கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்/010-010

விக்கிமூலம் இலிருந்து



நீ என்னை விட்டுப் பிரியப் போகிறாயா?

செப்புக் கம்பிகளில் மின்சாரத்தை
ஊடுருவ வைத்துவிட்டு
விஞ்ஞான வேலைக்காரன்
விலகிக் கொள்வதைப் போல்
என் சிந்தனை அணு ஒவ்வொன்றிலும்
உன் ஆதிக்கத்தை ஊடுருவ வைத்து விட்டு
நீ விலகப் போகிறாயா?

கப்பல் எவ்வளவு பெரிதாகப் போட்டாலும்
கணப் பொழுதில் காணாமற் போகும்
தண்ணிர்ப் பாதையைப் போல்
என்னைவிட்டு
எங்கோ போகப் போகிறாயா?

பிழைக்கப் போன இடத்தில்
தன் கணவன் கள்வன் என்று
குற்றம் சாட்டப் பட்டதோடு
கொலையும் செய்யப்பட்ட
கொடுமையைக் கேட்டுக்
குலை நடுங்கிய ஒரு பத்தினியைப் போல்
என்னை நடுங்கவைக்கப் போகிறாயா?

நீ என்னை விட்டுப் பிரியப் போகிறாயா?

 

79



என்னைப்பார்.

ஏகாதிபத்தியத்தின்
கொடுமைக்கு இரையாகும்
ஒரு சிற்றரசைப்போல்
வாடி வருந்தும் என் மேனியைப் பார்.

முதலாளித்துவத்தின்
சுரண்டலுக்குப் பலியாகும்
பாட்டாளி வர்க்கம் போல்
சாரம் இழக்கும் என் இளமையைப் பார்.

நிலப் பிரபுத்துவத்தின்
நீசக் கரத்தில் சிக்கிக் கிடக்கும்
கூலி விவசாயிகள் குடும்பம் போல்
வெந்து பொசுங்கும் என் வாழ்வைப் பார்.

பார்த்து விட்டுப்போ!

 


80

(Upload an image to replace this placeholder.)

(Upload an image to replace this placeholder.)



என்னை மன்னித்துவிடு,
வேதனையில் வெளிப்படுத்தும் என் சொற்கள்,
தேள்களாகவும் அரவங்களாகவும் தோன்றினால்
என்னை மன்னித்துவிடு.

நீராடும் பொய்கை என்று
நீ என்னை நம்பி வந்தபோது
நான் உனக்குச்
சேறாகத் தென்பட்டிருந்தால்
என்னை மன்னித்துவிடு.

பிரிவின் வலிய கையில்
பிடிபட்டிருக்கும் இந்த நேரத்தில்
என் குற்றங்களை மறந்து
கொஞ்சம் கருணை காட்டு.
துக்கில் தொங்கவிருக்கும் கைதி ஒருவனின்
கடைசி ஆசையைப் பூர்த்தி செய்யும்
ஒரு பழங்கால மன்னனைப் போல் நடந்துகொள்;
என் இறுதி வேட்கையை நிறைவேற்று.

உன் மனத்தில்
வசந்த மண்டபம் அமைக்கவந்த நான்
இதோ மயான வெளியை நோக்கிப்
போகிறேன்.

நீ தினமும் கண் விழித்ததும்
நான் உறங்கும் மண்ணைப் பார்த்து
ஒரு பெருமூச்சு விடு;

ஆண்டுக்கு ஒருமுறை
நீயே நீரூற்றி வளர்க்கும்
செடி கொடிகளின் சிரிப்புகளை
என் சமாதியின்மேல் துவு..,
அது போதும்; அது போதும்.

 
81
 


நான் புறப்படப்போகிறேன்
என்று தெரிந்ததும்
என் நேயர்கள் எல்லோரும்
என் அருகில் வருத்தமாக நிற்கிறார்கள்;

"பேரவைகளிலும்
கலை இலக்கியப் பெருமன்றங்களிலும்
உன் புகழ் எதிரொலிக்கும்
என்று எதிர்பார்த்தோம்;
கிணற்றுக்குள் கேட்கும் குரல்போல்
அது குறுகி அடங்கி விட்டதே;

ஜனசக்தியின் ஒளியில் அரும்பி
ஒரு மகாகவியாக
மலர்ந்து கொண்டிருந்த நீ
இடையில் இப்படி
ஒரு பலவீனத்தின் கரம்பட்டுக்
கருகி விட்டாயே!

சரி...ஏதாவது
விட்டு விட்டுப் போகிறாயா?”
என்கிறார்கள்.

நான் சொல்கிறேன்;
அவளும் நானும் சந்தித்த
அழகுகள் கூடிக் குலாவும்
அந்தப் பாதையை விட்டுச் செல்கிறேன்

அந்தப் பாதை நெடுக
நாங்கள் நடக்கும் போது
குளிர்ந்த நிழலையும்

 


கூடவே பூக்களையும் காய்களையும்
துவிக் கொண்டிருந்த
வேப்பமரங்களை விட்டுச் செல்கிறேன்.

அந்தப் பாதைக்கு நேர் உச்சியில்
அருட்கைகளாகத் தோன்றும
ஐப்பசி மேகங்களை விட்டுச் செல்கிறேன்.

அந்தப் பாதையிலே வளர்ந்த
வசீகரமான கனவுகளையும்
கற்பனைகளையும்
விட்டுச் செல்கிறேன்”

நான் புறப்படுகிறேன்.

 
82



ஓர் ஆன்மாவின் யாத்திரை அடங்கப் போகிறது.

ஒரு தேவகானம் ஒடுங்கப் போகிறது.

ஒரு மன்மதப் பந்தல் சரியப் போகிறது.

ஒரு துய கலைத்திரையில்
ஓடிக் கொண்டிருந்த
ஊமைப் படம்
முடியப் போகிறது...

முடியப் போகிறது.

 

83

உலகபந்தம் என்னும்
ஒரே சக்தியின் பிடியிலிருந்து
மீற முடியாமல் - அதே நேரத்தில்
மீற வேண்டும் என்னும்
வேகத்தையும் கட்டுப்படுத்த முடியாமல்
தவிக்கும் ஓர் ஆன்மா,
ஒரு தெய்வாம்சம் பொருந்திய பேரழகை
அள்ளி அணைக்கும்
ஆர்வ வெறியில் அலைகிறது.
ஆனால்... அந்தப் பேரழகு
அதன் கைகளில் சிக்காமல் நழுவுகிறது
ஆன்மா துடிக்கிறது,
அந்தத் துடிப்பின்...
அலை ஓசைகளை இங்கே கேட்கலாம்.