உள்ளடக்கத்துக்குச் செல்

கபோதிபுரக்காதல்/பக்கம் 3-13

விக்கிமூலம் இலிருந்து


கபோதிபுரக் காதல்


ஜல் ஜல் ஜல! ஜல் ஜல் ஜல ஜல!

“உம்! கொஞ்சம் வேகமா நட. வேகற வெயில் வர்றதுக்குள்ளே ஊர் போவோம்...”

ஜல் ஜல், ஜல ஜல. ஜல் ஜல், ஜலஜல.

“சும்மா போகமாட்டாயே, நீ. உன் வாடிக்கையே அதுதானே, சவுக்கடி கொடுத்தால்தானே போவே உம்...”

“வேண்டாமப்பா, பாவம், வாயில்லாத பிராணி, வெயில் வேளை. போகட்டும் மெதுவா. அடிக்காதே” என்று வேதவல்லி சொன்னாள், மாட்டைச் சவுக்கால் சுரீல் என அடித்து வாலைப்பிடித்து ஒடித்து வண்டியை ஓட்டியவனைப் பார்த்து. மணி காலை பதினொன்று ஆகிறது. ஒரு சாலை ஓரமாக வண்டி போகிறது. வண்டியிலே இரு மாதர், தாயும் மகளும். தலைக்குட்டையும், சந்தனப் பொட்டும், பொடிமட்டையுடன் ஓர் ஆடவர், வேதவல்லியின் புருஷர், வீராசாமிபிள்ளை, ஆக மூவரும் செல்லுகின்றனர். வண்டிமாடு செவிலி நிறம் ஓட்டுகிற ஆளும் சிவப்பு. மீசை கருக்குவிட்டுக்கொண்டிருக்கிற பருவம். “என்னமோம்மா, நீங்க பாவ புண்ணியத்தைப் பாக்கறீங்க மாட்டை அடிச்சு ஓட்டாதேன்னு சொல்றீங்க. சில பேரே பார்க்கணுமே, என்னடா, மாடு நகருது, அடிச்சு ஓட்டேன். கொடுக்கிறது காசா, மண்ணா என்று கோபிப்பார்கள்” என்றான் வண்டிக்காரன்.

“செலபேரு அப்படித்தான். ஓட்டமும் நடையுமா போனாகூட, பன்னிரெண்டு மணிக்குள்ளே போயிடலாமே மாரிக்குப்பத்துக்கு. உச்சி வேளை பூஜைக்குப் போய்ச் சேர்ந்துடலாமே” என்று வேதவல்லி கூறினாள்.

”அதுக்குள்ளே பேஷா போகலாம். அடிச்சி ஓட்டினா அரை மணியிலே போகலாம். எதுவும் அப்படித்தான். அடிச்சி ஓட்டாத மாடும், படிச்சி வழிக்கு வராத பிள்ளையும் எதுக்கு உதவப் போவுது. என் சேதியைக் கேட்டா சிரிசிரின்னு சிரிப்பீங்கோ, நான் படிச்சதும் பிழைச்சதும் அப்படி” என்றான் வண்டி ஓட்டி.

“நீ படிக்கவேயில்லையாப்பா” என்று கேட்டாள் வேதவல்லி. படிச்சேன், ஆறாவது வரையிலே. அதுக்கு மேலே, ஆட்டமெல்லாம் ஆடினேன். இப்போ மாட்டுவண்டி ஓட்டற வேலைதான் கிடைச்சுது. அதுவும் நம்ம சிநேகிதர் ஒருவர் காட்டினார் இந்தப் பிழைப்பையாவாது. உம்! எல்லாம் இப்படித்தான். அந்தச் சினிமாவிலேகூட பாடறாங்களே, ”நாடகமே உலகம், நாளை...’ என்று மெல்லிய குரலிலே, பாடலைப் பாடினான் பரந்தாமன் – அதுதான் அவன் பெயர். நாடகமே உலகத்திலிருந்து... மாயப்பிரபஞ்சத்துக்கு” வந்தான். அதிலிருந்து “ராதே உனக்குக் கோபம் ஆகாதடி” ஆரம்பித்தான். வீராசாமிபிள்ளை கணைத்தார். “தம்பி பாட்டு பிறகு நடக்கட்டும். ஓட்டு வண்டியை” என்றார். வேதவல்லி, “சாரதா! சாரதா! என்னம்மா மயக்கமா இருக்கா” என்று தன் மகளைக் கேட்டாள்.

கொஞ்ச நேரம் சென்றதும் வண்டிக்குள்ளே நோக்கினான். சாரதா, வேதவல்லியின் தோள்மீது சோர்ந்து படுத்துக்கொண்டிருந்தாள். ஒருமுறை அவளைக் கண்டான், ஓராயிரந் தடவை ‘ராதே உனக்குக் கோபம் ஆகாதடி’ என்று பாடலாமா என்று தோன்றிற்று. பரந்தாமன் உள்ளத்தை அந்தப் பாவை கொள்ளைகொண்டாள். கண்கள் மூடித்தான் இருந்தன; ஆனாலும் அதிலும் ஒரு வசீகரம் இருந்தது. காற்றினால் சீவி விடப்பட்டிருந்த கூந்தல் சற்றுக் கலைந்து நெற்றியில் அங்குமிங்குமாக அலைந்தது. கறுப்புப் பொட்டு அந்தச் சிவப்புச் சிங்காரியின் நெற்றியிலே வியர்வையில் குழைந்து ஒருபுறம் ஒழுகிவிட்டது. ஆனால், அதுவும் ஒரு தனி அழகாகத்தான் இருந்தது. “மாதே உனக்குச் சோகம் ஆகாதடி” என்று பாட எண்ணினான். சோகித்துச் சாய்ந்திருந்த அந்தச் சொர்ண ரூபியை நோக்கி, ஆஹா! நான் வண்டியை ஓட்டுபவனாகவன்றோ இருக்கிறேன். எனக்கு இவள் கிட்டுவாளா? என்று எண்ணினான். ஏங்கினான். மாடு தள்ளாடி நடந்தது. பரந்தாமனுக்கு அதைத் தட்டி ஓட்ட முடியவில்லை. இஷ்டங்கூட இல்லை. அந்த ரமணி எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக வண்டியில் இருக்கிறாளோ, அவ்வளவு ஆனந்தம். வண்டியோட்டுகிற வேளையிலும் இப்படிப்பட்ட சம்பவம் இருக்கிறதல்லவா, என்றுகூட எண்ணினான்.

ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஆறாவது மைலில் மாரிக்குப்பம். அங்கு ஆடி வெள்ளிக்கிழமையிலே குறி சொல்வதும் பிசாசு ஓட்டுவதும் குளிச்சம் கட்டுவதும் முழுக்கு போடுவதும் வழக்கம். சுற்றுப் பக்கத்து ஊரிலிருந்து திரளான கூட்டம் வரும். மாரிக்குப்பம் கோவில் பூசாரி மாடி வீடு கட்டியதும் அவன் மகன் மதராசிலே மளிகைக் கடை வைத்ததும் அந்த மகமாயி தயவாலேதான். எத்தனையோ ஆயிரம் குளிச்சம் கட்டியிருப்பான் பூசாரி. அவனைத் தேடி எத்தனையோ ஆயிரம் பேர் வந்திருப்பார்கள். எவ்வளவோ பேரைப் பார்த்தவன். எத்தனையோ பிசாசை ஓட்டினவன். அந்தப் பேர்வழியைக் காணவும் சாரதாவுக்கு அடிக்கடி வருகிற சோகம், ஏதாவது “காத்து சேஷ்டையாக” இருக்கலாம். அதுபோக ஒரு குளிச்சம் வாங்கிப் போகலாமென்றும்தான் ஐம்பது, அறுபது மைல் தாண்டி அழகாபுரியைவிட்டு வீராசாமிபிள்ளை மனைவியையும் மகளையும் அழைத்துக்கொண்டு வந்தார். ஆவணியிலே சாரதாவுக்குக் கலியாணம் நிச்சயமாகிவிட்டது. நல்ல பெரிய இடத்திலே ஏற்பாடு. நூறு வேலிக்கு நிலம். ஆடும் மாடும் ஆளும் அம்பும் வண்டியும் அதிகம். அந்த அழகாபுரிக்கே அவர்தான் ஜமீன்தார்போல. வயது கொஞ்சம் அதிகந்தான். அறுபது என்று சொல்லுவார்கள். ஆனால் அவர் நினைப்பு முப்பத்தைந்திலிருந்து நாற்பதுக்குள்தான். ஆள் நல்ல உயரம், பருமன், மீசை மயில்ராவணனுக்குப் படத்திலே இருப்பதுபோல ஆசாமி பேசினால் இடிஇடித்த மாதிரிதான். அழகாபுரியிலே மாரியப்பபிள்ளை என்றால் போதும். கிடுகிடுவென நடுங்குவார்கள்.

அவருக்கு மூன்றாந்தாரமாக, சாரதா ஏற்படாகிவிட்டது. சாரதாவுக்கு வயது பதினாறுகூட நிரம்பவில்லை. அவள் அழகு, அழகாபுரிக்கே அழகு செய்தது. நல்ல பஞ்சவர்ணக்கிளி என்றாலும் சோலையில் பறக்கவிடுகிறார்களா? தங்கக் கூண்டிலே போட்டுத்தானே அத்துடன் கொஞ்சுவார்கள். அதைப்போலத்தான் சாரதாவுக்கு, மாரியப்பபிள்ளை கூண்டு. அவருடைய பணம் பேசுமே தவிர வயதா பேசும்? அதிலும் வீரசாமிபிள்ளை வறட்சிக்கார ஆசாமி. கடன் பட்டுப்பட்டுக் கெட்டவர். இந்தச் சம்பந்தத்தினால்தான் ஏதாவது கொஞ்சம் தலையெடுக்க முடியும். வேதவல்லிக்குக் கொஞ்சம் கசப்புதான். இருந்தாலும் என்ன செய்வது? சாரதாவுக்குத் தெரியும் தனக்குப் பெற்றோர்கள் செய்கிற விபரீத ஏற்பாடு. அதனை எண்ணியெண்ணி ஏங்கினாள், வாடினாள், மாரியப்பபிள்ளையை மனத்தாலே நினைத்தாலே பயமாக இருந்தது அவளுக்கு. எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணியதால் உடல் இளைக்கலாயிற்று. ‘ஐயோ! அந்த ஆர்ப்பாட்டக்காரக் கிழவனுக்கு வாழ்க்கைப்பட்டு நான் எக்கதியாவது?’ என்று எண்ணி நடுங்கினாள் அந்தப் பெண். தனது குடும்பத்திலுள்ள கஷ்டமும், அந்தக் கஷ்டத்தைப் போக்கிக் கொள்ளவே, தன்னை – கிளியை வளர்த்து பூனையிடம் தருவதுபோல, மாரியப்ப பிள்ளைக்கு மணம் செய்து கொடுக்கத் துணிந்ததும் அவளுக்குத் தெரியும். தனது குடும்ப கஷ்டத்தைப் போக்க வேண்டுமென்பதிலே சாரதாவுக்குத் திருப்திதான். ஆனால். கிழவனுக்குப் பெண்டாக வேண்டுமே என்றெண்ணும்போது, குடும்பமாவது பாழாவது. எங்கேனும் ஒரு குளத்தில் விழுந்து சாகலாமே என்று தோன்றும். இது இயற்கையல்லவா!

இப்படிப்பட்ட பொருத்தமில்லாத ஜோடிகளைச் சேர்ப்பதற்காக யார் என்ன செய்கிறார்? ஊரார் கேலியாகப் பேசிக்கொள்வார்களே யெழிய, இவ்விதமான வகையற்ற காரியம் நடக்கவொட்டாது தடுக்கவா போகிறார்கள். கல்லென்றாலும் கணவன், புல்லென்றாலும் புருஷன் என்று பழமொழி இருக்க, கல்லோ புல்லோ அல்லாத மாரியப்பபிள்ளைகள் சாரதாவை மணமுடித்துக்கொடுக்க இருப்பார்களோ!

அதிலும் மாரியப்ப பிள்ளை ஓர் ஏழையாக இருந்தால் “கிழவனுக்கு எவ்வளவு கிறுக்கு பார்தீர்களா! காடு வாவா என்கிறது. வீடு போபோ என்கிறது, கிழவன் சரியான சிறுகுட்டி வேண்டுமென்று அலைகிறானே. காலம் கலிகாலமல்லவா” என்று கேலி செய்வார்கள். மாரியப்பபிள்ளையோ பணக்காரர். எனவே அந்த ரமணி, சாரதா, சமூகத்தில் வளர்த்துவிடப்பட்ட பழக்கத்துக்குத் தனது அழகையும் இளமையையும் பலிகொடுக்கப் போகிறார். இவ்விதம் அழிந்த ‘அழகுகள்’ எவ்வளவு! தேய்ந்த இளமை எத்துணை!!

சாரதாவுக்குப் பிசாசு பிடித்துக்கொண்டது என்று அவளின் பெற்றோர் எண்ணினார்கள். அவளுக்கா பிசாசு பிடித்தது? அல்ல! அல்ல! மாரியப்பபிள்ளை பிடித்துக்கொள்ளப் போகிறாரே என்ற பயம் பிடித்துக்கொண்டது. பாவை அதனாலேயே பாகாய் உருகினாள். அதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். அவள் புரட்சிப் பெண்ணல்ல! புத்துலக மங்கையல்ல!

மாரிகோவிலுக்கு மாட்டுவண்டி வந்து சேர்ந்தது. அம்மன் தரிசனமாயிற்று. அந்தப் பூசாரி, ஏதோ மந்திரம் செய்தான். மடித்துக் கொடுத்தான் மாரி பிரசாதத்தை. வாரத்திற்கொருமுறை முழுக்கு, ஒரு வேளை உணவு, ஒரு நாளைக்கு ஒன்பது முறை அரசமரம் சுற்றுவது என்று ஏதேதோ ‘நிபந்தனை’ போட்டான். கோவிலில் விற்ற ‘சோற்றை’த் தின்றார்கள். மிச்சம் கொஞ்சம் இருந்தது. “பாபம்! வண்டிக்காரப் பிள்ளையாண்டானுக்குப் போடலாமே” என்றாள் வேதவல்லி. “ஆமாம், பாபம்” என்றாள் சாரதா.

ஒவ்வோர் உருண்டையாக உருட்டி வண்டியோட்டும் பிள்ளையாண்டான் கையிலே சாரதா கொடுத்தாள். அந்த நேரத்திலே அவள் தந்தை வெகுசுவாரசியமாகப் பூசாரியுடன் பேசிக்கொண்டிருந்ததால், அதுவும் நடக்க முடிந்தது. அவர் மட்டும் அதைப் பார்த்திருந்தால், ஒரு முறைப்பு. ஒரே கனைப்பு. உடனே சாரதா நடுநடுங்கிப் போயிருப்பாள்.

சாரதா, வண்டியோட்டிக்குச் சோறு போட்டதாக அவன் கருதவில்லை. அமிருதம் கொடுத்தாள் என்றே கருதினான். அந்த மங்கையின் கையால் கிடைத்த உணவு, அவனுக்கு அவ்வளவு இன்பமாக இருந்தது. அவளும் அவனுக்கு வெறும் சாதத்தைப் போடவில்லை ஒவ்வொரு பிடியிலும் தனது காதல் ரசத்தைக் கலந்து பிசைந்து தந்தாள். இவரைப் போன்றன்றோ என் புருஷன் இருக்கவேண்டும் என்று எண்ணினாள். அந்த எண்ணம் திடீரெனத் தோன்றியதால் துணிவும் ஏற்பட்டது அந்தத் தையலுக்கு. எனவே, அவனுக்குச் சாதம் போட்டுக்கொண்டே புன்சிரிப்பாக அவனைப் பார்த்துச் சிரித்தாள். பூந்தோட்டத்தின் வாடை போல அந்தப் புன்சிரிப்பு பரவிற்று. வாலிபன் நாடி அத்தனையிலும் அது புகுந்தது. இந்தக் காதல் காட்சியைக் கடைக்கண்ணால் கண்டாள் வேதவல்லி. பெருமூச்சுவிட்டாள்.

மாரி பிரசாதம் பெற்றாள் சாரதா, இனி நோய் நீங்குமென வீராசாமிபிள்ளை எண்ணினார். சாரதா முன்போல் முகத்தைச் சுளித்துக்கொள்ளாமல், சற்றுச் சிரித்தமுகமாக இருப்பதைக் கண்டு, வீராசாமிபிள்ளை தம் மனைவி வேதவல்லியை அருகேயழைத்து, “வேதம்! பார்த்தாயா பெண்ணை. பூசாரி போட்ட மந்திரம் வேலை செய்கிறது. முகத்திலே தெளிவு வந்துவிட்டது பார்” என்று கூறினார். வேதவல்லிக்குத் தெரியும், சாரதாவின் களிப்புக்குக் காரணம் பூசாரியுமல்ல, அவன் மந்திரமுமல்ல, ஆனால் புதிதாகத் தோன்றிய பரந்தாமனும் அவன் ஊட்டிய காதலும் பெண்ணின் உள்ளத்திலே ஆனந்தத்தைக் கிளப்பிவிட்டதென்பது.

மறுபடி அவர்கள், அதே வண்டியிலேறி இரயிலடிக்கு வந்தனர். வண்டியோட்டியிடம் கூறிவிட்டு, இரயிலேறும் சமயம், வேதவல்லி, பரந்தாமனைப் பார்த்து, “ஏன் தம்பீ. எங்க ஊருக்கு வாயேன் ஒரு தடவை” என்று அழைத்தாள், சாரதா வாயால் அழைக்கவில்லை. கண்ணால் கூப்பிட்டாள். வேதவல்லி வாயால் கூப்பிட்டது, பரந்தாமன் செவியில் விழவில்லை. சாரதாவின் கண்மொழி, அவனுடைய நரம்பு அத்தனையிலும் புகுந்து குடைந்தது. “மாடாவது வண்டியாவது, மாரிக்குப்பமாவது, பேசாமல் சாரதாவைப் பின்தொடர்ந்து போகவேண்டியதுதான் என்று நினைத்தான். “எனைக்கணம் பிரிய மனம் வந்ததோ, நீ எங்குச் சென்றாலும் உன்னை விடுவேனோ, ராதே” என்ற பாட்டை எண்ணினான்.

மணி அடித்து விட்டார்கள்! வீராசாமிப் பிள்ளை களைத்து விட்டார். வேதவல்லி உட்கார்ந்தாகிவிட்டது. சாரதாவின் கண்கள், பரந்தாமனைவிட்டு அகலவில்லை. பரந்தாமன் பதுமைபோல நின்றான்.

வண்டி அசைந்தது. சாரதாவின் தலையும் கொஞ்சம் அசைந்தது. அவளுடைய செந்நிற அதரங்கள் சற்று அசைந்தன. அலங்காரப் பற்கள் சற்று வெளிவந்தன அவளையும் அறியாமல். புருவம் வளைந்தது. கண் பார்வையிலே ஒருவிதமான புது ஒளி காணப்பட்டது. வண்டி சற்று ஓட ஆரம்பித்தது. பரந்தாமனின் கண்களில் நீர் ததும்பிற்று. வண்டி இரயிலடியைவிட்டுச் சென்றுவிட்டது. பரந்தாமன் கன்னத்தில் இரு துளி கண்ணீர் புரண்டு வந்தது. நேரே வண்டிக்குச் சென்றான். வைக்கோல் மெத்தைமீது படுத்தான், புரண்டான். சாரதாவை நான் ஏன் கண்டேன்? என்று கலங்குவது ஏன், என்று மனத்தைத் தேற்றினான்.

சாரதா, நீ ஏன் அவ்வளவு அழகாக இருக்கிறாய்! என் கண்களை ஏன் கவர்ந்துவிட்டாய்; அழகி, என் மனத்தைக் கொள்ளை கொண்டாயே, என்னைப் பார்த்ததோடு விட்டாயா? எனக்கு ‘அமிர்தம்’ அளித்தாயே. இரயில் புறப்படும்போது என்னைக் கண்டு சிரித்தாயே. போய்வருகிறேன் என்று தலையை அசைத்து ஜாடை செய்தாயே. நீ யார்? ஏன் இங்கு வந்தாய்? வண்டியோட்டும் எனக்கு ஏன் நீ எதை எதையோ எண்ணும்படிச் செய்துவிட்டாய். சாரதா உன்னை நான் அடையத்தான் முடியுமா? எண்ணத்தான் படுமோ?—என்று எண்ணினான். இரண்டு நாட்கள் பரந்தாமனுக்கு வேறு கவனமே இருப்பதில்லை. எங்கும் சாரதா! எல்லாம் சாரதா! எந்தச் சமயத்திலும் சாரதாவின் நினைப்புதான்! இளைஞன் படாதபாடுபட்டான். பஞ்சில் நெருப்பெனக் காதல் மனத்தில் புகுந்து அவனை வாட்ட ஆரம்பித்துவிட்டது. அதிலும் கைகூடும் காதலா? வண்டியோட்டும் பரந்தாமன், அழகாபுரி முதலாளி மாரியப்பபிள்ளைக்கு வாழ்க்கைப்பட இருக்கும் சாரதாவை அடைய முடியுமா!

அழகாபுரி வந்து சேர்ந்த அழகிக்கு, பரந்தாமன் நினைப்பு தான்! பரந்தாமனின் வாட்டம் சாரதாவுக்கு வராமற் போகவில்லை. சாரதாவின் கவலை பரந்தாமனைவிட அதிகம். பரந்தாமனுக்கேனும் சாரதா கிடைக்கவில்லையே இன்பம் வராதே – என்ற கவலை மட்டுமேயுண்டு, சாரதாவுக்கு இரு கவலை. பரந்தாமனைப் பெறமுடியாதே – இன்ப வாழ்வு இல்லையே என்பது ஒன்று. மற்றொன்று மாரியப்பபிள்ளையை மணக்க வேண்டுமே துன்பத்துக்கு அடிமைப்பட வேண்டுமேயென்பது. எனவே, சாரதாவின் ‘சோகம்’ குறையவில்லை அதிகரித்தது.

மாரியப்பபிள்ளைக்கு ஆத்திரம் அதிகமாகிவிட்டது. ஆச்சு! ஆவணி பிறக்கப்போகிறது! இந்தப் பெண் ‘சோகம்’, ‘சோகம்’ என்று படுத்தபடி இருக்கிறாள். “இவள் சோகம் எப்போது போவது? என் மோகம் எப்போ தணிவது” என்று கோபித்துக்கொண்டார்.

“அழகான பெண்ணாக இருக்கிறாளே என்று பார்த்தால் இப்படி ‘சீக்’ பேர்வழியாக இருக்கிறாள். உடல்கட்டை மட்டும் கவனித்தால், உருட்டி எடுத்த கிழங்குகள்போல் இருக்கின்றன” என்று கவலைப்பட்டார். சாரதாவுக்கு வைத்தியத்தின்மேல் வைத்தியம். ஒரு மந்திரவாதி உபயோகமில்லை என்று தெரிந்ததும், மற்றொரு மந்திரவாதி என்று சிகிச்சை நடந்து வந்தது. ஆனால் அவளுடைய மனநோய் மாறினால்தானே சுகப்படும்.

வீராசாமிபிள்ளைக்கு விசாரம்! வேதவல்லிக்கு விஷயம் வெளியே சொல்ல முடியாது. ஒருநாள் மெதுவாக சாரதாவிடம் மாரியப்பபிள்ளையை மணந்துகொண்டால் படிப்படியாக நோய் குறைந்துவிடும் என்று கூறி னாள். “யார் நோய் குறையுமம்மா! அப்பாவுக்குள்ள பணநோய் குறையும் அந்தக் கிழவனுக்கு ஆத்திரம் குறையும்” என்று அலறிச் சொன்னாள் ராதா. பிறகு அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது தனக்கு எங்கிருந்து இவவ்ளவு தைரியம் வந்தது என்று. நோய் தானாகப் போகும் கலியாணத்துக்கு நாள் குறிப்பிட வேண்டியதுதான் என்று மாரியப்பபிள்ளை கூறிவிட்டார். நாள் வைத்துவிட்டார்கள். கலியாண நோட்டீசுகள் அச்சடிக்கப்பட்டு, உறவினருக்கும் தெரிந்தவர்களுக்கும் அனுப்பப்பட்டன. இரண்டே நாட்கள்தான் இருக்கின்றன கலியாணத்துக்கு. அந்த நேரத்தில்தான் மாரியப்பபிள்ளைக்கு, தனது பேரனுக்கு அழைப்பு அனுப்புவதா, வேண்டாமா என்ற யோசனை வந்தது. ஆகவே, தமது காரியஸ்தர் கருப்பையாவை அழைத்துக் கேட்டார்.

“ஏ! கருப்பையா! அந்தப் பயலுக்குக் கலியாணப் பத்திரிகை அனுப்பலாமா, வேண்டாமா?”

“யாருக்கு எஜமான்?” என்றான் கருப்பையா.

“அதாண்டா அந்தத் தறுதலை, பரந்தாமனுக்கு” என்றார் மாரியப்பிள்ளை.

“ஒண்ணு அனுப்பித்தான் வைக்கிறது. வரட்டுமே” என்று யோசனை சொன்னான் காரியஸ்தன்.

இந்தச் சம்பாஷணைகளைக் கேட்டுக் கொண்டிருந்த வீராசாமிபிள்ளை, மேற்கொண்டு விசாரிக்கலானார். அப்போது சொன்னார் மாரியப்பபிள்ளை தனது பூர்வோத்திரத்தை.

“எனக்கு 15 வயதிலேயே, கலியாணம் ஆகிவிட்டது. மறு வருஷமே ஒரு பெண் பிறந்தது. ஐந்து, ஆறு வருஷத்துக்கெல்லாம் என்முதல் தாரம் என்னிடம் சண்டை போட்டுவிட்டு குழந்தையுடன் தாய்வீடு போனாள். நான் வேறே கலியாணம் செய்துகொண்டேன். என் பெண் பெரியவளானாள். அவளுக்கு 12 வயதிலேயே கலியாணமாயிற்று. நான் அதற்குப் போகவேயில்லை. அவர்களும் அழைக்கவில்லை. அந்தப் பெண் மறுவருஷமே ஒரு பிள்ளையைப் பெற்று ஜன்னி கண்டு செத்தாள். அந்தப் பயல் எப்படியோ வளர்ந்தான். அவளும் செத்தாள். கோர்ட்டில் ஜீவனாம்சம் போட்டார்கள். அவர்களால் வழக்காட முடியுமா? என்னிடம் நடக்குமா? ஏதோ கொஞ்சம் பணம் கொடுத்து விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கிவிட்டேன். இப்போது, அவன், அந்த ஊரிலே ஏதோ கடை வைத்துக் கொண்டிருக்கிறான் என்று கேள்வி” என்று கூறிவிட்டு மாரியப்பபிள்ளை “கருப்பையா பையனுக்கு இப்போ என்ன வயதிருக்கும்” என்று கேட்டார். “ஏறக்குறைய இருபதாவது இருக்கும்” என்று வீராசாமிப்பிள்ளை பதில் கூறினார்.

“உங்களுக்கெப்படித் தெரியும்?” என்றார் மாரியப்பபிள்ளை. “அந்தப் பிள்ளையாண்டான் மாரிக்குப்பத்துக்கு நாங்கள் போனபோது வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தான்” என்றார் வீராசாமிப்பிள்ளை. பிறகு வேறு விஷயங்களைப் பேசிவிட்டு, வீராசாமிபிள்ளை வீடு வந்தார். வேதவல்லியைத் தனியே அழைத்து விஷயத்தைச் சொன்னார். “ராதா காதில் விழுந்தால் அவள் ஒரே பிடிவாதம் செய்வாள் கல்யாணத்துக்கு ஒப்பவேமாட்டாள்; சொல்லவேண்டாம்.’ என்று வேதவல்லி யோசனை கூறினாள். எனவே ராதாவுக்கு தான் மணக்கப்போவது தன் காதலனின் தாத்தா என்பது தெரியாது. விசாரத்துடன் மாரிகுப்பத்துக்கும் இரயில்வே ஸ்டேஷனுக்கும் இடையே வண்டியோட்டிக்கொண்டு வாழ்ந்து வந்த பரந்தாமனுக்கும் தெரியாது, தன் காதலி ராதா தனக்குப் பாட்டி ஆகப்போகிறாள் என்பது! காதலியே தனக்குப் பாட்டி ஆனாள் என்பது தெரிந்தால் அவன் மனம் என்ன பாடுபடும்!