கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி/புகழ் ஏணி
5. புகழ் ஏணி
ஹைதரின் வாழ்க்கை தொட்டில் பருவத்திலிருந்தே, இடர்கள் பல நிறைந்தது. இவற்றைத் தாங்கும் உடலுரமும், உள உரமும் அவனுக்கு வாய்த்திருந்தது. ஆனால், அவன் புறவாழ்வில் காணாத மென்மையும், இனிமையும் அவன் அகவாழ்வில் தோய்ந்திருந்தது, குடும்ப பாசத்துக்கும், நேசத்துக்கும் நேரமில்லாத அவன் வீர வாழ்வில், குடும்ப பாசமும், நேச பாசமும் நிலைத்திருந்தன.
ஹைதரின் தமையனான ஷாபாஸுக்கு முதல் மனைவி மூலம் ஒரு புதல்வி இருந்தாள். முதல் மனைவி இறந்த பின், இரண்டாவது மனைவி மூலம் இரண்டு புதல்வியர்களும், காதர் சாகிபு என்ற புதல்வனும் இருந்தனர். மூத்த மனைவியின் புதல்வி லாலா மியான் என்ற செல்வருக்கு, மணம் செய்து வைக்கப்பட்டாள்.
ஹைதருக்கு 19 ஆண்டு நிறைவுற்ற பின் ஷாபாஸ், அவனுக்கு ஷாமியான் மாய்னுதீன் என்பவரின் புதல்வியாகிய பக்ருன்னிசாவை மனைவியாக்கினான். ஒரு புதல்வி பிறந்ததன் பின், அந்நங்கை வாத நோய்ப்பட்டுப் பாயும், படுக்கையுமானாள். அவளிருக்க, மற்றொரு மனைவியைக் கொள்ள ஹைதர் விரும்பவில்லை. ஆயினும், அவன் செல்வமும், செல்வாக்கும் வளருந்தோறும், ஓர் ஆண்மகவில்லாக் குறை நினைந்து, அந்நங்கை உருகினாள். மற்றும் ஒரு துணை தேடும்படி, அவள் ஹைதரை வற்புறுத்தினாள். அதன்படி ஹைதர், குர்ம் கூண்டாக் கோட்டைத் தலைவனான மீர் அலி ரஸா கானின் மைத்துனியை விரும்பி, மணம் செய்து கொண்டான். அவள் தந்தை மக்தூம் சாகிபு என்பவர். இந்நங்கையின் வீரப் புதல்வனே திப்பு. ஹைதர் தேவனஹள்ளிப் போரில் வெற்றி பெற்ற அதே ஆண்டிலேயே, அதாவது 1749- லேயே அவன் பிறந்தான். வீர மைந்தன் மேனியுடன் மேனியாகவே, இது முதல் ஹைதரின் புகழ் வளர்ந்தது.
முகமதலியின் சதியால், நஞ்சி ராஜன் நிலை இரண்டக நிலையாயிற்று. படை வீரர்கள் ஊதியம் கோரி, அமளி செய்தனர். முகமதலியை நம்பியதால், ஆங்கிலேயரும், பிரெஞ்சுக்காரரும் இருவருமே அவன் எதிரிகளாயினர். அத்துடன், மைசூர் அரண்மனையில், அவன் மதிப்பு மிகவும் வீழ்ச்சியடைந்தது. அவன் எதிரிகள் மன்னன் காதில், அவனுக்கு எதிராகக் கோள் மூட்டி, மன்னன் சீற்றத்தை வளர்த்தனர். இவ்வளவும் போதாமல், பண ஆசையால், அவனுடன் வந்திருந்த மராட்டியத் தலைவரும், பிறரும் அவனை அச்சுறுத்தினர். இத்தனை இக்கட்டுகளுடன், மைசூருக்குத் திரும்ப மனமின்றி, நஞ்சி ராஜன் சத்திய மங்கலம் என்ற இடத்திலேயே தாவனமடித்துத் தங்கினான். ஹைதர் அவனுடனிருந்து தக்க அறிவுரை, உதவியுரைகள் தந்தான்.
இச்சமயம், மைசூரின் நிலையறிந்து, மராட்டியப் பேரரசுத் தலைவனான பேஷ்வா பாலாஜி ராவ் நானா, மைசூர்ப் பகுதி மீது படையெடுத்தான். மைசூரை அடுத்த சுரா மாகாணத்தில், நவாப் திலாவர் கான் தலைவனாயிருந்தான். மராட்டியர் அம்மாகாணத்தைக் கைப்பற்றி, பலவந்த ராவ் என்பவனை, அதில் அமர்வித்தனர். திலாவர் கானுக்குக் கோலார்ப் பகுதி மட்டுமே விட்டுக் கொடுக்கப்பட்டது. மைசூர் ஆட்சிப் பகுதியிலும், அவர்கள் புகுந்து ஹைதர் படை பற்றிய கவலையின்றிச் சூறையாடினர். அரசன், அவசர அவசரமாக அமைச்சனுக்கு அழைப்பு விடுத்தும், அமைச்சன் வரவில்லை. இறுதியில், அவன் மராட்டியருக்கு ஒரு கோடி வெள்ளி கையுறை தந்து, சிறிது ஓய்வு பெற்றான். ஒரு சில படைப் பிரிவுகளை நாட்டில் விட்டு வைத்து, பேஷ்வா பூனாவுக்குச் சென்றான்.நஞ்சி ராஜனை மைசூருக்கு வர விடாமல் தடுத்தவர்கள், ஊதியம் வேண்டி அமளி செய்த அவன் படைவீரர்களே. ஹரிசிங் என்பவன் தலைமையில், ஹைதர் இல்லாத சமயத்தில், அவர்கள் நஞ்சி ராஜனைச் சிறையிலிட்டு, உணவும், நீரும் அளிக்காமல் வதைத்தனர். இந்நிலையில் நஞ்சி ராஜன் தன் வெள்ளிப் பொற்கலங்களை விற்று, அவர்களுக்குப் பணம் தர வேண்டியதாயிற்று. இப்பணத்துடன், அவர்கள் பங்களூர் அருகில் சென்று, குடித்துக் கூத்தாடி மகிழ்ந்திருந்தனர்.
ஹைதர் திரும்பி வந்து, செய்தி அறிந்தபோது, முதலில் நஞ்சி ராஜனிடமே அவன் சீற்றம் கொண்டான். “அண்ணலே! உங்களை அவர்கள் பட்டினியிட்டு வதைத்தது அடாத செயல்தான். ஆனால், அவ்வழியில் நீங்கள் இறந்திருந்தால், உங்களுக்காக அவர்கள் மீது, நான் கட்டாயம் பழி வாங்கியிருப்பேன். அத்துடன், உங்களை வீரராகப் பூசித்திருப்பேன். ஆனால் நீங்கள் மானத்தை விட, உயிர் பெரிதென்று கருதி விட்டீர்கள். அதற்காக வருந்துகிறேன். ஏனென்றால், நீங்கள் என் வீரத் தலைவர் என்பதற்கான தகுதியை இழந்து விட்டீர்கள்” என்று கனல் பறக்கப் பேசினான்.
நஞ்சி ராஜனின் நொந்த நிலை, விரைவில் ஹைதர் உள்ளத்தை உருக்கிற்று. அவன் சீற்றம், ஹரிசிங் குழுவினர் மீது திரும்பிற்று. 500 துப்பாக்கி வீரர்களை மட்டும் உடன் கொண்டு, அவன் இரவோடிரவாகக் குதிரையேறிப் புயல் வேகத்தில் சென்றான். தலைவனுக்கெதிராகக் கை ஓங்கிய அத்தறுதலைகள் மீது மூர்க்கமாகத் தாக்கி, அவர்களைக் கொன்றோ, சிதறடித்தோ ஒழித்தான். அவர்களிடமிருந்த பணம், துணிமணி, தளவாடங்களுடன் அவன் நஞ்சி ராஜனிடம் வந்து, அப்பொருள்களை அவன் காலடியில் வைத்தான்.
தளபதியின் வீரமும், மாறாத உறுதியும் கண்டு மகிழ்ந்த நஞ்சி ராஜன், அவன் மீட்டுக் கொண்டு வந்த செல்வத்தில், சிறிதே தனக்கு எடுத்துக் கொண்டு, மீந்தவற்றை அவனுக்கே அளித்தான். இறந்த வீரரின் குதிரை, ஓட்டகைகள், படைக்கலங்கள் முதலியவற்றையும் நஞ்சி ராஜன் அவனிடமே ஒப்படைத்தான். அத்துடன் இது முதல், அவன் தன்னுடன் ஹைதரைச் சரியாசனத்தில் இருத்தி, அமைச்சனுக்கு ஓர் அமைச்சனாக நடத்தினான். ஹைதர் அறிவுரை கலந்தே, அவன் எப்போதும் செயலாற்றினான். இம்முறையிலே, மதிப்பு மட்டும் குறையாமல், மைசூருக்குச் செல்வதற்கு வழி வகை என்ன என்று நஞ்சி ராஜன் அவனை வேண்டினான்.
வாழ்க்கையில் முதல் தடவையாக. ஹைதர், தன் தனி முறையில் செயல் திட்டம் வகுக்க நேர்ந்தது. திருச்சிராப்பள்ளி முற்றுகையின் போதே, ஆர்க்காட்டு நவாபின் பெயரால், நஞ்சி ராஜன் மேல் கடற்கரைப் பகுதியை மீட்க, ஹைதரை அனுப்பியிருந்தான். ஹைதர் அப்போது, திண்டுக்கல், கோயமுத்தூர், பாலக்காடு, கள்ளிக்கோட்டை ஆகிய பகுதிகளைக் கீழடக்கி, அவற்றின் தலைவர்களிடமிருந்து திறை பிரித்து வந்திருந்தான். இப்போதும் அவர்களிடமே சென்று, மறு தவணைத் திறையைப் பெற்று, மைசூர் அரசரிடம் காணிக்கையாகத் தரலாம் என்று ஹைதர் அறிவுரை கூறினான்.
ஏமாற்றம், தோல்வி, வறுமை, அவமதிப்பு ஆகிய இருட்படலங்களால், தாக்குண்டு கிடந்த அமைச்சன், தளபதியின் இவ் அறிவுரை ஒளியை ஆர்வத்துடன் அணைத்துக் கொண்டான். அதன் நிறைவேற்றத்தையும், அவனிடமே விட்டான்.
ஹைதர் என்ற பெயருக்குப் புலி என்பதே பொருள். தென் கொங்கு, மலையாளக் கரை மக்கள் அவனைப் புலி என்றே மதித்திருந்தனர். ஆகவே, பெரும்பாலான தலைவர்கள் அட்டி கூறாமல், தம்மாலியன்ற தொகைகளை அவன் முன் கொண்டு வந்து குவித்தனர். தராதவர்களும், அவன் தாக்குதல் முரசம் காதில் விழுந்தவுடனே பணிந்து, ஒற்றைக்கு இரட்டையாகப் பரிசில்கள் கொண்டு வந்து கொட்டி அளந்தனர்.
ஹைதர் மூலம் நஞ்சி ராஜன் அடைந்த புகழும், பணமும் மைசூரில் மன்னன் சீற்றம் தணித்தன. நஞ்சி ராஜன் அனுப்பிய பெருந் தொகையாகிய ஒரு கோடி வெள்ளியை ஏற்று, மன்னன் அவனை மீட்டும் அரசவைக்கு வரவழைத்துக் கொண்டான். ஹைதரும் உடன் சென்று, அமைச்சருடன் அமைச்சராக, மதிப்புடன் பணியாற்றினான்.
நாஸிர் ஜங்கைக் கொலை செய்யத் தூண்டிய கடப்பை, கர்நூல் தலைவர்கள், மேற்கு மைசூர்ப் பகுதியில் குடி மக்களையும், தலைவர்களையும் கிளர்ச்சிக்குத் தூண்டினர். தானைத் தலைவன் கங்காராம் கிளர்ச்சிக்குத் தலைவனாயிருந்தான். ஹைதர் அத்திசையில் கிளர்ச்சியை அடக்க அனுப்பப்பட்டான்.
தன் படைகளுடனே, ஹைதர் இரவு, பகலாக விரைந்து சென்றான். எதிர்பாராத வகையில், கங்காராம் ஹைதர் படையின் திடீர்த் தாக்குதலுக்கு ஆளானான். கிளர்ச்சிக்காரர் பெரும்பாலோரும் ‘தப்பினோம், பிழைத்தோம்’ என்று ஓடினர். ஹைதர், ஓடியவர்களை விடாது துரத்தி, வாளுக்கிரையாக்கினான், அல்லது உயிருடன் சிறைப் பிடித்தான். கங்காராம் பாரிய சங்கிலியைச் சுமந்து இழுத்த வண்ணம், மன்னர் முன் கொண்டு வரப்பட்டான்.
மைசூரில் ஹைதர் அடைந்து வந்த பெருமையும், அதனால் நஞ்சி ராஜனுக்கு இருந்து வந்த மதிப்பும், அரண்மனையில் பலர் உள்ளத்தில் தீராப் பொறாமை ஊட்டியிருந்தது. இத்தகையவர்களில் நஞ்சி ராஜனின் தம்பியாகிய தேவராஜன் ஒருவன். அவன் மறை சதிகளில் ஈடுபட்டிருந்து, ஒரு நாள் ஒரு படையுடன் அரண்மனையை வளைத்துக் கொண்டான். ஹைதருக்கும், நஞ்சி ராஜனுக்கும் இது செய்தி எட்டுமுன், அரண்மனை வாயிலை நோக்கி, பீரங்கிகள் முழங்கின. துப்பாக்கிக் குண்டுகளும் பீரங்கிக் குண்டுகளும் அரண்மனை மதில்களைத் துளைக்கத் தொடங்கின. ஆனால், நஞ்சி ராஜனும், ஹைதரும் இவற்றை அறிந்து, விரைந்து வந்து கிளர்ச்சியை அடக்கினர்.
ஹைதர் அலி, மைசூர் அரசின் பாதுகாப்பை உன்னி, தொலைவிடங்களிலிருந்து வீரர் பலரைக் கொணர்ந்து, படையை வலுப்படுத்தினான். பிரஞ்சுக்காரர் பலரைப் படையின் பயிற்சித் துறையிலும், அமைப்பாண்மைத் துறையிலும் அமர்வித்தான். அத்துடன் ஆர்க்காட்டில் முகமதலியால், அருமைஅறியாது துரத்தப்பட்ட பல படைத் தலைவர்களை வரவழைத்து, உயர் ஊதியத்தால் அவர்களைத் தன்னுடன் பிணைத்தான். இவர்களில் ஆசாத் கான், சர்தார் கான், முகமது உமர் முதலியவர்கள் முக்கியமானவர்கள். முகமது உமரின் புதல்வன் முகமத் அலியே, ஹைதரின் பிற்கால வாழ்வில், மைசூரின் ஒப்பற்ற படைத தலைவனானான்.
வளர்ந்து வரும் ஹைதரின் புகழ் கண்டு, வெளிநாட்டு எதிரிகளை விட, உள்நாட்டு எதிரிகள் கலங்கினர். அதே சமயம், அவனை நேரே எதிர்க்கவும் அஞ்சினர். நஞ்சி ராஜனை, அவன் இல்லாத சமயம் ,அகற்றுவதே அவன் வலுவைக் குறைக்க வழி என்று அவர்கள் திட்டமிட்டனர். அதைச் செயல்படுத்தவும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல், பாலக்காட்டுப் பகுதிகளில் சில கிளர்ச்சிகளை அடக்குவதற்காக, நஞ்சி ராஜனும் ஹைதரும் சென்றிருந்தனர். நஞ்சி ராஜன் பின்னணி வேவுத் தளங்களில் சுற்றிக் கொண்டிருந்தான். ஹைதர், முன்னணிப் போர் முனையில் ஈடுபட்டிருந்தான். இச்சமயம் பார்த்து, அரண்மனை எதிரிகள் மன்னனை ஏவி, நஞ்சி ராஜனைப் படைத் துறையிலிருந்து வரவழைத்தனர். நஞ்சி ராஜன் தொடர்ச்சியாகப் போர் வேலைகளில் ஈடுபட்டுச் சோர்வுற்றிருந்தான். ஆகவே, விரைவில் போர் முடித்து, மைசூருக்கே மீளும்படி ஹைதருக்கு உத்தரவு அனுப்பி விட்டு, அவன்அரண்மனைக்கு வந்தான்.
இத்தடவை எதிரிகளின் சூழ்ச்சிகள் பேரளவில் பயன் தந்தன. ஹைதரிடம் காரியத் துணைவனாகக் குந்தி ராவ் என்ற ஒருவன் இருந்தான். அவன் சூழ்ச்சிகளில் வல்லவன். நஞ்சி ராஜனிடமிருந்து அமைச்சர் பணியைக் கைக் கொள்ள வேண்டுமென்று அவன் நீண்ட நாள் திட்டமிட்டிருந்தான். ஆகவே, ஒரு புறம், மன்னன் மனத்தை, அவன் நஞ்சி ராஜனுக்கு எதிராகக் கலைத்தான். மற்றொரு புறம், ஹைதரிடமும் நஞ்சி ராஜனைப் பற்றிக் குறைகள் கூறி வந்தான். ஆகவே, நஞ்சி ராஜன் திரும்பி வந்த சமயம், மன்னன் அவன் மீது பழைய குற்றச்சாட்டுகளை நீட்டினான். நஞ்சி ராஜன் எதிர்த்துப் போரிட எண்ணவில்லை. அரசியல் பணிகளிலிருந்து ஒதுங்கி விடுவதாகப் பணிவுடன் கூறினான்.
ஹைதர் திரும்பி வந்த போது, குந்தி ராவே அமைச்சர் பணியை ஆற்றி வந்தான். நஞ்சி ராஜன் பெயரளவிலே, அமைச்சனாக ஒதுங்கியிருந்தான். தன் செயல் துணைவனே, அமைச்சனாவதைப் பெருந்தன்மை மிக்க ஹைதரின் உள்ளம் மகிழ்வுடன் வரவேற்றது. ஆனால், குந்தி ராவுக்கு இது போதவில்லை. அவன் அமைச்சர் உரிமைகளையே முழுவதும் பெற விரும்பினான். ஆகவே, நஞ்சி ராஜனுக்கெதிராக அவன் மன்னன் மனத்தை மட்டுமன்றி, ஹைதர் மனத்தையும், திருப்பினான். அவன் சூழ்ச்சியறியாது, ஹைதர் நஞ்சி ராஜனை வற்புறுத்தி, குந்தி ராவிடமே அமைச்சர் உரிமைகளை வாங்கி அளித்தான்.
மாறா உறுதியுடைய ஹைதரின் நட்பைக் கூட இழந்து விட்டோமே என்ற துயரத்துடன், நஞ்சி ராஜன் தன் தாயகமான கென்னூருக்குச் சென்று ஓய்வுடன் வாழலானான். கென்னூரையடுத்துப் பெரிய பட்டணம், அர்க்கல் குரா, அஞ்சிடி துருக்கம் முதலிய கோட்டைகள் நஞ்சி ராஜன் குடும்ப மானியங்களாய் அமைந்திருந்தன. அவற்றின் மேற்பார்வைக்காக ,எழுநூறு குதிரை வீரரையும், இரண்டாயிரம் பயிற்சி பெற்ற காலாட்களையும், பயிற்சி முற்றுப் பெறாத நாலாயிரம் படை வீரரையும் மட்டுமே நஞ்சி ராஜன் இப்போது தன்னுடன் வைத்துக் கொண்டான்.
1755-ல் ஹைதர் திண்டுக்கல் மாவட்டத்தின் படைத் துறை ஆட்சியாளராக அமர்வு பெற்றான். இங்கே அவன் பிரஞ்சுப் படைத் தலைவர்களைத் தருவித்து, அவர்கள் மேற்பார்வையில், தன் படைகளை நன்கு பயிற்சி செய்வித்தான். அத்துடன், இவ்விடத்திலேயே அவன் ஒரு வெடி மருந்துச் சாலை அமைத்து, அதில் வெடிமருந்துச் சரக்குகளையும், படைக் கருவிகளையும் தொகுத்துத் திரட்டினான். இங்ஙனம், மைசூர் அரசு தளர்ச்சியுற்று வரும் நாட்களிலே, அத்தளர்ச்சியைத் தடுக்க, ஹைதர் அரும் பெரு முயற்சி செய்தான். இம்முயற்சியே, அவனை அச்சிறிய அரசின் அருகே ஒரு அரசாக்கிற்று. எவர் எதிர்ப்பும் இல்லாமலேயே, மக்கள் சக்தி, அவனைக் கன்னட நாட்டின் புகழ் ஏணியின் முதல் படியில் கொண்டு வந்து விட்டது.
அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் நடைபெற்ற மூன்று நிகழ்ச்சிகள், அவனைத் திடுதிடுவென்று அப்புகழேணியின் படிகளில் ஏற்றி, புகழ் மேடையில் இடம் பெறுவித்தது.
1750-ல் நிஜாமாகத் தவிசேறிய முசபர் ஜங் ஓர் ஆண்டுக்கு மேல் ஆட்சி செய்யவில்லை. அடுத்த ஆண்டிலேயே, நாஸிர் ஜங்கின் தம்பியான சலாபத் ஜங் என்பவன், மீர் அசப் உத்தெளலா என்ற பட்டத்துடன் நிஜாமானான். பிரஞ்சுக்காரர் உதவியுடன், அவன் ஹைதர் மீது படையெடுத்துச் சீரங்கப் பட்டணம் வரை கொள்ளையடித்தான். இவ்விடரிலிருந்து மைசூர் மீளுமுன், 1757-ல் பேஷ்வாவாயிருந்த பாலாஜி பாஜி ராவ் படையெடுத்து, மீண்டும், மீண்டும் கொள்ளையிட்டு, நாட்டைப் பாழாக்கி வந்தான். மன்னன் ஐந்து இலட்சம் வெள்ளியை, உடனடி கையுறையாகக் கொடுத்து, இன்னும் இருபத்தேழு இலட்சம் தருவதாக வாக்களித்துத் தலை தப்பினான். ஆனால், வாக்களித்த தொகைக்காக, நாட்டின் வட பகுதி முழுதும் ஈடு வைக்கப்பட்டிருந்தது. மராட்டியக் காவற் படை வீரர் ஆங்காங்கே தங்கி, மனம் போல, மக்கள் செல்வத்தைச் சூறையாடி வந்தனர்.
மைசூர் மன்னன் நாட்டை வலுப்படுத்தி, மராட்டியரை நாட்டிலிருந்து துரத்தவே விரும்பினான். இம்முறையில், அவன் தன் குடிப்படைத் தலைவர்களை ஊக்க முயன்றான். ஆனால் அவர்கள் கோழைகளாகவும், தன்னலப் பேடிகளாகவும் காலங்கழித்தார்கள். மன்னனே முன்னணியில் நின்று போரிட வந்தாலல்லாமல், தாம் படைதிரட்ட முடியாது என்றனர். செய்வகை இன்னதென்றறியாது மன்னன் திகைத்தான்.
நிலைமையைச் சமாளிக்க வல்லவன் ஹைதர் ஒருவனே என்று மன்னனை அடுத்திருந்தவர்கள் கூறினர். அதன் மீது, மன்னன் ஹைதரை அழைத்து, அவனை நாட்டின் முழு நிறை உரிமையுடைய படை முதல்வன் ஆக்கினான். மன்னனோடொத்த பொன்னணிமணி விருதுகளுடன் படைதிரட்டல், குடிப்படைத் தலைவர்களுக்கு ஆணையிடல், கருவூலத்தையும், நாட்டுச் செலாவணியையும் கையாளல், வரி விதித்தல் ஆகிய சிறப்புரிமைகள் அவனுக்கு அளிக்கப்பட்டன.
படைத் துறையில், இச்சமயம் கணக்குகள் சீர் குலைந்திருந்தன. படைச் சம்பளத்தில், பல நாள் தவணைப் பாக்கிகள் இருந்தன. படை வீரர் பலவிடங்களில் கிளர்ச்சிகள் செய்தனர். எங்கும், அமளி குமளியாக இருந்தது. ஹைதர் கிளர்ச்சிக்காரரை அடக்கினான். வேண்டாத படை வீரரையும், படைத் துறைப் பணியாளரையும் கிளர்ச்சியைச் சாக்கிட்டே குறைத்தான். கணக்குகளை நேரடியாகச் சரி பார்த்து, எரிகிற வீட்டில் ஆதாயம் தேட முற்பட்ட கணக்குகளை ஒழித்தான். நேர்மையான சம்பளப் பாக்கியில் ஒரு பகுதி கொடுத்து, மறு பகுதியை எதிரி நாட்டில் கொள்ளை மூலம் சரி செய்து கொள்ளும் உரிமை அளித்தான். இவ்வகையில் படைத் துறையில் அமைதி ஏற்பட்டது.
மராட்டியருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை, ஹைதர் வேண்டுமென்றே கொடுக்காமல் கடத்தி வந்ததுடன், அதற்கீடாக அளிக்கப்பட்ட நிலப் பகுதியையும் கைக் கொண்டான். இச் செயல்களால் சீற்றங் கொண்ட பேஷ்வா, 1759-ல் கோபால் ராவ் ஹரி என்ற தம் படைத் தலைவனைப் பெரும் படையுடன் மைசூர் மீது ஏவினான். கடல் போன்ற மராட்டியப் படைகள், மைசூர் முழுவதும் பறந்து ஆட்கொண்டன. பங்களூர் நகரத்தையும், கோபால் ராவ் முற்றுகையிடத் தொடங்கினான். இச்சமயத்துக்கே காத்திருந்த ஹைதர், லத்ப் அலி பேக் என்ற படைத் தலைவனை அனுப்பி, மராட்டியரின் பின்னணியிலிருந்த மைசூர்ச் சென்னப் பட்டணத்தைக் கைக் கொண்டான். இதனால், பங்களூர் முற்றுகை கை விடப்பட வேண்டியதாயிற்று. இதன் பின்னும், நேரடி களப் போரில் இறங்க ஹைதர் விரும்பவில்லை. ஏனெனில், மராட்டியப் படை ஹைதர்ப் படையைப் போலப் பதின் மடங்கு பெரிதாக இருந்தது.ஆயினும், பொறுக்கி எடுத்த குதிரைப் படைகளை ஆங்காங்கு விரைந்து அனுப்பி, ஹைதர் மராட்டியப் படைத் தலைவனுக்குப் பெருந்தொல்லை விளைவித்தான். இரண்டாண்டு பெரும் படையுடன் நாடெங்கும் சுற்றியும், கோபால் ராவினால், எதுவும் சாதிக்க முடியாமல் போய் விட்டது. உடும்பு வேண்டாம். கையை விட்டால் போதும் என்றாயிற்று அவனுக்கு.
இச்சமயம் பார்த்துக் காலம், ஹைதருக்கு ஒரு பேருதவி செய்தது. மராட்டியப் பேரரசும் தில்லியில் பெயரளவில், மேலாட்சி நடத்திய முகலாயப் பேரரசும், திடுமென 1761-ல் ஆப்கானிய வீரன் அகமதுஷா அப்துராணியின் தாக்குதலால், மூன்றாம் பானிபட்டுப் போரில் வீழ்ச்சியடைந்தன. கோபால் ராவ் திருப்பி அழைக்கப்பட்டான்.
போகும் அவசரத்தில், முப்பத்திரண்டு இலட்சம் வெள்ளிக்கீடாக வென்ற பகுதியையும், பிணையமாகக் கோரிய பகுதியையும் விட்டு விட்டு, கோபால் ராவ் பூனாவுக்கு மீண்டான். முப்பத்திரண்டு இலட்சத்தில் கூடப் பாதியே உடனடியாகக் கொடுக்கப்பட்டது. மறுபாதிக்கு, ஹைதர் உறுதி மொழி தவிர, வேறு பிணையம் கோரப்படவில்லை.
மைசூரைச் சூழ்ந்த காரிருள், இங்ஙனம் ஹைதர் விடா முயற்சிகளாலும், அறிவார்ந்த திட்டங்களாலும் விலகிற்று. இதனால், எல்லையற்ற மகிழ்ச்சியடைந்த மன்னன், ஹைதர் தலைமைப் பதவியை நிரந்தரமாக்கி, அவன் மீது மேலும் விருதுகளைச் சொரிந்தான். ஃவதஃ ஹைதர் பகதூர் என்ற தனிச் சிறப்புப் பட்டம் இது போது, அவனுக்கு அளிக்கப்பட்டது.
1761-ல் ஹைதர் ஒரு சிற்றரசின் கீழுள்ள படைத் தலைவனாக அரசியல் வாழ்க்கை தொடங்கினான். ஆனால், அன்றே அவன் புகழ், மைசூரைப் பேரரசுகளின் பிடி தாண்டிய ஒரு சிறு வல்லரசாக்க முனைந்திருந்தது. அவன் நாடில்லாத ஆட்சியாளனாக, முடி சூடா மன்னனாக, தென்னாட்டின் புகழ் வரலாற்றில் ஒரு புதிய ஏடு தொடங்கும் நிலையை அடைந்தான்.