கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்/003-005

விக்கிமூலம் இலிருந்து
3. பொருளாதாரம்

ஒரு நல்ல அரசு அமைய நல்ல சமுதாய அமைப்புத் தேவை. நல்ல சமுதாயம் அமையப் பொருளாதார அமைவு சீராக இருக்கவேண்டும். நாம் எவ்வளவுதான்— பொருளை இரண்டாந்தர இடத்திற்குத் தள்ளினாலும் பொருள் முதலிடத்திற்கு வந்து அமர்ந்து கொள்கிறது. ‘பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்று திருக்குறள் கூறுகிறது. ‘கடவுள் பக்திக்கு அடுத்தபடியாக முக்கியமான கடமையாக இருப்பது, அறவழியில் செல்வம் ஈட்டுதலேயாம்’ என்றார் முகம்மதுநபி.

கோசல நாட்டுப் பொருளாதாரம்

கோசல நாட்டில் பொருள்வளம் நிறைந்து இருந்தது என்பதைக் கம்பன் பல பாடல்களில் விளக்குகின்றான். கடல் கடந்த நாடுகளில் எல்லாம் வர்த்தகம் செய்ததன் மூலம் நிறைய நிதி வந்து குவிந்தது. ஒரு நாட்டில் ஏற்றுமதிதான் அந்நாட்டின் செல்வத்தை அளந்தறிதற்குரிய அளவுகோல். விளை நிலங்கள் நன்றாக விளைந்தன. நிலத்தடியிலிருந்து வைரக் கற்கள் அகழ்ந்தெடுக்கப்பெற்றன. இங்ஙனம் பலவகையாலும் செல்வம் செழித்த கோசலை நாட்டைக் கம்பன்,

“கலம் சுரக்கும் நிதியம்; கணக்கு இலா
நிலம் சுரக்கும், நிறைவளம்; நல்மணி
பிலம் சுரக்கும்”

(கம்பன்-69)

என்று குறிப்பிடுகின்றான்.

கோசல நாட்டில் வறுமை இல்லை. வறுமை கொடியது. சமய நூலாகிய சித்தியார், ‘வறுமையாம் சிறுமை தப்பி’ என்று கூறும் ‘நெருப்பினுள் தூங்கலாம் ஆனால் வறுமையில் தூங்க முடியாது’ என்று திருக்குறள் கூறும். வறுமை மனிதனுடைய உணர்ச்சியை மரத்துப் போகச் செய்து விடுகிறது. உயரிய பண்புகளை இழக்குமாறு செய்துவிடுகிறது. வறுமை மனிதனுடைய ஊக்கத்தையும் பண்பையும் பறித்துவிடுகிறது. ஆதலால்,

“இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது”

(திருக்குறள்-153)

என்றது திருக்குறள். மக்களிடத்தில் வறுமை இருக்குமானால், அந்நாட்டில் நல்ல சமுதாய அமைப்பும் இராது, நல்லாட்சியும் இராது என்று கூறுவர். கோசல நாட்டில் வள்ளன்மை இல்லை. ஏன்? வறுமையில்லாமையால்! கோசல நாட்டில் ‘எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை’ என்பது கம்பனின் பாடல். எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் பெற்றிருந்தார்கள் என்பது நடைமுறைச் சாத்தியமா? அல்லது கம்பனின் இலட்சியமா? ‘எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தி வாழ்தல் பொதுவுடைமைச் சமுதாயத்தில் இயலும்’ என்பது மாமுனிவர் மார்க்சின் கருத்து. இதுவரையில் பொதுவாக உலக அரங்கில் எந்த நாட்டிலும் பொதுவுடைமைச் சமுதாயம் அமையவில்லை. பொதுவுடைமைச் சமுதாயம் அமைப்பதற்கு முன்னோடியாக அமையக் கூடிய சோஷலிச சமுதாய அமைப்பே— சமவாய்ப்புச் சமுதாயமே இன்னும் உலக அரங்கில் கால் கொள்ளவில்லை. ‘சம வாய்ப்புச் சமுதாயத்தில் சக்திக்கேற்ற உழைப்பு. உழைப்புக்கேற்ற ஊதியம். பொதுவுடைமைச் சமுதாயத்தில் சக்திக்கேற்ற உழைப்பு. தேவைக்கேற்ற ஊதியம்’ என்பது கோட்பாடு. இன்னமும் மக்கட் சமுதாயத்தில் பலர் உழைக்க விரும்புவதில்லை; ஆனால் அனுபவிக்க விரும்புகின்றனர்; துய்க்க விரும்புகின்றனர். இத்தகையோர் வாழும் இந்தச் சமுதாயத்தில் எங்ஙனம் சோஷலிசம் உருவாகும்? பொதுவுடைமைச் சமுதாயம் அமைய இயலும்? என்றைக்கு மனிதர்கள் விருப்பார்வத்துடன், ஆவேசத்துடன் உழைப்பதை உயிரின் இயல்பாக (ஜீவசுபாவமாக) ஏற்றுக் கொள்கின்றார்களோ அன்றுதான் சோஷலிச சமுதாயம் மலரும்; பொதுவுடைமைச் சமுதாயம் தோன்றும்.

ஆதலால், கம்பன் பொருளாதாரத்தைப் பொறுத்த வரையில் ஓர் இலட்சிய உலகம் பற்றி எண்ணி இருந்தான் என்பதை உணர முடிகிறது. அந்த இலட்சியம் அவன் படைத்த கோசல நாட்டில் கூட நடைமுறையில் இல்லை. உறுதியான, பண்பார்ந்த சிந்தனையுடன் இராமனுக்கே முடிசூட்ட வேண்டும், பரதனுக்கன்று என்று கூனியுடன் வாதாடிய கைகேயியின் தூய சிந்தையும் திரிந்தது எப்படி? கூனி என்ன மந்திர வித்தையா செய்தாள்? அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. கோசல நாட்டின் பொருளாதார குவியல் முறையில் இருந்தது. எல்லோருக்கும் செல்வம் கிடைக்கவில்லை. ஏன்? கைகேயிக்கே கிடைக்காது. கைகேயியின் மகன் பரதனுக்கும் ஒன்றும் கிடைக்காது. எல்லா உரிமையும் இராமனின் தாய் கோசலைக்கே உண்டு. கோசலை விரும்பிக் கொடுப்பதைத்தான் பெற்று வாழவேண்டும் என்ற பொருளாதார அடிப்படை, கைகேயியின் தூய சிந்தையையும் திரியும்படி செய்துவிட்டது.

கைகேயி ஒரு சாதாரணப் பெண் அல்லள். கேகய நாட்டு இளவரசி, தசரதனையே மரணப்பிடியிலிருந்து காப்பாற்றிக் கைம்மாறாக வரம் பெற்றவள். அயோத்தியில் பல ஆண்டுகள் அரசியாக வாழ்ந்திருக்கிறாள். இந்த விஷயத்தில் கூனி கூறியது தவறாக இருந்திருக்குமானால், கைகேயி வாதாடி இருப்பாள். கோசல நாட்டின் நடைமுறை, அதிகாரம் உள்ளவர்களுக்கே பொருள்; ஆள்வோர் பக்கமே எல்லாம்; ஆளப்படுவோருக்கு ஒன்றும் இல்லை என்றுகூட எண்ண வேண்டியிருக்கிறது. இந்தக் கருத்துக்கு அரண் செய்யும் வகையில் பிறிதொரு நிகழ்ச்சியும் உள்ளது. இராமன் காட்டுக்குப் பயணம் செய்யும் நிலையில் ஒரு பார்ப்பனன் பசு தானம் கேட்கிறான். எத்தனை பசு என்று இராமன் கேட்கிறான். பார்ப்பனன், ‘ஒரு கம்பை எடுத்துச் சுழற்றி எறி! அந்தக் கம்பு விழும் எல்லைப் பரப்பளவுக்குப் பசுக் கூட்டத்தை நிரப்பிக் கொடு’ என்று கேட்கிறான். இராமன் அப்படியே கம்பைச் சுழற்றி எறிகிறான். கம்பு விழுந்த எல்லை அளவு பசுக்களை நிரப்பித் தருகிறான். ஆனால் அந்தப் பார்ப்பனன் பேராசை காரணமாக இராமன் சுழற்றி எறிந்த கம்பு, மேலும் தூரம் கடந்து விழவில்லையே என்று கவலைப்பட்டதை இராமன் கண்டு நகைத்தானாம். இது சீதை, அசோகவனத்தில் நினைந்து அழுத செய்தி. இந்த நிகழ்ச்சியின் மூலம் ‘கொள்வார் இலாமை, கொடுப்பார்களும் இல்லை’ என்பதும்; ‘எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்துதல்’ என்பதும் கம்பனின் இலட்சியம் என்று தெரிகிறது. அது இந்த மண்ணில் எப்படி நடக்கும்? எப்போது நடக்கும்?

அடுத்து, ‘கள்வர் இலாமை, காவலும் இல்லை’ என்று. கம்பன் கூறுகின்றான். களவு வந்து காவல் வந்ததா? காவல் வந்து களவு வந்ததா? பரிணாம வளர்ச்சியின்படி பார்த்தால் காவலைத் தொடர்ந்துதான் களவு வந்திருக்கும். மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டிய பொருளைப் பூட்டி வைத்துக் காவல் காக்கின்றனர். தேவைப்படுவோர் எடுத்துக் கொள்கின்றனர். இதனை உலகியலில் களவு என்று கூறுகின்றனர். ஆனால், தமிழக வரலாற்றில் தொன்மைக் காலத்தில் களவு இருந்ததில்லை. சீன யாத்திரிகர்கள், பாஹியான், ஹூவான்சுவாங் போன்றவர்கள் ‘தமிழ்நாட்டில் வீடுகள் திறந்து கிடந்தன. நள்ளிரவில் பயமின்றி மக்கள் நடமாடினர்’ என்று தங்களுடைய யாத்திரைக் குறிப்புக்களில் எழுதியுள்ளனர். களவும் காவலும் இலாத நாடு கோசலநாடு என்பது பெருமைக்குரிய செய்தி. வறுமையுடையோன் பொருளைப் போற்றி வாழ்வான். வறுமையுடையோன் தனக்குரிய ‘நன்செய் நிலம் சிறிதே எனினும் வளமாகப் பேணி வைத்து விளைவு கண்டு வாழ்வான். வறிஞன் ஓம்புமோர் செய்யெனக் காத்து’ என்பான் கம்பன்.

இந்தியா ஏழைகள் நிறைந்த நாடு. வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் எண்ணிக்கை 58.9% ஆயினும் இந்த நாட்டின் தரிசு நிலம் ஏராளம். வீட்டுப்புறத் தோட்டத்தைப் பயன்படுத்துவோர் மிகமிகக் குறைவு. நிலத்தின் மண்வளத்தைப் பாதுகாத்தால் நாடு வளம் கொழிக்கும். இன்று கோதுமை, சர்க்கரை, எண்ணெய் முதலியன இறக்குமதி செய்யப்படுகின்றன. ஏன்? நமது நாட்டில் விளைவிக்க இயலாதா? இயலும்! ஆனால் போதிய முயற்சி இல்லை!

கம்பன் ‘தவமும் முயற்சியும் வேண்டும்’ என்றான், வாழ்க்கை பயனுடையதாதல் முயற்சியினாலேயாம். முயற்சியினாலேயே வாழ்க்கையின் மதிப்பு உயர்கிறது. இரும்பைக் காய்ச்சி உருக்கி அடித்தால் அதன் விலை மதிப்புக் கூடுகிறது. அது மட்டுமல்ல, அது இரும்பு துருப்பிடித்து அழிந்து போகாமலும் பாதுகாக்கப்படுகிறது. அதுபோலத்தான் முயற்சியின் விளைவாக, பயனாகத் துன்பங்களையும் துயர்களையும் ஏற்றுக் கொண்டு தொடர்ந்து உழைப்பவர்கள் மாமனிதர்களாகிறார்கள்; சாதனை செய்தவர்களாகிறார்கள். வரலாற்றில் இடம் பெறுகிறார்கள். முயற்சியில் ஈடுபடாதவர்கள் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகிச் சாகின்றனர். வாழ்க்கை என்பது போராட்டம்! இந்த போராட்டத்தில் அக்கறையும் முயற்சியும் உடையவன் வீழ்ந்துவிட்டாலும் தரையில் மோதிய பந்துபோல் மீண்டும் எழுந்துவிடுவான். முயற்சியில்லாதவன் கோழை. வீழ்ச்சியடைந்தால் மண் உருண்டை போல உடைந்து மண்ணோடு மண்ணாகி விடுவான்.

தவத்தின் சின்னம்

தவத்தின் சின்னமாக விளங்குபவன் இராமன். ஆம்! முடியைத் துறந்தபோதும் அப்பொழுதலர்ந்த செந்தாமரை போன்றிருந்தான். ‘என் பின்னவன் பெற்ற பெருஞ் செல்வம் அடியேன் பெற்றதன்றோ’ என்றும், ‘மன்னவன் பணியன்றாகில் நும் பணி மறுப்பனோ?’ என்றும் கூறி உவகையுடன் காட்டிற்குள் புகுந்தானே! இது தவம் அல்லவா?

முயற்சியின் சின்னம்

முயற்சியின் சின்னம் சுக்கிரீவன். ஆம்! இழந்ததைத் தொடர்ந்து முயன்று பெற்றவன் அவன். ஆதலால், சுக்கிரீவனை கம்பன் முயற்சியின் திருவுருவமாகப் பாராட்டுகின்றான். வாழ்க்கையை வலிமையுடையதாக்கிக் கொள்ள, தீமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, நாளும் நல்லன பல செய்ய, முயற்சி தேவை. முயற்சியே மனிதனை முழுமைப்படுத்துகிறது; வளர்க்கிறது; வாழ்விக்கிறது. செல்வத்துப் பயன்

பொருள் ஈட்டல், சேர்த்தல், பாதுகாத்தல் மனித வாழ்க்கையில் நடைபெறும் ஒரு பணி — இல்லை — ஒரு போராட்டம்! பொருள் தேடுவது ஒரு பெரிய காரியம். அதை விடப் பெரிய காரியம் அதைக் காப்பாற்றுவது. அதைவிடப் பெரிய காரியம் அதை முறையாக அனுபவிப்பதும், கொடுத்து மகிழ்தலுமாகும். வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை மருந்து என்றும் கூறுவது தமிழ் மரபு. பொருள் தேடல் வாழ்க்கையின் இலட்சியமன்று. பொருள் வாழ்க்கையின் கருவியே. நல்லறிவும் பண்பும் உடையவர்களுக்குப் பணம் பணியாள்; ஆனால், இவை இல்லாதவர்க்கோ மோசமான எசமானன், வாழ்க்கையைப் படித்துக் கொள்ளச் செல்வம் மட்டும் துணை செய்யாது. வறுமையும் அதற்குத் துணை செய்ய இயலும். பொருளும் தேவை; அதைத் துய்க்கத் திறனும் தேவை. பொருளும் திறமும் பெற்றவர்கள் புண்ணியம் செய்தவர்கள். பொருளை மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழ்ச்சி பெறலாம். வேறு உபயோகம்தான் என்ன ? செல்வத்தைத் தனியே அனுபவித்தல்—இழத்தலுக்கு சமம்.

“செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே.”

என்கிறது புறநானூறு.

ஆற்று வெள்ளத்தில் படகு போகிறது. ஆற்றுத் தண்ணீர் படகினுள் புகுந்துவிட்டால் படகில் நிறைந்த தண்ணீரை உடன் வெளியேற்ற வேண்டும். அதுபோல வீட்டில் செல்வம் நிறைந்துவிட்டால் அதையும் மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழ்வதோடு ஆன்மிக அழிவு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கம்பன் கிட்கிந்தா காண்டத்தில் கார்கால வருணனையில் செல்வத்தினைத் துய்த்த மாந்தரை வருணிக்கிறான். மேகம் கருத்துச் சூல் கொள்கிறது. நீர் வளம் சுமந்து திரிகிறது. மேகம் அதனை மழையாகப் பொழிந்து மண்ணக மாந்தரை வாழ வைக்கிறது. அதனால் மேகம், நீர் வளத்தை இழந்து விடுகிறது. நீர்வளத்தை சூல் கொண்ட மையால் கருத்து இருந்த மேகம்—மழைபெய்தவுடன் வெளுத்துப் போகிறது. எப்படி? பொருளுடையோர் தம்மை இரந்து வருவோருக்கு வழங்கி, பின்வரும் இரவலர்களுக்குப் பொருள் தர இயலாமல் நாணுவது போல் என்கிறான் கம்பன். ஈட்டிய பொருளில் வாழ்வின் தேவைக்குப் போக மீதிச் செல்வம் சமூகத்திற்கே சொந்தம்.

“மன்கல் இல் பெருங் கொடை மருவி, மண் உளோர்
உள்கிய பொருள் எலாம் உதவி, அற்ற போது
எள்கல் இல் இரவலர்க்கு ஈவது இன்மையால்,
வெள்கிய மாந்தரின் வெளுத்த–மேகமே”

(கம்பன்-4251)

என்ற கம்பன் பாடல் நினைந்து நினைந்து ஒழுகலாறாக ஏற்கத் தக்கது.