உள்ளடக்கத்துக்குச் செல்

கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்/009-010

விக்கிமூலம் இலிருந்து


 Tell me now. What flame is this
     that burns within my bosom
      Consuming my strength and
melting my hopes and my desires?
                  _Kahlil Gibran
  



கதையல்ல; அமைத்துக் கொள்ளலாம்




நான் துயில்கிறேன்.

நீ வருகிறாய்; வாரி அணைக்கிறேன்
ஒரு மல்லிகை மாலையைப் போல்
உன்னை எடுத்துப் படுக்கையில் வைக்கிறேன்.
உன் பக்கம் வந்து அமர்கிறேன்.

அப்போது
யாரோ கதவைத் தட்டும் ஒலி கேட்கிறது.
விழித்து விடுகிறேன்.
என் இனிய கனவு கலைந்து விட்டதே
என்று கோபம் கொள்கிறேன்.
வேண்டுமென்றே
கதவைத் திறக்காமல் இருக்கிறேன்.
இரண்டு மூன்று முறை வெளியே
முயற்சி நடக்கிறது;
தோல்வியில் முடிகிறது.

சிறிது நேரம் சென்று
சாளரத்தின் வழியாகப் பார்க்கிறேன்;
தூரத்தில் போய்க்கொண்டிருக்கும் உருவம்,
உன்னுருவமாக இருக்கக்கண்டு
அதிர்ச்சியடைகிறேன்.

கனவில் வந்த நீ
கனவு கலைந்ததால்
போய்க் கொண்டிருக்கிறாயா?
அல்லது
நான் கனவில் மூழ்கியிருக்கிறேன் என்று
நனவில் வந்த நீ திரும்பிப் போகிறாயா?

நான் குழப்பமடைகிறேன்.



71


நான் பகலைக் காட்டிலும் இரவை வரவேற்பேன்.
விழிப்பைக் காட்டிலும் துயிலை விரும்புவேன்.
நனவைக் காட்டிலும் கனவை யாசிப்பேன்.

இரவு மண்டபத்தில்
துயில் மேடையில்
கனவு நாடகம் நடைபெற வேண்டும்;
அதில் நீ நாயகியாக வர வேண்டும்.
இந்த வாழ்வு மட்டும் நிரந்தரமாகக்
கிடைத்தால் போதும்.

ஆனால்
கிடைப்பதாகத் தெரியவில்லையே!

இரவு என்னவோ ஒழுங்காக வருகிறது.
ஆனால்
எல்லா இரவுகளிலும் துயில் வருவதில்லையே!
எப்போதும் கனவு வருவதில்லையே!
துயிலும் கனவும் சேர்ந்து வந்தாலும்
பல வேளைகளில் நீ வருவதில்லையே!

என்மேல் உனக்கு இரக்கமில்லையே!


72

இரண்டில் ஒன்று சொல்லி விடு
இப்போது என்னால்
எதையும் தாங்கிக்கொள்ள முடியும்

இரண்டில் ஒன்று சொல்லி விடு
எனக்காக இன்னொருத்தி
காத்துக் கொண்டிருக்கிறாள்.
உன் முடிவைத் தெரிந்த பிறகுதான்
அவளிடம் செல்ல வேண்டும்.

அவள் ஊருக்கு வெளியே
நின்று கொண்டிருக்கிறாள்
எனக்காகக் கல்லால்
ஓர் அழகிய அறை
கட்டத் தயாராயிருக்கிறாள்

அவள் பெயர்.
அவள் பெயர்.
மரணம்

73

நீ தாமதிக்காதே!

தேரோட்டம் முடிந்தபிறகு
திருவிழாக் காணவரும்
ஒரு பக்தனைப் போல்

வண்டி போன பிறகு
நிலையம் வந்து சேரும்
ஒரு பயணியைப் போல்

நோயாளி மடிந்த பிறகு
மருந்து வாங்கி வரும்
ஒரு சொந்தக்காரனைப் போல் -

நீ காலங்கழித்து வராதே;
பிறகு வருந்தாதே!

74

என் ஆசைகளைப்
பாறைமேல் முளைக்கும் புற்களைப் போல்
வேகமாக உலர்ந்து போகவிடாதே

என் நம்பிக்கைகளை
வயல்களில் முளைக்கும் களைகளைப் போல்
கிள்ளி எறிந்து விடாதே

என் கனவுகளையும் கற்பனைகளையும்
ஒன்றுக்கும் உதவாத துண்டுக்
காகிதங்களைப் போல்
கிழித்தெறிந்து விடாதே


75



உன் வீட்டுக்குப் போகும் பாதையில்
சுடுகாடு இருக்கிறது.

நான் உரிமையோடு
உன் வீட்டுக்கு வரவேண்டும்
என்று ஆசைப்பட்டேன்.

ஆனால்
சுடுகாட்டிலேயே நான் தங்கிவிட வேண்டும்;
அதைத் தாண்டி வரவேண்டாம்
என்று நீ ஆசைப்படுகிறாய்.. இல்லையா?



76



நான்,
உன் முகத்தைத்
தாமரை என்று சொன்னால்
பொய் என்று சொல்;

உன் நெற்றியைப்
பிறை என்று சொன்னால்
பொய் என்று சொல்;

உன் இதழ்களைக்
கோவைப் பழங்கள் என்று சொன்னால்
பொய் என்று சொல்;

இப்படி
அடி முதல் முடி வரை
உன்னை அழகழகான வார்த்தைகளால்
அற்புதமான உவமைகளால்
வருணித்தால்
அவற்றையெல்லாம்
பொய் என்று சொல்;
வேண்டாம் என்று சொல்லவில்லை.

ஆனால்... ஆனால்
உன் இனிய வாயால்
என் காதலை மட்டும்
பொய் என்று சொல்லிவிடாதே!



77



குறைந்த அளவு
நீ இந்த வார்த்தையாவது கொடு.

நீ என்னைக் கைபிடிக்க வேண்டாம்;
காதலித்தால் போதும்.

நீ என்னைக் காதலிக்கக்கூட
வேண்டாம், வேண்டாம்;
அன்பு காட்டினால் போதும்.

நீ என்னிடம்
அன்பு காட்டாவிட்டாலும் பரவாயில்லை.
என்னை வெறுக்காமல் இருந்தால் போதும்.

குறைந்த அளவு
நீ இந்த வரத்தையாவது கொடு.



78