உள்ளடக்கத்துக்குச் செல்

கண் திறக்குமா/வயிறும் வாழ்வும்

விக்கிமூலம் இலிருந்து


வயிறும் வாழ்வும்

ப்போது ‘கல்கி’ காரியாலயத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த காலம். பணி என்றால் அன்புப் பணி அல்ல; பணத்துக்காக ஆற்றிக் கொண்டிருந்த பணிதான்!

ஒரு நாள் நண்பர் ஒருவர், “ஸார், உங்களை ஒருவர் தூக்கி யடித்துவிட்டார்” என்று உற்சாகத்துடன் சொல்லிக் கொண்டே என் அறைக்குள் நுழைந்தார்.

அதைக் கேட்டதும் திடுக்கிட்டு என்னை நானே தொட்டுப் பார்த்துக்கொண்டேன். “உங்களை என்றால் உங்களை அல்ல; உங்கள் கதைகளை!” என்றார் நண்பர்.

“ஐயோ பாவம். என்னுடைய கதைகள் அவரை என்ன செய்தனவோ?”

‘'வேறொன்றும் செய்யவில்லை; உங்களைப் போலவே அவரையும் எழுத வைத்துவிட்டன!”

‘ரொம்ப சந்தோஷம். அதை விடப் பெருமை வேறென்ன வேண்டும், ஓர் எழுத்தாளனுக்கு?”

“பெருமையாவது! ஆசிரியர் கல்கி அவர்கள் பார்த்தால் நீங்கள்தான் வேறொரு புனைபெயரில் அந்தக் கதையை எழுதுகிறீர்களாக்கும் என்று எண்ணி உங்களைக் கட்டாயம் வீட்டுக்கு அனுப்பிவிடுவார், ஜாக்கிரதை!” என்று நண்பர் எச்சரித்தார்.

இந்தச் சம்பவத்துக்குப் பின் ஒரு நாள் அமரர் கல்கி அவர்கள் என்னைத் தம் வீட்டுக்கு வருமாறு பணித்தார்கள்; சென்றேன். கையில் திறந்த பத்திரிகையொன்றை வைத்துக்கொண்டு ஏதோ யோசித்த வண்ணம் அப்படியும் இப்படியுமாகத் தம் அறையில் அவர்கள் நடைபோட்டுக் கொண்டிருந்தார்கள்.

“அழைத்தீர்களாமே?” என்றேன் நான்.

“கல்கி காரியாலத்தில் வேலைபார்க்கும் நீங்கள் வேறெந்தப் பத்திரிகைக்கும் கதையோ கட்டுரையோ எழுதக் கூடாது என்ற விஷயம் உங்களுக்குத் தெரியுமா?” என்று தமக்கே உரித்தான கம்பீரத்துடன் அவர்கள் கேட்டார்கள்.

“தெரியும்!” என்றேன் நான்.

“சரி, இந்தப் பத்திரிகையில் வெளியாகியிருக்கும் தொடர்கதை யாருடைய தொடர்கதை?”

“தெரியாது!”

“உங்களுடைய தொடர்கதை என்று பலர் எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்களே, அதற்கு என்ன சொல்கிறீர்கள்?”

“அவர்கள் ஒரு வேளை என்னுடைய விரோதிகளாயிருக்கலாம்!”

“இல்லை; உங்களுடைய அபிமானிகள்தான் அப்படி எழுதியிருக்கிறார்கள். அத்துடன், ‘கல்கி‘’யில் ஏன் அவர் தொடர்கதை எழுதக்கூடாது என்றும் கேட்டிருக்கிறார்கள்.”

‘அவர்கள் நாசமாய்ப் போகட்டும்!’ என்று மனத்துக்குள் சபித்துக்கொண்டே நான் பலிபீடத்தில் நிற்கும் ஆடு போல் நின்றேன்.

அதற்குப் பின் ஆசிரியர் அவர்கள் என்ன நினைத்தார்களோ, என்னமோ, “சரி, போய் வாருங்கள்!” என்று என்னை அனுப்பிவிட்டார்கள்.

வீட்டுக்கல்ல; காரியாலயத்துக்குத்தான்!

அதன் விளைவே ‘கல்கி'யில் தொடர்ந்து வெளியாகி, உங்கள் உள்ளத்தைப் பெரிதுங்கவர்ந்த ‘பாலும் பாவையு'மாகும்.

இத்தகைய புயலுக்கும் பூகம்பத்துக்கும் என்னை உள்ளாக்கி, நண்பர் திரு. முருகு சுப்பிரமணியம் அவர்களை ‘பொன்னி’ வாசகர்களிடம் திண்டாட வைத்த கதையே ‘கண் திறக்குமா?’ கதை; அதற்காக நான் எடுத்த அவதாரமே ‘நக்கீரன்’ அவதாரம்!

ஏன் எடுத்தேன்? காலமெல்லாம் என்னைத் தொழுது, கடைசியில் இரணியன் கையிலோ முதலையின் வாயிலோ சிக்கிக்கொண்ட பக்தனைக் காப்பாற்றவா? இல்லை, என்னை நானே காப்பாற்றிக் கொள்ளத்தான்!

வாழ்வதற்காக வயிறு செய்யத் தூண்டும் எத்தனையோ தவறுகளில் அதையும் ஒன்றாகப்பாவித்து என்னை அன்று மன்னித்துவிட்ட ஆசிரியர் கல்கி அவர்களோ இன்று அமரராகிவிட்டார்; அந்தத் தவறைத்தாம் செய்த தவறாகக் கருதி இன்னல் பலவற்றுக்கு உள்ளான திரு. முருகு சுப்பிரமணியம் அவர்களோ இன்று தமிழ்ப் பெருமக்களால் நாடு கடத்தப்பட்டு விட்டார்! - ஆம், அவர்களுக்காக அசல் தமிழ்ப்பத்திரிகையொன்றை நடத்தியதே அவர் செய்த குற்றம் - அதற்காகவே இன்று அவர் மலேயாவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்!

இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பின் நூல் வடிவம் பெற்று வரும் இக்கதை, என்னை இன்னும் என்ன பாடுபடுத்தப் போகிறதோ, தெரியவில்லை!

1.4.1956

அன்பு

சென்னை

விந்தன்