உள்ளடக்கத்துக்குச் செல்

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி/தென்னக அரசியல் அமளி

விக்கிமூலம் இலிருந்து

4. தென்னக அரசியல் அமளி

ங்கில ஆட்சி தென்னகத்தில் வேரூன்ற வகை செய்த பெருநிகழ்ச்சி கருநாடகப் போரேயாகும். அதன் பின்னாளைய விளைவுகளை நோக்க, அதை நாம் ‘தென்னாடு விடுதலை இழந்த வரலாறு’ என்று குறிப்பிடலாம். தென்னாட்டுக்கு அதன் படிப்பினைகள் நிலையானவை. அதன் எச்சரிக்கைகள், காலத் திரையில் ஆழப் பதிந்துள்ளவை.

விடுதலை இழப்பால் பயன் இழந்தவர்கள் தென்னாட்டு மக்கள். பயன் அடைந்தவர்கள் ஆங்கிலேயர். ஆனால்,, பயன் அடையத் திட்டமிட்டவர்கள் பிரஞ்சுக்காரர்கள். சிறப்பாக, பிரஞ்சுத் தலைவராயிருந்த அந்நாளைய தலை சிறந்த அரசியல் மேதை, டியூப்ளே!

பழம், மரத்தை விட்டு அகன்று விட்டது. ஆனால், அது எய்தவன் கையில் விழவில்லை. அதன் அருமையறியாத மூன்றாவது பேர்வழியின் கை வசப்பட்டு விட்டது. தென்னாட்டு வரலாற்றின் ஒரு முக்கோணப் புதிர் இது.

தென்னகத்தின் விடுதலை வாழ்வு, பிரஞ்சுப் பேரரசாட்சி, ஆங்கில ஆதிக்கம் என்ற மூன்று தலைகளையுடைய முக்கோணச் சக்கரத்தின் சுழற்சியே, கருநாடகப் போராட்டம். முதல் நிகழ்ச்சி நிறைவேறப் பாடுபட்டவன் ஹைதர். மற்றத் தென்னகப் பேரரசுகளும், அரசுகளும் குந்தமாயிருந்திரா விட்டால், அதில் அவன் வெற்றி பெற்ருப்பான். ஆனால், தென்னகத்தின் வேற்றுமைப் பிணக்குகள், இரண்டாம் நிகழ்ச்சிக்கு உதவின.

இரண்டாம் நிகழ்ச்சி வெற்றி பெறக் கனவு கண்டவன் டியூப்ளே. அதை அடைவதற்குரிய துணிவு, அரசியல் நுட்பம் அவனிடம் இருந்தது. புஸி, லாலி போன்ற அவன் படைத் தலைவர்களிடம், அதற்குரிய தலைமைத் திறம், போர்ச் சாதனங்கள், படைத் திறம், வீரம் ஆகிய யாவும் இருந்தன. தவிர, டியூப்ளே தென்னக மக்கள் வீரத்தை அடிப்படையாகக் கொண்டே, பிரஞ்சுப் புகழ்ப் பேரரசு எழுப்ப முனைந்தான். தென்னக மக்கள், மன்னர் மரபுகள் ஆகியவற்றில் அவனுக்குச் செல்வாக்கும், நேசபாசமும் மிகுதியாகவே இருந்தது. ஆனால், இத்தனை வாய்ப்புக்களையும் விழலுக்கிறைத்த நீராக்கின, பிரஞ்சு தாயத்தில் இருந்த வாணிக ஆட்சியாளர்களின் தொலை நோக்கின்மை; நாட்டுப் பற்றற்ற குறுகிய பொறாமைப் போக்கு, ஆகியவை. இவையே, பிரஞ்சு மக்கள் கைப்பட இருந்த பேரரசை, அதனைக் குறிக் கொள்ளாத, அதில் நேரிடையான அக்கறையற்ற ஆங்கிலேயர் வசமாக்கிற்று.

ஆங்கிலேயரிடம், அரசியல் நோக்கம் தொடக்கத்தில் இல்லை. வாணிக நோக்கமே இருந்தது. பிரஞ்சுஆதிக்கம் தம் வாணிகத்துக்குக் கேடு செய்யும் என்பதனாலேயே, அவர்கள் பிரஞ்சு ஆட்சியை எதிர்த்தனர். அத்துடன் அக்காரணத்தால், அரசியல் நோக்கத்தை அவர்கள் ஏற்க வேண்டியதாயிற்று. ஆனால், அதை ஏற்ற பின்பும், அவர்கள் முதல் நோக்கம் அதுவல்ல. ஆட்சி அவர்களுக்கு, வாணிக ஆதிக்கத்துக்கு ஒரு கருவி மட்டுமே. அது கைக்கு வந்த பின், அவர்கள் பிரஞ்சுக்காரரைப் போல, வாணிகத்தைக் கைக் கொள்வதுடனும், புகழ் ஆட்சி செய்வதுடனும் நின்று விடவில்லை.

அவர்கள் ஆட்சியைப் பயன்படுத்தி, தென்னகத்தில் அன்று குவிந்து கிடந்த உலகின் பெருஞ் செல்வத்தைக் கைக்கொண்டு, அதன் மூலம் உலக ஆதிக்கமே நாடினர். அது மட்டுமோ? கைத்தொழில் துறையிலும், தொழில் நுட்பத் துறையிலும், அன்று தென்னகம் உலகத்தில் தலைமை பூண்டு, உலகத்தையே ஆட்டிப் படைத்து வந்தது. அத் தொழில் வளத்தை அழிக்கவும், அதைத் தன் கைவசமாக்கித் தொழில் நாடாக வளரவும், ஆங்கில ஆட்சி இங்கிலாந்துக்கு உதவிற்று.

பிரஞ்சு ஆட்சி ஏற்பட்டிருந்தால், தென்னாடு விடுதலை இழந்து, தளைப்பட்டிருக்கும். ஆனால், அது தங்கத் தளையாகவே இருந்திருக்கும். விடுதலை இழப்பு நீங்கலாக, வேறு எந்தப் பொல்லாப்புக்கும் அது ஆளாகியிருக்காது. நேர் மாறாக, ஆங்கில ஆட்சியின் முழுத் தீங்கு, அது அயல் ஆட்சி என்பது மட்டுமல்ல; அது அரசியல் விடுதலை வாழ்வை மட்டுமின்றி, தென்னகத்தின் பொருளியல் வாழ்வையும், கலை வாழ்வின் பெருமையையும் அழித்தது என்பதே. 18-ம் நூற்றாண்டு வரை, உலகில் இத்துறைகளில் போட்டியற்று, முதன்மை நிலை அடைந்திருந்த தென்னாடு, 19, 20-ம் நூற்றாண்டுகளுக்குள் உலகில் மட்டுமல்ல; கீழ்த் திசையில் கூடக் கடைப்பட்ட நாடாயிற்று. அதன் முதன்மை நிலை, தடம் இல்லாது அழித்தொழிக்கப்பட்டது.

ஹைதரின் பெருமை, அவன் விடுதலை வாழ்வு சரியாமல் காக்க முயன்றான் என்பது மட்டுமல்ல; விடுதலை சரிவுறும் காலத்திலேயே, புதிய விடுதலைக்கு அடி கோலினான் என்பது மட்டுமல்ல ; அவன் முழுப் பெருமை, இவை கடந்த ஒன்று. அவன் தென்னகத்தின் பொருளியல் சரிவு கண்டு, அதைத் தடுக்க அரும்பாடுபட்டான் என்பதே.

ஹைதர் அரசியல் வாழ்வில் நுழைவதற்கு முன்பே, நிஜாமும், ஆர்க்காட்டு நவாபும் விடுதலை வாழ்வின் சரிவு நோக்கிச் சறுக்கத் தொடங்கி விட்டனர்.

நிஜாம் அரசை முதல் முதல் நிறுவியவன் மீர் கமருத்தீன் என்பவன். அவன் தந்தை மொகலாயப் பேரரசின் கீழ், கூர்ச்சரத்தின் மண்டலத் தலைவனாயிருந்தவன். அவன் பாட்டன் ஆஜ்மீர் மண்டலத் தலைவனாயிருந்தவன். ஆனால், அவுரங்கசீப்பின் ஆட்சியின் பின், மொகலாயப் பேரரசு சரியத் தொடங்கிய போது, அவன் தென்னகத்தில் தனியாட்சி நிறுவி, 1713 முதல் 1748 வரை நிஜாம் உல்முல்க் என்ற பட்டப் பெயருடன், தென்னக முழுவதும் மேலாட்சி நிறுவினான்.

அவனுக்குப் பின், அவன் இரண்டாம் புதல்வனான நாஸிர் ஜங்கும், மகள் பிள்ளையான முசபர் ஜங்கும், நிஜாம் அரசுரிமைக்குப் போட்டியிட்டனர். தென்னாட்டின் விடுதலை வீழ்ச்சிக்கு, இந்நிகழ்ச்சியே வித்திட்டது.

நிஜாமைப் போலவே, ஆர்க்காட்டில் தனியாட்சி நிறுவி, 1710.முதல் 1732 வரை சாதத்துல்லா கான் நவாபாக ஆட்சி செய்தான். அடுத்து வந்த நவாப் தோஸ்த் அலிகான் மைசூர் மீது படையெடுத்து, அப்போது மைசூரை ஆண்ட சிக்க கிருஷ்ண ராஜனின் படைகளால் முறியடிக்கப் பெற்றான். அவனுக்குப் பின், ஆட்சி பல கைகள் மாறி வலுவிழந்தது. ஆனால், நிஜாமின் ஆதரவு பெற்று, அன்வருதீன் 1743 முதல் 1748 வரை நல்லாட்சி நடத்தினான். அதன் பின், இங்கும் அரசுரிமைப் போட்டி எழுந்தது. அன்வருதீன் மகனான வாலாஜா—சுராஜ் உத் தெளலா—முகமதலி ஒரு புறமும், தோஸ்த் அலி கானின் மருமகனான சந்தா சாகிப் மற்றொரு புறமும் போட்டியிட்டனர். முகமதலியை நாஸிர் ஜங்கும், சந்தா சாகிபை முசபர் ஐங்கும், பிரஞ்சுக்காரரும் ஆதரித்தனர்.

போரின் முதல் கட்டத்தில், நாஸிர் ஜங்கின் கை மேலோங்கிற்று. கமருத்தீன் இறந்த சமயம், நாஸிர் ஜங் அருகிலிருந்ததால், அவன் அரசிருக்கையை எளிதில் காப்பாற்ற முடிந்தது. மைசூர் மன்னரும், மற்றும் குறுநில அரசரும் அவனை ஆதரித்தனர். பிரஞ்சுப் படையில், அப்போது உட்கிளர்ச்சி இருந்து வந்ததனால், முஸபர் ஜங் புதுச்சேரிக்கு ஓட நேர்ந்தது.

புதிய நிஜாமான நாஸிர் ஜங்கின் ஆணைக்கு இணங்கியே, மைசூர் அரசன் போரில் இறங்கினான். அரசன் சிக்க கிருஷ்ணராஜன் திறமையற்றவனா யிருந்ததால், அமைச்சன் நஞ்சி ராஜனே இது போது, அரசியலை நடாத்தி வந்தான். அவன் முஸபர் ஜங்கின் ஆட்கள் வசமிருந்த தேவனஹள்ளிக் கோட்டையை முற்றுகை செய்தான். மூத்த ஹைதர் சாகிபு வீரப் போர் செய்து மடிந்ததும், ஹைதரும், ஷாபாஸும் திறமையாகப் படை நடத்தி, மூத்த ஹைதரின் இடத்தில் ஷாபாஸ் அமர்வு பெற்றதும், இம்முற்றுகையிலேதான். ஹைதர் தன் கன்னிப் போர் ஆற்றிப் புகழும் ஆதரவும் பெற்றதும் இங்கேயே.

மைசூர்ப் படைகளின் அடுத்த நிகழ்ச்சி ஆர்க்காட்டு முற்றுகையே. நாஸிர் ஜங், முகமதலியை நவாபாக்குவிக்கும் முயற்சியில் தன் படைகளுடன் இதில் ஈடுபட்டான். ஷாபாஸும், ஹைதரும் மைசூர்ப் படைகளை இங்கே நடத்தினார்கள். முற்றுகை வெற்றியடைந்தது. முகமதலி, நவாபாக்கப்பட்டான். நாஸிர் ஜங், வெற்றிப் புகழுடன் அங்கேயே தங்கியிருந்தான். மைசூர்ப் படைகள், இங்கே வீர தீரத்துடனும், கட்டுப்பாட்டுடனும் நின்று போரிட்டது கண்டு, ஆங்கில வரலாற்றாசிரியர்கள் கூட வியப்படைந்துள்ளனர். இதில் புத்தம் புதிய வீரன் ஹைதரின் கை வரிசையே முனைப்பாயிருந்தது என்பது பின்னாட்களிலேயே அவர்களுக்குத் தெரிய வந்தது ஆனால், மைசூர் அமைச்சன் நஞ்சி ராஜன் இவ்வீர இள ஞாயிற்றின் பெருமையை, முற்றிலும் உணர்ந்து கொண்டான். அவனுக்கு மானியம் அளித்து, நிலவரியை நேரிடையாகப் பிரிக்கும் உரிமையும் தந்தான். அத்துடன் மன்னர் பெயரில், தனிப் படை திரட்டும் உரிமையும், அவனுக்குத் தரப்பட்டது. அமைச்சரோடொத்த துணையமைச்சராக அவன் படிநிலை உயர்ந்தது.

1750-க்குள் போர் நாஸிர் ஜங் பகதூருக்கு எதிராகத் திடீரென்று திரும்பிற்று. அரசியல் சூழ்ச்சிகளில் வல்ல டியூப்ளே, தன் கை வரிசையைத் திடுமெனச் செஞ்சிக் கோட்டை மீது திருப்பினான். நவாப்கள் ஆர்க்காட்டைத் தலைநகராகத் தேர்ந்தெடுக்கு முன், சிவாஜி கால முதல் அதுவே தமிழகத்தின் தலைநாயகக் களமாக இருந்து வந்தது. பிரஞ்சுப் படைத் தலைவன் புஸி அதைக் கைப்பற்றியதனால், கடப்பை, கர்நூல் முதலிய பகுதிகளிலுள்ள வலிமை வாய்ந்த குறுநில மன்னர் பிரஞ்சுச் செல்வாக்குக்கு உடன்பட்டனர். அவர்கள் உதவியுடன், நாஸிர் ஜங்கு சூழ்ச்சிப் பொறியில் சிக்க வைக்கப்பட்டான். சின்னாட்களில் அவன், சதிகாரர் கைபட்டு இறந்தான்.

முஸபர் ஜங், இப்போது பிரஞ்சு உதவியுடன் நிஜாமானான். முகமதலி ஆர்க்காட்டை விட்டுத் திருச்சிராப்பள்ளிக்கு ஓட வேண்டியதாயிற்று. இங்கும் அவன் சந்தா சாகிபினால் முற்றுகையிடப்பட்டான். இச்சமயத்தில், முகமதலி ஆங்கிலேயர் உதவி நாடினான். இது முதல், முகமதலி, இறந்து போன நாஸிர் ஜங் மரபினர் ஆகியவர் பக்கமாக ஆங்கிலேயரும் கருநாடகப் போரில் ஈடுபட்டனர்.

பொதுவாக, இச்சமயத்திலும் இதற்குச் சில நாள் பின்னரும், பிரஞ்சுத் தலைவர்களை விட, ஆங்கிலத் தலைவர்கள் அரசியல் திறமையும், போர்த் திறமையும் குன்றியவர்களாகவே இருந்தார்கள். ஆயினும், ஹைதரைப் போலக் குடிமக்கள் மரபிலிருந்து எழுந்த ராபர்ட் கிளைவ் என்ற வீரன், இப்போது ஆங்கிலேயர் மதிப்பை உயர்த்த முன் வந்தான். அவன் அரசியல் கவறாட்டத்தில், எதிர் கவறாட்டமாடி, ஆர்க்காட்டைக் கைப்பற்றினான். முகமதலி மீட்டும் தவிசேறினான்.

ஹைதர் இப்போது போர் வீரனாக மட்டும் செயலாற்றவில்லை. மாநிலத்தின் சூழ்நிலையையும், மைசூரின் நிலையையும் அவன் கூர்ந்து கவனித்தான். பணமும், படை வலிமையும், படைத் துறைச் சாதனங்களும் அன்றைய நிலையில் ஓர் அரசின் உறுதிக்கு மிக மிக இன்றியமையாதவை என்பதை அவன் கண்டான். எனவே, நாஸிர் ஜங் வீழ்ச்சியடைந்ததும், நாஸிர் ஜங்கின் கருவூலமும், படைத் துறைச் சாதனங்களும், எதிர் தரப்பாரிடம் சிக்கி விடாமல், அவன் தடுத்தான். அவற்றைத் தானே கைக் கொண்டு, அவற்றுடன் மைசூருக்கே மீண்டான். சிறிய படை வீரர்களிடையி லிருந்தும், பொது மக்களிடையிலிருந்தும் ஆள் திரட்டி, அவன் தன் படையணிகளைப் பெருக்கிக் கொண்டான். சிறப்பாக மலை நாட்டு மக்களாகிய வேடர்கள், அவன் படையின் ஒரு தலைக் கூறாய் அமைந்தனர்.

நாஸிர் ஜங் வீழ்ச்சியுடன், மகமதலியின் கை வலுத்திருந்தது. கிளைவின் உதவியால், அவன் அரசிருக்கை பெற்றாலும், அதை வைத்துக் காக்கும் வகையில், அவன் கையாலாகாதவனாகவே இருந்தான். இந்நிலையில் ஹைதரும், மைசூர் அமைச்சரும் கட்சிச் சார்பில்லாமல், தம் தனி நலம் பேணுவதிலேயே ஈடுபடலாயினர். இச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, மைசூர் வரும் வழியிலேயே, ஹைதர் புதுச்சேரியைச் சென்று பார்வையிட்டான். பிரஞ்சுக்காரருடனும், பிரஞ்சுத் தலைவருடனும் நட்பு முறையில் அளவளாவி, அவர்கள் போர் முறைகள், கட்டுப்பாடு, அமைப்பாண்மைத் திறம், வீர உணர்ச்சி ஆகியவைகளை அவன் கூர்ந்து கவனித்தான்.

இந்நிகழ்ச்சி ஹைதர் அரசியல் வாழ்வில் ஒரு நல்லொளி விளக்கைப் போல் அமைந்தது. புதுப்படைகளைத் திறம்படப் பயிற்றுவிப்பதில், இது முதல் அவன் மிகுதிக் கவனம் செலுத்தினான். படைத் துறை நடவடிக்கை நுட்பங்களிலும், அவன் கருத்தாராய்ச்சி ஓடிற்று. தவிர, பயிற்சி வகைகளிலும், அமைப்பாண்மைத் துறையிலும் பிரஞ்சுப் படைத் துறை வல்லுநர்களையும், பணித் தலைவர்களையும் அமர்த்த இது தூண்டுதலளித்தது. பிரஞ்சு மக்களின் வாய்மையும், உறுதியும் இவ்வேளையில் அவனுக்குப் பெரிதும் பயன்பட்டன.

மைசூர் அமைச்சன் நஞ்ச ராஜன் தன் பக்கமும், பிரஞ்சுக்காரர் பக்கமுமாக ஊசலாடுவதை முகமதலி கண்டான். நஞ்சி ராஜன் பேரவாவைத் தூண்டி, அவனைத் தன்பக்கம் இழுக்க முயன்றான். ஆகவே, தன் எதிரியாகிய சந்தா சாகிபை அழித்துத் தமிழக முழுவதையும் வெல்ல உதவினால், திருச்சிராப்பள்ளிக் கோட்டையையும், அதைச் சார்ந்த பகுதிகளையும் நஞ்சி ராஜனுக்கு அளிப்பதாக அவன் நைப்பாசைக் காட்டினான். மைசூர் மன்னனும், மக்களும் இதை விரும்பவில்லை. ஆயினும் பேராவல் தூண்ட, நஞ்சி ராஜன் இதை ஏற்றான். ஹைதரையே, படையுடன் அப்பக்கம் அனுப்பினான்.

தன் கட்சியை வலுப்படுத்தும்படி, நஞ்சி ராஜன் குத்தியை ஆண்ட மராட்டியத் தலைவன் மொராரி ராவையும், பிற தலைவர்களையும் பணம் கொடுத்துத் தன் வசப்படுத்தினான். மராட்டியப் படைகளும், கொள்ளைக் கூலி பெறும் ஆர்வத்துடன் உடன் சென்றன.

இரண்டாவது கருநாடகப் போரில், பிரஞ்சுக்காரர் வீழ்ச்சிக்கும், ஆங்கிலேயர் வெற்றிக்கும், ஹைதர் அலியே பேரளவு காரணமாய் அமைந்தான். ஆங்கில வரலாற்றாசிரியர் இதை மறைத்து மழுப்பியுள்ளனர். கிளைவின் சூழ்ச்சி நடவடிக்கை ஒன்றிலன்றி, ஆங்கிலேயர் எதிர்ப்புக்கு பிரஞ்சுத் தளபதிகள் சளைத்ததில்லை. ஆனால் அத்தகையோர், இப்போது ஹைதரின் தாக்குதலுக்கு மீண்டும், மீண்டும் உடைந்தனர். சிறப்பாக ஹைதரின் குதிரைப் படையின் ஆற்றல், தென்னகம் முன்பு காணாத ஒன்றாயிருந்தது. காசீ கான் பேடேயின் தலைமையில், அது இரவும், பகலும் எதிரிகளைத் தாக்கிச் சீர் குலைத்தது. எதிரிகளின் துப்பாக்கிகளையும், பீரங்கிகளையும் கைக் கொண்டு, அப்படை எதிரிகளின் வலுவைத் தன் வலுவாக்கி வந்தது.

சந்தா சாகிப், மதுரை நாயக மரபின் கடைசி இளவரசியை ஆசை வார்த்தைகளால் நம்ப வைத்து, ஏமாற்றியவன். தென்னக வாழ்வில் ஹைதர் எவ்வளவு தூய வீரனோ, அதே அளவு பழிக்கஞ்சாத் தூர்த்தன் அவன். அவன் வாழ்வின் போக்குக்கு ஏற்ப, அவன் கை தாழத் தொடங்கியதுமே, அவன் உட்பகைவர்கள் கையாலேயே அவன் கோர மரணம் அடைந்தான்.

சந்தா சாகிப் கொடியவனானால், அவனை எதிர்த்த முகமதலி, குடில நயவஞ்சகச் செயல்களில், அவனை விடக் குறைந்தவனல்ல. நைப்பாசை தூண்டிப் பெரும் படையழிவுக்கும், செலவுக்கும் நஞ்சி ராஜனை ஆளாக்கிப் பயன் பெற்ற பின், அவன், தான் முன்பு சொன்ன சொற்படி, மைசூராருக்குத் திருச்சிராப்பள்ளியைத் தர மறுத்தான். அத்துடன், மைசூர் அமைச்சன் பிரஞ்சுக்காரருடன் ஊடாடியதாகக் கூறி, ஆங்கிலேயர்களையும், அவர்களிடமிருந்து பிரித்து, ஆங்கிலேயர்களைத் தன் மனம் போல், கைப் பாவையாக வைத்து ஆட்டிப் படைக்கலானான்.

நஞ்சி ராஜன் பெருஞ் சீற்றங் கொண்டு, ஹைதரை அனுப்பித் திருச்சிராப்பள்ளியை முற்றுகையிட்டான். இப்போது முகமதலி பிரஞ்சுக்காரர் தயவைப் பெற்று, முற்றுகையைச் சமாளித்தான்; முற்றுகை கிட்டத்தட்ட வெற்றி பெறும் சமயத்தில், அவன் மீட்டும், சமரசப் பேச்சுப் பேசி ஏமாற்றினான்.

எதிரிகளைக் கூடச் சரியானபடி மதித்துணர்ந்தவன் ஹைதர். பிரெஞ்சுக்காரரிடம், அவன் கொண்ட மதிப்பும், நம்பிக்கையும் குறிப்பிடத் தக்கது. ஆங்கிலேயரிடம் கூட வாய்மையையும், வீரத்தையும் கண்டு அவன் மதித்தான். ஆனால், முகமதலியின் ஏலமாட்டாக் குள்ள நரித் தனத்தை அவன் மனமார வெறுத்தான். அத்தகைய ஒரு கோழையின் பிடியில் சிக்கி, தம் நாட்டு நலனையும், சார்ந்த, தாம் நாட்டு நலனையும் விழலுக்கிரைத்த நீராக்கிய ஆங்கில ஆட்சியாளர் அறிவு நிலை கண்டு, அவன் பரிந்து, இரக்கமுற்றான் !

பாவம்! முகமதலியின் சூழ்ச்சியால், ஆங்கில உயர் பணியாளர் பெற்ற கைக்கூலியும், கொள்ளை ஆதாயமும் தூய வீரனான ஹைதருக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும்?

1754-ல் கருநாடகப் போர் முடிவுற்றது. முகமதலியின் சூழ்ச்சி, ஹைதர் வீரத்தை ஆங்கிலேயர் பக்கமாக நின்று உதவச் செய்தது. அதுவே பிரஞ்சு மக்கள் வலுத் தளர வைத்தது. தென்னகத்தின் தீய ஊழ் அன்று முகமதலி உருவில் நின்று, வீரமும், தகுதியும் அற்ற திசையில் நாட்டு விடுதலையை ஒப்படைத்தது.

இப்போர் முடிவில், ஹைதர் படையில் 1500 பயிற்சி பெற்ற குதிரை வீரரும், 3000 பயிற்சி பெற்ற காலாள் வீரரும் இருந்தனர். முழுதும் பயிற்சி பெறாத வீரர் 4000க்கு மேல் இருந்தனர்.