்பன.

இவ்வடியில் அமைந்த உவமைகள் சுவை பயப்பன அல்லவோ ? இன்னோர் அன்ன கருத்துக்கள் அமைந்த அடிகள், புலவர் சீத்தலைச் சாத்தனார் பாக்களில் மலிந்து உள்ளன. அவற்றைப் படிப்பதற்கான அவா உம்பால் அமைவதாக.