உள்ளடக்கத்துக்குச் செல்

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்/சுதந்திரப் புரட்சியில் சிதம்பரனார்; சிவா முழக்கம்.

விக்கிமூலம் இலிருந்து

5. சுதந்திரப் புரட்சியில்
சிதம்பரனார், சிவா முழக்கம்!

‘பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு’ என்ற பாரதியார் பாடல் அப்போது பத்திரிகைகளிலும், அரசியல் மேடைகளிலும் பிரபலமாக எதிரொலித்துக் கொண்டிருந்த நேரம்.

பழமையும் - பெருமையும் வாய்ந்த இந்த நாடு, முந்நூறு ஆண்டுகளாக ஆங்கிலேயரின் அடிமைத் தனத்திலே சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்த அவலத்தை சிதம்பரனார் சிந்தித்தார்

ஒவ்வொரு துறையிலும் வெள்ளையர்களது பொருளாதாரச் சுரண்டல்களினால் இந்தியா அல்லல்படுவதையும், அந்த தொல்லை மிகு அல்லல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் சிதம்பரம் கண்டார். .

இந்திய மக்கள் எல்லாத் துறைகளிலும் பின் தங்கி வாழ்வது மட்டுமன்று, பஞ்சமும், வறுமையும், அவர்களைப் பாழ்படுத்தி, தமது முன்னோர்களின் பெருமைகளையும், புகழையும் மறந்தவராய் நலிந்து கிடப்பதைக் கண்ட சிதம்பரனார், இந்த அடிமைத் தளைகளை உடைத்தெறிய வீறிட்டெழுந்த அரசியல்வாதியாய் அரசியல் துறையிலே ஈடுபடக் கொதித்தெழுந்தார். இந்தியா சுதந்திரம் பெற வேண்டும், அந்நிய ஆட்சி அறுத்தெறியப்பட வேண்டும், பல்துறைகளிலும் பாரதம் முன்னேற வேண்டும், மக்கள் வாழ்க்கைத் தரம் வளம் பெற வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் மகா சபையிலே சேர்ந்தார் சிதம்பரனார்!

இந்திய விடுதலைக்காக தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் நாட்டுக்கும், நாட்டு மக்களது வாழ்வுக்கும் தியாகம் செய்வது ஒன்றே தனது பிறப்பின் கடமை என்ற வாதப் பிரதிவாதத் தேச பக்தர் போர்க் கோலத்தோடு திருநெல்வேலி மாவட்டம் முழுவதுமாக வலம் வந்தார். ஒவ்வொரு மேடையிலும் முழக்கமிட்டார்.

ஆங்கிலேயரின் ஆணவ ஆர்ப்பாட்ட ஆட்சி நமக்குத் தேவையா? என்று கேட்டார் மக்கள் சொற்படி நடக்கும் ஒரு மக்களாட்சிதான் நமக்குத் தேவை என்பதற்கான காரண காரியங்களை மக்களிடையே விளக்கிப் பேசினார்.

அகில இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபையிலே சேர்ந்த அவர், ஆண்டுதோறும் வடநாட்டில் நடைபெறும் மகா சபை மாநாடுகளுக்குச் சென்று, வடநாட்டில் என்ன நடக்கின்றது? தென்னாட்டில் எப்படி அவை நடக்க வேண்டும்? என்ற திட்டங்களோடு அவர் திரும்பி ஊர் வருவார்

வடநாட்டின் மகா சபைக் கூட்டங்களிலே வழக்குரைஞர்களே அதிகமாகக் கலந்து கொண்டு, அவர்கள் பணக்காரர்களாக இருந்தாலும் தேச பக்தியோடு செயலாற்றுவதைப் பார்த்து, சிதம்பரனாருக்குள்ளும் அந்த பரபரப்பு உணர்ச்சி ஊடுருவி விட தீவிரவாதியாக உருவெடுத்தார் - அரசியலில்! வடநாட்டின் காங்கிரஸ் மகா சபையில் மிதவாதிகளும், தீவிரவாதிகளும் இணைந்து பணியாற்றுவதில், அவர்களுக்குள்ளே சுதந்திரம், நாட்டு விடுதலை ஒன்றே உயிர் மூச்சாக இருந்தது.

இந்த நேரத்தில் 1907 - ஆம் ஆண்டு சூரத் நகரில் தேசிய மகாசபை கூட்டம் கூடியது. அந்த மகா சபைக் கூட்டத்திற்கு சிதம்பரனாரும் சென்று கலந்து கொண்டார். காங்கிரஸ் மகாசபை பிரதிநிதிகள் தங்கியிருந்த விடுதியில், லாலா லஜபதிராய், அரவிந்தர், லோகமான்ய பாலகங்காரதர திலகர், விபின் சந்திரர், கோபால கிருஷ்ண கோகலே, பண்டித மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ், ராஷ் பிகாரி கோஷ் போன்ற வேறு பலரும் தங்கியிருந்தார்கள்.

அப்போது அரவிந்தர் மற்றவர்களைப் பார்த்து, ‘என் பிள்ளையவர்கள் எங்கே?’ என்று குரல் கொடுத்தார்! அங்கே கூடியிருந்த வடநாட்டுத் தலைவர்கள் எல்லாம் திகைத்து உட்கார்ந்திருந்தார்கள். உடனே அரவிந்தர் எழுந்து “அவர் தாம் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற தேசபக்தர் தூத்துக்குடி வக்கீல் சிதம்பரம் பிள்ளை” என்றார்.

அதே நேரத்தில் சிதம்பரம் பிள்ளை எதிர்பாராமல் திடீரென மகா சபைக்குள் நுழைந்த போது, அரவிந்தர் விர்ரென்று எழுந்து போய் சிதம்பரம் பிள்ளையை அன்போடு மார்போடு மார்பாக அனைத்துக் கொண்டு. ‘இவர் தான் சிதம்பரம் பிள்ளை’ என்று கூடியிருந்த எல்லோருக்கும் அடையாளம் காட்டினார்.

சூரத் காங்கிரஸ் மகா சபையில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் ஏற்பட்டக் குழப்பத்தால் - நாற்காலிகள் பறந்தன. பின்னர், திலகர் தலைமையில் தீவிரவாதிகள் ஒன்று கூடி, தங்களது முற்போக்குக் கொள்கைகளை நாடெங்கும் பரப்பத் திட்டமிட்டனர். அதன் மூலமாக மக்களைச் சுதந்திரப் போருக்குத் தயார் செய்வது என்று தீர்மானித்தார்கள்.

தமிழ்நாட்டில் தீவிரவாத கொள்கைக்கு மக்கள் ஆதரவு திரட்டிடும் பொறுப்பை சிதம்பரம் பிள்ளையிடம் திலகர் ஒப்படைத்தார். “தென்னாட்டிலேயே சிறந்த வீரர் சிதம்பரம்பிள்ளை ஒருவர் தாம்” என்றார் திலகர்.

தமிழ்நாடு திரும்பிய சிதம்பரம் பிள்ளை, ஆங்கிலேயர் ஆட்சியினால் இந்திய மக்கள் அனுபவிக்கும் தீமைகளைப் பொதுக் கூட்டங்களைக் கூட்டி விளக்கினார். அதனால், தமிழ் மக்கள் சுதந்திரப் போருக்குத் தயாராக வேண்டும் என்று உரையாற்றினார்!

1908-ஆம் ஆண்டில், மக்களைத் தேசாபிமானிகளாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ‘தேசாபிமானி சங்கம்’ என்ற ஒரு சங்கத்தை உருவாக்கி, பல இளைஞர்களை உறுப்பினர்களாக்கினார். இந்த வாலிபர்களைக் கொண்டு நெல்லை மாவட்டப் பட்டி தொட்டிகளிலே எல்லாம் அடிக்கடி பொதுக் கூட்டங்களைக் கூட்டி பிரிட்டிஷ் ஆட்சியின் கேடுகளைப் பொதுமக்கள் உணர்ந்து வீறிட்டெழும் வகையில் பேசி வந்தார்!

திருநெல்வேலி மாவட்டம் மட்டுமன்று. அடுத்தடுத்துள்ள மாவட்டச் சிற்றுர், பேரூர்களிலே எல்லாம் தேசாபிமானி சங்கங்கள் தோன்றலாயின. சுதந்திரம் தேவை என்பதின் அருமை பெருமைகளை எல்லாம் மக்கள் புரியத் தொடங்கி, தேசாபிமானிகள் நடத்தும் பொதுக் கூட்டங்களுக்கு மக்கள் பெருவாரியாகத் திரள ஆரம்பித்தார்கள்.

அவ்வாறு திரண்ட மக்கள் இடையே சிதம்பரனார், சுதேசிப் பற்று, வெளிநாட்டுச் சாமான்கள் விலக்கு, தேசியக் கல்வி, மனித உரிமைகள், விடுதலையின் விளக்கங்கள், அடிமை ஒழிப்புகள் என்பன பற்றியவைகளை எல்லாம் பேசி உணர்ச்சிகளின் போர்வாட்களாக மக்களை மாற்றிக் கொண்டே இருந்தார் சிதம்பரம் பிள்ளை.

அக்காலத்தில் ஆங்கிலத்தில் பேசுவதைத்தான் சிலர் பெருமையாக மதிப்பார்கள். தமிழிலே பேசுவதை சிறுமையாகக் கருதும் காலம் அது. ஏழை மக்கள் காங்கிரசில் சேராத நேரம். அப்படிப்பட்ட காலத்தில் ஏழை மக்களைக் காங்கிரசில் சேர்த்து, அவர்களிடையே சுதந்திரம் ஏன் தேவை என்ற கருத்துக்களை எடுத்துரைத்து அவர்களை நாட்டின் விடுதலைப் போருக்குத் தயார்படுத்தி வந்தார் சிதம்பரம் பிள்ளை. இத்தகைய சுதந்திரக் கருத்துக்களின் பரிமாற்றத்தினால், ஏழைகளும், நடுத்தர மக்களும், காங்கிரசில் சேர்ந்தது மட்டுமல்ல; தேசாபிமானி சங்கங்களும் பரவலாகத் தோன்றிக் கொண்டே இருந்தன. இந்த சக்தியை தமிழ்நாட்டில் வளர்த்த பெருமை சிதம்பரம் பிள்ளையின் இடையறாத உழைப்பின் வெற்றியையே சாரும்.

இந்த நேரத்தில் சுப்பிரமணிய சிவா என்ற 23 வயது வாலிபர் சிதம்பரனாருடன் இணைந்தார். சிவா ஒரு தேசாபிமான வெறியர். மதுரை மாவட்டம் வத்தலக்குண்டு என்ற கிராம முன்சீப் மகன் அவர்! அருமையான கனல் பறக்கும் பேச்சாளர். புழுவைக் கூட புலியாக்கும் அவரது பேச்சு. குடும்ப வாழ்வை வெறுத்த ஒரு துறவி. ஆழ்ந்த தமிழ் இலக்கிய நூலறிவும், ஆங்கில ஞானமும் பெற்ற நாவலன். நாட்டில் வளர்ந்துவரும் பாரதத் தாயின் விடுதலை உணர்ச்சி இயக்கம் அவரை ஒரு சுதந்திர வெறியராக்கிவிட்டது எனலாம்.

நினைத்ததை நினைத்தவாறு செய்து முடிக்கும் வல்லமை பெற்றவர். மதுரை மாவட்டத்தில் அவர் காலடி படாத கிராமங்கள், நகரங்கள் இல்லை எனலாம். ஒவ்வொரு ஊருக்கும் சென்று தேசிய பிரச்சாரம் என்ற நெருப்பை மூட்டி விட்டு வருவார். அதுதான் அவரது விடுதலைப் பணி. சிலரது நெஞ்சங்களிலே அத்தீ சூடேற்றிக் கொண்டே இருக்கும்.

1907-ஆம் ஆண்டு இவர் திருநெல்வேலிக்குச் சென்றார். தேசாபிமானிகள் சங்கத்தார் அவரை வரவேற்றார்கள். சிதம்பரம் பிள்ளை சிவாவைச் சந்தித்தார். ஒருவருக்கு ஒருவர் கனன்று கொண்டும் விசிறிக் கொண்டும் ஆங்கில எதிர்ப்பு என்ற கனலைக் கக்கினார்கள்.

இவ்விருவரது சொற்பொழிவைக் கேட்க மாவட்டம் முழுவதுமுள்ள தேசியவாதிகள் திரண்டார்கள். சிவா, தூத்துக்குடி சென்று அங்கும் பிரசாரம் செய்தார். சுதேசிக் கப்பல் நிறுவனப் பணிகளை முடித்துக் கொண்டு நாள்தோறும், சிவா எங்கு பேசினாலும் சரி, அங்கே சென்று அவர் சொற்பொழிவுகளைக் கேட்டு உணர்ச்சி பெறுவார் சிதம்பரனார். சிவாவின் துடிதுடிப்பான பேச்சும் கணிர் கணிரென்ற குரல் வளமும், தீ போன்று சிதறி விழும் சொற்பிரயோகங்களும் சிதம்பரனாருக்கு மிகவும் பிடிக்கும்! எனவே, சிவாவின் பேச்சைக் கேட்க சிதம்பரனார் ஒருநாளும் தவறமாட்டார். அதுபோலவே இருவரும் பிரியா நண்பர்களாகவும் மாறினர். சிதம்பரனாரும் சிவாவும் இணைந்து பொதுக் கூட்டங்களில் பேசவேண்டும் என்று பொதுமக்கள் வற்புறுத்துவார்கள். அதனால் இருவரும் இணைந்து பேசும் கூட்டம் என்றாலே ஆயிரக்கணக்கானோர் அக்காலத்திலே கூடிக் கேட்பார்கள். காரணம், சிவா பேச்சு எரி நெருப்பாகக் கனல் வீசும். சிதம்பரம் பேச்சோ அந்த நெருப்பை ஊதிவிடும் சூறைக் காற்றாகச் சுழன்று வரும். அதனாலே தேசபக்தர்கள் அவர்களது கூட்டங்களுக்குப் பெருந்திரளாக வந்து கூடுவார்கள். தூத்துக்குடி நகரிலே தற்போது ஹார்வி பஞ்சாலை என்று அழைக்கப்படும் பஞ்சாலைக்கு அப்போது கோரல்மில் என்று பெயர். அதில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களுக்கு கூலியை உயர்த்தவேண்டும் என்று வெள்ளை முதலாளிகளிடம் வேண்டினார்கள். அதற்கு அந்த முதலாளிகள் ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டார்கள். இதைக் கண்டு மனங்கொதித்த ஊழியர்கள் அனைவரும் ஒற்றுமையாகக் கட்டுப்பாட்டுடன் வேலைநிறுத்தம் செய்தார்கள். அதனால், அவர்களது குடும்பங்கள் பல பட்டினியாகக் கிடந்தன.

சிதம்பரனார் வெள்ளையர்களின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து, சில வழக்குரைஞர்களின் உதவியால் பணம் திரட்டி, பட்டினி கிடக்கும் தொழிலாளர் குடும்பத்துக்குப் பேருதவி புரிந்தார். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட இரண்டாயிரம் தொழிலாளர்களில் ஓராயிரம் பேருக்கு துத்துக்குடி மக்களிடம் வேண்டி கேட்டு வேலைகளைப் பெற்றுத் தந்தார்.

வேலை நிறுத்தம் நடந்த எல்லா நாட்களிலும், தூத்துக்குடி நகரில் வெள்ளையர்களது தொழிலாளர்கள் துரோகத்தைக் கண்டித்துப் பொதுக் கூட்டங்கள் நடைபெறும். அக்கூட்டங்களில் சிதம்பரம் பிள்ளை புயல்போல சுழன்று சுழன்று வெள்ளையர்களது மனித நேயமற்ற தன்மைகளைச் சாடுவார். தொழிலாளர்களது கோரிக்கைகளைப் பெறும் வரை முதலாளிகளுக்குப் பணியக் கூடாது என்பார். சிதம்பரம் பேச்சு தொழிலாளர்களின் ஊக்கத்தையும் உறுதியையும் அதிகப்படுத்துவனவாக அமைந்தன!

கோரல் மில் வேலை நிறுத்தம் தொடர்ந்து நடைபெற்றது. அதனால் மில் முதலாளிகள் சிதம்பரம் பிள்ளை மீது தீராக் கோபமடைந்தார்கள். வேலை நிறுத்தம் செய்வதற்குத் தூண்டி விட்டவர் சிதம்பரம் பிள்ளைதான் என்று அவர் மீது வழக்குத் தொடுத்தார்கள்.

பொதுக் கூட்டங்களில் அவர் பேசினால் ஊரில் கலகம் ஏற்படும். அமைதி நாசமாகும். எனவே பொதுக் கூட்டத்தில் பேசக் கூடாது என்று மாஜிஸ்திரேட் சிதம்பரம் பிள்ளையை நேரிடையாகவே அழைத்து எச்சரித்தார்.

மாஜிஸ்திரேட் எச்சரிக்கை சிதம்பரம் பிள்ளைக்கு செவிடன் காதிலே ஊதிய சங்கு போல ஆனது. மதிக்கவில்லை அவர். தொடர்ந்து அவர் தொழிலாளர்களது கூட்டங்களில் பேசியே வந்தார்.

கோரல் மில் தொழிலாளர்களது வேலை நிறுத்தம் மதுரையில் உள்ள பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கும் தெரிந்தது. மதுரைத் தொழிலாளர்களும் தூத்துக்குடித் தொழிலாளர்களுக்கு அனுதாபம் காட்டும் எண்ணத்தில் வேலைக்குப் போக மறுத்துவிட்டார்கள். அதனால் தூத்துக்குடி வேலை நிறுத்தம் ஏழு நாட்கள் நீடித்தது. மில் முதலாளிகளான வெள்ளையர்கள் தொழிலாளர்களுக்குப் பணிந்தார்கள். கூலியை அரைப் பங்கு உயர்த்தித் தர முதலாளிகள் ஒப்புக் கொண்டார்கள். பிறகுதான் ஊழியர்கள் வேலைக்குச் சென்றார்கள்.

சிதம்பரம் பிள்ளையின் பேச்சும், தேசிய ஊழியமும் மக்கள் மனதில் நாட்டுப் பற்றைப் பொங்கச் செய்தது. இதைக் கண்டு ஆங்கிலேயர்களது அடிவயிற்றில் நெருப்பைக் கக்கியது. அதிகாரிகள் பயந்தார்கள். தூத்துக்குடியில் எந்தக் கலகமும் ஏற்படாதிருக்க போலீஸ்படை குவிந்தது. பெரும்பாலோர் இதை எதிர்த்தார்கள். ஆனால், வழக்குரைஞர் அரங்கசாமி என்பவர் மட்டும் போலீஸ் குவிப்பை ஆதரித்தார். அவரது மனோபாவத்தை ஊரார் வெறுத்தார்கள்.

ஒருநாள் அரங்கசாமி என்ற அந்த வக்கீல் முக சவரம் செய்து கொள்வதற்காக முடிதிருத்தும் தொழிலாளி ஒருவரை அழைத்தார். சவரம் செய்ய வந்த தொழிலாளி வக்கீலைப் பார்த்து, “நீங்கள் மட்டும் அதிகப் போலீஸ் படை வேண்டும் என்றீர்களாமே” என்று கேட்டார்.

“அதுபற்றி உனக்கென்ன? அது உன் வேலையல்ல” என்றார் வக்கீல். அப்படியானால் உமக்குச் சவரம் செய்வதும் என் வேலையல்ல என்று கூறி, அரைகுறையாகச் செய்த முக சவரத்தோடு அப்படியே நிறுத்திவிட்டு, அந்தத் தொழிலாளி விர்ரென்று சென்றுவிட்டார். அதுபோலவே வேறு தொழிலாளிகளும் அவருக்கு சவரம் செய்ய மறுத்து விட்டார்கள். அதற்கு பிறகு, வக்கீல் ரயில் ஏறி திருநெல்வேலி சென்று மீதியுள்ள அரைகுறை முகசவரத்தைச் செய்து கொண்டு வந்தார். பொதுமக்களுக்கு சிதம்பரம் பிள்ளை மீதும், அவரது லட்சிய முடிவுகள் மீதும் அவ்வளவு ஆழமான பற்றுதலும், மதிப்பும் மரியாதையும் இருந்தது. சிதம்பரம் பிள்ளை மேடை ஏறிவிட்டால், ஏன் நாம் சுதேசித் தொழில்களை ஆதரிக்க வேண்டும் என்பதைப் பற்றி ஒரு கிராமத்தான் கூடப் புரிந்து கொள்ளுமளவிற்குப் பேசுவார்! அந்தப் பேச்சு மக்கள் இடையே அத்தகைய பெருமையைத் தேடித் தரும்.

‘சுதேசிப் பொருள்களை வாங்குவதானால் விலைகள் அதிகமாகிறதே’ என்று மக்கள் சிதம்பரனாரைத் திருப்பிக் கேட்ட போது. ‘நீங்கள் கொடுப்பது உங்களுடைய சகோதரர்களுக்குத் தானே’ என்பார்.

தூத்துக்குடியில், சுதேசிக் கிளர்ச்சி அரசியல் புரட்சியாக மாறியது. அதை அறிந்த அதிகாரிகள், எவரும் ஆயுதங்களையோ, தடி, கம்பு, கொம்புகளையோ எடுத்துச் செல்லக் கூடாது என்று தடை விதித்தார்கள்.

சிதம்பரனார் இதைக் கேள்விப்பட்டு, பெருங் கோபமடைந்து, ‘வேல் பிடித்த வீரத் தமிழர்கள்.இப்போது கோல்கள் கூட பிடிக்க உரிமை இல்லையா?’ என்று ஆத்திரப்பட்ட அவர் ஆட்சி ஆணையை மீறுமாறு கட்டளையிட்டார். அடிமைத் தனத்தால் மக்கள் படும் அவதிகளைக் கண்டு வருந்தினார். “ஆளப் பிறந்த நம்மை ஆறாயிரம் மைலுக்கப்பாலிருந்து வந்த ஆங்கிலேயன் ஆள்வதா?” என்று கேட்டார். இதுவே, பின்னாளில் திருநெல்வேலிப் புரட்சிக்குக் காரணமானது. சிதம்பரனார் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் படை திரட்டினார். மக்களும் அவரைப் பின்பற்றினார்கள்.