கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி/மன்னவன் மாண்பும் ஆட்சியும் மாட்சியும்
11. மன்னவன் மாண்பும்
ஆட்சியும் மாட்சியும்
மன்னர் பெரும்பாலும் ஆதிக்கம், ஆடம்பரம், இன்ப வாழ்வு ஆகியவற்றிலேயே புரள்வர். அதையே, மன்னர் வாழ்வு என்று கூடக் கருதுவர். மன்னரின் இவ்வழியையே, செல்வரும் இயல்பாக நாடுகின்றனர். குடியாட்சி நிலவும் இந்நாட்களில், மக்கள் பணியின் பேரால், உயர் பதவி பெறுபவர்களிடம் கூட, இவை இல்லாதிருப்பது அரிது. குடிமக்கள் ஆதரவு பெற்று உயர்ந்த அன்றே, உயர்வு பெற்றவர்கள் குடிமக்கள் வாழ்விலிருந்து, நெடுந் தொலை அகன்று விடுகிறார்கள். ஆனால், குடி மன்னனாகிய ஹைதர் வாழ்வும், ஆட்சிப் பாங்கும் இவ்வகையில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். பொது மக்கள் வாழ்விலிருந்தும், படைவீரர் வாழ்விலிருந்துமே அவன் உயர்வு பெற்றான். ஆனால், உயர்ந்த பின்பும், பொதுமக்கள் வாழ்வின் எளிமையும், போர் வீரர் வாழ்வின் கடுமையும், அவனை விட்டு அகலவில்லை. அரசியலுக்கு இன்றியமையாத தருணங்களிலன்றி, அவன் ஆடம்பரத்தை விரும்பியது கிடையாது. கொலுமண்டபத்திலும் சரி, போர்க்களத்திலும் சரி அவன் ஒரு படை வீரன் நிலைக்கு மேற்பட்ட எந்த உரிமையையும் ஏற்றுக் கொண்டதில்லை. இவ்வகையில், ஹைதருக்கு இணையாகக் கூறக் கூடிய மன்னர், விரல் விட்டு எண்ணக்கூடிய மிகச் சிலரே. தமிழகத்தில் ஒரு நக்கீரர் கால நெடுஞ்செழியன், ஒரு இராசராசன், வடபுலத்தில் ஓர் ஔரங்கசீப், ஒரு சிவாஜி, பண்டை உரோமத்தில் ஒரு மார்க்கஸ் அரீலியஸ் ஆகியவர்களிடத்தில் மட்டுமே, இப்பண்பை அருகலாகக் காண்கிறோம்.
ஹைதர் வாழ்வு கழிந்து, இன்று பல தலைமுறைகள், பல நூற்றாண்டுகள் ஆகி விட்டன. ஹைதர் குடிமரபு கூட, ஆங்கில ஆட்சியாளரால், தடம் தெரியாமல் அழித்துத் துடைக்கப்பட்டுள்ளது. அத்துடன் முரடன், கொடியவன், அரசியல் சூதாடி. மைசூர் அரச மரபைக் கவிழ்த்து மன்னுரிமையைக் கைப்பற்றியவன் என்றெல்லாம் ஆங்கில வரலாற்றாசிரியரும், எழுத்தாளரும், பேச்சாளரும் ஹைதரின் மாறாட்ட ஓவியந்தீட்டி, அவன் மெய்யுருவைத் திரித்துள்ளனர். இவ்வளவும் கடந்து, இன்று கூட, மைசூர் மக்களிடையே ஹைதர் பெயருக்கு இருக்கும் மதிப்பும், அவன் நினைவால் ஏற்படும் ஆர்வமும் பெரிது. அவனுக்கு முன்னும், பின்னும் இருந்த அரசர், பேரரசர் பலருக்கும் கிட்டாத பெருமை இது. இதற்கு அடிப்படைக் காரணம் அவன் வீர, தீர வாழ்வு மட்டுமன்று. மன்னனான பின்பும், அவன் மக்கட் பண்பு மாறாதிருந்தான் என்பதும், மன்னருள்ளும் மக்களுள்ளும் காணுதற்கரிய சீரிய பண்புகள் அவனிடம் இருந்தன என்பதுமே.
ஹைதரைக் கண்டு அவன் எதிரிகள் அஞ்சினர். ஏனெனில், அவன் அடற்புலியேறு போன்ற வீரமுடையவன். அவனது உட்பகைவர், நயவஞ்சகர் அஞ்சினர். ஏனெனில், அவன் கூரிய நன்மதி அவர்கள் போலிப் பண்புகளை ஒரு கணத்தில் கண்டு கொண்டது. சோம்பித் திரிபவர், சொகுசு வாழ்க்கையினர், கடமை தவறியவர் நடுநடுங்கினர். ஏனெனில் அவன் வீரத்தையும், உழைப்பையும், நேர்மையையும் மட்டுமே மதிப்பவன்; மற்றவர்களிடம் கண்டிப்பும், தண்டிப்பும் தரத் தயங்காதவன். ஆனால், பொதுமக்களுக்கு அவன் நண்பன். எளியவர்களுக்கு இறைவன். போர் வீரர்களுக்கு அவன் வள்ளல். அவர்கள் நலனுக்கு உழைக்கும் உரவோன். அவனைக் கண்டு அத்தகையவர் யாரும் அஞ்சியதில்லை. அஞ்சும்படியான தோற்றமோ, இயல்போ, பண்பாடோ, செயலோ எதுவும் அவனிடம் இல்லை.
ஹைதர் ஆஜானுபாகு அல்ல. அழகனல்ல. அவன் நடுத்தர உயரமும், கருநிற மேனியும் உடையவன். ஆயினும், அவன் உடல் கட்டுரம் வாய்ந்தது. கடு உழைப்பால், அது எளிதில் களைப்படைந்ததில்லை. தோல்விகளால் துவண்டதில்லை. உறுதி, விடாமுயற்சி ஆகியவற்றின் திருவுருவாக அது திகழ்ந்தது. இவ் எளிய தோற்றத்துக்கேற்ப, அவன் எவருக்கும் எளியவன். எவருடனும் எளிதில் பழகி, இயல்பாக உரையாடி மகிழ்பவன். தென்னாட்டவர்க்கு இயல்பான மீசையையோ, முஸ்லீம்களுக்கு வழக்கமான தாடியையோ, அவன் வைத்துக் கொள்ளவில்லை. இப்பழக்கங்களால் அவன் எளிய தோற்றம், இன்னும் எளிமையுற்றது என்னலாம்.
ஹைதரின் கூரிய, சிறிய கண்கள், அவன் நுணுகிய இயற்கை அறிவுத் திறத்துக்குச் சான்று பகர்ந்தன. வளைந்த சிறு மூக்கு இயல்பான அவன் ஆளும் திறத்தையும், கண்டிப்பையும் எடுத்துக் காட்டின. தடித்த அவன் கீழுதடு, அவன் நெஞ்சழுத்தத்துக்கும், உறுதிக்கும், விடாப்பிடிக்கும் சின்னங்களாய் அமைந்தது.
அணிமணிகளையோ, பட்டாடை, பொன்னாடைகளையோ, ஹைதர் மிகுதி விரும்பியதில்லை. ஆயினும், அவன் உடையமைதியில் மிகுதி கருத்துச் செலுத்தியிருந்தான். வெள்ளைச் சட்டையையே அவன் விரும்பி அணிந்தான். பொன்னிறப் பூ வேலை, பொன் சரிகை அருகு ஆகியவற்றில் அவனுக்குப் பற்று மிகுதி. அச்சடிப் புள்ளி அல்லது புள்ளடி இட்ட சீட்டிகளை, சிறப்பாக பர்ஹாம்பூரில் நெய்த நேரியல்களை அவன் ஆர்வத்துடன் மேற்கொண்டான். கால்சட்டைகளும், இதே வகையான, மசூலிப்பட்டணம் துணிகளால் அமைந்திருந்தன. வேண்டும் போது, நாடாக்களால் இறுக்கக் கட்டியும், மற்றச் சமயங்களில் நடுவே திறந்து விடவும் தக்க முறையில் அவை தைக்கப்பட்டன. மடித்துத் தொங்க விடும் தளர் ஆடையையும் அவன் வழங்கினான்.
அவன் விரும்பிய நிறம் சிவப்பு அல்லது நீலச் சிவப்பு. அவன் தலைப்பாகை அந்நிறங்களிலோ, மஞ்சளாகவோ இருந்தது. நூறு முழம் கொண்ட நேரிய துணியால், அது நெடு நீள உருவில், உச்சி தட்டையாய் இருக்கும்படி கட்டப்பட்டது. இவை தவிர, கரையில் ஒரு வெண் பட்டிழைக் கச்சையையும், மஞ்சள் கால் புதையாபரணமும் அவன் அணிந்து வந்தான். அரசிருக்கையில் அமரும் சமயம், மணிக்கை வைர வளையங்களும், விரல்களில் இரண்டு மூன்று, வைரக் கணையாழிகளும் இருப்பதுண்டு. அவன் அருகே, வைரமிழைத்த பிடியுடைய ஒரு வாள் தொங்கிற்று.
பூம்பாயல், மெத்தை படுக்கைகள் ஹைதருக்கு வழக்கமில்லை. பாசறைகளிலும் சரி, அரண்மனையிலும் சரி, பட்டுக் கம்பளம் ஒன்றும், இரண்டு மூன்று தலையணைகளும அவனுக்குப் போதியவையாயிருந்தன.
படையணியுடன் இருக்கும் போது, எல்லாப் படை வீரரும், தலைவரும் அணியும் அதே வகை அங்கியை, அவன் விரும்பும் வெண்பட்டுத் துணியில், விரும்பும் பூம்புள்ளிகளுடன் தைத்து அவன் அணிந்தான்.
உடையின் எளிமையாவது, ஹைதருக்கு ஒரு நடுத்தர உயர்குடியினன் தோற்றத்தைத் தந்தது. ஆனால், அவன் உணவுப் பழக்கம் குடிமக்களில் பலருக்குக் கூட வியப்பளிப்பதாயிருந்தது. இன்ன உணவுதான் வேண்டும் என்று அவன் எங்கும் கட்டளையிட்டதில்லை. வைத்த உணவை உண்டான். பல வகை உணவு, பல சுவை உணவு வைத்திருந்த இடங்களில், அவன் கூடிய மட்டும் எல்லாவற்றிலும் சிறிது உண்பானேயன்றி, வேண்டியது உண்டு, வேண்டாதது விலக்கியதில்லை. ஆயினும் இயற்கை விருப்பு வெறுப்புப் பற்றிய மட்டில், அவன் இனிப்பை அவ்வளவாக விரும்பியதில்லை என்றே கூற வேண்டும். புளிப்பு, கைப்புச் சுவைகளையே மிகுதி விரும்பினான். நிறை உணவு முடிவிலே, அவன் சோறும், பருப்புமே உண்ணும் விருப்புடையவனாயிருந்தான்.
பயணங்களிலும், போர் நடவடிக்கை நேரங்களிலும், அவன் சேமம் செய்து கொண்டு வரப்பட்ட அரிசி அல்லது கேப்பை அடையையே உண்டான். அத்தகைய உணவை உண்பதில், பொதுப் படை வீரர் கூடச் சவித்துக் கொள்வதுண்டு. அவன் சலித்துக் கொள்வதில்லை.
அரசிருக்கையில் கொலு வீற்றிருக்கும் பெருமித ஆடம்பரத்தை மன்னரும், மக்களும் விரும்புவதுண்டு. மன்னர் அவற்றில் பெருமை கொள்வதும் உண்டு. ஹைதர் மக்களுக்கான இன்றியமையாத வேளைகளிலன்றி, மற்ற சமயங்களில் அவற்றை விரும்புவதில்லை. ஆனால், மைசூரில் ஹைதருக்கு முன்னாளிலிருந்து இந்நாள் வரை, அரச மரபினர், தசராக் கொண்டாட்டத்தில் மிகவும் ஈடுபட்டு வந்துள்ளார்கள். மக்களுக்கும் அது ஒரு தேசீயப் பெருவிழா ஆக இருந்து வந்துள்ளது. ஹைதர் முஸ்லீமானாலும், பழைய அரச குடும்பத்தினரை மகிழ்விப்பதற்காகவும், மக்களுக்குரிய சமயப் பற்றுக்கும், எழுச்சிக்கும், ஊக்கமளிப்பதற்காகவும் அத்தருணத்தில் தனிச் சிறப்பான கொலு நடத்துவது வழக்கம்.
நாடகங்களும், படக் காட்சிகளும் இந்நாளில், பொது மக்கள் பொழுது போக்காக மலிந்துள்ளன. ஹைதர் நாட்களில், இத்தகைய பொதுப் பொழுது போக்குகள் மிகக் குறைவே. விலங்குக் காட்சிகள், பொருட்காட்சிகள் கூட இன்றளவு அன்று பெரும் பழக்கமாயில்லை. மற்போர், குத்துச் சண்டை, விலங்குப் போர் ஆகியவையே இவற்றினிடமாக அன்று நடைபெற்றன. ஹைதர் இவற்றை ஊக்கியது மட்டுமன்றி, அதில் அடிக்கடி தானே முனைந்து ஈடுபடுவதுண்டு. மான் போர், யானைப் போர், வாண வேடிக்கை, குத்துச் சண்டை, மற்போர் ஆகியவற்றில், அவன் நேரடியாகச் சென்றிருந்து, பரிசும், பாராட்டும் வழங்குவதுண்டு. பரிசுப் போட்டி சண்டைகளில் ஒரு வகை, ஹைதர் நாட்களில் அவனால் பெரிதும் ஆதரிக்கப் பட்டது. அதில், கள் அருந்தப்பட்ட கழுதைகளுடனே, கட்டுண்ட புலி போருக்குத் தூண்டப்படும். இன்னும் சில சமயம், சிறந்த அபிஸீனிய வீரரோ அல்லது விரும்பும் வேறு பிறரோ, புலி, சிங்கங்களுடன் சண்டை செய்யும்படி ஏற்பாடு செய்யப்படும். சண்டைக்கான தனியிடத்தில், நடுவே ஒரு வாழை மரம் நடப்பட்டிருக்கும். சிங்கமும், ஆளும் அதைச் சுற்றி மாறி, மாறித் தாக்க வேண்டும். மர மறைவிலிருந்து, சிங்கத்தை வீரர் குத்த வேண்டும். சிங்கம் மாண்டால், வீரனை மன்னன் பரிசுகளாலும், பொன்னணி மணிகளாலும் மூழ்குவிப்பான். ஆனால், சிங்கம் வென்றால், வீரனுக்குப் பரிசு கிடைக்காது. ஆனாலும், பெரும்பாலும் ஹைதர் அரங்கில் இருக்கும் போது, வீரன் மாள்வதில்லை. ஏனென்றால், விலங்கு வெல்லும் சமயம், ஹைதரின் குறி தவறாத துப்பாக்கிக் குண்டுக்கு, விலங்கு இலக்காகி விழுந்து விடும். இத்தகைய தருணங்களில், பந்தயப் போரில் மன்னனே பங்கு கொண்டு, தன் திறமையைப் பயன்படுத்துவது உண்டு. அந்நாளைய மைசூர் மக்கள் எல்லையில்லாத மகிழ்வும், பெருமையும் உடையவராயிருந்தனர்.
தனி வாழ்க்கையிலும், நண்பர்களிடையிலும், ஹைதர் எல்லாருடனும் தாராளமாகக் கலந்து பேசும் இயல்புடையவன். அவன் தாய்மொழி கன்னடம். அதன் கொச்சைச் சொற்களை, அவன் மிக அடிக்கடி கையாளுவது வழக்கம், அவன் உள்ளத்தில் வஞ்சகமும், பகைமையும் கிடையாது. ஆனால், கோபத்தில் கடுந்திட்டும், வசவும், நையாண்டியும் அவனிடம் ஏராளம். அதே சமயம், நெருங்கிய நண்பர்கள், வீரப் படைத் தலைவர்கள் எதிர்த்துத் திட்டினாலும், நையாண்டி செய்தாலும், பொறுத்துக் கொள்ளும் பண்பு அவனிடம் உண்டு. அரசியல் காரியங்களில், அவன் மிகுதி பேசுவதில்லை. ஆனால், பேசும் போது, கண்டிப்பும், அறிவுச் செறிவும் மிகுதியிருந்தது. அவன் கருத்துக்களை, அவன் கீழ்ப்பட்ட பணியாளர்களும், நண்பர்களும் மட்டுமன்றி, அறிஞர்களும், தனித் துறைகளின் வல்லுநர்களும் மதித்தார்கள்.
இளமையில், ஹைதர் பள்ளியில் நிழலுக்குக் கூட ஒதுங்கியது கிடையாது. இது காரணமாக, அந்நாளைய முஸ்லீம் அரசர் அரசியல் மொழியாகிய பாரசீக மொழியிலோ, தாய் மொழியாகிய கன்னடத்திலோ ஹைதருக்கு எழுத்தறிவு கிடையாது. பத்திரங்களிலும், ஒப்பந்தங்களிலும், கட்டளைத் தாள்களிலும் கையொப்பமிடும் போது, அவன் பாரசீக மொழியில், ‘ஹைதர்’ என்ற பெயரின் முதலெழுத்தான ‘ஹை’ என்பதை மட்டும் எழுதப் பழகியிருந்தான். அந்த எழுத்தைக் கூட, அவன் தலை மாற்றியும், ஒரு தடவைக்கு இரு தடவையாகவும் எழுதினான்.
எழுத, வாசிக்கத் தெரியாத காரணத்தினால், ஹைதருக்கு வாழ்விலோ, ஆட்சிப் பொறுப்புகளிலோ எவ்வகையான குந்தகமும் கிடையாது. இதே நிலையில் இருந்த அக்பர், அசோகன் முதலிய அரசர்கள், கல்வி வல்லார்களின் உதவியாலேயே காரியம் ஆற்றினர். ஆனால், ஹைதர் பள்ளிக் கல்வியில்லாதவனாயிருந்தாலும், ,அறிவாற்றலிலும் பெரும் புலவர்களையும் விஞ்சியவனாயிருந்தான்.ஹைதரின் நினைவாற்றல், மனித எல்லை கடந்த ஒன்றாகவே இருந்தது. கேட்ட ஒவ்வொரு சொல்லையும், பல ஆண்டு கடந்தும், அவன் நினைவில் வைத்திருப்பான். ஒரு தடவை கண்ட முகத்தையும், அது போலவே, இருபது, முப்பது ஆண்டுகள் கழித்தும், அவன் அடையாளம் கண்டு கொள்வான். உருவை மறைக்கும் வகையில், மேற்கொள்ளப்படும் உரு மாறாட்டங்கள் கூட, அவன் வகையில் பயன்படுவதில்லை. எத்தனை ஆண்டு கழித்தும், எந்தச் சூழலிலும், எந்த வேடத்திலும், அவன் ஆளையறிந்து கொள்வது கண்டு, அவன் நண்பர் வியப்படைந்தனர். அவன் எதிரிகள் அஞ்சி நடுங்கினர்.
ஒரு தடவை, ஒரு குதிரைச் சேணம் பழுதாய் விட்டது. அது பயன் படாதென்று எறியப்பட்டது. அது குப்பையுடன், குப்பையாய்க் கிடந்தது. குப்பை கூட்டுபவர் கூட, அதைக் கவனிக்கவில்லை. அது பற்றி, எவரும் எண்ணவும் இல்லை. பல ஆண்டுகளுக்குப் பின், சேணங்களை மேற் பார்வையிடும் போது, ஹைதர் ‘பழுதுபட்டு எறியப்பட்ட சேணம் எங்கே?’ என்று கேட்டான். எல்லாரும் விழித்தனர். ஹைதர் சேணத்தின் அடையாள விவரங்களை நுணுக்கமாகத் தெரிவித்தான். அந்த அடையாள விவரங்களை, மனதிற் கொண்டு தேடிய பின், அது குப்பைக் கூளத்தில் புதையுண்டு கிடந்து, கண்டெடுக்கப்பட்டது.
பல ஆண்டுகளுக்கு முன், கண்ட ஆண்களை மட்டுமன்றி, அவர்கள் குரலையும், பல செய்திகள் பற்றிய நுட்ப, நுணுக்க விவரங்களையும், அவன் கூரிய உள்ளம் விடாது பற்றிக் காக்கும் இயல்புடையதாயிருந்தது.
ஒரே சமயத்தில், பல காரியங்களிலும் ஈடுபட்டு, எல்லாவற்றிலும் ஒருங்கே கருத்துச் செலுத்தும் திறமும், ஹைதரிடம் இருந்தது. கடிதங்களை ஒருவர் வாசிப்பதைக் கேட்டுக் கொண்டே, கட்டளைகளை எழுதுபவருக்குக் கட்டளை வாசகம் கூறல், வேலை செய்பவர்களை மேற்பார்த்தல், கணக்குப் போட்டுப் பார்த்தல் முதலியவற்றையும் செய்து, எதிலும் வழுவில்லாமல் நிறைவேற்றும் அவன் ஆற்றல் வியப்புக்குரியதாயிருந்தது. காலை வேளையில், அம்பட்டன் அவனை வழித்துக் கொண்டிருக்கும் போதே, ஒற்றர்கள் கூறிய செய்திகளை அவன் கேட்பான். நினைவுக் குறிப்பு எதுவும் இல்லாமலே, ஒருவர் செய்தியுடன், மற்றவர் செய்தியை ஒப்பிட்டு, அவன் தேவைப்பட்ட போது, அவர்களைக் குறுக்குக் கேள்விகள் கேட்டான். குறிப்புகளுடன் வந்த ஒற்றர்கள், அவன் கேள்விகளுக்கு விடை கூறத் திணறுவார்கள்.
நினைவாற்றலிலும் அரிது, அவன் அறிவாற்றல். அவனுடன் பழகியவர்களுக்கு அது ஒரு மாய ஆற்றலாகவே இருந்தது. உண்மையில், அது அவன் ஆழ்ந்த அனுபவம், கூரிய மதி நுட்பம் ஆகியவற்றின் பயனேயாகும். குதிரைகள், மணிக் கற்கள், தோல் வகைகள் ஆகிய எப்பொருளையும் கண்ட மாத்திரத்தில், அவனால் மதிப்பிட்டுத் தேர்ந்து விட முடிந்தது. படை வீரர், படைத் தலைவர், பணித் துறையாளர் ஆகியவர்கள் முகங்களை ஒரு தடவை கண்டதுமே, அவர்கள் தகுதி, திறமை, நேர்மை, அனுபவம், அவர்கள் உள்ளத்தின் சிந்தனைகள் ஆகிய அத்தனையும், அவன் குறித்துணர வல்லவனாயிருந்தான். படைத் துறையில் அவன் அனுபவம், விலை மதிப்பற்ற ஒரு மூலதனமாய் அமைந்தது. ஏனென்றால், அவன் தேர்ந்தெடுத்த படைக்கலங்கள், குதிரைகள், ஆட்கள் எல்லாம், என்றும் தலை சிறந்த தேர்வுகளாகவே இருந்தன.
இவ்வருந்திறமையால், மைசூரின் ஆட்சியரங்கங்களிடையே அவன் ஒரு பெரிய அனுபவ ஆட்சியரங்கமாக விளங்கினான். அவன் கால மன்னர்கள் மட்டுமன்றிப் பல நாட்டின் அறிவுத் துறை வல்லுநர்களும், அவன் இயற்கையறிவாற்றல் கண்டு திகைத்துப் போயினர். ஆங்கிலேயர்களே அதற்குப் பல சான்று கூறுகின்றனர்.
ஹைதர், தன் வாழ்வில், ஒரு மணி நேரத்தைக் கூட வீணாக்கியதில்லை. உழைப்பும், சுறுசுறுப்பும், விடா முயற்சியும் அவனிடம் உச்ச நிலையில் இருந்தன. இதன் பயனாகவே, வாழ்நாள் முழுவதும் ஓயாத போராட்டத்திலீடுபட்டிருந்தும், அவன் அதன் இடைவேளையிலேயே, நாட்டாட்சியின் ஒவ்வொரு செயலையும், தன் குடும்பத்தின் நிர்வாக முழுவதையும் தானே, நேரிடையாகக் கவனித்துத் திட்டம் செய்ய முடிந்தது. அவன் கண் கூடாக நேரிலிருந்து, பார்த்துச் செய்யாத செயல் எதுவும் கிடையாது. அத்துடன், எந்தக் காரியத்தையும் நீள நினைந்து, வழுவறத் திட்டமிட்டல்லாமலும் அவன் செய்ததில்லை. உணர்ச்சி, விருப்பு, வெறுப்பு, கோபம் எதுவும் அச்செயல்களில் இடம் பெறவில்லை.
அவன் தனக்கு உண்மையானவர்களுக்கு, தனக்காக உயிரைப் பாராமல் உழைத்தவர்களுக்குத் தாராளமாக வாரி வழங்கினான். போர்க் களத்துக்குப் படைகளை அனுப்பி விட்டு, அவன் தலைவனாக ஒதுங்கியிருக்கவில்லை. பிள்ளையைக் களத்திற்கு அனுப்பி விட்டு, அவனையே நினைந்து, நினைந்து செயலாற்றும் தாய் போல, அவன் அவர்களுக்கு நினைந்து, நினைந்து ஆதரவுகளும், துணையும் செய்தான். நாள் தவறாமல், படை வீரர்களுக்கு மருத்துவ உதவி, பணம், உணவுப் பொருள்கள் அனுப்பி, அவர்கள் நலம் உசாவி வந்தான். இறந்தவர் குடும்பங்களை, அவன் தன் குடும்பமாகப் பேணினான். காயமுற்றவர்களை, அரசாங்கச் செலவில் குணப்படுத்தி, ஓய்வுடனே சம்பளமும், குடும்ப மானியமும் அளித்தான். படை த் துறைகளிலும், பணித் துறைகளிலும் அனுபவ மிக்கவர்களுக்கும், உண்மையானவர்களுக்கும் அடிக்கடி பரிசும், பாராட்டும் வழங்கி ஊக்கினான்.
சோம்பேறிகள், கடமை தவறியவர்கள், பொது மக்களைச் சுரண்டியவர்கள் ஆகியோருக்கு ஹைதர் பொல்லாத கூற்றுவனாயிருந்தான். இத்தகைய குற்றஞ் செய்தவர்களை, அவன் கடுமையாகத் தண்டிக்கவோ, பதவியிலிருந்து நீக்கவோ தயங்கவில்லை. நீக்கிய பின், இரக்கம் காட்டுவதுமில்லை. ஆனால், இவ்வகையில் அவன் பொது மக்களையோ, பார் மக்களையோ நடத்தியது போலவே, தன் புதல்வர்களையும், உறவினர்களையும் நடத்தினான். நேர்மையில் அவன் என்றும் வழுவியது கிடையாது.
வீரருக்கும், வீரப் படைத் தலைவர்களுக்கும் ஹைதர் காட்டிய மதிப்பை, உலகில் வேறு எந்த அரசனும், அரசியல் தலைவனும் காட்டியிருக்க முடியாதென்னலாம். திறமை, தகுதி, அனுபவம், உண்மைப் பற்று ஆகியவை காரணமாகவே, அவன் ஆட்களைத் தேர்ந்தெடுத்தான். ஆதரித்து, உயர்த்தினான். ஆனால்,உயர்த்திய பின், அவர்கள் பெற்ற உரிமையும், சலுகையும், நண்பர், குடும்ப உறுப்பினர் கூடப் பெற்றிருக்க முடியாது. இதற்கு இரு நிகழ்ச்சிகள், ஒப்பற்ற சான்றுகளாகின்றன.
சர்க்கூலிப் போரைப் பற்றிய பேச்சு, ஒரு நாள் எழுந்தது. ஹைதர் உட்படப் படைத் தலைவர்களும், படை வீரர்களும் விழுந்தடித்துக் களம் விட்டு ஓடிய நிகழ்ச்சி அது. அதன் நினைவு, ஹைதரைச் சோகத்தில் ஆழ்த்திற்று. ஆனால், அவன் தன் வெப்பத்தை உடனிருந்த தலைவர் மீதே கொட்டினான். “ஆம்! அன்று நம் படைத்தலைவர்கள் அத்தனை பேரும் கோழைகளாக, ஆட்டுக் கூட்டங்களிலும், கேவலமாக நடந்து கொண்டார்கள். அது மட்டுமன்று; தங்கள் உயிரை வெல்லமாகக் கருதி, அதைக் காப்பதற்காக, ஆயிரக்கணக்கான வீரரை வீணே பலி கொடுத்தனர். அதை நினைக்கும் போது, இத்தகைய நன்றி கெட்டதுகளை வைத்துக் காப்பாற்றுவதற்காக நான் வெட்கப்படுகிறேன்” என்றான். மன்னன் கடுமொழிகள் கேட்டு, எல்லோரும் தலை குனிந்திருந்தனர்.
படைத் தலைவர்களிடையே, அப்போது யாஸீன் கானும் இருந்தான். அவன் செயலை எண்ணியிருந்தால், ஹைதர் அவ்வாறு பேசியிருக்க முடியாது. அவன் அப்போரில் பட்ட காயங்களுக்கு, எல்லை இல்லை. அதிலேயே அவன் ஒரு கண்ணையும் இழந்திருந்தான். அத்துடன், அவன் ஹைதராக நடித்து, ஹைதரையே காப்பாற்றியிருந்தான். அதன் பயனாக, அவனுக்கு நூறு குதிரை வீரர்கள் காவற் படையினராக அளிக்கப்பட்ட போது, அவன் “எனக்கு ஒரு குதிரையே போதும், நூறு வேண்டாம்” என்று கூறி விட்டான். இக்காரணத்தால் அவன் ‘ஒண்டி குதிரி’ அல்லது ‘ஒற்றைக் குதிரையன்’ என்று கேலிப் பெயரும் பெற்றிருந்தான்.
இத்தகைய வீரன், ஹைதர் கடுமொழி கேட்டுத் திடுமெனச் சினங் கொண்டான். “சரிதான் அரசே. நாங்கள் சிறிது தோற்றதனால், இவ்வாறு கூறுகிறீர்கள். ஆனால், தோல்வியும், வெற்றியும் முழுதும் மனிதன் செயலுக்குட்பட்டதன்று. போகட்டும். நாங்கள் இல்லாமல் போனாலும், அன்று நீங்கள் தோல்விதான் அடைந்திருப்பீர்கள்.ஆனால், எனக்கு இந்தக் கண் போயிருக்காது. அந்தக் கண்ணை உங்களுக்காகக் கொடுத்தேனே, உங்களுக்கு நன்றி இருக்கிறதா?” என்றான்.
ஹைதர் தலை கவிழ்ந்து கொண்டான். “நான் உங்களை மறந்து பேசி விட்டேன்” என்றான்.
இது மட்டுமல்ல; ஹைதரைப் போல், சர்க்கூலியில் நடிப்பதற்காகவே, அவன் தோல்வியின் நடுவே, தாடி சிரைத்துக் கொண்டான். ஆனால், பிற்பட அவன் மீண்டும் தாடி வளர்த்தான். இது கண்ட ஹைதர், “நண்பரே! இப்போது ஏன் தாடி வளர்க்கிறீர்? இனி என்னைக் காப்பாற்ற வாய்ப்பு ஏற்படாதென்றா?” என்று கேட்டான். என்ன காரணத்தாலோ, யாஸீன் அப்போது சுண்டிப் பேசினான். “தாடி, மீசையில்லாதவர்கள் பேடிகள் என்று கேள்விப்படுகிறேன் அரசே. அதனால்தான் தாடி வளர்க்கிறேன்” என்றான். ஹைதர் கேலிப் பேச்சைக் கூட உடனே நிறுத்தி விட்டான்.
ஒரு தடவை, படைத் தலைவன் முகமதலி படைத் துறைச் செலவுக்குப் பணம் கோரினான். நிதிக் கணக்கரும், அருகிலேயே இருந்தனர்.ஆனால், நாணய செலாவணி பற்றி, ஹைதர் ஏதோ சச்சரவில் ஈடுபட்டிருந்தான். அவன் எரிச்சல், படைத் தலைவன் பக்கமாகத் திரும்பிற்று. "படைச் செலவு, படைச் செலவு என்று மாதம் மூன்று தடவை பணம் வாங்குகிறீர். இவற்றை எல்லாம் என்னிடமிருந்து பறித்து, என்னை ஓட்டாண்டியாக்கி, கோடீஸ்வரனாகப் பார்க்கிறீர். எல்லாம் பார்க்கிறேன். உம்மைத் திருடனென்று சரியானபடி தண்டித்து, நீர் சேர்த்து வைக்கும் தங்கக் காசுகள் அத்தனையையும் பறிமுதல் செய்கிறேனா, இல்லையா பாரும்! போம், போம். இப்போது இங்கே நிற்க வேண்டாம்" என்றான்.
முகமதலி மன்னனிட மிருந்து முகந் திருப்பி நிதிக் கணக்கரை நோக்கினான். “நம் தலைவர், தாம் எல்லாம் அறிந்தவர் என்று நடித்து, நம்மை ஏமாற்றப் பார்க்கிறார். அவர் மண்டையில், மூளையில்லை என்பது நமக்குத் தெரியாதா என்ன? அவர் கிடக்கிறார். அரசாட்சியின் பொறுப்பு அவருக்கு என்ன தெரியும்? நீங்கள் பணத்தைக் கொடுங்கள்” என்று அமைதியாகக் கேட்டான்.
நிதிக் கணக்கர் விழித்தனர்.
“இந்தச் சனியன் பொல்லாத சனியன். கேட்ட பணத்துக்கு மேல், ஒன்றிரண்டு நூறு கொடுத்து ஒழித்துக் கட்டுங்கள்” என்று கூறி, ஹைதர் நிதிக் கணக்கர்களுக்கு ஆணை பிறப்பித்தான்.
இஸ்லாமிய மன்னர், பெருமன்னரிடையே மிகச் சிறந்தவர்கள் கூடச் சமயத் துறையில் மட்டும் வெறியுடையவர்களாக இருந்ததுண்டு. அக்பர், ஷாஜகான் போன்ற வடபுல மன்னர்கள் இதற்கு விலக்கானவர்கள் என்று புகழப்படுவதுண்டு. இது பெரிதும் உண்மையே. ஆனால், அக்பரும், ஷாஜகானும் தங்கள் ஆட்சி நலனைக் கருதி, அரசியல் தந்திர முறையிலேயே, சமரசப் பண்பாளராயிருந்தனர். இன்னும் சிலர், எம்மதமும் சம்மதமே என்ற ஆழ்ந்த சமயப் பற்றற்ற பொது நிலையிலேயே சமரசம் பேணியுள்ளனர். ஆனால், ஹைதரின் சமரசம் ஆழ்ந்த சமய உணர்வின் பயனாக எழுந்ததேயாகும். அக்பர் சமரசத்தையும், ஷாஜகான் சமரசத்தையும் போற்றும் ஆங்கில வரலாற்று ஆசிரியர், தெரிந்தோ, தெரியாமலோ ஹைதரைச் சமயத் துறையில் அசட்டையாளன் எனக் குறிப்பிடுகின்றனர். இது தவறு என்பதை கீழ் வரும் செய்திகளும், ஹைதர் வாய்மொழிகளும் காட்டும்.
தசராக் கொண்டாடுவது பற்றியும், சைவ, வைணவக் கோயில் மானியங்களைக் குறைக்கவாவது செய்யாமல் வழங்குவது பற்றியும் இஸ்லாமியத் தலைவர் குறைப்பட்டனர். இது சமயப் பகைமைச் செயலாகும் என்றனர். “சமயப் பகைவர்க்கு உதவுவதும், நலம் செய்வதும் சமயப் பகைமை ஆக மாட்டாது. நபிகள் நாயகம் அது செய்ததால்தான், நாம் முஸ்லீம்களாயிருக்கிறோம்,” என்று விளக்கம் தந்தான் ஹைதர்.
இயேசுபிரானிடம், சமயப் பிற்போக்கராகிய புரோகிதர் குறுக்குக் கேள்வி கேட்ட போது, இயேசுபிரான் கூறிய நகைச்சுவையும், பண்பும் வாய்ந்த விளக்கங்கள் பல. ஹைதரிடம் இஸ்லாமிய சமயத் தலைவர், கட்சி எதிர்க் கட்சியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு, அவன் தந்த விடை விளக்கங்கள் இயேசு பிரான் விளக்கங்களின் அருகே வைக்கத் தக்க சிறப்புடையவை ஆகும்.
ஒரு நாள் வாய்ச் சண்டையிலிருந்து கைச்சண்டைக்கு முதிர்ந்து விட்ட, ஒரு சமயப் பூசல் ஹைதரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. முஸ்லிம்களிடையேயுள்ள ஷியா, ஸுனீ வகுப்பினரிடையே நிகழ்ந்த வாதம் அது. முகமது நபிக்குப் பின் சமயத் தலைமை தாங்கிய குரவர்களில் ஷியாக்கள் சிலரைப் பூசித்தனர். சிலரைக் குறை கூறினர். குறை கூறப்பட்டவர்களே ஸுனீகளால் பூசிக்கப்பட்டவர்களாததால்,. சண்டை வளர்ந்தது. ஹைதர், இரு தரப்பாரையும் அழைத்து, அவரவர் வாதங்களைக் கேட்டான்.
“அரசே! நம் சமயக் குரவரைப்பற்றி, இந்த ஷியாத் தலைவர்கள் தூற்றுகின்றனர். அதை எங்ஙனம் பொறுப்போம்?” என்றனர் ஸுனீத் தலைவர்கள்.
“அரசே! சமயக் குரவர் என்று அவர்கள் போற்றுபவர்கள், இன்னின்ன தீமையைச் செய்தார்கள் என்று காட்டித்தானே குறை கூறுகிறோம். தீமை செய்யவில்லை என்று அவர்கள் கூற முடியவில்லை- குறை கூறுவதை மட்டும் எதிர்ப்பானேன்?” என்றனர் ஷியாக்கள்.
ஹைதர் தீர்ப்பளித்தான், அது ஒரு தரப்பாரையே கண்டித்தாலும், சமயக் கிளையினரிடையே ஒரு தலைச் சார்பாயில்லை. ஷியாக்களைப் பார்த்து அவன், “அன்பரீர், நீங்கள் குறிப்பிட்ட குரவர்கள் இப்போது வாழ்பவர்களா?” என்று கேட்டான்.
“இல்லை” என்றனர் அவர்கள்.
மன்னன் உடனே சினத்துடன் பேசினான்: “ஆளில்லாத போது புறங் கூறுவது தவறு. மாண்டவரைக் குறை கூறுவது கோழைத்தனம். மன்னிக்க முடியாத குற்றம். அதற்கு நீங்கள் தண்டனை பெறத் தக்கவர்கள். இனி இச்செயல் செய்யாதீர்கள். போங்கள்” என்றான்.
மற்றொரு சமயம் ஷியாக்களும், ஸுனீக்களும் கலந்து அளவளாவும் சமயம், அவர்களிடையே பூசலுண்டு பண்ணத்தக்க ஒரு கதையை ஒருவன் அளந்தான். “குதிரையேறிச் செல்லும் ஒருவன், சேற்று நிலங் கடக்க வேண்டி வந்தது. குதிரையின் கால்கள் சேற்றில் ஆழப் பதிந்து விட்டன. சமயக் குரவர் பெயர்களை ஒவ்வொன்றாகக் கூறி, ‘அவர்கள் அருள் துணையால் குதிரையின் கால்கள் மேலெழுக,’ என்று அவன் வேண்டினான். வாய்மையிற் சிறந்த அபூபக்கர், நேர்மை சான்ற ஹஜ்ரத் உமர், அறிவுத் திறம் வாய்ந்த ஹஜ்ரத் உஸ்மான் ஆகியவர்களை வேண்டியும் பயனில்லாது போயிற்று.பின், வல்லமை வாய்ந்த மூர்த்துஸா அலியை வேண்ட, குதிரை கால் தூக்கி நடந்தது. வேறு சமயக் கிளையினர் தலைவர் பெயரை மதித்த குதிரை பகைச் சமயக் குதிரையாய்த்தான் இருக்க வேண்டுமென்று கருதி, பிரயாணி குதிரையை உடை வாளால் குத்திச் சாய்த்தான்.” இக்கதையைக் கூறிய பின், கதையளந்தவன் அது பற்றிய பிறர் கருத்துரை கோரினான். கருத்துரைகளால் வரவிருக்கும் பூசலை அறிந்த ஹைதர், தன் கருத்துரையை முற்படக் கூறினான்: “அன்பரே, அந்தப் பிரயாணி முற்றிலும் அறிவில்லாதவன் என்று தெரிகிறது. வாய்மை, நேர்மை, அறிவுத் திறம் ஆகிய பண்புகளால் குதிரையின் காலைத் தூக்க முடியவில்லை. வல்லமையால் தூக்க முடிந்தது. இந்த இயல்பை அந்த மட்டில் அறியாமல் போனான்,” என்றான்.
இந்த இயல்பான விளக்கம், சமயவாதிகளின் விளக்கத்துக்கும், அதன் பயனாக எழுந்திருக்கக் கூடும் பூசலுக்கும் ஒரு தடையிட்டது.ஹைதரின் இயல்பான நகைத் திறன். பேச்சு வன்மை, நடு நிலைமை ஆகியவற்றை மேலும் இரு நிகழ்ச்சிகள் காட்டுகின்றன.
‘அடிமைப் பெண்’ என்ற பொருளுடைய ‘லௌண்டிகா’ என்ற சொல்லை ஹைதர் அடிக்கடி வழங்குவதுண்டு. அது திட்டுவதற்குப் பயன்படும் சொல்; அருமையாக அழைப்பதற்கும் பயன்படுவது. படைத்தலைவன். அலி ஸுனீமான் கான் ஒரு நாள், ‘இந்தச் சொல் கொச்சையானது. ஹைதரைப் போன்ற பெருமன்னன் வாய் மொழியில் இடம் பெறும் தகுதியுடையதன்று’ என்று மெல்லக் கடிந்தான். ஹைதர் நகைச்சுவையுடன், இதற்களித்த மறுப்பு, சமயவாணர் நூலறிவுக்கு மிகவும் இனிதாயிருந்தது. “அன்பரே, என்ன இருந்தாலும் என் போன்றவரும், உம் போன்றவரும் அடிமைப் பெண்களின் மக்கள்தான்! பீடுடை மாதர் பெற்ற திலகங்கள் என்ற பெயருக்குப் பாத்திரமானவர்கள் ஹுசேன் துணைவர்கள் மட்டும்தான் என்பது உமக்குத் தெரியாதா?” என்றான்.
மறை நூலுரை மரபுக்குப் புது வழக்கு அளித்த இம்மறு மொழியின் சுவையில், சமயவாணரைப் போலவே நண்பர்களும் நெடிது ஈடுபட்டு, மகிழ்ந்தார்கள்.
தகுதியில் குறைந்த மன்னரைப் போல, ஹைதர் முகப் புகழ்ச்சியை விரும்புவதில்லை. முகப் புகழ்ச்சியை நயமாகக் கடிந்து, தன் மதிப்புணர்ச்சியைத் தூண்டுவதில், ஹைதர் திறம் பெரிதாயிருந்தது. கீழ் வரும் நிகழ்ச்சி, இதற்குச் சான்று. சுரா மாகாணத்தின் தலைநகரில் ஒரு புது மரபு இருந்தது. கல்லறை மாடங்கள், அங்கே வீடுகளின் முன், தெரு நடுவே இருந்தன. அந்நகரத்தை வென்றபின், ஹைதர் இச் செய்தியைச் சுட்டிக் காட்டினான். ‘இதற்கு என்ன காரணம்?’ என்று நண்பர்களைக் கேட்டான். “மன்னரே, தங்கள் ஆட்சி ஏற்பட்டது கேட்டு, காடாய்க் கிடந்த இந்த இடத்தில் மக்கள் குழுமியுள்ளனர். காடுகளிலிருந்த கல்லறைகள் அப்படியே இருக்கின்றன” என்றனர்.
இம்முகப் புகழ்ச்சி மிகவும் திறமையும், நயமும் உடையதே. ஆனால், ஹைதர் அதை ஏற்க விரும்பாமல், எதிர் விளக்கம் தந்தான். “அப்படியன்று, அன்பரீர்! இந்நகரத்து மக்கள், தங்கள், தங்கள் இல்லங்களுக்காகப் போராடி மாண்டவர்கள் என்பதை நீங்கள் காணவில்லை” என்றான்.
விளக்கம் நண்பர்களுக்கு ஒரு அறிவுரையாகவும் அமைந்தது.
எதிரிகள் கண்களிலும், போர் வரலாற்றிலும் ஹைதருக்கிருந்த பெருஞ்சிறப்பு, அவன் வீரமும், வீரத் தலைமைத் திறமும், போர்த் திறமுமே. போர் வீரருடன், போர் வீரன் வாழ்க்கையை ஏற்ற தலைவன் ஹைதர். போர் வீரருக்கு, அவன் ஒரு முன் மாதிரியாய் அமைந்தான். தோல்வி கண்டு துவளாமல், கட்டிடர்கள் கண்டு கலங்காமல், இடரில் குதித்து விளையாடியவன் அவன். இத்தகைய தலைவனை, வீரர் விரும்பிப் பின்பற்றி, ஆர்வத்துடன் அவனுக்காக மாண்டது இயல்பு. இது ஒன்றே அவனை ஒப்பற்ற படைத் தலைவனாக்கப் போதியது. ஆனால் இதுவன்றி, வேறு பல ஒப்பற்ற திறங்களும் அவனிடம் இருந்தன. துணிகரமான, அறிவார்ந்த திட்டம், திறமை வாய்ந்த போர் முறைகள், விடாமுயற்சி. ஆகியவை போர்க் களங்களில் அவனை மனித கிங்கரனாக்கிற்று. இவை போதாமல், அவனுக்கே உரிய வியத்தகு திறம் இன்னொன்றும் இருந்தது. அவன் தன் படைகளை மாற்றார் வியக்கும்படி இம்மெனு முன், இருநூறும் முந்நூறும் தாண்டிக் கொண்டு சென்று, எதிர்பாராமல் மின்னலெனப் பாய்ந்து, இடியென மோதி விடும் திறமுடையவனாயிருந்தான். ஆங்கிலேயரைப் போரில் திணறடித்த பண்பும், 1779-ல் சென்னை நகரைக் கலக்கிய திறமும் இதுவே.
வீரனாகவும், தலைவனாகவும் பிறந்தவன் ஹைதர். பழங்கால வாட்போரிலும், புதிய காலத் துப்பாக்கிப் போரிலும் ஒருங்கே, அவன் அக் காலத்தின் ஒப்புயர்வற்ற கை காரனாயிருந்தான்.
ஹைதர், ஒற்றர், வேவுகாரர், தகவல் சேகரத்தார்கள் ஆகியவர்களைத் திறம்பட இயக்கினான். அவன் அமைத்த தகவல் சேகரக்காரர் அமைப்பே, பின்னாட்களில் பத்திரிகை அமைப்பு ஏற்பட வழி கோலிற்று. ஒற்றற் படைத் தலைவன் என்ற முறையில்தான் அவன், மற்ற அரசர்களை விட, மிகுதியாகக் காலம், இடம், சூழல்களை நன்றாக உணரத் தக்கவன் ஆனான். இதுவே அவனைத் தென்னாட்டின் தேசிய வீரனாக்கிற்று.
ஹைதரின் குறைபாடுகளில் ஒன்று, அவன் முன் கோபமே. இது பற்றிய ஒரு சுவைகரமான செய்தி கூறப் படுகிறது. தம்பட்டசாலைத் தலைவன் அல்லது தாரோதா, செப்பு நாணயத்தின் மீது என்ன உருவம் பொறிப்பது என்று கேட்க வந்தான். ஏதோ சச்சரவிலீடுபட்டிருந்த ஹைதர், “போ, ஏதேனும் ஒழுக்கங் கெட்ட சித்திரம் பார்த்து பொறித்து வை” என்றான். அப்பாவி தாரோதா சொன்னபடியே ஒரு படம் உருவாக்கித் தம்பட்டமடித்தான். நாலைந்தாயிரம் நாணயம் அடிக்கப்பட்ட பின்னரே, சில பெரியோர்கள் ஹைதரிடம் வந்து அது பற்றி முறையிட்டார்கள். அதன் மீது வெளியிடப்பட்ட நாணயங்கள் திரும்பியழைக்கப்பட்டு, உருக்கப்பட்டனவாம்!
ஹைதரின் பொன்னாணயம் ‘ஹொன்’ அல்லது பொன் என்பது. அதன் ஒரு புறம் ‘ஹை’ என்ற பாரசிக எழுத்தும், மறுபுறம் புள்ளிகளும் பொறிக்கப்பட்டன. செப்பு நாணயங்களில், ஒருபுறம் யானை உருவம் பதிக்கப்பட்டது. நல்லமைப்புடைய ஹைதரின் யானை இறந்த பின், அதனிடம் உள்ள ஆழ்ந்த பற்றுக் காரணமாக, அதன் நினைவாக, அவ்வுருப் பொறிக்கப்பட்டதாக அறிகிறோம்.
ஹைதரின் அரச முத்திரையில் பொறிக்கப்பட்ட வாசகம் “ஃவதஃ ஹைதர் உலகை ஆளப் பிறந்தான். அலிக்கு நிகரானவனும் இல்லை. அவன் வாளுக்கு ஈடானதும் இல்லை” என்பது.
அவன் கைப்பொறிப்பில் ‘ஃவதஃ ஹைதர்’ என்ற தொடர் இருந்தது. பாரசீக மொழியில் எழுத்துக்கள் எண்களைக் குறிக்கும்.
ஹைதர் காலமான இஸ்லாமிய ஹிஜிரி ஆண்டை இவ்வாறு எழுத்தில் அடக்கி, அவ்வெண்களின் விவரம் நினைவுக் குறியாக,
‘ஹைதர் அலிகான் பகாதுர்’
என்ற தொடரை அமைத்துப் பாரசிகக் கவிஞர்கள் ஹைதர் புகழ் நிறைப் பா இயற்றியுள்ளனர்.
தென்னாட்டின் சிங்கமான ஹைதர் வாழ்வு, பாரசிக மொழியில் மட்டுமன்றி, கன்னட மொழி, தமிழ் மொழிகளில் பொறிக்கப்பட்டு, வருங்காலத் தென்னாட்டுத் தேசியத்தை வளர்ப்பதாக அமையுமாக !
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜