உள்ளடக்கத்துக்குச் செல்

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி/வெற்றிப் பாதை

விக்கிமூலம் இலிருந்து

7. வெற்றிப் பாதை

ஹைதர் அலியின் ஆட்சி 1761-லிருந்து 1782 வரை நீடித்திருந்தது. இந்த இருபத்தோராண்டுக் காலத்திலும், ஓர் ஆண்டுகூடப் போர் இல்லாமல் கழிந்ததில்லை. ஓர் ஆண்டுக் காலம் கூட அவன் தலைநகரில் அரண்மனை வாழ்வு வாழ்ந்ததும் இல்லை. ஆயினும், இவற்றுக்கிடையில் அவன் குடும்பத்தின் வாழ்விலும், அரண்மனை வாழ்விலும் எல்லாம் திட்டப்படுத்தி, ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. அக்குடும்பத்தின் ஒழுங்கைப் போலவே, நாட்டின் ஆட்சி முழுவதும் சட்ட திட்டத்துக்கு உட்பட்டு, எல்லா அரங்கங்களும் ஒரு சிறிதும் வழுவாமல், இயந்திரங்கள் போல் கட்டுப்படுத்தப் பட்டிருந்தன. அவன் வீர வெற்றிகள், எந்த அரசன் வீர வெற்றிகளுக்கும் இளைத்தவையல்ல. ஆனால், அவன் ஆட்சித் திறம் அவ்வெற்றிகளின் புகழையும், மங்க வைப்பதாயிருந்தது.

மன்னுரிமை ஏற்றவுடன், ஹைதர் தன் பெயரால் புதிய நாணயம் வெளியிட்டான். அரசன், அமைச்சன் நஞ்சி ராஜன் ஆகியவர்களையும், அவர்கள் குடும்பத்தினரையும் நேரடியாகக் கண்டு, விலைமதிப்பற்ற ஆடையணிகளை அவர்கட்குப் பரிசளித்து, அவர்களைப் பெருமைப் படுத்தினான். அவர்கள் குறைவற்ற நிறைவாழ்வுக்கான எல்லா ஏற்பாடுகளையும் நிறைவேற்றினான். சீரங்க பட்டணம் கோட்டைக்கு, வீரமிக்க மக்தூம் சாகிபையே தலைவனாக நியமனம் செய்தான். பல தலைவர்களிடம் ஒப்பற்ற வீரப்பணி செய்தும், தகுதிக்கேற்ப மதிப்புப் பெறாதிருந்த பத்ருஸ் ஸமான் கான் நாட்டு என்ற வீரனை, அவன் தன் காலாட்படைகளின் தளபதியாக்கிப் பெருமைப்படுத்தினான்.

குந்தி ராவின் சதியால் பதவியிழந்து, நாடோடியாகத் திரிந்த போது, பங்களூர் வணிகரிடம் ஹைதர் வாங்கிய கடன்களும் இப்போது தீர்க்கப்பட்டன.

குந்தி ராவின் உறவினன் ஒருவன், அவன் சார்பில் கோயமுத்தூர்ப் பகுதியிலுள்ள கோட்டைகளை ஆட்சி செய்து வந்தான். குந்தி ராவ் வீழ்ச்சியடைந்த பின்னும், அவன் கீழ்ப்படிய மறுத்தான். ஹைதர் தன் மைத்துனனான இஸ்மாயிலின் தலைமையில், ஒரு படையை அனுப்பி அக்கோட்டைகளைக் கைப்பற்றினான். சிறிய பலாப்பூர்க் கோட்டையின் தலைவன் கிளர்ந்தெழுந்தான். அவனையும், ஹைதர் தானே நேரில் சென்று அடக்கி ஒடுக்க முனைந்தான்.

உடையார் மரபினர் ஆட்சியின் கீழிருந்த பகுதி, இன்றைய மைசூர்த் தனியரசின் ஒரு பாதிக்கும் குறைவானதே என்று மேலே தெரிவித்திருக்கிறோம். அது முழுவதும், இப்போது ஹைதர் ஆட்சியின் கீழ் அமைதியுற்றிருந்தது. ஆட்சிப் பொறுப்பன்றி, இனி வேறு பொறுப்பில்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டதாகவே, இச்சமயம் தோன்றிற்று. ஆனால், திடுமென வெளியேயிருந்து புதிய பொறுப்புக்கள் ஹைதரைக் கூவி அழைத்தன.

ஸலாபத்ஜங் மீர் அஸப் உத்தௌலா 1761 வரை ஆண்டான். அவன் தம்பியர் இருவரில் மூத்தவன் பஸாலத்.

அவன் ஏற்கெனவே அடோனி மண்டலத் தலைவனாயிருந்தான். ஜங்மீர் ஷுஜா உல்முல்க் வீரமும், பேரவாவும் உடையவன். இளையவன் மீர் நிஜாம் அலி கான் முந்திய நிஜாமைச் சிறைப்படுத்தி வதைத்து, பின் தானே நிஜாமாகி, 1761 முதல் 1803 வரை 42 ஆண்டுக் காலம் நீடித்து ஆட்சி செய்தான். நிஜாம் அரசுரிமையிற் பிற்பட்டுவிட்ட பஸாலத் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அடானியில் தனியாட்சி நிறுவினான். அத்துடன் தன் ஆட்சியைப் பரப்ப எண்ணங்கொண்டு மராட்டியர் கைவசமிருந்த மாகாணத்தின் மீது படையெடுத்தான்.

சுரா மாகாணத்தின் தலைநகரான ஹஸ் கோட்டை பங்களூரை அடுத்திருந்தது. அதைக் கைப்பற்றும் முயற்சியில், பஸாலத் ஜங் வெற்றி பெற முடியவில்லை. அவ்வகையில் தனக்கு உதவி செய்தால், மாகாண ஆட்சியை ஹைதரிடமே விட்டு விடுவதாக அவன் தெரிவித்தான். இச்செயல் மூலம், தன் ஆட்சியையும் விரிவுபடுத்திக் கொள்ள முடியும். அத்துடன் நிஜாமின் வலுவையும் குறைக்க முடியும் என்று கண்டு, ஹைதர் அதில் முனைந்தான்.

ஹஸ் கோட்டையை ஹைதர் இரண்டு மூன்று நாட்களில் வென்றடக்கினான். அதன் பின், அவன் பெரிய பலாப்பூர் கோட்டையை அணுகினான். ஹைதரும், அவன் தமையனும், சிறு பிள்ளைகளாயிருக்கும் போது, அவர்கள் தாயுடன் சிறையில் அவதிப்பட்டிருந்த கோட்டை இதுவே. அவர்களைத் துன்புறுத்திய அப்பாஸ் அலி கானே அதன் முதல்வனா யிருந்தான். வளர்ந்து விட்ட புலிக் குட்டியின் சீற்றத்துக்கு அஞ்சி, அவன் பெண்டு பிள்ளைகளுடன் கோட்டையை விட்டு ஓடினான்.

மாகாணத்தின் கடைசிக் கோட்டை ஈத்தா என்பது. மராட்டியர், தமிழகக் கொங்கு மண்டலத்தை வெல்லும் பேரவாவுடன் இங்கே பீரங்கிகள், வெடி மருந்துக் குவைகள், உணவுப் பொருள்கள் ஆகியவற்றைப் போதிய அளவு சேமித்து வைத்திருந்தனர். இவை அனைத்தும் ஹைதர் கைவசமாயின. போர் முடிவில், பஸாலத் ஜங் ஒன்றிரண்டு பீரங்கிகள் தவிர மற்றச் செல்வங்களையும், மாகாண ஆட்சியையும் ஹைதரிடமே ஒப்படைத்தான். அத்துடன் அவன் அரிய உதவியைப் பாராட்டி, நவாப் பகாதூர் சக் மக் ஜங் என்ற பட்டத்தையும் அரசுரிமைச் சின்னங்களையும் அவனுக்கு அளித்தான். ஹைதர் பட்டத்தில் ‘ஜங்’ என்ற அடைமொழியை மட்டும் நீக்கி, மற்றவற்றைத் தன் நிலவர உடைமையாக்கிக் கொண்டான். மீர் இஸ்மாயில் ஹுசேனை மாகாணத் தலைவனாக்கி விட்டு, ஹைதர் வெற்றியுடன் சீரங்கப்பட்டணத்துக்கு மீண்டான்.

சிறிய பலாப்பூர் வெற்றியை அடுத்து, அதைச் சார்ந்திருந்த ராயதுருக்கம், ஹர்ப்பன ஹள்ளி, சித்தல துருக்கம் ஆகிய கோட்டை முதலியவைகளையும் ஹைதர் தன் ஆட்சிக்குக் கீழ்க் கொண்டு வந்து, திறை தருவிக்க முயன்றான். இவ்வேலை கிட்டத்தட்ட முடியும் சமயத்தில், பேடனூர் அரசியலில் ஏற்பட்ட அரசுரிமைப் பூசல் அவன் கவனத்தை ஈர்த்தது.

ஹைதரின் பேரரச வாழ்வுக்கு அடிவாரமிட்ட நிகழ்ச்சி, பேடனூர் வெற்றியேயாகும். பேடனூர் இன்றைய மைசூர்ப் பகுதியின் வடமேற்கிலுள்ள மலை நாட்டுச் சிறு நில அரசு ஆகும். 16-ம் நூற்றாண்டில் கிலாடி என்ற தலைநகரிலிருந்து நாயக மரபு மன்னர் அதை ஆண்டனர். அவர்கள் லிங்காயதர், அதாவது வீர சைவ மரபினர். விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின், இச்சேரி புதிய தலைநகராயிற்று. இச்சேரி நாயகர்கள், மைசூர் உடையார்களுடன் போட்டியிடத் தக்க வலிமை வாய்ந்த அரசர் ஆயினர். 1640-ல் சிவப்ப நாயகன் என்ற அரசன் தலைநகரைப் பேடனூர் அல்லது ‘மூங்கில் நகர’த்துக்கு மாற்றி, அதை வெல்ல முடியாத கோட்டை ஆக்கினான். அவன் ஆட்சிக் காலத்தில் பேடனூரின் செல்வம் தென்னாடெங்கும் புகழ் பெற்றதாயிற்று. ஆட்சியும் மேல் கடற்கரை வரை பரந்திருந்தது.

1755-ல் பேடனூர் மன்னன் பசவப்ப நாயகன் மாண்டான். அவன் மனைவி வீரம்மா, எக்காரணத்தாலோ, தன் மகன் சென்னபஸவையாவிடம் ஆட்சியைக் கொடுக்காமல் தானே ஆள முற்பட்டாள். சென்ன பஸவையா கொல்லப்பட்டு விட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் சென்ன பஸவையா தப்பியோடி, ஹைதர் அலியிடம் உதவி கோரினான். அரசுரிமை பெற்றால், ஹைதரின் ஆளாக இருந்து ஆட்சி செய்வதாகவும், திறை செலுத்துவதாகவும் வாக்களித்தான்.

ஹைதரின் பேடனூர்ப் படையெடுப்பு 1763-ல் தொடங்கிற்று. தலைநகரை அணுகும் வரை அரசி ஒரு சிறிதும் கவலை கொள்ளவில்லை. காடு, மலைகளைக் கடந்து, எந்தப் படையும் அவ்விடம் வர முடியாதென்ற துணிச்சலே அதற்குக் காரணம். ஆனால், இளவரசன் உதவியாலும், ஓர் அமைச்சன் உதவியாலும், படைகள் காட்டு வழியறிந்து விரைந்தன. கோட்டையை அணுகிய பின், அரசி பணிந்து சமாளிக்க முயன்றாள். ஆண்டு தோறும், ஒரு இலட்சம் வெள்ளி திறையளிப்பதாக வாக்களித்தாள். ஆனால், அரசுரிமை இழப்பதைத் தவிர, வேறு எந்தத் திட்டத்துக்கும் ஹைதர் இணங்கவில்லை.

ஆளுபவரிடம் எத்தனை வேற்றுமை இருந்தாலும், அந்த மலைநாட்டு மக்களின் போர் உறுதியில் தளர்ச்சி எதுவும் இல்லை. அவர்களைக் கொல்வதுதான் எளிதாயிருந்தது; அடக்குவது எளிதாயில்லை. தலைநகர்க் கோட்டை முற்றுகை ஒரு ஆண்டு நீடித்தது. அதன் பின்னும், மறை சுரங்க வழி ஒன்றை உளவாளிகள் கண்டு கூறியதனாலேயே, கோட்டை வீழ்ச்சியுற்றது. அரண்மனையை தானே தீக்கிரையாக்கி விட்டு, நகை நட்டுக்களுடன் அரசி வேறு கோட்டைகளுக்கு ஓடினாள். ஆனால், இறுதியில் எல்லாக் கோட்டைகளும் பிடிபட்டன. அரசியும், அவள் நண்பர்களும் மதகிரிக் கோட்டையில் சிறை வைக்கப் பட்டனர்.

பேடனூரின் மலைநாட்டு மக்களே தொடக்கத்திலிருந்து, ஹைதரின் படையின் மூல பலமாயிருந்து வந்தனர். மக்கள் வீரம், நாட்டின் வளம், அரணமைப்புக்கள் ஆகிய யாவுமே ஹைதருக்குப் பிடித்திருந்தன. ஆகவே, அவன் பேடனூரைத் தன் நேரடியாட்சிப் பகுதியாகவே சேர்த்துக் கொண்டான். மைசூர் அரசின் எல்லை விரிவுற்றது. அத்துடன், அவன் பேடனூரையே தன் தலைநகரம் ஆக்கிக் கொள்ள எண்ணியிருந்ததாக அறிகிறோம். இத்திட்டம் கைவிடப்பட்டாலும், அந்நகர் மீது அவனுக்கிருந்த ஆர்வம் என்றும் குறையவில்லை. அவன் அதன் பெயரை ஹைதர் நகர் என்று மாற்றியமைத்தான். நகரின் கட்டடங்களையும், தெரு அமைப்பையும் அழகுபடச் செப்பம் செய்தான். அங்கே ஒரு தனி அரண்மனை, ஒரு வெடி மருந்துச் சாலை, நாணயத் தம்பட்டசாலை, ஆகியவற்றை உண்டு பண்ணினான். நகருக்கு அருகாமையிலுள்ள கடற்கரையில், ஒரு புதிய துறைமுகத்தையும் கட்டமைத்தான்.

வெற்றியார்வத்துடன் புறப்பட்ட ஹைதர் உள்ளத்தில் பேடனூர், வாழ்க்கை ஆர்வத்தையும் ஆட்சியார்வத்தையும் தட்டி எழுப்பிற்று.

புதிய மைசூர் அரசின் புகழ்ந்தோரரை வளைவில் பேடனூர் நடுநாயக மணிக்கல்லாக அமைந்தது.

மைசூருடன் அமையாமல், பேரரசாட்சி அமைக்க வேண்டுமென்ற ஆர்வமும், தென்னாட்டு அரசியல் வாழ்வைச் சீரமைக்க, அப்பேரரசை ஒரு கருவியாக்க வேண்டுமென்ற ஆர்வமும்தான், பேடனூரைத் தலைநகராக்க வேண்டுமென்ற முதலார்வத்தைக் கை விடும்படி ஹைதரைத் தூண்டின. அவன் அரசியல் தொலைநோக்குக்கு, இந்த ஆர்வத் துறவு ஒரு சீரிய சான்று ஆகும்.

பேடனூர் வெற்றியால், ஹைதருக்கு ஒன்றரைக் கோடி பொன்னுக்குக் குறையாத பெருஞ் செல்வம் கிடைத்ததென்று கூறப்படுகிறது. இது இன்றைய மதிப்பில் பத்துக் கோடி வெள்ளிக்கு மேல் ஆகிறது.

பேடனூர்ப் போரின் போது, சாவனூர் நவாப் அப்துல் ஹக்கீம் பேடனூர் அரசிக்கு உதவியளித்திருந்தான். ஏற்கெனவே சுரா மாகாணத்தின் வெற்றி மூலம், ஹைதர், மராட்டியர் பகைமையை விலைக்கு வாங்கியிருந்தான். சாவனூர் மராட்டியர் அரசை அடுத்திருந்ததனால், நட்பு முறையிலோ, எதிர்ப்பு முறையிலோ, அதைத் தன் பக்கமாக்கிக் கொள்ள ஹைதர் உறுதி கொண்டான். நட்புறவை நவாப் ஏற்காததால், ஹைதர் படைகள் சாவனூர் மீது சென்றன. நாட்டின் பெரும் பகுதி அழிக்கப்பட்ட பின்னரே,. நவாப் பணிந்து திறை செலுத்த ஒப்புக் கொண்டான். அவனிடமிருந்தும், கோடிக்கணக்கான விலை மதிப்புடைய பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

இச்சமயம் ஆர்க்காட்டு நவாபின் எதிரியான சண்டா சாகிபின் மகன் மீர் ரஸா அலி கான் ஹைதரிடம் அலுவல் தேடி வந்தான். பிரஞ்சுப் போர் முறைகளிலும், பயிற்சிகளிலும் தேறிய அவனை, ஹைதர் தன் பயிற்சிப் படைத் தலைவனாக்கிக் கொண்டான்.

ஹைதரின் படை முன்னேற்றங் கண்டு, பேஷ்வா மாதவ ராவ் மனக் கொதிப்படைந்து, கோபால் ராவின் தலைமையில், ஒரு படையை அனுப்பினான். ஹைதரின் படை, அளவில் சிறிதாயிருந்தாலும், ஹைதரின் தலைமைத் திறமையால், பல களங்களில் வெற்றி கண்டது. கோபால் ராவ் மனமுடைந்து திரும்ப வேண்டியதாயிற்று. ஆனால், விரைவில் பேஷ்வா தன் மூல பலம் முழுவதும் திரட்டிக் கொண்டு, மைசூர் மீது படையெடுத்தான். சாவனூருக்குத் தெற்கே ரத்திஹள்ளி என்ற இடத்தில், ஒரு கடும் போர் நிகழ்ந்தது. ஹைதர் போர் முறைகள் பலவற்றைத் திறம்படக் கையாண்டும், மராட்டியர் பெரும் படை முன் முழுத் தோல்வி ஏற்க வேண்டியதாயிற்று. ஒரு சில குதிரை வீரருடன் பேடனூர்க் காடுகளுக்குள் ஓடித்தான் ஹைதர் உயிர் தப்ப வேண்டியிருந்தது.

மராட்டியப் படைகள் மைசூர்ப் பகுதி முழுவதும் பரவி, ஹைதரை மென்மேலும் நெருக்கின. குடும்பத்தையும், குடும்பச் செல்வக் குவியலையும் சீரங்கப் பட்டணத்துக்கு அனுப்பி விட்டு, ஹைதர் நேர் உடன்படிக்கை கோரினான். இந்த ஒரு தடவை உடன்படிக்கையின் கட்டுப்பாடுகள் அவனுக்கு முற்றிலும் பாதகமாய் இருந்தன. அவன் சாவனூரையும், மொராரி ராவிடமிருந்து முன்பு கைப்பற்றிய குத்திப் பகுதியையும் விட்டுக் கொடுக்க இணக்கமளித்தான். அத்துடன், போர் இழப்பீடாக 32 இலட்சம் வெள்ளி கொடுக்க வேண்டி வந்தது. ஆயினும், ஹைதரின் சுரா மாகாண வெற்றியும், பிற ஆட்சிப் பகுதிகளும் அவனிடமே விட்டு வைக்கப்பட்டன. தோல்வி இடையேயும், அவன் வீரத்துக்குக் கிடைத்த மதிப்பே இது.

தோல்வி காணாத வீரன் ஹைதரின் புகழ், மராட்டியப் போரின் தோல்வியால் வளர்ந்ததேயன்றிக் குறையவில்லை. ஏனென்றால், இத் தோல்வி, அடுத்த வெற்றிப் பாய்ச்சலுக்கான ஒரு பதுங்கலாக மட்டுமே அமைந்தது. படைகளின் அளவால், பன்மடங்கு மேம்பட்ட எதிரி, முகம் திரும்பிய மறு கணமே ஹைதர் விரைந்து, தன் நாட்டைச் சீர் செய்து கொண்டு, அடுத்த வெற்றிப் பாய்ச்சலுக்குக் கிளம்பினான். இத்தடவை அவன் நாட்டம் மேற்கு மலையாளக் கரை நோக்கிற்று.

மேற்குக் கரைப் பகுதி கி.பி. 9-ம் நூற்றாண்டு வரை, முத்தமிழ் நாடுகளில் ஒன்றாகிய சேர நாடாயிருந்தது.ஆனால், அந்நூற்றாண்டில் சேரப் பேரரசு வீழ்ச்சியடைந்து, பல சிற்றரசுகளாயின. தெற்கே, வேணாடு அல்லது திருவாங்கூர், உதயவர் மரபினராலும், அதன் வடபால் கொச்சி, பெரும் படப்பு மரபினராலும், கள்ளிக்கோட்டை, சாமூதிரி மரபினராலும், வடகோடியிலுள்ள சிரக்கல், கோலத்திரி மரபினராலும் ஆளப்பட்டது. விஜயநகர ஆட்சிக் காலத்தில் புதிதாகக் கடல் வழி கண்டு, மேனாட்டுக் கடலோடி வாஸ்கோடகாமா வந்து, தென்னாட்டில் இறங்கிய பகுதி, கள்ளிக் கோட்டையே. முதல் முதல் மேனாட்டினருடன் தொடர்பு கொண்ட கீழை உலக மன்னனும் சாமூதிரியே.

மலையாளக் கரையின் மக்கள் தொகையில் பெரும் பகுதியினர், நாயர்கள். அவர்கள் போரையே தங்கள் வாழ்வாகக் கொண்ட மறக்குடியினர். 9-ம் நூற்றாண்டுக்குப் பின், புதிய இஸ்லாம் நெறியும், அராபியர் குடியேற்றமும், வட மலையாளக் கரையில் ஏற்பட்டது. அராபியரும் நாட்டுக் குடிகளும் கலப்புற்ற பின், மலையாள நாட்டு இஸ்லாமியர் மாப்பிள்ளைகள் என்று அழைக்கப்பட்டனர். அவர்களும், நாயர்களைப் போலவே வீரமுடையவர்களா யிருந்தனர். ஹைதர் நாட்களில், சிரக்கல் தலைவனும், அலி ராஜன் என்ற ஒரு இஸ்லாமியனாகவே இருந்தான்.

1757-ல் ஹைதர் நஞ்சி ராஜனுடன், தமிழகப்போர்களில் ஈடுபட்டிருந்தான். அச்சமயம் அவன் மலையாளக் கரையில் படையெடுத்துத் திறை பிரித்த செய்தி மேலே கூறப்பட்டுள்ளது. சாமூதிரி அரசருக்கும், பாலக்காட்டு அரசருக்கும் இருந்த போட்டி, அச்சமயம் ஹைதருக்கு உதவிற்று. பாலக்காட்டு அரசன் பணிந்து நண்பனானான். அவன் உதவியுடன், சாமூதிரி முறியடிக்கப்பட்டு, திறை செலுத்திப் பணிந்தான். ஆண்டு தோறும், திறை செலுத்துவதாகவும் இரு மன்னரும் வாக்களித்தனர். போட்டி காரணமாக, பாலக்காட்டரசன் அவ்வப்போது இதை அனுப்பி வந்தாலும், சாமூதிரி இதை விரைவில் நிறுத்தினான். மைசூர் அரசியல் வாழ்வு வேறு திசையில் சென்றதாலும், மராட்டியர் படையெடுப்பாலும், ஹைதர் இப்பக்கம் திரும்பவில்லை. ஆனால், 1765-ல் மராட்டியப் படை திரும்பியவுடன், அவன் சாமூதிரியிடம் திறை கோரினான். சாமூதிரி மறுத்து விடவே, ஹைதர் படையெடுப்புத் தொடங்கிற்று.

முதலில் மைசூர்ப் படைகள் பேடனூர் வழி, மேல் கரையின் வடகோடி சென்றன. தளவாடங்களைக் கடல் வழி அனுப்பி விட்டு, ஹைதர் கரை வழியாகக் குடகு மீது படையெடுத்தான். ஒன்றிரண்டு குடி மன்னர் எதிர்த்து வீழ்ச்சியடைந்த பின், மற்றவர்கள் பணிந்தனர். கண்ணனூரிலுள்ள அலி ராஜன் பணிந்ததுடனன்றி, ஹைதருக்கு நண்பனாகி, அவன் படைகளுக்கு வழி காட்டி உதவினான்.

மலையாளக் கரைப் போராட்டத்தில், ஹைதர் படைகளுக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டது. பல அடர்ந்த சதுப்பு நிலக் காடுகள் தாண்டிப் படைகள் செல்ல வேண்டியிருந்தது. நாயர் வீரர்களும், அங்குலம் அங்குலமாக அவர்கள் முற்போக்கை மூர்க்கமாகத் தடுத்து நின்றனர். ஆனால், இறுதியில் படைகள் கள்ளிக்கோட்டையை அணுகின. சாமூதிரி இத்தடவை எளிதில் பணிந்து, நட்பாடினான். ஆயினும், திறை செலுத்துவதில், அவன் நாள் கடத்தி வந்தான். ஹைதர் சீற்றங் கொண்டு, சாமூதிரியையும். அவன் அமைச்சனையும் அவரவர் அரண்மனைகளிலேயே சிறைப்படுத்தினான். அப்போதும் செயல் சாயவில்லை. ஹைதர், அமைச்சனை வதைத்துத் துன்புறுத்தினான். தனக்கும் இந்தத் தண்டனை தரப்படக்கூடும் என்று எண்ணி, சாமூதிரி தன் அரண்மனைக்குத் தானே தீ வைத்து அதில் மாண்டான். நகரின் செல்வத்தைக் கொள்ளையிட்ட பின், ஹைதர் மலையாளக் கரையில் தெற்கு நோக்கி முன்னேறினான். கொச்சி அரசரும், பாலக்காட்டு அரசரும் பணிந்து, பெருஞ் செல்வத்தைத் திறையாக அளித்தனர்.

சாமூதிரியின் நெஞ்சழுத்தத்தின் பயனை ஹைதர் விரைவில் கண்டான். நாடு முழுவதும் அடக்கி விட்ட மகிழ்ச்சியுடன் அவன் கோயமுத்தூர் சென்றவுடனே, மலையாளக் கரை முழுவதும் காட்டுத் தீ போலக் கிளர்ந்தெழுந்தது. மாடக்கரையிலிருந்து, ஹைதர் கிளர்ச்சியை அடக்கும்படி, ரஸா சாகிப் என்ற படைத் தலைவனை அனுப்பினான்.

ஆனால், கிளர்ச்சி இத்தடவை படை வீரர் கிளர்சியாயில்லை. நாயர் குடி மக்கள் அனைவருமே கிளர்ந்தெழுந்தனர். ரஸா சாகிபு முன்னும் செல்ல மாட்டாமல், பின்னும் வர மாட்டாமல் திணறினான். ஹைதர் செய்தி அறியு முன், நிலைமை படுமோசமாயிற்று. செய்தியறிந்த பின்னும், பெரு வெள்ளத்தால், ஹைதர் முற்போக்குப் பெரிதும் தடைப்பட்டது. நாயர் வீரர்கள் பல்லாயிரக் கணக்கில் திரண்டு, மைசூர்ப் படைகளுக்குப் பெருஞ் சேதம் விளைத்தனர். நகரை அணுக முடியாமல், இரு படைகளும் தடைபட்டு நின்றன.ஆனால், இச்சமயம் ஹைதரிடம் இருந்த பிரெஞ்சுப் படைப் பிரிவின் தலைவன் உருப்படியான உதவி செய்தான். அவன் உக்கிரமாக முன்னேறி, அரண் வரிசைகளைப் பிளந்தான். பிளவின் வழி ஹைதர் படைகள் முன்னேறி, நகரைக் கைக்கொண்டன.

நாடு கைவசமான பின், ஹைதர் வட்டியும், முதலுமாகப் பழி வாங்கினான். மலபார் மக்கள் என்றும் அவன் பெயரை மறக்க முடியாதபடி, தன் ஆற்றலை அவன் அவர்கள் மீது பொறித்தான். அவன் இப்போது எடுத்த நடவடிக்கைகள், படைத் துறை வரலாறு முன்பின் அறியாதது. சிறைப் பட்டவர்களை ஒருவர் விடாமல், அவன் கொன்று வீழ்த்தினான். குடிமக்களைத் தொகுதி தொகுதியாகத் திரட்டித் தொலை நாடுகளில் சென்று பிழைத்து, அவதியுறும்படி அனுப்பி வைத்தான்.

அரசியல் நோக்குடன் மதிப்பிட்டாலன்றி, மலபாரில் ஹைதர் கையாண்ட முறைகள், தூய வீரனான அவன் புகழுக்குக் களங்கம் தருபவையேயாகும். ஆனால், வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய முத்திசையிலும், பகைவர்களுடன் போராட வேண்டிய நிலையிலிருந்த மைசூருக்கு, நாலாவது திசையில், மேற்கு மலைத் தொடரின் நிழலில் ஒதுங்கியிருந்த மலபாரின் அமைதி மிக இன்றியமையாததாயிருந்தது. ஹைதரின் கடு நடவடிக்கைகள் கூட, இவ்வகையில் அவனுக்கு முழுதும் பயன்படவில்லை என்பதை அவன் பின்னாளைய வரலாறு காட்டுகிறது.