கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கன்பூசியனிசமும்; பொதுநல ராஜ்யமும்
இன்றைக்கு ஈராயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த சீனநாட்டின் பழமைப் பண்புகளை உருவாக்கி; ஒர் இலட்சியக் கொள்கையை உலகுக்கு அளித்தவர் ஞானி கன்பூசியஸ். அதைத்தான் இன்றும் 'கன்பூசியனிசம்’ என்று உலகம் போற்றுகிறது.
ஈராயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு கன்பூசியஸ் வாழ்ந்த காலத்திலிருந்து இன்று வரை கால வளர்ச்சியும் கருத்து வளர்ச்சியும் படிப்படியாக வளர்ந்து வந்துள்ளது. ஆனால், மனித இனத்தின் மனமும்; மனித இயற்கையும் இன்றுவரை மாறாமல் இருக்கின்றன.
கன்பூசியஸ் உயிரோடு வாழ்ந்த காலத்தில் நிலையற்ற உலகு தத்தளிக்கும்போது மனித இனவாழ்வை மாற்ற வேண்டும் என்று எப்படி பரப்புடன் அவர் சிந்தனை செய்தாரோ, அதே பரபரப்புடைய ஒரு சமூக வாழ்வை அடைவதற்கு உலகம் துடித்துக் கொண்டுதான் உள்ளது.
மனிதன் மகிழ்ச்சியோடும், அறநெறிகள் சூழ்ந்த வாழ்வோடும் வாழ்வது எப்படி? என்ற கன்பூசியனிசம் திட்டம் போல உலகில் வேறு எந்த ஞானியும் சிந்தித்ததில்லை என்றாலும், மேனாட்டுத் தத்துவ ஞானத்திற்கும்-சீனத்தின் தத்துவத்திற்கும், குறிப்பாக, கன்பூசியசின் தத்துவத்திற்கும் அடிப்படையில் சில வித்தியாசங்கள் இருக்கின்றன.
மேற்கு நாட்டுத் தத்துவம், அறிவியலோடும்-மதத்தோடும் சார்புடையது; அறிவை அறிவிற்கே அடையும் லட்சியமுள்ளது; வரம்பற்றது அறிவு என-நம்பும் நம்பிக்கை உடையது.
ஆனால், சீன நாட்டு தத்துவமோ, அறச் சார்புடன் உறவாடுவது; அரசியல், இலக்கியம், கலைகளோடு நெருக்கமுடையது. அறிவுக்கு வரம்புண்டு என்று வரையறுக்கும் சிந்தனை பெற்றது.
நற்செயல்களுக்காகவும், சாதனைகளுக்காவும் அறிவை ஓர் துணைக் கருவியாக உபயோகப்படுத்த எண்ணுவது; மனிதனின் விஞ்ஞானச் சக்திகளையும் மீறி; அவனது ஒழுக்கப் பண்புகளையே பெரிதாக வளர்ப்பது; தன்னைப் பண்படுத்தும் தத்துவத்திற்கே முதலிடம் தருவது மனிதத் தன்மை, அன்பு வழி, அறநெறி, சமூக உறவுகள், கடமைகள், ஒழுக்க விதிகள் போன்றவற்றில் ஈடுபடும் தன்மையுடையது.
உலகின் தத்துவங்களை; அதாவது எதிரிடை இரட்டைகளாகப் பார்ப்பது மேனாட்டுத் தத்துவம்! குறிப்பாக, கிரேக்க நாட்டு மேதை பிதாகொரஸ் என்பவன் அதைச் செய்தான்-பேசினான்!
’எதுவும் இரண்டல்ல; ஒன்றுதான்’ என்ற பிதாகொரசை எதிர்த்து எதிர்வாதம் புரிந்தான்-அதே கிரேக்க நாட்டின் பேரறிவாளன் ஹெராக்ளிட்டஸ் என்பவன்!
’காலம் நிலையான ஒன்றல்ல’ என்பதாலும், மாறுதல் என்பது இயற்கையின் நியதி' என்ற கருத்து மோதல் கிரேக்க நாட்டின் அறிவியலாளர்கள் இடையே ஒரு பெரும் போரே நடந்ததால் உண்மைகள் சில உலகுக்குக் கிடைத்தன.
அதனைப்போல, உலகின் தன்மைகளை எதிர் எதிராகப் பிரித்துப் பார்த்ததும் அதே மேனாட்டுத் தத்துவம்தான்! தெய்வீகம்-மானிடம், அரூபம்-தத்ரூபம்; லட்சியம்-நடைமுறை; சுதந்திரம்-அதிகாரம்; தனி மனிதன்-சமூகம் என்பதே அந்த இரட்டைகளாகப் பார்த்த பண்பாகும்!
ஆனால், சீனத்துத் தத்துவம் அத்தகையதன்று; இரட்டைகளை இணைத்து ஒருமுகப்படுத்திப் பார்ப்பது, மனிதன் உலகின் ஓர் அம்சம் அதுபோலவே உலகமும் மனிதனின் ஓர் உறுப்பாகும் என்பதே சீனத் தத்துவம்.
சீனர்களின் இந்த தத்துவத்திற்கு ஆதி அடிப்படையாக இருப்பது 'யாங்-யின்' என்ற தத்துவக் கொள்கையாகும். யாங்-என்றால் ஆண்மை; படைக்கும் ஆற்றலுடையது; உற்பத்தி சக்தி; வானத்துச் சூரியனும் சுவர்க்கம் அல்லது வானகத்திற்கு இணையானது ஈடானது.
'பின்' என்பது பெண்மை; ஒன்றிலிருந்து ஒன்றை கிரகிக்கும் ஆற்றல் வாய்ந்தது. வானத்து நிலவிற்கும- பூமிக்கும் இணையானது. இவை இரண்டும் இயற்கையின் இரட்டை சக்திகள்! இவற்றின் கலப்படப் பொருள்தான் இந்த உலகம்!
ஆண்மை-பெண்மையான 'யாங்-பின்' என்ற இந்த இரு இயற்கை சக்திகள் வானகமும்-வையகமும், சூரியனும் சந்திரனும், ஒளியும் இருளும் பிறப்பும் இறப்புமாகும்!
மனிதன் தனது உடலை பூமியில் இருந்து, அதாவது 'பின்’ எனும் பெண்மையிடம் இருந்துப் பெறுகிறான்! ஆத்ம உருவை, வானத்திடம் இருந்து, 'யாங்' எனும் ஆண்மையிடம் இருந்து-பெறுகிறான்!
இந்த யாங்-பின் எனும் தத்துவம் நமது சைவ சமயத்தின் சிவன்-சக்தி, பரன் பரை, அம்மை-அப்பன் என்ற தத்துவத்தை நினைவூட்டுகிறதா-இல்லையா? சிந்தித்துப் பாருங்கள். இதை விவரித்தால் நூல் பெருகும் நமது நோக்கமும் இதுவன்று!
'பாகுயா' அல்லது எட்டு திரிகோணம் எனும் குறிநூல் இந்த தத்துவத்திலே இருந்து பிறந்து, சீன தத்துவத்திற்குரிய தத்துவத் தொட்டிலாக அமைந்தது!
சித்திரக்குறி நூல் என்று இந்நூலைச் சீனர் கூறுவர். நேர் கோடுகளின் அமைப்புகள் பல வகைகளில், ஒரு வட்டத்திற்குள் எட்டு திரிகோடு வகுப்புகளாக அமைந்திருக்கும் ஒரு சின்னமே இந்த எட்டு திரிகோணமாகும்.
சித்திரத்தின் நடுவில் ஒரு வட்டம்! அதனுள் இருப்பவை சிருஷ்டியைக் குறிக்கும் சின்னம். அதைச் சுற்றி எட்டு விதமான திரிகோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நேரான கோடு (-) 'யாங்' எனும் ஆண்மையைக் குறிக்கும் சின்னம். அதாவது, அனுலோம தத்துவத்தின் சின்னம். ஓர் உடைந்த கோடு (--) 'பின்', எனும் பெண்மையைக் குறிக்கும் சின்னம். அதாவது, விலோம தத்துவத்தின் சின்னம்.
உலகத்தின் எட்டு அடிப்படை மூலங்களை, ரேகா உருவமாக எட்டு திரிக்கிரமம் குறிக்கிறது. அவை, வானகம், பூமி, இடி, தண்ணீர், மலை, காற்று, நெருப்பு. சதுப்பு நிலம்.
இந்த எட்டு திரிக்கிரமச் சித்திரம், பழங்காலத்தில் ஓர் ஆமை ஓட்டின் குறிகளிலிருந்து புராண காலத்தில் மாமன்னர் ஒருவரால் உருவானதாகக் கூறுகிறார்கள்.
அதற்கு பின்னர், 'சென்' வம்சத்தை உருவாக்கிய மாமன்னராலும், அவருடைய புதல்வராலும் எட்டு திரிக்கிரமத்திற்கு பொருள் வியாக்கியானங்கள் கூறப்பட்டன; அவையே உருவக் கிரந்தம், சகுணம், சோதிடம், ரகசிய சாஸ்திரம் ஆகியவற்றுக்கு அடிப்படையானவை.
அந்த வியாக்கியானங்கள் விளைவாக, யிங்-கிங் எனப்படும் பரிணாம இலக்கியம்-அல்லது பேத நூல் தோன்றியது என்று சீன வம்சத்தவர்கள் எண்ணுகிறார்கள்.
மறை ஞானி கன்பூசியஸ்தான் இந்த மறை பொருள் சாஸ்திரமான் அந்த நூற்களுக்கு முதன் முதலில் புது தத்துவ வடிவம் கொடுத்திருக்கிறார். இது மட்டுமன்று புனிதத் திருமறைகளாகவும், பண்டைய காலப் பேரிலக்கியங்களாகவும் போற்றப்பட்ட சீன நூல்கள் அனைத்தையும் கன்பூசியஸ் ஆராய்ந்து அவற்றைத் தொகுத்து மனித சமுதாயக் கண்ணோட்டத்தில் நூல்களாகப் பதிப்பித்துள்ளார்.
அந்த நூல்களாலும், அவரது போதனைகளாலும் ஒரு புதிய கொள்கையைப் பரப்பி, உலகத்தின் முன் ஒரு மாபெரும் இலட்சியத்தைக் கொண்டு வந்து நிறுத்தினார். அதுதான் கன்பூசியனிசம்!
கன்பூசியசுக்கு முன்பே சீன நாட்டின் பல மகா மேதைகள் தோன்றி பலவிதமான கொள்கைகளைப் பரப்பியிருக்கிறார்கள். ஆனால், சீன நாட்டின் மக்களது மனோநிலைகளிலும் தத்துவஞான நூற்களிலும் பரவியிருக்கும் தத்துவங்களில் மிகவும் முக்கியமானவை அந்த நான்கு நூல்கள் தான். அந்த நூல்கள் எவை?
கன்பூசியனிசம்; இது ஓர் அறநெறிகளின் ஒடுக்க நூல்; யார் யார் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகளைக் கூறும் ஒழுக்க மார்க்கம்! சமுதாய மனிதனைப் பண்படுத்தும் மனிதத் தத்துவம்! சீன மக்களது வழி வழி பரம்பரையினர் கடைப்பிடித்து வந்த ஒரு வாழ்வியல் நடத்தை இயல்!
இரண்டாவது, லே ஓ-ட்சே என்பவர் தொகுத்த டா-ஓஸம்! இது ஒரு ஞான மார்க்க வழிபாடு; இயற்கையின் சக்தி வழியே மனதைப் பக்குவப்படுத்தும் ஓர் உள்ளொளி எனும் ஆன்மீகத் தத்துவ நூல்! அதாவது 'ஆக இயல்'!
மூன்றாவதாக, மோட்-ஸே என்பவர் உருவாக்கிய 'மோசிஸம்' என்ற நூல்! இது அருள்வழியே சமதர்ம நெறியில் புது உலகம் அமைக்கும் முற்போக்குத் தத்துவங்களைக் கொண்டது. இதற்கு 'ஆக்கு இயல்' என்று பெயர்.
நான்காவதாக, 'லீ-ஸிஸம்’ என்ற நூல். இதன் ஆசிரியர் ஹான் பெயிட்ஸே என்பவர்! இது ஒரு சட்ட நூல். சமுதாய ஒழுங்கை, அமைதியை நிலைநாட்டப் பயன்படும் அதிகாரத் தத்தவம், இதனை ஆட்சி இயல் என்றும் கூறுவர் சைனாவில் இப்போதுள்ள கம்யூனிசவாதிகள் அந்த சட்ட இயலைப் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நான்கு நூல்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை என்றாலும், இந்நூல்களின் கருப்பொருளும் அவற்றின் வளர்ச்சிகளும்தான் சீனதத்துவ வரலாற்றின் இன்றைய பண்பும்-பயனுமாகக் காணப்படுகின்றது.
கன்பூசியனிசம் என்றால் என்ன?
கன்பூசியனிசம் என்ற இலட்சியக்கொள்கையை உருவாக்கியவர் ஞானி கன்பூசியஸ் ஆவார்; கன்பூசியனிசம் என்பது மனித தத்துவத்தை மூலாதாரமாகக் கொண்ட ஒருவித பொது ஒழுக்க சமுதாயப் பண்பாடாகும்.
தனிமனித பண்பில் மேன்மையான ஓர் உயர்வை உருவாக்குவது; பொது மனிதனாக சமுதயத்தில் நல்லுறவுடன் நடப்பது; இந்த இரண்டையும் அன்பு வழியே கடைப்பிடிப்பது; அறநெறிகள் வழியாக இந்த இரண்டையும் வளர்ப்பது; ஒரு தேசிய பண்பாட்டை உருவாக்குவது; அந்தப் பண்பாடு மூலமாக உலகம் முழுவதற்குமாக ஒரு பொது ஒழுக்கத்தைப் பேணிக் காப்பது;
தனிமனிதனுக்குரிய நல்வாழ்க்கையும், அதற்கான சமுதாய அமைதியை உலகமெங்கும் வளர்த்து வளமாக்குவது; இந்த இலட்சியத்திற்காகவே மனிதனின் அறிவு, அறவுணர்ச்சி, கல்வி வளர்ச்சி கலைப்பயிற்சி, பண்டைய கால பழக்கவழக்க ஆசாரங்கள், நல்ல அரசு, வானகசக்தி, இயற்கை கூறுபாடுகள் எல்லாம் பயன்பட்டாக வேண்டும், இதுதான் 'கன்பூசியனிசம்' என்ற சித்தாந்தத்தின் கருப் பொருள்களாகும்,
இந்த சித்தாந்தம் நடக்கக் கூடியதுதானா? என்று சில ஆச்சர்யப்படலாம்! நமது நாட்டு சங்ககாலக் கவிஞரான கணியன் பூங்குன்றனார் என்பவர், எல்லா நாடுகளும் தமது நாடுகள், எல்லா மக்களும் தமது உறவினர்கள் என்ற தத்துவ அடிப்படையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்று கவிதை எழுதவில்லையா!
பூங்குன்றனார் கவிதையின் உட்பொருள் என்ன? உலகம் ஒன்றே-மக்கள் அனைவரும் உறவினரே, சகோதரர்களே என்ற ஒரே உலகம், ஒரே சமுதாயம், ஒரே ஆட்சி என்ற பொருள்தானே? இது நடக்குமா? நடக்காதா? என்றா அவர் சிந்தித்தார்? இவரும் கன்பூசியசுக்கு முன்பே இக்கருத்தைப் பாடியவர் தானே!
இந்தக் கருத்தை, நமது இந்திய முன்னாள் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையார், தனது சோவியத் ருஷ்யா சுற்றுப் பயணத்தின் போது-மாஸ்கோ விழா ஒன்றிலே எடுத்துக்காட்டி பெருமைபட்டு இந்திய பண்பியலுக்கு ஆதரவு காட்டவில்லையா?
எனவே, கணியன் பூங்குன்றனார் தத்துவத்தைத் தான், இரண்டாயிரத்து நூறு ஆண்டுகட்கு முன்பிருந்த கன்பூசியஸ் என்ற ஞானியும் சிந்தித்தார்; அதைக் 'கன்பூசியனிசம்' என்று இன்று நாம் அழைக்கின்றோம் அவ்வளவுதான்.
ஞானி கன்பூசியசின் இந்தத் திட்டம், கனவோ கற்பனையோ என்று எண்ணக்கூடாது. இது ஓர் உலகப் பொதுத்திட்டம் மக்களின் சிந்தனையும் செயல்பாடுகளும் சரியான ஒத்துழைப்புக்களும் இருந்தால் இந்த உலகில்-இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரக்கூடிய ஒன்று தான் வரவேண்டும் என்றுதான் கணியன் பூங்குன்றனாரும், கன்பூசியசும் ஆசைப்பட்டார்கள். இந்த ஆசையை உலக மக்களின் கைகளிலே அவர்கள் ஒப்படைத்தார்கள். வெற்றியும் தோல்வியும் உலகம் கையில்தானே!
இந்த உலகப் பொதுத் திட்டம், மனிதர்களை ஓர் அமைப்பின் கீழ் அடிமைப் படுத்திடும் திட்டம் அல்ல! மனிதர்கள் தாங்களாகவே விரும்பி உருவாக்கும் திட்டமாகும். இதற்கு அடிப்படை ஒரு பொது அறநெறி; மனிதனின் செயல்! அந்த அறநெறிகளோடு மனித முயற்சிகளும் நடந்தால் உலகம் ஒரே சமுதாயமாக, மனித சமுதாயமாக மாறும் என்பது திண்ணம்!
பொதுநல ராஜ்ஜியம் தோன்றக் காரணம் என்ன!
கன்பூசியஸ் பிறந்தபோது, சீன நாட்டின் மத்திய ஆட்சி பலங்குன்றி சிதைந்துக் கிடந்தது! அப்போதிருந்த அரசுகள், நிலவுடைமைச் சீமான்கள், குறுநிலத் தலைவர்கள் அவர்களது விருப்பம்போல சர்வாதிகாரிகளானார்கள். தான்தோன்றித் தர்பார் நடத்தினார்கள்.
இவர்களது ஏகபோக அதிகாரப் போக்கால், உழவர் பெருமக்கள் பெருத்த வேதனைகளை அனுபவித்தார்கள். அரசு மதமாகவும், அரசவை தெய்வீகசபையாகவும், அரசர்கள் தேவதூதர்களாகவும் நடந்து கொண்டதால், பலாத்காரங்களின் மூலமாக மக்களிடமிருந்து எல்லா வரிகளும் வசூலிக்கப்பட்டன! எனவே எல்லா சிற்றரசுகளின் அன்றாடச் செயல்களும் மதச் சடங்குகள் போலவே நடந்து வந்தன!
இதன் காரணமாக குருமார்கள் ஆதிக்கம் வலுத்தது. அரசுக்கும் மக்களுக்கும் இடையே ஒவ்வொரு ஆச்சார அர்த்தத்தை விளக்கி வியாக்கியானம் கூறும் இந்த குருமார்கள்-சமுதாயத்தில் தனியொரு சாதியாகப் பிரிந்து, வாழ்ந்து உயர்ந்து நின்றார்கள்.
இதனால், கோஷ்டிச் சண்டைகள் பெருகின; ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்தன; விதண்டா விவாதங்கள், போட்டிப் பொறாமைச் சச்சரவுகள் சிற்றரசர்களுக்குள்ளேயே போர் நிலைகள், அதனால் மக்கள் இடையே உள்நாட்டுக் குழப்பங்கள் உருவாகி மலிந்தன.
கன்பூசியஸ் வாழ்ந்தபோது, மத்திய ஆட்சி பலவீனமாகியதால், சட்ட அமைப்பு, சமுதாய அமைப்பு, பொருளாதாரச் சீர்குலைவு, அறநெறி அழிவுகள் எல்லாம் உடைத்து சின்னாபின்னப்பட்டு, பொது மக்களது வாழ்க்கை நிலைக்கு உத்தரவாதமற்று, சீன நாட்டு மக்கள் அல்லோலகல்லோலமாக உருக்குலைந்து ஒழுங்குமுறையற்று வாழ்வதைக் கன்பூசியஸ் நேரிடையாகவே பார்த்தார்!
அரசன் அரசனாக நடக்காவிட்டாலோ, அமைச்சர் அமைச்சராக இயங்கா விட்டாலோ உலகில் குழப்பம்தான் உருவாகும் என்பதை அப்போதுதான் கன்பூசியஸ் உணர்ந்தார்.
அதனால், ஒருங்கற்றுக்கிடக்கும் உலகை சீர்திருந்திட மனித சமுதாயத்தின் கடமைகளைப் பற்றி மக்களிடையே பேசினார். அதற்கான அறநெறிகளை உருவாக்கினார்.
மனித உறவுகள் இடையே உள்ள பொறுப்புகள், அரசுக்கும்-மக்களுக்கும் உள்ள உறவுத் தொடர்புகள்; அதற்கான முறைகள்; ஒரு தனிக் குடும்பத்தின் உறுப்பினரிடையே உள்ள-உணர்வு, உறவு முறைகள், எல்லாவற்றையும் தாண்டி அவர், நோய் கண்டவனுக்குக் கொடுக்கும் மருத்துகளைப் போல இந்த சீர்திருத்தங்களை வழங்கினார்!
கன்பூசியசின் இலட்சியத்தின்படி, வானகம், அரசாங்கம், பொதுஜனம் இவை மிக உயர்ந்த முப்பெரும் சக்திகள் என்பதை உணர்த்தினார். மனித வாழ்க்கைக்குரிய கட்டுப்பாடுகளையும், சட்டங்களையும் வானகம் உண்டாக்குகிறது. அந்தச் சட்டங்களை அரசு அமுலுக்குக் கொண்டு வருகிறது. ஆணும் அதிகாரிகளும், மக்களும் அந்தச் சட்டங்களுக்கு ஏற்றவாறே வாழ்கிறார்கள்.
இவை மதத்தால் உருவான ரகசியமல்ல; இயற்கையின் உருவெளித் தோற்றத்திலும், மனித சமுதாய வடிவிலும் அவை தானாகவே உருவாயின. அதற்கான அறிவு, தலைமுறை தலைமுறையாக உலகில் வழங்கப்பட்டு வந்துள்ளது. அதனால், இந்தக் கொள்கையை நிலை நிறுத்தும்போது, வானகத்துச் சட்டங்களுக்கும்-பூலோகத்து மனிதனுக்கும் இடையே மதகுருக்கள் என்ற பெயரில் தனியொரு சாதிப் பிரிவுத் தேவையில்லை. அரசாங்கமும், மக்களும் தங்களுக்கென தனி மதச் சட்டங்களை உருவாக்கிக்கொள்ள முடியாது என்று கன்பூசியஸ் மக்களுக்கும் பகிரங்கமாக எடுத்துரைத்தார்.
மக்கள் நலன், வாழ்க்கை வளம், இந்த இரண்டின் அடிப்படை நோக்கில்தான் ஓர் ஆரசு அமைக்கப்படல்வேண்டும். இதற்கு திறமை மிகுந்தவர்கள் அரசில் இடம் பெறவேண்டும். அந்தத் திறமை, பிறப்பு, செல்வம், உயர்சாதி, ஆகியவற்றால் உருவாவதில்லை. மனப்பண்பு, அறிவு இவை போதும் அந்த திறமை உருவாக என்கிறார் கன்பூசியஸ்.
இந்த சீன நாட்டுச் சீர்குலைவைக் கண்டதால் தான், கன்பூசியசுக்கு பொதுநல ராஜ்ஜியம் என்ற ஒன்று உருவாக வேண்டும் என்று சிந்தித்தார் இந்த பொதுநல அரசாங்கம் பற்றி அவர் என்ன கூறுகிறார் என்று கேட்போமா?
'தாவோ' என்றால்-'அறவழி' என்று பொருள். இத்த அறநெறியைப் பயன்படுத்தும்போது, பொதுஜன, பொதுநல உணர்ச்சி-உலகம் எங்கும் பரவி இருந்தது. திறமை, பண்பு, விசுவாசம் உள்ளவர்கள்தான். இந்தப் பொறுப்பான பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சகோதரத்துவப் பாசமும் அதில் பண்படுத்தப்பட்டது.
மனிதர்கள் தங்கள் சொந்தப் பெற்றோர்களை மட்டும் நேசிக்கவில்லை; சொந்தக் குழந்தைகளை மட்டும் பிள்ளைகளாக நடத்தவில்லை; வயதான முதியோர்கள் எல்லாம் அவர்கள் சாகும்வரை கவனமாகவே பாதுகாக்கப் பட்டார்கள்.
உடல்சக்தி உள்ளவர்களுக்கு பணி, சிறுவர்கள் படிக்கக் கல்வி வசதி, உணவு ஏற்பாடு, விதவைகள், அனாதைகள், பிச்சைக்காரர்கள், பிள்ளை இல்லாத பெற்றோர்கள், நோயாளிகள், உழைக்க முடியாமல் உடல் நலிந்தவரிகள் போன்றவர்களுக்கு எல்லாம் அவரவர் தேவைகளை அதில் நிறைவு செய்யப்பட்டிருந்தன.
ஆண்களுக்கு உரிய தொழில்களும், பெண்களுக்குக் குடும்பப் பணிகளும் இருந்தன. சாமான்கள் வீணாகக் கிடப்பதை அவர்கள் வெறுப்பார்கள்; ஆனால், சொந்த உபயோகத்திற்காக அவற்றைப் பதுக்கி வைக்கமாட்டார் கள். தங்களது சக்திகளை முழுமையாகப் பயன்படுத்தப் படுத்தப்படுவதை அவர்கள் விரும்புவார்கள்.
ஒருவரை ஒருவர் கெடுக்கும் சூழ்ச்சித் திட்டங்கள் அடக்கி வைக்கப்பட்டு அவை வளரவிடாமல் தடுக்கப்பட்டன. திருடர்கள், கொள்ளைக்காரர்கள், துரோகிகள் போன்றோர் தலைகாட்ட முடியாது. அதனால் எந்தவிதத் தீமையும் பயமும் ஏற்படாது. ஒவ்வொரு வீட்டின் தெரு வாயில் கதவும் எப்போதுத் திறந்தபடியே கிடந்தது. இதுதான் எல்லோரும் போற்றும் மகத்தான் 'பொது நல யுகம்' என்றார்.
தத்துவஞானி பிளாட்டோ உருவாக்கியக் குடியரசை நடத்திக் காட்டிட மாவீரன் அலெக்சான்டர் பயன்பட்டதைப்போல, கன்பூசியசும் தனது இலட்சிய பொது நலராஜ்ஜியத்தை உருவாக்கிக் காட்டிட ஏதாவது ஓர் அரசன் கிடைக்கமாட்டானா என்று ஆசைப்பட்டார்.
'ஓர் அரசாங்கத்தை எப்படி நடத்துவது என்ற அறிவு ஒருவனுக்கு வானகத்தால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த அறிவைத் தங்களது மன்னன் முன்பு வைப்பது அவர்களின் கடமை என்று கன்பூசியஸ் கூறினார்.
இந்த ஆசையால் அவர் எந்த அரசன் தன்னை ஒரு ஞான குருவாக ஏற்பான் என்று, அப்போதிருந்த ஒவ்வொரு சீன அரசுகளையும் நாடினார் அங்கங்கே அரசியல் சூதுக்களும், சூழ்ச்சிகளும், போட்டிப் பொறாமைகளும், சுயநலங்களும், சுகபோகங்களும், பிறரை நம்பாமை எண்ணங்களும் அவருக்கு எதிராகக் கிளம்பின. அதனால் அவர் வகித்த பொறுப்புக்கள், சில பதவிகள் அனைத்தையும் விட்டுவிட்டு ஊர் ஊராக ஓடினார்-நாடோடியைப் போல.
ஓடி ஓடி அலுத்துப்போன கன்பூசியஸ், இந்த உலகத்தை தம்மால் திருத்த முடியாது’ என்ற விரக்தியால், மீண்டும் மாணவர்கள் மத்தியிலே ஞான குருவாகப் போதனையைச் செய்யத் துவங்கி விட்டார். இவ்வளவு மனவிரக்திக்குப் பிறகும் கூட, அவர் அரசியல் துறையைப் பற்றி என்ன கூறுகிறார் தெரியுமா!
ஒரு நல்ல ஆட்சிக்கு முக்கியமானவை மூன்று; ஏராளமான உணவு, போதுமான படைபலம்; பொதுமக்களின் ஒட்டுமொத்தமான நம்பிக்கை, இவற்றில் மக்களது நம்பிக்கைதான் உயிர்நாடி. அது இல்லாவிட்டால் அரசே நடவாது; இராது என்கிறார்.
ஒரு நாட்டை ஆள்பவன் பொருளாதாரப் பற்றாக் குறையைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இருக்கும் அரசு வருவாய் பணம்; சரியாகப் பங்கிட்டு வழங்கப்பட்டிருக்கிறதா என்பதைத் தான் பார்ப்பான்! வறுமையை அவன் பொருட்படுத்த மாட்டான். அதன் நிலையற்றத் தன்மையைத்தான் பொருட்படுத்துவான்! சரியான பங்கீடு இருந்தால் வறுமை வராது; ஒற்றுமை உணர்விருந்தால் மக்களிடமிருந்தும் பற்றாக் குறைபற்றி புகார் வராது. உள்ளத் திருப்தி இருந்தால் புரட்சியே தோன்றாது என்று குறிப்பிடுகிறார்.
ஆட்சி செய்வோர் மக்களது நம்பிக்கையை இழந்து விடுவார்களானால்; அந்த ஆட்சியை மக்களே அகற்றி விரட்டிவிடுவார்கள்.
வானகத்து விதி முறைகளுக்கு ஏற்றவாறு மக்களின் பொது நலத்தை வளர்ப்பதுதான் ராஜ்ஜியத்தின் ஒரே நோக்கம். ராஜ்யம் என்பது, மக்களின் விவகாரமே தவிர, ஆள்வோர்களது பிரச்சினைகள் அல்ல!
எண்ணற்றத் தனித்தனியான குடும்பங்களுக்கு தலைபோல் விளங்குவதே ராச்சியம் என்பது, அந்தக் குடுமபத்தலைவர்கள் சமுதாய உரிமைகளின் பிரதிநிதிகளாகவே அரசாங்கத்தின் முன்பு தோன்றுவார்கள் என்றார்.
கன்பூசியஸ், அரசர்களையும், சிற்றரசர்களையும் ஆதரிப்பதால், அவரை முடியாட்சியின் முதுகெலும்பு என்று தவறுதலாகச் சிலர் எண்ணுகிறார்கள். அதுவன்று அவரது சிந்தனையின் முடிவு. அவர் அரசர்களின் ஆட்சிக்கு, ஆளும் சக்திக்கு மதிப்பளிக்கிறாரே தவிர, அரசர்களை அவர் மதிப்பது இல்லை! மதித்திருந்தால் அவர் ஊர் ஊராக அலையும் நாடோடி வாழ்க்கை வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
அது போலவே வேறு சிலர் கன்பூசியசை பழமைவாதிகள் என்றும் கூறுகிறார்கள். அதுவும் உண்மையும் அன்று! மக்களின் முன்னேற்றம். நாகரீகத்தின் சரியான வழியில செல்வதையே அவர் விரும்புகிறார்!
அந்த நாட்டு மக்களை வழிநடத்திச் செல்லவும், அதற்கோர் எடுத்துக்காட்டாக செயலாற்றிக் காட்டவும், நல்லதொரு ஆட்சியாளனும், அந்நாட்டுச் சட்டங்களை நிலை நிறுத்திட அதிகாரிகளும் தேவை என்கிறாரே தவிர முடியாட்சியை ஆதரிப்பது அல்ல அவரது நோக்கம்.
ஆட்சி புரிவோர் கேடர்களாக இருந்தால், பொது மக்களை வீணான தொல்லைகட்குள் ஆழ்த்திவிடுவார்கள் அதனால், ஆட்சியாளர்களைப் பயிற்றுவிக்கவும், ஆலோசனை கூறவும் பெருங்கவனம் செலுத்த வேண்டும். அதற்காக, அரசாங்கத்தையே ஒரு கல்விக் கோட்டமாக மாற்றி அமைக்கவும் கன்பூசியஸ் தயாரானார்.
அதனால் கன்பூசியஸ் மாபெரும் லட்சிய சோதனை செய்ய ஆரம்பித்தார். சமுதாய முன்னேற்றம் பெற அரசியல் துறையையே அவர் முக்கியமாகவும், முதல் படியாகவும் சிந்தித்துச் செயல்பட்டார். என்றாலும், கல்வித்துறையை ஒரு இருக்கோயிலாக எண்ணிய அவர், அதன் வாயிலாக ஒரு மாபெரும் சாதனையை உருவாக்கினார்! என்ன அந்த சாதனை?