உள்ளடக்கத்துக்குச் செல்

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்/004-005

விக்கிமூலம் இலிருந்து

4. போர் நெறி


மூகம், அரசியல் என்றால் அவற்றைத் தொடர்ந்து போர் வரும். இஃது இயற்கை. உலகந் தோன்றிய நாள் தொட்டு மனிதன் போராடி, இந்த மண்ணைச் செங்குருதியால் நனைத்திருக்கிறான். சில நாடுகளில் சில இனங்கள் அழிக்கப்பட்டே விட்டன. நமது நாட்டில் போர்கள் நிறைய நடந்தன. ஆயினும், நமது அரசர்கள் நடத்திய போர் முறையில் நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன. இராமகாதையில் பல போர்கள் நிகழ்ந்துள்ளன. எல்லாப் போர்களும் அறநெறிப் போர்களேயாம். போருக்கு முன்பு தூது அனுப்புவது மரபு. தூதில் உடன்பாடு ஏற்படாவிட்டால்தான் போர். போரும் குறித்த காலத்தில், குறித்த களத்தில் நடைபெறும். இரவில் போர் நடக்காது. இந்தப் போர்களினால் பொதுமக்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை; துன்பமும் நேராது.

அனுமன் தூது

தமிழ் இலக்கியங்களில் வரும் தூது பற்றிய பகுதிகள் அறநெறிக் களஞ்சியங்கள். இராமகாதையில் இலங்கைப் பேரரசன் இராவணனுக்கு அனுப்பப் பெற்ற முதல் தூதுவன் அனுமன். காப்பிய அமைப்புப்படி நோக்கினால் அனுமன் சீதையைத் தேடிப் போனவன்தான். இலங்கையில் நடந்த நிகழ்வுகளோ அவனைத் தூதுவனாக்கியது. இராவணன் முன் அனுமன் தூதுவனாக அமர்ந்து பேசுகின்றான். உலக வரலாற்றில் தீமை ஒரு பொழுதும் நன்மையையோ, வெற்றியையோ பெற்றதில்லை. வெற்றி பெற இயலாது. பொருளையும், காமத்தையும் அனுமன் ‘இருள்’ என்று குறிப்பிடு கின்றான். வாழ்க்கையின் தெரிவு ஈதலும் அருளுமேயாம். அனுமன் கடைசியாக இராவணனை எச்சரிக்கை செய்கிறான்:

“ஆதலால் தான் அரும்பெறல் செல்வமும்
ஒது பல்கிளையும் உயிரும் பெற,
‘சீதையைத் தருக’ என்று எனச் செப்பினான்
சோதியான் மகன் நிற்கு” எனச் சொல்லினான்.

(கம்பன்-5910)

என்பது கம்பன் பாடல்.

மனித இயல்பு

மனிதன், மனிதனுமல்லன்; விலங்குமல்லவன், தெய்வமுமல்லன். மனிதன் விலங்குத் தன்மையிலிருந்து விலகி, கடவுள் தன்மையை அடைய வேண்டிய படைப்பு. இந்த உண்மையை உணர்ந்து, அறிந்து, தெளிந்து வாழ்பவர்கள் பலர் இல்லை. மிகமிகச் சிலர்தான் உள்ளனர். இந்த நிலையிலும் எப்போதும் மனிதனிடத்தில் மிருகக் குணம், மனித இயல்பு, தெய்வப் பண்பு ஆகியன உடன் சேர்ந்து கலவையாக இருக்கும். சூழ்நிலைமையின் நிகழ்வுகளுக்கு ஏற்ப அவற்றில் ஒன்று கூடும்; பிறிதொன்று குறையும். மனித இயல்புகளை நுண்ணிதில் கண்டுணர்த்திய சான்றோர் மனிதனை தேவாங்கு, பாம்பு, பன்றி, நாய், வேட்டைநாய், கிளிப்பிள்ளை, கழுதை, வான்கோழி, தூண், கழுகு, ஆந்தை என்று கூறினர். ஆந்தைக்கு வெளிச்சம் பிடிக்காது. மனிதனுக்கு உண்மை பிடிக்காது. உழைக்காமல் பிறர் பிழைப்பில் வாழ்பவன் கழுகு. கல்வியறிவு இல்லாதவன் விலங்குமல்லன், ஏன்? விலங்குகளுக்குள்ள ஐந்தறிவு இந்த மனிதனுக்கு வேலை செய்யாது. அவன் உணர்ச்சியற்ற தூண், வீண் ஆடம்பரம் செய்பவன் வான்கோழி, அநீதியைத் தட்டிக் கேட்காமல் இருப்பவன் கழுதை, அறிவை வளர்த்துக் கொள்ளாமல் படித்த சாஸ்திரங்களைப் படித்துப் படித்து ஒப்புவிப்பவன் கிளிப்பிள்ளை. அடிக்கடி கோபம் கொள்கிறவன் வேட்டைநாய். சுயநிர்ணயம் இல்லாமல் பிறரை நச்சி வாழ்பவன் நாயாவான். அற்ப சுகத்தில் நாட்டமுள்ளவன் பன்றி. நல்லது என்று பெயர் வாங்கித் தீமை செய்பவன் பாம்பு. ஊக்கமில்லாமல் இருப்பவன் தேவாங்கு. இங்ஙனம் பலபடக் கூறினாலும் மானுட இயல்பில் ஆக்கிரமிப்புக் குணம்— போர்க் குணம் இருப்பதைக் குறிப்பிடவில்லை.

போருக்குக் காரணம்

மனிதன் அழுக்காறு, அவா, வெகுளி, ஆகியவற்றால் ஆட்டிப் படைக்கப்படும் பலவீனமுடையவன். அவன் மற்றவர்களுடன் ஒத்துப் போகமாட்டான். ஆனால் மற்றவர்கள் —உலகமே அவனுடன் ஒத்துழைத்துப் போக வேண்டும் என்று விரும்புவான். ஒவ்வொரு மனிதனும் உலகத்திற்குச் சமமானவன். ஒருவன் தானே என்று அலட்சியப்படுத்துவதற்குரியவன் அல்லன். இந்த மனித உலகத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன என்பதைச் சற்றும் உன்னான்; ஓரான். ஆனால், இந்த உலகம் அவனுக்குக் கடமைப்பட்டிருப்பதாக எண்ணிக் கொள்வான். அதனாலேயே இந்த உலகம் கெட்ட போரிடும் உலகமாக மாறியது.

மனிதனுக்கு வெறிபிடித்துவிட்டால் அவன் பேய், பிசாசு போல ஆகிவிடுகிறான். முன்னேற்றத்துக்கான சாதனங்களைக் கொண்டே மனிதகுலத்திற்குத் தீமை செய்கிறான். மனித குலத்தை நாசம் செய்கிறான். மனிதகுலம் வளர்ச்சி, முன்னேற்றம் என்ற முகடுகளுக்கு ஏறுவதற்கென உதவிய ஏணியைக் கொண்டே இறங்கி விடுகிறான். அணு, அழிவுப் பொருளன்று. ஆனால் அந்த அணு, அழிப் பொருளாக மாறிவிடுமோ என்ற அச்சம் இன்று நிலவுகிறது.

மனிதன் அரசியல், அரசு என்ற அமைப்புக்களின் வழி நெடிய பயணம் செய்து வந்துவிட்டான். இன்று அரசுகள் ஆதிபத்திய அரசுகளாக உள்ளன. ஆதலால், ஆதிபத்திய போட்டியில் ஈடுபடும் பொழுது மனிதன் விலங்காக மாறிவிடுகிறான். போர்கள் மனித மனத்தில் தோன்றி மக்கள் நலனைப் பறிக்கின்றன. ஆதலால், போர் வெறி மனிதனுடன் பிறந்தது. அவனுடைய போர் வெறியை மாற்றப் போராட வேண்டியிருக்கிறது. இந்தப் போராட்டம் இந்த உலக மக்கள் அனைவருடைய மனத்திலும் நடைபெற வேண்டும்.

போரினால் ஏற்படும் இழப்பு

சண்டை போடுதல் தவறு; தவறு என்று மக்கள் உணர வேண்டும். அதுவும் போர் என்றால் அறவே எதிர்க்க வேண்டும். எந்தப் போரிலும் இருவருக்கும் வெற்றி கிடைக்காது. ஒருவர்தான் வெற்றி பெற இயலும். மற்றவர் தோற்பது உறுதி. இதில் வெற்றி பெற்றவரும் மனிதர்தாம்; தோற்றவரும் மனிதர்தாம்! இதில் என்ன வெற்றி தோல்வி வேண்டியிருக்கிறது?

“இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்;
நின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றே; நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே;
ஒருவீர் தோற்பினும், தோற்பதும் குடியே;
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித்தேர்

நும் ஓர் அன்ன வேந்தர்க்கு,
மெய்ம்மலி உவகை செய்யும், இவ்விகலே!”

(புறம்-45)

என்ற புறநானூற்றுப் பாடல் இங்கு எண்ணத் தக்கது.

போரினால்—போருக்கு முன்பும், போர்க்காலத்திலும், போருக்குப் பின்பும், மக்கள் பல நலன்களை இழக்கின்றனர். நல்வாழ்வு வளரவும், பாதுகாப்புப் பெறவும், அரசுகளையும் ஆட்சிகளையும் அமைத்தனர் மக்கள். போரை விரும்பும் நாடுகளும் அரசுகளும் இதனை மறந்தது ஏன்? இரண்டாவது உலகப்போரின் அழிவு பற்றி,

“It has been calculated, for example, that the resources swallowed up, by the second world war, were enough for building a five-room house for each family in the world and also a hospital in each town with a population of over 5,000 people and to maintain all these hospitals for ten years. Thus, the resources wasted on one world war would be enough for radically solving the housing and health problems that today are so acute for the majority of man kind.”

(Fundamentals of Marxism-Leninism P–713)

என்று கணித்துள்ளனர். அதாவது இரண்டாவது உலகப்போரில் அழிந்த செல்வத்தைக் கணக்கிட்டால், இந்த உலகில் உள்ள அனைவருக்கும் ஐந்து அறைகள் கொண்ட வீடுகளும் ஒவ்வொரு நகரத்திற்கு ஒவ்வொரு மருத்துவமனையும் கட்டிவிடலாம் என்று கூறப்படுகிறது. இரண்டாவது உலகப்போரின் அழிவு இந்த நிலை என்றால் இன்று சொல்லவும் வேண்டுமோ?

வன்முறையும் ஆக்கிரமிப்பும் கண்டனத்திற்குரியவை. இவற்றை அறவே அகற்றி நிலையான அமைதி காண வேண்டும். நிரந்தரமாக ஆக்கிரமிப்புப் பயம் ஒழிந்து மக்கள் ஒன்றுகூடிச் செயலாற்ற வேண்டும். இந்த உலகில் பிறந்து வாழும் அனைவரது சமூகப் பாதுகாப்புக்கும் பொருளாதாரத்துக்கும் உத்தரவாதம் வேண்டும். மக்களுக்கு நல்வாழ்க்கை அமைத்துத் தருவதே அரசின் கடமை.

போர் அச்சம்

போரைவிடக் கொடுமையானது போரைப் பற்றிய அச்சம். அமைதிக் காலத்திலும் சில நாடுகள் வேற்று நாடுகளை எதிரி நாடுகளாகக் கருதி, எப்போதும் எதிர் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கும்; சிறு சிறு தாக்குதல்கள் நடத்திக் கொண்டிருக்கும். இதனைப் பனிப்போர் (Cold war) என்பர். இன்று நமது நாட்டுக்கும் பாகிஸ்தான் நாட்டுக்கும் இடையில் பனிப் போர்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காஷ்மீரில் நாள்தோறும் சிக்கல்! இதற்குப் பதில் போரே வந்தாலும் வரவேற்கலாம். அன்றாடம் செத்துப் பிழைப்பதைவிட இரண்டில் ஒன்று, விடை தெரிந்து கொள்வது நல்லது. அதனால் நாம் இந்தியா—பாகிஸ்தான் சண்டையை வரவேற்பதாகப் பொருள் கொள்ளக்கூடாது. நமது விருப்பம் வேறு.

இரண்டாவது உலகப் போரில் வல்லரசுகளால் பிரிக்கப்பட்ட கிழக்கு ஜெர்மனிக்கும், மேற்கு ஜெர்மனிக்கும் இடையில் இருந்த சுவரை இன்று இடித்துவிட்டு, ஒரே ஜெர்மனி நாடாக்கியுள்ளனர். அதுபோல, எதிர்காலத்தில் இந்திய இளைஞர்களும் பாகிஸ்தானின் இளைஞர்களும் ஆவேசத்துடன் சேர்ந்து இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரு நாடாக்க வேண்டும். இது எதிர்காலத்தில் நடக்கும். இது வரலாற்றின் தேவை. ஆதலால், பகை மூட்டமும் அச்சமும் இல்லாத நம்பிக்கையும் நல்லெண்ணமும் உடைய ஒரு சமுதாயமாக மனித குலம் உருப்பெற்று ஆர்த்தெழ வேண்டும். புத்துலகம் படைப்பதை இலட்சியமாகக் கொள்ள வேண்டும்; விண்ணின் ஆட்சியை மண்ணில் காண வேண்டும்.

இதயம் சுருங்கியது ஏன்?

மனிதனிடத்தில் பண்டங்களைப் பணமாக மாற்றுதல், பணத்தை நிலையான சொத்தாக மாற்றுதல், சொத்துக்களைப் பாதுகாக்க அரசு, — ஆதிபத்தியம் தோன்றல் எனப் படிப்படியாக வளர்ந்த நிலையில், அறிவு வறண்டு இதயம் சுருங்கியது. மனிதன் எதையும் செய்து எப்படியாவது தன்னுடைய நிர்வாணமான சுயநலத்தை நிறைவேற்றிக் கொள்ளத் தலைப்பட்டான். இரக்கம் என்ற ஒன்று இல்லாதவர்களாக மக்கள் வளர்ந்து வந்தார்கள். விலங்கும் கூடக் கூட்டமாகக் கூட்டி வைத்துப் பழக்கினால், பழக்கத்தின் காரணமாக ஒன்று சேர்ந்து வாழும் இயல்பினவாக வளரும். இங்ஙனம் ஒரு குரங்கும், பூனையும் இணைந்து வாழும் பாங்கினை அண்மைக் காலத்தில் நாம் பார்த்தோம்; கேட்டோம். ஆனால், மனிதன் பகையுணர்விலும் போரிடும் மனப்பான்மையிலும் வளர்ந்தே வந்துள்ளான். படிப்படியாகப் போர்க் கருவிகளை ஆற்றல் மிக்குடையனவாக வளர்த்து, இன்று நீர்வாயுக்குண்டு எல்லையில் வந்து நிற்கின்றான்.

பழைய காலத்துப் போர்களில் உலகம் முற்றாக அழிந்த நிலை இல்லை. ஆனால், இக்காலப் போர்களில் உலகம் அழிந்துவிடுவது மட்டுமல்ல—பல தலைமுறைகளுக்கு உறுப்புக் குறைவாகக் குழந்தைகள் பிறக்கின்ற கொடிய நிலை உருவாகி வருகிறது. இரண்டாவது உலகப் போரில் ஜப்பானுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் அளப்பரியன. ஹிரோஷிமா, நாகசாகியின் இடிபாடுகளைக் காணின் கல்நெஞ்சம் கரையும். இந்த உலகில் இதுவரை 50,000 போர்களுக்கு மேலாக நடந்துள்ளன. பல ஆண்டுகள் தொடர்ந்து நடந்த போர்களும் உண்டு.

போர்மயமான வரலாறு

போர்களை மையமாகக் கொண்டு காவியங்கள் இயற்றியவர்களில் புகழ் பெற்றவர்கள் வால்மீகி, வியாசர், கிரேக்கக் கவிஞர் ஹோமர், மில்டன் முதலியோர். இந்தப் போர்கள் கற்பனைகளல்ல; நடந்தவை. இராம காவியத்தைப் போல, பாரதம் போல, இலியாட்டில் வரும் டிராய் சண்டை அறப்போர் அன்று. சூது நடத்தி வெற்றி பெற்றது ஸ்பார்ட்டா நாடு. சர்வதேச அரங்கில் மராத்தான் ஓட்டம் 42 கி.மீ. ஓட வேண்டும். இந்த மராத்தான் ஒரு பந்தய வீரன். பெர்ஷிய நாட்டுக்கும் கிரேக்க நாட்டுக்கும் நடந்த சண்டையில் கிரேக்கர்கள் பெற்ற வெற்றியைச் சொல்ல ஓடி வந்தவன். அதனால் மராத்தான் ஓட்டம் என்று பெயர் பெற்றது. இங்ஙனம் வரலாற்றில் இடம் பெற்ற போர்கள் ஆயிரக்கணக்கில் உண்டு. கிரேக்க நாடு நகரப் பேரரசுகள் உடையதாகும். அதிலும் குறிப்பானது ஏதென்சு. அது ஏராளமான போர்களைச் சந்தித்து வெற்றி பெற்றிருக்கிறது. அலெக்சாண்டர் நடத்திய போரில்தான் முதல்முதலாகத் தோற்றது. உலகத்தில் சரிபாதியை வென்ற பெருமை அலெக்சாண்டருக்கு உண்டு. அடுத்து பிரிட்டன், பெரிய போர்களை நடத்தி, கதிரவனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தை ஏற்படுத்திய பெருமை பெற்றது. முதல் உலகப்போர் புகழ்பெற்ற போர். இனிமேல் போர் வேண்டாம் என்ற எண்ணம் வல்லரசுகளிடையே அரும்பிற்று. சர்வதேச சங்கம் தோன்றியது. ஆயினும் சங்கம் வலிமையுடன் இயங்க முடியவில்லை; போரைத் தவிர்க்க இயலவில்லை. இரண்டாவது உலகப்போர் நடந்தது. அலெக்சாண்டர், நெப்போலியன் ஆகியோருக்குப் பிறகு, மாவீரனாக அதே போழ்து ஆதிபத்திய வெறியுடையவனாகத் தோன்றினான் இட்லர். இட்லர் ஐரோப்பிய நாடுகளைச் சடசடவென்று வீழ்த்தினான். சோவியத் மீது படையெடுத்தபோது, சோவியத் நாட்டு மக்கள் தியாகத்துடனும் தீரத்துடனும் போராடி, இட்லரின் நாசிசப் படையைத் தோற்கடித்து மகத்தான வெற்றி பெற்றனர். இங்ஙனம் நடந்த போர்கள் பலப்பல. உலக வரலாற்றின் பக்கங்களில் தாமஸ் ஆல்வா எடிசன், சேக்ஸ்பியர், திருவள்ளுவர், ஏசு, நபிகள் முதலியோருக்குக் கிடைத்த பக்கங்கள் சிலவே! ஆனால் கெட்ட போரிட்டவர்களுக்கும் போர்களினால் ஏற்பட்ட அழிவுகளுக்கும் கிடைத்த பக்கங்கள் பலப்பல.

இந்தியா ஒரு துணைக்கண்டம். இந்தியாவில் ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கான அரசுகள் இருந்தன. இவர்களுக்கிடையே சண்டைகள் நடந்து கொண்டேயிருந்தன. தமிழ்நாட்டு வரலாற்றிலும் அப்படித்தான்! நாடு சிறியது; ஆனால் போர்கள் அதிகம்! பல அரசர்கள் இந்தியாவை ஒரு குடையின் கீழ்க் கொண்டுவர முயற்சி செய்தனர். சந்திர குப்த மெளரியன் ஒரு பேரரசன். இவனுடைய அரசியல் குரு சாணக்கியர். இவரியற்றிய அரசியல் சாத்திரம் அர்த்த சாத்திரம். இந்த நூலில் முரண்பட்ட செய்திகள் பல உண்டு. ஆயினும் நல்ல நூல். அடுத்து அசோகர், இவர் இந்தியாவில் பேரரசை நிறுவியவர். சிறந்த வீரர். தொடக்க காலத்தில் போர்க்களங்கள் பல கண்டு வெற்றி பெற்றவர். ஆயினும் பிற்காலத்தில் போரை வெறுத்தார். சமாதானக் காவலராக விளங்கினார். தமிழ் நாட்டில் மாமன்னன் இராஜராஜன், இராஜேந்திர சோழன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன், கரிகாற்சோழன் முதலிய பேரரசர்கள் போர்க்களங்களில் வாகை சூடியவர்கள்.

பண்டைய போர்களும் இன்றைய போர்களும்

இங்ஙனம் உலக வரலாறு, போர்களாலேயே நடத்தப் பெற்றது. இடையிடையே மனிதகுல முன்னேற்றத்திற்குரிய பணிகள், கலைப் பணிகள் நடந்தன. மிகத் தொன்மைக்காலத்தில் நடந்த போர்கள் அறநெறி சார்ந்த போர்கள். பின் விஞ்ஞான யுகத்தில் நடந்த போர்கள் அழிவுப் போர்கள். அறநெறிச் சார்பே இல்லாத போர்கள். ஏன்? பழங்காலத்தில் போராடிய வீரர்களுக்கு இருந்த வீரத்தில் குறைந்த சதமானம் கூட இக்காலத்தினருக்கு இல்லை. ஔிந்திருந்தும், மறைந்திருந்தும், இரவிலும், நடத்தும் போர் இன்றைய போர் ஏவுகணைப் போரில் ஏவுகணையைச் செலுத்துபவர் பத்திரமான — பாதுகாப்பான அறைக்குள் தங்கிக் கொள்கிறார். இந்தப் போர்களை வீரப்போர் என்று கூற இயலாது. இந்தப் போர்களில் பெறும் வெற்றிகளை வெற்றியென்றும் பாராட்ட இயலாது.

தமிழ் நாட்டில் நடந்த போர்கள் வீரப் போர்கள். எதிரியிடம் ஆயுதம் இல்லையென்றால் போர் நடத்தமாட்டான்; எதிரிகளின் முதுகில் குத்தமாட்டான். ஒரு குறிப்பிட்ட இடத்தில், களத்தில் பொருதுவான்; பொருது மேற்செல்வான். இரவில் போர் இல்லை. இவையெல்லாம் பண்டையக் காலப்போரில் நிலவிய அறநெறி. இன்று போர்க்களத்தில் அறநெறி இல்லை. பண்டையப் போர் முறையில் பொருள்களுக்கு, சொத்துக்களுக்கு இழப்பு ஏற்படுவது இல்லை. இக்காலப் போர்களில் அளவற்ற இழப்பு ஏற்படுகிறது. பண்டு போர் என்றால் பொதுமக்களுக்குத் துன்பம் இல்லை, மரணம் இல்லை. இன்றோ பொது மக்கள்தான் போரில் சாகிறார்கள். ஏராளமான சொத்துக்கள் அழிகின்றன. மனித குலத்திற்குப் போரற்ற உலகம் தேவை. அது எப்போது கிடைக்கும்? அமைதிக்கும் சமாதானத்திற்கும் போராட வேண்டிய மதங்கள் கூட வேறுபட்ட நிலையில் உள்ளன. எந்த நாட்டில் உள்ள மத நிறுவனங்களும் போர் ஓய்வுக்கும் அமைதிக்கும் பிரார்த்தனை செய்வதில்லை. அந்தந்த நாட்டிற்கு வெற்றி வேண்டியும், எதிரி நாடுகள் தோற்கும்படியுமே பிரார்த்தனை செய்துள்ளன. வெற்றி தோல்வி என்கிற நிலை நீடிக்கும் வரையில் போர்கள் தொடரும்.

வேறு காப்பியங்கள்

இந்தியாவில் போரை மையமாகக் கொண்ட மூன்று பெரிய காப்பியங்கள் தோன்றின. ஒன்று இராமாயணம், மற்றொன்று மகாபாரதம், பிறிதொன்று கந்தபுராணம். இவற்றுள் இராமாயணமும் மகாபாரதமும் நாடு தழுவியவை. ஏன்? ஆரிய நாடுகள் தழுவிய இதிகாசங்களாகும். கந்த புராணம் தமிழகத்திற்கே உரிய தனித்தன்மையுடைய புராணம். இராமகாதையில் வரும் போர் பெண் அடிப்படையில் நடந்த போர். பாரதப் போர்; நாடு—அரசு அடிப்படையில் நடந்த போர். கந்தபுராணப் போர்ஆட்சி—ஆதிக்க அடிப்படையில் நடந்த போர். முடிவுகள் வெற்றி—தோல்வி என்று முடிந்தன. இராமாயணப் போரில் இராமனால் இராவணன் கொல்லப்ப்ட்டான். மகாபாரதப் போரில் துரியோதனாதியர் அழிக்கப்பட்டு விட்டார்கள். இந்திய நாகரிகத்திலும் உயர்ந்தது தமிழ் நாகரிகம். தமிழ் நாகரிகத்தில் அழிவும் இல்லை; அழிக்கப்படுவதும் இல்லை. அதனால் கந்தபுராணத்தில் சூரபதுமன் அழிக்கப்படவில்லை; திருத்தப்பட்டான்; அங்கீகரிக்கப்பட்டான்.

அனுமன் தூது

பழங்காலத்தில் போர் நடைபெறுவதற்கு முன் தூது அனுப்புவது வழக்கம். எந்தக் காரணத்தினால் போர் வரும் என்று கருதப்படுகிறதோ அது பற்றி எதிரி அரசுடன் பேச்சு நடத்துவார். தூதுவர் மூலம் பேசுவார். இராம காதையில் சீதையைத் தேடிப்போன அனுமன், எதிர்பாராத விதமாகத் தூதுவனாகவும் மாறினான்.

அனுமன் இராமனை முதன் முதலில் சந்தித்த போதே, அனுமனின் சொல்லாற்றலை இராமன் வியந்து;

"இல்லாத உலகத்து எங்கும்
            இங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும் வேதக்
            கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே!
            யார்கொல் இச்சொல்லின் செல்வன்?
வில்ஆர் தோள் இளைய வீர!
            விரிஞ்சனோ? விடைவ லானோ?”

 

(கம்பன்-3768)

என்று இலக்குவனிடம் பேசுகின்றான்.

இத்தகைய அனுமனின் தூது இலக்கியப் புகழ் மிக்க தூது. தூதுவர்கள் அடக்கம், அமைதியுடையவர்களாகவும், அதே போழ்து துணிவும் உறுதியுடையவர்களாகவும் இருத்தல் வேண்டும். எதிரிக்கு எந்தச் சூழ்நிலையிலும் எரிச்சலும், கோபமும் உண்டாகும்படி நடந்து கொள்ளக் கூடாது. எதிரிகள் எரிச்சலுண்டாகும்படிப் பேசினாலும் செயல்பட்டாலும் தூது போனவர் எரிச்சலடையக் கூடாது. தூதின் முடிவு காரிய சாதகமாகவும் போரைத் தவிர்ப்பதுமாகவும் அமையும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும். தவிர்க்க இயலாத நிலையில், எதிர் முனையின் பிடிவாதத்தாலும் அடாவடித்தனத்தாலும் சமாதானம் உருவாகாவிடின் அவசியமாயின், இறுதியில் போரை வரவேற்கவும் தூதன் அஞ்சக் கூடாது.

இலங்கைப் பேரரசன் இராவணன் அவையில் அனுமன் இராமனின் சிறந்த தூதுவனாகப் பணியாற்றியமையை உலகம் உள்ளளவும் பாராட்டும். அனுமன் இராவணனைப் பார்த்த நிலையில் அவனைக் கொன்றொழிக்க எண்ணுகிறான். ஆயினும், தலைவன் ஆணை இல்லையே என்று கொலை செய்வதைத் தவிர்த்துக் கொள்கிறான். அனுமன், சீதையைத் தேடிப் போனவன்தான். ஆயினும் அனுமனுக்கும் அரக்கர்களுக்கும் போர் நடக்கின்றது. அனுமன், தன்னந்தனியனாக, அரக்க வீரர்களைப் போர்க் களத்தில் சந்தித்துக் கொன்று குவிக்கிறான். இது தூதனுக்குள்ள கடமையன்று. இலங்கையர்களும் அனுமனைத் தூதன் என்று எண்ணவில்லை. அனுமனைத் தூதன் என்று எண்ணியவன் விபீடணன் மட்டுமே!

அனுமனுக்கு இலட்சியம் இரண்டு, ஒன்று சீதையை மீட்பது, மற்றொன்று இராவணனும் மற்ற அரக்கர்களும் கொடுந் தொழிலிலிருந்து விடுபட வேண்டும் என்பது. இவ்விரண்டும் நடைபெறும் வகையில் அனுமன் முயற்சி செய்தான். இராவணன் மனத்தில் ‘ஆற்றலும் நீதியும் மனங்கொள நிறுவ' என்பது அனுமனின் ஆசை, ஆனால், இராவணன் கேட்க வேண்டுமே! அனுமன் இராவணனிடம் தன்னைத் தூதன் என்று அறிமுகப் படுத்திக் கொள்கின்றான். அனுமன் தனது தலைவன் பரம்பொருள்—மண்ணில் பிறந்து நடமாடும் பரம்பொருள் என்று குறிப்பிடுகின்றான். அறநெறி சார்ந்த முயற்சி பலனளிக்கவில்லை. அனுமன் தன் வாலில் வைக்கப்பட்ட தீயைக் கொண்டு இலங்கை எழில்களை அழித்துவிட்டு இராமனிடம் மீண்டான். இராமனிடம் மீண்ட அனுமன் இராமன் முன்னிலையில் சீதையிருந்த திசை நோக்கித் தொழுதான்.

எய்தினன் அனுமனும்; எய்தி, ஏந்தல்தன்
மொய்கழல் தொழுகிலன், முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன், கையினன்,
வையகம் தழிஇ நெடிதுஇறைஞ்சி வாழ்த்தினான்.

(கம்பன்-6028)

என்று பேசுவான் கம்பன். மேலும் சீதையின் கற்பு நிலையை உறுதிப் படுத்த அனுமன், ‘கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்’ என்றும்,


"தீண்டிலன் என்னும் வாய்மை
               திசைமுகன் செய்த முட்டை
கீண்டிலது, அனந்தன் உச்சி
               கிழிந்திலது, எழுந்து வேலை
மீண்டில; சுடர்கள் யாவும்
               விழுந்தில; வேதம் செய்கை
மாண்டிலது–என்னும் தன்மை
                வாய்மையால்; உணர்தி மன்னோ”

(கம்பன்-6039)

என்றும் கூறுகின்றான். இராமனும் அனுமனின் நடத்தையாலும் வாக்கினாலும் 'இவன் கண்டதும் உண்டு; அவள் கற்பும் நன்று' என்று தெளிந்தனன்.

தாடகை வதம்

கம்பனின் இராமகாதையில் இரண்டு சிறு போர்களும் ஒரு பெரும் போரும் நடைபெறுகின்றன. முதற்போர் தாடகையுடன் நடத்திய போர். தாடகை உருவத்தால் பெண். ஆனால்—


"... அரும் பாவம் ஈண்டி, ஓர்
பெண் உருக் கொண்டெனத் திரியும் பெற்றியாள்”

(கம்பன்-360)

என்று விசுவாமித்திரர் தாடகை பற்றி இராமனுக்கு விளக்கினார். தாடகை, மருத நிலத்தை அழித்துப் பாலைவனமாக்கி விட்டாள். எது போல எனில், உலோபகுணம் என்ற குணம் ஒன்றினாலேயே எல்லாக் குணங்களும் அழிந்துவிடுவது போல், தாடகை மருத நிலத்தைப் பாலைவனமாக்கி விட்டாள்! ஆயினும் இராமன், தாடகை பெண்ணாக இருப்பதால் அவளோடு போரிடத் தயங்கினான். மீண்டும் விசுவாமித்திரர் தாடகை தீமையின் வடிவம்; அவள் பெண் உருவமுடையவளே தவிர, பெண் அல்லள் என்று கூறித் தாடகையைக் கொல்லுமாறு இராமனைத் தூண்டுகின்றார். இராமன் தாடகை மீதுவிட்ட அம்புகள் தாடகையின் நெஞ்சில் பாய்ந்து அப்புறம் கழன்று போயின. அவை, அற்பர்களுக்கு அறிஞர்கள் சொன்ன அறிவுரை போல ஆயின.

சொல் ஒக்கும் கடிய வேகச்
        சுடுசரம், கரிய செம்மல்,
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல்
        விடுதலும், வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது,
        அப்புறம் கழன்று, கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன
        பொருள் எனப்போயிற்று அன்றே!

(கம்பன்-388)

என்று விளக்குகின்றான் கம்பன்.

வாலி வதம்

அடுத்து நடந்த போர் வாலிக்கும் சுக்கிரீவனுக்கும் நடந்த போர். வாலி வலிமை மிக்கவன். வாலி சுக்கிரீவனை விரட்டி விரட்டி அடித்தான். இப்போரில் இராமன் தலையிட்டதனால் போர் என்று கூற இயலாது. இராமனுடைய அம்புக்கு வாலி இரையாகிறான்.

"ஆழிசூழ் உலகம் எல்லாம்
        பரதனே ஆள, நீ போய்,
தாழ்இருஞ் சடைகள் தாங்கி,
        தாங்கரும் தவம் மேற் கொண்டு
பூழிவெங் கானம் நண்ணி,
        புண்ணியத் துறைகள் ஆடி
ஏழிரண்டு ஆண்டின் வா என்(று)
        இயம்பினன் அரசன்” என்றாள்.

(கம்பன்-1601)

என்ற கைகேயியின் ஒரு சொல்லுக்குக் கட்டுப்பட்டு மகிழ்ச்சியுடன், 'தாயே! தந்தை சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை, 'உன்னுடைய ஆணைக்குக் கட்டுப்பட்டு நடப்பேன்; மறக்க மாட்டேன்' என்றதோடன்றி.

"பின்னவன் பெற்ற செல்வம்
         அடியனேன் பெற்ற தன்றோ!
என் இனி உறுதி அப்பால்"

(கம்பன்-1604)


என்று கூறி கைகேயியிடம் விடை பெற்றுக் கொண்டு நகரினின்று நீங்குகின்றான்; காட்டை நோக்கி நடக்கின்றான். மனித உலகத்தில் இத்தகு பண்பாட்டின் மணி முடியை வரலாறு கண்டதில்லை. கம்பனின் இராமகாதையைத் தவிர வேறு காப்பியங்களில் இருப்பதாகத் துணிந்து கூற இயலவில்லை. அடுதலும் பொருதலும் அழித்தலும்தான் அரசியல் என்று வரலாறுகள் கூறுகின்றன.

பேரரசு தனக்கு என்ற பொழுது இராமன் மகிழ்ந்திலன்; பேரரசு இல்லை— காடுதான் என்ற நிலையிலும் இராமன் கவலைப்படவும் இல்லை. சுக்கிரீவன், வாலியிடம் எல்லாம் உனக்குத்தான் என்று சொல்லிய பின்பும் ஆத்திரத்தில் சுக்கிரீவனை அடித்து விரட்டுகின்றான். சுக்கிரீவனின் மனைவி உருமையையும் கவர்ந்து கொள்கிறான். வாலி, சந்தேகப் பிராணியாகவும் ஆத்திரக்காரனாகவும் விளங்கினான். மேலும் தன்னை; யாரும் வெல்லாமல் இருக்கும்படிப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தவம் செய்து வரம் வாங்கிக் கொண்டிருக்கிறான். அது என்ன வரம்? வாலியுடன் பொருந்துகின்றவர்களின் பலத்தில் பாதி பலம் வாலியைச் சேர்தல் வேண்டும்; வாலிக்கு உரிமையாதல் வேண்டும். இப்படி ஒரு வரம்! நமது வழிபடும் கடவுள்களும் இத்தகைய வரங்களைக் கொடுப்பது தான் வேடிக்கை; முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். முள்ளை எடுக்கப் பயன்படும் முள்வாங்கி, முள்ளைப் போல் கூர்மையாகவே இருப்பதை அறியாதார் யார்? ஆதலால், வாலியிடம் பேச வேண்டிய அவசியமோ சூழலோ இராமனுக்கு எழவில்லை. காரணம் பேச்சுக்களின் எல்லைகளைக் கடந்த நிலையில் வாலியின் செயல்முறைகள் அமைந்துவிட்டன, ஆதலால்.

வாலியின் பொருந்தாச் செயல்களையும் வரத்தையும் முறியடிக்க வேண்டிய நிலையில் மறைந்து நின்று அம்பெய்கின்றான். வாலியை மறைந்து கொன்றதில் ஒரு குறையும் இல்லை; ஒரு குற்றமும் இல்லை. அதனால் இராமன் மறைந்து நின்று கொன்றான் என்று சொல்லப் படுவது முறையல்ல. ஆனால், காவியப் போக்கில் அப்படித்தான் உணர்த்தப்படுகிறது.

அடுத்து நடந்த பெரிய போர் இலங்கையில் நடந்த இராம—இராவணப் போர். போருக்கு முன்பு மரபுப்படி இராமன், விபீடணன், சுக்கிரீவன் ஆகியோருடன் ஆலோசனை செய்யப் பெறுகிறது. முதலில் போர் முறைப்படி இராவணனுக்குத் தூது அனுப்ப முடிவு செய்யப் பெறுகிறது. தூதனாக அனுப்ப வாலியின் மகன் அங்கதன் தேர்வு செய்யப்பெற்றான். வாலி, இராவணனைத் தனது வாலில் கட்டிச் சுற்றி வந்த மாவீரன்! அதனால் போலும் அவன் மகன் அங்கதன் தூதனாகத் தேர்வு செய்யப் பெற்றான்! அங்கதன் இலங்கையை அடைகின்றான். தான் தூதனாகத் தேர்வு செய்யப் பெற்றதில் அளவற்ற மகிழ்ச்சி அங்கதனுக்கு! அதனால்,


"மாருதி அல்லன் ஆகின்,
     நீ” எனும் மாற்றம் பெற்றேன்;
யார் இனி என்னோடு ஒப்பர்?
    என்பதோர் இன்பம் உற்றான்.

(கம்பன்-6986)

தூதன் அங்கதன், தன்னுடைய தலைவன் இராமனைப் பற்றி இராவணனிடம் புகழ்ந்து பேசுகின்றான்: “இராமன், ஐம்பூதங்களுக்கும் தலைவன்: உலகத்திற்குத் தலைவன்; சீதையின் கணவன்; தேவ தேவன்; வேதநாயகன்! இராவணா! நீ பயின்ற வேதங்கள் தேடும் தலைவன் இராமன்; கல்வி அறிவு ஊழின்முன் நிற்பதில்லை. ஊழ்வினையை உய்த்துச் செலுத்தி ஊட்டுவிக்கும் தலைவன்; ஊழித் தலைவன். அவனுடைய தூதன் நான்” என்கிறான் அங்கதன்.

இராவணன் அங்கதனை நோக்கி அவனுடைய வரலாற்றைக் கூறும்படிக் கேட்கின்றான். அதற்கு அங்கதன் ‘முற்காலத்தில் இராவணன் என்பானைத் தன் வாலில் கட்டிச் சுருட்டிக் கொண்டு, பல மலைகளையும் தாண்டிச் சுற்றி வந்த இந்திரன் மைந்தன் வாலியின் மகன்’ என்றனன். உடன் இராவணன் அங்கதனுக்கு வானர ஆட்சியைத் தருவதாக ஆசை வார்த்தை கூறுகின்றான். ‘உன் தந்தை வாலியைக் கொன்றவன் பின் திரிதல் சுற்றுதல் அழகன்று; இராமனிடமிருந்து பிரிந்து விடு. என்னைச் சேர்க; நான் உன்னை என் மைந்தனாக ஏற்றுக் கொள்கிறேன்!’ என்று இராவணன் அங்கதனிடம் பேசி, ‘வாலியைக் கொன்றவன் இராமன்’ என்ற வாயில் வழிப் பகை மூட்ட எடுத்த முயற்சி அங்கதனிடம் பலிக்கவில்லை! இராவணன் சொல்லைக் கேட்டு அங்கதன் நகைத்தான். ‘என்னைப் புரிந்து கொள்ளாமல் வாயில் வந்தபடியெல்லாம் பேசுகின்றாய்! இதனால் எல்லாம் நான் உன் வசப்பட மாட்டேன்! நாயிடம் சிங்கம் ஆட்சி பெறுமோ? ஒரு போதும் பெறாது!’ என்றான் அங்கதன். “இராவணனே! அரக்கர் குலத்து அழிவிற்கு மூலகாரணமாக உள்ள இராவணனே! போருக்கு அஞ்சி அரண்மனையில் ஔிந்து கொண்டிருக்கின்றாய்! ‘தேவி சீதையை விட்டு விடு! அல்லது இராமனுடன் போர் புரியப் போர்க்களத்திற்கு வருக!’ என்று என் தலைவன் இராமன் அறிவிக்கச் சொன்னான்!” இராவணனின் பாட்டி தாடகையை வெட்டி வீழ்த்திப் பருந்துக்கு இரையாக்கிய காலத்தில் இராவணன் எங்கே போனான்? இராவணன் மாமன் சுபாகு என்பவன் போராடி அழிந்த காலத்திலும், எங்கிருந்தான் என்று தெரிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்தான். ஏன்? இராவணன் தங்கை சூர்ப்பனகை இலக்குவனால் மூக்கறுபட்டு மானபங்கப் படுத்தப்பட்ட போதும் இராவணன் போருக்கு வரவில்லையே! ‘அச்சமே கீழ்களது ஆசாரம்’ என்பதற்கு இலக்கியம் இராவணன், ‘இராவணனுக்கு ஆண்மையே இல்லை’ என்று இராமன் இராணனைப் பழித்துரைத்ததையும் அங்கதன் எடுத்துக் கூறினான். தூது பயன் தராததால் அங்கதன் இராமனை வந்தடைந்தான். இராமனிடம் தூதின் முடிவை மிகவும் சுருக்கமாக,

“முற்றஒதி என்? மூர்க்கன், முடித்தலை
அற்றபோது அன்றி ஆசை அறான்”.

(கம்பன்-7016)

என்று கூறினான். ‘சமாதானம் இல்லை; சீதையின்பால் உள்ள ஆசையை அவன் முடியிழக்கும் வரையில் விடமாட்டான். இராவணனின் முடி வீழ்தலுக்குரிய போர் தேவை. இதுவே என் தூதின் முடிவு’ என்றான் அங்கதன்.

இராம–இராவணப் போர்

போர் மூண்டு விட்டது! இராவணன் போர்க்களத்திற்கு வந்துவிட்டான். இராவணன் செருகளம் வந்த செய்தி இராமனுக்குப் பூரிப்பைத் தருகிறது. அனுமனின் தோளில் இராமன் ஆரோகணித்துச் செருகளம் புகுந்தான்; வில்லை வளைத்து நாணேற்றினான்; அந்த நாணோசை ஊழிக் காலத்துப் பேரோசை போல் கேட்டது. இராவணன் போர்க்களத்தில் தோற்றான்! ஆயுதங்களை இழந்தான்! வெறுங்கையுடன் நின்றான்.

தாயிற் சிறந்த தயவுடைய இராமன், இராவணனுக்குப் பரிவுரை கூறுகிறான்; “இராவணா! பெரும் போரில் வெற்றி பெற வீரம் மட்டும் போதாது. அறவழியிலும் ஒழுகுந்திறன் வேண்டும்! அறத்தினைத் துறந்தவர்கள் தேவர்களேயானாலும் போரில் வெற்றி பெற இயலாது. இராவணா, உயிர் பிழைத்துப் போ! ஆயுத மில்லாது வெறுங்கையினனாக நிற்கும் உன்னை நான் கொல்ல மாட்டேன்!” என்றான் இராமன். ‘ஆண்மைக் குணமுடைய இராவணனே, கேள்! உனது நால்வகைப் படைகளும் சிதறி ஓடிவிட்டன. இன்று போ! நாளை வா!’ என்றான்.


'ஆள்ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
    பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு
நாளை வா!' என நல்கினன்-நாகு இளங் கமுகின்
   வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்!

(கம்பன்-7271)

மீண்டும் இராவணனுக்கு, படைதிரட்டிக் கொண்டு வர, போராட வாய்ப்பளிக்கின்றான்– அறநெறி யண்ணல் இராமன்! காலம் கருத்தை மாற்றும் என்ற அடிப்படையில் ‘இன்று போய், நாளை வா’ என்று வழங்கப் பெறும் கால இடைவெளியில் இராவணன் சிந்திப்பான்; சீதையை அனுப்பி வைப்பான் என்று இராமன் நம்பி இருக்கக் கூடும். இராமனது நம்பிக்கை முற்றிலும் நிறைவேறாது போனாலும் ஓரளவு பயன் தந்தது.

திசை யானைகளை வென்ற வலிமை; சிவம் உறையும் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க முயன்ற தோள் வலிமை, நாரதர் மகிழ இனியன கூறிய நாவாற்றல்; சிவபெருமான் அருளிய வாள்; வாகை மாலைகள் சூடியிருந்த பத்து மணி முடிகள்; இவையெல்லாவற்றுடன் தன் வீரத்தையும் சேர்த்து இராவணன் போர்க்களத்தில் போரிட்டு வெறும் ஆளாக இலங்கையினுள் நுழைந்தான். தோல்வியின் காரணமாக நாணித் தலைகுனிந்தவாறே, தனியே இலங்கையினுள் புகுந்து தனது மாளிகை அடைந்தான். இராவணனுடைய நாணமும், சீதை நகைப்பாளே என்ற அடிப்படையில் அமைந்த நாணமே யாம் என்று கம்பன் கூறுவது நகைச்சுவை நிறைந்த கருத்து. ஆம்! இந்த உலகில் ஆடவர் பலரும் தமது செயலின்மை கருதி நாணப்படுதல் பெரும்பாலும் இல்லை. பெண்கள் பரிகசிப்பார்களே என்ற அச்சமும் நாணமும்தான் ஆடவர்களுக்கு மிகுதியும் உண்டு. இதற்கு இராவணனும் விதிவிலக்கல்லன்.

கும்பகருணன் அறிவுரை

இராவணன், போரில் தோல்வியைத் தழுவியதைக் கண்ட அரக்கர்கள், நெடுந்துயில் கொண்டிருந்த கும்பகருணனை எழுப்பினார்கள். கும்பகருணன் துயில்விட்டு எழுந்ததும் இராவணன் அவையை அடைந்து இராவணனுக்கு அறிவுரை கூறினான். சீதையை விடுதலை செய்யும்படி அறிவுறுத்தினான். விபீடணனுடன் கலந்து உறவாடி வாழ்க என்றான். இந்த இடத்தில் கம்பன் விபீடணனுக்குத் தந்துள்ள அடைமொழி அல்லது இலக்கணம், சிந்தனைக்குரியது. ‘ஐயறு தம்பியோடு அளவளாவுதல்’ என்று கம்பன் குறிப்பிடுகின்றான். ஐயத்திற்கிடமில்லாத விபீடணன் என்று கம்பன் குறிப்பிடுவது எண்ணத்தக்கது. விபீடணன் இராவணனை விட்டுப் பிரிந்து இராமனைச் சென்றடைந்தமையால் ‘விபீடணன் போருக்குப் பயந்து விட்டான்! கோழை! உடன்பிறந்த அண்ணனுக்குத் துரோகம் செய்து விட்டு, இராமனுடன் சேர்ந்து ஆட்சியை, அதிகாரத்தைப் பற்றிக் கொள்ளத் திட்டமிட்டான்’ என்றெல்லாம் பழி வரும் என்பதை எண்ணி விபீடணனை ஐயத்திற்கு இடமளிக்காத ஒழுகலாறுடையவன்; அறநெறி ஒன்றே அவன் சார்பு என்பதை நிலை நிறுத்த ‘ஐயறு தம்பி’ என்று கம்பன் கூறினான். சீதையை விடுதலை செய்து விபீடணனுடன் உறவு கலந்து வாழவில்லையாயின் நம்முடைய பல வலிமைகளையும் ஒன்று சேர்த்துக் கொண்டு போராட வேண்டும் என்று கும்பகருணன் கூறினான்.


“தையலை விட்டு, அவன் சரணம் தாழ்ந்து, நின்
              ஐயறு தம்பியோடு அளவளாவுதல்
உய்திறம்; அன்று எனின் உளது, வேறும் ஓர்
              செய்திறம்; அன்னது தெரியக் கேட்டியால்”

(கம்பன்-7359)


“பந்தியில் பந்தியில் படையை விட்டு, அவை
       சிந்துதல் கண்டு, நீ இருந்து தேம்புதல்
மந்திரம் அன்று; நம் வலி எலாம் உடன்
       உந்துதல் கருமம்” என்று உணரக் கூறினான்
.

(கம்பன்-7360)

என்ற பாடல்கள் பலகாலும் எண்ணத் தக்கன.

கும்பகருணன் கூறிய இந்த அறிவுரைகளால் இராவணனிடத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதற்குப் பதிலாக இராவணன் போருக்குப் போகப் புறப்பட்டான். கும்பகருணன் இராவணனை விலக்கி விட்டு, தானே போருக்குப் போகத் தலைப்பட்டான். அப்போது, கும்பகருணன், ‘அண்ணா! போருக்குச் செல்கிறேன். நான் வெற்றி பெறுவது உறுதியல்ல. சாவையே தழுவி நிற்பேன். என்னை இராம—இலக்குவர் வெற்றி பெற்றுவிட்டால் உன்னை எளிதில் வெற்றி பெறுவர். ஆதலால், என் மரணத்திற்குப் பிறகாவது சீதையை விட்டுவிடு! அது உனக்கு நன்மை! தவமும் ஆகும்’ என்று கூறி இராவணனிடம் விடை பெற்றுக் கொண்டு போருக்குச் செல்கிறான்.

கும்பகருணன்–விபீடணன் சந்திப்பு

போர்க்களத்தில் விபீடணன் கும்பகருணனைச் சந்திக்க வருகின்றான். கும்பகருணன் விபீடணன் வந்தமையை ஏற்கவில்லை. ‘குலத்தின் இழுக்கின் வழி விளைந்த விளைவா?’ என்று விமர்சிக்கின்றான் கும்பகருணன். அழிவுக்காலம் வந்தால் அழிவுக்குரிய பலவும் ஒருங்கு கூடி வரும் போலும்!

‘ஏந்திய வில்லுடன் இராமன் நிற்கிறான். அவன் அருகில் வெல்லுதற்கரிய இலக்குவன் நிற்கிறான். எமனும் நிற்கிறான்; ஊழ்வினை உருத்து வந்து நிற்கிறது. எங்கள் தோல்வி உறுதி. இந்தச் சூழ்நிலையில் ஏன் வந்தாய்?’ என்பது கும்பகருணன் வினா! விபீடணன், கும்பகருணனை அறநிலை கருதி, இராமன்பால் வந்து சேரும்படியும் இலங்கை ஆட்சியை ஏற்கும்படியும் அழைக்கின்றான், நிலந்தோய வணங்கிக் கேட்டுக் கொள்கின்றான். கும்பகருணன்—விபீடணன் உரையாடல் ஒப்பற்ற வாழ்க்கைத் தத்துவம். அறத்திற்கும் பாசத்திற்கும் நடக்கும் போராட்டம் பற்றிக் கம்பன் அழகுற, அமைவுற விளக்குவது பலகாலும் படித்துணரத்தக்கது.

கும்பகருணன், போர்க்களத்தில் தனக்கு நேரிடும் மரணம் இழிவானது என்று கூறுகிறான். அதே போழ்து அந்த மரணம் புகழுடையது என்றும் கூறுகிறான். மரணத்தின் காரணத்தால் மரணம் இழிவாகிறது. மரணத்தின் நோக்கத்தைக் கருத்தில் கொண்டால் புகழாகிறது. ஆம்! நன்றியறிதல் என்ற பண்பு உலகத்தில் உள்ளளவும் கும்பகருணன் மரணம் புகழுடையதுதானே! ஆன்முலை அறுத்தல் முதலிய தீமைகளைச் செய்யினும் உய்தி உண்டு! செய்ந்நன்றி மறந்தார்க்கு உய்தியில்லை.


“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.”

(திருக்குறள்-110)

என்று திருக்குறள் கூறுவதை அறிக. ஒரு தலைவன் ஆலோசனையின்றித் தீமை செய்தால் திருத்தும் முயற்சியில் ஈடுபடவேண்டும். அங்ஙனம் திருத்த முடியாவிடில் அவருடன் இருந்து சாதலே அறம்; ஒழுக்கம் என்பது கும்பகருணன் கொண்ட அறம்; துணிவு. ‘இலங்கை அரசு நிலையில்லாதது. நான் அதை விரும்பவில்லை. நான் என் அண்ணன் இராவணனுக்காகப் போராடி அவனுக்கு முன் சாதலையே விரும்புகின்றேன்! அதுவே எனது கடமை’ என்றான் கும்பகருணன்.

கும்பகருணன் மறைவு

கும்பகருணன், இராமனுடன் போர் செய்கின்றான். இராமனது அம்புகளால் அரக்கர் சேனை அழிந்தது. கும்பகருணன் கை கால்களை இழந்தான். இராவணனுக்கு அழிவு நேரிடப் போவதை நினைத்து வருந்தினான்! உடன் பிறப்புப் பாசத்தில் தோய்ந்து கும்பகருணன் தன்னுடைய அழிவு சங்கமித்துக் கொண்டிருக்கும் பொழுதும் இராமனிடம் விபீடணனைக் காப்பாற்றுக! என்று கேட்கும் பாங்கு, கும்பகருணனிடத்தில் நமக்கு இனம் தெரியாத ஒரு மதிப்பை உண்டாக்குகிறது— மூக்கை இழந்து தன்னை மற்றவர்கள் பார்த்து நகைக்காமல் இருக்கத்தக்க வகையில் உடனே தன் தலையைக் கொய்து கடலில் வீசும்படி கேட்டுக் கொள்வது வீரத்திற்கு அணி செய்யும் வீரம் என்பது இராமகாதை நிலவும் வரையில் நிலவும்.

மாயா சனகன்

இராவணன் ஆசை காட்டுதல், கெஞ்சுதல், சினத்தல் ஆகியவற்றால் சீதையை வசப்படுத்த முடியாமல் போன நிலையில், மாயவித்தைகளைக் காட்டிச் சீதையை அச்சுறுத்த நினைக்கின்றான். சீதையின் தந்தை சனகன் போல மாயையால் ஒரு சனகனைத் தோற்றுவித்துச் சிறைப்படுத்தித் தொல்லைப்படுத்துகின்றான். மாயா சனகனைக் கண்ட சீதை அழுது புலம்புகின்றாள். ஆயினும், மாயா சனகன் இராவணனை ஏற்றுக் கொள்ளும்படி சீதையிடம் சொன்ன அறிவுரையைக் கேட்டபின் சீதை உண்மை உணர்கின்றாள். தான் காண்பது உண்மையான சனகன் அன்று என்று தேறுகிறாள். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்பது ஆன்றோர் வாக்கு ஆதலால், இவன் சனகனாக இருந்தால் தருமம் அழியத்தக்கவைகளைக் கூறான்; வழி வழி வரும் முறைமைகளை மீறான்; பழி உண்டாகும்படி நடந்து கொள்ளமாட்டான். ஆதலால் உண்மையான சனகன் அல்லன் என ஐயப்பட்டாள்.

“நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார் வாய்ச் சொல்”

(திருக்குறள்-959)

என்ற திருக்குறள் நெறியோடு இந்நிகழ்வினை ஒப்பு நோக்குக

மாயா சீதை

சீதை எந்தச் சூழ்நிலையிலும் தான் கொண்ட உறுதியில் தளரவில்லை. அது மட்டுமன்று— இராவணனை எச்சரிக்கை செய்யவும் தவறவில்லை. இராம—இராவணப் போர் தொடர்ந்து நடக்கிறது. அதனைப் பற்றிய முழுச் செய்திகளையும் கூறுவதை நாம் விரும்பவில்லை. அவசியமும் இல்லை. நாகபாசத்தாலும், பிரமன் அம்பாலும் இராமன், இலக்குமணன் துயருறுதல்: இதைக் கண்ட சீதை துயருறுதல், முதலியன நிகழ்கின்றன. கடைசியாக சாம்பவான் சஞ்சீவி பர்வதத்தின் மூலிகைகளை கொணரச் சொல்கிறான்: அனுமன் மூலிகைகளைப் பறிக்கக் காலமாகும் என்று கருதி மலையையே பெயர்த்து எடுத்துக் கொண்டு வருகின்றான். அனுமன் தூக்கி வந்த சஞ்சீவி மலையின் காற்றினால் அனைவரும் பிழைத்து எழுந்தனர். மீண்டும் இந்திரசித்து மாயையால் ஒரு மாயா சீதையை தோற்றுவித்துக் கொள்கின்றான். மாயையென்று அறியாமல், சீதையைக் கொல்வதைக் கண்ட அனுமன் அழுதான்: புலம்பினான். தன்னுடைய முயற்சியெல்லாம் பயனற்றுப் போயிற்றே என்று வருந்துகின்றான். விபீடணன் சீதையின் மரணத்தை நம்புகின்றான். இராமன் சோர்கின்றான். ஆனால் இலக்குமணன் மட்டும் உயிர்த் துடிப்புடன் வீர உணர்வுடன் நிற்கின்றான். சோர்ந்து நிற்கும் இராமனையும் தேற்றிப் போர் புரியத் தூண்டுகின்றான். ‘கற்புத் தெய்வத்தை, யாதொரு துணையும் அற்று விளங்கியவளை இந்திரசித்து தீண்டிக் கொன்றான் என்ற பிறகும் சோர்ந்து நிற்பதா அழகு? நாம் துன்பத்தைச் சுமப்பது ஏன்? பிழைத்திருப்பதற்காகாவா? அல்லது அரக்கர்கள் மேலுள்ள கருணையினாலா? உழன்று என்ன பயன்? போர் புரிய வருக!’ என்று இராமனை அழைக்கின்றான். ‘யாராக இருந்தாலும், நம்மால் மூவுலகையும் அழிக்க இயலும்’ என்கிறான் இலக்குமணன்.

இந்திரசித்து அயோத்தியை அழிக்கச் சென்றுள்ளான் என்ற செய்தி கேட்டு மேலும் இராமன் சோர்ந்தான். தன்னைச் சேர்ந்த எல்லோருக்கும் துன்பம் ஏற்பட்டு உள்ளதே என்று உழன்றான். இப்போதும் இலக்குமணன், ‘என்னைப் போன்றவனல்லன் பரதன், இந்திரசித்தன் பிரமபாணத்தால் விழ! பரதன் எமனையும் துணைக்கு அழைத்துப் போராடி இந்திரசித்தை வீழ்த்துவான்! நீ காணலாம்’ என்று மனப்புழுக்கத்துடன் இராமனைத் தேற்றினான். இலக்குமணனுக்கு ஏன் மனப்புழுக்கம்? மலையே நிலை குலைந்ததே என்பதுதான் காரணம். இராமனின் நிலை கண்ட விபீடணன், அசோகவனம் செல்கின்றான். உயிருள்ள பதுமையோ, உயிரற்ற பதுமையோ என்று ஐயப்படும் நிலையில் இருந்த சீதையைக் கண்ணாலும் கண்டான்; கருத்தாலும் கண்டான். விபீடணன் கண்ணால் கண்டது சீதையின் திருவுருவத்தை, கருத்தால் கண்டது சீதையின் தூய்மையை, கற்பை, தவத்தின் திருவுருவை!

மீண்டும் அரக்கர்கள் வீரத்தை விலை போகவிட்ட மாயம், மந்திரத்தை தொடர்ந்து, இந்திரசித்து நிகும்பலை யாகம் செய்து இராம—இலக்குமணரை அழிக்க முற்பட்டான். இலக்குமணனை இந்திரசித்துடன் போராட அனுப்பி வைத்தான் இராமன். உயிரும் உடலுமாக இருந்த இலக்குமணன் போர் கருதிப் பிரிந்து சென்றான். இராமன் வருந்தினான். அந்த வருத்தம் விசுவாமித்திரருடன் இராமனை அனுப்பியபோது தசரதன் அனுபவித்ததுபோல் இருந்தது என்று கூறி, இராமன் இலக்குமணனிடம் காட்டியதை தந்தையின் பரிவாக விளக்குகின்றான் கம்பன்.

இந்திரசித்து அறிவுரையும் மறைவும்:

இலக்குமணன்—இந்திரசித்துக்கிடையே நடந்த போரில் இந்திரசித்து தோற்றான். தோற்ற இந்திரசித்து இராவணனிடம் சென்று, சீதையை விடுதலை செய்து பிழைத்துக் கொள்ளும்படிக் கூறினான். இராவணன் கேட்டபாடில்லை. அதற்கு மாறாக, “நான் யாரையும் நம்பவில்லை;


“என்னை நோக்கி யான் இந் நெடும்பகை
தேடிக் கொண்டேன்”

(கம்பன்-9123)

என்று கூறினான். ‘சாதல் உறுதியேயானாலும் இராமன் புகழ் உள்ளளவும் என் புகழும் நிற்கும்’ என்றனன் இராவணன். இந்த இடத்தில் இராவணன் மனப் போக்குத் திரும்புகிறது. இராமனை ‘நல்லதோர் பகை’ என்றனன். 'சாவது உறுதி' என்ற முடிவுக்கு வந்துவிட்டான். இராமனுடன் போரிட்டான் என்ற புகழ் உண்டென விரும்பிப் போரிடுகின்றான் என்பது திருப்பம். கடைசியாக இந்திரசித்து இலக்குமணனால் கொல்லப்படுகின்றான். இந்திரசித்தின் மரணம் இராமனுக்கு அதிக மகிழ்ச்சியைத் தந்தது. விம்மிதமுற்றான். சீதையை மீட்டுவிட்டதாகவே எண்ணினான். ‘தம்பியுடையான் பகை அஞ்சான்’ என்று இலக்குமணனைப் பாராட்டினான். இந்திரசித்தின் மரணத்தால் இராவணன் அழுது புலம்புகின்றான். மண்டோதரி புலம்புகின்றாள்.

மூலபலப் படை

இந்த நிலையில் வன்னி என்னும் ஓர் அரக்கன் வருகின்றான். அவன் ‘இனி, சீதையை இராமனிடம் கொண்டு விட்டாலும் இராம—இலக்குமணர்கள் நம்மைக் கொல்லாமல் விடப்போவதில்லை. ஆதலால், நமது படை முழுதும்—மூலபலப்படை உட்பட அனைத்தையும் கொண்டு போராடி இராம-இலக்குமணர்களையும், வானரப் படைகளையும் அழிப்பதே நம்முன் உள்ள கடமை’ என்றனன்.

‘இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?’ என்று இன்று வழங்கும் பழமொழி கம்பன் தந்ததே! இராவணனின் மூலபலச் சேனையைக் கண்டு வானர வீரர்கள் அஞ்சி ஓடுகின்றனர். அப்போது வானரர்கள் கூறியது.

‘மனிதர் ஆளின் என், இராக்கதர் ஆளின் என் வையம்?’ என்பது.

இந்த மனப்போக்கு நாடு முழுதும் மக்களிடம் காணப்படுகின்றது. தங்களுடைய நாட்டின் ஆட்சி எப்படி அமையவேண்டும் என்ற சிந்தனை இன்றைய மக்களுக்குக் கிடையாது. குடியரசு நாட்டின் குடிமகன் என்ற அடிப்படையில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியற் கடமை உண்டு. ஆனால், இந்தியாவில் பெரும்பாலான குடிமக்கள் அரசியல் பற்றிச்சிந்திப்பதே இல்லை. சிலர் அப்படிச் சிந்திப்பது பாவம் என்றே கருதுகின்றனர். நாட்டில் அற நெறியும் பண்பும் அமைதியும் சமாதானமும் நிலவ நல்லாட்சி தேவை. இதை அன்று வானரர்கள் உணரவில்லை. இன்று மக்களே உணரவில்லை. மூல பலப்படை வானர வீரர்களைக் கலக்கியது.

இராமன் போருக்கு எழுந்தான். அரக்கர்களை அழித்தான். அரக்கர் குலமே அழிந்தது என்று சொல்ல வந்த கம்பன் ‘நீதி மன்றத்தில் பொய்ச் சாட்சி சொன்னவர் குலம்போல அழிந்தது’ என்கின்றான். ‘வறுமையில் துன்பப்பட்டு இறப்போரைப் போல இறந்தனர்’ என்கின்றான்.

இலக்குமணன் வேலேற்றல்

விபீடணன் மீது இராவணன் ஏவிய வேலை ஏற்க, விபீடணன், சுக்கிரீவன், அனுமன், அங்கதன், இலக்குவன் ஆகியோர்களிடையே போட்டி ஏற்பட்டது. இலக்குவனே முந்தினான். வேலை மார்பில் ஏற்றான்; மூர்ச்சையடைந்தான். அனுமன் கொண்டு வந்த மருந்தால் மறுமுறையும் உயிர் பிழைத்தான். இந்தப் போரின் முடிவில் இராம—இலக்குமணர்களுக்கும் வானவர்களுக்கும் ஒரு தெளிவு பிறந்தது. அதுதான் ‘அறம் வெல்லும்; பாவம் தோற்கும்’ என்பது.

இறுதிப்போர்

இராவணன் கோபுரத்தின் உச்சியில் ஏறிப் பார்க்கிறான். பின் அரண்மனைக்குச் சென்று, தான் தருமம் செய்கிறான். மீண்டும் போருக்குப் போக ஆயத்தமானான். இப்போது மூன்றாம் முறையாக போருக்குச் செல்லும் போது, இராவணன் போக்கில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அதாவது, இராமனின் மனைவி சீதை என்பதை உறுதிப் படுத்துகின்றான். ‘இன்று போர் முடிவில் இராமனை இழந்து அவன் மனைவி சீதை அழவேண்டும். அல்லது என் மனைவி என்னை இழந்து அழவேண்டும்; இரண்டில் ஒன்று நடக்கும்’ என்று கூறுகின்றான். இராமனும் போர்க்களத்திற்கு வந்துவிட்டான். போர் நடந்தது. இராவணன் படிப்படியாக மனம் மாறுகின்றான்; உணர்கின்றான். ஆனால், மாற்றம்தான் ஏற்படவில்லை. இன்றும் மக்களில் பலர், நல்லதை அறிவார்கள், உணர்வார்கள். ஆனால், துணிவுடன் ஏற்கமாட்டார்கள், செயலாக்கத்திற்குக் கொண்டுவரத் தயங்கித் தயங்கி மற்றவர்களுடைய உறவை இழக்கின்றனர்; வாழ்க்கையை இழக்கின்றனர் இராவணன் இந்த வர்க்கத்தினன் போலும்! இராவணனுடைய சுத்தவீரத் தன்மையைக் கம்பன்,


“ஒல்காப் போர்த் தொழிற்கு அமைவது ஆனான்”

என்று கூறி விளக்குகின்றான்.

செருகளத்தில் நின்ற இராவணனுக்குத் தெளிந்த சிந்தனை அரும்புகிறது; தனக்கு எதிரில் நின்று போரிடுபவன் மனிதன் அல்லன்; பரம்பொருள் என்று உணர்கின்றான்.


“சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன் திருமாலாம்
அவனோ? அல்லன், மெய்வரம் எல்லாம் அடுகின்றான்;
தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோதான் அவ் வேத முதல் காரணன்” என்றான்.

(கம்பன்-9837)

இராமன், இராவணனது தலையில் ஒன்றை அம்பினால் கொய்து வீழ்த்துகின்றான். இந்த அரிய பேறு தவத்தினால் மட்டுமே வாய்க்கும். இராவணன் கைகள் வெட்டப்படுகின்றன, தலைகள் வீழ்த்தப்படுகின்றன. இராவணன் மூர்ச்சித்து விடுகின்றான். இராவணன், இராமனுடைய பிரமன் அம்பும், சக்கராயுதமும் சேர்ந்து தாக்க, உயிரிழக்கிறான். இராவணன் மரணம் எய்தினான். கடவுள்கள் அருளிச் செய்யும் வரம், வீரம் எதுவும் நிற்காது போலும்!

இதனைக் கம்பன்,


முக்கோடி வாழ்நாளும், முயன்றுடைய
               பெருந் தவமும், முதல்வன் முன்நாள்
‘எக்கோடி யாராலும் வெலப்படாய்’
               எனக் கொடுத்த வரமும், ஏனைத்
திக்கோடும் உலகு அனைத்தும் செருக்கடந்த
               புயவலியும் தின்று, மார்பில்
புக்கு ஓடி உயிர் பருகி, புறம் போயிற்று
               இராகவன் தன் புனித வாளி!

(கம்பன்-9899)

என்று கூறி விளக்குகின்றான்.

பொருது வீழ்ந்த சீர்

இராவணன் போர்க்களத்தில் செத்துக் கிடக்கின்றான். இராவணன் கீழ்மையானவன் அல்லன்; கோழையும் அல்லன், சுத்த வீரன். இராவணன் கடைசி வரையில் வீர வேள்வியே செய்தான். போர்க்களத்தில் மாண்டு கிடக்கும், இராணனை இராமன் சென்று பார்க்கும் காட்சியைக் கம்பன்.


“போரிடை மீண்டு ஒருவருக்கும் புறங்கொடாப்
       போர் வீரன் பொருது வீழ்ந்த
சீரினையே மனம் உவப்ப, உரு முற்றும்
       திருவாளன் தெரியக் கண்டான்”

(கம்பன்-9904)

என்று கம்பன் வருணிக்கின்றான். இராவணன் போரில் எவருக்கும் புறங்கொடாதவன். இராம—இராவணன் யுத்தத்திலும் கூட அவன் வீரப்போரே செய்தான்; புறமுதுகு காட்டி ஓடவில்லை. இத்தகு சீர்மையுடைய இராவணனை இராமன் கண்டான். ‘இராவணனை எவராலும் எளிதில் வெற்றி கொள்ள முடியாது. இராமனே, நீ வெற்றி பெற்றதற்குக் காரணம் உன் வீரமன்று. இராவணன் சீதையின் பால் வைத்த காதலினாலேயாம். உடன் துணை நின்றது நின் கோபம். இவ்விரண்டினாலன்றி இராவணனை வெல்ல இயலாது’ என்று கூறுகிறான் விபீடணன்.

மும்மடங்கு பொலிந்த முகங்கள்!

போர்க்களத்தில் மாண்டு கிடந்த இராவணனின் முகம் முன்பு இருந்ததைவிடப் பொலிவடைந்ததாகக் கம்பன் பாடுகின்றான். பொதுவாகப் பலருக்கு உயிருடன் வாழும் பொழுதே முகத்தில் சவக்களை தட்டும். இராவணனுக்கோ அவன் மாண்டு பிணமான பிறகு, அவனுடைய முகங்கள் மும்மடங்கு பொலிந்தன என்கிறான் கம்பன். மும்மடங்கு பொலிவு எனின் எப்படி? இராவணன் சீதையைத் தன் மனச்சிறையிலிருந்து விடுவித்ததில் ஏற்பட்ட பொலிவு ஒன்று. இராமனை ‘நல்லதோர் பகை’ என்று எண்ணியதால் ஏற்பட்ட பொலிவு இரண்டு. இராமன் பரம்பொருள் என்று தெரிந்தும் புகழ் ஒன்றையே விரும்பிச் சாகும்வரை போர் செய்ததால் ஏற்பட்ட பொலிவு மூன்று என எண்ணலாம். அங்ஙனம் எண்ணுவது முறையும்கூட!

இராமனின் ஏச்சும் சீதையின் துயரும்

சீதை மீட்கப்படுகின்றாள்; விபீடணன் சீதையை இராமனிடம் அழைத்து வருகின்றான். இந்த இடத்தில் இராமகாதை தடம் மாறுகின்றது. எதிர்பாராமல் இராமன் சீதையைத் திட்டத் தொடங்குகின்றான். வில்லிலிருந்து அம்புகள் புறப்படுவது போல் சுடு சொற்களால் சீதையைச் சுடுகின்றான்.


“ஊண் திறம் உவந்தனை; ஒழுக்கம் பாழ்பட,
மாண்டிலை; முறை திறம்பு அரக்கன் மாநகர்


ஆண்டு உறைந்து அடங்கினை அச்சம் தீர்ந்து, இவண்
மீண்டது என் நினைவு? எனை விரும்பு என்பதோ?”

(கம்பன்-10013)


“பெண்மையும் பெருமையும் பிறப்பும் கற்பு எனும்
திண்மையும் ஒழுக்கமும் தெளிவும் சீர்மையும்
உண்மையும் நீ எனும் ஒருத்தி தோன்றலால்
வண்மை இல் மன்னவன் புகழின் மாய்ந்தவால்”

(கம்பன்-10017)

என்பன அவற்றுள் சில பாடல்கள். தவத்தின் தவமாய சீதாதேவி, காப்பியம் முழுவதிலும் நெடிது பேசாது வந்த சிறையிலிருந்த செல்வி பேசுகின்றாள். இல்லை! வினாத் தொடுக்கின்றாள். கற்புக்கனலியாகிய சீதை அழுத்தமான குரலில் இராமனை அடக்க நிலைமாறா வகையில் சுடுகின்றாள்! “தலைவனே! அசோகவனத்தில் சோர்ந்து கிடந்த—கற்புத் தவத்தில் இருந்த—என்னை, அனுமன் கண்ட வண்ணம் தங்களிடம் கூறவில்லையா? அனுமன் தங்களுடைய தூதன் அல்லவா? ஒரு தூதன் கண்டதையும் கேட்டதையும் ஒளிக்காமல் சொல்லும் கடமையுடைய வனல்லவா? அல்லது தூதனாகிய அனுமனிடம் தாங்கள் நம்பிக்கை வைக்கவில்லையா? மேன்மையான குணத்தையுடையவரே! நான் வருந்திச் செய்த தவம், பேணிக் காத்த நற்குணம், கற்புடைமை எல்லாம் பைத்தியக்காரத்தனமாகி அவமாகி விட்டதே! உத்தமரே, உங்கள் மனத்து உணராமையால்” என்று பேசுகிறாள். இத்துடன் சீதை நிறுத்திக் கொள்ள வில்லை. ஆண் ஆதிக்கத்தின் அற்பச் செயல்களை, கொடுமைகளைச் சாடுகின்றாள்; பொதுவாகப் பெண்களின் மனத்தை உள்ளவாறு அறியும் அல்லது உணரும் தன்மை ஆடவருக்கு இல்லை! இது இன்று வரையில் உள்ள நடைமுறை, இந்தக் குறை மாந்தருக்கு மட்டுமா? நான்முகன், திருமால், சிவன் முதலியோரும் இதற்கு விதிவிலக்கல்லர் என்பது சீதாபிராட்டியின் வாதம்! ‘என் கணவர் இராமனும் ஓர் ஆண் மகன் தானே! அவர் எப்படி என்னை, என்னுடைய உள்ளத்தை, உணர்வினைப் புரிந்து கொள்வார்? பரம்பொருளே! இனி நான் யாருக்கு என்னுடைய கற்புத் தவத்தைக் காட்ட வேண்டும்? இப்பொழுது நான் இறப்பதே நன்று. உமது கட்டளையும் பொருத்தமானதே! இப்போது சாவதே என் கடமை’ என்றாள்.

சீதை, எரியில் மூழ்க ஆயத்தமானாள்; ‘அக்கினி தேவனே! நான் என் மனத்தினாலும் உடம்பினாலும் வாக்கினாலும் என் கற்புக்குக் குற்றம் உண்டாகும்படி நடந்திருந்தால் நீ கோபத்தோடு என்னைச் சுடுவாயாக!’ என்று கூறி இராமனுக்கு வணக்கம் செய்துவிட்டு எரியில் இறங்கினாள்! ஐயோ, பாவம்! அன்னை சீதா பிராட்டியின் கற்புக் கனலால் அக்கினிதேவன் சுடப்பட்டான்! அதனைக் கம்பன்,


நீந்த அரும் புனலிடை நிவந்த தாமரை
ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள் எனப்
பாய்ந்தனள், பாய்தலும், பாலின் பஞ்சு எனத்
தீய்ந்தது அவ் எரி, அவள் கற்பின் தீயினால்!

(கம்பன்-10036)

என்று பாடுவான்.

தீக்கடவுள் தன்னுள் மூழ்கிய சீதையை எடுத்து வருகின்றான்; வந்து ஆற்றாது புலம்புகின்றான்; கற்புக் கனலியாகிய சீதா பிராட்டியார் வெகுண்டால், ‘இந்த உலகம் அழிந்து விடுமே! படைப்பாளனாகிய நான்முகனும் அழிந்து விடுவான்! வான்மழை பொய்க்கும்! இப்புவிக்கோள் உடையும்! ஐயனே! சீதா பிராட்டியை ஏற்றருள்க’ என்று வேண்டுகின்றான். தீக்கடவுளின் உரைகேட்ட இராமன் மகிழ்ந்தான். உலகில் தீயே அழிக்க முடியாத சாட்சி! எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் தூய்மையாக இருப்பது தீ! ஆதலால், சீதை ஏற்றுக் கொள்ளத்தக்கவளே என்றான்! இந்த இடத்தில் ‘இனிக் கழிப்பிலள்’ என்று இராமபிரான் கூறியது பூரணமாக மனமாற்றத்தைக் குறித்ததாகத் தெரியவில்லை. அல்லது உணர முடியவில்லை.

‘கழிப்பிலள்’ என்றாரே தவிர, ஏற்றுக் கொண்டதாகக் கூறவில்லை. மீண்டும் நான்முகன் வேண்டுகின்றான். சீதையை இராமன் ஏற்றுக் கொள்கின்றான்.

நெடிய பயணம் நிறைவேறியது

நந்தியம்பதியில் இராமனது பாதுகையைத் தலைமையாகக் கொண்டு ஆட்சி செய்த பரதனிடம் அனுமனை அனுப்புகிறான் இராமன். ஆனாலும் காலம் நீட்டித்து விட்டது.

இராமன் வருகைக் காலத்தை நீட்டித்ததில், பரதனுக்கு வருத்தம். ஏரியில் மூழ்கி மாள நினைத்தான். அனுமன் காலத்தில் தோன்றிக் காத்தான். இராமன் வருகிறான். கோசலநாடு இராமனின் ஆட்சியைப் பெறுகிறது! எங்கும் மகிழ்ச்சி! ஒரு நெடிய பயணம் நிறைவேறியது.