உள்ளடக்கத்துக்குச் செல்

கபோதிபுரக்காதல்/பக்கம் 25-33

விக்கிமூலம் இலிருந்து

தயாராக நின்றுகொண்டிருந்த மாரியப்பபிள்ளையை மெதுவாகத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

மாரியப்பபிள்ளை போன உடனே வேதத்தின் புருஷர், பரந்தாமனை நையப் புடைத்து, “பாவி! ஒரு குடும்பத்தின் வாயிலே மண் போட்டாயே!” என்று அழுதார்.

“புறப்படடி! போக்கிரிச் சிரிக்கி, போதும் உன்னாலே எனக்கு வந்த பவிசு” என்று சாரதாவைக் கட்டிலிலிருந்து பிடித்து இழுத்து மூவருமாகத் தமது வீடு போய்ச் சேர்ந்தனர்.

பரந்தாமன், இன்னது செய்வதென்று தோன்றாது ஊர்க்கோடியில் இருந்த பாழடைந்த மண்டபத்தில் புகுந்துகொண்டான் அன்றிரவு. ஊரில் லேசாக வதந்தி பரவிற்று. சாரதா வீட்டாருக்கும் அவள் கணவனுக்கும் பெருத்த தகராறாம். சாரதாவைக் கணவன் வீட்டைவிட்டு துரத்திவிட்டார்களாம்” என்று பேசிக்கொண்டனர்.

வீடு சென்ற சாரதா, நடந்த காட்சிகளால் நாடி தளர்ந்து சோர்ந்து படுத்துவிட்டாள். ஜூரம் அதிகரித்துவிட்டது. மருந்து கிடையாது. பக்கத்தில் உதவிக்கு யாரும் கிடையாது. அவள் பக்கம் போனால் உன் பற்கள் உதிர்ந்துவிடும் இடுப்பு நொறுங்கிவிடும் என்று வேதத்துக்கு அவள் கணவன் உத்திரவு.

எனவே தாலிகட்டிய புருஷன் தோட்டத்தில் தவிக்க, காதலித்த கட்டழகன் மண்டை உடைபட்டு, பாழ்மண்டபத்தில் பதுங்கிக் கிடக்க, பாவை சாரதா படுக்கையில் ஸமரணையற்றுக் கிடந்தாள்.

இரவு 12 மணிக்குமேல், மெல்ல மெல்ல, நாலைந்து பேர், பரந்தாமன் படுத்திருந்த மண்டபத்தில் வந்து பதுங்கினர். அவர்களின் நடை உடை பாவனைகள் பரந்தாமனுக்கு சந்தேகத்தைக் கொடுத்தது. வந்தவர்களிலே ஒருவன், மெதுவாக பரந்தாமன் அருகே வந்து தீக்குச்சியைக் கொளுத்தி முகத்தைப் பார்த்தான். பரந்தாமன் கண்களை இறுக மூடிக்கொண்டிருந்தான்.

“எதுவோ, பரதேசி கட்டைபோலிருக்கு” என்று சோதித்த பேர்வழி மற்றவர்களுக்குக் கூற, வந்தவர்கள் மூலையில் உட்கார்ந்கொண்டு கஞ்சா பிடித்துக்கொண்டிருந்தனர். அந்த நெடி தாங்கமாட்டாது பரந்தாமன் இருமினான். வந்தவர்கள் குசுகுசுவெனப் பேசினார்.

அதே நேரத்தில், “டார்ச் லைட்” தெரிந்தது. “ஆஹா! மோசம் போனோமடா முத்தா. சின்ன மூட்டையை மடியிலே வைத்துக்கொள். பெரிசை அந்தப் பயல் பக்கத்திலே போட்டுடு, புறப்படு பின்பக்கமாக” என்று கூறிக்கொண்டே ஒருவன், மற்றவர்களை அழைத்துக்கொண்டு, இடித்திருந்த சுவரை ஏறிக்குதித்து ஓடினான். பரந்தாமன் பாடு பெருத்த பயமாகிவிட்டது. ஓடினவர்கள் கள்ளர்கள் என்பதும் சற்றுத் தொலைவிலே டார்ச் லைட் தெரிவதும் போலீசாரின் ஊதுகுழல் சத்தமும் கேட்டதும் ‘புலியிடமிருந்து தப்பிப் பூதத்திடம் சிக்கி விட்டோம்’ என்று பயந்து என்ன செய்வதெனத் தெரியாது திகைத்தான். கள்ளர்களோ ஒரு மூட்டையைத் தன் பக்கத்திலே போட்டுவிட்டுப் போயினர். அது என்ன என்றுகூட பார்க்க நேரமில்லை. டார்ச் லைட் வர வர கிட்டே நெருங்கிக்கொண்டே வரவே வேறு மார்க்கமின்றித் திருடர்கள் சுவரேறிக் குதித்ததைப் போலவே தானும் குதித்து ஓடினான். கள்ளர்கள் தனக்கு முன்னால் ஓடுவதைக் கண்டான். அவர்கள் சொல்லும் பாதை வழியே சென்றான். அது ஓர் அடர்ந்த சவுக்கு மரத்தோப்பில் போய் முடிந்தது. கள்ளர்கள் எப்படியோ புகுந்து போய்விட்டனர். பரந்தாமன் சவுக்குத் தோப்பில் சிக்கிக்கொண்டு விழித்தான். அதுவரையில் போலீசாரிடம் சிக்காது தப்பினதே போதுமென்று திருப்தி கொண்டான். தன் நிலைமையைப்பற்றி சிறிதளவு எண்ணினான். அவனையும் அறியாமல் அவனுக்குச் சிரிப்பு வந்தது. “என் பாட்டிக்கு ஜுரம். நான் அவளுக்கு மருந்து கொடுப்பதைவிட்டு முத்தம் கொடுப்பது. பாட்டன் என் மண்டையை உடைப்பது, அவருக்குப் பயந்து, பாழும் மண்டபத்துக்கு வந்தால் கள்ளர்கள் சேருவது, அவர்கள் கிடக்கட்டும் என்று இருந்தால் போலீசார் துரத்துவது, அதனைக் கண்டு அலறி ஓடிவந்தால் சவுக்குத் தோப்பில் சிக்கிக்கொள்வது, நரி ஊளைவிடுவதைக் கேட்க நல்ல பிழைப்பு என் பிழைப்பு!” என்று எண்ணினான். சவுக்கு மரத்திலிருந்து ஒரு சிறு கிளையை எடுத்துத் தயாராக வைத்துக்கொண்டான் கையில். ஏனெனில், தூரத்தில் நரிகள் ஊளையிடுவது கேட்டது அவை வந்துவிட்டால் என்ன செய்வது என்றுதான். சவுக்கு மலார் வைத்துக்கொண்டு உட்கார்ந்தபடி இருந்தான். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவன் கண்கள் தானாக மூடிக்கொண்டன. அவன் தூங்கிவிட்டான் அலுத்து.

அதே நேரத்தில் கணவனுக்குத் தெரியாமல், வேதவல்லி மெதுவாக எழுந்து சாரதா படுத்திருந்த அறைக்குச் சென்றாள். சாரதாவின் நெற்றியிலும், கழுத்திலும் வியர்வை முத்து முத்தாகச் சொட்டிக்கொண்டிருந்தது. ஜாக்கெட் பூராவும் வியர்வையில் நனைந்துவிட்டது. ஜுரம் அடித்த வேகம் குறைந்து வியர்வை பொழிய ஆரம்பித்திருப்பதைக் கண்ட வேதம், தன் மகளின் பரிதாபத்தை எண்ணி கண்ணீர் பெருகிக்கொண்டே தன் முந்தானையால் சாரதாவின் முகத்தையும் கழுத்தையும் துடைத்தாள். சாரதா கண்களைத் திறந்தாள். பேச நாவெடுத்தாள். முடியவில்லை. நெஞ்சு உலர்ந்து போயிருந்தது. உதடு கருகிவிட்டிருந்தது ஓடோடிச் சென்று கொஞ்சம் வெந்நீர் எடுத்து வந்தாள். அந்நேரத்தில் அதுதான் கிடைத்தது. அதை ஒரு முழுங்கு சாரதாவுக்குக் குடிப்பாட்டினாள். சாரதாவுக்குப் பாதி உயிர் வந்தது. தன்னால் வந்த வினை இதுவெனத் தெரியும் சாரதாவுக்கு. ஆகவே, அவள் தாயிடம் ஏதும் பேசவில்லை. தாயும் ஒன்றும் கேட்கவில்லை. வேறு இரவிக்கையைப் போட்டுக்கொண்டாள். ‘என் பொன்னே! உன் பொல்லாத வேளை இப்படிப் புத்திகொடுத்ததடி கண்ணே’ என்று அழுதாள் வேதம். சாரதா படுக்கையில் சாய்ந்துவிட்டாள். தாயின் கரத்தைப் பற்றிக்கொண்டு, “அம்மா! நான் என்ன செய்வேன் நான் எதை அறிவேன், என் நிலை உனக்கு என்ன தெரியும்” என்று மெல்லிய குரலில் கூறினாள். தாய் தன் மகளைத் தொட்டுப் பார்த்துவிட்டு, “காலையில் ஜுரம் விட்டுவிடும், இப்போதே வியர்வை பிடிக்க ஆரம்பித்துவிட்டது” என்று கூறினாள்.

“என் ஜுரம் என்னைக் கொல்லாதா! பாவி நானேன் இனியும் உயிருடன் இருக்கவேண்டும். ஊரார் பழிக்க உற்றார் நகைக்க, கொண்டவர் கோபிக்க, பெற்றவர் கைவிட நான் ஏன் இன்னமும் இருக்கவேண்டும், ஐயோ! அம்மா! நான் மாரி கோவிலில் கண்ட நாள்முதல் அவரை மறக்கவில்லையே. எனக்கு அவர்தானே மணவாளான் என நான் என் மனத்தில் கொண்டேன். என்னை அவருக்கே நான் அன்றே அர்ப்பணம் செய்துவிட்டேனே. அவருக்குச் சொந்தமான உதட்டை நீங்கள் வேறொருவருக்கு விற்கத் துணிந்தீர்கள். அவர் கேட்டார் அவர் பொருளை. நான் தந்தேன். அவ்வளவுதான். உலகம் இதை உணராது. உலகம் பழிக்கத்தான் பழிக்கும். என்னைப் பெற்றதால் நீங்கள் என் இப்பாடுபடவேண்டும் அந்தோ மாரிமாயி, மகேஸ்வரி, நீ சக்தி வாய்ந்தவளாக இருந்தால் என்னை அழைத்துக்கொள். நான் உயிருடன் இரேன், இரேன், இரேன்”— என்று கூறி அழுதாள்.

நாட்கள் பல கடந்தன. வாரங்கள் உருண்டன. மாதங்களும் சென்றன. சாரதாவின் ஜுரம் போய்விட்டது. ஆனால் மனோ வியாதி நீங்கவில்லை. அவளைக் கணவன் வீட்டுக்கு அழைத்துக் கொள்ளவில்லை. பரந்தாமன் மனம் உடைந்து தொழிலைவிட்டு பரதேசியாகி ஊரூராகச் சுற்றினான். சாரதாவின் தாயார், தனது மருமகப்பிள்ளையைச் சரிப்படுத்த எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.

இந்நிலையிலே, சாரதாவைப்பற்றி ஊரிலே, பழித்தும் இழித்தும் பேசத் தொடங்கினார்கள். இதுவும் அவள் காதில் விழுந்தது. அவள் கவலை அதிகமாகிவிட்டது.

கடைசியில், காரியஸ்தன் கருப்பையாதான் கைகொடுத்து உதவினான். மெல்ல மெல்ல, மந்திரம் ஜெபிப்பதுபோல ஜெபித்து, “ஏதோ சிறுபிள்ளைத்தனத்தில் துடுக்குத்தனத்தில் நடந்துவிட்டது. இனி ஒன்றும் நடவாது. சாரதாவை அவள் வீட்டிலேயே விட்டு வைத்தால் ஊரார் ஒரு மாதிரியாகப் பேசுகிறார்கள்” என்று மெதுவாக சாரதாவின் புருஷனிடம் கூறினான். சாரதாவின் கணவன் உள்ளபடி வருந்தினான். வருத்தம்போக மருந்து தேடினான். அவனுக்கு அபின் தின்னும் பழக்கம் கற்றுக் கொடுக்கப்பட்டுவிட்டது! மாலையில் அபினைத் தின்றுவிட்டு, மயங்கி விழுந்துவிடுவான். இரவுக் காலத்தில் கவலையற்றுக் கிடக்க, அபினே அவனுக்கு உதவிற்று.

கருப்பையாவின் முயற்சி கொஞ்சம் கொஞ்சமாகப் பலிக்க ஆரம்பித்தது. ஊரில் திருவிழா வந்தது. திருவிழாக் காலத்தில் உறவினர்கள் வருவார்கள். அந்த நேரத்தில் சாரதா வீட்டில் இல்லாவிட்டால், கேலியாகப் பேசுவார்கள் என்று கூறினான். “ஆனால் நீயே போய் அவளை அழைத்து வா” என்று கூறினான். காரியஸ்தன் கருப்பையா, சாரதாவை அழைத்து வந்து வீட்டில் சேர்த்தான். சாரதாவும் மிக அடக்க ஒடுக்கமாகப் பணிவிடைகள் செய்துகொண்டு வந்தாள். புருஷனுக்கு மனைவி செய்ய வேண்டிய முறையில் துளியும் வழுவாது நடந்தாள்.

சாரதா வீடு புகுந்ததும் வீட்டிற்கே ஒரு புது ஜோதி வந்துவிட்டது. சமையல் வேலையிலே ஒரு புது ரகம். வீடு வெகுசுத்தம். தோட்டம் மிக அலங்காரமாக இருந்தது. மாடு கன்றுகள் நன்கு பராமரிக்கப்பட்டன. பண்டங்களைப் பாழாக்குவதோ, வீட்டு வேலையாட்களிடம் வீண் வம்பு வளர்ப்பதோ சாரதாவின் சுபாவத்திலேயே கிடையாது. சாரதாவின் நடவடிக்கையைக் கண்ட அவள் புருஷன், ‘இவ்வளவு நல்ல சுபாவமுள்ள பெண், அன்று ஏன் அவ்விதமான துடுக்குத்தனம் செய்தாள்? எவ்வளவு அடக்கம், எவ்வளவு பணிவு, நான் நின்றால் உட்காரமாட்டேனென்கிறாள். ஒரு குரல் கூப்பிட்டதும், ஓடோடி வருகிறாள். வீட்டுக் காரியமோ, மிக மிக ஒழுங்காகச் செய்கிறாள். இப்படிப்பட்டவள் அந்தப் பாவியின் துடுக்குத்தனத்தால் கெட்டாளே தவிர, இவள் சுபாவத்தில் நல்லவள்தான்’ என்று எண்ணினான்.

ஆனால் சாரதா வெறும் யந்திரமாகத்தான் இருந்தாள். வேலையை ஒழுங்காகச் செய்தாள். ஆனால் பற்றோ, பாசமோ இன்றி வாழ்ந்தாள். வாழ்க்கையில் அவளுக்கு இன்பம் என்பதே தோன்றவில்லை. புருஷனுக்கு அடங்கி நடப்பதுதான் மனைவியின் கடமை என்பதை உணர்ந்து அவ்விதம் நடந்தாளே தவிர, புருஷனிடம் அவளுக்கு அன்பு எழவில்லை. பயம் இருந்தது! மதிப்பு இருந்தது! கடமையில் கவலை இருந்தது! காதல் மட்டும் இல்லை! காதலைத்தான் அந்தக் கள்ளன் பரந்தாமன் கொள்ளைகொண்டு போய்விட்டானே! அவள் தனது இருதயத்தை ஒரு முத்தத்துக்காக அவனுக்குத் தத்தம் செய்துவிட்டாள்.

சிரித்து விளையாடி சிங்காரமாக வாழ்ந்த சாரதா போய்விட்டாள். இந்த சாரதா வேறு பயந்து வாழும் பாவை. இவள் உள்ளத்திலே காதல் இல்லை. எனவே வாழ்க்கையில் ரசம் இல்லை.

இதை இவள் கணவன் உணரவில்லை. எவ்வளவுக்கெவ்வளவு அடக்கமாக இருக்கிறாளோ அவ்வளவு அன்பு என்று எண்ணிக்கொண்டான். உலகில் இதுதானே பெரும்பாலும் பெண்கள் கடமை என்றும் புருஷனுக்கும் பெண்டுக்கும் இருக்க வேண்டிய அன்புமுறை என்றும் கருதப்பட்டு வருகிறது.

“பெண் மகா நல்லவள் உத்தமி. நாலுபேர் எதிரே வரமாட்டாள். நாத்தி மாமி எதிரே சிரிக்கமாட்டாள். சமையற்கட்டைவிட்டு வெளிவரமாட்டாள். புருஷனைக் கண்டால் அடக்கம். உள்ளே போய்விடுவாள். கண்டபடி பேசிக்கொண்டிருக்க மாட்டாள்” என்று பெண்ணின் பெருமையைப் பற்றி பேசப்படுவதுண்டு. அந்தப் பேதைகள், வாழ்க்கையில் ரசமற்ற சக்கைகளாக இருப்பதை உணருவதில்லை. வெறும் இதயந்திரங்களாக, குறிப்பிட்ட வேலைகளை, குறித்தபடி செய்து முடிக்கும், குடும்ப இயந்திரம் அந்தப் பெண்கள், ஆனால் காதல் வாழ்க்கைக்கு அதுவல்ல மார்க்கம்.

செடியில் மலர் சிங்காரமாக இருக்கிறது. அதனைப் பறித்துக் கசக்கினால் கெடும். வண்டு ஆனந்தமாக ரீங்காரம் செய்கிறது! அதனைப் பிடித்துப் பேழையிலிட்டால் கீதம் கிளம்பாது. கிளி கூண்டிலிருக்கும்போது, கொஞ்சுவதாகக் கூறுதல் நமது மயக்கமே தவிர வேறில்லை. கிள்ளை கொஞ்ச வேண்டுமானால் கோவைக் கனியுள்ள தோப்பிலே போய்க் காணவேண்டும். மழலைச் சொல் இன்பத்தை மற்றதில் காணமுடியாது. அதுபோன்ற இயற்கையாக எழும் காதல், தடைப்படுத்தப்படாமல், அதற்குச் சுவர் போடப்படாமல், அது தாண்டவமாடும்போது கண்டால் அதன் பெருமையைக் காண முடியுமே தவிர வேறுவிதத்தில் காண முடியாது.

நமது குடும்பப் பெண்களில் எவ்வளவோ பேர் தங்கள் மனவிகாரத்தை மாற்ற, முகத்தில் மஞ்சள் பூசி குங்குமமிட்டு வாழுகின்றனர். எத்தனை பெண்கள், வாழ்க்கையின் இன்பம் என்றால் சமையற்கட்டில் அதிகாரம் செலுத்துவதும் கட்டியலறையில் விளக்கேற்றுவதும் கலர் புடவை, கல்கத்தா வளையல், மங்களூர் குங்குமம், மயில் கழுத்து ஜாக்கெட் ஆகியவற்றைப் பற்றிப் புருஷனிடம் பேசுவதும் தொட்டிலாட்டுவதும்தான் என்று கருதிக்கொண்டு வாழுகின்றனர். ரசமில்லாத வாழ்க்கை, பாவம்!

அப்படிப்பட்ட வாழ்க்கைதான் சாரதாவுக்கு. புருஷனோ அபின் தின்று ஆனந்தமாக இருந்தான். இந்நிலையில்தான் காரியஸ்தான் கருப்பையாவுக்கு சாரதாவின்மீது கண் பாய்ந்தது. சாரதாவின் தற்கால வாழ்வுக்கு, தானே காரணமென்பது அவனுக்குத் தெரியும். அதுமட்டுமல்ல! சாரதாவைத் தன் வலையில் போடுவதும் சுலபமென எண்ணினான். நாளாவட்டத்தில், பேச்சிலும் நடத்தையிலும் தன் எண்ணத்தை சாரதாவுக்கு உணர்த்த ஆரம்பித்தான்.

தாகமில்லாத நேரத்திலும் ஒரு தம்ளர் தண்ணீர் வேண்டும் என்பான். ஓய்வு கிடைக்கும் நேரத்தில் வலியச் சென்று பேசுவான். விதவிதமான சேலை வகைகளைப் பற்றிப் பேசுவான். சாரதாவின் அழகை அவர்கள் புகழ்ந்தார்கள், இவர்கள் புகழ்ந்தார்கள் என்று கூறுவான்.

“உன் அழகைக்காண இரு கண்கள் போதாதோ” என்று பாடுவான். ராதாவைக் கண்டதும் ஒரு புன்சிரிப்பு.