கணினி களஞ்சியப் பேரகராதி/ஓர் ஆய்வு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

கணினி - களஞ்சியப் பேரகராதி
ஓர் ஆய்வு

தீயின் கண்டுபிடிப்பு திருப்புமுனை ஆனது. சக்கரம் சரித்திரத்தை மாற்றியது. மின்சாரம் வாழ்க்கையை எளிமை ஆக்கியது. கணினியின் கண்டுபிடிப்போ அகில உலகத்தையும் ஒரு கையகலச் சிப்புக்குள் அடக்கி விட்டது. நவீன சமுதாயத்தை அடையாளம் காட்டும் ஒரு கருவியாய் கணினி விளங்குகிறது. மனித வாழ்வின் பிரிக்க முடியாத ஒர் அங்கமாய் பிணைந்து விட்டது. மக்களின் அன்றாட நடைமுறைகள் ஒவ்வொன்றிலும் கணினியின் ஆதிக்கம் தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது.

இத்தகைய காலகட்டத்தில்தான், அறிவியல் தமிழ் அறிஞர், வளர்தமிழ்ச் செல்வர் மணவை முஸ்தபா அவர்களின் 'கணினி களஞ்சியப் பேரகராதி' நம் கைகளில் தவிழ்ந்து கொண்டிருக்கிறது. கணினி என்பது மெத்தப் படித்தவர்களின் சொத்தாக மட்டும் இருந்துவிடக் கூடாது. கணினிக் கல்வி பெரு நகரங்களில் வாழ்வோரின் பெருமிதமாய் நின்றுவிடக் கூடாது. தமிழ்நாட்டின் சிற்றுரில் தமிழ் வழியாய் கல்வி கற்கும் மாணவனுக்கு, கணினி அறிவியல் அந்நியமாகிவிடக் கூடாது என்கிற ஆவேசத்தோடு இக்களஞ்சியப் பேரகராதியை திரு. மணவையார் எழுதி வெளி யிட்டுள்ளார். நவீன அறிவியலில் நாம் எவர்க்கும் சளைத்தவர்கள் இல்லை. ஆங்கிலத்தின் மூலமாகத்தான் கணினி அறிவைப் பெற முடியும் என்கிற மாயை உடைத்தெறியப் படவேண்டும். கணினித் துறை சார்ந்த அனைத்து நுணுக்கங்களையும் எளிய தமிழில் எடுத்துக் கூறமுடியும் என்கிற சவாலுக்குச் சாட்சியம் கூறுகிறது இந்நூல்.

கணினியின் வரலாற்றையும் அதன் இன்றைய தாக்கப் பரப்பையும், பயன்பாட்டுத் தளங்களையும் விரிவாகத் தெரிந்து கொண்டால்தான், திரு. மணவை முஸ்தபா அவர்களுடைய முயற்சியின் ஆக்கத்தையும், ஆற்றியுள்ள பங்களிப்பின் தாக்கத்தையும் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.

கணினியின் வளர்ச்சிப் படிகள்

தொடக்கக் காலத்தில் கணினிகள் பல்கலைக் கழகங்களிலும் ஆய்வுக் கூடங்களிலும் ஆய்வுப் பொருளாகவே இருந்து வந்தன. 1951இல் தான் கணினி விற்பனைக்கு வந்தது. ரேடிங்டன் நிறுவனம் யுனிவாக்-1 கணினியை அமெரிக்க அரசுக்கு விற்றது. மிகப் பெரிய கட்டிடத்தில் நிறுவப்பட்ட அக்கணினி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பயன்படுத்தப்பட்டது.

அதன் பிறகு பரவலாக விற்பனைக்கு வந்த கணினிகளும் பல நூறுபேர் ஒரே நிறுவனத்தில் பணியாற்றக் கூடிய பெருமுகக் கணினிகள் (Main Frames) ஆகும். இவற்றை மிகப் பெரிய வணிக நிறுவனங்களே வாங்கிப் பயன்படுத்தி வந்தன. அடுத்து, நடுத்தர நிறுவனங்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் அதைவிடச் சிறிய (Mini) கணினிகள் விற்பனைக்கு வந்தன. 1971ஆம் ஆண்டில் துண்செயலி (Micro Processor) கண்டுபிடிக்கப்பட்டபின், கணினியின் வளர்ச்சிப் படியில் திடீர் தாவல் ஏற்பட்டது.

1977ஆம் ஆண்டில் விலை குறைந்த மிகச் சிறிய (Micro) ஆப்பிள் கணினிகள் பெருமளவில் விற்பனைக்கு வந்தன. நிறுவனங்கள் மட்டுமே கணினியை நிறுவ முடியும் என்ற நிலைமாறி, தனியார் ஒருவர் தன் சொந்தப் பயன்பாட்டுக்காக ஒரு கணினியை வாங்க முடிந்தது. எனவே, அக்கணினி சொந்தக் கணினி (Personal Computer-PC) என்றழைக்கப்பட்டது. 1980ஆம் ஆண்டில் மிக எளிதாகப் பயன்படுத்தக்கூடிய சொந்தக் கணினிகளை ஐபிஎம் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்தபின் உலகெங்கிலும் கணினியின் பயன்பாடு பெருமளவு அதிகரித்தது. நுண்செயலி மற்றும் நினைவகச் சிப்புகளின் திரை, விசைப்பலகை, அச்சுப் பொறி போன்ற துணைச் சாதன உற்பத்தியில் ஏற்பட்ட வளர்ச்சி, மனிதனின் அன்றாடப் பணிகளை எளிமைப்படுத்தும் ஏராளமான மென்பொருள் தொகுப்புகளின் உருவாக்கம் காரணமாக, கணினித் துறையில் அதிகமாகப் பரிச்சயம் இல்லாதவர்களும் கணினியில் பணியாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

நிறுவனங்கள் தத்தம் அலுவலகங்களில் பயன்படுத்திவந்த தனித்த கணினிகளை நன்றாகப் பிணைத்து, கணினிப் பிணையங்கள் (Computer Networks) உருவாக்கப்பட்டன. ஒரே அலுவலகத்தில் (Local Area), ஒரு பெருநகரில் (Metro Area) மற்றும் கணினிகளை ஒருங்கிணைத்துப் பிணையங்கள் உருவாயின. தகவல் மற்றும் மூலாதாரங்களைப் பகிர்ந்து கொள்வது இதன் மூலம் சாத்தியமானது. அரசுத் துறையினர், பல்கலைக் கழகங்கள், பொது நூலகங்கள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், வங்கிகள் மற்றும் ஏனைய வணிக நிறுவனங்கள் தத்தம் செயல்பாடுகளுக்காக உருவாக்கிய குறும்பரப்பு/விளிபரப்புப் பிணையங்கள் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டன. ஒவ்வொரு நாட்டில் இவ்வாறு உருவாக்கப்பட்ட முதுகெலும்புப் பிணையங்கள் (Back Bone Network) ஒருங்கிணைக்கப்பட்டு இணையம் (Internet) உருவானது. உலகின் எந்த மூலையிலிருந்தும் வேறெந்த மூலையில் குவித்து வைக்கப்பட்டுள்ள தகவல் களஞ்சியத்தை ஒரு நொடியில் பெற வழியேற்பட்டது.

எல்லா விந்தைகளுக்கும் அப்பால் 'இன்டர்நெட்' எனப்படும் இணையம் உலகம் அனைத்தையும் ஒரு கிராமமாக (Global Village) ஆக்கிவிட்டது. தொழிற்புரட்சிக்கு அடுத்தபடியாகத் தகவல் புரட்சி (information Revolution) இணையத்தின் மூலமாய் இன்று உலகைக் குலுக்கிக் கொண்டிருக்கிறது. மனிதன் காலையில் எழுந்து இரவில் உறங்கப் போகும்வரை அனைத்துப் பணிகளையும் இணையம் மூலமே நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. செய்தித்தாள் படித்தல், உறவினர்க்குக் கடிதம் அனுப்புதல், அறிஞர்களுடன் கலந்துரையாடல்/கருத்துப் பரிமாற்றம், நண்பர்களுடன் அரட்டை, இசை/சினிமாப் பொழுதுப்போக்கு, விளையாட்டு, நூலகப் படிப்பு, தொலைபேசி உரையாடல், ரயில்/ விமானப் பயண முன்பதிவு, கடையிலுள்ள பொருள்களைப் பார்வையிடல், பல்கலைக் கழகத்தில் படித்துப் பட்டம் பெறுதல், .......... மூலம் இணையத்தில் இணைத்துக் கொண்டு செய்து முடிக்க முடியும். வேறென்ன வேண்டும்?

கணினிக் கல்வியின் இன்றியமையாமை

கணினியின் ஆதிக்கம் பரவப் பரவ கணினி அறிவியலைக் கற்றுத் தேர்வதும் கட்டாயமாகிவிட்டது.

ஒவ்வொரு எந்திரத்திலும் அதற்கே உரிய பாகங்கள் இருகின்றன. ஆனால் ஸ்குரூ டிரைவர் என்று சொல்லப்படும் திருப்புளி எந்த எந்திரத்தின் பாகமும் இல்லை. ஆனால் திருப்புளி இல்லாமல் எந்த எந்திரத்தையும் கையாள முடியாது. எந்தவொரு எந்திரத்தையும் கழற்ற, பழுதுபார்க்க, இனணக்க, பராமரிக்க திருப்புளி ஒரு கருவியாகப் பயன்படுகிறது. கணினியைத் திருப்புளிக்கு ஒப்பிடலாம். தொடக்க காலத்தில் குறிப்பிட்ட எந்திரத்தின் பாகம் போல் விளங்கிய கணினி இன்றைக்கு அனைத்து எந்திரங்களையும் கையாள வல்ல திருப்புளியாய் ஆகிவிட்டது.

ஆம். ஒரு காலத்தில் பல்கலைக் கழகங்களில் ஒரு பாடமாகவே இருந்து வந்த கணினி அறிவியல் நாளடைவில் தொழில்நுட்ப அறிவியலின் ஒரு துறையாக வளர்ச்சி பெற்று, இன்றைக்கு எந்த ஒரு அறிவியல் துறையையும்து அணுகி ஆய்வு செய்ய உதவும் ஒரு கருவியாகப் பரிணமித்துள்ளது. எந்த அறிவியல் பாடடத்தைக் கற்பவராயினும், எந்த தொழில்நுட்பத் துறையில் பயில்பவராயினும் கணினி அறிவியலையும் கற்றிருக்க வேன்டும் என்பது கட்டாயத் தேவையாகி விட்டது.

தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பம்

தமிழ்நாட்டின் சின்னஞ்சிற்றூர்களில் மூலை முடுக்குகளில் எல்லாம் கணினி கற்றுத்தரும் பயிற்சி மையங்கள் ஏராளமாய்ப் பெருகி விட்டன. மாணவர்கள் மட்டுமின்றி சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும கணினியில் பயிற்சி பெற ஆர்வம் காட்டுகின்றன்ர். கணினியை இயக்கத் தெரிந்தாலே நல்ல வேலை கிடைக்குமென்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மென்பொருள் உருவாக்கத்தில் உலகிலேயே இந்தியா முன்னணி வகிக்கிற்து. அதில் தமிழ் நாட்டு இளைஞர்களின் பங்கு கணிசமானது. உலகின் அனைத்து முன்னணிக் கணினி நிறுவனங்களிலும் தமிழ்நாட்டு இளைஞர்கள் முக்கிய பதவிகளில் இருக்கின்றனர். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்கள் கணினி அறிவியலைத் தேர்வுச் செய்து விரும்பிப் படிக்கின்றனர்.

பத்திரிகைகளில், வானொலியில், தொலைக்காட்சியில் நாள்தோறும் கணினித் துறை சார்பான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்தியாவில் வேறெந்த மாநிலத்தை விடவும் கணினி விழிப்புணர்வு தமிழ்நாட்டில் அதிகமாகவே உள்ளது.

அச்சுத்துறையில் நுழைந்த முதல் இந்திய மொழி தமிழ். அது போலவே இணையத்தில் நுழைந்த முதல் இந்திய மொழி தமிழ் தான். தமிழுக்கென்றே தமிழில் 13, 000 இணைய தளங்கள் இருப் பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய மொழிகளிலேயே கணினிக் கென்று தனியாகப் பத்திரிகை வெளிவந்தது தமிழ்மொழியில்தான். கணினி அறிவியல் தொடர்பான ஏராளமான புத்தகங்களும் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்மொழியில் வெளியிடப்பட்டுள்ளன.

கணினித் திரைகளில் தமிழ்மொழி உலாவந்து கொண்டிருக் கிறது. உரைத் தொகுப்பான்கள் (Text Editor), சொல் செயலிகள் (Word Processor), தகவல்தள மேலாண்மை (Database Management), இ-மெயில் (E-Mail), இணைய உலாவி (Browser), கணக்கியல் தொகுப்புகள் (Account Packages), குழுந்தைகள், மாணவர்கட்குப் பயன்படும் பாடங்கள், வெளிநாட்டில் வாழும் மக்கள் தமிழ் கற்றுக் கொள்ள உதவும் தொகுப்பு, பல்லூடக விளையாட்டுகள் (Multimedia Games) இன்னும் இவை போன்ற மென்பொருள் தொகுப்புகள் தமிழ்மொழியிலேயே வெளிவந்து கொண்டிருக்கின்றன. இப்படிப் பட்ட காலத்தில்தான் நான்காம் தமிழாகிய அறிவியல் தமிழின் ஒர் அங்கமான கணினித் தமிழ் செழுமைப் பெற்று வளரத் துடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், கணினி அறிவியல் வளர்ந்த வேகத்தில் கணினி தமிழ் வளரவில்லை என்றே கூறவேண்டும்.

பேச்சுத் தமிழில் நெல்லைத் தமிழ், கோவைத் தமிழ், சென்னைத் தமிழ் என்றெல்லாம் வழங்கப்படுவதுபோல கணினித் தமிழும் ஊருக்கு ஒரு வடிவம், நாட்டுக்கு ஒரு வடிவம் என ஆகிவிடுமோ என அஞ்சவேண்டியுள்ளது. அறிவியல் என்பது அனைத்துலகுக்கும் பொதுவானது. அதுபோலக் கணினித் தமிழும் தமிழ்பேசும் சமுதாயம் எங்கும் ஒன்றுபோல் பயன்படுத்தப்பட வேண்டும். கணினித் தமிழ்ச் சொல்லாக்கம் தரப்படுத்தப்பட்டு, கணினித் துறைக்கான கலைச்சொல் களஞ்சியம் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். ஆனால், அதற்கான திசை வழியில் அரசோ, பல்கலைக் கழகங்களோ, தமிழ்ச் சங்க அமைப்புகளோ போதுமான முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளவில்லை என்றே கூறவேண்டும். இப்படிப்பட்ட காலக்கட்டத்தில், ஒரு தனியாளாக நின்று, இம்மாபெரும் கடமையைத் தோளில் சுமந்து, தொலைநோக்குப் பார்வையோடு, திரு மனவை முஸ்தபா அவர்கள் உருவாக்கி வெளியிட்டுள்ள இக்கணினிக் களஞ்சியப் பேரகராதியின் முக்கியத்துவத்தையும் பயன்பாட்டையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.?

மணவையாரின் அறிவியல் தமிழ்ப்பணி

அறிவியல் தமிழ்ப் பணிக்காகத் தம் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவர் திரு. மணவை முஸ்தபா அவர்கள். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிப்பை முடித்ததுமே, சேலம் அரசுக் கல்லூரியில் ஆசிரியர் பணிக்கான ஆணையைப் பெற்றார். தம் பேராசிரியர்களிடம் வாழ்த்துப் பெற சிதம்பரம் சென்றார். அங்கு நடைபெற்ற பயிற்சி மொழி தமிழா? ஆங்கிலமா? என்ற கருத்தரங்கு இவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. அனைத்து அறிவயல் துறைகளும் ஆங்கிலத்திலேயே உள்ளன. அவற்றை தமிழில் கற்பது முடியாத செயல். பயிற்சி மொழி தமிழ் என்பது கானல் நீர் என்று ஒரு பேராசிரியர் குறிப்பிட்டார். வெகுண்டெழுந்த மணவையார், தமிழால் முடியும். சொல்வதோடு நில்லாமல் செயல்மூலம் தமிழால் முடியும் என்பதை நிறுவிக் காட்டுவேன். இன்று முதல் இதுவே என் வாழ்வின் ஒரே இலட்சியம். அறிவியல் தமிழுக்காக என் வாழ்வையே அர்பணித்துக் கொள்கிறேன் என்று முழங்கிய தோடு மட்டுமின்றி, கையிலிருந்த ஆசிரியர் பணிக்கான ஆணையை அங்கேயே கிழித்துப் போட்டார். அன்று முதல் அறிவியல் தமிழ் ஒன்றை மட்டுமே தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு இன்று வரை அந்தப் பாதையிலேயே வீறுநடைபோட்டு வருகிறார்.

ஒவ்வொரு அறிவியல் துறையிலும் புதிய புதிய கலைச் சொற்களை உருவாக்க வேண்டும் என்பதே இவரின் குறிக்கோள். இக்குறிக்கோளை நிறைவேற்றும் பொருட்டு, 'அறிவியல் கலைச்சொல் களஞ்சியம் என்ற தலைப்பில் இரண்டு தொகுதிகளை வெளியிட்டார். இந்நூல்களில் ஐம்பத்து நான்கு அறிவியல், தொழில்நுட்ப பிரிவுகளுக்குரிய கலைச் சொற்களையும் பொருள் விளக்கத்தையும் உருவாக்கி வழங்கியுள்ளார். அடுத்து பட விளக்கங்களோடு, மருத்துவ, அறிவியல், தொழில்நுட்ப கலைச் சொல் களஞ்சிய அகராதி என்னும் நூலை வெளியிட்டார். இந்நூலின் ஒவ்வொரு கலைச் சொல்லின் வாயிலாகவும் அறிவியல் தகவல்களைச் செய்தித் துணுக்குகளாகத் தந்துள்ளார். இந்த வகையில் தமிழில் மட்டுமல்லாது இந்திய மொழிகளிலேயே முதலாவது வெளிவந்த முதல் நூல்கள் இவையெனில் மிகையாகாது.

அறிவியல் கற்றவர் தமிழறிஞர்களாக விளங்குகிறார்கள். தமிழ் கற்றவர்கள் அறிவியல் அறிஞர்களாக விளங்க முடியாதா? இக்கேள்விக்குத் தக்க பதிலாகத் தன்னையே மாற்றிக் கொண்டவர் திரு. மணவையார். கடந்த நாற்பதாண்டுகளாக அறிவியல் துறைகள் பலவற்றையும் கற்றறிந்த அறிவியல் அறிஞராகத் திகழ்கிறார். இவர் வெளியிட்ட மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம் இவரின் மருத்துவ அறிவைப் பறைச்சாற்றும். மருத்துவத் துறையின் பதினைந்து உட்பிருவுகளுக்கான கலைச்சொற்களையும் பொருள் விளக்கங்களையும் படங்களையும் தாங்கி வெளிவந்த இந்த நூல் தமிழக அரசின் பரிசையும் பாராட்டையும் பெற்றதோடு மக்களின் பெரும் வரவேற்பையும் பெற்றது.

இந்த நூற்றாண்டின் இணையற்ற அறிவியல் துறையாய் வளர்ந்து நிற்கும் கணினித் துறைக்கான கலைச்சொல் களஞ் சியத்தை உருவாக்க வேண்டும் என்பதும் இவரது வேட்கையாக இருந்து வந்தது. தொலைநோக்குப் பார்வையுடன் ஐந்தாறு ஆண்டுகட்கு முன்பே இதற்கான பணியைத் தொடங்கி விட்டார். இதற்காக, கணினி அறிவியலையும், கற்கத் தயங்கவில்லை. இவர் அண்மையில் அமெரிக்கா, கனடாவுக்குப் பயணம் மேற்கொண்ட போது அப்பயணத்தை கணினிக் கலைச்சொல் களஞ்சியத்தை செம்மையாக உருவாக்கும் பணிக்காகவே அப்பயனத்தின் பெரும்பாலான நாட்களைச் செலவிட்டார்.

திரு. மணவையாரின் கலைச்சொல் களஞ்சியங்கள் அனைத்திலும் ஒரு சிறப்புக் கூறு உண்டு. அகர வரிசையில் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைத் தரும்போது அது அகராதி ஆகிறது. அத்தோடு நில்லாமல், உடன் சொல் விளக்கத்தையும் பொருள் விளக்கத்தையும் விரிவாகத் தருவதால் அது கலைக் களஞ்சியமாகப் பரிணமிக்கிறது. ஆங்காங்கே தேவையான இடங்களில் படங்களும் இடம் பெற்றிருப்பது இன்னொரு சிறப்புக் கூறாகும்.

மொழியாக்கச் சிறப்புக் கூறுகள்

அகர வரிசையில் சொற்களின் பொருளைக் கூறும் நூலை 'அகராதி' என்கிறோம். ஒவ்வொரு சொல்லின் விளக்கத்தையும் விரிவாகத் தரும்போது 'கலைச்சொல் களஞ்சியம்' என்கிறோம். சொல்லின் பொருள், விளக்கம் இவற்றோடு நில்லாமல் சில எடுத்துக்காட்டுகளையும் கூறி விளக்குவதை என்னவென்பது? ஒரு பாட நூலைப் படிப்படி போன்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக Hexadecimal Notation என்பதை பதினாறிலக்கக் குறிமானம் என்று பொருள்கூறி, இதில் 0 முதல் 9 வரையிலான இலக்கங்கள் A, B, C, D, E, F என்ற எழுத்துகள் பயன்படுத்தப்படுகின்றன என்று குறிப்பிட்டுவிட்டு, A60B என்ற ஹெக்ஸா எண்ணை 42507 என்ற டெசிமல் எண்ணாக மாற்றும் முறையையும் விளக்கியுள்ளார். அதேபோல் Factorial என்ற சொல்லை விளக்கும்போது !!-ன் மதிப்புக் கண்டறிவது எப்படி எனவும் விளக்கப்பட்டுள்ளது.

Line surge என்ற சொல்லுக்கு மின்சார வெள்ளம், மின்தொடர் எழுச்சி என்று பொருள் கூரி, திடீரென்று உயர்ந்த வோல்ட் மின்சாரம் பாயும் நிலை என்ற விளக்கம் கூறி, உயர்வோல்ட் மின்சாரம் திடீரென்று குறுகிய காலத்திற்குப் பாய்வதால், தவறான பதிவு, தவறான செயல்பாடு, தகவல்கள் இழத்தல், சில சமயங்களில் கணினியில் மிகவும் நுண்ணிய இணைப்புகள், தகவல் உள்ளீட்டு முனையங்கள், தகவல் பரிமாற்றச் சாதனங்களின் அழிவு முதலியன ஏற்படுவதுண்டு என்று அதன் விளைவுகளைக் கூறி, திடீரென்று மின்சார டிரான்ஸ்பார்மர்களை இயக்குதல், பிற துணைக் கருவிகளை இயக்குதல் மற்றும் பிற காரணங்களால் ஏற்படுவதுண்டு என்று அதன் காரணங்களையும் எடுத்துக் கூறுவதுடன் நில்லாமல், உயர்வோல்ட் மின்சாரம் திடீரென்று பாய்வதைத் தடுக்கும் சாதனங்களால் கருவிகளைப் பாதுகாக்கலாம் என்று பாதுகாப்பு வழிமுறையையும் கூறுவதைப் பார்க்கும்போது அகராதி, கலைக் களஞ்சியம் என்கிற வரம்புகளையும் உடைத்தெறிந்து ஒரு புதிய பரிமாணத்தையே எட்டி விடுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

நாகரிகமற்ற முறையில் கணினியைப் பயன்படுத்துவதை Geek என்று கூறுகிறார்கள். அதனை 'கற்றுக்குட்டித்தனம்' என்று நாகரிகமான முறையில் மொழி பெயர்த்துள்ள பாங்கு குறிப்பிடத்தக்கது. Eavesdropping என்பதை ஒற்றுக் கேட்டல் என்கிறார். Hacker-களை குறும்பர் எனச் செல்லமாகக் குறிப்பிடுகிறார். Paddle என்பதைத் துடுப்பு, மத்து என மொழி பெயர்க்கிறார். Menu tem என்பதை "பட்டி உருப்படி" என்கிறார். Packet என்பதைப் பொதிவு, பொட்டலம் என்று குறிப்பிடுகிறார். Pattern என்பதை தோரணி, தினுசு என்கிறார். இவ்வாறு தமிழ்பேசும் மக்களிடையே பேச்சு வழக்கில் பயன்படுத்தக்கூடிய பொருள் பொதிந்த பொருத்தமான தமிழ்ச் சொற்களை மொழியாக்கமாகக் கொடுத்திருக்கும் பாங்கு திரு. மணவையாருக்கே உரிய தனித்தன்மை என்றே கூறவேண்டும்.

Flexible என்பதன் பேச்சு வழக்குச் சொல் Floppy என்பதாகும். எனவே Flooppy Disk 'நெகிழ் வட்டு' என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மெல்லியதாக இருப்பதாலும் Hard Disk என்பதற்கு மாறாக இருப்பதாலும் 'மென் வட்டு' என்றும் குறிக்கலாம். செருகி எடுத்துப் பயன்படுத்துவதால் செருகு வட்டு என்ற மூன்று சொற்களையுமே தந்து நம்மைத் திக்குமுக்காட வைக்கிறார் திரு. மணைவயார் அவர்கள். Hard Disk என்பது பிரிக்க முடியாதவாறு தனிப் பொதியுறையில் நிரந்தரமாய் பிணைக்கப்பட்டுள்ளதால் அதனை நிலை வட்டு என மொழியாக்கம் செய்துள்ளதும் முற்றிலும் பொருத்தமே.

இவ்வாறு திரு. மனவையாரின் மொழியாக்கச் சிறப்புக் கூறுகளைப் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாம். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே என்று பழம் பெருமை மட்டுமே பேசிக் காலம் கழிக்காமல் நல்ல தமிழை நல்ல அறிவியல் தமிழை புத்தம் புதுத் தமிழைப் பற்றி எந்த நேரமும் சிந்தித்துச் செயலாற்றி வரும் திரு. மணவை யாரைப் போல் இன்னொரு தமிழறிஞரைக் காண முடியுமா என்பதே சந்தேகத்துக்குரிய கேள்வி. அரசும், பல்கலைக் கழகங்களும், வல்லுநர் குழுவும் செய்ய வேண்டிய ஒரு பணியைத் தனியொருவராக நின்று சாதித்துள்ள திரு. மணவையார் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆங்கில மொழியில் கணினித் துறைக்கென எத்தனையோ அகராதிகளும், சொற்களஞ்சியங்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், இந்திய மொழிகளில் இதுவே முதலாவது நூலாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இவ்வண்

மு. சிவலிங்கம்