உள்ளடக்கத்துக்குச் செல்

கபோதிபுரக்காதல்/பக்கம் 54-63

விக்கிமூலம் இலிருந்து


“ஓ! கோகிலா, வாயேன் உள்ளே” என்று கூறினான். கோகிலம் வருவதைப் போல பாசாங்கு செய்துகொண்டே.

முரட்டுக் கருப்பையா சரெலெனத் திரும்பினான். கதவுப்பக்கம். வேலன் புலிபோல அவன்மீது பாய்ந்து மடியில் இருந்த ஈட்டியைப் பிடுங்கிக்கொண்டான்.

சட்டை கிழிந்துவிட்டது. கருப்பையாவுக்கு. தான் முட்டாள்தனமாக நடந்துகொண்டதை எண்ணினான்.

வேலன் இளித்தான். “கருப்பையா நான் சொல்வதைக் கேள். என்னிடம் உன் முரட்டுத்தனம் பலிக்காது. மூடு கதவை. இப்படி உட்கார்” என்று கட்டளையிட்டான்.

பெட்டியிலிட்ட பாம்பென அடங்கிய கருப்பையா மிகப் பரிதாபத்துடன், “ஐயா என்னைப் பற்றிக்கூட கவலையில்லை. அந்தப் பெண்ணின் மானம் அதைக் காப்பாற்றும். அவசரப்பட்டு எதுவும் செய்யவேண்டாம்” என்று கெஞ்சினான்.

“கருப்பையா, நான் அவசரப்படுகிற வழக்கமே கிடையாது. தோட்டத்தில் உங்கள் சல்லாபத்தைக் காண எவ்வளவு நேரம் பொறுமையாக இருந்தேன் தெரியுமா, இன்றுந்தான் என்ன, ஈட்டிமுனைக்கு எதிரில்கூட நான் அவசரப்படவில்லை” என்றான் வேலன்.

“அந்தப் போட்டோ, அதனைக் கொடுத்துவிடு. உனக்குக் கோடி புண்ணியம் உண்டு. உன் பிள்ளை குட்டிகளுக்கும் புண்ணியம். ஒரு குடும்பத்தைக் கெடுக்காதே” என்று கருப்பையா வேண்டினான். “உளராதே கருப்பையா குடும்பத்தை நானா கெடுத்தேன்” என்று கோபித்தான் வேலன்.

கருப்பையா, வேலன் காலில் விழுந்தான். வேலன், “சரி சரி சர்வமங்களம் உண்டாகட்டும். எழுந்திரு. நான் சொல்வதைக் கேள். முடியாது என்று சொல்லக் கூடாது. நாளை காலைக்குள் எனக்கு ஆயிரம் ரூபாய் வேண்டும். கொடுத்தால் நாங்கள் போய் விடுகிறோம். இல்லையேல் நீயும் ராதாவும் போகவேண்டிய இடத்துக்குப் போகத்தான் வேண்டும் என்றான் வேலன்.

“ஆயிரம் ரூபாயா... என்னிடம் இருப்பதே கொஞ்சந்தானே” என்றான் கருப்பையா.

“கிடைத்தற்கரிய செல்வத்தைப் பெற்ற நீயா ஓர் ஆயிரம் ரூபாய்க்கு அஞ்சுவது?” என்றான் வேலன்.

சரி என ஒப்புக்கொண்டான் கருப்பையா. ஆனால் ஆயிரம் ரூபாய் தந்ததும் போட்டோவை (நெகட்டிவுடன்) தன்னிடம் தந்துவிட வேண்டுமெனப் பேரம் பேசினான்.

“அது முடியாது ஆயிரம் ரூபாய் நான் வெளியே போவதற்கு, படத்தை நான் வெளியிடாதிருப்பதற்கு, மாதா மாதம் 200 ரூபாய், தவறாமல் என் சென்னை விலாசத்துக்கு அனுப்பிக்கொண்டு வரவேண்டும். நான் கண்டிப்பான பேர்வழி. ஒரு முறை பணம் வருவது தவறினாலும் படம் வெளியாகும். படம் வெளிவந்தால் என்ன ஆகும் என்பது உனக்கே தெரியும். சாரதா கர்ப்பவதியல்லவா! அவள் பிள்ளை தெருவில் அலைய வேண்டித்தான் வரும்” என்று வேலன் “கண்டிஷன்கள்” போட்டான்.

“ஐயா உனக்குக் கருணை இல்லையா?” என்று கெஞ்சினான் கருப்பையா.

“கருணை இருந்தது சில வருஷங்களுக்கு முன்பு. இப்போது கருணை இல்லை. இப்போது உலகமும் உல்லாசமும் எதிரே இருக்கிறது” என்றான் அந்த உல்லாசக் கள்ளன்.

வேறு வழியின்றிக் கருப்பையா ஒப்புக்கொண்டான்.

மறுதினம் ஆயிரம் ரூபாய், (பாங்கியில் அவன் போட்டு வைத்திருந்த பணம் அதுதான்) கொடுத்தான்.

உல்லாசக் கள்ளர்கள், வீட்டில் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு, ஊருக்குப் பிரயாணமாயினர்.

வேலனோ, கோகிலமோ, பேச்சிலோ, நடவடிக்கையிலோ, ராதா - கருப்பையா மர்மக்காதலைப் பற்றிக் கண்டுகொண்டதாக, ராதாவின் புருடனுக்குக் காட்டிக் கொள்ளவேயில்லை.

“கண்ணே ராதா, போய் வரட்டுமா, ஆண் குழந்தை பிறந்தால் பிரபாகரன் என்று பெயரிடு, பெண் பிறந்தா, கவனமிருக்குமா” என்று கொஞ்சினாள் கோகிலம் ராதாவிடம்.

ராதாவின் புருடன், விருந்தாளிகளை மிக மரியாதையுடன் அனுப்பி வைத்தார். அபின் உலகில் அலையும் அவருக்கு மர்ம சம்பவங்கள் என்ன தெரியும் பாவம்!

கருப்பையாவுக்கும் சாரதாவுக்கும் மாதா மாதாம் 200 ரூபாய் சேகரிப்பது தவிர வேறு வேலை கிடையாது.

கருப்பையா ஓய்ந்த வேளையில் எல்லாம், எந்தக் கணக்கை எப்படி மாற்றுவது எப்படிச் சூது செய்வது என்ற யோசனையிலேயே இருந்தான்.

வீட்டில் தன் புருஷனின் பரம்பரைச் சொத்துகளைக் கொஞ்சங் கொஞ்சமாகக் கணவனுக்குத் தெரியாமல் திருடித் திருடிக் கருப்பையாவிடம் தந்து வந்தாள் சாரதா.

செக்கு இழுத்து இழுத்து மாடு கெட, எண்ணெயைத் தடவித் தடவிப் பிறர் மினுக்குவதைப் போல சாரதாவும் கருப்பையாவும் பாடுபட்டு, திருடி, சூது, சூழ்ச்சி செய்து பணம் சேர்த்துச் சேர்த்து அனுப்ப அதனை வைத்துக்கொண்டு ஆனந்தமாக விஸ்கியும் பிராந்தியும் வாங்கிக் குடித்துச் சிரித்தான் சிங்காரவேலன்.

“இப்படியும் எனக்குத் தொல்லை வருமா, நீ செய்த வேலைதானே. பாவி உன்னால்தானே நான் இப்பாடுபடுகிறேன். திருடுகிறேன். அவர் என்றைக்கேனும் கண்டுவிட்டால், எங்கே பச்சைக்கல் பதக்கம், எங்கே கழுத்துக் கண்டி என்று கேட்க ஆரம்பித்தால், நான் என்ன செய்வேன்” என்று சிந்தை நொந்து கருப்பையாவைக் கேட்பாள். அவன் பலமுறை சாதகமாகவே பதில் கூறினான். சஞ்சலமும் சலிப்பும் அவனுக்கும் ஆத்திரத்தை மூட்டிவிடுமல்லவா? “சரி! என்னைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். அவன் படத்தைக் காட்டிவிடட்டும். நான் ஒன்றும் சந்நியாசி அல்ல! உனக்குத்தான் ஆபத்து. ஓட வேண்டியதுதான் நீ வீட்டை விட்டு” என்று மிரட்டினான்.

“படுபாவி! என்னைக் கெடுத்ததுமின்றி, மிரட்டியுமா பார்க்கிறாய். நீ நாசமாய்ப் போக, உன் குடிமுழுக” என்று சாரதா தூற்றினாள். ஆனால், மாதம் முடிகிறது என்றதும், இருவரும் தகராறுகளை விட்டுவிட்டு, பணத்தைச் சேர்த்து அனுப்புவதிலே அக்கறையாக இருப்பார்கள். ஏன்! வயிற்றுலுள்ள குழந்தை வாழ்க்கையில் இழிசொல்லோடு இருக்கக் கூடாதே! அதற்குத்தான்!

“பாவி, படத்தைக் காட்டி, என் முரட்டுக் கணவன் என்னைத் துரத்திவிட்டால், என் குழந்தையின் கதி என்னவாகும்? கண்டவர் ஏசுவார்களே, அதோ அந்தப் பிள்ளை, வீட்டை விட்டு ஓடிவிட்டாளே சாரதா, அவள் பிள்ளை” என்றுதானே தூற்றுவார்கள்.

நான் செய்த குற்றம், என் குழந்தையின் வாழ்க்கையைக் கெடுக்குமே என்று எண்ணும்போது சாரதாவின் நெஞ்சு ‘பகீர்’ என்றாகும். மாதங்கள் ஆறு பறந்தன. மாதம் தவறாது பணம் போய்ச் சேர்ந்தது. ஓர் ஆண் குழந்தையும் சாரதாவுக்குப் பிறந்தது. கருப்பையாவின் கணக்குப் புரட்டுகளும் சாரதாவின் திருட்டுகளும் அதிகரித்தன. இருவருக்கும் இடையே சச்சரவும் அதிகரித்தது. இவர்களின் நல்ல காலத்திற்கு அடையாளமாக, சாரதா புருஷனின் அபின் தின்னும் வழக்கமும் அதிகமாகிக்கொண்டே வந்தது.

இதே நேரத்தில் கருணானந்த யோகீசுரருக்கும், பரந்தாமனுக்கும் சச்சரவு வளர்ந்தது. மனச்சோகத்தை மாற்ற காவியணிந்த யோகியின் சேவையை நாடிய பரந்தாமன். காவி பூண்ட கருணானந்தன், காசாசை பிடித்த கயவன் என்பதை உணர்ந்தான். அவனுக்குத் தன் நிலைமையில் வெறுப்பு ஏற்பட்டது.

யோகியைக் கண்டிக்கத் தொடங்கினான். ஊரை ஏய்க்க உருத்திராட்சமா? கண்டவரை மயக்க காவியா? விபூதி பூசிக்கொண்டு விபரீதச் செயல் புரிவதா? என்று கேட்க ஆரம்பித்தான். யோகி ஒரு திருட்டு போகி என்பது பரந்தாமனுக்குத் தெரிந்ததும் இப்படிப்பட்டவனிடம் சிக்கி வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டோமே, வீணுக்கு உழைத்தோமே, என்று வருந்தினான்.

“நான் என் நிலைமையைப்பற்றி மட்டுமே கவனித்தேன், என் சுகம், என் மன ஆறுதல் என் அமைதியைப் பற்றி அக்கறை கொண்டனேயன்றி, என்னிடம் காதல்கொண்டு கட்டுகளில் சிக்கிக் கலங்கிய காரிகையின் கஷ்டத்தைப் போக்க நான் என்ன செய்தேன். அவள் எக்கதியானாள்? அவள் பக்கத்தில் அல்லவா நான் நின்று பாதுகாத்திருக்கவேண்டும் அதுதானே வீரனுக்கு அழகு. நான் ஒரு கோழை. எனவேதான், கோணல் வழி புகுந்தேன்” என்று மனங்கசிந்தான்.

நாளாகவாக, பரந்தாமனுக்குக் கருணானந்த யோகியிடம் வெறுப்பும் கோபமும் வளர்ந்தது. உலகின் முன் அவனை இழுத்து நிறுத்திவிட வேண்டுமென்று எண்ணினான்.

இந்நிலையில் சென்னை வந்து சேர்ந்தார் கருணானந்தர் தமக்கெனப் புதிதாகத் தயாரிக்கப்பட்டிருந்த மடத்தில் தங்கினார்.

சென்னை நாகரித்திலும் படிப்பிலும் மிக முன்னேறிய நகரமாயிற்றே, இங்கே யோகியின் தந்திரம் பலிக்காது என்று பரந்தாமன் எண்ணினான். ஆனால், சென்னையைப்போல கருணானந்தருக்கு ஆதரவு தந்த ஊரே இல்லையெனலாம். அவ்வளவு ஆதரவு தந்துவிட்டது சென்னை. சீமான்களெல்லாம் சீடர்களாயினர். மேனாட்டுப் படிப்பில் தேறியவர்கள், கல்லூரி ஆசிரியர்கள், பத்திரிகைகாரர்கள் யாவரும் சீடர்களாயினர்.

கருணானந்தரின் தோழரொருவர், ஒரு பிரபல பத்திரிகையில் இருந்தார். அவர் யோகியின் குணாதியசங்களைப் பற்றி கட்டுரைகள் வெளியிட்டார். அவருடைய ‘தத்துவமே’ உலகில் இனி ஓங்கி வளருமென்றார். அவர் சர்வமத சமாஜத்தை உண்டாக்குவார் என்று கூறினார்கள் பலர்.

அவருடைய கொள்கைக்கும் அரவிந்தர் கொள்கைக்கும் அதிக வித்தியாசமில்லை என்று வேறொருவர் கூறினார்.

மடத்தின் வாயிலில் மணி தவறாது மோட்டார்கள் வரும். விதவிதமான “சீமான்கள்” அவருடைய பக்தி மார்க்கத்தைக் கேட்டு ஆனந்திப்பர்.

பரந்தாமன் திடுக்கிட்டுப் போனான். சென்னையின் நாகரிகம் அதன் கட்டடங்களிலும், மக்கள் உணவிலும் உல்லாச வாழ்விலும் காணப்பட்டதேயன்றி, உள்ளத்திலே மிகமிகக் குருட்டுக் கொள்கைகளே இருப்பதைக் கண்டான். உலகை ஏமாற்றும் ஒரு வஞ்சகனிடம் ”வரம்” கேட்க பலர் வருவது கண்டு, சிந்தை மிக வெந்தான்.

ஆஹா! பகட்டு வேஷத்துக்குப் பாழும் உலகம் இப்படிப் பலியாகிச் சீரழிகிறதே என்று வாடினான். இனி இந்த வஞ்சக நாடகத்தில் தான் பங்குகொள்ளக் கூடாது என்று தீர்மானித்தான். நாள் முழுவதும் அத்தீர்மானம் வளர்ந்து வலுப்பட்டது. ஒருநாள் நடுநிசியில் பரந்தாமனின் உள்ளம் பதைபதைத்தது.

நேரே யோகியின் அறைக்குச் சென்று, எச்சரித்துவிட்டு மடத்தைவிட்டு விலகி விடுவது என்று முடிவு செய்துகொண்டான்.

கோபத்துடன் எழுந்தான். கொத்துச்சாவியை எடுத்தான். பெட்டியைத் திறந்தான். இரண்டு வெள்ளை வேட்டிகளை எடுத்துக்கொண்டான். காவியைக் களைந்து வீசினான். வெள்ளை வேட்டிகளைக் கட்டிக்கொண்டான், உருத்திராட்ச மாலைகளை எடுத்தெறிந்தான்.

நேரே யோகி படுத்துறங்கும் அறைக்குச் சென்றான். கதவு சாத்தப்பட்டிருந்தது, ஆனால் கதவிடுக்கில் வெளிச்சம் தெரிந்தது.

அடிமேல் அடி எடுத்து வைத்து, கதவருகே சென்று உள்ளே நடப்பதை நோக்கினான்.

“யோகி“, மங்கையொருத்தியுடன் சல்லாபித்துக்கொண்டிருப்பதைக் கண்டான்.

“கோகிலா! நீ என்னை உதவாக்கரை என்று ஒதுக்கித் தள்ளினாயே. பார் இப்போது!” என்று யோகி கூறிட, “இவ்வளவு சமர்த்து உமக்கு இருப்பதைக் காணவே நான் உம்மை முன்னம் வெறுத்தேன்” என்று கோகிலம் என்று அழைக்கப்பட்ட பெண் கூறினாள்.

பரந்தாமனுக்கு ஆத்திரம் பொங்கிற்று. கதவைக் காலால் உதைத்து உள்ளே சென்று யோகியின் கன்னத்தில் அறையலாமா என்று தோன்றிற்று. பொறு மனமே பொறு என்று நின்றான்.

“அழகாபுரி உமக்குத் தெரியுமோ” என்றாள் கோகிலம்.

“அங்கே என்ன அதிசயம்” என்றார் யோகி.

“அங்கே ராதா என்றொரு பெண்....” என்று கோகிலம் கூறலானாள்.

தன் காதலி ராதாவின் பெயர் உச்சரிக்கப்பட்டவுடன் பரந்தாமன் ஜாக்கிரதையாக உள்ளே என்ன பேசுகிறார்கள் என்பதை உற்றுக் கேட்கத் தொடங்கினான். யோகியின் மடி மீது சாய்ந்தபடியே, அவள் ராதாவின் ரசமுள்ள கதையைக் கூறலானாள்.

கோகிலம், ராதாவின் சேதி பூராவையும் ஒன்று விடாது கூறினாள். ஒரு “போட்டோ“ மூலம் தன் அண்ணன், அவளை மிரட்டுவதைக் கூறியபோது, “இது ஒரு பிரமாதமா? இருப்பதைக் காட்டி உன் அண்ணன் மிரட்டுகிறான். யாரவள், சாரதாவா, அவள் மிரளுகிறாள். இந்தக் கருணானந்தன் செய்வது உனக்கென்ன தெரியுமடி, கட்டழகி” என்று கொஞ்சினான், யோகி வேடம் பூண்ட போகி.

“உன் சமர்த்தை உரைக்க ஒரு நாக்கும் போதாதே” என்று இசைந்தாள் கோகிலம் கிண்டலாக.

“கேள் கோகிலா, இருப்பது கண்டு மிரள்வது, இயல்பு. இல்லாதது கண்டு மிரள்வதை என்னென்பேன் பேதை மக்களிடம்.

“பிடிப்பான், அடிப்பான், கடிப்பான், உதைப்பான்
பேசினாயா நமச்சிவாயா என்பான்
சிவனையோ திருநீறு எனக்கேட்பான்”

என்று கேட்டு, பற்களை நறநறவெனக் கடித்து, மீசைகள் படபடவெனத் துடிக்க, அந்த நரகலோகத் தூதர்கள், சிவபக்தி அற்றவனின் சிரத்தில் குட்டி, கரத்தில் வெட்டி, எரிகிற கொப்பரையில் எறிந்து, சுடுகின்ற மணலில் உருட்டி, செந்தேள் கருந்தேள் விட்டுக் கொட்டவைத்து சித்திரவதை செய்வார். எனவே மெய்யன்பர்களே.

“மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு”

என்ற மணிமொழிப்படி, விபூதி ருத்திராட்சமணிந்த வில்வாபிஷேகனை, வேண்டிட வேண்டும்” என நான் நரகலோகக் காட்சி பற்றி பிரசங்கிக்கும்போது அடடா, இந்த மக்கள்தான் எவ்வளவு நம்புகிறார்கள். எத்தனை பயம், இதைவிட சாரதாவின் பயத்தை நான் கண்டு ஆச்சரியப்பட்டேன்” – என்றான் யோகி.

“அதுவுஞ்சரிதான்” என்றாள் கோகிலம்.

“ஆகவே நீ என்னை அணைத்திட வாடி,
அணைத்திட வாடி - ஆனந்தத் தோடி பாடி”

என்று யோகி ஜாவளி பாடினான், சரசமாடினான், ஜடையைப் பிடித்திழுத்தான். அவள் இவன் ருத்திராட்ச மாலையைப் பிடித்திழுத்தாள். பொட்டைக் கலைத்தான் இவன். அவள் திருநீறைத் துடைத்தழித்தாள். கிள்ளினான்! கிள்ளினாள். நெருக்கினான்! நில் என்றாள். சிரித்தான்! சீறுவதுபோல் நடித்தாள். எழுந்தான்! அவள் படுத்தாள்.

எட்டி உதைத்தான் கதவைப் பரந்தாமன், ஆத்திரம் தாளமாட்டாது!! மட்டி! மடையா! எனத் திட்டினான். மாது கோகிலம் மருண்டாள். “மானத்தைப் பறித்திடுவேன், உன் சூது மார்க்கத்தை அழித்திடுவேன், ஊரை இதோ எழுப்பிடுவேன், உன் சேதி உரைத்திடுவேன்” என்று கோபத்துடன் கூறினான் பரந்தாமன்.

““பரந்தாமா! பொறு! பொறு! பதறாதே! ஏதோ நடந்தது நடந்துவிட்டது. இவள் என் சொந்த மனைவி கோகிலம், கூறடி உள்ளதை, நான் குடும்பம் நடத்த முடியாது திகைத்தேன். பாடுபட முயன்றேன். உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே இவ்வேடம் பூண்டேன். என் மானத்தைக் காப்பாற்று. உன் காலடி விழுவேன்” என்று கருணானந்தன் அழுதான்.

மடத்துக்கென வரும் காணிக்கையை எண்ணினான், ஐயோ, அது வராவண்ணம் இப்பாவிப் பரந்தாமன் செய்திடுவானே, என் செய்வது என்று பயந்தான்.

“மோசக்கார வேடதாரியே கேள்! இனி உன் முடிவு காலம் கிட்டிவிட்டது. நீ பிழைக்க வேண்டுமானால், அந்த சாரதா போட்டோவை என்னிடம் தந்துவிட ஏற்பாடு செய். இல்லையேல் உன்னை கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுதை மீது ஏற்றி ஊர்வலம் வரும்படிச் செய்வேன். உஷார்” என்றான் பரந்தாமன்.

“சாரதாவின் போட்டோவிலே என்ன ரசம் கண்டீர்” எனச் சாகசமாகக் கேட்டாள் கோகிலம்.

“அதிரசம்” என்று அலட்சியமாகப் பதிலளித்தான் பரந்தாமன்.

யோகி, மங்கையின் மலரடி தொழுதான். அவள் முதலில் மறுத்தாள். பிறகு திகைத்தாள். கடைசியில் அண்ணனிடமிருந்து அப்படத்தைத் திருடிக்கொண்டு வருவதாகக் கூறினாள்.

“புறப்படு” என்றான் பரந்தாமன்.

“போவோம்” என்றாள் கோகிலம்.

நள்ளிரவில், கோகிலமும் பரந்தாமனும் மெல்ல சிங்காரவேலன் ஜாகை சென்றனர்.

கோகிலம், படத்தை அதன் ‘நெகட்டிவ்’ உள்பட, திருட்டுத்தனமாக எடுத்து, பரந்தாமனிடம் கொடுத்துவிட்டு, “நீ மிரட்டினதற்காக நான் இதனைத் தருவதாக எண்ணாதே. முன்னாளில் நீ சாரதாவிடம் கொண்ட காதல் இவ்வளவு காலத்துக்குப் பிறகும் அணையாதிருப்பது கண்டு, மகிழ்ந்தே இதனைத் தருகிறேன். நான் அறிவேன் உன் சேதி யாவும், அன்றொரு நாள் தோட்டத்தில் அவள் எல்லாம் என்னிடம் கூறினாள். ஆனால் நான், நீ காதல் இழந்ததுடன், வேறு வாழ்வில் புகுந்திருப்பாய் என்றே எண்ணினேன். இன்றுதான் கண்டேன், அன்று அவள் தீட்டிய சித்திரம் இன்னமும் இருப்பதை” என்று மிகுந்த வாஞ்சையுடன் கூறினாள்.