கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்/பெரும்புலவர் சிதம்பரனார் தமிழ்த் தொண்டு வாழ்க!
தமிழ்த் தொண்டு வாழ்க!
இந்திய சுதந்திரப் போரிலே வெள்ளையராட்சியை எதிர்த்து தமிழர்களைக் கொள்ளையடிக்கும் பொருளாதாரச் சுரண்டலைத் தடுத்து நிறுத்திட இந்தியா முழுவதற்கும் சார்பாகக் கப்பலோட்டிய முதல் வீரத் திருமகன் தமிழ்ப் பெருமகன் வ.உ.சிதம்பரம் பிள்ளைதான் என்று இன்றும் உலக வரலாறு வரம்பிட்டு வாழ்த்திக் கொண்டு இருக்கின்றது.
இந்த செயற்கரிய செயலைச்செய்த சிதம்பரம் பிள்ளையின் கடைசி நாட்கள் வறுமையிலே வாடினபோது, எந்தத் தமிழ் மகனும் அவரது வாழ்வுக்கு உதவியாகக் கை கொடுத்து உதவாமல் இருந்துவிட்டது மாபெரும் குறையாகவே இருந்தது.
அந்த தேசிய மாவீரன் சிறை மீண்டு வெளியே வந்த போது தமிழ்நாடு அவரை ‘வருக வீரனே வருக’ என்று வரவேற்று ஆதரிக்கவும் தவறிவிட்டது. அவரது செல்வாக்கும் சொல்வாக்கும் அறிந்தவர்கள் கூட அவரைக் கவனிக்காமல் பராமுகமாய் விட்டு விட்ட சம்பவம், மனிதகுல வீர வரலாற்றுக்கே பரிதாபமான களங்கமாக இருந்ததைக் கண்டு தமிழர் கண்ணீர் சிந்த வேண்டிய நிலைதான் திகழ்ந்தது.
கவியரசர் சுப்பிரமணிய பாரதியார் தனது சுதந்திரப் பணிகளை வாடிய பயிரைப் போல வதங்கிக் கொண்டே பாடியபடி மறைந்தார்! மாவீரன் சுப்பிரமணிய சிவா, சிறையேகிய தேசத் தொண்டால் உடல் முழுவதும் குஷ்ட நோய் பரவியவாறே, ஊர் ஊராகச் சென்று பிச்சைக்காரனாகப் பிழைத்து பாப்பாரப்பட்டி என்ற ஊரிலே மாண்டார். தமிழ்நாட்டுத் தியாக மூர்த்திகளின் தலைமகனான வ.உ.சிதம்பரம் பிள்ளையும் சிறு கடை வைத்து சொக்கலால் ராம்சேட் பீடிகளையும், கிருஷ்ணாயில் டப்பாவின் எண்ணெயையும் சிறு சிறு உழக்குகளால் அளந்து ஊற்றிப் பிழைக்கும் வறுமையிலே வாடியும், இல்லாமல் தனது கடைசி நாட்களைக் கஷ்டங்களோடு போராடிக் கழித்து மறைந்தார்!
ஆனால், தேசத் தொண்டாற்றிய இந்த மாவீரர்கள் தமது தாய்மொழியான தமிழுக்கு அருந்தொண்டுகளைச் செய்ததால், தமிழ் உலகம் இன்றும் அவர்களை மறக்காமல் வாழ்த்திக் கொண்டே இருக்கிறது. பாரதியார் கவிப்பேரரசர் அவர் பாடிய பாடல்கள் இன்றும் அவரது திருப்பெயரை வாழ்த்திக் கொண்டே இருக்கின்றன. மாவீரர் சிவா, நாடகங்கள், மொழிபெயர்ப்பு. ஆய்வு நூல்கள் எழுதிய தமிழ் வெறியர். நீதிமன்ற வாதாட்டங்களிலே கூட திருக்குறளைச் சான்றுக்காக ஓதி வழிபட்டவர்! அவரும் தமிழ்த் தொண்டராக வாழ்ந்து மறைந்தார்:
முத்தமிழ் வித்தகராக விளங்கிய சிதம்பரம் பிள்ளை மதுரை மாநகர் தமிழ்ச்சங்கப் புலவராகத் திகழ்ந்தவர். தமிழ் இலக்கிய இலக்கண வித்தகர்; அவர், ஆங்கிலம், தமிழ், மலையாளம், தெலுங்குமொழிகளிலே புலமை பெற்றவர்.
சிதம்பரனார் நாட்டுத் தொண்டு, மொழித் தொண்டு என்ற இரண்டையும் கண்களைப் போல காப்பாற்றிய கலை இயல் வளர் நிபுணராக இருந்தார். அதனால்தான் அவரால் ஒரு நூலாசிரியராகவும், உரையாசிரியராகவும், பதிப்பாசிரியராகவும், மொழிபெயர்ப்பாசிரியராகவும், தத்துவஞான ஆசானாகவும் பணியாற்றும் திறனாளராக இருக்க முடிந்தது.
சிதம்பரம், 'மெய்யறம், மெய்யறிவு, வலிமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம்,' தனது முதல் மனைவி நினைவாக 'வள்ளியம்மை சரித்திரம்' என்ற நூல்களை எழுதினார்: மனித குலத்தை மேம்படுத்தும் எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கண்ட புத்தகங்களில் தத்துவங்களைப் பொழிந்த நல்ல ஞானியாக நடமாடினார்!
கண்ணனூர் சிறையிலே அவர் சிறைத் தண்டனைகளை அனுபவித்துக் கொண்டே 'மெய்யறிவு' என்ற தத்துவ நூலைச் செய்தவர் சிதம்பரனார் திருவள்ளுவரின் திருக்குறளை அமுதமாக உண்டவர். திருக்குறள் கூறும் அறங்களை எல்லாம் தொகுத்து அறத்துக்கென ஒரு வடிவ நூலாக ‘மெய்யறம்’ வடித்தவர் இந்த நூலில் திருவள்ளுவரால் கூறப்படாத பல புதிய அறங்களைக் கூறி வழி நூலாக வழிகாட்டினார்! எடுத்தக்காட்டாக, துணையிழந்தாரை மணப்பது புண்ணியம் என்று விதவை வாழ்வைப் போற்றி அறம் கூறியவர் அவர்.
மங்கையர் மற்ற ஆண்களை மறந்தும் நாடக் கூடாது என்பதற்கேற்றவாறு, ஆண்களும் மற்றப் பெண்களை மறந்தும் நாடுவது பெரும் பாதகம் என்று கூறிய நெறியாளர் சிதம்பரம் பிள்ளை. இவையெல்லாம் ‘மெய்யறம்’ நூலிலே படித்துச் சிந்திக்கலாம். சமயப் பழக்கவழக்கங்களிலே சில சந்தர்ப்பவாத ஆன்மிகர்களால் புகுத்தப்பட்ட ஆன்மிகக் கோட்பாடுகளையும் அவர் சாடி தனது புரட்சி மனப்பான்மையைக் காட்டியுள்ளார்.
திருக்குறள் என்ற வாழ்வியல் மறைக்குப் பரிமேலழகர் சில குறட்பாக்களுக்கு நேர் பொருள் கொள்ளாமல், மாறுபட்ட உரைகளைக் கண்டுள்ளார் என்று எண்ணிய சிதம்பரம் பிள்ளை, மற்றோர் திருக்குறள் உரையாசிரியரான மணக்குடவரை மனமாரப் பாராட்டி, வள்ளுவர் உள்ளத்தை உணர்ந்தவர் மணக்குடவரே என்று போற்றி, மணக்குடவர் உரையைத் திருத்தமாக வெளியிட்டவர் சிதம்பரம் பிள்ளை.
திருக்குறள் நூல் அறிஞர்களுக்காக மட்டுமே எழுதிய வேத நூலல்ல. எல்லா வகையினரும் எளிதாக உணர்ந்து கொள்ள வேண்டிய வாழ்வியல் புதையல் நூல் என்றுணர்ந்து, எளிய விளக்க உரை ஒன்றைத் திருக்குறளுக்கு எழுதிய தமிழ்த் தொண்டர் சிதம்பரம் பிள்ளை.
திருவள்ளுவரின் திருக்குறள், சிவஞான போதம், கைவல்ய நவநீதம் என்ற நீதி நூல்களிலும், சித்தாந்த நூல்களிலும், வேதாந்த நூல்களிலும் ஒப்புயர்வற்ற ஒரு சிறந்த மேன்மையான நூல் என்று அவர் எழுதிய தனது சிவஞான போதம் என்ற நூலின் முன்னுரையில் கூறியுள்ளார்.
தமிழ்மொழியின் பழமையான இலக்கண நூலான தொல்காப்பியம் என்ற நூலிலே, இளம்பூரணர் இயற்றிய உரை மிக எளிமையாக இருப்பதால், அதனைப் பல சுவடிகளோடு ஒப்பிட்டுப் பார்த்து, ‘இளம்பூரணம்’ என்ற நூலை வெளியிட்டவர் சிதம்பரம்பிள்ளை. இதற்கு ஒத்துழைத்த பேரறிவாளர் வையாபுரி பிள்ளை போன்றவர்களைப் பயன்படுத்திக் கொண்டார்.
தொல்காப்பிய பொருளதிகாரம் பகுதிக்கும் அதே போல ஒரு திருத்தமான பதிப்பையும் சிதம்பரம் வெளியிட்டார். அதன் எஞ்சிய பகுதிகளையும் சுவடிகள் பலவற்றோடு ஒப்பு நோக்கி, வையாபுரி பிள்ளை போன்ற அறிஞர்களின் ஆய்வறிவோடும் சிதம்பரம் பிள்ளை தனது பெயரோடு வையாபுரியார் பெயரையும் இணைத்து ஒரு பதிப்பாக தொல்காப்பியத்தை வெளியிட்டார்.
பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றான நன்னிலை என்ற நூலுக்கும் சிதம்பரனார் எளிய உரை எழுதினார்
சைவ சித்தாந்தத்தில் பழுத்த ஞானமுடைய சிதம்பரம் பிள்ளை ‘சிவஞான போதம்’ என்ற சைவ தத்துவ நூலுக்கு நயமான, எளிமையான உரை ஒன்று எழுதினார். ஆங்கில மொழியிலே எழுதிய ஜேம்ஸ் ஆலன் என்ற ஆங்கிலப் பேராசிரியரது வாழ்வியல் ஒழுக்க ஞான நூலை தமிழில் மொழியாக்கம் செய்து ‘மனம் போல வாழ்வு’, ‘அகமே புறம்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.
நமது நாட்டின் சமய அறிவையும், நெறிகளையும் மக்கள் சரியாகப் பின்பற்றவில்லை. அவர்களது அரைகுறையான சமய ஞானத்தால் நமது நாடு வீழ்ச்சி அடைந்தது. எல்லாம் விதியின் வழியே நடக்கும் என்ற கொள்கைக்குத் தவறான பொருள் கொண்டுவிட்டார்கள். அதனால் மக்கள் செயலற்றுச் சோம்பினார்கள்.
விதி விதி என்று ஆழ்கின்றார் வீணாகத் துன்பில், விதிவிதிக்கத் தம்மையன்றி வேறு - பதி ஒருவன் உண்டென்று நம்பிய ஒரு சிலர், இங்கு அன்னாரின், கண்டறியேன் - பேதையரைக் காண் என்று சிதம்பரம் பிள்ளை தனது மெய்யறிவு நூலில் கூறுகின்றார்.
அறநெறிகளைப் போற்றாத, கடைப்பிடிக்காத மக்கள் என்றும் உயர்வு பெற முடியாது என்பது பிள்ளையின் சித்தம். இதை அவர், ‘அகமே புறம்’ என்ற நூலில்,
“அறத்தை அறிய அறிவே மறமாம்;
அறத்தைப் பிழைத்த அறிவே மிருகம்;
அறத்தைப் புரியும் அறிவே மனிதன்;
அறத்தைக் காக்கும் அறிவே கடவுள்”
– என்று, சிதம்பரம் பிள்ளை அறம் என்ற தத்துவத்தின் மூலமாக, மிருகத்தன்மை, வீரத்தன்மை, மனிதத்தன்மை தெய்வத்தன்மை ஆகியவற்றை அவர் அற்புதமாக தெளிவுபடுத்தியுள்ளார். படித்து உணர்க!
இவ்வளவு அரிய ஆற்றல்கள் சிதம்பரம் பிள்ளையிடம் ஆமை போல் அடங்கி, அரசியல் புரட்சி மட்டுமே தலை தூக்கி மக்களை உணர்ச்சியின் உருவங்களாக, எஃகு உள்ளங்களாக மாற்றிடும் திறமையின் எழுச்சியும் அவரிடம் அமைந்திருந்ததால்தான் பாரதியார் அவரைத் ‘தமிழகத்தார் மன்னன்’ என்று தனது கவிதையிலே ஏற்றிப் போற்றிப் பாடினார்:
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சிதம்பரம் பிள்ளையை ‘ஒப்பே கூற முடியாத செந்தமிழ் அறிவுச் செல்வன்’ என்றார். ஆனால், தேசியத்தைக் கவிதையிலே எளிமையும் அற்புதமுமாகப் பாடிய தாக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, ‘சிதம்பரனாரிடம் வேதாந்த சித்தாந்த மணமே வீசும்’ என்று அவரை ஒரு தத்துவஞானத் தலைவன் என்று நாட்டுக்கு அடையாளம் காட்டினார்!
எல்லாவற்றுக்கும் மேலாக, சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் என்ற தமிழ்ஞானத்தின் தவத்தால், கர்நாடகத்தைச் சேர்ந்த பண்பாளர் பி.ஆர். பந்துலு என்ற ஆசான் ஒருவரின் துணை கொண்டு, உலக நடிப்புக் கலைக்கு அகராதியாக விளங்கிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனை கப்பலோட்டிய தமிழன் சிதம்பரம் பிள்ளை என்ற நடிப்புச் சிற்பனாக்கி, தேசியக் கவிக்குல வைரமான அமரகவி பாரதியாரின் அற்புத தேசியப் பாடல்களால் தமிழ் மக்களை மட்டுமன்று, படம் பார்க்கும் உலகச் சுவைஞர்களை உருக வைக்கும் ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற திரைக் காவிய அருள் மணத்தை சிலம்புச் செல்வர் தனது தவஞானச் சிலம்பொலியால் ஒலித்துக் காட்டி மறைந்தார்.
இந்த நன்றி காட்டும் பண்பை திரையுலக விஞ்ஞானம் இருக்கும் வரை சிதம்பரம் பிள்ளையின் விடுதலை வீரம் வாழையடி வாழையென கன்றுகளாகும், பலன் வழங்கும் என்பது உறுதி வாழ்க சிதம்பரனாரின் முத்தமிழ் அதிவீரம்! செயலறம்!