கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/காற்றும் புல்லும்!

விக்கிமூலம் இலிருந்து
கன்பூசியஸின்
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

1. காற்றும் புல்லும்!

அய்யன் திருவள்ளுவர் பெருமானுக்குப் பிறகு, சீன நாட்டில் அவரது அறநெறி வழிகள் சார்பாக, உலக சமுதாயத்தில் தனி மனிதனாகவும், பொது மனிதனாகவும், தோன்றிய துறைகளிலே எல்லாம் புகழொடு தோன்றி, மனிதகுலம் வாழ்வது எப்படி என்று சிந்தித்து வழிகாட்டி மறைந்த ஒரு மாபெரும் ஞானி கன்பூசியஸ் என்ற ஞானியர் திலகம்!

திருவள்ளுவர் பெருமானுக்குப் பிறகு அந்த ஞானப் பெருமகன் பிறந்தார் என்று நாம் எழுதுகின்ற போது, இதன் ஆராய்ச்சியைக் கூறுவதானால், நூல் பெருகும் திறனாய்வாகத் திகழும் என்பதால், நாம் ஆய்வு உலகத்துக்குள் புக விரும்பவில்லை. அதற்கு ஒரு தனி நூலே எழுத வேண்டிய நிலை தோன்றும்.

ஆனாலும், கன்பூசியஸ் என்ற சீன நாட்டு ஞானி, திருவள்ளுவர் பெருமானைப் போலவே ஓர் அறநெறியாளராக வாழ்ந்தார்.

அவர் அறநெறி ஆசானாக மட்டுமே வாழ்ந்து காட்டியவர் அல்லர்; சிறப்பான ஓர் அரசை அமைத்து காட்டுவதற்குரிய ராஜ தந்திரியாகவும் நடமாடினார். அதற்கான அனுபவமும் உள்ளவராகப் பணியாற்றிக் காட்டிய முன் னோடியாகவும் திகழ்ந்தார் பேரறிஞர் பிளேட்டோ என்ற அரசியல் மகானைப் போல!

கன்பூசியஸ் எங்கு போனாலும், எங்கு வாழ்ந்தாலும், எப்போதும் தன்னுடனே ஒரு மாணவர் குழுவை உடன் வைத்துக் கொண்டிருந்த ஒரு குருகுல ஆசானாவார்! போதிமாதவன் புத்தர் பெருமானைப் போல!

சீன ஞானப் பெருமகன் கன்பூசியஸ், கிறிஸ்து பெரு மகனான இயேசு பெருமான் பிறப்பதற்கு 550 ஆண்டுகளுக்கு முன்னரே, சீன நாட்டில் பாராமுகமாகப் பராமரிக்கப்பட்டு வந்த பெரு நூல்களைத் தொகுத்து நூற்களாக வெளியிட்ட ஒரு பதிப்பாசிரியராகவும் விளங்கினார்.

கன்பூசியசைப் போல தனது நாட்டுச் சான்றோர்களின் இலக்கிய, வரலாற்று, கவிதை நூற்களை எல்லாம் தனது தாய்நாட்டு எதிர்காலத்திற்கான நூற் புதையலைச் சேமித்து, நூற்களாக வெளியிட்ட சிந்தனையாளர்கள், பதிப்பாளர்கள் வேறு எந்த நாட்டிலும் தோன்றியதாக, தமக்குத் தெரிந்தவரை வேறு எவரும் இல்லை என்று மலை மேல் நின்று குரல் ஒலிக்கலாம்; அத்தகைய ஓர் அறிவுச் சேவையை ஏற்று அரும்பாடுபட்ட ஞானமேதை அவர்!

கன்பூசியஸ், தனது வாழ்நாள் வரையிலும், தன்னுடன் இருந்த மாணவமணிகளுக்கு அவ்வப்போது சந்தேகம் ஏற்படும் போதெல்லாம், அவர்கள் தொடுத்த கேள்விகளுக்கு தக்க விடைகளை விளக்கி அவர்களின் அறியாமைகளை அகற்றிவந்த ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாக வாழ்ந்துவந்த கல்வி போதகராக இருந்தவராவர்.

கன்பூசியஸ் என்ற மாமேதை தமது நாட்டுக் கம்பர் பெருமானைப் போல கவியுலகச் சக்கரவர்த்தியாக நடமாடிய மாபெரும் கல்விமகான் கவிதைகளைப் பாடியது மட்டுமல்ல அவர் தொழில்; இயற்றிய பாடல்களை உளம் உருகப் பாடிக்காட்டி மக்களை, மாணவர்களைப் பரவசப்படுத்தி மகிழ்வூட்டிய ஓர் இசைப்பாடகர்; ஒரு சங்கீத விற்பன்னர். நமது நாட்டுச் சங்க காலப் பாணர்களைப் போல!

கன்பூசியஸ் என்ற பேரறிவாளன் ஓர் அரசியல் வாதி! அமைச்சராக அரும்பணி ஆற்றியவர்-சேக்கிழார் பெருமானைப் போல நாட்டின் காவலராக வாழ்ந்தவர்! அவருடைய அரிய ஆட்சிப்புலமையை ஏற்றுக் கொள்ளும் அரசியல் அறிஞர்கள் அப்போது இல்லாததால், சீன ஆட்சிகள் ஒரே குழப்பக் குட்டைகளாகக் காட்சித்தந்தன!

கன்பூசியஸ் அந்தந்த நேரத்தில் எந்த காரியத்தையும் அலட்சியம் செய்யாமல்; "செய்யும் தொழிலே தெய்வம்" என்பதாக மதித்துப் பணியாற்றிய ஒரு காரியவாதி! ஒரு சமயம் ஆடுமாடுகளைக் கூட மேய்த்துக் கூலி பெற்றார்! மறுமுறையோர் நேரத்தில் கால்நடைக் கண்காணிப்புக் கணக்கராகவும் காரியமாற்றினார்! அதே மனிதரிதான், அமைச்சனாகவும், ஞானாசிரியனாகவும், மாணவப் போதகராகவும் அலுவலாற்றினார். எதைச் செய்யத் துணிந்தாலும் காரியவாதியாகவே செயல் புரித்தார்!

தத்துவ ஞானம் கற்றுத் தரித்திரராக ஊர் சுற்றிச் சுற்றி வறுமையோடும் போராடிடும் நாடோடியாகவும் திரிந்தவர் கன்பூசியஸ்!

மேற்கண்ட அத்தனைச் சிறப்புகளும், மேன்மைகளும் ஒன்றாக இணைந்த ஒரு மனித உருவமாக, ஞான ஆத்மாவாக, புதிய எண்ணங்கள் என்ற பூக்கள் மலரும் செடி கொடிகளாக, புதிய லட்சியக் கனிகள் பழுக்கும் முக்கனி மரங்களாக மக்கள் இடையே நடமாடிய ஒர் அற்புத ஞானாவதாரமாக, வானகம் தந்த இயற்கைக் கொடையாக நடமாடியவர் கன்பூசியஸ் என்றால் மிகையாகா!

இவ்வளவு அரிய திறன்களை எல்லாம் தனது அறிவு எனும் தோளிலே சுமந்த கன்பூசியசின் லட்சியம் தான் என்ன? என்று கேட்கிறீர்களா?

வேறோன்றும் இல்லை. நமது சங்ககாலக் கவிஞனான பூங்குன்றனார் கண்ட கனவான, "யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற தத்துவத்தை நனவாக்கிட, "ஒரே உலகம், ஒரே மனித சமுதாயம்"; ஒரே பொது ஒழுக்கம் என்ற பெயர் சூட்டி அதற்காக அயராமல் உழைத்தவர்தான் கன்பூசியஸ்!

உலகம் முழுவதற்கும் ஒரே ஒழுங்கு ஒரே பொது நெறி; என்ற உலகப் பொதுநல சமுதாயம் அமைக்கவும், அந்த சமுதாயத்தில் தன்னலமற்ற தனி மனிதன் பொது மகனாக வாழவும், அன்புவழியில் அனைவரிடமும் சமத்துவ சகோதரத்துவப் பாசத்தோடு, அற நெறிகளைப் பின்பற்றிப் பழகவும், மனிதத்தன்மையைப் பன்படுத்தி வளர்ந்து இயற்கையோடு இணைந்து, முழு மனிதனாக வாழ்வதும் தான் அந்த உலக சமுதாயத்தின் இலட்சியம் என்பதைச் சீன மக்களுக்கு எடுத்துக்காட்டியவர் கன்பூசியஸ்.

★ அன்பு வழிதான் எனது மதம்!
★ அதன் அறநெறிகள்தான் எனது வேதம்!
★ மனித தத்துவம்தான் அதன் ஆத்துமம்!
★ அதற்குரிய சமுதாயப் பண்பாடுதான் அதன் திருக்கோயில்!
★ அந்தப் பண்பாடுகளுக்குரிய வழிபாடுதான் பூசை விதி!
★ அப்பூசைக்குரிய பக்தியுள்ளம்தான் பிரார்த்தனை!
★ இவற்றால் பேறுகின்ற பேரின்பம் தான் முக்தி நிலை.

இந்த தத்துவ நெறிகளைச் சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்பாக, கன்பூசியஸ் என்ற ஞானி பழமைப் பண்புகளுக்குப் புதுமை நெறிகளை வகுத்து ஒரு கொள்கையை உருவாக்கி அமைத்துக் காட்டிய ஒரே சமுதாயம் ஒரே உலகம், ஒரே பொது நெறி ஒழுக்கம் தான் இன்றும் மக்கள் கூறிக் கொண்டிருக்கும் கன்பூசியனிசம் என்ற ஒரு தத்துவமாகும்.

இந்த இலட்சியத்தை விளக்கிக் கன்பூசியஸ் மக்களிடையே பேசும்போது, அதற்குரிய உருவ நெறிகளையும் சுட்டிக் காட்டினார். அவற்றுள் சில:

"நீங்கள் எதை விரும்ப மறுக்கிறீர்களோ, அதைப் பிறருக்குச் செய்ய நினைக்காதீர்கள்! என்றார்!.

அறிவை நான்கு வகைகளாகப் பகுத்தார்! இயற்கையிலேயே நல்லறிவு உள்ளவர்கள் மக்களில் முதல் வகை; கற்றக் கல்வியின் மூலம் அறிவு பெற்றவர்கள் இரண்டாம் வகை; உழைப்பினால் கல்வியைச் சேகரித்துக் கொண்டவர் மூன்றாம் தரத்தினர்; கல்வியில் மந்தமாக இருந்து கற்க முடியாதவர்கள் நான்காம் பிரிவினர் என்றார்.

நியாயத் தீர்ப்பு பெறும் சம்பவங்களில் நான் பிறரைப் போலவே இருக்கிறேன். ஆனால், நியாயத் தீர்ப்பு அளிக்காமல் இருக்கும் சம்பவங்களையே நான் பெரிதும் விரும்புகிறேன். ஏன் தெரியுமா?

தவறு செய்தவர்கள் தங்கள் தவறை மறக்க உதவும் வழிகளை மேற்கொள்ளவே மாட்டார்கள். இவர்கள் நீதிக்குரிய மரியாதையை வழங்கவும் முற்படுவார்கள்; இது தான் நாம் அறிவு வெறும் முயற்சி என்றார்!

அவ்வாறானால், அறிவாளர்கள் என்பவர்கள் யார் என்பதை அவர் அடையாளம் காட்டும்போது, அறிவாளிகள் தனக்கு வருகின்ற இடையூறுகளைப் புறம் காண்பதி லேயேதான் கவனமாக நிற்பான்; வெற்றி பெறுவது என்பது அவர்களுக்கு இரண்டாவது யோசனையே.

தெரிந்தது இது என்பதை அறிவதும்-தெரியாதது இன்னது என்பதை அறிவதும் தான்; அறிவாளியின் சிறந்த இயல்பாகும் என்று சான்றுரைக்கின்றார்!

"அன்பு என்பது உதவி செய்வதுதான்; அனைவரிடத்தும் எல்லோரும் அன்பு காட்ட வேண்டும். இதனால் நல்லவர்களின் நட்பை நாடுங்கள்.

அழகு எனும் பொருளின் திட்டங்களுக்கு அடங்காதனவற்றை அறவே கவனிக்காதீர்கள். அழகிற்கு அப்பாற்பட்ட செயல்கள் எதையும் செய்யாதீர்கள்.

அமைதி என்றால் என்ன என்பது பற்றி அவர் அறிவிக்கும் போது; "தன் வீட்டில் உள்ள குடும்பத்தினர்களுடன் அன்புடன் வாழ்பவன்தான் அமைதியைப் பற்றிப் பேசிட அருகதை உடையவனாவான். பல விஷயங்களைப் பற்றி, நன்றாக ஆராயும் போதுதான் அறிவு பிறக்கிறது. அந்த அறிவும் அதனால் முழுமை அடைகிறது. அந்த அறிவு நிறைவு பெறுவதால் சிந்தனையும், என்ணங்களும் தூய்மை பெறுகின்றன. எண்ணங்களும், சிந்தனைகளும் பரிசுத்தம் பெறுவதால் இதயம் தூய்மை அடைகின்றது. அந்த இதயத் தூய்மை, மனிதனின் மனதைப் பன்படுத்துகிறது. பக்குவம் அடைகிறது. இதுபோன்ற மனப்பக்குவம் பெற்றவர்கள் வாழும் குடும்பங்களில் மகிழ்ச்சி நிறைந்திருக்கின்றது. இத்தகைய குடும்பங்கள் உள்ள நாடு அமைதியில் நிலைபெற்று விடும். இது போன்ற நாட்டில் உள்ள மக்களனைவரும் தங்களது உற்றார், உறவினர், நண்பர்களிடத்தில் அன்பு செலுத்தும்போது, அவர்கள் தங்களை விட மேல் நிலையில் வாழ்பவர்களை மதித்துவந்தால் வானகத்தான் குடைகீழ் எங்கும் அமைதி நிலவும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

நாட்டை ஆளும் மன்னன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்றால், 'அவன் தன் நல்ல ஒழுக்கத்தால் ஆட்சி செலுத்தும்போது துருவ நட்சத்திரம் போல் விளங்குகிறான். அந்த விண்மீன் சலனமற்று, நடுநிலையிலிருக்க, மற்ற நட்சத்திரங்கள் எல்லாம் அதனைச் சுற்றிச் சுற்றி வருகின்றன.

மன்னனாக இருப்பது கஷ்டம்தான்; ஆனால் அமைச்சனாக இருப்பதும் கஷ்டந்தான்! ஏன் இந்தக் கஷ்டம் உருவாகின்றது என்றால், அரசன் தானே, நீதி ஒழுக்கத்தைப் பின்பற்றுபனாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவன் கீழ் வாழும் மக்களும் அவன் ஏவுதல் ஏதும் இல்லாமலேயே அவனுடைய கட்டளைக்கு அடங்கி நடப்பார்கள்!

அந்த அரசன் நீதி ஒழுக்கம் தவறி நடக்கும் போது, அவன் எவ்வளவுதான் மக்களைச் சட்டத்தின் மூலம் வற்புறுத்தினாலும்கூட, அந்தச் சட்டங்கள் அவமானப்படத் தானே செய்யும்? இந்த அரசன் நிலை, இன்றைய மக்களாட்சிக்கும் பொருந்தும் அல்லவா? அதனால்தான் மன்னனாக இருப்பதும் கஷ்டம்; அவனுக்கு அமைச்சனாக இருப்பதும் கஷ்டமாகும்-இல்லையா?

அப்படியானால் அந்த அரசன் நடத்துகின்ற ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்குகின்ற ஞானி கன்பூசியஸ், கீழ்கண்ட விளக்கத்தைக் கூறுகிறார், அதாவது, 'நேர்மையானவர்களை அரசன் மேனிலைக்குக் கொண்டுவர வேண்டும். மனக்குற்றம் உள்ளவர்களை ஆட்சியை விட்டு அல்லது அவர்களது பதவியை விட்டு அகற்றிவிட வேண்டும். இப்படி ஓர் அரசன் நடவடிக்கை எடுப்பானானால், மக்கள் அந்த ஆட்சிக்கு அன்புடன் பணிந்து நடப்பார்கள். அதே போல அடுத்துள்ளவர்களை மகிழ்விப்பார்கள். தூரத்தில் உள்ளவர்களை ஈர்த்துக் கவர்வதும், வசீகரிப்பதும் நல்ல ஆட்சி நீடிப்பதற்குரிய சிறந்த இலக்கணமாகும்; என்கிறார்.

மக்களின் நேர்மையான ஒழுக்க வளர்ச்சிகளுக்கு அரசு எந்தக் காலத்திலும் அலட்சியமாக, அக்கரையற்ற விதமாக இருக்கக் கூடாது.

ஒருவேளை அந்த மன்னன் அலட்சியமாகவும், அக்கரையற்றும் இருந்துவிட்டு, சட்டங்கள் மூலமாகவும்; தண்டனைகளைத் தருவதன் வாயிலாகவும், மக்களை அடக்க முயன்றால்; அவர்கள் அவற்றை மீறுவதில்தான் அதிக அக்கரை காட்டுவார்கள்; தண்டனைகளையும் அலட்சியம் செய்வார்கள்!

மக்கள்-மன சாட்சியின் கட்டளைக்குக்கூட கீழ் படிய மாட்டார்கள். இவை எல்லாம் நடக்கக் கூடாது என்று ஓர் ஆட்சி நினைக்குமானால், அரசுப் பொறுப்பிலே உள்ளவர்கள் தங்கள் ஆளுகையின் மூலமாகவும், ஒழுங்கு, ஒழுக்கம் முறைகளின்படியும் மக்களை வரம்புக்குள் கட்டுப்படுத்தி, நீதியின் வழியே நல்வழிப்படுத்தினால் ஓர் ஆட்சிக்குட்பட்ட மக்கள் தங்களது மனச்சாட்சிக்கு அடங்கியும், பயந்தும், மதிப்புடனும், மரியாதையுடனும், வாழ்வார்கள் என்பதுதான் உண்மை.

அதுசரி, ஓர் ஆட்சியை நிர்வகிக்கும் சட்டம், அதிகாரம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் நீதி போதகர் கன்பூசியஸ் விளக்குவதைப் பாருங்கள்.

ஓர் ஆட்சியின் சட்டம், ஆணை, கட்டளை உத்தரவு மக்களுக்கு உகந்தவாறில்லாமல், தவறானதாக அமைந்தால், மகன் தந்தையையும், அமைச்சன் மன்னனையும் எள்ளளவு முனையும் அஞ்சாமல், தயங்காமல் எதிர்த்துப் போராடலாம் என்று அவரே கூறுகிறார்!

"கல்விக் கோட்டங்களிலே மக்களுக்குக் கல்வியைப் போதிக்கும் ஓர் ஆசான் எவ்வாறு இருக்கவேண்டும் என் பதை அவர் பேசும் போது, 'ஆசிரியன் ஒருவன் தான் படித்ததை மறவாமல் இருக்க வேண்டும். அது மட்டுமல்ல; தனது அறிவை மென்மேலும் வளர்த்துக் கொள்ள மேலும் சகல விஷயங்களையும் கல்வி மூலமாகவும், அனுபவம் சார்பாகவும் கற்றுக் கொண்டே வரவேண்டும். இதுதான் ஓர் ஆசிரியனுக்குரிய அடிப்படை இலக்கணம். அதை விடுத்து, மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூற மட்டும் தெரிந்து கொண்டிருந்தால் போதாது, பல விஷயங்களையும் கற்றுத் தனது நினைவில் வைத்துக் கொண்டிருப்பவன் ஆசிரியன் என்ற பொருளுக்கே உரியவன் அல்லன் என்கிறார்.

கல்வி என்றால் என்ன? அது எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி அவர் கருத்தறிவித்தபோது: "இலக்கியக் கல்வியில் நான் பிறரைப் போல சிறந்து விளங்குகிறேன். ஆனால், நான் கற்றக் கல்விக்கு ஏற்றவாறு வாழ்ந்து, சான்றோன் ஆவதில் வெற்றி அடைந்திருக்கிறேனா என்பதில் நான் கேள்விக்குறியாகவே இருக்கிறேன்." என்று தன்நிலையைச் சுட்டிக் காட்டியே மற்றவர்களுக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார்!

கல்வி எந்த நாட்டிலும் செய்யுளாகவே துவங்குகின்றது. அதுதக்கநல்லொழுக்கத்தினால் வலுப்பெறுகிறது; வளமாகிறது; அதற்கு நாம் தரும் உரத்தால் ஊட்டமடைகின்றது; வளர்ச்சியடைகின்றது.

எதையும் சிந்திக்காமல் படிக்கும்போது மனதில் குழப்பம் தோன்றுகிறது; அதே நேரத்தில் படிக்காமல் சிந்திப்பது சமநிலையைக் கெடுத்துவிடுகின்றது

கற்ற கல்வியை நினைவாற்றலுடன் போற்ற வேன்டும்; அப்போதுதான் யார் கேட்கும் கேள்விக்கும், உடனுக்குடன் விடைகூறி விளக்க முடியும். ஆனால், அவன் சிறந்த ஓர் ஆசிரியனாக இயங்க முடியாது!

மாணவர்கள் முன்காலத்தில் தனக்காகவே, அறிவை வளர்த்துக் கொள்ள கல்வியைக் கற்றார்கள். ஆனால், இக்காலத்திலுள்ளவர்கள் மற்றவர்களுக்காக தமது கல்வியைக் கற்கிறார்கள்!

கல்வி கற்றவர்கள் பிறர் கருத்துக்களைத் தெரிந்து கொள்வது நல்லது; நாம் நினைத்ததுதான் சரி என்று முடிவெடுத்துக் கொள்ளக் கூடாது; எந்தக் கருத்தை எவர் கூறினாலும், அதை எண்ணிப் பார்த்து எது நல்லது என்பதையே ஏற்றுக் கொள்ளல் நல்ல்து.

"உணவும், உறக்கமும் இல்லாமல் நான், அல்லும் பகலும் கற்க வேண்டியதைக் கற்றேன். ஆனால், நான் காணவேண்டிய, சுற்றுத் தெளிய வேண்டிய முடிவைக் காணமுடியாததால், மீண்டும் அதை எவ்வாறு பெறமுடியும் என்ற முயற்சியிலேயே இரவும் பகலும் ஈடுபட்டு வருகின்றேன்"

அப்படியானால், நான் எனது கடமையிலிருந்து தவறி விட்டேனா என்று கேட்காதீர்கள். கடமை, என்பது மனித இனம் முழுமையும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு நேர்மையான பாதை என்பதை ஒன்றாக உணர்ந்தவனே நான் அப்படி இருக்கும் போது தவறு செய்வேனா?

எங்கே உண்மையைக் காண்கிறோமோ அங்கே அதைப் பாராட்டுவதும் அதை முழுமையாகக் கண்டறிவதையே தொடர்ந்து முயல்வதும், எனக்குத் தெரிந்தவற்றை பிறருக்கு எடுத்து விளக்குவதுமே என்னுடைய கடமையின் இயல்பு என்ற உணர்வுடையவன் நான்.

மக்களின், மாணவர்களின் ஒழுக்கங்களைப் பற்றிக் கவனிப்பது, அரசனுடைய கடமைகளாகும்! அப்படியானால் கடமையாளன் குற்றமே செய்யமாட்டானா? என்ற கேள்வி எழலாம் இல்லையா?

குற்றம் எழலாம்; ஆனால், அந்தக் குற்றத்தைத் திருத்தாமல் இருப்பது, மீண்டும் ஒரு குற்றத்தைச் செய்யவே அவனுக்குத் தைரியத்தைத் தந்துவிடும். அதனால், தனது குற்றங்களையும், குறைபாடுகளையும், தானாகவே உணர வேண்டும். ஆனால், அவ்வாறு தன்னையே வருத்திக் கொள்ளக்கூடிய ஒரு மனிதனை நான் இன்று வரை பார்த்ததே இல்லை.

அதனால்தான் கூறுகிறேன், அவரவர் தங்களிடம் உள்ள குற்றங்களை, குறைபாடுகளைக் களைந்தெறியச் சிறிதும் தயக்கம் காட்டக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

கருணையற்ற அதிகாரமும், பக்தியற்ற ஆசாரமும், துன்ப உணர்வற்ற வருத்தமும் எனக்கு அறவே பிடிக்காத விஷயமாகும். மனிதன் ஒவ்வொருவனும் அவரவர் குற்றங்களை முதலில் திருத்திக் கொள்ள வேண்டும். அதைவிட்டு விட்டு பிறருடைய குற்றங்களைத் திருத்தும் முயற்சியில் ஈடுபடக்கூடாது.

ஒவ்வொருவருக்கும் அவரவர் அடைய வேண்டிய குறிக்கோள்கள் இருக்கும். அதில் மீறுவதும் குறைவதும் தவறு, வெளியுலகின் தீண்டுதலால் சங்கீதம் மனித இதயத்திலே இருந்து உதயமாகிறது.

தீமை செய்பவர்கள் யாராக இருந்தாலும்; அவர்களுக்கு நீதி பதிலாக அமைதல் வேண்டும். அன்பு செலுத்துபவர்களுக்கு அந்த அன்பே பதிலாக அமைதல் வேண்டும்.

தன்னைத்தானே ஒறுத்துக் கொண்டு, பிறர் விவகாரங்களில் தாராளமாக இருப்பவன், பிறருடைய வெறுப்புக்கு ஆளாவது துர்லபம்! பிறர் கூறும் விஷயங்களை முதலில் கூர்ந்து கேளுங்கள்; சந்தேகப்பட வேண்டிய செய்திகளை ஒதுக்கித் தள்ளுங்கள். அதற்கு இடம் கொடுக்காதீர்கள்.

பிறருக்கு நீங்கள் சொல்லும் விஷயங்களை, நிதானமாக கவனித்துக் கூறுவீர்களேயானால், கூடுமானவரை தவறுகள் நேராவண்ணம் நாம் தவிர்த்துக் கொள்ள முடியும்.

அதனால் பிறரிடம் எந்த விஷயத்தையும் கூர்ந்து, அக்கரையோடு கேளுங்கள்! அவற்றில் அபாயம் உள்ள சம்பவங்கள் இருந்தால் வெறுத்து விடுங்கள்; எனவே, எத்த விஷயத்தையும் பொறுமையாக, நிதானமாகச் செய்யுங்கள். பின்னொரு நேரத்தில், ஐயோ இப்படி நடந்து கொண்டோமே என்று உங்களுடைய செயல்கள் பற்றி நீங்களே வருந்திக் கொள்ளும் நிலைகளைத் தோற்றுவித்து விடாதீர்கள்.

ஆட்சியிலே இருப்போரின் சட்டங்கள், மக்களின் வாழ்க்கையை நெறிப்படுத்தும் வகையில் இருக்கவேண்டும். சட்டத்தை மீறினால் தண்டனை உறுதி என்ற அச்சம் மக்கள் உள்ளத்திலே பதியவைக்கும் சட்டங்களை அவர்கள் இயற்ற வேண்டும்.

பிறருடைய தவறுகளையும், குற்றங்கனையும் விவரித்துக் கூறிக்கொண்டே இராதே. அதைவிட உன்னையே நீ எண்ணிப்பார்; உன் குற்றங்களை உற்று நோக்கித் தவிர்த்துவிடு! அதுதான் சிறந்த வழி!

இயற்கையால் உண்டாகும் துன்பத்தைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், உங்களுடைய தவறுகளால் உருவாகும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளவே முடியாது.

அதுபோலவே, இன்பத்தையும், ஓய்வையும் தேடி அலைந்து கொண்டிருக்காதீர்கள்; அப்படி, நீங்கள் ஒரு வேளை அடைந்தால் அவை நிச்சயமாக உங்களது கைப்பிடிக்குள் அகப்படாது. எந்த ஒரு தகாத வழியிலும் செல்வத்தைச் சேர்க்க முயலாதீர்கள். நியாயமற்ற, நேர்மையற்ற வழியில் சேரும் பணமும், புகழும் வானத்தில் ஓடும் மேகங்களைப் போன்றவை என்பதை உணர்ந்து நடப்பது நல்லது!

நேர்மையான, மனசாட்சியான மனிதனைப் பார்க்கும்போது, அவன் ஒழுக்கத்தை நீங்களும் பெறுங்கள்; வாழ முயலுங்கள்; தீயவனை காணும்போது உங்களுடைய தவறுகளை நீங்களும் அகற்றி விடுங்கள்.

எதைச் செய்தாலும் கவனத்தோடு செய்பவர்கள் அவர்களது வாழ்க்கையில் தவறுகள் செய்யவே மாட்டார்கள். ஒரு மனிதன் என்ன தவறு செய்கிறான் என்பதில் இருந்தே இவன் எப்படிப்பட்டவன் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

அதுபோலவே நாம் தவறு செய்துவிட்டோமே என்று அச்சமோ வெட்கமோபடாதீர்கள். இவ்வாறு செய்வீர்களேயானால், நீங்கள் மீண்டும் தவறு செய்வீர்கள்!

உங்களுடைய ஆற்றலால் விளையும் திறமைகளை பிறர் உணரவில்லையே என்று மனவருத்தப் படாதீர்கள். அதே பிறர், உங்களுடைய திறமைகளையும் ஆற்றலையும் உணரும் அளவிற்கு தொடர்ந்து செயலில் நடந்து காட்டுங்கள்!

மற்றவர்களால் வெறுக்கப்படும் மக்களை விரும்புபவன்; மற்றவர்களால் விரும்பப்படுபவர்களை வெறுப்பவன் இருக்கிறானே அவன், மனிதர்களின் இதயங்களைப் புண்படுத்துபவன் ஆவான்; ஆனால் அதே அவன் அனுபவிக்கப் போகும் துன்பத்தை நாம் அளவிட்டுச் சொல்லி முடியாது.

நேர்மையான மனிதன் தான் செய்வதைவிட பல விஷயங்களைப் பற்றி மிதமான அளவில் பேசுபவனே யானால், அவன் இதயம் இருக்கிறதே துன்பம் அது துய்க்கும் நட்பு இதயமாகும்.

நேர்மையானவர்களிடம் வைக்கும் நட்பு. உண்மையானவர்களிடம் கொள்ளும் நட்பு, எதையும் பொறுமையாக, கூர்ந்து நோக்குபவர்களாக உள்ள சுபாவமுடையோர் நட்பு என்றும் நன்மையையே தரும்!

தானென்ற அகந்தையுடன் தான்தோன்றியாகத் திரிபவன் நட்பு, ஆட்சி செய்யும் அதிகாரத் தோரணையர் நட்பு; 'நா' அடக்கம் இல்லாதவரின் நட்பு, இந்த சுபாவமுடையோர் நட்பு என்றும் நாசமே தரும்.

சின்னச்சின்ன நன்மைகளைப் பெறுவதற்காக, முயற்சியில் பெரிய நன்மைகளைப் பெறும் வாய்ப்பை நழுவ விட்டு விடாதே!

முகநகப் பழகாதே! அகநகப் பழகும்போது, அந்த நண்பனை அன்புடன் கண்டிக்கத் தயங்காதே! உனது கண்டிப்புக்கு அவன் இணங்காவிட்டால் அவனை விட்டு அகன்று விடு அதற்காக, நீ பழிபாவங்களுக்கு ஆளாகாதே.

பிறக்கும் போது எல்லாரும் நல்லவர்களே அவர்களுக்கு உலகமே இன்னதென்று தெரியாது. ஆனால், அப்படிப்பட்டவர்கள் நீண்ட நாட்களுக்கு அவ்வாறு இருக்க மாட்டார்கள்! பிறக்கும்போது பிறக்கும் குணம் போகப்போக மாறும்.

இந்த உலகம் மூன்று. விஷயங்களில் நல்லதாகும்; அவை: ஆசாரங்களைப் பற்றிய ஆய்வில், சங்கீத ஆய்வில் பிறரைப் பற்றி நல்லது பேசுவதால் உண்டாகும் மகிழ்ச்சியில்.

நல்ல நட்பால் உண்டாகக் கூடிய மகிழ்ச்சியின் தீமைகள்: இன்பங்களையும் சுகபோகங்களையும் அளவுக்கு மீறி அனுபவிப்பது; சோம்பேறித் தனத்தால் உருவாகும் மகிழ்ச்சி; உணவு வகைகளை சுவையாகச் செய்து அவற்றை இரையாக மதித்து உண்டு களிப்பது, இவை தீமைகளே என்று உணர்.

எங்கும், எப்போதும், எவரிடமும் நாவடக்கத்தோடு நடந்து கொள்ளவேண்டும். நமது முன்னோர்கள் அவ்வாறு நடந்து காட்டியே வாழ்ந்தார்கள். நாமும் அப்படித் தானே நடக்க வேண்டும்? இது உலகியல்.

அதிகமாக வாத்தைகளைக் கொட்டாதே; அதிகப்படியான குற்றங்களை அது உருவாக்கி விடும்! அது போலவே ஒரே நேரத்தில் பல காரியங்களில் மூக்கை நுழைக்காதே. சூழ்நிலை இடையூறுகள் உன்னைச் சூழ்ந்து கொள்ளும்.

உன்னையே நீ தன்னடக்கத்தோடு உணர்ந்து பார். அழகு எனும் தத்துவச் சட்டத் திட்டங்களுக்குள் அடங்கி நட; அப்பொழுதுதான், நீ உன்னுடைய வாழ்வில் சில நெறிகளைக் காண்பாய் அல்லது உணர்வாய்!

நெறியுடன் நீ வாழ விரும்புகிறாயா? பசியைத் தணித்துக் கொள்; உனது வீட்டில் சுகபோக உணர்வுகள் இல்லாமல் இரு, எக்காரியத்தையும் உண்மையோடும், நேர்மையோடும் செய். நாவடக்கமாய் இரு நல்ல சீரான கொள்கைகளைக் கடைப்பிடி; நல்ல இலட்சியமுள்ளவர்களது நட்பை நாடு; அவர்களது நடத்தைகளின் அடிச்சுவடுகள் மீதுநட, இப்படிப்பட்டவன் யார் தெரியுமா? சகலகலாவல்லமை அறியும் ஆர்வலனாவான்.

பணம், புகழ்-மக்களால் விரும்பப்படுபவை. அதற்காக அவற்றை அடைய தவறான வழிகளில் நடக்காதே. வெறுத்து ஒதுக்கு. அதுபோலவே, ஏழ்மை, தாழ்மை நிலை-மக்களால் விரும்பப்படுவனவல்ல; இவை சரியான வழியில் கிடைக்கவில்லை என்றால், ஒதுக்கி விடாதே இவற்றை

தன் ஏழ்மை நிலை தனக்குப் பிடிக்கவில்லை என்றால் மன ஆண்மை பெற்றவன் யாருக்கும் கீழ்படிந்து அவன் நடக்க மாட்டான்; நெறியும், நேர்மையுமயற்றவனை வெறுத்தால் அவன் அனைவருக்கும் கீழ்படியவேமாட்டான்.

வில் பயிற்சியில் அம்பு எய்யும் போது அது குறி தவறினால் காரணம் என்ன என்று கண்டு பிடிப்பவன் நேர்மையான மனிதன்! அற்பன் இருக்கிறானே அவன், இது போன்ற சம்பவத்தில் தவறின் காரணத்தைக் காணாமல் பிறர்மேல் அதைச் சுமத்துவான்: பிறரிடம் அதைக்கண்டு பிடிக்கவே முயல்வான்!

நேர்மையாளன் பேச்சில் அடக்கம் ஊஞ்சலாடும்! வீணாகப் பேசி நேரத்தைக் கழிக்காமல் நேர்மையான செயலில் ஈடுபடுவான்; எது தேவையோ அதையே பேசுவான்; எப்போதும் நடுநிலையோடு நிற்பான்.

எல்லாரையும் விரும்புவான் நேர்மையாளன்; பிறரைப் பற்றி நல்லதையே பேசுவான்; நட்பிலே கண்ணியம், தேர்வை காப்பான்; தன்னுடைய முன்னேற்றத்தைப் பிறருடைய முன்னேற்றத்திலேயே பார்த்து மகிழ்வான்: துன்பப்படுவோர் துயர் துடைப்பான்; அவன்தான் நேர்மையான மனிதன்.

இன்றைய உலகில் ஒரு ஞானியைப் பார்ப்பது கடினம்; ஆனால், ஒரு நேர்மையான மனிதனை நான் பார்த்து விட்டால் ஆகாயத்தில் கூடப் பறந்து விடுவேன்! அவ்வளவு மகிழ்ச்சி ததும்பும்.

உலகமெனும் பரந்த வீட்டில் வாழ்பவன் நேர்மையாளன்; உலக வாழ்வில் தன்னுடைய நிலையில் வாழ்பவன்; நேர்மையான சாலையில் வழி நடப்பவன்; பணம் அவனுக்குத் துரும்பு அதற்காக மயங்காதவன்; வறுமை கண்டு வாடாதவன்; அதிகாரபலத்துக்காக வளையாதவன்! அவன்தான் நேர்மையான மனிதன்.

நீதி, நேர்மை, கன்னியம், கடமை, கட்டுப்பாடு; ஆசார விதிகள் தவறாமை; எக்காரியத்தையும் தனது திறமையினாலேயே செய்து முடிக்கும் துடிப்பானவன்; இவன்தான் நேர்மையாளன்.

உலகம் போற்றும் பண்பாளன்; பழுத்த பண்புகளைச் சுவைப்பவன்; தனது நல்லியல்புகளைத் தலையாகக் கருதுபவன்; இவன்தான் நேர்மைக்குரிய நெஞ்சினன்.

உதவியே குறிக்கோளாகக் கருதுபவன் அற்பன்; அடுத்தவரை ஆள்காட்டியே வாழ்பவன் அற்பன்; குற்றேவல் செய்தே குறைகூறி வாழ்பவன் அற்பன்; பிறர் தயவை நம்பியே கையேந்தி பிழைப்பவன் அற்பன்; இவன் கெளரவம் உள்ள நேர்மையாளனின் பரம விரோதி!

நீதிநெறி எங்கும் நிறைந்து தோற்றமளிப்பதைச் சாதாரண மக்களால் புரிந்து கொள்வது மிகக்கடினம்; கடவுளால் அளிக்கப்பட்டதைக் கூட மனித இயல்பு என்று கூறிவிடுகின்றோம். அந்த மனித இயல்பின் கடமையை நிறைவேற்ற உதவுவதைத்தான் நீதிநெறி என்கிறோம். அந்த நீதிநெறிகளின்படி நடப்பதைத்தான் நாம் பண்பாடு என்று போற்றுகிறோம்.

உண்மையைக் கடைப்பிடிப்பவர்களுக்கு கவலை இல்லை; அறிவுடையவனுக்குத் தயக்கம் இல்லை; உள்ளத் துணிவுடையவனுக்கு நெஞ்சில் அச்சம் இருக்கயிடமில்லை.

நேர்மையை அறிந்தவனை விட, அதை விரும்புபவன் சிறந்தவன்; அதை விரும்புபவனைவிட கடைப்பிடித்து மகிழ்ச்சி பெறுபவன் தலை சிறந்தவன்; மிகவும் உயர்ந்த நிலை மனப்பண்பும், மிகத் தாழ்வான நிலையில் உள்ள மனப் பண்பும் என்றுமே மாறுவது இல்லை.

வாழ்க்கையைப் பற்றியே மக்கள் இன்றுவரை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. பிறகு எப்படி இவர்கள் மரணத்தைப் பற்றிப் புரிந்து கொள்வார்கள்?

எந்தக் காரியத்தையும் செய்ய முற்படும்போது; அதைச் செய்வதால் ஏற்படக் கூடிய முடிவை முன் கூட்டியே சிந்தித்துப் பார்த்த பிறகு அதைச் செய்திட்டால் உறுதியாக வருந்தக்தக்க முடிவு எதுவும் அமையாது

நமக்குக் கிடைக்கவில்லையே-பதவிகள் என்று கவலைப்படாதீர்கள்; ஆனால், அவை ஒருநாள் நம்மைத் தேடி வரக்கூடும் என்ற முடிவில் உங்களையே நீங்கள் தகுதியுடைய செயல் அல்லது தொண்டு வைரமாக மாறுங்கள்.

நீங்கள்தான் பலமுளளவர்கள் என்று எண்ணி விடாதீர்கள்; உங்களை விட ஒரு பலசாலி இருக்கிறான் என்பதை மட்டும் மனதில் கொள்ளுங்கள்.

பகலில் வெளியே பகட்டு; தோற்றத்தில் அமைதி மனதில் பலவீனமான சிந்தனை. அறியாமை கொண்டு வாழ்பவன்; இரவில் சுவர் பொந்துகளின் துவாரத்தின் வழியுள்ளே நுழையும் திருடனே!

பேசும் வார்த்தை நயங்களைக் கேட்டு ஒருவனை மதிப்பிடாதே. பண்பட்ட உலகில், பண்பட்ட மனித நெறியினைப் பார்க்கும் நாம், பண்படாத உலகில் வெறும் பகட்டானப் பேச்சுக்களை மட்டும்தான் பார்க்க இயலும்!

படிக்காதவர்களிடமும், பாவையர்களிடமும் பழகுவது மிகவும் கடினமான காரியம்தான்! என்ன செய்வது? இவர்களிடம் நெருங்கிப் பழக முற்பட்டால் நம்மைப் பயன்படுத்திக் கொள்வார்களே! புறக்கணித்தாலும் அவர்கள் அதை விரும்பமாட்டார்களே!

நன்மை செய்பவர்களுக்கு நாம் நன்மையே செய்ய வேண்டும்; அதனால், மக்கள் நன்மையைச் செய்ய நாம் பழக்குகிறோம் என்று பொருள்.

தீமை செய்பவர்களுக்கு தீமையே செய்யுங்கள், அதனால், மக்களை தீமை புரியாதவாறு நாம் தடுத்து விடுகிறோம் என்று பொருள்!

அழகிய ஆத்மா உடையவன் அழகான விஷயங்கனைப் பற்றித்தான் பேசுவான்; ஆனால், அழகிய விஷயங்களைப் பேசுகிறவன் ஆழகிய ஆத்மாவைக் கொண்டவன் என்று கூறமுடியாது.

இளைஞர்களே! உங்களுடைய குடும்பத்திற்கு நல்ல புதல்வர்களாக இருங்கள்! சமுதாயத்திற்கு அடக்கமும், வணக்கமும் உடையவர்களாகத் திகழுங்கள்; ஒழுக்கத்தின் விழிப்புடையவர்களாக விளங்குங்கள்; பொதுமக்கள் இடத்தில் அன்புடையவர்களாக, பண்புடையவர்களாக, கருணையாளர்களாக, நற்குணமுடைய நண்பர்களாக இருந்து வாழுங்கள் இவையெலாம் செய்து முடித்த பிறகு உங்களுக்கு நேரம் இருந்தால் அறிவு நூற்களைக் கற்று ஞானிகளாக நடமாடுங்கள்.

உண்மை என்ற உணர்வுடைய ஒரு பொருளுக்கு பெருமை தேடுங்கள், உண்மையோ-மனிதன் பெருமையடையுமாறு செய்யாது, உண்மை என்றுமே மனித இயல்பை விட்டு விலகுவது கிடையாது. உண்மையானது மனிதப் பண்பினிடமிருந்து பிரிந்து காணப்பட்டால், அதை உண்மை என்று உரைப்பதே தவறு!

உண்மையை விரும்புபவன், அதை அறிந்தவனைவிட சிறந்தவனாகிறான்; அதை விரும்புபவனைவிட உண்மையில் மகிழ்ச்சி காண்பவன் உத்தமமான உயர்ந்த மனிதன் ஆகிறான்!

உலகம் நிலையற்ற நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது அந்த உலகத்தைச் சீர்த்திருத்திட கன்பூசியஸ் என்ற காற்று சீன மண்ணிலே தவழ்ந்தது.

காற்றடித்தால் புற்கள் தலை வணங்குவது போல சீனத்து மக்கள் அந்த ஞானி கூறிய மேலே கண்ட கருத்துகளை தம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் என்று தலை வணக்கி வரவேற்றார்கள் வாழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள்!