கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)/24. புதிய இசையிலக்கணம்

விக்கிமூலம் இலிருந்து

24. புதிய இசையிலக்கணம்

இரண்டுவிதமான இசைகளால் கொடுந்தீவுக் கொலை மறவர்களையும் அவர்கள் தலைவனையும் சாரகுமாரன் வசப்படுத்தினான். பாடலுக்கும், புகழுக்கும், சேர்த்தே இசை என்று இசைவாகத் தமிழில் பெயர் சூட்டியவர்களை வாயார வாழ்த்தினான் அவன். திரும்பத் திரும்ப மீட்டினாலும், பாடினாலும் கேட்பவனுக்குச் சோர்வு தராமல் அவனை வசீகரம் செய்யும் இசையைப்போலத் திரும்பத் திரும்பச் சொல்லிப் புகழ்ந்தாலும் சொல்லப்படுகிறவனை வசீகரிப்பது என்ற காரணத்தால் தான் புகழும் இசைப்பெயர் பெற்றிருக்க வேண்டுமென்று சிந்தித்தான் சாரகுமாரன்.

அந்தத் தீவின் பாறைகளில் ஏறிக் கபாலங்களையும் உடைந்த எலும்புகளையும் பார்த்துக்கொண்டே நுழைந்த போது ஏற்பட்டிருந்த திகிலும், நடுக்கமும் இப்போது முடிநாகனிடம் இல்லை. மனிதனின் கல்மனத்தையும் இளகச் செய்து கருணைமயமாகச் செய்யும் அபூர்வமான ஆற்றல் இளைய பாண்டியருடைய குரலுக்கு இருப்பதைப் பல சமயங்களில் உணர்ந்திருந்தாலும் இன்று அதை மிக அதிகமாக உணர்ந்தான் முடிநாகன். மொழியும், பொருளும் மனிதனுக்குரிய நாகரிக உணர்வுகளும் சிறிதேனும் புரியாத ஒரு கொடிய காட்டுக் கூட்டத்தைக்கூட வசப்படுத்திவிட முடிந்த அந்தக் குரலுக்குரிய சாரகுமாரனைத் திடீரென்று அந்நியமாக விலக்கி ஒரு கலைஞனுக்குரிய உயரத்தில் வைத்துச் சிந்தித்த போது முடிநாகனின் வியப்பு எல்லையற்றதாயிருந்தது.

கொடுந்தீவு மறவர் தலைவன் தனக்குச் சமமாக இளைய பாண்டியனுக்கும், முடிநாகனுக்கும், அமர்வதற்கு இருக்கைகள் அளித்தான். காவியேறிய கோரப்பற்களைத் திறந்து இளையபாண்டியனை நோக்கி அவன் மகிழ்ச்சியை வெளிப் படுத்தும் அடையாளமாக நகைத்த நகையே பயங்கரமாக இருந்தது. தங்கள் வழக்கப்படி ஊனும், கள்ளும் கொடுத்து இளையபாண்டியனையும், முடிநாகனையும் உபசரிக்கத் தொடங்கினான் அவன். இளைய பாண்டியனும், முடிநாகனும் அவற்றை உண்ணவும் பருகவும் அருவருத்ததைக் கண்ட அவன் விதம் விதமான தோற்றங்களையும் வேறு வேறு நிறங்களையும் உடைய பல கனிகளை வரவழைத்து அவர்கள் இருவருக்கும் அளித்தான்.

"ஏதோ மந்திரத்தால் எங்களையெல்லாம் வசியப்படுத்தி விட்டாய்" என்று பண்படாத தன் மொழியில் இளைய பாண்டியனைப் புகழத் தொடங்கினான் அந்தக் கொடுமறவர் தலைவன். தான் பாடியது இசை என்றும் அது ஒரு கலை என்றும் இளையபாண்டியன் அவனுக்கு விளக்க முயன்றதெல்லாம் வீணாயிற்று. அவனோ விடாப்பிடியாக அதை மந்திரம் என்றே புகழ்ந்தான். அந்தக் கொடியமனிதனிடம் அவன் கூற்றை அதிகமாக முனைந்து மறுக்க முயல்வதுகூடப் பகைமையை உண்டாக்குமோ என்ற தயக்கத்தில் பேசாமலிருந்துவிட்டான் இளையபாண்டியன். பரிசுகள் என்ற பெயரில் மிருகங்களின் கொம்புகளினாலும் தோலினாலும் செய்த பல விநோதமான பொருள்களை இளையபாண்டியனுக்கும், முடிநாகனுக்கும் அளித்தான் அந்தத் தீவின் தலைவன். அவற்றை மறுக்காமல் இருவரும் ஏற்றுக்கொண்டனர்.

கொடிய முரட்டு மனிதர்களிடம் அவர்களது அன்பையும், உபசரிப்பையும் மதியாததுபோல் அசிரத்தையாக நடந்துகொண்டாலும் நல்ல விளைவு இருக்காது. அன்பைக் கூட அதிகாரத்தோடு பயமுறுத்தி ஏற்றுக்கொள்ளச் செய்கிற மனிதர்கள் உண்டு. அந்த அதிகாரத்தையும், பயமுறுத்தலையும் இலட்சியம் செய்யாததுபோல் இருந்தால்கூட அப்படிப் பட்டவர்களுக்கு உடனே விளைகிற கோபம் பயங்கரமானதாக இருக்கும். எதற்கும் தயங்கமாட்டார்கள் அவர்கள். அதிகாரம் செய்யாமலோ, பயமுறுத்தாமலோ அன்பைக்கூட அவர்களால் செய்யமுடியாது. இந்த இயல்பை நன்றாகப் புரிந்துகொண்டு இளையபாண்டியனும் முடிநாகனும் நடந்து கொண்டார்கள். அந்தக் காட்டுமனிதர்களின் உண்டியும் ஆடலும் கூத்தும், குரவையும், விடிய விடிய நடந்தன. விடிகிற நேரத்துக்கு உறக்கம் சோர்ந்த விழிகளோடு அந்தத் தீவின் தலைவனிடம் விடைபெற நின்றார்கள் அவர்கள். அவனோதன் கூட்டத்தாரோடு கரைவரை வந்து அவர்களை வழியனுப்பச் சித்தமாயிருந்தான்.

விகாரமான கூக்குரல்களுடனும், கோலங்களுடனும் உடன்வரும் அந்தக் காட்டுக் கூட்டத்தோடு நடந்துசெல்வதே விரும்பத்தகாததாக இருந்தது. இறுதியாக அவர்களுக்கு விடைகொடுக்கும்போதுகூட அந்தக் காட்டுத்தீவின் தலைவன், "இங்குவந்து உயிருடன் தப்பிச் செல்கிற மானிடர் அரிதினும் அரியவர். நீ ஏதோ உன் குரலினால் எங்களுக்கு மந்திரம் போட்டுவிட்டாய். அதனால்தான் உன்னைக் கொல்லத் தோன்றவில்லை" என்று மறுபடியும் கூறினான். "மறுபடி எப்போதாவது இந்தப் பக்கம் வந்தால் எங்களைப் பார்த்து மந்திரம் போட்டுவிட்டுப்போ" என்று அவன் கூறியதைக் கேட்டுக்கொண்டே பாறைகளில் கீழிறங்கிக் கப்பலை நோக்கி விரைந்தார்கள். அவர்கள் கப்பலில் ஏறின. பின்பே இருவரும் சுபாவமாக மூச்சுவிட முடிந்தது. அந்தத் தீவிலிருந்து உயிர்தப்பிக் கப்பலேறிவிட்டோம்" என்பது அவ்வளவிற்கு நம்பமுடியாதபடி இருந்தது. கப்பல் புறப்பட்டதும் முடிநாகன் இளையபாண்டியனை வியந்து புகழ்ந்து உரைக்கலானான் :

"இளையபாண்டியரே! நீங்கள் பாடுகிற இசைக்கென்றே புதிய இலக்கணம் ஒன்று இனிமேல் உண்டாக்கவேண்டும். பழைய இசையிலக்கணம் உங்களுடைய கலையின் எல்லையற்ற நயங்களை எல்லாம் வகுத்துக் கூறுகிற அளவு விரிவானதோ வகையானதோ அன்று. எனவே சிகண்டியாசிரியரைப் போன்ற இசை வல்லுநர்கள் உங்களை மனத்திற்கொண்டே ஒரு புதிய இசையிலக்கணம் காணவேண்டும். ஒன்றும் புரியாத காரணத்தால் இந்தக் கொடுந்தீவின் தலைவன் இதை மந்திரம் என்று புகழ்ந்தானே; அது முற்றிலும் பொருத்தமானதுதான். ஏனென்றால் மந்திரம்தான் இத்தகைய சாதனைகளைச் சாதிக்கமுடியும். ஆயுதங்களைக் கொண்டே மனிதர்களை வெல்லமுடியும் என்ற நேற்றுவரை நம்பிவந்தவன் நான். கலைகளின் உயர்ந்த பக்குவத்திலும் மனிதர்களை வெல்லமுடியுமென்பதை நேற்று நள்ளிரவு நிரூபித்துவிட்டீர்கள் நீங்கள்" என்றான் முடிநாகன்.

இளையபாண்டியனோ இந்தப் புகழ்ச்சிக்கு மறுமொழி ஏதும் கூறாமல் புன்முறுவல் பூத்தபடி இருந்தான். கப்பல் விரைந்து சென்றுகொண்டிருந்தது. அந்தப் பகுதியை விரைந்து கடந்து மேலே சென்றுவிடவேண்டும் என்று அவர்கள் ஊழியர்களுக்குக் கட்டளை இட்டிருந்தார்கள். தப்பிவிட்டாலும் எங்கே எந்தத் தீமை காத்திருக்குமோ என்ற முன்னெச்சரிக்கையும் பயமும் இன்னும் அவர்களை விட்டபாடில்லை. ஐந்தாறு நாழிகைப் பயணத்திற்குப்பின் மறுபடி அவர்கள் ஒரு சிறிய தீவை அடைந்தார்கள். இறங்கிச் சுற்றிப் பார்த்ததில் அந்தத் தீவில் மனிதர்களே இல்லையென்று தெரிந்தது. "பன்னீராயிரக்கணக்கான பழந்தீவுகள் இந்தத் தென்கடலிலும், மேற்குப் பகுதியிலும் சிதறிக் கிடக்கின்றன. இவற்றை முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரம் என்று தங்கள் பாட்டனார் அடிக்கடி கூறுவார். இவை எல்லாவற்றிலுமே வளமோ வழக்காறுகளோ, வாழ்க்கையோ ஒரே விதமாக இருப்பதில்லை. இந்தத் தீவைப்போல் சிலவற்றில் வாழ்க்கையே இல்லை. ஆயினும் இவற்றைச் சுற்றிப் பார்ப்பதால் நமக்குக் கிடைக்கும் அனுபவங்களையே தங்கள் பாட்டனார் பெரிதாக மதிக்கிறாரென்று தெரிகிறது" என்றான் முடிநாகன்.

அன்று மாலை இருள் சூழுகிறவரைமேலும் பல தீவுகள் ஆளரவமற்ற மயானம்போல் குறுக்கிட்டுக் கழிந்தன. இருட்டுகிற வேளைக்குக் 'கற்பூரத்தீவு' எனப்படும் பசுமையான தீவுக்கு வந்துசேர்ந்தனர் அவர்கள். அந்தத் தீவின் இன்னொரு விநோதம். தீவின் ஆண்மக்களே அதிகம் இல்லை; அவ்வளவு பெரிய தீவில் இரண்டு பேரோ, மூன்று பேரோ மட்டுமே ஆண்மக்கள் இருப்பதாக அவர்கள் கேள்விப்பட்டனர். அந்த இரு வரையும் அவர்கள் தங்கள் கண்களால் பார்க்கவில்லை. கற்பூரத்தீவும் ஒரு விந்தையாகவே இருந்தது. அந்தத் தீவின் பெண்மக்களே வில்லும் அம்பும் எடுத்துக் குறிபார்த்து எய்வதில் வல்லவர்களாக இருந்தனர் என்பதையும் அவர்கள் கண்டனர்.

கற்பூரத் தீவின் பெண்கள் அவர்களை ஏதோ அபூர்வ விலங்குகளைப் பார்ப்பதுபோதுபோல் வெறித்து வெறித்துப் பார்த்தனர். குறிப்பிடத்தக்க எந்தப் பயமும் அந்தத் தீவிலே இல்லை. மறுநாள் பொழுது விடிந்து அவர்கள் அங்கிருந்து புறப்படும்போது கரையில் அந்தத் தீவின் பெண்கள் கூட்டமெல்லாம். ஏதோ விநோதத்தைக் காண்பதுபோல் கூடிவிட்டது. மறுநாள் பயணத்தின்போது தங்கச் சுரங்கங்கள் நிறைந்த ஆடகத்தீவு குறுக்கிட்டது. ஆனால் அந்தத் தீவில் அவர்கள் இருவரையும், அவர்கள் கப்பலையுமே அருகில் கூட வரவிடாமல் தடுத்துவிட்டார்கள். தங்கத் தீவுக்காரர்கள் அந்நியர் வரவையே தடை செய்திருந்தனர். யாரும் தீவையே நெருங்கிவிடாதபடி சுற்றிலும் போர் மரக்கலங்களை வீரர்களோடு காவலுக்கு நிறுத்திவைத்திருந்தனர். ஆடகத் தீவில் இறங்கிப் பார்க்கவேண்டுமென்று இளையபாண்டியனுக்கும், முடிநாகனுக்கும் எவ்வளவோ ஆசையிருந்தும், அது முடியவில்லை. உடனே நிராசையோடு முடிநாகன் கூறலுற்றான் :

"இந்தத் தீவுகளை எல்லாம் ஒன்றுசேர்த்து ஒரு பெரும் கடற்படையெடுப்பின் மூலம் இவற்றை வென்று பாண்டி நாட்டின் கீழே அடக்கிக்கொண்டு வந்துவிடவேண்டுமென்று தங்கள் பாட்டனாருக்கு ஆசை இருக்கிறது. அந்த ஆசை தங்கள் காலத்திலாவது நிறைவேறுமோ என்ற நம்பிக்கையில்தான் இப்படியெல்லாம் உங்களைப் பயணம் அனுப்பியிருக்கிறார். ஆனால் தனிப்பட்ட ஒரு முழுப் பேராசையை வெற்றி கொண்டாலும் கொள்ளலாமே தவிர இப்படிப்பட்ட தனித் தனித் தீவுகளை வென்று சேர்ப்பது என்பது அசாத்திய மானது." "கொடுந்தீவுத் தலைவனை இசையினால் வென்றதுபோல எல்லாரையும் வெல்ல முடியுமானால் வெல்லலாம்" என்று சிரித்துக்கொண்டே முடிநாகனுக்கு மறுமொழி கூறினான் இளைய பாண்டியன். இளையபாண்டியனுடைய மனம் கலைவிநோதப் பான்மையுடையதாகவே இருப்பதை இந்த மறுமொழியின் மூலம் முடிநாகன் உணர முடிந்தது. பெரிய பாண்டியரும், வெண்தேர்ச்செழியரும் இராஜரீக உணர்வுகளையே கலைகளாகக் கருதுகிற நிலையில் இளைய பாண்டியர் இசைபோன்ற கலைகளையே ஒரு தனி சாம்ராஜ்யமாகக் கருதுகிற பக்குவத்திற்கு அவருடைய ஆசிரியர்கள் அ.ெ ம்ெ ரி வளர்த்துவிட்டிருப்பது நன்றாக விளங்கியது.