கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1/கிங்கிணி ஓசை

விக்கிமூலம் இலிருந்து

கிங்கிணி ஓசை

1

குழந்தைப் பருவம்

முருகனுடைய திருவிளையாடல்களை அழகுபடச் சொல்லி வரும் அருணகிரிநாதர், அவனுடைய குழந்தைப் பருவச்செயல்களைச் சொன்னார். பிள்ளைப் பருவத்தைப் பாராட்டும் ஒருவகைப் பிரபந்தத்துக்குப் பிள்ளைத் தமிழ் என்று பெயர். காப்புப் பருவம், தாலப்பருவம், செங்கீரைப் பருவம், சப்பாணிப் பருவம், முத்தப் பருவம், வருகைப் பருவம், அம்புலிப் பருவம், சிற்றில் பருவம், சிறுபறைப் பருவம், சிறுதேர்ப் பருவம் என்று பத்துப் பருவங்களாகப் பிரித்து ஒவ்வொரு பருவத்தையும் சிறப்பித்துப் பாடுவார் புலவர்.

அருணகிரியார் தனியே பிள்ளைத் தமிழ் என்று பெயர் வைத்து ஒன்றும் பாடவில்லை. ஆனாலும் பிள்ளைப் பருவ வருணனைகளை அவர் பாடலிற் காணலாம். பெரியாழ்வார் கண்ணபிரான் உடைய பால லீலைகளைப் பாடியிருக்கிறார். பிள்ளைத்தமிழ் என்று பெயரிட்டுச் சொல்லாவிட்டாலும் பிள்ளைப் பருவத்தைப் பற்றிய தமிழ்ப்பாடல்கள் அவை. அப்படியே முருகனுடைய பிள்ளைப் பருவத் திருவிளையாடல்களை அருணகிரிநாதர் அங்கங்கே சொல்லியிருக்கிறார். உமா தேவியாரின் பாலை அருந்திச் சரவணப் பொய்கையில் உள்ள தாமரையாகிய தொட்டிலில் ஏறித் துயின்றதையும், அழுததையும் "திருந்தப் புனவங்கள்" என்ற பாட்டில் வருணித்தார். தாலப் பருவத்துச் செயல்கள் அவை. துயிலுகின்ற முருகக் குழந்தை விழித்துக் கொண்டு காலை உதைத்து விளையாடுகிறது. அதன் உடம்பு அசைகிறது. அப்போது அதன் இடையிலுள்ள சலங்கை குலுங்குகிறது. அந்த ஒசையினால் என்ன என்ன விளைந்தன என்று இந்தப் பாட்டில் அருணகிரி நாதர் சொல்கிறார்.

சோமாஸ்கங்தர்

குழந்தை முருகனுடைய விளையாட்டை நினைக்கிறார். அம்பிகையின் குழந்தை அவன். அந்த அம்பிகை பரம சிவனுடைய மனைவி. சிவனும் சக்தியும் சேர்ந்து நிற்கிற கோலம் அர்த்த நாரீசுவரக்கோலம். இருவரும் இணைந்த மூர்த்தி அது. சிவம், சக்தி, முருகன் மூவரும் இணைந்த கோலம் ஒன்று உண்டு. மாகேசுவர மூர்த்தங்கள் என்று சிவபிரானுக்குரிய திருக் கோலங்கள் இருபத்தைந்தைத் தனியே வரிசைப்படுத்திப் புராணங்கள் கூறும். அந்த இருபத்தைந்தில் சோமாஸ்கந்த மூர்த்தமும் ஒன்று. அம்மை, அப்பன், சேய் என்ற மூவரும் ஒருவராய மூர்த்தி அது. உமாதேவியாரோடும் கந்தனோடும் இணைந்தவனாகச் சிவபெருமான் இருக்கும் கோலம் சிறந்தது.

ஒவ்வொரு கோயிலிலும் சோமாஸ்கந்த மூர்த்தியைக் காணலாம். வலப்பக்கத்தில் பரமசிவனும் இடப்பக்கத்தில் அம்பிகையும் இடையில் முருகனும் காட்சி தரும் அந்த இணைப்புக் கோலத்தை நாயகர் என்று சொல்வார்கள். திருவாரூரில் தலைமை பெற்று எழுந்தருளியிருக்கும் தியாகராஜர் சோமாஸ்கந்தரே.

ஆலயங்களில் நித்திய பூஜை நடக்கின்றது. அதில் நேரும் குறைபாடுகளுக்குப் பரிகாரமாக நைமித்திகமாகிய விழாக்கள் நடைபெறுகின்றன. ஆலயத்தின் பெருமை விழாக்களால் மிகுதியாகிறது; பயனும் மிகுதியாகிறது. விழாவைச் சிறப்பு என்று சொல்வார்கள்.

'சிறப்பொடு பூசனை செல்லாது, வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு'

என்று திருவள்ளுவர் நைமித்திகமாகிய விழாவைச் சிறப்பென்று குறிக்கிறார்.

விழாக்களுக்குள் சிறந்தது திருத்தேர் விழா அதைப் பிரம்மோற்சவம் என்பர். அதைப் பாராட்டி உலா என்ற பிரபந்தத்தைப் புலவர்கள் பாடியிருக்கிறார்கள்.

இவ்வளவு சிறப்புடைய பிரம்மோற்சவத்தில் திருத்தேரில் எழுந்தருளும் மூர்த்தி யார் தெரியுமா? சோமாஸ்கந்த மூர்த்தி தான். உலகத்தாருடைய பாவத்தைப் போக்கி அருளை வழங்க இறைவன் குடும்பத்தோடே எழுந்தருளி வருகிறான்.

அப்பர் சுவாமிகள் இந்தக் குடும்பத்தைப் பாராட்டுகிறார். அம்மையும் அப்பனும் பிள்ளையுமாக இருக்கும் தெய்வக் குடும்பத்தை அவர் பாராட்டும் முறை அவர் சிவ பக்தர் என்பதைக் காட்டுகிறது.

"நன்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்"

என்று சொல்கிறார். நன்கடம்பனாகிய முருகன் குழந்தை; அவனைப் பெற்றவள் உமாதேவி; அவளைப் பங்கில் உடையவன் சிவபெருமான். குழந்தை, மனைவி இருவரையும் சொல்லிக் குடும்பத் தலைவனையும் சொல்கிறார். மற்ற இருவர்களையும் குடும்பத் தலைவனோடு சார்த்திச் சொல்கிறார். குடும்பத் தலைவனைப் பாடும் பணியை உடையவர் அவர்.

அருணிகிரிநாதர் முருகனைப் புகழ்கிறவர். அவனையே முக்கியமாக வைத்துப் பேசுகிறார். முருகன், அவன் தாய், அவள் கணவர் என்ற வரிசையில் கடைசியில் சிவபெருமானிடம் வந்து முடிக்கிறவர் அப்பர். அருணகிரிநாதரோ சிவன், அவன் தலைவி, அவள் குமாரன் என்ற வரிசையில் மூவரையும் வைத்துக் கடைசியில் குமாரனிடம் வந்து முடிக்கிறார்.

ஒருவரைப் பங்கில் உடையாள் குமாரன்

தமக்குச் சமானமே இல்லாதவர் சிவபெருமான், ஒருவர். அவரைத் தம் பங்கில் வைத்துக் கொண்டிருப்பவள் உமாதேவி. அவள் குமாரன் முருகன். அவனைப் பற்றிச் சொல்லப் போகிறார்.

தாயின் சார்பு

ங்கே ஒரு புதுமையைக் காண்கிறோம். அப்பர் சுவாமிகள், "பெற்றவள் பங்கினன்" என்றார். உமாதேவியை ஒரு பாகத்தில் உடையவன் என்று சொல்வதே பெருவழக்கு. அர்த்தநாரீசுவரன் என்ற அந்தக் கோலத்திலுள்ள இறைவனுக்குப் பெயர். அருணகிரிநாதர் அர்த்தநாரீசுவரனைச் சொல்லவில்லை; அர்த்தேசுவர நாரியைச் சொல்கிறார். இறைவனைத் தன் பாகத்திலே கொண்டவள் உமாதேவி என்று அம்பிகைக்குத் தலைமை கொடுத்துச் சொல்கிறார்.

குழந்தையாகிய முருகன் கட்சியைச் சேர்ந்தவர் அருணகிரியார். குழந்தைக்கு அம்மா, அப்பா இருவரிடமும் அன்பு உண்டு. ஆனால் அம்மாவிடம் ஒரு மாற்று அதிகமாகவே இருக்கும். குழந்தை அம்மாவை உணர்ந்து, பிறகே அப்பாவை உணர்கிறது. தாயினிடம் ஒட்டிக் கொண்டுள்ள குழந்தைக்கு அம்மா, அப்பாவின் மனைவி அல்ல; அப்பாதான் அம்மாவின் கணவர். உலகத்தாருக்கு அவருடைய மனைவி அவள். ஆனால் குழந்தைக்கு அவளுடைய கணவர் அவர். அவளுக்குத்தான் தலைமை. அவள் உடையவள்; அவன் உடைமைப் பொருள். அம்மாவுக்கு பெருமை தரும் குழந்தையின் கட்சியைச் சார்ந்த அருணகிரிநாதரும் அந்த அன்னைக்கே சிறப்புக் கூறுகிறார்.

"த்ரிபுராந் தகனைத் த்ரியம்பகனைப்
பாகத்தில் வைக்கும் பரமகல் யாணி"

என்று பின்பும் சொல்வார்.

அப்பைய தீட்சிதர் என்ற பெரிய வடமொழி வித்துவான் ஒருவர் இருந்தார். அவர் சிறந்த சிவபக்தர். பல நூல்களின் ஆசிரியர். மன்னர்களாலும் மக்களாலும் நன்கு மதிக்கப் பெறுபவர். அவருடைய மனைவியின் பெயர் ராஜம். அந்த அம்மை பிறந்த வீட்டிலும் ஊரிலும் அவளை ஆச்சா என்றே அழைத்து வந்தார்கள்.

ஒருநாள் அப்பைய தீட்சிதர் தம் மாமனார் ஊருக்குப் போய் இருந்தார். அவரைக் கண்ட ஊர்ப் பெண்கள், “அதோ ஆச்சா புருஷர் போகிறார் பாருங்களடி" என்று பேசிக் கொண்டார்கள். அது அவர் காதில் பட்டது.

அவரை நேரே சுட்டி இன்னார் என்று அவர்கள் சொல்லவில்லை. நாட்டில் பலரும் புகழும் கவிஞராய், சாஸ்திர வல்லுநராய், நூலாசிரியராய் விளங்கிப் அவருடைய பெருமைகளில் ஒன்றைக்கூடச் சுட்டவில்லை. அவர் பெயரைக்கூடச் சொல்லவில்லை. ஆச்சாவோடு சார்த்திச் சொன்னார்கள். அவர்களுக்கு ஆச்சாவைத்தான் தெரியும்.

க.சொ.1-23 இதைக் கேட்ட அப்பைய தீட்சிதர், "அஸ்மிந் கிராமே ஆச்சா பிரஸித்தா" என்றாராம். "என் மனைவியின் ஊரில் ஆச்சாதான் பிரசித்தமானவள்" என்பது பொருள்.

அதுபோல இங்கே அம்மாவின் ராஜ்யம் நடக்கிறது. ஆதலால் அம்மாவுக்குத்தான் சிறப்பு. 'ஒருத்தியைப் பங்கில் உடையான் குமாரன்' என்று சொல்லாமல் ஒருவரைப் பங்கில் உடையாள் குமாரன் என்று பாடினார் அருணகிரியார்.

2

கிங்கிணி ஓசை

முருகன் திருவவதாரம் செய்தபோது பாலை விரும்பி அழுதானென்றும், அந்த அழுகையைக் கேட்ட அசுரரும் பிறரும் தாம் வாழ்வைக் குலைப்பவன் பிறந்துவிட்டான் என்று அழுதார்கள் என்றும் முன்பு ஒரு பாட்டில் அவர் சொன்னார். இப்போது அந்தக் குழந்தை ஆடி அசைகையில் அவன் இடுப்பில் கட்டிய கிங்கிணியோசையைக் கேட்டு நடுங்கினார்கள் என்று சொல்ல வருகிறார். குழந்தை இடையில் அணியும் ஆபரணங்களில் உடை மணி என்பது ஒன்று. முருகன் திருவரையிலும் அது இருக்கிறது. அதையன்றிச் சலங்கையும் அணிந்திருக்கிறான். குழந்தை தொட்டிலிற் புரளும்போதும் உட்காரும்போதும் ஆடும்போதும் நடக்க முயலும்போதும் அந்தச் சலங்கை ஜல் ஜல் என்று ஒலி செய்கிறது. அது எங்கும் கேட்கிறது.

ஒருவரைப் பங்கில் உடையாள் குமாரன்
உடைமணிசேர்
திருவரைக் கிங்கிணிஓசை பட

முன்பு குழந்தையின் அழுகையைக் கேட்டு நெஞ்சம் துணுக்குற்ற அசுரர்கள், "அந்தக் குழந்தை வளருகிறதா?" என்று விசாரித்துக் கொண்டே இருந்தார்கள். அப்படியே மறைந்த போனால் நல்லது என்பது அவர்களுடைய ஆசை. ஆனால் அது நடக்கிற காரியமா?

அசுரர் நிலை

வனுடன் சம்பந்தப்பட்டவர்கள் வருகிறார்களா, அவன் ஏதாவது குரல் எழுப்புகிறானா என்று கண்ணையும் காதையும் தீட்டிச் கொண்டு காத்திருந்தார்கள். சில காலம் ஒன்றும் காணவில்லை. "சரி, வெறும் அழுகையோடு போயிற்று; நாம் பயந்தது வீண்" என்று எண்ணித் தங்கள் காரியத்தில் ஈடுபட்டார்கள். அப்போது திடீரென்று முருகனுடைய திருவரைக் கிங்கிணி யோசை கேட்டது.

பசியுடையவனுக்கு சர்க்கரைப் பொங்கலைக் கண்டால் நாவில் நீர் ஊறுகிறது. வயிற்றுவலிக்காரனுக்கு அருவருப்பாக இருக்கிறது. முருகக் குழந்தையின் சலங்கையொலி நல்லவர்களுக்கு இனிதாகவும் பொல்லாதவர்களுக்குக் கடுமையாகவும் கேட்கிறது. இயற்கையில் அது இனிய ஒலிதான். ஆனால் பிறர் தொல்லையுறுவதனால் இன்பம் அடையும் அசுரர்களுக்கு அந்த ஓசை இனியதாக இல்லை. ஒசை மேலே தவறா? அதனால் உண்டாகும் நினைவுக் கோவைதான் அவர்களுக்கு அவ்வொலியினிடம் வெறுப்பை உண்டாக்குகிறது. தம்மை அழிக்கப் போகிறவன் வளர்கிறான், இனிமேல் நம்மிடம் வந்து நம் இன்ப வாழ்வைக் குலைப்பான் என்ற எண்ணம் அந்த ஒலியால் தோன்றுகிறது. அப்போது அதன் இனிமையை உணர இயலுமா?

குழந்தையானாலும் தெய்விகக் குழந்தை. அதன் செயல் ஒவ்வொன்றிலும் தெய்வத்திறல் இருக்கும். முருகக் குழந்தையின் திருவரைக் கிங்கிணியோசை அசுரர்களின் காதை எட்டுகிறது. அவ்வளவு வலிமை உடையதாக இருக்கிறது. அதைக் கேட்டு அசுரர்கள் திடுக்கிடுகிறார்கள்; நம் வாழ்வுக்கு இறுதி வரும்போல இருக்கிறதே என்று அஞ்சுகிறார்கள்.

திருவரைக் கிங்கிணி ஓசை படத்திடுக்
கிட்டு அரக்கர்
வெருவர.

திக்குச் செவிடுபடல்

கிங்கிணி ஒசையினால் உண்டான விளைவு அதனோடு நிற்கவில்லை. அவ்வொலி திக்கு முழுவதும் சென்று பரவுகிறது. முன்பெல்லாம் திக்குப் பாலகர்கள் திக்குகளைக் காத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது சுரராஜ்யம் நடந்து கொண்டிருந்தது. இப்போது அசுரராஜ்யம் அல்லவா நடக்கிறது? சூரபன்மனுடைய அரசாட்சியில் முக்கியமான பதவிகளில் எல்லாம் அவன் தன் துணைவர்களையே வைத்திருக்கிறான். திக்குகளில் அவனுடைய படைவீரர்கள் இருக்கிறார்கள். அங்கெல்லாம் சென்று மோதுகிறது கிங்கிணி ஓசை. திக்குச் செவிடுபட்டுப் போகும்படி அந்த ஒலி பரவுகிறது.

திக்குச் செவிடுபட்டு

மலைகள் அதிர்தல்

மேருமலை நடுவில் நிற்க எட்டுப் பெருமலைகள் சுற்றிலும் நிற்கின்றன. இந்த ஒலி அவற்றையும் அதிரச் செய்கிறது. ஒலியின் சிறப்பையும் வேகத்தின் கடுமையையும் அளவுகாட்ட, மேருவையும் எட்டு மலைகளையும் அவை நடுங்க வைத்தன என்று சொல்வது அருணகிரிநாதருக்கு வழக்கமாகிவிட்டது. மயில் நடக்கும்போது அதன் பீலிக் காற்றுப் பட்டதும்,

"அசைந்தது மேரு; அடியிட எண்
திசைவரை தூள்பட்ட"

என்று பாடினார். சேவல் சிறகை அடித்துக் கொண்ட போது என்ன நிகழ்ந்தது?

"இடைபட்ட குன்றமும் மாமேரு வெற்பும்
இடிபட்டவே"

என்று அவர் பாடுகிறார். அந்தக் காற்றின் கடுமையை இந்த நிகழ்ச்சியினால் உணரும்படி செய்கிறார். 'அணுகுண்டு வெடித்தது; அதன் ஆற்றல் இத்தகையது' என்று சொல்ல வருகிறவர்கள் அதனால் விளைந்த விளைவையே சொல்கிறார்கள். ஒரு கணத்தில் மூன்று லக்ஷம் பேர்கள் இறந்தார்கள் என்கின்றார்கள். அது போலவே அருணகிரிநாதரும் விளைவைக் கண்டு நிகழ்ச்சியையும் அதற்குக் காரணமான பொருளையும் சிறப்பிக்கிறார்.

கிங்கிணி ஓசை பகைவரை நடுங்கச் செய்தது; திக்குச் செவிடு படும்படி செய்தது; எட்டு மலைகளையும், கனகக் குன்றாகிய மேரு மலையையும் அதிரச் செய்தது.

எட்டுவெற் பும்கனகப்
பருவரைக் குன்றும் அதிர்ந்தன. அந்த வெற்பு ஒவ்வொன்றிலும் சூரபன்மனுடைய ஆட்கள் இருந்தார்கள். சுரர்கள் வாழும் ஆலயமாக இருந்த மேரு இப்போது அசுராலயமாயிற்று. ஆட்சியை மேற்கொள்கிறவன் முக்கியமான நகரங்களையும் கோட்டைகளையும் கைப்பற்றிக் கொண்டு, அங்கங்கே நம்பிக்கையுள்ள அதிகாரிகளை வைப்பது வழக்கந்தானே? சூரனும் அப்படியே செய்தான். எங்கே பார்த்தாலும் தன்னுடைய தளபதிகளையே வைத்தான்.

முருகன் முன் அறிவிப்பு இல்லாமல் தண்டிக்கிறவன் அல்ல. 'நம் அழுகையைக் கேட்டுத் திருந்தாத அசுரர்கள் இந்த ஒலியைக் கேட்டாவது தம் கொடிய செயலிலிருந்து நீங்கட்டும்’ என்பது அவன் திருவுள்ளம். அதனால் அசுரர்கள் இருக்கும் இடங்களுக்கெல்லாம் பரவித் தன் கிண்கிணியோசை கேட்கும்படி செய்தான்.

இந்த ஒலி அவர்களை நடுங்கச் செய்தது. அவர்கள் வாழும் இடங்களை அதிரச் செய்தது. அவர்கள் அதைக் கேட்டுத் திருந்தினார்களா? அதுதான் இல்லை. சில நேரம் அந்த அச்சம் இருந்தது. பிறகு பழையபடி தம்முடைய காரியங்களை மேற்கொண்டார்கள்.

வைராக்கிய வகை

நாமும் இந்த நிலையில்தான் இருக்கிறோம். 'இந்த உலகம் நிலையாது; வாழ்க்கை நிலையாது; நாமும் ஒருநாள் இறந்து படுவோம்; காலன் வந்து நம்மைக் கட்டி இழுத்துப் போவான்' என்ற நினைவு நமக்கு உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. யாரேனும் இறந்தால் இந்த நினைவு எழுகிறது; அச்சம் உண்டாகிறது.

யாரேனும் பெரியவர் உலகத்தின் உண்மையை எடுத்துச் சொல்லிச் சொற்பொழிவு ஆற்றும்போது நமக்கு நினைவு உண்டாகிறது; அஞ்சுகிறோம். 'இனி, போகிற வழிக்குப் புண்ணியம் தேடவேண்டும்' என்ற எண்ணங்கூட உண்டாகிறது. ஆனால் அது சில நிமிஷங்களிலே மறைந்து விடுகிறது.

இந்த இரண்டுவிதமான நிகழ்ச்சிகளிலும் உண்டாகிற உணர்ச்சியை ஸ்மசான வைராக்கியம், புராண வைராக்கியம் என்று சொல்லுவார்கள். இந்த வரிசையில் மற்றொன்றும் உண்டு. அதைப் பிரசவ வைராக்கியம் என்று சொல்லுவார்கள். குழந்தையைப் பெறும்போது உண்டாகும் வேதனையைப் பொறுக்க முடியாத தாய், இனித் தன் மணாளனோடு இன்புறக் கூடாது என்று தீர்மானம் செய்து கொள்கிறாள். ஆனால் குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் அந்த வேதனை மறந்து போய்விடுகிறது.

இன்னும் ஒரு வைராக்கியம் உண்டு. அது நாயின் வாழ்க்கை யோடு சம்பந்தம் உடையது. நாய், "இனிமேல் நாம் எச்சில் இலையைத் தொடவே கூடாது" என்று முடிவு செய்து கொண்டு குப்பை மேட்டில் படுத்திருக்குமாம். சொத் என்று எங்கேனும் எச்சில் இலை விழுகிற ஒலி காதில் பட்டால் இந்த எண்ணத்தை மறந்து உடம்பை உதறிக் கொண்டு புறப்பட்டுவிடுமாம். இதைச் சுவான வைராக்கியம் என்று சொல்வது வழக்கம். ஒரு கணத்துக்கு நிற்கிற வைராக்கியங்கள் இவை.

அசுர இயல்பு

மனிதனிடம் இருக்கும் இந்த இயல்பு அசுரர்களிடமும் இருக்கிறது. அப்படிச் சொல்வதைவிட அசுரர்களிடம் உள்ள நிலையற்ற தெளிவு மனிதனிடம் இருக்கிறது என்று சொல்லலாம். ஒவ்வொரு மனிதனிடமும் அசுர இயல்பும் தேவ இயல்பும் கலந்தே இருக்கின்றன. அசுர இயல்புகளைக் கொஞ்சங் கொஞ்சமாகப் போக்கிக் கொண்டு வந்தால் நன்மை உண்டாகும்.

முருகன் அழுகையொலி கேட்டுப் புலம்பிய அசுரர்கள் அன்றோடு அந்த அச்சத்தை மறந்து போனார்கள். மறுபடியும் எச்சரிக்கை செய்வதுபோல முருகன் கிங்கிணியொலியை எழுப்பினான். அப்போதைக்கு அவர்கள் அஞ்சினார்கள். அவ்வளவுதான்.

தேவர் மகிழ்ச்சி

இறைவனுடைய கிங்கிணி ஓசையைக் கேட்டு அஞ்சினவர்களும் நடுங்கினவர்களும் இருக்கட்டும். யாரேனும் அதைக் கேட்டு மகிழ்ந்தார்களா? அசுரர்களுடைய அச்சத்தில் மகிழ்ச்சியும் முருகனுடைய அவதாரத்தில் தைரியமும் அடைபவர்கள் தேவர்கள். அவர்கள், "நம்மைக் காப்பாற்ற வந்த பெருமான் குழந்தைத் திருவிளையாடல்களைச் செய்து கொண்டு வளர்கிறான்" என்று எண்ணி மகிழும்படி அந்தக் கிங்கிணியோசை செய்தது. இந்தச் சூரபன்மனுடைய கொடிய ஆட்சியைப் போக்க இயலாமல், நாம் நம் இன்ப வாழ்வை இழந்து திண்டாடுகிறோமே! இனியும் நமக்கு எந்த நிலை வருமோ என்று அஞ்சிக் குலைந்து கொண்டிருந்த தேவர்களுக்கு இப்போது அந்த அச்சம் போய் விட்டது; நம்பிக்கை உதயமாயிற்று.


   தேவர் பயம் கெட்டதே.

சூரியன் வானத்தில் தோன்றும்போது மக்கள் துயிலுணர்ந்து எழுந்து சுறுசுறுப்போடு வேலை செய்யப் புகுகிறார்கள். பறவைகள் சிறகையடித்துக்கொண்டு பறக்கின்றன. தாமரை மலர்கள் மலர்கின்றன. ஆனால் எலும்பில்லாத புழுக்கள் இறக்கின்றன. குவளை கூம்புகிறது. ஆந்தை அஞ்சுகிறது. அவை தம் இயல்புக்கு ஏற்ற பயனை அடைகின்றன. அவ்வண்ணமே, இங்கே முருகன் திரு வரைக் கிண்கிணி ஓசையைக் கேட்டுத் தேவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் முக மலர்ச்சி பெறுகிறார்கள். அதுகாறும் தாம் பெற்றிருந்த அச்சத்தை உதறுகிறார்கள். ஆனால் அசுரர்களோ வாட்டமுறுகிறார்கள். அதுகாறும் அவர்கள் அறியாத அச்சமும் நடுக்கமும் அவர்கள் பால் உண்டாகின்றன.

முருகன் பராக்கிரமம்

முருகன் கிங்கிணி ஒசையின் இனிமையை அருணகிரிநாதர் இங்கே சொல்லவில்லை. எல்லாக் குழந்தைகளின் கிண் கிணிக்கும் அந்த இனிமை உண்டு. அது கிங்கிணியின் இயல்பேயன்றி, குழந்தையின் பெருமை அன்று. முருகன் திருவரைக் கிங்கிணி ஒசையினால் விளையும் விளைவுகள் அந்தக் கிங்கிணியால் விளைந்தவை அல்ல. முருகனால் விளைந்தவை. கிங்கிணி முருகன் அணிந்ததாக இருப்பதனால் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்தன. ஆதலின் கிங்கிணியைப் புகழும் முகத்தால் முருகனுடைய பராக்கிரமத்தையே அருணகிரிநாதர் எடுத்துக் காட்டுகிறார்.


   ஒருவரைப் பங்கில் உடையாள்
     குமாரன் உடைமணிசேர்
   திருவரைக் கிங்கிணி ஓசை
     படத்திடுக் கிட்டரக்கர்


   வெருவரத் திக்குச் செவிடுபட்
      டெட்டுவெற் பும்கனகப்
   பருவரைக் குன்றும் அதிர்ந்தன
      தேவர் பயம்கெட்டதே.

(ஒப்பற்றவராகிய சிவபெருமானைத் தன்னுடைய வலப்பாகத்தில் உடைய உமாதேவியின் குமாரனாகிய முருகனது உடைமணியென்னும் அணி அணிந்த அழகிய இடையில் கட்டிய கிங்கிணியின் ஒசை காதிலே பட, அசுரர் திடுக்கிட்டு அஞ்ச, திசைகள் செவிடுபட்டு எட்டு மலைகளும் பொன்னாலான பெரிய சாரலையுடைய மேருமலையும் அதிர்ந்தன; தேவர்களின் பயம் அழிந்தது.

ஒருவர் - ஒப்பற்றவர். உடையாள் - உமாதேவி. உடைமணி - இடையில் அணியும் ஒருவகை ஆபரணம். அரை - இடை. அரக்கர் - ராட்சதர்; இங்கே அசுரரைக் குறித்தது. வெருவர-அஞ்ச. கனகம் - பொன். வரை - மலைப்பக்கம்.)


கி.வா.ஜ. அவர்களுக்கு சிறு வயதிலேயே தமிழ் இலக்கியங்கள் மீது பற்று ஏற்பட்டது. டாக்டர் உ.வே. சுவாமிநாதையர் அவர்களுயை தலை மாணாக்கராக இருந்து தமிழ் பயின்று, அவர்களது அருந்தமிழ் பணிக்கும் துணை நின்று, 'கலைமகள்' மாதப் பத்திரிகையின் ஆசிரியராக ஐம்பதாண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார்.

தமிழ் ஆராய்ச்சி, இலக்கியம், பக்தி, இலக்கியங்கள், கவிதைகள், நாடோடிப் பாடல்கள், பழமொழிகள் என இவரே எழுதியும், தொகுத்தும் அளித்துள்ள நூல்கள் இருநூற்றுக்கும் மேற்பட்டனவாகும்.

குறிப்பாக, இலக்கணத்துக்கு விளக்கம் தருவதில் வல்லவர். சிலேடையாய்ப் பேசுவதில் இவருக்கு நிகர் இவரே.

எந்த இலக்கிய நூலிலே சந்தேகம் ஏற்படினும் உடனடியாக விளக்கம் கி.வா.ஜ. அவர்களிடமிருந்து கிடைக்கும் என்பதைத் தமிழ் அறிஞர்கள் பலரும் அறிவர்.

இவர், பல காலமாக உள்ள ஐயங்களைப் போக்குகின்ற வகையில், கலைமகள் மாத இதழில் பதிலளித்து வந்தார். இவை என்றென்றும் நமக்குப் பயன் விளைக்கக் கூடும்.