உள்ளடக்கத்துக்குச் செல்

கம்பன் கவித் திரட்டு 2, 3/001-005

விக்கிமூலம் இலிருந்து



இராமாயணத்தில்
பால காண்ட நிகழ்ச்சிகள்

சுருக்கம்


அயோத்தி நாட்டு மன்னன் தசரதன் மகப்பேறு இல்லாமை குறித்து மிக வருந்தினான். குல குருவாகிய வசிட்டரின் ஆலோசனைப்படி மகப்பேறு கருதி யாகம் ஒன்றை செய்ய முடிவு செய்தான். அந்த யாகத்தை செய்யக் கூடியவர் ஒருவரே. அவரே கலைக்கோட்டு முனிவர்; விபாண்டக முனிவரின் வழிதோன்றல்; அவர் அங்க நாட்டில் இருந்தார். தசரதன் அங்க நாட்டிற்குச் சென்று, கலைக்கோட்டு முனிவரை தன் நாட்டிற்கு அழைத்தான். யாகத்தைப் பற்றியும் கூறினான். முனிவர் அயோத்திக்கு வந்து யாகத்தை நடத்தினார்.

யாகத் தீயினின்று ஒரு பூதம் கையிலே பொன் தட்டு ஒன்றில் அமிர்த பிண்டம் ஏந்தி வந்தது. தட்டை பூமியில் வைத்தது. யாகத்தீயில் மறைந்தது.

அப்பிண்டத்தை தசரத சக்ரவர்த்தியின் தேவியர் மூவரும் பகிர்ந்து உட்கொண்டனர். நாட்கள் ஓடின. தேவியர் மூவரும் கருத்தரித்தனர். உரிய காலத்தில் தசரதனுக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தனர். கோசலைக்கு இராமனும், கைகேயிக்கு பரதனும், சுமித்திரைக்கு இலக்குமணனும், சத்துருக்னனும் பிறந்தனர்.

அரசக் குமாரர்களுக்குரிய வில் வித்தை மற்றும் ஏனைய சாத்திரங்களையும் கற்று, தேர்ச்சி பெற்ற தம் மக்களைக் கண்டு பெரு மகிழ்ச்சியடைந்தான் தசரதன். சில ஆண்டுகளுக்குப்பின் ஒரு நாள் விசுவாமித்திர முனிவர் தசரதனிடம் வந்தார்.

“சித்த வனத்திலே வேள்வியொன்று செய்ய நினைக்கிறேன். அந்த வேள்விக்கு அரக்கரால் இடையூறு வராவண்ணம் காக்க இராமனை என்னுடன் அனுப்புவாயாக!” எனக் கூறினார். மிகுந்த வேதனையுடன் இராமனைப் பிரிந்தான் தசரதன். அண்ணனைத் தொடர்ந்தான் இக்குமணன். இடையூறு விளைவிக்க வேகமாக வந்தாள் தாடகை, முதலில் அவள் பெண் ஆயிற்றே என்று இராகவன் தயங்கினாலும், விசுவாமித்திரர் அவளைப் பற்றிக் கூறிய வரலாற்றை நினைவுபடுத்திக் கொண்டான். ஓர் அம்பு விடுத்தான். வீழ்ந்தாள் தாடகை மகிழ்ச்சியுற்ற முனிவர் படைக்கலங்களைப் பற்றிய இன்னும் பல அரிய விவரங்களைக் கற்பித்தார்.

வழியில் கௌசிகி ஆற்றை கடக்கும்போது, அந்த ஆற்றின் வரலாற்றையும் கூறினார் கௌசிக முனிவர். சித்தாசிரமத்திலே ஆறு நாட்கள் வேள்வி நடந்தது. யாகத்தைப் பாழ்படுத்த வந்தனர் அரக்கர். யாகக் குண்டத்தை அழிக்கப் பல்வேறு உத்திகளைக் கையாண்டனர். இவ்வரக்கர்களுள் முக்கியமானவர்கள் மாரீசன், சுபாகு என்ற தாடகையின் இரு புதல்வர்கள்- இராமன் அமைத்த அம்புக் கூரையைக் கண்டனர்; வெகுண்டனர். யாகத்தை அழிக்க மாயங்கள் செய்தனர். கண்டான் இரகுவீரன். இரண்டு அம்புகளை எய்தான். இவை இவ்விருவரையும் ஓட ஓட துரத்தியது. சுபாகுவைக் கொன்றது. மாரீசனைக் கடலிலே போட்டது.

வேள்வி முடிந்ததும் மிதிலைக்கு அரசிளங்குமரரை அழைத்துச் சென்றார் முனிவர். வழியில் இராமனின் மரபிலே தோன்றிய சகரன் ஆகியோர் பற்றியும் பகீரதன் தன் முன்னோரை உய்விக்க கங்கையை இவ்வுலகுக்குக் கொண்டு வந்த நிகழ்ச்சியையும் கூறினார்.

விதேக நாட்டின் ஊடே மூவரும் சென்று, மிதிலையின் புறமதிலை அடைந்தனர். அங்கு தான் கௌதம முனிவரின் மனைவி, அகலிகை சாபத்தின் காரணமாகக் கல் உருக்கொண்டு கிடந்தாள். இராமனுடைய திருவடி தூசி அக்கல்லில் பட்டது. சாபம் நீங்கி, சுய உருவம் பெற்றாள் அகலிகை. மீண்டும் தன் கணவனை அடையும் பேறு பெற்றாள்.

மிதிலையை அடைந்தனர் அம்மூவர்.

மிதிலையில் கன்னி மாடத்தின் மேல் மாடத்தில் தோழிகள் சூழ நின்றிருந்தாள் சீதை. அங்கே நின்றான் இராமன். பின்?


“அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்!”

சீதைக்குச் சுயம்வரம். ஆனால் இது சிறிது வித்தியாசமானது சிவதனுசுக்கு நாணேற்றுபவனே சீதைக்கு மாலையிடலாம். இந்த இளங்குமரன் என்ன செய்வானோ என்று வியப்புடன் எல்லோரும் இராமனையே நோக்கிய வண்ணம் இருந்தார்கள். ‘படார்’ என்ற வில் முறிந்த சத்தம் அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. மிதிலை மாநகர் வழியே உலா வரும் இராமனைக் காண, முட்டித் தள்ளிக் கொண்டு வந்த பெண்கள் தான் எத்தனை, எத்தனை!

இராமனுக்கும் சீதைக்கும் பங்குனி உத்திரத்தின் போது திருமணம் நிகழ்ந்தது. அதே வேளையில் இராமனுடைய சகோதரர்களுக்கும், சனகனுடைய பெண்கள் மூவருக்கும் திருமணம் நடைபெற்றது.

மிதிலையிலிருந்து தசரதனின் திருமகனும், அவனுடைய தம்பியரும், புதுமணப் பெண்களும் அயோத்திக்குப் புறப்பட்டனர்.

வழியில் கோடாலியை ஏந்தி உருத்திரன் போல் எதிர்ப்பட்டான் பரசுராமன். இவன் கார்த்தவீரியார்ச்சுனனை கொன்றவன். தன் தந்தையை கொன்றவன் க்ஷத்திரியன் என்பதால் அந்த வகுப்பாரையே அழிக்க உறுதி கொண்டவன். தன் வில்லை நாணேற்றும் படி இராமனுக்குச் சூளுரைத்தான். இரகுவீரன் பரசுராமனிடமிருந்து வில்லை வாங்கினான். எளிதில் நாணேற்றினான். பரசுராமன் தன் பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிட்டான். இராமனை வணங்கினான். விடை பெற்றுக் கொண்டான்.

அயோத்தியிலே ஒரே கோலாகலம். மக்கள் அந்நகரை மிக மிக அழகாக அலங்கரித்தனர். ஏன்? தம் பேரன்புக்கு உரிய இராமனும் அவன் தம்பியரும் மணமுடித்து வருகிறார்களே, எவ்வளவு மகிழ்ச்சிகரமான செய்தி!

பரதனைக் காண அவன் பாட்டன் கேகைய அரசன் விழைந்தான். பரதனும், சத்துருக்கனனும் கேகைய நாட்டிற்குச் சென்றனர்.

அவர்கள் சென்ற பின், தசரதன் இராமனுக்கு முடிசூட்ட தீர்மானித்தான். நாளும் குறித்தாயிற்று. இதுவே பாலகாண்டம்.