உள்ளடக்கத்துக்குச் செல்

கதை சொன்னவர் கதை 2/கதாசிரியரான கணித ஆசிரியர்!

விக்கிமூலம் இலிருந்து

லிஸ் ஒரு சிறுமி. அவளும் அவளுடைய அக்காளும் ஒரு நாள் ஓடைக் கரையில் உட்கார்ந்திருந்தார்கள். அக்காள் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். ஆலிஸ் எட்டி, எட்டி அந்தப் புத்தகத்தை இரண்டு மூன்று தடவை பார்த்தாள். “ப்பூ! இது என்ன புத்தகம்! படமும் இல்லை; சம்பாஷணையும் இல்லை. படமும், சம்பாஷணையும் இல்லாத புத்தகம் ஒரு புத்தகமா?” என்று அலுத்துக் கொண்டாள். சிறிது நேரத்தில், அவளது கண்கள் சுழன்றன. தூக்கம் வந்து விட்டது.

திடீரென்று அவ்வழியாக ஒரு வெள்ளை முயல் ஓடி வந்தது. அது கோட்டு அணிந்திருந்தது. கோட்டுப் பையிலிருந்த தங்கக் கடிகாரம் ஒன்றை வெளியில் எடுத்து மணி பார்த்து விட்டு, “அடடா, இன்றும் நேரமாகி விட்டதே!” என்று கூவிக் கொண்டே, மேலும் வேகமாக ஓடியது. கோட்டுப் போட்டுக் கொண்டு, கடிகாரம் வைத்திருக்கும் முயலை, சிறுமி ஆலிஸ் அதற்கு முன்பு பார்த்ததே இல்லை. அவளுக்கு ஒரே வியப்பாக இருந்தது. உடனே அவள் எழுந்தாள்; முயலைத் தொடர்ந்து ஓட ஆரம்பித்தாள்.

சிறிது தூரம் சென்றதும், ஒரு பெரிய பொந்து இருந்தது. அந்தப் பொந்துக்குள் முயல் ‘குப்’ பென்று பாய்ந்தது. அடுத்த விநாடி ஆலிஸும் அந்தப் பொந்துக்குள் குதித்தாள். குதித்த ஆலிஸ், உருண்டு, உருண்டு கீழ் நோக்கிப் போய்க் கொண்டேயிருந்தாள். அவள் மிகவும் மெதுவாக உருண்டாளோ அல்லது அந்தப் பொந்துதான் மிக மிக ஆழமாக இருந்ததோ, அவள் அடியிலே போய்ச் சேர வெகு நேரமாயிற்று.

கீழே சென்றதும், ‘அப்பாடா!’ என்று அவள் பெருமூச்சு விட்டுக் கொண்டே எழுந்தாள். சுற்று முற்றும் பார்த்தாள். அங்கே மற்றொரு நீண்ட பாதை இருந்தது. அந்தப் பாதையில் வெள்ளை முயல் நடந்து போவதை அவள் கண்டாள். உடனே வேகமாக அதைப் பின் தொடர்ந்தாள். வெகு தூரம் ஓடினாள். ஆயினும், ஒரு மூலையில் திரும்பும் போது, அந்தப் பொல்லாத முயல் எப்படியோ அவளை ஏமாற்றி விட்டு மறைந்து போய் விட்டது.

‘இப்போது எந்த இடத்தில் இருக்கிறோம்,’ என்று ஆலிஸ் திகைப்புடன் பார்த்தாள். அது ஒரு மண்டபம் போல் இருந்தது. மேல் கூரையிலிருந்து பிரகாசமான விளக்குகள் வரிசையாகத் தொங்கிக் கொண்டிருந்தன. அந்த இடம் பளிச்சென்று இருந்தது. அந்த மண்டபத்தைச் சுற்றிலும் கதவுகள் இருந்தன. ஆலிஸ்

ஒவ்வொரு கதவாகத் திறக்க முயன்றாள்; முடியவில்லை. எல்லாம் பூட்டப்பட்டிருந்தன. ‘எப்படி. நான் தப்புவேன்?’ என்ற கவலை அவளுக்கு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த ஒரு கண்ணாடி மேஜை அவளது கண்களில் தென்பட்டது. அதன் மேல் ஒரு சிறிய தங்கச் சாவி இருந்தது. ஆலிஸ் உடனே அதைக் கையில் எடுத்தாள். ஒவ்வொரு கதவுப் பூட்டிலும் போட்டுத் திறக்க முயன்றாள். எல்லாப் பூட்டுக்களுமே பெரியவை. அதனால் எந்தப் பூட்டுக்கும், அந்தத் தங்கச் சாவி சேரவில்லை.

ஏமாற்றத்துடன் அவள் நிற்கும் போது, சுவர் ஓரமாக ஒரு திரை தெரிந்தது. அந்தத் திரையை ஒதுக்கி விட்டு அவள் பார்த்தாள். அங்கே ஒரு சிறிய கதவு இருந்தது. அதன் சாவித் துவாரம் சிறியதாக இருந்தது. அது ஒன்றேகால் அடி உயரந்தான் இருந்தது. உடனே அவளுடைய முகம் மலர்ந்தது. தன் கையிலிருந்த தங்கச் சாவியைக் கொண்டு, அந்தச் சிறிய கதவைத் திறக்க முயன்றாள். சுலபமாகக் கதவு திறந்து கொண்டது.

கதவைத் திறந்ததும், அங்கே அவள் கண்டதென்ன? எலி வளையைப் போல ஒரு வழி தெரிந்தது. உடனே அவள் கீழே படுத்துக் கொண்டு, அந்த வழியாக உற்றுப் பார்த்தாள். சிறிது தூரத்தில், மிகவும் அழகான ஒரு தோட்டம் தெரிந்தது. கண்ணைக் கவரும் வண்ண மலர்களும், செடிகளும், கொடிகளும், தண்ணீர்க் குழாய்களும், அத்தோட்டத்திலே தெரிந்தன. ஆலிஸ் அவற்றைப் பார்த்துப் பார்த்து ஏங்கினாள். ‘சரி, அந்தத் தோட்டத்துக்குப் போவதற்கு வேறு ஏதேனும் வழி இருக்கிறதா? பார்க்கலாம்’ என்று நினைத்து அந்தச் சிறு கதவைப் பூட்டிச் சாவியை மேஜை மேல் வைத்து விட்டு, யோசனை செய்து கொண்டிருந்தாள்.

அப்போது மேஜை மேல் ஒரு சிறு புட்டி இருந்ததை அவள் கண்டாள். அதைக் கையில் எடுத்துப் பார்த்தாள். அதன் மேல் ‘என்னைக் குடி’ என்று எழுதப்பட்டிருந்தது. ஆலிஸ் ‘மடக் மடக்’கென்று அந்தப் புட்டியிலிருந்த திரவத்தைக் குடித்தாள். குடித்து முடிந்ததும், ‘என்ன இது? நான் குறுகிக் கொண்டே போகிறேனே!’ என்றாள். ஆம்; அவள் உயரம் குறுகிக் குறுகிக் கொண்டே வந்து, சில விநாடிகளில் பத்து அங்குலமாகி விட்டது. சிறு பொம்மை போல் உருமாறி விட்டாள்!

“இப்போது நான் அந்தச் சின்னஞ்சிறு பாதை வழியாகப் புகுந்து, அந்தத் தோட்டத்திற்குச் சுலபமாகப் போய்ச் சேர்ந்து விடலாம்” என்று ஆனந்தமாகக் கூறினாள். உடனே திரைக்குப் பின்னாலிருந்த அந்தச் சிறிய கதவை நோக்கி ஓடினாள். கதவைத் திறக்கச் சாவி வேண்டுமே ! ஆனால், மேஜை மேல் இருந்த சாவி அவளுக்கு எட்டவில்லை. முன் போல இருந்தால், எட்டியிருக்கும். இப்போது அவள் பத்து அங்குல உயரம்தானே இருக்கிறாள்? எப்படி எட்டும்? மேஜை மேல் தொத்தி ஏற முயன்றாள். அது கண்ணாடி மேஜையானதால், ஏற முடியவில்லை; வழுக்கி வழுக்கிக் கீழே விழுந்தாள். பாவம்!

“என்ன செய்வது?” என்று தெரியாமல் சிறிது நேரம் அவள் விழித்துக் கொண்டிருந்தாள். அப்போது மேஜைக்கு அடியில் ஒரு கண்ணாடிப் பெட்டி இருந்ததை அவள் கண்டாள். உடனே பெட்டியைத் திறந்தாள். உள்ளே சிறிய ரொட்டி ஒன்று இருந்தது. அதன் மேல், ‘என்னைச் சாப்பிடு’ என்று எழுதப்பட்டிருந்தது.

“இதைத் தின்றால் என்ன ஆகுமோ? கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பழைய உருவத்தை அடைந்தாலும் அடையலாம். அப்போது, மேஜை மேலுள்ள சாவியைச் சுலபமாக எடுத்து விடலாம்… ஒரு வேளை, இதைச் சாப்பிட்டதும், இன்னும் குறுகி விட்டால்…? எறும்பைப் போல் சிறுத்து விட்டாலும் கவலையில்லை. கதவுக்கு அடியிலே புகுந்து, அந்தச் சிறு பாதை வழியாகத் தோட்டத்துக்குப் போய் விடலாம். எப்படியானாலும் சரி; கவலையில்லை” என்று துணிச்சலாக, அந்த ரொட்டியை எடுத்தாள்; வாயில் வைத்துக் கடித்தாள்; ரொட்டி முழுவதையும் சாப்பிட்டு முடித்தாள். பிறகு, ‘நாம் இப்போது எப்படி இருக்கிறோம்?’ என்று குனிந்து, தன்னுடைய காலைப் பார்த்தாள். கால் பாதங்களை அங்கே காணவில்லை! எங்கோ வெகு தூரத்தில் இருப்பதாகத் தெரிந்தது. அவ்வளவு நீளத்திற்கு அவள் கால்கள் வளர்ந்து விட்டன! கால்கள் மட்டும்தானா? கைகள், உடல், தலை எல்லாமே விசுவரூபம் எடுத்து விட்டன!

அப்புறம்?

அப்புறம் என்ன?

அதிசய உலகில் ஆலிஸ் (Alice in Wonderland) என்னும் அந்த அதிசயக் கதை முழுவதையும் சொல்வதென்றால், அதுவே ஒரு தனிப் புத்தகமாகி விடும்! மேலே. சொல்லப் பட்டிருப்பது அக்கதையின் முதல் பகுதியேயாகும். ஆலிஸ் என்னும் சிறுமி தனது கனவிலே கண்ட அதிசயக் காட்சிகளையெல்லாம், இக்கதையில் நாமும் காணலாம். கதை சொல்லப்பட்டுள்ள முறை, கதையின் நடுவே வரும் வேடிக்கை உப கதைகள், பிராணிகளின் பேச்சுக்கள், வேடிக்கைப் பாடல்கள் யாவும், சுவையான இக்கதைக்கு மேலும், மேலும் சுவை ஊட்டிக் கொண்டிருக்கின்றன.

இந்தக் கதை குழந்தைகளுக்காகக் கூறப்பட்டதுதான். ஆயினும், பெரியவர்களைக் கூடக் கவரும் பெரும் சக்தி இதற்கு உண்டு. இந்தக் கதையைக் குழந்தைகள் படித்தால், குதித்துக் கும்மாளம் போடத் தொடங்கி விடுகிறார்கள்; பெரியவர்கள் படித்தால், தங்களை மறந்து குழந்தைகளாகி விடுகிறார்கள்!

விக்டோரியா மகாராணியைக் கூடச் சிறிது நேரம் குழந்தையாக்கி விட்டது இந்தக் கதை! ஆம், ஒரு நாள் விக்டோரியா மகாராணியின் கண்களில் தென்பட்டது இந்தக் கதைப் புத்தகம். அதை எடுத்துப் புரட்டி மேலாகப் படிக்க ஆரம்பித்தார் அவர். படிக்கப் படிக்க முழுவதையும் படிக்க வேண்டுமென்ற ஆவல் அவருக்கு எழுந்தது. பல முறை அதைப் படித்தார்; எல்லையில்லா மகிழ்ச்சியுற்றார்.

“ஆஹா, எவ்வளவு அழகாக இந்தக் கதையை இதன் ஆசிரியர் எழுதியிருக்கிறார்! இதைப் படிக்கும் போது, நானும் ஒரு குழந்தையாகவே மாறி விட்டேன்” என்றாராம். அத்துடன் நிற்கவில்லை. தமது காரியதரிசியை அழைத்து, “இந்தப் புத்தகம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த ஆசிரியரின் அடுத்த புத்தகம் வெளி வந்ததும், எனக்குத் தெரிவியுங்கள். அதையும் நான் படிக்க வேண்டும்” என்றாராம்.

உடனே காரியதரிசி இந்தக் கதையை எழுதிய ஆசிரியரான லூயி கரால் (Lewis Carroll) என்பவருக்கு மகாராணியின் பாராட்டுதலைத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய அடுத்த புத்தகத்தை மகாராணி ஆவலோடு எதிர்பார்ப்பதாகவும் அறிவித்தார். லூயி கரால், மகாராணிக்குத் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, “எனது அடுத்த புத்தகம் அச்சில் இருக்கிறது. தயாரானதும், உடனே தங்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கிறேன்” என்று எழுதினார்.

மகாராணி ஆவலாக அந்தப் புத்தகத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒரு நாள், லூயி கராலிடமிருந்து மகாராணிக்கு ஒரு பார்சல் வந்தது. .மகாராணி மேல் உறையை ஆவலோடு பிரித்தார். உள்ளேயிருந்த புத்தகத்தை அவசரம், அவசரமாகப் புரட்டினார். அப்போது அவருடைய முகம் சுருங்கியது. “என்ன இது? கதைப் புத்தகம் கேட்டால், கணிதப் புத்தகம் வந்திருக்கிறதே! இதையா நான் கேட்டேன்? லூயி கரால் எழுதியதா இது?” என்று கேட்டார்.

இல்லை; லூயி கரால் எழுதியதாக அதில் குறிப்பிடப்படவில்லை. சார்லஸ் லட்விட்ஜ் டாஜ்சன் என்பவர் எழுதியதாகவே அப்புத்தகத்தின் முகப்பில் அச்சிடப்பட்டிருந்தது.

அப்படியானால், லூயி கரால் ஏன் அதை அனுப்பி வைத்தார்? ஒருவேளை, தவறுதலாக அனுப்பி விட்டாரோ? இல்லை; வேண்டுமென்றுதான் அனுப்பி வைத்தார். காரணம், அந்தக் கணிதப் புத்தகத்தை எழுதியவரும் அவரேதான்! அப்படியானால், பெயர் வேறாக இருக்கிறதே? இருவரும் ஒருவரேதான்! ஆக்ஸ்பர்ட் பல்கலைக் கழகக் கணிதப் பேராசிரியரான சார்லஸ் லட்விட்ஜ் டாஜ்சன என்பவரது புனைபெயர்தான் லூயி கரால்!

இந்த உண்மை தெரிந்த போது, மகாராணிக்கு ஒரே வியப்பாக இருந்தது. “ஒரு கணிதப் பேராசிரியருக்கு இவ்வளவு நன்றாகக் கதை சொல்லக் கூடத் தெரிகிறதா!” என்றார்.

குழந்தைகளில் பெரும்பாலோருக்குக் கணிதம் என்றாலே கசப்பு. அப்படிப்பட்ட கடினமான கணிதத்தைப் போதிக்கும் ஆசிரியர், குழந்தைகள் உள்ளத்தைக் கவரும் வகையில், அருமையான கதைகளையும் சொல்லுகிறார் என்றால், யாருக்குத்தான் வியப்பாக இராது?

லூயி கரால் குழந்தைகளிடம் மிகவும் பிரியமாக இருப்பார். அவருடைய வீட்டுக்குச் சென்றால், அங்கே மூலைக்கு ஒன்றாக விளையாட்டுச் சாமான்கள் கிடக்கும். “இவருக்குக் குழந்தைகள் அதிகம் போலிருக்கிறது” என்று நினைக்கத் தோன்றும். ஆனால், அவரோ கல்யாணமே செய்து கொள்ளவில்லை. ஆண்டர்சனைப் போலவே, அவரும் சாகும் வரையில் பிரம்மச்சாரியாகவே இருந்தார். அவர் வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்காகவே, அவர் நிறைய விளையாட்டுச் சாமான்கள் வாங்கி வைத்திருந்தார். எப்போதும், அவர் வீட்டில் குழந்தைகள் கூட்டம், கூட்டமாக இருந்து கொண்டே இருப்பார்கள்.

அவருடைய நண்பருக்கு மூன்று பெண் குழந்தைகள் உண்டு அந்த மூவரும் அவரிடத்தில் மிகவும் பிரியமாயிருப்பார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு, மாலை வேளையில், அவர் ஆற்றங்கரைக்குச் செல்லுவார். நால்வரும் உல்லாசமாகப் படகிலே போய் வருவார்கள். கரையிலே உட்கார்ந்து, காற்று வாங்குவார்கள். அப்போதெல்லாம், கதை சொல்லும்படி அவரைத் தொந்தரவு செய்து கொண்டேயிருப்பாள் அந்த மூவரில் ஒருத்தி. அவள் பெயர் ஆலிஸ். அலுக்காமல், சலிக்காமல் கதை சொல்லும் அவர், ஒரு நாள் ஆலிஸ் என்ற அந்தப் பெண்ணையே கதாநாயகியாக வைத்துக் கதை சொல்லத் தொடங்கி விட்டார்!

அது நீளமான ஒரு கதை. அந்தக் கதை சிறுமியர் மூவருக்கும் மிகவும் பிடித்திருந்தது. திரும்பத் திரும்ப அக்கதையைச் சொல்லச் சொல்லி, அவர்கள் கேட்பார்கள். மற்றக் குழந்தைகளிடமும் சொல்லிச் சொல்லி மகிழ்வார்கள்.

ஒரு நாள் ஆலிஸ் என்ற அந்தப் பெண், “இந்தக் கதையை எத்தனை தடவை நாங்கள் கேட்டிருக்கிறோம்? ஆனாலும், திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும் போலிருக்கிறது. அலுப்புத் தட்டவே இல்லை. இந்தக் கதையை, அப்படியே எழுதிப் புத்தகமாக வெளியிட்டால், இன்னும் எத்தனையோ குழந்தைகள் படிப்பார்களே! ஏன் வெளியிடக் கூடாது?” என்று கராலைப் பார்த்துக் கேட்டாள்.

“சரி, உன் விருப்பப்படியே செய்யலாம்” என்றார் அவர்.

அன்றே கதையை எழுதத் தொடங்கினார். அவருக்குப் படங்கள் போடவும் தெரியும். கதைக்கு ஏற்றபடி, படங்களை அவரே வரைந்தார். அந்தப் படங்கள் நன்றாகத்தான் இருந்தன. ஆனாலும், புத்தகமாக அச்சிடும் போது, அதில் அவர் அந்தப் படங்களைச் சேர்க்க விரும்பவில்லை. வேறு ஒரு புகழ் பெற்ற ஓவியரைக் கொண்டு, படங்கள் போடச் செய்தார். கதையைப் போலவே, அந்தப் படங்களும் உலகப் புகழ் பெற்று விட்டன.

புத்தகத்தை வெளியிடும் போது அவர், தம் சொந்தப் பெயரில் அதை வெளியிடவில்லை. ‘லூயி கரால்’ என்ற புனை பெயரிலே 1865-ஆம் ஆண்டில் வெளியிட்டார். புத்தகம் வெளியான சில நாட்களுக்குள் லூயி கராலின் புகழ், இங்கிலாந்து முழுவதும் பரவி விட்டது. ஆயினும், கணிதப் பேராசிரியர் டாஜ்சன்தான் லூயி கரால் என்பது பலருக்குத் தெரியாமலே இருந்து வந்தது. புனை பெயரில் ஒளிந்து வாழவே, அவர் விரும்பினார். எவ்வளவு நாளைக்குத்தான் அப்படி ஒளிந்திருக்க முடியும்? விரைவிலே, உண்மை வெட்ட வெளிச்சமாகி விட்டது!

லூயி கரால் 1832-ஆம் ஆண்டில் பிறந்தார். அவருடன் கூடப் பிறந்தவர் பதினோரு பேர். லூயி கரால்தான் மூத்த பிள்ளை. அவரது தந்தையாரும், ஒரு கணித நிபுணராகவே விளங்கினார். லூயி கரால் சிறுவராயிருந்த போதே, படிப்பில் மிகவும்: கெட்டிக்காரராக இருந்தார். பள்ளியில், அவர் பல பரிசுகளும், பாராட்டுக்களும் பெற்றிருக்கிறார்.

சிறிய வயதில், லூயி கரால் தம்முடைய தம்பிகளுடனும், தங்கைகளுடனும் சேர்ந்து தோட்டத்தில் விளையாடுவார். தினமும், விதம் விதமான விளையாட்டுக்களை அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பார். அது மட்டுமா? விநோதமான கதைகளைக் கூறுவார். வேடிக்கையான பாடல்களைப் பாடுவார். கேலிச் சித்திரங்கள் வரைந்து காட்டுவார். அண்ணனுடன் சேர்ந்து பொழுது போக்குவதிலே தம்பி, தங்கைகளுக்கு அளவில்லாத மகிழ்ச்சி.

பத்துப் பன்னிரண்டாவது வயதிலே, கையெழுத்துப் பத்திரிகை ஒன்றை அவர் நடத்தி வந்தார். அவரே, அதில் கதை, கட்டுரை, கவிதைகளெல்லாம் எழுதுவார். படங்களும் வரைவார். அந்தப் பத்திரிகையைப் படிக்க, ஒவ்வொரு குழந்தையும் போட்டி போடும். சில சமயங்களில் சண்டை கூட வந்து விடும்!

வாலிபப் பருவத்தில், அவர் புகைப் படம் எடுக்கக் கற்றுக் கொண்டார். விரைவில், சிறந்த புகைப்பட நிபுணராகி விட்டார்! எங்கு புகைப்படக் காட்சி நடந்தாலும், தவறாமல் அங்கு போய் விடுவார்!

வேடிக்கையாக எழுதுவதிலும், பேசுவதிலும் அவருக்கு விருப்பம் அதிகம். அவர் பேசுவதை நாள் முழுவதும் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். ஆனால், பொதுக் கூட்டங்களில் அவருக்குப் பேச வராது. கை கால்கள் நடுங்கும்; வாய் குளறும்; என்ன பேசுகிறார் என்பதே புரியாமல் போய் விடும். மந்திரியாக வர வேண்டும் என்று அவருக்கு ஓர் ஆசை இருந்தது. பொதுக் கூட்டத்தில் பேச வராததால், அந்த ஆசை நிறைவேறவில்லை. அதுவும் நன்மைக்குத்தான். இல்லாவிடில், அவர் பெயர் இன்று தெரிவது போல், உலகம் முழுவதும் தெரிந்திருக்க முடியாதல்லவா?

அறுபத்தாறு ஆண்டுகள் வாழ்ந்த லூயி கரால், தமது இயற் பெயரான சார்லஸ் லட்விட்ஜ் டாஜ்சன் என்ற பெயரில் எத்தனையோ கணிதப் புத்தகங்களை எழுதியிருக்கிறார். அவையெல்லாம், எவ்வளவு காலம் நீடித்து நிற்குமோ தெரியாது. ஆயினும், அவரது ‘அதிசய உலகில் ஆலிஸ்’ என்ற சிரஞ்சீவிக் கதையும், மற்றக் கதைகளும் குழந்தைகள் உள்ளத்தில் என்றென்றும் நிலைத்து நிற்கும்; குழந்தைகள் இருக்கும் வரையில் இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

‘அதிசய உலகில் ஆலிஸ்’ என்ற கதை புத்தகமாக வெளி வந்த போது, 35,000 சொற்கள் இருந்தன. ஆனால், கரால் அதை முதல் முதலாக எழுதும் போது, 18,000 சொற்களே இருந்தன. பிறகு, அதிலே அவர் சில மாறுதல்கள் செய்தார். பல புதிய பகுதிகளைச் சேர்த்தார். அதனால், கதையின் நீளம் கிட்டத்தட்ட இரண்டு மடங்காகி விட்டது !

இந்தக் கதையின் கையெழுத்துப் பிரதியை அதாவது, லூயி கரால் முதல் முதலாக எழுதினாரே, அந்தப் பிரதியை எப்படியாவது விலைக்கு வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று பல பிரபுக்கள் நினைத்தார்கள். அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டது. கடைசியாக, ஓர் ஆங்கிலேயர் சுமார் 2,50,000 ரூபாய் கொடுத்து அதை வாங்கினார். ஆனால், அடுத்த ஆண்டே, அவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது. ஓர் அமெரிக்கர் அவரிடம் 5 லட்சம் ரூபாய் கொடுத்து, அதை வாங்கிக் கொண்டு போய் விட்டார் ! அந்த அமெரிக்கர் மிகவும் நல்லவர். அவர் அதை வெகு காலம் வைத்திருக்கவில்லை. லண்டனிலுள்ள பிரிட்டிஷ் மியூஸியத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்து விட்டார். இன்றும் அது அங்கே இருக்கிறது. அதைப் புரட்டிப் பார்த்தால், லூயி கராலின் கையெழுத்தை மட்டுமல்ல; அவர் வரைந்த படங்களையும் அதிலே காணலாம்!