கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)/26. சிகண்டியாசிரியர் மனக் கிளர்ச்சி

விக்கிமூலம் இலிருந்து

26. சிகண்டியாசிரியர் மனக் கிளர்ச்சி

சிகண்டியாசிரியரிடம் இசையைப் பற்றிய பேச்சுக்களைப் பேசிக்கொண்டிருந்தபோதே சாரகுமாரனுக்குக் கண்ணுக் கினியாளின் ஞாபகம் வந்தது. பழந்தீவுப் பயணத்தை எதிர்பாராதவிதமாக மேற்கொள்ள நேர்ந்திருந்ததனால் அவளை நீண்ட நாட்களாகச் சந்திக்க முடியாமற்போய்விட்டது. நகர்மங்கல விழாவுக்காகக் கபாடபுரம் வந்த அந்த இசைக்குடும்பம் இவ்வளவு நாட்கள் அங்கே தங்கியிருக்கிறதோ, அல்லது வேறு ஊர்களுக்குப் பெயர்ந்து போய்விட்டதோ என்று அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. விழாவுக்காக வந்திருந்த பாணர்களும், விறலியர்களும், கூத்தர்களும் தங்கியிருந்த கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்குச் சென்று அவர்கள் இருக்கிறார்களா, புறப்பட்டுவிட்டார்களா என்ற உண்மையைத் தெரிந்துகொள்ள விரும்பினான் அவன். என்ன காரணத்தினாலோ சாரகுமாரனுடைய மனத்தில் இசையின் துணுக்கங்களைப் பற்றி நினைவு வரும்போதெல்லாம் இன்றியமையாதவளாக அவளும் நினைவு வந்தாள்.

அக்கம்பக்கத்துத் தீவுகளையும் நாடுகளையும் வென்று பாண்டியப் பேரரசை வலிமையாக்கும் போர்வீரனாக அவனை எதிர்பார்த்தார் பாட்டனார் வெண்தேர்ச்செழியர். அவன் இதயமோ அவனை உலகறியாமல் உள்ளுறக் கலை வீரனாக இசைவீரனாக வளர்த்துக் கொண்டிருந்தது. இணையற்ற அழகியும், நளின கலைகளில் பெருவிருப்பமுடையவளும், குரலினிமைமிக்கவளுமாகிய தன் தாய் திலோத்தமையைக் கொண்டு வளர்ந்துவிட்டான் அவன். தந்தை அநாகுலனின் போர்வலிமையோ பாட்டனார் வெண்தேர்ச்செழியரின் அரசதந்திரச் சூழ்ச்சிகளோ அவன் இதயத்தோடு ஒட்டவேயில்லை. சிகண்டியாசிரியருக்கு இந்த உண்மை புரிந்த அளவிற்குப் பாட்டனார் வெண்தேர்ச்செழியருக்குப் புரிந்ததாகத் தெரியவில்லை. அதனால்தானோ என்னவோ வேறு யாரிடமுமே இசைக்கலையைப் பற்றிய தன் ஆர்வங்களையும், அந்தரங்கங்களையும் தெரிவிக்காத அளவு சிகண்டியாசிரியரிடம் மட்டும் தெரிவித்திருந்தான் சாரகுமாரன்.

இசைக் கலையின்மேல் அந்தரங்கமாக அவனுள் உறங்கிக்கிடந்த காதல் கண்ணுக்கினியாளைச் சந்தித்தபின் விழித்துக்கொண்டுவிட்டது. அவளைப் பார்க்கத் தவித்த போது இசையைப் பாடவும் தவித்தான் அவன். இசையைப் பாடத் தவித்தபோது அவளைப் பார்க்கவும் தவித்தான். இசைக்கும் காதலுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கவேண்டும். இசையிலே காதல் பிறக்கிறது அல்லது காதலிலே இசை கணிகிறது. மனிதன் இன்னொன்றின்மேல் செலுத்தும் அளவற்ற பிரியத்தின் உருவகம்தான் இசையோ என்னவோ?

பழந்தீவுகளில் பயணம்செய்து திரும்பிய மறுநாள் வைகறையில் முடிநாகனின் துணையும்கூட இல்லாமல் உலாவச் சென்று வருவதுபோல் கடற்கரைப் புன்னைத் தோட்டத்துப் பக்கம் சென்றான் சாரகுமாரன்.

இருள்பிரியாத வைகறை வேளையில் யாரையோ நிரந்தரமாகப் பிரிந்துவிட்டாற்போல ஒலமிடும் கடல் அலையோசையும், குளிர்ந்த காற்றும், மனத்திற்குள் ஒடும் நினைவின் விரைவிற்கேற்ப விரையும் புரவிப்பயணமும், மிகவும் இரம்மியமாயிருந்தன. அந்த வேளையில் யாருடைய கவனத்தையும் கவராமல் தனிமையாகவும் தனிச்சையாகவும் அரண்மனையை விட்டுப் புறப்படுவதுகூடச் சுலபமான காரியமாயிருந்தது அவனுக்கு. கடற்கரைக் காற்றில் வெண்பட்டு விரித்தாற்போன்ற மணல் வெளியில் புரவி சென்றபோது சுகமாயிருந்தது.

புன்னைமரங்கள் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. எப்போதாவது தற்செயலாகக் கீழே உள்ள நீரில் உதிரும் புன்னைக்காய் வாத்தியம் வாசிப்பதுபோன்றதொரு ஒலியை எழுப்பி ஒய்வதும் செவிக்குச் சுகமான தாயிருந்தது. இன்னும் சிறிது தொலைவு சென்றபின் அதைவிடச் சுகமான நாதம் ஒன்று உயிரின் குரலாகவே காற்றுடன் உலவிவந்து அவன் செவிகளை எட்டலாயிற்று. 'சோகத்தை இப்படியும்கூட இசையினால் பேசமுடியுமா என்று இளையபாண்டியனை வியக்கச் செய்யும் குரலாயிருந்தது அது. அந்தக் குரலில் புதிது புதிதாக மெருகேறியிருந்த துணுக்கங்களையும், அழகுகளையும், நளினங்களையும் இணைத்து எண்ணியபோது அது வேறாகத் தோன்றியதே தவிரக் கூர்ந்து செவிமடுத்தபோது குரல் அவனுக்குப் பழகியதாகவே ஒலித்தது.

அருகில் நெருங்க நெருங்கக் குதிரையிலிருந்து கீழே இறங்கி அந்தக் குரல்வரும் வழியிலே ஒடவேண்டும்போல் அத்தனை ஆர்வமாயிருந்தது அவனுக்கு. அப்படியே செய்தான் அவன். புன்னைமரத்தடியில் அமர்ந்து குனிந்து மணற்பரப்பை நோக்கியவாறு கண்ணுக்கினியாள் தான் பாடிக்கொண்டிருந்தாள். அவளுக்கு இந்த உலக நினைவே இல்லை போல் தோன்றியது. அருகில் நெருங்கிச் சென்றால் அவளுடைய பாடலை எங்கே நிறுத்திவிடுவாளோ என்ற தயக்கத்தினால் விலகியே நின்றான் இளையபாண்டியன். நெய்தற் பண்ணை இத்தனை உருக்கமாகவும் இசைக்கமுடியும் என்பதை இன்றுதான்.அவனால் உணரமுடிந்தது. மொழியில் இசையும் ஒரு பிரிவு என்பதைவிட இசையே ஒரு தனிமொழி என்று தனியே பிரித்துச் சிறப்புக் கொடுத்துவிடலாமென்று இப்போது தோன்றியது அவனுக்கு.

தான் நீண்டநாட்களுக்கு முன்பு ஒரு வைகறையில் இதே கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் அவளைச் சந்தித்த போதும் அiள் இந்த நெய்தற்பண்ணையே பாடிக்கொண்டிருந்ததை நினைவுகூர்ந்தான் அவன். அதே நெய்தற்பண் இப்போது இன்னும் ந்ன்றாகக் கனிந்திருந்தது. தோகம் இசையாக இரும்போது இன்பத்தையல்லவா கொடுக்கிறதென்ற விந்தையான சிந்தனையில் ஈடுபட்டான் அவன். சிறிது நாழிகையில் அவளுடைய பாட்டு நிறைந்தது. நிறைந்த பின்பும் அவளுடைய குரல் செவிகளையும் காற்று வெளியையும்விட்டு அகலாமல் அப்படியே நித்திய சங்கீதமாக நிலைத்துவிட்டதுபோல் ஓர் இனிய பிரமையை நிலவச் செய்திருந்தது. சிலருடைய இசைக்காக இலக்கணங்கள் படைக்கப்பட்டுள்ளன. வேறு சிலருடைய இசையோ இலக்கணங்களையே புதிது புதிதாகப் படைக்கிறது' என்று அவளுடைய இசையைக் கேட்டு நினைத்தான் சாரகுமாரன்.

அவ்வளவில் தலைநிமிர்ந்த அவள் அவன் அங்கு வந்து நிற்பதைப் பார்த்துவிட்டாள். உடனே எழுந்து சீற்றத்தோடு முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்ட அவளை எப்படி ஆற்றுவிப்பதென்று அவனுக்குத் தயக்கமாயிருந்தது.

"எப்போது பாடினாலும் நெய்தற் பண்ணையே பாடுகிறாயே அவ்வளவு பெரிய நிரந்தரமான சோகம் என்னவோ?" என்று பேச்சைத் தொடங்கினான் அவன்.

அவளிடமிருந்து மறுமொழி இல்லை. சில விநாடிகள் மெளனமாகவே நின்றாள் அவள். மறுபடியும் அவனே பேசினான்:

"சிலருடைய குரலுக்குச் σστασιο அழகாக இருக்கிறது..."

"சிலருடைய செயல்கள் சோகத்தையே பிறர்க்குத் தருவதால்தானோ என்னவோ?" என வெடுக்கென்று மறுமொழி கூறினாள் அவள்.

"நீ சீற்றமடைந்து பயனில்லை கண்ணுக்கினியாள்! எதிர்பாராதவிதமாக என் பாட்டனார் என்னைப் பழந்தீவுகளுக்குப் பயணம் அனுப்பிவிட்டார். உன்னிடம் சொல்லி விடைபெறவும் முடியவில்லை. எங்கே நீயும் என் குடும்பத்தினரும் கபாடபுரத்தை விட்டே ஊர்பெயர்ந்து போயிருப்பீர்களோ என்ற பயத்துடனேயே இப்போது இங்கு தேடி வந்தேன்..." "பிறரைப் பயப்படவைப்பவர்கள் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது?..."

"கூறுவது தவறு! நான் யாரையும் பயப்படவைக்கிறவனில்லை..."

"இருந்தாற்போலிருந்து மறைகிறவர்களும் - இருந்தாற் போலிருந்து தோன்றுகிறவர்களும் பயப்படவைக்கிறவர்கள் தாமே?”

"சந்தர்ப்பம் அப்படி நேர்ந்துவிட்டது! அது என் தவறில்லை" என்று கூறிய இளையபாண்டியன் எயினர் தீவின் இயற்கையழகைக் கண்ட வேளையில் அவனை நினைவுகூர்ந்ததையும் பிற பயண அநுபவங்களையும் தொடர்ந்து கூறலானான். அவன் கூறியவற்றைக் கேட்கக் கேட்க அவள் சினம் சிறிது சிறிதாக அடங்கியது.

"இன்னும் ஒரு திங்கள் காலத்தில் இங்கிருந்து புறப்படவேண்டுமென்று என் பெற்றோர் முடிவுசெய்துள்ளனர்" என்றாள் அவள். அவள் குரலில் கவலை ஒலித்தது.

"அதற்குள் எவ்வளவோ நடக்கும்" என்று புன்சிரிப்போடு அவளுக்கு மறுமொழி கூறினான் அவன். இப்படியே சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்துவிட்டுப் பிரிந்தார்கள் அவர்கள். மறுபடி அடுத்த நாள் அவளைச் சந்திப்பதாகக் கூறினான் அவன்.

அரண்மனை திரும்பியதுமே அவன் சிகண்டியாசிரியரைச் சந்தித்து அன்று வைகறையில் தான் கடற்கரையில் கேட்ட நெய்தற்பண்ணின் புது நயங்களை விவரித்தான்.

சிகண்டியாசிரியரும் அதனை ஆர்வத்தோடு கேட்டார்.

"இசையில் பல்லாயிரம் நுணுக்கங்கள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. இப்படி இயல்பை மீறிய அபூர்வத்திறமைகளை விளக்கும் புதிய இசையிலக்கணம் ஒன்றை நானே வரைவதாக இருக்கிறேன். அந்த மாபெரும் இசையிலக்கணத்தை இங்கேயே கோ நகரில் அரங்கேற்றவும் முடிவுசெய்துள்ளேன்" என்று மனத்தில் ஏற்பட்ட புதுமைக் கிளர்ச்சியோடு அவனுக்கு மறுமொழி கூறினார் சிகண்டியாசிரியர். சாரகுமாரனும் அதைக் கேட்டு மகிழ்ந்தான்.