கண் திறக்குமா/கதையின் கதை
கண் திறக்குமா?
கதையின் கதை
பணக்காரனாகட்டும் பரம தரித்திரனாகட்டும், படித்தவனாகட்டும் படியாதவனாகட்டும், இந்த உலகத்தில் உயிர் வாழ்ந்திருக்க வேண்டுமானால் பிறருடைய உதவியை ஏதாவது ஒருவிதத்தில் நாடத்தான் வேண்டியிருக்கிறது. அவ்வாறு நாடவில்லையானால் எமன் வந்து நம் வீட்டுக் கதவைத் தட்டுவதற்குப் பதிலாக நாமே சென்று அவன் வீட்டுக் கதவைத் தட்டும்படி ஆகிவிடுகிறது - தயவு தாட்சண்யமின்றிப் பொதுஜன சேவையில் ஈடுபட்டிருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் தியாகிகள்கூட உண்மையில் மேற்கூறிய நிலையில் உள்ளவர்களே!
இல்லையென்றால் அவர்கள் ‘தியாகிகள்’ என்று வெறும் பெயராவது எடுத்திருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? - அதுதான் இல்லை. ஏனெனில், தினசரி வாழ்க்கையில் எத்தனையோ தியாகிகள் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதை நாம் பார்க்கிறோம். காரணம் என்னவென்று நீங்கள் ஆராய்ந்து பார்க்கும் போது - ஒன்று, அவர்கள் பணம் இல்லாதவர்களாயிருப்பார்கள்; அல்லது, பிறருடைய உதவியை எந்த நிலையிலும் எந்த விதத்திலும் நாட விருப்பமில்லாதவர்களாயிருப்பார்கள்.
இவர்களுடைய சபலம் என்ன தெரியுமா? - பொது ஜனங்களே வலுவில் வந்து, தங்களுடைய தன்னலத் தியாகத்தையும் சேவா உணர்ச்சியையும் போற்றிப் புகழ்ந்து, தங்களுக்கு வேண்டிய அன்பையும் ஆதரவையும் அளிப்பார்கள் என்பதுதான்! - அதாவது, ‘சத்தியம் ஜெயிக்கும்’ என்பது இவர்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த உலகத்தில் தற்சமயம் இல்லாத ஒன்றை நம்பி, இருக்க இடமும், உடுக்க உடையும் தின்ன உணவும் இன்றிப் பிறர் உயர நிற்கும் ஏணிகளாய், ஏகாங்கிகளாய், சமூகத்தில் நடைப் பிணங்களாய்த் திகழ்பவர்கள் இவர்கள்!
பொதுவாகத் தனக்கு உதவி செய்யக்கூடியவர்களிடம் என்னதான் குற்றங்குறைகள் கண்டாலும் மனிதன் கூடியவரை அவற்றை மூடிவைக்கவே முயற்சி செய்கிறான். இவ்வாறு செய்வது, தன் சொந்தத் தேவைகளை அவன் பூர்த்தி செய்து கொள்வதற்கு அத்தியாவசியமாக இருக்கிறது. தன்னலகத்துக்காக மனிதன் சாகும் வரை மேற்கூறிய முறையைக் கைக்கொண்டிருந்துவிட்டுக் கடைசியில் செத்தும் தொலைந்துவிடுகிறான்! - இதனால் எத்தனையோ உண்மைகளை உலகம் கடைசிவரை அறிய முடியாமலே போய்விடுகிறது. ஏய்க்கும் கூட்டம் என்றைக்கும் தன் இஷ்டம்போல் ஏய்த்து வாழ்ந்து கொண்டிருப்பதற்கும், ஏமாந்த கூட்டம் எப்பொழுதும் ஏமாந்து மடிந்து கொண்டிருப்பதற்கும் ஏதுவாகி விடுகிறது. தப்பித்தவறி இதைப்பற்றி யாராவது ஒருவன் துணிந்து பேசவோ, எழுதவோ ஆரம்பித்துவிட்டால் போதும்; உடனே ஒரு சிலரால் பெரியோர்களாக்கப்பட்ட பெரியோர்கள், அவனைப் பெருந்தன்மையில்லாதவன் என்றும், தமிழர் பண்பை அறியாதவன் என்றும், மிகமிக அழகான தமிழ் வார்த்தைகளாகப் பொறுக்கியெடுத்துத் தாக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்!
இந்தப் பெரியோர்களின் கட்சிக்குத் தற்கால உலகத்தில் எதுவுமே உவமையாக எடுத்துச் சொல்லக் கிடைப்பதில்லை. ஏதோ ஒரு காலத்தில் இந்த உலகத்தில் இருந்து, இப்போது அந்த உலகத்தில் இருக்கிறதாமே அன்னப் பறவை, அதுதான் கிடைக்கிறது. அந்த அதிசயப்பட்சிக்குப் பாலில் தண்ணிரைக் கலந்து வைத்தால், அது தண்ணீரை நீக்கிவிட்டுப் பாலை மட்டும் உறிஞ்சிக் குடிக்குமாம். - பாவம் பால்காரர்கள் பிழைத்துப் போகட்டும் என்று பகவான் இப்போது அவற்றைப் பூலோகத்தில் அவதரிக்க வொட்டாமல் தடுத்துவிட்டாரோ, என்னவோ! - அந்தப் பட்சியைப்போல மனிதனும் யாராவது கெட்ட காரியம் செய்தால் அதை ஒதுக்கித் தள்ளிவிட வேண்டுமாம்; நல்ல காரியம் செய்தால் அதைப் போற்றிப் புகழ்ந்து, ஆடிப் பாடி, ஆரவாரம் கரகோஷம் எல்லாம் செய்து வாழ்த்தி வரவேற்க வேண்டுமாம்.
இது பெருந்தன்மைக்கு அழகாயிருக்கலாம்; தமிழர் பண்புக்கு உகந்ததாயிருக்கலாம். ஆனால் மனித வாழ்க்கைக்கு - அதிலும் பணமில்லாத, படிக்காத, படித்தும் பகுத்தறிவில்லாத பாமரர்களின் வாழ்க்கைக்கு - அழகல்ல, உகந்ததல்ல என்பதோடு மட்டுமல்ல; இதை விடக் கேடு விளைப்பது வேறொன்றுமில்லை என்பதை இங்கே சொல்லத்தான் வேண்டும். இந்த விஷயத்தில் மற்றவர்கள் சிரத்தை காட்டாமலிருந்தாலும், பொது ஜனங்களின் உப்பைத் தின்று வயிறு வளர்ப்பதற்கென்றே பிறந்திருக்கும் எழுத்தாளர்கள் சிரத்தை காட்டாமல் இருக்கவே முடியாது.
இன்று இவ்வளவு தூரம் எழுதும் நானும் நேற்று வரை மேற்படி திருக்கூட்டத்தைச் சேர்ந்தவனாய்த்தான் இருந்தேன். ஆனால் முதலிலிருந்தே சேர்ந்துவிடவில்லை; நடுவில்தான் சேர்ந்தேன் - அதாவது, தேசீயம் என்றால் என்ன? பொதுஜன சேவை என்றால் என்ன? ஜனநாயகம் என்றால் என்ன? என்பதைப் பற்றி எல்லாம் மிகமிக நன்றாகத் தெரிந்து கொண்ட பிறகுதான் சேர்ந்தேன். இல்லையென்றால் இந்த உலகத்தில் நான் இன்பத்தைக் கண்டிருக்க முடியாது; என்னதான் தியாகம் செய்திருந்தாலும் தியாகி என்ற பெயரைக்கூட நான் பெற்றிருக்க முடியாது.
“இங்கே துன்பம் அனுபவித்தால் என்ன, அங்கே இன்பம் அனுபவித்துக் கொள்ளலாம்!” என்று நானும் உங்களைப்போலச் சும்மா இருந்திருக்கலாம். ஆனால் அதற்கு உங்களுடைய மனம் இடங் கொடுப்பதுபோல என்னுடைய மனம் இடங் கொடுக்கவில்லை. காரணம் அவ்வாறு கூறுவோரின் கூற்றில் நான் துளியாவது உண்மையைக் காண முடியாமற் போனதுதான்!
மேலும், அந்தப் புண்ணியாத்மாக்கள் வாயளவில்தான் அப்படிச் சொல்லிக் கொண்டிருந்தார்களே தவிர, செயலளவில் இந்த உலகத்திலேயே தாங்கள் விரும்பும் இன்பங்கள் அனைத்தையும் அனுபவிப்பதற்கு வேண்டிய முயற்சிகளில் பெரிதும் ஈடுபட்டிருந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் இந்த விஷயத்தில் அவர்கள் சட்டத்தை அலட்சியம் செய்தார்கள்; சமூகக் கட்டுப்பாட்டை அலட்சியம் செய்தார்கள். சாஸ்திரத்தை அலட்சியம் செய்தார்கள்; சாட்சாத் கடவுளையே கூட அவசியம் நேரும் போதெல்லாம் அலட்சியம் செய்தார்கள்! - இதில் வேடிக்கை என்னவென்றால், தங்களுடைய முறையையே வேறு யாராவது பின்பற்றும் போது, “போச்சு, போச்சு, எல்லாம் போச்சு!” என்று அவர்கள் அர்த்தமில்லாமல் கூச்சல் போட்டார்கள்.
இவர்களுடைய கூச்சலைக் கேட்டு நான் உங்களைப் போல் கலங்கிவிடவில்லை. “என்ன போச்சு. எங்கே போச்சு!” என்று திருப்பிக் கேட்டேன். நான் விழித்துக் கொண்டதை அறிந்து அவர்களும் விழித்துக்கொண்டார்கள் - அப்புறம் கேட்க வேண்டுமா? - என்னையும் அவர்கள் கட்சியில் சேர்த்துக் கொண்டார்கள்; நானும் அவர்களுடைய கட்சியில் சேர்ந்துகொண்டுவிட்டேன்.
அடி சக்கை! அப்புறம் கொள்ளையோ கொள்ளைதான்! அதுவும் எப்படிப்பட்ட கொள்ளை? கெளரவமான கொள்ளை! மாலை மரியாதையோடு வரவேற்றுக் கொடுக்கும் கொள்ளை! சட்டம் ஒன்றும் செய்ய முடியாத கொள்ளை! இந்த உலகத்தில் என்னென்ன இன்பங்கள் உண்டோ, அத்தனையையும் என் வாழ்நாளிலேயே நான் அனுபவிப்பதற்கு வேண்டிய வசதியளிக்கக்கூடிய கொள்ளை! தகுதியில்லாமல் கிடைத்துக் காரணமில்லாமல் போய்விடும் பெயரும் புகழும் என்னைத் தேடி வரும் கொள்ளை! தன்னலத் தியாகியென்றும், தர்மகர்த்தா வென்றும், கொடையில் கர்ணனென்றும், இல்லாத பாரத மாதாவின் பிறக்காத அருந்தவப் புதல்வன் என்றும், ஏழைப்பங்காளன் என்றும், இன்னும் எத்தனை எத்தனையோ விதமாக என்னைப் பாராட்டிச் சீராட்டிப் பகிரங்கமாகக் கொடுக்கும் கொள்ளை!
இப்படிப்பட்ட சொர்க்க போகத்துக்கு நடுவே ஏழை மக்களைப் பற்றி, என்னைப்போன்ற நயவஞ்சகச் சிகாமணிகளுக்கு உயிரையும் உடலையும் அர்ப்பணம் செய்வதன் மூலம் கண்கண்ட கடவுள்களாக விளங்கும் உண்மையான தியாகசிகரங்களைப் பற்றி, இதுவரை நான் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை; சொல்ல விரும்பவுமில்லை. ஏனெனில், அப்படி ஏதாவது சொல்லியிருந்தால் நான் விரும்பிய வண்ணம் இந்த உலகத்தில் வாழ்ந்திருக்க முடியாது; மறு உலகத்திலும் நிச்சயமாக வாழ்ந்திருக்க மாட்டேன்!ஆனால், நேற்றுவரை தான் மேற்கூறிய நிலையில் நான் இருக்கவேண்டியிருந்தது; இன்று அந்த நிலையில் இல்லை. “இன்னும் இரண்டு, மூன்று நாட்களுக்கு மேல் நீங்கள் உயிர் வாழ்ந்திருக்க முடியாது” என்று என்னுடைய வற்புறுத்தலின் பேரில் இத்தனைநாளும் எனக்குச் சிகிச்சை அளித்துவந்த டாக்டர் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். எனவே, பொது ஜனங்களிடமிருந்து பறித்த சொத்தை நான் பொது ஜனங்களின் உபயோகத்துக்கென்றே உயில் எழுதி வைத்துவிட்டேன். அதன் பயனாகச் சாகும்பொழுதும் நான் புகழுடனேயே சாகப் போகிறேன் - அதாவது, யாரிடமிருந்து கொள்ளையடித்தேனோ, அந்தப் பணத்தை அவர்களுக்கே திருப்பிக் கொடுத்ததற்காக - போகட்டும்!
நான் சாவதற்கு முன்னால் என்னுடைய கதையை உங்களிடம் சொல்லிவிட வேண்டுமென்று என் உள்ளம் ஏனோ துடிக்கிறது. அப்படிச் சொல்லாவிட்டால், சாவில் கூட நான் அமைதியைக் காணமாட்டேன் என்று என் உள்ளுணர்ச்சிகளில் ஏதோ ஒன்று கூறுகிறது. என்னுடைய கதையைக் கேட்ட பிறகு சிலர் ஆத்திரம் அடையலாம்; சிலர் அனுதாபம் காட்டலாம். ஆனால் தயவு செய்து யாரும் என்னை மன்னித்துவிட்டு, உடனே மனச் சாந்தி யடைந்துவிட வேண்டாம் என்று தலைவணங்கிக் கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு செய்வது பெருந்தன்மையுமல்ல, தமிழர் பண்புமல்ல - உங்கள் சிந்தையை அடக்கிச் சும்மா இருக்கச் செய்யும் ரகசியம், சுயநலக்காரர்களின் சூழ்ச்சி; ஏய்க்கும் கூட்டத்தாரின் ஏமாற்று வித்தை!
அத்தகைய மனப்பான்மை உங்களை ஒருநாளும் வாழ வைக்காது; சாகத்தான் வைக்கும். அதிலும், என்னைப் போன்ற சாகப்போகிறவர்களை வேண்டுமானால் நீங்கள் மன்னித்து விடலாம்; உயிரோடிருப்பவர்களை ஒருநாளும் மன்னிக்கவே கூடாது.சரி, என்னவெல்லாமோ சொல்லி உங்களை நெடுநேரம் காக்க வைத்துவிட்டேன். இனி என் கதையைக் கேளுங்கள் - என்ன, கதையென்றா சொன்னேன்? - ஆமாம், உண்மை என்று சொன்னால்தான் நீங்கள் ‘நம்பமாட்டோம்’ என்கிறீர்களே?