உள்ளடக்கத்துக்குச் செல்

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்/சிதம்பரம் என்ற கப்பலை இராஜாஜி மிதக்க விட்டார்.

விக்கிமூலம் இலிருந்து

14. சிதம்பரம் என்ற கப்பலை
இராஜாஜி மிதக்கவிட்டார்

கப்பலோட்டிய தமிழன் வ.உசிதம்பரம் பிள்ளை தனது கடைசிக் காலத்தில் அரசியலிலே இருந்து விலகி விட்டார். அதனால், தமிழ் மக்கள் அவரை மறந்து போனார்கள். அவர் இறந்த பின்பு மூன்றாண்டுகள் அவர் நினைவு நாளை விழாவாகக் கொண்டாட தமிழ்நாட்டில் எவரும் முன்வரவில்லை.

1939-ஆம் ஆண்டில் சென்னை இராயப்பேட்டைக் காங்கிரஸ் மண்டபத்தில், நன்றி மறவாத சில தமிழர்கள் சிதம்பரம் பிள்ளையின் உருவச் சிலையை அமைத்து விழா எடுத்தார்கள். அந்த விழாவுக்கு நாவலர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். திருச்சி டி.எஸ்.எஸ்.ராஜன் அவர் சிலையைத் திறந்து வைத்துப் பேசும் போது, தூய தமிழர் சிதம்பரனார் என்னுடைய முதல் அரசியல் குரு என்றார்.

சிதம்பரனார் சிலை திறப்பு விழாவில் அவரது நெருங்கிய நண்பரும், தூத்துக்குடி சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் சட்ட ஆலோசகருமான சேலம் சி.விஜயராகவாச்சாரியார் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில், ‘சிதம்பரம் பிள்ளை மாசுமறுவற்ற ஒரு தேசபக்தர். கள்ளம் கபடமற்ற நெஞ்சினர். தமிழ் நாட்டார் சிலை எடுத்துப் போற்றுவதற்குத் தகுதியுடையவராவார் என்று குறிப்பிட்டிருந்தார்.

சிதம்பரனாரது இந்த சிலை எடுப்பு விழாவிற்கு அவரது அரசியல் நண்பர்கள் அனைவரும் வந்து சிறப்பித்து அவரைப் பாராட்டிப் பேசினார்கள்.

இந்தியர் சுதந்திரம் பெற்ற பின்பு ‘ஜலப்பிரபா’ என்ற ஒரு கப்பலை மிதக்கவிட்டார்கள். அந்த விழாவில் பேசிய சர்தார் வல்லபாய் பட்டேல் சிதம்பரனாரின் தியாகங்களையும், ஆங்கிலேயர் ஆட்சியை அவர் எதிர்த்துப் போராடிய விந்தைமிகு வீர தீரச் செயல்களையும் போற்றிப் புகழ் உரையாற்றினார்.

தென்பாண்டி வணிகர்கள் தூத்துக்குடி நகருக்கும் சிங்கள நாட்டிற்கும் இடையே போக்குவரத்திற்காக ஒரு கப்பலை வாங்கினார்கள். அந்தக் கப்பலுக்கு வி.ஓ.சிதம்பரம் என்று பெயரிட்டார்கள். தென்பாண்டி வியாபாரிகள் கப்பல் ஓட்டிய சிதம்பரம் பிள்ளையை, அவரது அரிய உழைப்பை, வீரத்தை மறக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த மாவட்டத்திலே இருந்து திரண்டு அப்பகுதி வணிகர்கள் எடுத்த கப்பலோட்டும் விழாவிலே கூடினார்கள்.

அப்போது இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் என்ற பதவியை வகித்திருந்த, சிதம்பரம் பிள்ளையின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவரான ராஜாஜி அவர்கள் அந்த விழாவிலே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடையே, உணர்ச்சி பொங்க “வீரர் வ.உசிதம்பரம் வாழ்க” என்று கோஷமிட்ட போது, திரண்டிருந்த பொது ஜன வெள்ளமும் வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க என்று பல தடவைகள் கோஷம் செய்தார்கள். அந்த வீரப் பெரும் முழக்கங்களின் ஆரவார ஓசைகளுக்கு இடையே கவர்னர் ஜெனரல் ‘சிதம்பரம்’ என்ற அந்தக் கப்பலை ஓட்டினார். அப்போது நடைபெற்ற அக்கப்பலோட்டும் விழாவிலே அவர் வாயாரப் புகழ் மாலைகளைச் சிதம்பரத்துக்குச் சூட்டினார்.

சிதம்பரம் பிள்ளை தனது தாய்நாடான இந்தியாவுக்காக நடத்திய சுதந்திரப் போர் வெற்றி பெற்றதை மக்கள் கண்ணாரக் கண்டு களித்து மீண்டும் மீண்டும் சிதம்பரம் பிள்ளை தொண்டுகள் வாழ்க என்று போற்றி மகிழ்ந்து கலைந்தார்கள். ஆனால், அந்தப் பேரின்ப விழாவைக் கண்டு மகிழ வீரப் பெருமகன் வ.உ.சிதம்பரம் பிள்ளையும், கவியரசர் பாரதி பெருமகனும் இல்லையே? அவர்களது உடல்கள் மறைந்தாலும் உணர்வலைகள் அந்த விழாவிலே மிதந்து கடலலைகள் மூலமாக எதிரொலித்துக் கொண்டே இருந்தன.