கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி/புலியின் பதுங்கலும் பாய்தலும்
9. புலியின் பதுங்கலும் பாய்தலும்
மைசூரின் அரசியல் பொறுப்பை, ஹைதர் ஏற்பதற்கு முன்னிருந்தே, மைசூரின் அமைதிக்கு மராட்டியப் பேஷ்வா மரபு ஒரு பெரிய வில்லங்கமாய் அமைந்தது. ஹைதரின் ஆட்சியில், மைசூர் செல்வ வளம் கொழித்த நாடாக வளர்ந்து வந்ததே, இதற்குக் காரணம். இச்செல்வம், கொள்ளைப் பேரரசாகிய பேஷ்வா கால மராட்டியத்தின் பண ஆசையைத் தூண்டிற்று. தம்முடன் ஒத்த பேரரசராகிய நிஜாமை எதிர்க்க விரும்பாது, அவர்கள் அடிக்கடி தெற்கே பார்வை செலுத்தியதன் காரணம் இதுவே.
எத்திசையிலும் வெற்றி நாட்டிய ஹைதர், மராட்டியரிடம் மட்டும் அடிக்கடி பணம் கொடுத்தே, ஒப்பந்தம் செய்ய வேண்டி வந்தது. ஒவ்வொரு சமயம், கடுந் தோல்விக்கும் ஆளாக வேண்டி வந்தது. ஆனால், இதற்கெல்லாம் வரலாறு இரண்டு காரணங்களையே கூற முடியும். மராட்டியப் படை தொகையில் மைசூர்ப் படையை விட எப்போதும் பன்மடங்கு பெரியதாயிருந்தது. அத்துடன், கொள்ளையிடும் ஆர்வம், அப்படையின் அழிவாற்றலைப் பெருக்கிற்று. நாட்டு மக்கள் படை எதுவும் அதே அளவு துணிச்சலைக் காட்ட முடியாதிருந்தது. அத்துடன், சூழ்நிலையறிவும், தொலை நோக்கறிவும் உடைய ஹைதர் மராட்டியரை எதிர்க்கு முன், தென்னக அரசியல் புயலில், அசையா உறுதியுடைய ஒரு அரசை நிலை நாட்டி விட விரும்பினான். மராட்டியருடன் போராடித் தன் ஆற்றலைச் சிதறடிக்க விரும்பவில்லை. அவர்களுடன், அவன் இறுதியாகத் தொடுத்த மூன்று போர்கள் இந்த உண்மையை நன்கு விளக்குகின்றன. முதற் போரில், அவன் படு தோல்வியுற்றான். ஆனால், அடுத்த போர்களால், இத்தோல்வி புலியின் ஆற்றல் மிக்க பாய்ச்சல்களுக்கு முந்திய பதுங்கல் என்பது தெளிவாயிற்று. இரண்டாம் போரில், மராட்டியர், நிஜாம் ஆகிய இரு பேரரசுகளும் ஒன்று பட்டு நின்று, படு தோல்வியடைந்தன. இறுதிப் போரில், மராட்டியர் முற்றிலும் முறியடிக்கப் பட்டனர்.
ஆங்கிலேயருடன் 1769-ல் செய்து கொண்ட ஒப்பந்தம் ஒரு புறம், நிஜாமுக்கும், பஸாலத் ஜங்குக்கும் இருந்த பகைமை மற்றொரு புறம், ஹைதரின் கீழ் திசை முன்னேற்றத்துக்கு வழி செய்தது. அவன், கடப்பை, கர்நூல் நவாப்களையும், சுரா மாகாணத்திலுள்ள மற்றக் குறுநில மன்னரையும் கீழடக்கித் திறை வசூலித்து, மைசூர்த் தனியரசெல்லை தாண்டிப் பேரரசை மேலும் வளர்த்துக் கொண்டான். இவற்றால், ஆங்கிலப் போரில் இழந்த செல்வத்துக்கு அவன் பன்மடங்கு ஈடு செய்து, கருவூலத்தை வளப்படுத்திக் கொண்டான்.
இச்செயல்கள், மீண்டும் பேஷ்வாவின் கடுஞ்சினத்தைக் கிளறும் என்பதை ஹைதர் எதிர்பார்த்தே யிருந்தான். ஆகவே, 1769-ம் ஆண்டு ஒப்பந்தப்படி, ஆங்கிலேயர்களை உதவிக்கு வரும்படி அவன் அழைப்பு விடுத்தபின், தானே படையெடுப்புக்கு முன்னேற்பாடுகள் செய்தான். ஆனால், அவன் எதிர்ப்பார்த்தபடி ஆங்கிலேயர் உதவ முன் வரவில்லை. கரடியின் உதவியை நம்பி, மத யானையைக் கிளறி விட்ட கதையாயிற்று. மராட்டியர் தாக்குதலின் முழு வேகத்தையும், ஹைதர் ஒருவனே ஏற்க வேண்டியதாயிற்று. இப்பொறுப்பு, தன் தனி ஆற்றலுக்கு மேற்பட்டதென்று கண்ட ஹைதர், இணக்கப் பேச்சுப் பேச முற்பட்டான். ஆனால், பேஷ்வா ஒரு கோடி வெள்ளி கேட்டதால், பேச்சு முறிவுற்றது. இதன் பின், எதிரியை முன்னே விட்டு, ஹைதர் தலைநகரை நோக்கிப் படிப்படியாகப் பின்னேறிச் சென்றான்.
மைசூரில் பெரும் பகுதியும், மராட்டியர் படைகள் வசமாயின. கோட்டைகள் பல பிடிபட்டன. பங்களூருக்கு வடமேற்கிலுள்ள நிஜகல் கோட்டையில்தான், ஹைதரின் எதிர்ப்பு நடவடிக்கை மும்முரமாயிற்று. மூன்று மாத முற்றுகையின் பின்னும், அதன் காவல் சிறிதும் தளரவில்லை. ஆனால், இச்சமயம் சித்தல துருக்கத் தலைவன், நம்பிக்கை மோசம் செய்து, எதிரிக்கு உதவினான். ஆண்மை மிக்க பேடர் படையின் தலைமையில், அவன் துணிகரமாக மதிலேறி உட்பாய்ந்து, கோட்டையை மராட்டியர் கைப்பற்ற வகை செய்தான். கோட்டைக்குள்ளிருந்தவர்களில், பெரும்பாலோர் மராட்டியர் கையில் சித்திரவதைக்கு ஆளானார்கள்.
இச்சமயம், பேஷ்வா மாதவ ராவ் உடல் நலிவுற்றுப் பூனாவுக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. போரில் இதனால், ஹைதருக்குச் சிறிது ஓய்வு கிட்டியதாகத் தோற்றிற்று. ஆனால், பேஷ்வாவின் தாய் மாமனான திரியம்பக ராவ் படைத் தலைமை ஏற்று, போரை முன்னிலும் மும்முரமாக நடத்தினான். மாதவ ராவ் கைப்பற்றாத கோட்டைகள், அவன் கை வசமாயின. இவற்றுள் குர்ரம் குண்டாக் கோட்டை முக்கியமானது. தலைமைக் கோட்டையான சீரங்கப்பட்டணத்துக்கும் ஆபத்து நெருங்கி வந்தது.
ஹைதர் தன் முழுப்படை வலுவையும் திரட்டி, சீரங்க பட்டணத்தை எதிரி அணுகாமல், தடுக்க முற்பட்டான். அக்கோட்டைக்கு இருபது கல் வடதிசையில், குன்றுகளின் நடுவில் மேலுக்கோட்டை என்ற திருக்கோவில் இருந்தது. ஹைதர் அதனை அணுகும் கணவாய் ஒன்றை வளைத்து, பிறை வடிவில் குன்றின் மேல், தன் படைகளை நிறுத்தி வைத்தான். ஆனால், அவன் போதாத காலத்துக்கு, அவ்வளைவுக்கு எதிராக இருந்த குன்றை அவன் கவனிக்கவில்லை. அதைப் பீரங்கித் தளமாகப் பயன்படுத்தி, மராட்டியர் ஹைதர் படைக்குப் பேரழிவு செய்தனர். ஹைதரிடம் அவ்வளவு ஆற்றல் வாய்ந்த பெரிய பீரங்கிகள் இல்லை. ஆகவே, பல மணி நேரம் அழிவைப் பார்த்துக் கொண்டிருந்தும், அவன் செயலற்றிருக்க வேண்டியதாயிற்று.
முன் பகுதியைப் போராட விட்டுக் கொண்டே, பின்புறமாகத் தன் படைகளை இரவோடிரவாகச் சீரங்கப்பட்டணம் கோட்டைக்குப் பின் வாங்கிச் செல்லும்படி ஹைதர் கட்டளையிட்டான். ஆனால், வழியில் ஒரு துப்பாக்கி தற்செயலாக வெடித்ததனால், இரகசியம் எதிரிகளுக்குத் தெரிந்து விட்டது. வழியில், முத்தேரி என்ற ஓர் ஏரிக் கரையில், எதிரிகளின் பீரங்கிகள் இருந்தன. இப்பீரங்கிகள் ஒரு புறமும், பின் தொடரும் மராட்டியப் படை ஒரு புறமும் முத்தேரியைக் கூற்றுவன் களமாக்கிற்று. படைகள் சீரங்கப்பட்டணத்துக்கு ஐந்து கல் வடக்கிலுள்ள சர்க்கூலி மலையை அணுகியதும், மராட்டியக் குதிரைப் படையினர் படைகளைத் தாக்கினர். அணிகள் கலைந்து சிதறின. அழிவும் சித்திரவதையும் தொடங்கிற்று. ஒவ்வொருவரும், உயிருக்கு அஞ்சி தனித் தனி வேறு வேறு திசையில் ஓடத் தலைப்பட்டனர்.
ஹைதர் ஒரு புறம் தனியாகத் தப்பிப் பிழைத்து ஓடிச் சீரங்கப்பட்டணம் சென்றான். அதே சமயம், திப்புவை எங்கும் காணாத கவலை, ஓடியவர் உள்ளங்களில் புயலிடையே புயல் வீசிற்று. மறுநாள் ஆண்டியுருவில் திப்பு தப்பி வந்த பின்தான், அவர்களுக்கு உயிர் வந்தது.
அழிவிலும் அருஞ் செயல் செய்து புகழ் பெற்றவர், ஹைதர் தரப்பில் இரண்டே இரண்டு பேர்கள்தான். ஒருவன் படைத்தலைவன் பஸ்ஸுல்லா கான். அவன் ஒரு சிறு பிரிவுடன், எதிரிகளின் அணிகளையே பிளந்து கொண்டு, தன் அணி குலையாமல், சீரங்கப்பட்டணம் வந்து சேர்ந்தான். ஹைதர், தன் அவமானத்தைக் கூட மறந்து, அவனை ஆரக் கட்டித் தழுவிக் கொண்டான்.
சர்ச் கூலி மலைப் போரில், பெரும் புகழ் நாட்டிய மற்றொரு வீரன் யாஸின் கான் என்பவன். அவன் உருவிலும், தோற்றத்திலும் ஹைதரைப் பெரிதும் ஒத்திருந்தான். மைசூர்ப் படைகள் ஓடத் தலைப்பட்ட போது, எதிரிகள் குறிப்பாக, ஹைதரைக் கைப்பற்ற எங்கும் திரிந்து கொண்டிருந்தனர். தன் அரசனைக் காக்க, யாஸின் கான் ஒரு சூழ்ச்சி செய்தான். அவன், தானே ஹைதர் என்ற முறையில் கூக்குரலிட்டு, நடிப்புக் காட்டினான். சூழ்ச்சி பலித்தது. மராட்டியர் அவனே ஹைதர் என்று எண்ணிப் பலத்த காவலுடன், அவனைக் கொண்டு சென்றனர். திரியம்பக் ராவ் அவனையே ஹைதரென்று நினைத்து, அவனை மதிப்புடனும், அன்புடனும் நடத்தினான். துன்ப காலத்தில், அவன் நட்பைப் பெற்று அவனைத் தன் வசமாக்கி விட, அரும்பாடு பட்டான்.
ஹைதர் சீரங்கப் பட்டணத்தில் இருந்து, அடுத்த போராட்டத்துக்கு ஆள் திரட்டுவது கேட்டதும், மராட்டியப் படைத் தலைவன் தான் ஏமாற்றமடைந்ததற்கு வெட்கி, யாஸின் கானை விடுதலை செய்தான்.
மேலுக்கோட்டை பேர் பெற்ற புண்ணியக் கோயில். தென்கலை வைணவரின் தலைமைத் திருப்பதிகளில் அது ஒன்று. ஆகவே, அதன் செல்வ வளம் பெரிதாயிருந்தது. வெறி கொண்ட மராட்டியர், அச்செல்வத்தை நாடி, ஒருவர் மீதொருவர் விழுந்தடித்துச் சென்று, அதைக் கொள்ளையிட்டனர். கிடைத்த உணவுப் பண்டங்களை உண்டு, குடித்து ஆடினர். தேர்களையும், விதானங்களையும் கொளுத்தினர். இச்செயல், ஹைதருக்குத் தலைநகரின் காவல் ஏற்பாடுகளுக்குரிய போதிய கால வாய்ப்புத் தந்தது. தவிர, வைணவர் கோயிலைக் கொளுத்திய இந்து மதக் கொடியோர்களை எதிர்க்க மக்கள் திரள் திரளாக முசல்மான் வேந்தன் கொடிக் கீழ்த் திரண்டனர். ஆகவே, தலைநகரை திரியம்பக ராவினால், என்றும் முற்றுகையிட்டுப் பிடிக்க முடியாமலே போய் விட்டது.
நாட்டின் பெரும் பகுதியைக் கை வசப்படுத்திக் கொண்டு, மராட்டியர் மாதக் கணக்காய்ச் சீரங்கப்பட்டணத்தை முற்றுகையிட்டனர். இறுதியில் 1772-ல், 15 இலட்சம் வெள்ளி உடனடியாகப் பெற்று, இன்னொரு 15 இலட்சத்துக்குச் சில மாவட்டங்களை ஈடாக ஏற்றுக் கொண்டு, அவர்கள் திரும்பிச் சென்றார்கள்.
சிறையிலிருந்த, பதவியிழந்த அரசச் சிறுவன் நஞ்சி ராஜன், மராட்டியருடன் தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிந்ததால், அவன் கொலைத் தண்டனைக்கு ஆளானான். அவன் தம்பி சாமராஜ், அவனிடத்தில் மன்னுரிமையாளனானான்.
1772-ல் பேஷ்வா மாதவ ராவ் மாண்டான். அவனுக்கடுத்த தம்பியாகிய நாராயண ராவ் பேஷ்வாவானான். அவனைக் கொன்றொழித்து, அவன் சிற்றப்பன் ரகோபா பேஷ்வாவாக முயன்றான். ஆனால், மராட்டியரில் பெரும்பாலார் இறந்த நாராயண ராவின் சிறுவன் மாது ராவையே பேஷ்வாவாக ஏற்க விரும்பினர். அரசுரிமைப் போர் ஒன்று தொடங்கிற்று. இத்தறுவாயைப் பயன்படுத்திக் கொண்டு, மராட்டியருக்குப் பிணையாகக் கொடுத்த பகுதிகளை மீட்கும்படி, ஹைதர் திப்புவை அனுப்பினான். அத்துடன், தானே சென்று மராட்டியப் போர்க் காலத்தில் கிளர்ந்தெழ முயன்ற, மலபார் தலைவர்களைக் கீழடக்கினான்.
1773-ல் பேடனூர் அடுத்திருந்த குடகுப் பகுதியின் ஆட்சி மரபில், அரசியல் பூசல் எழுந்தது. அதன் மூலம், ஹைதர் தன் பேரரசை மேலும் பெருக்கி, வளமாக்க வழி ஏற்பட்டது.
குடகு, பேடனூரைப் போலவே, மலபாருக்கும், மைசூருக்கும் இடைப்பட்ட மலை நாட்டுப் பகுதி. அங்குள்ள மக்கள், வீர தீரமுடையவர்கள். தங்கு தடையற்ற விடுதலை வாழ்வுடையவர்கள். அவர்கள் சிறு சிறு சிற்றூர்களில் வாழ்ந்தனர். ஒவ்வொரு சிற்றூரிலும் நடுவே ஊர்த் தலைவன் வீடும் நிலமும் இருந்தன. அதைச் சுற்றி, அவனுக்கு உட்பட்ட அவன் உறவினர் வாழ்ந்தனர். இச்சிறு நாட்டின் மன்னர் லிங்காயதர் அல்லது வீர சைவராகயிருந்தனர்.
17-ம் நூற்றாண்டு வரை, இப்பகுதியில் குடி மரபாட்சியே நிலவிற்று. ஆனால், அந்நூற்றாண்டில், இச்சேரி அரச மரபைச் சேர்ந்த ஒருவன் பக்தனாக வந்து தங்கி, மக்கள் மதிப்பைப் படிப்படியாகப் பெற்று, அவர்கள் மீது ஆட்சி செய்யத் தலைப்பட்டான். நாளடைவில் குடகையும், குடகைச் சூழ்ந்த எல்லாப் பகுதிகளையும், அவன் தன் கீழ்க் கொண்டு வந்தான். ஹைதர் பேடனூரை வென்ற பின், குடகையும், அதைச் சேர்ந்ததாகவே கொள்ள எண்ணி, 1765-ல் ஒரு படை அனுப்பினான். இத்தடவை அவன் முயற்சி பலிக்கவில்லை. ஆனால், 1770-ல் எழுந்த ஆட்சியுரிமைப் பூசலில், ஆட்சி உரிமையாளரில் ஒருவனான லிங்க ராஜ், ஹைதர் உதவியைக் கோரினான். குடகுப் படையெடுப்புக்கு வழி கோலிய நிகழ்ச்சி இதுவே.
மாற்றுரிமையாளனான தேவப்பன், ஓடி ஒளிய முயன்றான். ஹைதர் அவனைக் கைப்பற்றிச் சீரங்கப்பட்டணம் சிறைக்கூடத்துக்கு அனுப்பினான். மெர்க்காரா நகரம், ஹைதர் பேரரசின் ஒரு பகுதியின் தலைநகரமாயிற்று.
ஹைதர் தன் வழக்கம் போல், குடகில் பிராமணர்களை உயர் பதவிகளில் அமர்த்தினான். மக்களை அவர்கள் கொடுமைப் படுத்தி, மிகுதி வரி பிரித்தனர். இது தாளாமல், அவர்கள் எங்கும் கிளர்ந்தெழுந்தனர். ஹைதர், கிளர்ச்சியை அடக்கக் கடு நடவடிக்கைகளை மேற்கொண்டான். ஆயினும், இதன் பின், பதவிகளில் அவன் குடிகளிடம் நேர்மையாக நடக்கத் தக்க பொறுப்புடைய நன்மக்களையே அமர்த்தினான்.
1776-ல் அரசிளஞ் சிறுவன் சாம்ராஜ் இறந்தான். திறமையற்ற அரசரே, மீண்டும் மீண்டும் வருவது கண்டு, ஹைதர் சலிப்படைந்து, அடுத்த அரசுரிமையாளனைத் தேர்வதில், ஒரு புதுமை வாய்ந்த முறையைக் கையாண்டான். ஒரு மாளிகையில், பலவகை விளையாட்டுப் பொருள்களை வரிசைப்படுத்தி வைத்தான். அரசர் குடிச் சிறுவர்களை அங்கே திரட்டி, அவரவருக்கு வேண்டிய பொருள்களை எடுத்துக் கொள்ளும்படி கோரினான். தின்பண்டங்களையும், ஆடையணிகளையும், இன்ப ஊர்தி வகைகளையுமே எல்லோரும் தேர்ந்தெடுத்தனர். ஆனால், சாமராஜன் என்ற சிறுவன் மட்டும், அங்கிருந்த ஓர் அழகிய மணி பதித்த வாளைத் தேர்ந்தெடுத்தான். “ஆம்! இவனேதான் உண்மையான அரசன்!” என்று கூறி ஹைதர், அவனை மகிழ்வுடன் தன் அன்புத் தவிசில் ஏற்றினான்.
‘ஹைதர் அரசுரிமை விரும்பி, மன்னனாகவில்லை; மன்னர் குடியினரின் திறமையின்மையும், நாட்டின் தேவையும் கண்டு மன்னனானான்’ என்பதை இந்நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது.
சிறுவன் சாமராஜன் காட்டிய ஆர்வம், ஹைதர் கண் காணப் பலிக்கவில்லை. ஆனால், அவன் கூரிய மதியார்வம் தவறானதன்று. அச்சிறுவனின் பிள்ளையான கிருஷ்ணராஜ உடையாரே, பின்னாட்களில் 68 ஆண்டுகள் மைசூரை ஆண்டு, அதை வளப்படுத்தியவன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதரின் அடுத்த வெற்றி, பெல்லாரி வட்டத்தைச் சார்ந்தது. அதன் ஆட்சியாளன், பஸாலத் ஜங்கின் மேலாட்சியை உதறித் தள்ள விரும்பினான். பஸாலத் ஜங் அவனை அடக்க, பிரஞ்சுப் படைத் தலைவன் லாலியை அனுப்பினான். ஆட்சியாளன் ஹைதரின் உதவியை நாடினான். ஆனால், உதவி நாடியவன் கூட எதிர்பாராதபடி அவ்வளவு விரைந்து ஹைதர் பெல்லாரி சென்றான். லாலியின் படை முற்றுகையிடு முன், ஹைதர் உள்ளே சென்று, போரில் லாலியை முறியடித்தான். அவன் படைகளைச் சிதறடித்தழித்தான். படைத் தலைவன் லாலி, தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று பிழைத்தோடினான்!
அடிக்கடி, மைசூரின் எதிரிகளுக்கு உதவியவன், குத்தியை ஆண்ட மராட்டிய வீரன் மொராரி ராவ். அவனைத் தண்டிக்க எண்ணி, ஹைதர் அவனிடம் பெருந்திறை கோரினான். அவன் மறுக்கவே, குத்தி முற்றுகையிடப் பட்டது. கோட்டையில் நீர் இல்லாத நிலையில், மொராரி ராவ் கோட்டையை விட்டு விடுவதாகக் கூறினான். ஆனால், அன்றிரவே மழை பெய்ததால், அவன் கூறியபடி நடக்கவில்லை. மீண்டும் நீர் வற்றி, மொராரி ராவ் முன் போல், பணிய முனைந்த போது, ஹைதர் அதனை ஏற்றுக் கொள்ளாது, கோட்டையை அழித்தான். அவனைச் சிறைப்படுத்திக் கபால் துருக்கத்தில் காவலிட்டான். குத்தி மைசூர்ப் பேரரசைச் சார்ந்த ஒரு பகுதியாயிற்று.
புதிய பேஷ்வாவான ரகோபாவுக்கு எதிர்ப்பு மிகுதியாயிருந்தது. தன்னைப் பலப்படுத்திக் கொள்ள, அவன் ஹைதர் நட்பை நாடினான். தான் தர வேண்டும் திறையை, ஆறுலட்சமாகக் குறைக்கும்படி தூண்டி, ஹைதர் அவனைப் பேஷ்வாவாக ஏற்று, இணக்கமளித்தான். இது உண்மையில் ரகோபாவின் நிலையை உயர்த்திற்று. ஏனெனில் ஹைதர் பக்கமே ரகோபா சாய்ந்து விடக் கூடாதென்று எண்ணிய பம்பாய் ஆங்கில ஆட்சியாளரும், அவனை ஏற்று, ஒப்பந்தம் செய்து கொண்டனர். ரகோபாவுக்கெதிரான எதிர்ப்பு வலுக் குறைந்தது. இம் மகிழ்ச்சியால், கிருஷ்ணா ஆறு வரையுள்ள மராட்டியப் பகுதியை எடுத்துக் கொள்ளும்படி ரகோபா ஹைதருக்கு முடங்கல் வரைந்தான். ஹைதர் இந்த வாய்மொழிக் கொடையை, செயல் முறைக் கொடை ஆக்குவதில் சிறிதும் நாட்கடத்தவில்லை. ஒரு சில மாதங்களுக்குள், மராட்டியப் பேரரசின் கன்னட மொழிப் பகுதி முழுவதையும் அவன் வென்று, மைசூர்ப் பேரரசின் பகுதியாக்கினான்.
ஹைதரின் மைசூர்ப் பேரரசு, இப்போது கிட்டத்தட்ட உச்ச அளவு பரப்பெல்லையும், உச்ச அளவு ஆற்றலும் உடையதாயிற்று. அதன் மீது மேலாட்சியுரிமை நாடியிருந்த மராட்டியப் பேரரசும், நிஜாம் பேரரசும் இப்போது மைசூரைப் பார்க்க இரண்டாம் தரப் பேரரசுகளாய் விட்டன. இந்நிலைமையைக் கண்ட நிஜாமும், ரகோபாவின் மராட்டிய எதிரிகளான பூனா அமைச்சர் குழுவினரும், புழுக்கமடைந்தனர். அவர்கள் விரைவில், மைசூருக்கு எதிராக ஒப்பந்தம் செய்து கொண்டு, மைசூர் மீது படையெடுத்தனர்.
நிஜாம்—பூனா நேசப் படையின் முன்னணியை, ஹைதர் சாவனூர் அருகில் சந்தித்தான். ஸான்ஸிப் போரில், ஹைதரின் படைத் தலைவன் முகமதலி, தன் படைகளுடன் ஓடுவதாகப் பாசாங்கு செய்து, மராட்டிய முன்னணிப் படைகளை, மைசூர்ப் பீரங்கிகளின் எல்லைக்குக் கொண்டு வந்தான். பீரங்கிகளின் நெருப்புக்குப் படையின் பெரும் பகுதி இரையாயிற்று. மீந்தவர், தீய்ந்து கருகிய குறையுடலுடன் ஓடி, எங்கும் கிலியைப் பரப்பினர்.
முன்னணியைத் தொடர்ந்து, பின்னால் இப்ராஹிம் கான் தலைமையில் 40,000 வீரருக்குக் குறையாத நிஜாம் படை வந்து கொண்டிருந்தது. முன்னணியிலிருந்து ஓடி வந்தவர்கள் கிலி, அவர்களைக் கிருஷ்ணா ஆறு தாண்டி ஓட வைத்தது. பரசுராம் பாலாவின் தலைமையில் வந்த பூனா அமைச்சரின் மராட்டியப் படையோ, அடோஸி வரை அசைந்தசைந்து வந்தது. படையிலிருந்து விலகிச் செல்பவர்களுக்கெல்லாம் பணம் வழங்குவதாக ஹைதர் தெரிவித்தவுடனே, சிதறிய கடலையைப் பொறுக்குவதற்கு ஓடும் குரங்குப் படைகள் போல, அப் படைவீரர் சிதறிக் கலைந்தனர்.
மைசூரின் பழைய அரசர் மரபுக்கும், ஹைதருக்கும் சித்தல துருக்கம் ஒரு பகை முள்ளாய் இருந்து வந்தது. மராட்டியப் போரில், அதன் தலைவன் ஹைதர் உதவிக்கு வரவில்லை. அத்துடன் நிஜகல் கோட்டை முற்றுகையில், அவன் எதிரியின் ஆளாயிருந்து, ரகோபாவுக்கு வெற்றி தேடித் தந்தான். இனி மராட்டியர் ஓய்ந்து விடுவர் என்ற எண்ணத்துடன், ஹைதர் அவன் மீது தாக்குதல் தொடங்கினான். ஆனால், முந்திய தோல்வியின் அவமதிப்புக்கு ஈடு செய்யும் எண்ணத்துடன், மராட்டியர் ஹரிபந்த் பாரிகா என்ற தலைவன் கீழ் 60,000 குதிரை வீரரை அனுப்பினர். மராட்டியர் பண ஆசையறிந்த ஹைதர், துணைத் தலைவனை எளிதில் வசப்படுத்தி, பாரிகாவின் படை யைக் கலைந்தோடுவித்தான். இதன் பின், அவன் துங்கபத்திரா, கிருஷ்ணா ஆறுகளுக்கு இடைப்பட்ட சிற்றரசுப் பகுதிகளனைத்தையும், சித்தலதுருக்கத்தையும் பிடித்தடக்கினான். அஞ்சா நெஞ்சும், அடங்காப் பண்பும் கொண்ட சித்தல துருக்கத்தின் வீர மறக்குடி மக்களை, அவன் சேலர் என்ற பெயருடன், மைசூர்ப் படையின் தலைக் கூறாகச் சேர்த்துக் கொண்டான். அச்சிற்றரசின் தலைவனோ, சீரங்கப்பட்டணத்தின் மீளா வெஞ்சிறையில் தன் மீந்த வாழ்நாளைப் போக்கினான்.