கணினி களஞ்சியப் பேரகராதி/காணிக்கை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

காணிக்கை

நம்மில் சம்பாதிக்கத் தெரிந்தவர்கள் பலர் உண்டு. ஆனால், தாங்கள் தேடிய செல்வத்தை உரிய வழியில் செலவழிக்கத் தெரிந்தவர்கள் மிகச் சிலரே உண்டு. அத்தகையோருள் தலையாயவராக விளங்குபவர் சமுதாயச் சேவைச் செம்மல், பவழ விழா செல்வர் அல்ஹாஜ் பி. எஸ். அப்துர் ரஹ்மான் அவர்கள்.

நற்குணக்குன்றான அவர்கள் அன்பு, பரிவு, எளிமை, வள்ளன்மை எனும் சொற்களுக்கு இலக்கணமாகவே விளங்குபவர். இளமைத் தொட்டே தனித்துவச் சிந்தனையிலும், அறிவாற்றலிலும் மிக்குயர்ந்து, வணிகத் துறையில் தனக்கென தனி வழி வகுத்து, கடும் முயற்சியாலும் இடையறா உழைப்பாலும் உயர்ந்து, பன்னாடு போற்றும் வணிகராக, பல்முனைத் தொழில் மேதையாக உலகெங்கும் காலூன்றி, அழுத்தமான தடம் பதித்து, தாய் மண்ணுக்குப் பெரும் புகழ் தேடித் தரும் பெரியார். 'கப்பல் தலைவர்' எனும் பொருள் பொதிந்த 'மரைக்காயர்' எனும் சொல்லுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், உலகெங்கும் கப்பல் செலுத்தும் 'கப்பலோட்டும் தமிழன்' எனும் பெருமைக்குரிய அடைமொழியோடு உலா வருபவர்.

தம் நுண்மாண் நுழைபுலத்தால் பல பேருக்கு வேலை வாய்ப்பளிக்கும் தொழில்களை உருவாக்கி, பல்லாயிரம் பேர் பணிபுரியவும் அதன் மூலம் வாழ்வில் வளம் பெருகவும் வழி கண்ட பிறர் நலம் பேணும் பேராண்மையாளர்.

நத்தைக்குக் கூடுபோல் தான் சார்ந்த இஸ்லாமிய சமுதாயம் ஏழ்மை, அறியாமை, சுகாதாரக்கேடு போன்றவற்றால் நலிவடைந்து கிடக்கும் நிலையை மாற்றி, அவ்வடித்தட்டு மக்கள் வாழ்க்கையில் மேன்மையுற கல்வி ஒன்றே வழி எனத் தெளிந்து, மழலையர் பள்ளி முதல் பொறியியல் கல்லூரி வரை கல்வி நிறுவனங்கள் பலவற்றை உருவாக்கி, சமுதாயத்தில் புது சரித்திரம் படைத்த சாதனை நாயகர் அல்ஹாஜ் பி. எஸ். அப்துர் ரஹ்மான் அவர்கள்.

இன்றையப் போக்குக்கும் காலத் தேவைக்குமேற்ப அறிவியல், தொழில்நுட்பக் கல்வி மூலமே வாழ்வு வளம் பெற முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு உருவாக்கிய 'கிரஸென்ட் இன்ஜினியரிங் கல்லூரி' அமைந்து, ஆற்றலாளர்களை உருவாக்கி உலகுக்கு வழங்கிக் கொண்டுள்ளது.

அறிவு வளர்ச்சியின் அடித்தளம் பெண்களே என்பதை நன்கு உணர்ந்து தெளிந்த பவழ விழா செல்வர், கீழக்கரையில் 'தாஸிம் பீவி அப்துல்காதர்' மகளிர் கல்லூரியைத் தோற்றுவித்து, பெண் உயர் கல்விக்கு வழி வகுத்துள்ளார். அன்னார் உருவாக்கிய நான்கு மேல்நிலைப் பள்ளிகளில் மூன்று மகளிர்க்கானவை என்பதிலிருந்து இவர் பெண் கல்வியில் கொண்டுள்ள பேரார்வம் எத்தகைய தென்பது புலனாகும்.

ஆதரவற்ற ஏழை எளிய இளஞ்சிறார்களைத் தாயுள்ளத்தோடு அரவனைத்துப் பேணிப் பாதுக்காத்து, அவர்களை வாழ்வின் உயர்நிலைக்குத் தயார் செய்ய 'அல்அமீன்' என்ற பெயரில் நான்கு சிறுவர் இல்லங்களையும் இரண்டு சிறுமியர் இல்லங்களையும் சிறப்பாக நடத்தி வருகிறார்.

சமுதாயக் கல்வியோடு மார்க்கக் கல்வி வளர்ச்சியிலும் பேரார்வம் காட்டி வரும் இப்பெருந்தகை 'புகாரி ஆலிம் அரபுக் கல்லூரி'யை சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறார். சொல்லப் போனால், தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் இவர் உதவி பெறாத அரபுக் கல்லூரிகளோ, மதராசாக்களோ இல்லையென்றே கூறலாம்.

மனநலம் நாடும் கல்வித்துறை போன்றே மக்கள் உடல் நலம் பேணும் மருத்துவத் துறையிலும் பேரார்வமிக்கவர் இப்பெருந்தகை. இதற்கு கட்டியங்கூறுவன கிழக்கரை 'யூசுப் சுலைஹா மருத்துவமனை'யும் மதுரை 'கிரஸென்ட் மருத்துவமனை'யும் அதோடு இணைந்த 'செவிலியர் பயிற்சிக் கல்லூரி'யும்.

அன்று தமிழாய்ந்த தமிழ்ப் புலவர்கட்கு நிழல் தரும் குளிர் தருவாக விளங்கிய வள்ளல் சீதக்காதி போன்றே இன்று தமிழார்வலர்கட்கும் தமிழ்ப் படைப்பாளர்கட்கும் இளைப்பாறக் கிடைத்த இனிய தருவாக விளங்குகிறார். 'இஸ்லாமிய ஆய்வுப் பண்பாட்டு நிலையம்' அமைத்து இஸ்லாமிய இலக்கியப் பண்பாட்டுக்கு வழிகோலியுள்ளார். தமிழ்ப் படைப்பையும் படைப்பாசிரியர்களையும் ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்கு சதக்கத்துல்லா அப்பா பெயரில் பரிசளித்துப் பாராட்டி மகிழ்கிறார்.

சிறப்புமிகு இச்செயல்கள் அனைத்தும் தம்மோடு நின்று விடக் கூடாது, என்றென்றுமாக நடைபெறவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சீதக்காதி அறக்கட்டளை, அகில இந்திய இஸ்லாமிய நிறுவனம், ஐக்கியப் பொருளாதாரப் பேரவை, ஐக்கியப் பொருளாதாரப் பேரவை டிரஸ்ட், அனைத்திந்திய ஐக்கியப் பொருளாதாரப் பேரவை கூட்டமைப்பு முதலான அறக் கட்டளைகளை நிறுவி, அவற்றின் அறங்காவலராகவும் அமைந்து தொண்டாற்றி வருகிறார்.

இவரது கல்விப் பணியாயினும் தமிழ்ப் பணியாயினும் அனைத்துச் சமுதாய மக்களுக்கென அமைந்து வருவது, இவரது சமய நல்லிணக்க உணர்வுக்குக் கட்டியங் கூறுவதாகும்.

இத்தகு பெருமைமிகு பெரும் பணியைத் தளராது நாளும் ஆற்றி வரும் அன்னாரின் சமுதாயத் தொண்டு இன்று அவரொத்த பலரையும் ஊக்கி வருகிறது. இப்பணிகள் அனைத்தும் வருங்காலத் தலைமுறைக்கு வழிகாட்டுநெறிகளாகக் கொண்டுச் செல்லத் தக்கவையாகும்.

உமறுப் புலவரின் சீறாப்புராணம் மூலம் வள்ளல் சீதக்காதி வாழ்ந்து கொண்டிருப்பதுபோல் புரவலர் பெருந்தகை, பவழ விழாச் செல்வர் பி. எஸ். அப்துர் ரஹ்மான் அவர்கள் இப்பேரகராதி மூலம் காலமெல்லாம் வாழ்வார் என்பது திண்ணம்.

இவரது அளப்பரிய பணி கண்டு வியந்து நிற்கும் நான், எனது அரும் படைப்பான இக் கணினி களஞ்சியப் பேரகராதி பெருநூல் மூலம் பவழ விழா செல்வர் அல்ஹாஜ் பி. எஸ். அப்துர் ரஹ்மான் அவர்களின் தொண்டும் சிந்தனையும் என்றென்றும் நிலைபெற அன்னாரின் அருந்தொண்டுக்கு இந்நூலை நினைவுக் காணிக்கையாக்குகிறேன்.

அன்பன்

மணவை முஸ்தபா

நூலாசிரியர்

நூலாசிரியர் திரு. மணவை முஸ்தபா-புரவலர் அல்ஹாஜ் பி. எஸ். அப்துர் ரஹ்மான்.