உள்ளடக்கத்துக்குச் செல்

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி/ஆங்கிலேயருடன் போர்

விக்கிமூலம் இலிருந்து

8. ஆங்கிலேயருடன் போர்

ஹைதர் ஒரு சிறந்த போர் வீரன்; ஆனால், அவன் போர் வெறியன் அல்ல. அவன் வாழ்க்கையையும், சூழலையும் உற்று நோக்குபவர்களுக்கு இது எளிதில் விளங்கும். 18-ம் நூற்றாண்டில், தென்னாட்டில், போர் விலக்க முடியாத ஒன்றாயிருந்தது. அதிலிருந்து ஓர் அரசு ஒரு சிறிது ஓய்வு பெற வேண்டுமானால் கூட, அது வலிமை வாய்ந்த அரசாகவும், ஓரளவு பேரரசாகவும் இருந்து தீர வேண்டும். ஹைதர் காலத்துக்கு முன்பே, தளர்ந்து நொறுங்கிக் கொண்டிருந்த மைசூர் அரசை, அத்தகைய வலிமை வாய்ந்த அரசாக்குவதிலேயே ஹைதரின் தொடக்க காலப் போர்கள் முனைந்திருந்தன. ஆனால், அந்த நிலை அடைந்த பின்னும் மைசூர், போர் இல்லாமல் இருக்க முடியவில்லை. இதற்குப் பேரளவு மராட்டியப் பேரரசின் பண்பும், நிஜாம், ஆர்க்காட்டு நவாப் ஆகியவர்களின் பண்புமே காரணம்.

மராட்டியப் பேரரசைக் கைக்கொண்டிருந்த பேஷ்வா மரபினர், பேரரசாட்சியின் எல்லை விரிவை விரும்பியவர்களல்ல. அவர்கள் விரும்பியது, சூழ்ந்துள்ள நாடுகளைக் கொள்ளையிடுவதே. அவர்களுக்குப் பேரரசு என்பது இத்தகைய ஒரு கொள்ளைப் படைக்கான மூலதனம் மட்டுமே! நிஜாமும், ஆர்க்காட்டு நவாபும் தமக்கான வலுவும், கொள்கையும் அற்ற அரசுகள். ஆங்கிலேயரையும், பிரஞ்சுக்காரரையும் மோத விட்டே, அவர்கள் வளர எண்ணினர். இந்நிலை, தென்னாட்டின் விடுதலைக்குச் சாவு மணி அடித்து விடும் என்பதை ஹைதர் தெளிவாக உணர்ந்தான். அவன் பிற்காலப் போர்களின் போக்கைக் கவனித்தால், இது விளங்கும். ஆகவே, அப்போர்கள் மைசூர் அரசுக்கான போர்களோ, பேரரசுக்கான போர்களோ அல்ல. அவை தேசீயப் போர்கள்.

மேலும், ஹைதரின் தேசீயம் வெளிநாட்டாரை வெறுத்த தேசீயமன்று. பிரஞ்சுக்காரரின் வீரம், உறுதி, கட்டுப்பாடு ஆகியவற்றை ஹைதர் மனமாரப் பாராட்டினான். தன் அரசியலிலேயே, அவர்களைப் பல துறையிலும் ஈடுபடுத்த அவன் தயங்கவில்லை. ஆங்கிலேயரிடமும், அவன் பெருமதிப்பு வைத்திருந்தான். அவர்கள் நட்பையே விரும்பினான். ஆகவே, அவன் தேசீயம் பிற நாட்டாரையோ, பிற நாட்டுப் பண்பையோ வெறுத்த தேசீயமன்று. அவற்றைப் பயன்படுத்தியேனும், சரிந்து வந்த தேசீய வாழ்வைக் காக்க அவன் அரும்பாடு பட்டான். ஆனால், அவன் தேசீயத்துக்கு எதிராயிருந்தது, வெளிநாட்டார் அரசியல் தலையீடும், அதற்கு ஆக்கமளிக்க உடந்தையாயிருந்த மற்றப் பேரரசுகளின் பண்புமேயாகும்.

இந்த நிலையில் ஹைதர் பேரரசுகளைக் கூடிய மட்டும் எதிர்க்காமலே, மைசூரையும், மற்றத் தென்னக அரசுகளையும் வலுப்படுத்த முயன்றான். அவன் காலத்தில் எவரும், இந்தக் காலங் கடந்த உயரிய நோக்கத்தை உணர்ந்தார்களில்லை. ஆனால், அவன் உரையாடல்கள், கருத்துரைகளை வெளி நாட்டுத் தூதுவர் நமக்குத் தெரிவிக்கின்றனர். அவற்றில், இந்த நோக்கம் முளைப்பதாகத் தென்படுகின்றது.

பெயரளவில் மைசூர் மன்னனாயிருந்த சிக்க கிருஷ்ண ராஜன், 1766-ல் உயிர் நீத்தான். அவன் மகன் நஞ்சி ராஜன் மன்னர் பெயருக்கு உரியவனானான். ஆனால், அச்சிறுவன் தன் ஆற்றலும், பொறுப்பும் அறியாது, வீணாரவாரங்களில் இறங்கினான். அவனைத் திருத்த முயன்றும் முடியாது போகவே, ஹைதர் அவன் அரண்மனைச் செல்வங்களைப் பறித்து, அவனைச் சிறைப்படுத்தினான். மன்னர் பொறுப்பை மட்டுமன்றிப் பெயரையும் அவன் இதன் பின் வெளிப்படையாக மேற்கொண்டு நவாப் ஆனான்.

இச்செயல் மூலம் ஹைதர் மீண்டும் பேஷ்வா மாதவ ராவின் சீற்றத்துக்கு ஆளானான். பேஷ்வாவின் பெரும் படை மைசூரை நோக்கி முன்னேறிற்று. பேஷ்வாவுடன் நிஜாமும், படையெடுப்பில் சேர்ந்து கொள்வதாக ஒப்புக் கொண்டான். ஹைதர், ஆர்க்காட்டு நவாபின் தமையனான மகுபூஜ் கானைத் தூதராக அனுப்பிச் சந்தித்துப் பேச முயன்றான். பேஷ்வாவின் சீற்றம் மாறவில்லை. படைகளின் வரவைத் தடுக்க, ஹைதர் பல தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டான். வழி எங்கும் அணைகளை உடைத்து வெள்ளக்காடாக்கினான். பாதைகளைப் பாழாக்கினான். எல்லைப் புறங்களில் உணவுப் பொருள்கள் கிடைக்காதபடி, அவற்றைத் தூர்த்தான். ஆனால், பேஷ்வாவின் பெரும்படையை இவை நீடித்துத் தடைப்படுத்த முடியவில்லை.

மராட்டியர் சுரா மாகாணத்தை அடைந்தனர். மாகாணத் தலைவன் மீர் அலி ரஸா கான் ஹைதரின் மைத்துனன். அவனால் மிகவும் உதவப் பெற்றவன். ஆயினும், அவன் துணிந்து கடமை துறந்து, பேஷ்வாவுக்குக் கோட்டையைத் திறந்து, ஆதரவு தந்தான். இது ஹைதர் ஆற்றலுக்கும் ஊறு செய்தது. அவன் உள்ளத்தையும் புண்படுத்திற்று. இப் பகைச் செயலுக்குப் பரிசாக, மராட்டியர் மீர் அலி ரஸா கானுக்குக் குர்ரம் குண்டாக் கோட்டையை வழங்கினர்.

ஹைதர் எப்படியாவது பேஷ்வாவுடன் இணங்கிப் போக, முன்னிலும் மும்முரமான முயற்சி செய்தான். இத்தடவை சொல் திறமிக்க அப்பாஜி ராம் என்ற தூதுவனை அனுப்பினான். அப்பாஜி ராம் முயற்சி வெற்றி பெற்றது. முப்பத்தைந்து இலட்சம் வெள்ளி பெற்று படையெடுப்பை நிறுத்தப் பேஷ்வா ஒப்புக் கொண்டான். ஹைதர் உடனடியாகப் பாதிப் பணம் திரட்டிக் கொடுத்தான். மறு பாதிக்குக் கோலார் மாவட்டம் ஈடாக அளிக்கப்பட்டது. இம்மறு பாதியையும் விரைவில் திரட்டிக் கொடுத்து, அவன் கோலாரையும் மீட்டுக் கொண்டான். இவ்வாறு மலை போல வந்த இடர், பனி போல நீங்கிற்று.

மைசூர்ப் படையெடுப்பில், மராட்டியருடன் நிஜாமும் பங்கு கொள்ள எண்ணியிருந்தான். ஆனால், அவன் படைகள் வந்து சேரு முன்பே, நேச ஒப்பந்தம் முடிந்து விட்டது. ஆயினும், இந்தப் புதிய சூழ்நிலையையும் பயன் படுத்திக் கொள்ள, நிஜாம் எண்ணமிட்டான். ஹைதருடன் சேர்ந்து, ஆர்க்காட்டு நவாப் முகமதலியையும், அவன் கைப்பாவையாக நடந்து கொண்ட ஆங்கிலேயரையும் தாக்க அவன் திட்டமிட்டான்.

ஹைதர் இப்புதிய திட்டத்தை உள்ளூர விரும்பவில்லை. ஆயினும், நிஜாமின் வற்புறுத்தலுக்கு அவன் இணங்கினான். ஆனால், படைகள் ஆர்க்காட்டுச் சமவெளியில் இறங்கும் வரை நிஜாம் ஆங்கிலேயரை வெளிப்படையாகப் பகைத்துக் கொள்ளவில்லை. ஒரு புறம் ஹைதருடனும், இன்னொரு புறம் ஆங்கிலேயருடனும், நேச உறவு கொண்டு, இரண்டகமாகவே நடந்து கொண்டான். வெற்றி எந்தப் பக்கம் வரக் கூடுமோ, அந்தப் பக்கத்தில் சாய எண்ணி, மதில் மேல் பூனையாக இருப்பதையே, அவன் அரசியல் கோட்பாடாகக் கொண்டிருந்தான்.

நிஜாம் படைகள் ருக்னுதுல்லா என்ற படைத் தலைவன் கீழ் அணி வகுக்கப்பட்டிருந்தன. ஹைதர் படையில், அவன் மகன் திப்பு, மன்னிப்புப் பெற்று ஹைதருடன் சேர்ந்து கொண்ட மீர்அலி ரஸா கான், மக்தூம் சாகிபு, காஸி கான் முதலிய படைத் தலைவர்களும், மைசூர் படை முதல்வனான மகமதலியும் தலைமை வகித்தனர். இருவர் படைகளும் சேர்ந்து, 42,000 குதிரை வீரரும், 28,000 காலாள் வீரரும் இருந்தனர். 109 பீரங்கிகள் அவர்களுக்கு உதவின. தவிர, ஹைதர் வசமாக ஹைபத் ஜங் என்பவன் தலைமையில் 5,000 குதிரை வீரர்களும், 2,000 பயிற்சி பெற்ற காலாள் வீரரும், 2,000 பயிற்சி முற்றுப் பெறாத வீரரும், சில பீரங்கிகளுடன் பின் தங்கி இருந்தனர். இப்படைகள் ஆர்க்காட்டுச் சமவெளிக்குள் பாய்வதற்குச் சித்தமாகச் சங்கம் கணவாய் அருகே கூடாரமடித்து இருந்தன.

நிஜாம்—ஹைதர் படைகள் இணைந்து படையெடுக்கத் தொடங்கிய செய்தி அறிந்ததும், திருச்சிராப்பள்ளியிலிருந்த படைத் தலைவன் ஹோவார்டு 5,000 காலாள் படை வீரரையும் 1,000 வெள்ளையரையும் விரைந்து, கணவாயின் மறு புறம் கொண்டு வந்து நிறுத்தி, நேசப் படைகள் கணவாய் கடவாமல் தடுக்க முயன்றான். ஆனால், ஹைதர் படைகள் இரவோடிரவாகக் கணவாய் கடந்து, ஆங்கிலப் படைகளைச் சூழ்ந்து, அவற்றைத் தாக்கின. நிலைமையைச் சமாளிக்க முடியாத ஹோவார்டு, விரைந்து பின் வாங்கி, திருவண்ணாமலையை அடைந்தான். அங்கிருந்து சென்னைத் தலைவர்களுக்கு, நேசப் படைகளின் தொகையும், முன்னேற்றமும் குறித்து, கலவரத் தகவல் அனுப்பினான். இதன் பயனாகத் திருச்சிராப்பள்ளியிலிருந்து 4,000 காலாள் வீரர், 800 வெள்ளையர், ஆர்க்காட்டு நவாபின் 3,000 குதிரை வீரர் ஆகியவர்களுடன் படைத் தலைவன் ஸ்மித் அனுப்பப் பட்டான்.

நிஜாமின் படைகளை நோக்க, ஆங்கிலேயர் படைகள் மிகக் குறைந்த தொகையுடையவை. ஆகவே, வெற்றி தன் பக்கம் என்பதில் அவனுக்கு உறுதி பிறந்தது. இப்புகழை ஹைதருடன் பங்கு.கொள்ள அவன் உள்ளூர விரும்பவில்லை. ஆகவே, ஹைதர் படைகளைச் சோழ நாட்டுக்கு அனுப்பி, உணவுப் பொருள், தளவாடங்கள் ஆகியவைகள் ஆங்கிலேயருக்கு வராமல் தடை செய்யும்படி அவன் வேண்டினான். ஹைதருக்கு நிஜாம் படையின் மீது நம்பிக்கையில்லை. ஆயினும், நிஜாமின் வற்புறுத்தலால், தன் மெய்க் காவல்ப் படை போக மீந்தவற்றை அனுப்பி விட்டான். நிஜாம் படைகள் சீர் குலைந்தால், மெய்க் காவல் படை கொண்டே சமாளிக்கலாம் என்று அவன் எண்ணினான்.

ஹைதர் எண்ணியது சரியாய்ப் போயிற்று. மைசூர்ப் படை சிறிதானாலும், கட்டுக்கோப்புடையது என்று ஸ்மித் கருதினான். ஆகவே, அதன் பக்கம் சென்று தாக்குவது போல் பாவனை செய்து, நிஜாம் பக்கமே சென்று மோதினான். ஆங்கிலேயர் துப்பாக்கிகள் வேறொரு புறமிருந்து படை வீரரிடையே அழிவு செய்தன. சந்தைக் கூட்டத்தில் பாம்பு புகுந்தால் ஏற்படும் கலவரம், நிஜாம் படையில் காணப்பட்டது. நிஜாம் தொலைவிலிருந்து, தன் வீரர்களின் ஓட்டத் திறமையைக் கண்டு வெட்கினான். மன்னன் அமைச்சனையும், அமைச்சன் படைத் தலைவனையும், படைத் தலைவன் வீரரையும் குறை கூறிச் சமாளித்தனர். ஆனால், ஆங்கிலேயர், அவர்களுக்குப் பேச்சுக்கும் இடமளிக்காமல் துரத்தினர். ஹைதரின் சிறிய மெய்காவற் படை, இத்தோல்வியிடையேயும் நிலைமையைச் சமாளித்து, பாதுகாப்புடைய வேறிடத்துக்குப் பின் வாங்கிச் சென்றது.

போரில் எடுத்த அடியில், ஆங்கிலேயர் தற்காலிகமாக வென்றாலும், நாட்செல்லச் செல்ல, அவர்கள் பக்கத்திலும் தளர்ச்சி ஏற்பட்டது. ஆர்க்காட்டு நவாபின் படைகள், நிஜாம் படைகளை விட மோசமாயிருந்தன. வேண்டிய நேரத்தில், வேண்டிய இடத்தில் படையும், பண உதவியும் செய்வதாகக் கூறி, அவன் சென்னை அரசியல் தலைவர்களைப் போர் முயற்சியில் ஊக்கியிருந்தான். ஆனால், வரிப் பணத்தைத் தின்றழித்தது தவிர, பணத்துக்கு அவனிடம் வழி ஏதும் இல்லை. திருவண்ணாமலையில், படைகளுக்கு வேண்டிய உணவும், தளவாடமும் சேகரித்து வைத்திருப்பதாக அவன் கூறியிருந்தான். இதை நம்பி, ஸ்மித் அவ்விடம் சென்று காத்திருந்தான். எத்தகைய தளவாடமும் கிட்டவில்லை. ஆனால், இதே நம்பிக்கையுடன் அங்கே வந்திருந்த படைத் தலைவர் ‘உட்’டின் வீரருடன் ஸ்மித் கலக்க முடிந்தது. அவர்கள் மொத்தப் படை பலம் இப்போது 1,030 குதிரை வீரரும், 5,800 காலாட் வீரரும் ஆவர். 16 பீரங்கிகளும் இருந்தன.

திருவண்ணாமலையில், ஆங்கிலேயரை ஹைதர் தாக்கினான். போர்க் களத்தில் ஆங்கிலேயர் எதிர்ப்பைச் சமாளித்து நின்றனர். ஹைதர் படைகள் பின்னடைந்தன. ஆனால், ஆங்கிலேயருக்கு உணவு, தளவாட உதவி எதுவும் வராமல், மைசூர்ப் படைகள் தடுத்தன. அவர்கள் கையில் பட்ட தளவாடங்களால் அவர்கள் நிலை மேன்மேலும் நலமடைந்தது.

1767-ல் தொடங்கிய போராட்டம் அந்த ஆண்டு இறுதிக்குள், பலவகையில் மாறுதலடைந்தது. சிங்காரப் பேட்டையருகே ஆங்கில உதவிப் படை ஒன்றைத் தாக்கும் போது, ஹைதர் படைக்குப் பெருஞ்சேதம் விளைந்தது. ஹைதர் குதிரை சுடப்பட்டு விழுந்ததனால், அவன் உயிர் மயிரிழையளவே தப்பிப் பிழைத்தது. தவிர, அவன் கீழ்திசைப் போர் ஈடுபாடறிந்த மலையாளக் கரைக் குடி மன்னர் கிளர்ந்தெழுந்ததாக, அவன் கேள்விப்பட்டான். திப்புவின் தலைமையில் அவன் ஒரு படை அனுப்பி, அங்கே நிலைமையைச் சமாளித்தாலும், மதுரையிலிருந்தும், பம்பாயிலிருந்தும் ஆங்கிலேயர் அத்திசையில் கலவரங்களைக் கிளறிக் கொண்டேயிருந்தனர். பம்பாய்ப் படை, மங்களூரைப் பிடித்ததாகத் தெரிய வரவே, ஹைதர் திடுமென இரு கடற்கரைகளின் பக்கமும் போராட வேண்டி வந்தது. ஆனால், அவன் பெற்ற போர்த் திறமை, அவையனைத்தையும் இடைவிடா முயற்சியுடன் சமாளித்தது. மங்களூரைச் சென்று மீட்டு, எவரும் எதிர்பாரா வகையில், அவன் கிழக்கே தன் படைகளுக்கு உதவ முன் வந்து, இவ்வியத்தகு விரைவின் மூலமே, எதிரிகளின் உள்ளத்தில், அதிர் வேட்டுக்களை உண்டு பண்ணினான்.

ஓர் ஆங்கிலப் படை நிஜாம் பகுதி மீதே தாக்கத் தொடங்கிற்று. இது கேட்ட நிஜாம், தாயகத்துக்கு ஓடினான். ஆனால், அவன் ஓடியதுடன் அமையவில்லை. எவ்வளவு எளிதாக அவன் முன்பு, ஆங்கிலேயர் உறவைக் கை விட்டானோ, அதை விட எளிதாக, இப்போது அவன் ஹைதர் உறவை முன்னறிவிப்பின்றி எதிர்த்து விட்டு, ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் செய்து கொண்டான்.

நிஜாமின் துணை நீங்கியதால், ஹைதருக்கு உண்மையில் வலு மிகுந்ததென்றே கூற வேண்டும். ஏனென்றால், கடல் போன்ற நிஜாம் படைகளுடன் இணைந்து நின்ற போது, கிட்டாத வியத்தகு வெற்றிகள் அதன் துணை அகன்ற பின்னரே, ஹைதருக்குக் கிட்டின. கிட்டத்தட்ட வடதமிழக முழுவதும், அவன் வாள் போல் சுழன்று சுழன்று சென்று, முகமதலியின் வலிமை மிக்க கோட்டைகள் பலவற்றையும் கைப்பற்றினான். ஆங்கிலேயர் உதவிப் படைகள் எதுவும், இடம் விட்டு இடம் பெயர முடியாமல், அவற்றை அவன் சிதறடித்தான். இரண்டாண்டுகள் ஆங்கிலேயர் போக்குவரவு முற்றிலும் கடல் வழியாகவே நடந்தது. கரையாதிக்கம் முழுவதும் ஹைதர் படைகளின் வசமாயிருந்தது.

பண்டைத் தமிழரசுகளைப் போல், ஹைதரிடம் கடற்படையும் இருந்திருந்தால், மைசூர்ப் போருடன் ஆங்கில ஆட்சிக்கு ஒரு முடிவு ஏற்பட்டிருக்கும்!

ஹைதர் மேல்திசையிலிருந்து திரும்புவதற்குள், ஹைதர் வென்ற தமிழகப் பகுதி முழுவதையும் மீட்டு விட, ஆங்கிலேயர் பெரு முயற்சிகள் செய்தனர். அதற்காகவே, ஹைதரின் எதிரியாகிய குத்தி மராட்டியத் தலைவன் மொராரி ராவையும் அவர்கள் பணம் பேசி வரவழைத்தனர். ஆனால், அவன் படைகள் வந்து சேருவதற்குள், ஹைதர் மின்னலெனத் தமிழக எல்லையுள் குதித்தான்.

இந்துஸ்தானியில் ‘புலி’ என்ற பொருளுடைய ‘ஹைதர்’ என்ற சொல் மலையாளிகளிடையே ‘புலி’யால் நேர்ந்த கிலியையே தந்திருந்தது.1768-ம் ஆண்டில் ஆங்கிலேயருக்கும் அது, அதே கிலியை உண்டு பண்ணிற்று. மேலைநாட்டில் 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அழுகின்ற ஆங்கிலக் குழந்தைகளிடம் ஆங்கிலத் தாய்மார்கள், ‘நெப்போலியன்’ பெயரை மெல்ல உச்சரிப்பார்களாம். குழந்தைகள் உடனே வாய்ப் பொத்தி நடுங்கி விடுமாம்! கீழ் திசையில் ஹைதர் பெயர் உச்சரித்து ஆங்கிலக் குழந்தைகளுக்குச் செவிலியர் அதே நிலையை உண்டு பண்ணினர்!

மூலபாகல் என்ற இடத்தில், ஆங்கிலப் படைகளை அகற்றி, ஆர்க்காட்டு நவாபின் படைகள் அமர்த்தப்பட்டிருந்தன. இஃதறிந்த ஹைதர் அக்கோட்டையை எளிதில் கைப்பற்றிக் கொண்டான். படைத் தலைவன் ‘உட்’ அதை மீட்கப் புறப்பட்டான். உள்ளே மைசூர்ப் படைகள் இருந்தன என்று மட்டுமே, அவனுக்குத் தெரியும். ஹைதர் மலையாளக் கரையிலிருந்து, அவ்வளவு விரைவில் வந்திருக்க முடியாது என்று அவன் கருதினான். ஆனால், எதிர்ப்பின் மும்முரத்தால், அவன் உண்மை உணர்ந்து விரைந்து பின் வாங்கினான். இதுவும் எளிதில் முடியவில்லை. ஹைதர் வெளியே நிறுத்தியிருந்த படைகள், இதைத் தடுத்தன. அவசர அவசரமாகப் புதிய படை பலம் வேண்டுமென்று, படைத் தலைவன் ஸ்மித்துக்குச் செய்தி அனுப்பப்பட்டது.

படைத் தலைவன் ஸ்மித் வருமுன், ஹைதர் மேலும் சில கோட்டைகளைக் கைப்பற்றி விட்டான்!

ஹைதர் ஹோசூர்க் கோட்டையின் முற்றுகையில் ஈடுபட்டிருந்தான். போர் முயற்சியின் தோல்விகளால் மனம் குமுறிய ஆங்கில அரசியலார், படைத் தலைவன் ஸ்மித்தைச் சென்னைக்குத் திருப்பியழைத்துக் கொண்டு, படைத் தலைவன் ‘உட்’டை நியமித்திருந்தனர். ‘உட்’ தன் கள பீரங்கிகளையும், தளவாடங்களையும் பாகலூரில், படைத் தலைவனான அலெக்ஸாண்டரிடம் விட்டு விட்டு, ஹோசூருக்கு விரைந்தான். ஆனால், ஹைதர் முற்றுகை துறந்து, இரு தலைவர்களின் இடையே பாய்ந்து சென்று பீரங்கிகளைக் கைப்பற்றிப் பங்களூருக்கு அனுப்பினான். அத்துடன் ‘உட்’டின் படைகளை விடாது தொடர்ந்து அழித்து, அவன் தலைமைத் திறத்தைச் சந்தி சிரிக்க வைத்தான். வேங்கடகிரியிலிருந்து திடீரென்று மேஜர் பிட்ஸ் கெரால்டு என்ற படைத் தலைவன் வந்து உதவியிரா விட்டால், ‘உட்’, தானே ஹைதர் பிடியிலிருந்து தப்பி வந்திருக்க முடியாது !

ஹோசூர்-பாகல்பூர் தோல்வியால், ‘உட்’டும் பதவியிழந்தான். படைத் தலைவன் லாங் படை முதல்வனாக அமர்வு பெற்றான்.

ஆங்கிலேயர் இப்போது பங்களூரைக் கைப்பற்றி, ஹைதரை மீள வைக்கலாம் என்று மனப்பால் குடித்தனர். இதை அறிந்த ஹைதர், பஸ்ஸுல்லாக் கானை அனுப்பி, ஆங்கிலேயரிடம் மீந்திருந்த கோட்டைகளையும் பிடிக்க ஏவினான். இது மிக எளிதாக நிறைவேறிற்று. அத்துடன், ஹைதர் தன் படையுடன் சூறாவளி போலச் சுழன்று திரிந்து, கோயமுத்தூர், ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளை எல்லாம் நொடிக்குள் கைப்பற்றினான். வழியிலே, நிக்ஸன் என்ற தலைவனுடன், ஒரு ஆங்கிலப் படை குறுக்கிட்டது. எதிர்ப்பது ஹைதர் தலைவர்களுள் ஒருவனல்ல, ஹைதரே என்றறியாது சிக்கிய அப்படையில், தலைவனும் துணைத் தலைவனும் தவிர, ஒருவரும் தப்பவில்லை. துணைத் தலைவன் முன் ஆண்டில் சரணடைந்து, போர் முடிவு வரை போரிலீடு படுவதில்லை என்ற உறுதியின் பேரில் விடுவிக்கப்பட்டிருந்தான். உறுதி தவறிய குற்றத்திற்காக, அவன் மீதி வாழ்நாளைச் சீரங்கப்பட்டணம் சிறையில் கழித்தான்.

ஆர்க்காட்டு நவாபின் ஆட்சிப் பகுதி முழுவதையும், இப்போது ஹைதர் தன் கைக்குள் ஒரு ஆண்டுக்குள், கொண்டு வந்து விட்டான். அது போதாமல், திடுமென மின்னல் உருகிப் பாய்ந்தது போல், சென்னையருகே பறங்கிமலையில் வந்து, பாளையமடித்துக் கொண்டு, ஆங்கிலேய அரசியலாரை அவன் நடுநடுங்க வைத்தான்!

போரின் கடைசி ஆங்கிலப் படைத் தலைவன் ‘புரூக்’ ஹைதர் முன் மண்டியிட்டு நின்று, சமரச ஒப்பந்தம் கோரினான். ஹைதரும், ஆங்கிலேயர் வகையில் எதையும் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுக்கச் சித்தமாகவே இருந்தான்.ஆனால், நம்பிக்கை மோசக்காரனான முகமதலிக்கு மட்டும் எதுவும் விட்டுக்கொடுக்க முடியாதென்று பிடிமுரண்டு செய்தான். ஹைதர் பறங்கிமலையிலிருந்து ஒரு படைப் பிரிவுடன் வந்து, சென்னையைச் சூறையாடுவதாக அச்சுறுத்திய பிறகுதான், ஆங்கிலேயர் அவன் கூறியபடி ஒப்பந்தம் செய்ய இணங்கினர்.

இந்த ஒப்பந்தம் 1769-ல் நிறைவேறிற்று.

இவ்வொப்பந்தப்படி ஹைதரும், ஆங்கிலேயரும் எல்லாப் போர்களிலும், தமக்குள் ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும் என்று வாக்களித்தனர்.

இந்த வாக்குறுதியை, ஆங்கிலேயர் என்றும் காப்பாற்றியதில்லை. அச்சத்திலும், கிலியிலும் அளித்த வாக்குறுதி, ஒழுக்க முறைப்படி செல்லாது என்றுதான் அவர்கள் இதற்கு விளக்கம் கூறினர்!