கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்/அரசியல் கவரிமான் வ.உ.சி. மக்கள் கண்ணீரில் மறைந்தார்.
மக்கள் கண்ணில் மறைந்தார்!
காந்தியடிகளின் ஒத்துழையாமைக் கொள்கையைப் பகிரங்கமாக, வட இந்திய எல்லாப் பிரபலத் தலைவர்களது முகத்துக்கு நேராக, சவால் விட்டு மறுத்தும், எதிர்த்தும் தோற்கடிக்க அரும்பாடுபட்டார் சிதம்பரம்பிள்ளை. ஆனால், காந்தியடிகள் இதை நன்றாகப் புரிந்து கொண்ட பிறகும் கூட கப்பலோட்டிய வீரசிங்கத்தை அவர் பதிலுக்குப் பதிலாக எதிர்த்தவரும் அல்லர், வெறுத்தவருமல்லர்.
சிதம்பரம் பிள்ளையின் தியாகங்களை காந்தியடிகள் மதித்தவர் போற்றிப் புகழ்ந்து மனமார அவரது அஞ்சாமைப் பண்பை அவர் வாழ்த்தியவர். தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் இந்தியர் உரிமைகளுக்குப் போராடியபோது திலகர் பெருமானின் வீரத் திலகமாகத் திகழ்ந்த சிதம்பரனார், கடிதங்கள் எழுதி காந்தியடிகளைப் பாராட்டிப் பரவசப்பட்டவர்!
ஆங்கிலேயர்களின் இந்தியப் பொருளாதாரச் சுரண்டலை அகிம்சை வழியாகப் பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நாவிகேஷனின் ஆணிவேரின் ஆழத்தை அசைத்துப் பறித்துக் கொண்டிருந்த எதிர்ப்பாற்றலின் எதிரொலியாக கப்பலையே ஓட்டிக் காட்டிய வீரப் பெருமகன் சிதம்பரத்தின் நெஞ்சுரத் தியாகத்தைக் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலே இருந்த போதே பாராட்டிப் போற்றினார்! அதனால், காந்தியடிகளுக்கும் சிதம்பரனாருக்கும் தென்னாப்பிரிக்கக் கடிதப் பரிமாற்றங்களே அவர்களது தொடர்புகளுக்கு சான்றுகளாக இருந்தன!
அத்தகைய ஓர் அரசியல் சால்பாளர் சென்னை திரும்பிய பிறகும் கூட, ஒத்துழையாமைத் திட்டத்தால் விடுதலைப் போர் வெற்றி பெறாது என்றே அறிக்கை வெளியிட்டார். எனவே, அடிகளாருக்கும் சிதம்பரனாருக்கும் தனிமனித விரோதம் ஏதுமில்லை. கொள்கைக் கோமான்களின் களபலிப் போராட்டம் தான் நடைபெற்றது என்பதை பண்புடையார் அறிவர்!
அப்போது பிராமணரல்லாதார்கள் முன்னேற்றத்துக்காக சென்னையில் நீதிக் கட்சி ஆரம்பமானது. அதனை உருவாக்கியோர்கள் சீமான்கள், குறுநிலக் கோமான்கள், மிட்டா மிராசுகள், பண்ணையார்கள் என்பதால், கப்பலோட்டிய தமிழனின் அஞ்சாநெஞ்ச ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ள வ.உ.சி.க்கு அழைப்பு விடுத்தார்கள். அவர்கள் பல வழிகளில் அவரை நீதிக் கட்சியிலே சேர்க்க குறுக்கு வழியினை கையாண்டு பார்த்தும் கூட சிதம்பரம் என்ற அந்தப் பெருமகன் அக்கட்சியிலே சேர மறுத்துவிட்டார்.
அதே நேரத்தில், ஒரே சமயத்தில் ஒத்துழைத்தலும், ஒத்துழையாமையும் அரசியலில் நிகழ வேண்டும் என்று விரும்பினார். ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரிப்பவர்களின் செயலை வயோதிகப் பருவத்தின் வாலாட்டம் என்றார். அழுகின்ற குழந்தைகள் தின்பண்டத்தின் சிறுபகுதியை ஏற்காமல், எல்லாவற்றையும் முழுவதுமாகக் கொடு என்று தாய் தந்தையிடம் கோபித்துக் கொள்ளும். இதே பண்புடையதே ஒத்துழையாமை என்றார். பிறகு அரசியலில் மானம் தேவை ஒரு கொள்கையை நிலைநாட்ட தொண்டர்கள் மானிகளாக இருக்க வேண்டும். அப்போதுதான் அரசியலும் மானஸ்தர்களின் அரண்மனை வாசலாக இருக்கும் என்று கூறிய சிதம்பரனார், காந்தியின் அகிம்சைக் கொள்கையின் எதிர்ப்பு என்ற மானஸ்தனாகவே காங்கிரஸ் மகா சபையை விட்டு மன விரக்தியோடு விலகி வெளியேறிவிட்டார். ஆனாலும், காங்கிரஸ் தேசியத்தின் சுதந்திரத்திற்காகவே தனியே, வெளியே நின்று பாடுபட்டார்
1927-ஆம் ஆண்டு சேலத்தில் காங்கிரஸ் மகா சபை மூன்றாவது அரசியல் மாநாடு நடந்தபோது சிதம்பரம் பிள்ளை மீண்டும் தான் வளர்த்த காங்கிரசிலேயே சேர்ந்து தொண்டாற்றினார். மாநாட்டின் தலைமையுரையில் பேசும் போதுகூட, அதாவது ஏழாண்டு இடைவெளி விட்டுக் காங்கிரசிலே இணைந்தும் கூட, “ஒத்துழையாமை இயக்கம் எனது கொள்கைக்கு மாறுபட்டது. அந்த இயக்கம் இப்போது முடிந்துவிட்டது. அதனால் ஏழாண்டுகள் அரசியலிலே விலகியிருந்த என்னை, நண்பர்கள் மீண்டும் அழைத்துவந்து தலைமை ஏற்கப் பணித்தார்கள். தேசாபிமான ஒளி நாளுக்கு நாள் வளருமே தவிரக் குறையாது” என்ற வீரத் தமிழ்ப் பெருமகன் தனது கொள்கைப் பற்றின் வைர உறுதியை மக்களுக்கு விளக்கிக் காட்டினார். ஆனால், அந்த மாநாடு முடிந்த பின்பு மீண்டும் காங்கிரஸ் மகா சபையின் கோஷ்டிக் கொந்தளிப்பைக் கண்டு தானே மனமுடைந்து மீண்டும் விலகி விட்டார். அதாவது காங்கிரசுடன் எக்காரணத்தைக் கொண்டும் தொடர்புறாமலே இருந்துவிட்டார்.
சிதம்பரம் அரசியலிலே மட்டும் மாவீரராக இருக்கவில்லை. தமிழ்த் தொண்டிலும் அவர் மாவீரராகவே பணியாற்றினார். அரசியலில் ஈடுபடாமல், தானுண்டு - தமிழ் உண்டு என்ற நிலையில், அற்புதமாக ஓர் ஆராய்ச்சிப் பெரும்புலவராகவே விளங்கினார். மேடையேறி சிதம்பரம் பேசுகிறார் என்றால் சிங்கம் ஒன்று வெண்கலக் குரலெடுத்து கர்ஜனை செய்தது போல விளங்கி, மக்களை மெய்சிலிர்க்க வைப்பவரானார்.
சிதம்பரனார் சிறந்த கவிஞர் பெருமானாகவும் திகழ்ந்தார். அவர் எழுதிய கடிதங்கள், சிறை வாழ்க்கைக் குறிப்புக் கவிதைகள் யாவுமே சொற்சுவை, பொருட்சுவை உடையவை. இங்கிலீஷூம், தமிழ் மொழியும் தெரிந்த இரட்டை மொழிப் புலவராக இருந்தார். அவர் எழுத்துக்களது அனுபவம் ஒவ்வொன்றும் படிப்போரின் மனதை மயக்குபவை மட்டுமன்று, உருக்குபவையும் கூட.
1935-ஆம் ஆண்டில், பீகார் காந்தி என்று அழைக்கப்பட்ட பாபு ராஜேந்திரப் பிரசாத் தூத்துக்குடிக்கு வந்தபோது, நேராக அவர் கப்பலோட்டிய தமிழன் சிதம்பரனார் வீட்டுக்குச் சென்றார். அன்று மாலை தூத்துக்குடி நகரிலே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், “கப்பலோட்டிய தமிழன் வ.உசிதம்பரம் பிள்ளை வாழ்கின்ற தூத்துக்குடிக்கு வரும் பேறு எனக்கு கிடைத்தது. அந்த வீரப் பெருமகன் சிறை சென்றது கண்டு மனம் உருகியவன் நான். எனது நாட்டாபிமானம் மேலும் அதிகமாக, ஆழமாக வளர்வதற்கு தேசபக்தர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் தியாகமும் ஒரு காரணமாகும்” என்று பெருமிதத்துடன் குறிப்பிடும் போது கையொலி கடலலை போல ஒலித்தது. செக்கிழுத்த செம்மல் சிதம்பரனாரை தமிழ்நாட்டாரை விட அதிகம் புரிந்தவர்கள் வடநாட்டவர்கள் தான்!
இந்திய சுதந்திரப் போராட்ட உணர்ச்சிகளாலே அவர் பெற்ற பரிசுகள் இரண்டு! வறுமை ஒன்று மற்றொன்று நோய் வகைகள். இந்த இரண்டாலும் அதிகமாகப் பாதிக்கப்பட்ட அந்தத் தியாக மன்னன் 1936-ஆம் ஆண்டின் போது நோய் முற்றிப் படுத்த படுக்கையாகிவிட்டார் ஏறக்குறைய நாற்பது நாட்களுக்கு மேலே படுக்கையே கதி என்று கிடந்தார் எந்தத் தமிழ் மகனும் அவரை வந்து கண்டு ஆறுதல் கூறியவனல்ல. எல்லாம், அவனவன் பெண்டு, பிள்ளை, வீடு, உணவு என்றே வாழ்ந்தான்.
மாசிலாமணிப் பிள்ளை என்ற தூத்துக்குடிக்காரர் சிதம்பரம் பிள்ளையைக் கண்ட போது, என்று வரும் நமக்கு சுதந்திரம், என்று தணியும் நமது விடுதலை தாகம் என்று சொல்லிக் கொண்டே அழுதார்.
உயிர் விடுபவர்கள் சைவ சமயிகளாக இருந்தால் சுற்றத்தார் தேவாரம், திருவாசகம் படிப்பார்கள்! இறப்பவர்கள் வைணவிகளாக இருந்தால் உறவு முறையினர் நாலாயிர திவ்வியப் பிரபந்த வகை நூல்களைப் படித்து ஆன்ம பேறு பெற வைப்பர்.
சிதம்பரம் பிள்ளை திருக்குறளையே, தமிழ் வேதமாகக் கொண்டவர். சுதந்திர உணர்வு கொண்டவர், நாடு விடுதலை பெற்றிட அயராது பாடுபட்டவராதலால், கவிமன்னன் பாரதியார் பாடல்களைக் கேட்க விரும்பினார். "என்று தணியுமெங்கள் சுதந்திர தாகம்” என்ற கவிதையை வ.உ.சி. எப்போதும் விரும்பிக் கேட்பார். “உலகப்போர் வர இருக்கிறது. அப்போது தேர்தலில் வெற்றி பெறும் ஆங்கிலக் கட்சியினர் நிச்சயமாக இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுப்பார்கள் என்று அவர் மரணப்படுக்கையின் போது கூறினார். சிதம்பரனார் கூறியபடியே நடந்தது.
சொல்லொணா வேதனைகளையும், துன்பங்களையும அனுபவித்த சிதம்பரனாருக்கு உடல் பிணிகளின் உள்தாக்குதல்கள் அதிகம் காணப்பட்டதால், மருத்துவர்கள் அவர் நோயை இன்னது என்று அறிய முடியாமல் அவரைக் கைவிட்டு விட்டார்கள். தன்நிலை இன்னது எனது அறியா நிலையில் வீரப் பெருமகன் விழிகளிலே இருந்து நீர்த்துளிகள் சிதறி வீழ்ந்த வண்ணம் இருந்தன.
‘எந்த சுதந்திரத்தைக் காண வேண்டும் என்று எனது ஆயுளைச் செலவழித்தேனோ, அந்த சுதந்திரத்தைக் காண முடியாமல் கண்மூடுகிறேனே’ என்று சிதம்பரனார் சாவதற்கு முன்பு ‘நா’ தடுமாறிக் குழறினார். கவியரசர் பாடிய தேசியப் பாடல்களைப் பாடுமாறு அவர் கேட்ட போது அருகே உள்ளவர்கள் பாடினார்கள். அந்தப் பாடல்களைப் பாடிக் கொண்டே இருக்கும்போது 1936-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாளன்று நள்ளிரவில் கப்பலோட்டிய வீரத் திருமகன் சிதம்பரம் பிள்ளை மறைந்தார். பாரதமாதாவின் சுதந்தரத்துக்காக சிதம்பரனாருடன் இணைந்து அரும்பாடுபட்ட அவரது தேசிய நண்பர்களை கைகூப்பி வணங்கி விடைபெற்றுக் காலத்தோடு மறைந்தார். கப்பலோட்டிய தமிழ் மகன் சிதம்பரனார் இறந்துவிட்ட செய்தி திருநெல்வேலி, தூத்துக்குடி, கோயில்பட்டி, ஒட்டப்பிடாரம் போன்ற இடங்களிலும், ஏன் தமிழ்நாடு முழுவதுமே பரவியது. மக்கள் கூட்டம் கூட்டமாய் திரண்டு வந்து தங்களுடைய கண்ணீரஞ்சலியைச் செலுத்தினார்கள். தமிழ்நாடே தனது தனிப்பெருந்தலைவருக்கு மரியாதை காட்டி இறுதி வணக்கத்துடன் அஞ்சலி செய்தது.