உள்ளடக்கத்துக்குச் செல்

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி/விடுதலைப் போராட்டம்

விக்கிமூலம் இலிருந்து

10. விடுதலைப் போராட்டம்

ஹைதர் வாழ்விலும், ஆட்சியிலும் 1779-ம் ஆண்டு ஒரு திரும்புக் கட்டம் ஆகும். அது வரை, அவன் மைசூர் அரசுக்காகவும், மைசூர்ப் பேரரசுக்காகவும் போராடினான். போரை அவன் அது வரை, ஆட்சியின் உயிர் முறையாகக் கையாண்டிருந்தான். ஆனால், அந்த ஆண்டில் அரசு, பேரரசு வளர்ச்சியில் அவன் ஆர்வம் குறைவதையும், போரிலிருந்து திரும்பி, மனம் அமைதியை நாடுவதையும் நாம் காண்கிறோம். அவ்வாண்டின் பின்னும், அவன் போரிலீடுபட வேண்டி வந்தது. ஆனால், அது பாதுகாப்பு நாடிய அரசியல் போரோ, ஆதிக்கம் நாடிய பேரரசுப் போரோ அன்று. அது, அவன் இறுதி மூச்சு வரை நடத்திய போர்—வேண்டா வெறுப்புடன், பிற பேரரசர் தூண்டுதலால் தொடங்கப் பெற்று, அத்தூண்டுதல் நீங்கிய பின்னும், விடாப்பிடியுடன் நடத்தப்பட்ட ஹைதரின் தென்னாட்டுத் தேசீய விடுதலைப் போரேயாகும்.

ஹைதரின் பேரரசு வளர்ச்சியில், கடைசிப் படி கடப்பை வெற்றியைத் தொடர்ந்து வந்த சாவனூர் வெற்றியேயாகும். ஆனால், இவ்வெற்றி போரின் வெங்குருதியால் நிறைவேற்றப் படவில்லை. மணவுறவுக் கலப்பு என்னும் செங்குருதியால் நிறைவேற்றப்பட்டது. ஹைதரின் மூத்த புதல்விக்குச் சாவனூர் நவாப் அப்துல் ஹகீமின் மூத்த புதல்வனையும், இளைய புதல்வனாகிய கரீமுக்கு, அப்துல் ஹகீமின் புதல்வியையும், ஹைதர் மண நாடினான். இம்மண உறவின் இனிய சின்னமாக, நவாப் மைசூர்ப் பேரரசுக்குச் செலுத்த வேண்டிய திறை பாதியாக்கப்பட்டது. அதே சமயம், மைசூர்ப் படைக்கு நவாப் 2,000 வீரரை உதவும் கடப்பாட்டை ஏற்றான். இம்மண விழா மூலம் 1779-ம் ஆண்டு, பேரரசின் முழு நிறைவிழா ஆண்டாக மாறிற்று.

ஹைதர் மீர் முகமது சாதிக் என்ற இஸ்லாமியப் புலவனைப் பொருளமைச்சனாக நியமித்தான். சாமையா என்ற வீர பிராமண மரபினனைத் தன் உள்நாட்டுக் காவல் படைத் தலைவனாக்கினான்.

தென்னாடெங்கும், இப்போது ஹைதர் புகழ் பரந்தது. தொலை அயல் நாடுகளிலிருந்து வணிகர், குதிரைகளையும், விலையுயர்ந்த பொருள்களையும் விற்க, மைசூரை நாடி வந்தனர். அவர்களுடனே வீரர், புலவர், அறச் சிந்தனையாளர் ஹைதரிடம் அலுவல் நாடியோ, பரிசில் அளாவியோ, உலக நலத் திட்டங்களில் உதவி கோரியோ, மைசூர் வந்து குழுமினர். சூழ்நிலையும், வரலாறும் ஹைதரை மேலும் இயக்கியிராவிடில், ஹைதரின் மீந்த ஆட்சிப் பகுதி அவனை ஒரு அசோகனாக, அக்பராக, ஹாரூன் அல்ராஸ்சிடாக, குலோத்துங்க சோழனாக மாற்றியிருக்கக் கூடும் என்று திடமாகக் கூறலாம். ஆனால், மாறிய நிலையிலும் 1779-ஆம் ஆண்டு, இத்தகைய ஒரு ஆட்சியின் சிறு பதிப்பாகவே காட்சியளிக்கின்றது.

1780-ஆம் ஆண்டுக்குள், மைசூர், நிஜாம், மராட்டியர் ஆகிய மூன்று பேரரசுகளையும் ஆங்கிலேயர் ஒருங்கே புண்படுத்திப் பகைத்துக் கொண்டனர். ஆயினும், ஹைதர் தம்முடன் இல்லாமல், மற்ற இரு அரசுகளும் போரில் இறங்க விரும்பவில்லை. ஹைதரோ, மற்ற இருவரையும் நம்பிப் போரில் இறங்கத் துணியவில்லை. இந்நிலை 1780-உள் நீங்கிற்று. பிறர் சேர்ந்தாலும், சேரா விட்டாலும், ஆங்கிலேயர் மீது போர் தொடுத்தே தீருவது என்று அந்த ஆண்டில் ஹைதர் துணிந்தான். ஆனால், அதே ஆண்டில், மற்ற இரு அரசுகளும் மனமுவந்து, ஹைதருடன் சேர்ந்து ஆங்கில அரசை எதிர்க்க முன் வந்தன.

மராட்டியரிடையே, பேஷ்வா ரகோபா பம்பாய் ஆங்கிலேய அரசியலாருடன், 1775-ல் வர்காம் ஒப்பந்தம் என்ற உடன்படிக்கை செய்து கொண்டான். பேரரசு ஒரு கூட்டுறவானதால், அதன் முக்கிய உறுப்பினரும், கூட்டுறவின் அமைச்சரும், மக்களும் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்த போது, விரைவில் ரகோபாவின் கை வீழ்ச்சியடைந்தது. மராட்டியர், ஆங்கிலேயரை எதிர்க்கத் துடிதுடித்தனர்.

நிஜாமுக்கெதிராக, ஆங்கிலேயரைத் தூண்டியவன் ஆர்க்காட்டு நவாப் முகமதலியேயாவான். நிஜாம், வட சர்க்கார் என்ற ஆந்திரக் கரையோரப் பகுதியின் உரிமையாளன். அதில் குண்டூரை, நிஜாம் மனமாரத் தன் தமையன் பஸாலத் ஜங்குக்கு விட்டுக் கொடுத்திருந்தான். ஆனால், முகமதலியின் சூழ்ச்சியால், 1778-ல் ஆங்கிலேயர் நிஜாமைக் கலக்காமல், அதைத் தமக்கென ஆண்டுக் குத்தகையாகப் பெற்று, முகமதலியிடமே அதை வழங்கினர். நிஜாமின் மேலுரிமை, நில உரிமை ஆகியவற்றுடன் அவன் குடியுரிமையும் இங்கே மிதித்துத் துவைக்கப்பட்டது. நிஜாம் இதைக் கண்டித்த போது, ஆங்கிலேயர் வாளா இருந்ததுடன் நில்லாது, ஆண்டுக் குத்தகைத் தொகையும் இனித் தரப்பட மாட்டாது என்று இறுமாப்புடன் கூறினர். இதுவே, ஆங்கிலேயர் மீது நிஜாமுக்கு ஏற்பட்ட உள்ளக் குமுறலுக்குக் காரணம்.

மராட்டியரும், நிஜாமும், ஆர்க்காட்டு நவாபைப் போல, ஆங்கிலேயரின் கூலியாட்கள் ஆய் விடவில்லை. ஆயினும், அவர்கள் ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு நேராகவோ, மறைமுகமாகவோ ஆக்கமளித்த அடிமைகளாகவே இருந்து வந்தனர். வளர்ந்து வந்த ஆங்கில ஆதிக்கம் இவ்வடிமைகளையே நட்பிணக்கத்துடன் மதிக்கவில்லையென்றால், நாட்டின் தலை சிறந்த வல்லரசாக வளர்ந்து வந்த மைசூர் மன்னன் ஹைதரை, நேசிப்பார்களென்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆனால், ஹைதரிடம் அவர்கள் நடந்து கொண்ட முறை பகைமை முறை மட்டுமல்ல; அவனையும், அவன் மூலமாகத் தென்னாட்டுத் தேசீயத்தையும் மதியாத, அயலார் ஆதிக்கப் போக்காகவே அது அமைந்தது.

ஹைதர் அரசியல் நேர்மையை எல்லாரிடமும் எதிர்பார்த்தவன். பிரெஞ்சுக்காரரிடம், அந்த நேர்மையே அவன் மதிப்பையும், பற்றையும் வளர்த்தது. தனி மனிதர் வகையில் ஆங்கிலேயரிடமும், அவன் அதே மதிப்பு வைத்திருந்தான். ஆனால், ஆங்கில அரசியல் ஆதிக்கக் குழுவினர், அந்த நேர்மையையும், கட்டுப்பாட்டையும் கடைப் பிடித்தவர்களாகத் தோன்றவில்லை. 1769-ல் ஹைதருடன் செய்து கொண்ட உடன்படிக்கையை, அச்சத்தால் செய்து கொண்ட உடன்படிக்கை என்று அவர்கள் வெட்கமில்லாமல் கூறினர். அதே சமயம், சென்னை அரசியலை மதியாது, இங்கிலாந்திலுள்ள வாணிகக் குழுவுடன் நேரடியாகத் தொடர்பு நாடிய முகமதலியைக் கெஞ்சி வாழ, அதே அரசியலார் கூசவில்லை!

ஹைதர் அலியின் ஒப்பந்தத்தை ஒழித்து, அவனை எதிர்த்தழிக்க வேண்டுமென்று முகமதலி, இங்கிலாந்திலுள்ள பிரிட்டிஷ் வாணிகக் குழுவினிடம் வாதாடினான். ஆனால், அதே நாவால், ஹைதரிடம் ஆங்கிலேயரைத் தென்னாட்டை விட்டுத் துரத்தத் தன்னுடன் ஒத்துழைக்கும்படி கோரிக்கையிட்டான்! ஹைதர் அவன் குள்ள நரிப் பண்பை அறிந்தவனாதலால், செய்தியை ஆங்கிலேயருக்குத் தெரிவித்திருந்தான்.ஆனால், வாய்மையையும், நேர்மையையும் நம்பாத மனிதர் அன்று சென்னையில், ஆங்கில ஆட்சியாளராய் அமர்ந்து இருந்தனர்,

வளர்கின்ற தன் தென்னக வல்லரசுக்கு, ஹைதர் வெடி மருந்தும், போர்ச் சாதனங்களும் பெற விரும்பினான். ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் செய்வதன் மூலம், அவர்கள் நேசத்தால் இதைப் பெற, அவன் மிகவும் முயன்றான். இது முடியாதென்று கண்ட பின், அவன் மாகியிலுள்ள பிரெஞ்சுக்காரரிடமிருந்து, இவ்வுதவியைப் பெற்று வந்தான். ஆனால், 1778-ல் ஆங்கிலேயர் மாகியைக் கைப்பற்றியிருந்தனர். மலபார் உட்படத் தென்னாட்டின், மேலுரிமையுடைய பேரரசன் என்ற ஹைதர் நிலைக்கும், அவன் பேரரசின் தேவைக்கும், இது குந்தகமாயிருந்தது. தவிர, மாகியில் உள்ள தன் உரிமை காரணமாக, அதன் பாதுகாப்பில் ஹைதர் வீரரும் பங்கு கொண்டிருந்தனர். அது தாக்கப்படு முன், மாகியை ஆங்கிலேயர் தாக்கினால், தான் ஆர்க்காட்டைத் தாக்க வேண்டி வரும் என்று கூட, ஹைதர் எச்சரித்திருந்தான். ஆங்கிலேயர் காதில், இவை ஒன்றும் ஏறவில்லை.

கடைசியாக, குண்டூரை ஆங்கிலேயர் கைப்பற்றிய போது. ஆங்கிலேயப் படைகள் ஹைதரின் இணக்கம் பெறாமலே, ஹைதரின் ஆட்சிப் பகுதி வழியாக, அவ்விடத்திற்கு அனுப்பப்பட்டன. இது ஹைதரின் ஆட்சியுரிமைக்கு எதிரானது. குண்டூர் முகமதலிக்குக் கொடுக்கப்பட்ட போதும், நிஜாமைப் போலவே, ஹைதர் மனக்குமுறல் அடைந்தான். ஏனெனில், முகமதலியை அவன் தன் எதிரியாக மட்டுமன்றி, தன் மாநிலத் தாயகமாகிய தென்னகத்துக்கும், மனித சமுதாயத்துக்குமே எதிரி எனக் கருதினான்.

தன் குறைகளையெல்லாம் ஹைதர், சென்னை ஆட்சியாளரிடம் தெரிவித்திருந்தான். அதற்கு மறுமொழி இல்லாத நிலையிலும், ஆங்கில ஆட்சியாளரின் இரகசியத் தூதரான பாதிரி ஷ்வார்ட்ஸை அவன் ஆதரவுடன் வரவேற்றான். அத்துடன், ஹைதர் வசமிருந்த ஆங்கிலக் கைதிகளின் விடுதலை கோரப்பட்ட போது, அவன் அவர்களைப் பெரும் போக்குடன் விடுதலை செய்தான். ஆனால், ஆங்கிலேயரிடம் ஹைதர் காட்டிய நேர்மை, பெருந்தன்மை, மனிதப் பண்பு ஆகிய யாவும் நாய் முன் எறிந்த சந்தனக் கட்டை போலாயின.

1780-ல் மராட்டியர், நிஜாம், மைசூர் ஆகிய மூன்று வல்லரசுகளும், ஆங்கிலேயருக்கெதிராக நேச ஒப்பந்தம் செய்து கொண்டன. அதன்படி, துங்கபத்திரைக்கு வடக்கே, கிருஷ்ணா ஆறு வரை, ஹைதர் வென்றிருந்த பகுதி மீது அவன் உரிமை உறுதி செய்யப்பட்டது. மராட்டியருக்கு, ஹைதர் தர வேண்டிய திறை 11 இலட்சம் என்பதும் வரையறுக்கப்பட்டது. தவிர, ஆங்கிலேயருடன் போர் தொடங்கிய பின், பேராறையும், தென்னாட்டுக்கு வடக்கிலுள்ள பகுதிகளையும், மராட்டியர் வென்று கைப்பற்றுவது என்றும், வட சர்க்கார் அல்லது ஆந்திரக் கரையோரப் பகுதியை, நிஜாம் கைக்கொள்வது என்றும், தமிழகப் பகுதியை ஹைதர் தாக்கி, வென்று இணைத்துக் கொள்வதென்றும் ஒத்துக் கொள்ளப்பட்டது.

ஒப்பந்தம் முடிவுற்றவுடனே, ஹைதர் படையெடுப்புத் தொடங்கி விட்டான். மற்ற இருவரும், அவர்கள் வழக்கப்படி, தயங்கித் தயங்கியாவது, நடவடிக்கை தொடங்குவர் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால், அவர்கள் போரில் இறங்கவேயில்லை! ஹைதரின் முயற்சியை, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்!

ஹைதர் தாக்குதலுக்குத் திரட்டிய படையில் 83,000 வீரர்கள் இருந்தனர். தென்னாட்டில், அதற்கு முன்னும், பின்னும் அவ்வளவு சிறந்த கட்டுப்பாடும், பயிற்சியும், ஆற்றலும் வாய்ந்த படை இருந்ததில்லை என்று ஆங்கிலேயரே ஒப்புக் கொள்கின்றனர். வேவு படை, மறை ஒற்றர் படை வகையில், எந்த அரசனும் ஹைதரின் அமைப்பிற்குப் பிற்பட்டவனேயாவன். ஏனெனில், அவனே நேரிடையாக எல்லா ஏற்பாடுகளையும் கவனித்தாலும், ஒவ்வொருவர் துறையும், பொறுப்பும், திட்டவட்டமாக வகுக்கப்பட்டிருந்தன. சென்னை அரசியலார் நிலை ஒன்று, இவ்வெல்லா வகையிலும் ஹைதருக்குப் பலவகையில் பிற்பட்டதாகவே இருந்தது. உண்மையில், ஹைதர் படைகள் சென்னைக்கு ஒன்பது கல் அருகில் பறங்கிமலை வருவது வரை, அவன் திட்டம், நிஜாம், மராட்டிய ஒப்பந்தம் ஆகிய எதையும் ஆங்கிலேயர் அறிந்து கொள்ளவில்லை. இந்த ஒரு வகையில், ஆர்க்காட்டு நவாப் முகமதலி முன்கூட்டி எச்சரிக்கை தந்தும், போர் முறைகள் அறியாத ஆங்கில அரசியலார் செவியில், அது ஏறவில்லை.

ஆங்கிலேயர்கள் விழித்ததும், ஆணைகள் எங்கும் பறந்தன. திருச்சிராப்பள்ளியிலிருந்து ஒரு படை, ஹைதர் படைக்குப் பின்னின்று உதவி வருவதைத் தடுக்கும்படி, ஆணையிடப்பட்டது. பாண்டிச்சேரியருகிலிருந்த ஒரு படை, சென்னை வரும்படி கட்டளையிடப்பட்டது. குண்டூரிலுள்ள ஒரு படை, தெற்கு நோக்கி வரும்படி கோரப்பட்டது. தவிர, உடையார் பாளையம், செஞ்சி, கருநாடகக் கரை, வந்தவாசி ஆகிய முகமதலியின் கோட்டைகளுக்கு, ஆங்கிலப் படைப் பிரிவுகள் அனுப்பப்பட்டன. ஆனால், குண்டூர் படை ஒன்று தவிர, எதுவும் முன்னேற முடியவில்லை. அப்படையும் வந்தவாசியில் வந்து தங்கிற்று. அதன் தலைமையை இங்கே ஏற்ற கர்னல் பேய்லி, கூத்தலாற்றை ஆகஸ்டு 25-ல் அடைந்தும், உடனே கடக்காமல் காலம் தாழ்த்தியதால், மாதக் கணக்கில் தடைப்பட வேண்டி வந்தது. ஏனெனில், அன்றிரவே ஆற்றில் வெள்ளம் பெருகிற்று. இறுதியில், ஆறு கடந்த பின், பேரம்பாக்கம் செல்லும் வழியில், ஹைதர் படைகள் அப்படைகளை மடக்கின. 700 வெள்ளையர்கள், 5,000 ஆங்கிலேயரின் நாட்டுப் படை வீரர்கள் அப்போரில் கொல்லப்பட்டனர். 2,000 வெள்ளையர்கள் சிறைப்பட்டனர். சிறைப்பட்டவர்களில், புகழ் மிக்க வீரரான பேயர்டு ஒருவர். இவர் மூன்றாண்டுகளுக்கு மேல், சீரங்கப்பட்டணம் சிறையில் அவதியுற்றுப் பின், விடுவித்துத் தாய்நாட்டுக்கே அனுப்பப்பட்டார்.

சென்னையில், ஆங்கிலேயர் நிலை மோசமாவதை அறிந்து, வங்காளத்திலிருந்து, பழைய சென்னை ஆட்சியாளர் வாரன் ஹேஸ்டிங்ஸ், ஸர் அயர் கூட் என்ற அனுபவமிக்க கிழத் தலைவனை அனுப்பினான். ஹைதர், ஆர்க்காட்டையும், ஆம்பூரையும் கைப்பற்ற முடிந்தது. ஆனால், வந்தவாசி நீடித்த முற்றுகையைச் சமாளித்த பின், ‘கூட்’ அதை விடுவித்தான். அதன் பின், அவன் கூடலூரை நோக்கிச் சென்றான். ஹைதர் ‘கூட்’டின் படைக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டே சென்று, போர்ட்டோநோவோவில், அவனுடன் கை கலந்தான். இதில் ஹைதருக்கு மிகவும் படையழிவு நேர்ந்தது. ஆனால், பேரம்பாக்கத்தில் நடந்த அடுத்த கைகலப்பில், இரு சாராரும் சலிப்படைந்தனர். அத்துடன் ஹைதரின் வேலூர் முற்றுகையைத் தடுக்க முடியாததால், ‘கூட்’ சென்னைக்குத் திருப்பியழைக்கப் பட்டான்.

இச்சமயம், ஆங்கிலேயருக்கும், டச்சுக்காரருக்கும் போர் மூண்டது. ஹைதர், உடனே நாகப்பட்டணத்திலுள்ள டச்சுக்காரருடன் ஒப்பந்தம் செய்து கொண்டான். ஆனால், ஆங்கிலப் படைத்தலைவன் கர்னல் பிரேயித்வைட், நாகப்பட்டணத்தைச் சூழ்ந்த தஞ்சை மாவட்டப் பகுதிகள் முழுவதையும், கைப்பற்றினான். எனினும், 1782-ல் திப்புவின் கையில், அவன் படை பெருந்தோல்வி கண்டது. அவனும் சிறைப்பட்டான்.

ஆங்கிலேயருடன், இவ்வாறு ஹைதர் தனித்து நின்று, போராடிச் சமாளித்து வந்தான். அவனுடன் சேர்ந்து, படையெடுப்பதாகக் கூறிய நிஜாமும், மராட்டியரும் ஒரு அடி கூடப் பெயரவில்லை.

அரசியல் தந்திரியான வாரன்ஹேஸ்டிங்ஸ், குண்டூரை முகமதலியிடம் விட்டு வைக்கப்படாது என்று சென்னை அரசியலாருக்கு உத்தரவிட்டான். இச்சிறு செயலால், நிஜாமின் சீற்றம் தணிந்து விட்டது. சிறு சுமையகற்றப் பெற்ற ஒட்டகம் களிப்புடன் எழுந்து ஓடியது போல, இச்சிறு தயவுக்கு நிஜாம் வால் குழைத்து மகிழ்ந்தான்.

இது போலவே, ஆங்கிலப் படையொன்று மராட்டிய நிலத்தில் நுழைந்ததுமே, மராட்டியர் மனமாறி விட்டனர்; 1782-ல் ஆங்கிலேயருடன், அவர்கள் சால்பே ஒப்பந்தம் என்ற உடன்படிக்கை செய்து கொண்டனர். அதன்படி, அவர்கள் ஹைதருடன் முன் செய்த ஒப்பந்தத்தின் வாசகங்களை மறுதளித்து, விடுதலைப் போரில் எதிரிகளின் கையாட்களாக மாறினர்.

ஹைதருக்கு உதவியாகப் பிரஞ்சுத் துருப்புகள், கடல் வழியாக பிரான்சிலிருந்து வந்தன. ஆனால், இறங்கு முன், ஆங்கிலக் கடற்படைகளுடன் அவை மோதின. இப்போர்களில் அலைக்கழிக்கப்பட்ட படையின் ஒரு பகுதியே, போர்ட்டோநோவோவில் இறங்கிற்று. இதன் பின், ஆங்கிலேயரும், பிரஞ்சுக்காரரும் ஒருங்கே தளர்வுற்றுப் போனதால், இருவருமே நேருக்கு நேர் போராட்டத்தில் ஈடுபட விரும்பாமல், மறைமுக எதிர்ப்பில் நாட்கழித்தனர்.

‘கூட்’ ஆரணியைத் திடுமென முற்றுகை செய்ய முனைந்தான். ஆனால், ஹைதர் விரைந்து ஆங்கிலப் படையணிகளைச் சிதறடித்தான். சென்னையில், ஆங்கிலேயர் வலுத் தளர்வது கண்டு, பம்பாய் அரசியலார், கடல் வழியாக மலபாரைத் தாக்கினர். ஹைதர், மலபாருக்குத் திப்புவை அனுப்பினான். இங்கே, சில நாட்கள் எதிரியுடன் திப்பு போராடிக் கொண்டிருந்தான்.

மழை காலம் வந்த பின், போரில் எல்லாக் கட்சியினரும், தாமாக ஓய்வுற்றுப் போரைத் தளர விட்டனர். ஆனால், ஹைதரின் தளர்ச்சிக்கு, ஒரு தனிக் காரணம் இருந்தது.

ஹைதர் உடல் உரம் வியக்கத் தக்கதானாலும், ஓயாத போர் முயற்சியால், உள்ளூர முறிவுற்றிருந்தது. முதுகில் ஏற்பட்ட ஒரு புற்று, இப்போது அவனுக்கு ஓயாத தொல்லை தந்தது. மருத்துவர் முயற்சிகள் எவையும் பலிக்காது போன பின், ஹைதர் நோயை எல்லாரிடமிருந்தும் மறைத்துக் கடமையில் ஈடுபட்டிருந்தான்.

ஆரணிப் போருக்குப் பின், ஆங்கிலேயரின் முதுபெரும் படைத் தலைவர் ‘கூட்’ உயிர் நீத்தான். அதனையடுத்து, 1782, டிசம்பர் 7-ம் நாள் ஹைதரின் வீர ஆவியும், சித்தூர் அருகிலுள்ள நரசிங்கராயன் பேட்டைக் கூடாரத்தில் அகன்றது.

ஹைதரின் ஏற்பாட்டினால், புதிய அரசியல் ஏற்பாடு முடியும் வரை, அவன் மறைவு எவருக்கும் தெரியாமல் வைக்கப்பட்டது. தந்தை உடனடியாக அழைப்பதாக மட்டும், திப்புவுக்கு ஆணை பிறந்தது. திப்பு வந்து, தந்தையின் ஆணைப்படி, மறைவாக உடலடக்கம் செய்து, ஆட்சி ஒழுங்கமைந்த பின்னரே, ஹைதரின் முடிவு வெளியே மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.

மக்கள் குடியிலே, போர் வீரர் மரபிலே பிறந்த ஹைதர், மக்கள் அழைப்பாலும், மாநிலத்தின் அவாவாலும் மன்னனானான். ஆகியும், மக்கட் பண்போ, போர் வீரப் பண்போ மாறாமல் வாழ்ந்து, போர் வீரனாகப் போர்க் களத்திலேயே மடிந்தான். அவனைப் போல, நேரடித் தனியாட்சி செய்த எந்த மன்னரும், தலைநகரிலில்லாமல், பாசறைகளிலிருந்து, அவன் ஆண்டது போல, ஆண்டதில்லை. அவன் மறைந்த பின்னும், அவன் ஆணையால், அவனில்லாமலே திப்பு வந்து, ஆட்சியேற்கும் வரை, எல்லாம் அவனிருந்து நடப்பது போல் நடந்தன. இது ஒன்றே, அவன் ஆட்சித் திறமைக்கு ஓர் உயரிய சான்று ஆகும்.

‘கன்னடத்தின் போர்வாள்’ கன்னடத்தைத் தென்னாட்டின் தலை நாயகமாக்கி விட்டு, உறையில் புகுந்தது.

தென்னகம் அன்று தன் எதிரியை உணரவில்லை; எதிரியின் ஆற்றலை உணரவில்லை. ஆனால், ஹைதரின் வாழ்க்கைப் பணியால், தென்னகம் தன்னை உணர்ந்தது.

ஹைதரின் மைந்தன் திப்பு தவிசேறி, இவ்வுணர்வைப் பயன்படுத்தி, வெற்றி பெற முயன்றான். ஹைதர் விட்ட இடத்திலிருந்து, அவன் கன்னடத்தின் புகழை, நெடுந்தொலை வளர்த்தான். ஆனால், ஹைதர் காலத்திய தென்னகத்தின் உட்பகை நோய்கள், தென்னகத்தின் உரத்தை அரித்து விட்டன. தென்னகம் தற்காலிகமாகச் சரிந்தது.

எனினும், ஹைதர் நட்ட விடுதலைப் பாறை, திப்பு அதன் மீது அமைத்த விடுதலைப் பீடம், நீடித்து நின்று, பயன் தந்தன—இன்னும் பயன் தரும்!

ஹைதர் குரலும், திப்புவின் குரலும் அப்பயன் நோக்கி, இன்னும் நம்மை அழைக்கின்றன.