உள்ளடக்கத்துக்குச் செல்

கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்/008-010

விக்கிமூலம் இலிருந்து



அழகிப் போட்டியில்
வென்று திரும்புவதைப் போல்
என் எதிரே நின்று
“நான் எப்படி?” என்கிறாய்.

வேண்டுமென்றே
“உலகத்தில் நான் சந்தித்த
இரண்டாவது அழகி நீதான்”
என்கிறேன்.

அடுத்த வினாடியில்
ஐயமும் பொறாமையும்
கூடிப்பெற்ற கோபக் குழந்தை
உன் முகத்தில் தவழ்கிறது.
“அந்த முதல் அழகி யாரோ?”
என்று கேட்கிறாய்.

இல்லாத ஒருவனுக்கு
இருந்ததாகச் சொல்லப்படும்
நெற்றிக் கண்ணைப் போன்ற
உன் கேள்வியால் நடுங்குகிறேன்.

“வா, அவளைக் காட்டுகிறேன்”
என்று உன்னை
ஏரிப்பக்கம்
அழைத்துச் செல்கிறேன்.

அவள் அழகிய முகத்தைச்
சுட்டிக் காட்டுகிறேன்.

அவ்வளவுதான்.
அலையின் உச்சியில் துள்ளும் மீனைப்போல்




கோபத்தின் உச்சியில்
உனக்குச் சிரிப்பு வருகிறது.

உடனே ஒரு கல்லை எடுத்து
அவள் முகத்தில் வீசுகிறாய்.

பாவம்,
அவள் பயந்து மறைந்து விடுகிறாள்.
தண்ணீர் கலங்குகிறது.



65




“நான் மருத்துவம் படிக்கலாம் என்று பார்க்கிறேன்”
என்கிறாய்.

நான் மகிழ்ச்சிக் கரையின் விளிம்பில் நின்றவாறு,
“எனக்கு ஒர் ஆசை;சொல்லவா” என்கிறேன்.

“சொல்லுங்கள்” என்கிறாய்.

“ஒரு நாள்...
நீ மருத்துவப் பட்டம் பெற்றுவரும் முதல்நாள்.....

மடி நிறைய ரோஜா மலர்களைப்
பறித்து வைத்திருக்கும்
தோட்டக்காரன் மகள் போல்
என் மனம் நிறைய உன் நினைவுகளைச்
சேர்த்து வைத்திருக்கும் செருக்கில்
மயங்கி வருகிறேன்.
என்னை யறியாமல் ஒரு சிரிப்பு...
வெடித்த மாதுளம் பழம் போன்ற
உன் கன்னத்தை வருடுவதாகவும்
நீ வெட்கி ஒதுங்குவதாகவும் ஒரு நினைப்பு...
இந்தப் புனித போதையில் ஆடிப்
பாதையின் நடுவே வந்து விடுகிறேன்;
எதிரே
ஒரு தெய்வப் பெண்
மனிதவாகனம் ஒன்றை
அசுர வேகத்தில்
ஒட்டி வருகிறாள்.
நான் மோதி வீழ்கிறேன்.

விழித்துப் பார்க்கும்போது
மருத்துவ மனையில் இருப்பது புரிகிறது.
நீ என் அருகே உலர்ந்த கண்ணிரோடு நிற்கிறாய்;
‘உங்கள் உயிரைக் குடிக்கப் பார்த்தேனே..
பாவி நான்’ என்று அழுகிறாய்.






“வருந்தாதே... நீ பட்டம் பெற்றவுடன்
முதன் முதலாக எனக்கு வைத்தியம் செய்ய
உண்மையில்
நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்
என்கிறேன்...”

நான் இப்படிக் கூறிக் கொண்டிருக்கும்போதே
நீ குறுக்கிட்டு
“நான் மருத்துவம் படிக்கப் போவதில்லை”
என்கிறாய்.

நான் பதறிப்போய் “ஏன்” என்கிறேன்,
“எவ்வளவு அழகாகக் கதை சொல்கிறீர்கள்...”
பேசாமல் உங்களிடம்
இலக்கியம் படிக்கப் போகிறேன்”
என்கிறாய்.

நீ சரியான குறும்புக்காரி!



66




நானும் நீயும் உரையாடுகிறோம்;

“நெடுங்கடலில் மூழ்கி
நித்திலங்களை எடுத்துத் தொடுத்து
உனக்கு மாலை சூட்ட விரும்புகிறேன்:
நீ ஏற்றுக் கொள்வாயல்லவா?”

நீங்கள் பெரிய தீரர்தான்;
ஆனால் அந்த முத்துமாலை எனக்குவேண்டாம்”

“வானத்தில் ஏறி
விண்மீன்களைக் கொய்துகட்டி
உனக்கு மாலை அணிவிப்பேன்;
அதையாவது ஏற்றுக் கொள்வாயல்லவா?”

“நீங்கள் பெரிய கவிஞர்தான்;
ஆனால் அந்த நட்சத்திரமாலை
எனக்கு வேண்டாம்.”

“ஓ... சாதாரண மலர் மாலையைத்தான் நீயும் விரும்புகிறாயா?”

“இல்லை. அதுவும் வேண்டாம்.”

“இப்படி எதுவும் வேண்டாமென்று மறுத்தால்
உன் கண்கள் என் கண்ணிரையல்லவா -
சந்திக்கக் கூடும்”

“எனக்கு அந்தக்
கண்ணிர் மாலைதான் வேண்டும்”



67

(Upload an image to replace this placeholder.)

(Upload an image to replace this placeholder.)



“நீங்கள் ஏன்
இந்த மரண விளையாட்டில் ஈடுபட்டீர்கள்?
எந்த உணர்ச்சியும் எல்லை மீறும்போது
உங்களால் தாங்க முடியாதே

ஒரு நாள்
என்னை மறந்து விடுங்கள்,
நான் வேறு ஒருவரை..
என்று என் நாவினால் சொல்கிறேன்
என்று வைத்துக்கொள்ளுங்கள்..
அப்போது உங்கள் இதயம்
துன்பக் கத்திரியால் வெட்டுப்பட்டுத்
துடிதுடிக்காதா?

அல்லது
நீங்கள் எதிர்பார்க்காதவாறு,
நாளையே எனக்கு மாலை சூட்டலாம்
என்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்..
அப்போது உங்கள் இதயம்
ஆனந்த மின்னலின் அதிர்ச்சியால்
படபடக்காதா?

எப்படியும்
உங்கள் உயிருக்கு உறுதி இல்லையே!
நீங்கள் ஏன்
இந்த மரண விளையாட்டில் ஈடுபட்டீர்கள்?”

நீ கேள்வியை எழுப்பிவிட்டுப் போகிறாய்.
நான் தனிமையில் புலம்புகிறேன்;

“நான் ஏன்
இந்த மரண விளையாட்டில் ஈடுபட்டேன்.”



68


ஒரு நள்ளிரவில்
அந்த நந்தவனத்தில் இருக்கிறேன்
ஊமை இருட்டின்
மெளன அழகை
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

என் ஏகாந்தத்தைக் கலைக்கும் வண்ணம்
நீ ஓடி வருகிறாய்.
காரணம் புரியாத காரிருள் என்மேல் படிகிறது
“இந்த நேரத்தில்
இப்படி வரலாமா?” என்கிறேன்.

“ஏன் பதறுகிறீர்கள்?
ஊர் வாய்க்குப் பயப்படுகிறீர்களா!” என்கிறாய்,

“ஊர் வாய்க்கு மட்டுமல்ல;
நம்மையும் மீறி இந்த உடல்
பசி கொள்ளத் தொடங்கினால்
என்ன செய்வது...”
என்கிறேன்.

“நீங்கள் உடலைப் பற்றியே நினைக்கிறீர்கள்.
நானோ என் ஆன்மாவை
உங்கள் திருவடிகளில்
சமர்ப்பிக்க ஓடி வந்திருக்கிறேன்”
என்கிறாய்.

நீ என் பார்வையில்
நெடுவேள் குன்றம்போல்
நிமிர்ந்து நிற்கிறாய்.
என் குற்றமுள்ள நெஞ்சத்தின் சார்பாக
நான் தலை குனிகிறேன்.


69

ஓர் அந்தியில்,
பழக்கமான அந்தப்
பசும்புல் கம்பளத்தில் அமர்ந்தவாறு
நாம் கண்களின் மொழியைக்
கெளரவப் படுத்திக் கொண்டிருக்கிறோம்.

யாரோ ஒருவன் தடையாய் வருகிறான்.
வாயைத் திறக்கிறான்;

"நான் தேவன்.
இதோ, இந்தக் கனியைக் கொடுக்கவே வந்தேன்;
இதை உண்டால்
உன்மேனி,
சுக்கைப்போல் உலராது;
உன் இளமை
கடற்கரையில் பதிந்த அடிச்சுவட்டைப்போல்
விரைவில் அழியாது.
ஒவ்வோர் இரவும் நீ உறங்கும் போது
உன்னுள் பரவும்
நரையும் திரையும் மூப்பும்
உன்னை விட்டு ஓடும்.
ஓராயிரம் ஆண்டுகள்
யயாதியைப் போல்
நீ வாலிபத்தின் வாசனையை
நுகர்ந்து கொண்டிருக்கலாம்.
இந்தா, பெற்றுக்கொள்;
இதற்குப் பதிலாக
இந்தக் கன்னியைத் துறந்துவிடு"

வந்தவன் வாய் ஒருவாறு ஓய்கிறது.

நான் அமைதியாகச் சிரிக்கிறேன்;


"நீ கண்ணாடியைக் காட்டி
வைரத்தை வாங்கப் பார்க்கிறாய்
ஆபரணத்தை நீட்டி
மானத்தை உரியக் கருதுகிறாய்.
உன் கனியோ
ஓராயிரம் ஆண்டு வாழ்வோ எனக்கு வேண்டாம்.
என் காதலியோடு வாழும் ஒவ்வொரு வினாடியும்
ஓராயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாக நிறைவடைவேன்.
நீ தேவனோ இல்லையோ,
உன் கனிக்காக என் வாழ்வை விற்றுவிடும்
கயவன் நான் இல்லை”
என்கிறேன்.

நீ என்னைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறாய்;
என் உடல் நரம்பு ஒவ்வொன்றிலும்
நளினமான நாதம் பிறக்கிறது.

இதுவும் ஒரு கனவுதான்!
ஒரு கற்பனைதான்.

இப்படி எத்தனை கனவுகள்...!
எத்தனை எத்தனை கற்பனைகள்!


70