உள்ளடக்கத்துக்குச் செல்

கம்பன் கவித் திரட்டு 2, 3/002-005

விக்கிமூலம் இலிருந்து



அயோத்தியா காண்டம்


கோசல நாட்டின் தலைநகர் அயோத்தி. அந்த அயோத்தி மாநகரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை விவரிக்கும் காண்டம் ஆதலின் இஃது அயோத்தியா காண்டம் எனும் பெயர் பெற்றது.

இந்தக் காண்டம் 12 படலங்கள் கொண்டது. இந்த பன்னிரண்டு படலங்களிலுமாக மொத்தம் 1343 பாடல்கள் உள்ளன. அவற்றுள் 56 பாடல்களைத் திரட்டி இப்பதிப்பில் வெளியிட்டிருக்கிறோம்.


பெருமகன் என்வயின் பிறக்கச் சீதையாம்
திருமகள் மணவினை தெரிய கண்ட நான்
அருமகன் நிறை குணத்து அவனி மாது எனும்
ஒருமகள் மணமும் கண்டு உவப்ப உன்னினேன்.

இராமனாகிய திருமகன் என் வயிற்றில் பிறந்தான். அதனால் சீதையாகிய திருமகளின் திருமணம் கண்டேன். அரிய அம்மகன் நிறைந்த குணமுடைய பூமி தேவி என்கிற ஒரு மகளை மணக்கும் முடிசூட்டு விழாவையும் கண்டு மகிழ விரும்புகிறேன் என்று கூறினான் தசரத மன்னன். பதவுரை:

பெருமகன்– புருஷோத்தமனாகிய ஶ்ரீராமன்; என் வயின் பிறக்க– என்னிடத்திலே பிறக்க–(அவ்விராமனுக்கு) சீதையாம்– சீதையாகிய; திருமகள்– திருமகளது; மணவினை– மணக்கோலத்தை; தெரியக் கண்ட நான்–கண்ணாரக் கண்ட நான்; அருமகன்–அருமை மகனாகிய அவன்; நிறை குணத்து– நிறைந்த குணத்தை உடைய; அவனி மாது எனும்– பூமிதேவி என்கிற; ஒரு மகள்– ஒரு பெண்ணை; மணமும்– திருமணம் செய்து கொள்கிற கோலத்தையும்; கண்டு உவப்ப– கண்டு களிக்க; உன்னினேன்– உளங் கொண்டேன்.

இராமன் முடிசூட ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லு மாறு சோதிடர்களுக்குப் பணித்தான் மன்னன் தசரதன்.

“நாளையே நல்ல நாள்” என்று கூறினார் சோதிடர்.

பட்டாபிஷேகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு கட்டளையிட்டான் தசரதன். நகரத்தை அழகு செய்யுமாறு கூறினான். இராமனுக்கு முடிசூட்டு விழா என்பதை நகர மக்களுக்குப் பறைசாற்றி அறிவிக்குமாறு கட்டளையிட்டான்.

இச் செய்தியறிந்தாள் மந்தரை எனும் கூனி.


அந்நகர் அணிவுறும் அமலை வானவர்
பொன்னகர் இயல்பு எனப் பொலியும் ஏல்வையில்
இன்னல் செய் இராவணன் இழைத்த தீமைபோல்
துன்னரும் கொடுமனக் கூனி தோன்றினாள்.

அலங்கரிக்கின்ற ஆரவாரத்தை உடைய அந்த அயோத்தி நகரம்‌ தேவர்‌ வாழும்‌ பொன்னகர்‌ போல்‌ பொலிகின்ற சமயம்‌.

உலகினுச்குத்‌ துன்பம்‌ செய்கின்ற இராவணன்‌ இழைத்த தீமை எல்லாம்‌ ஒரு வடிவு கொண்டு வந்தது. போலத்‌ தோன்றினாள்‌. தோன்றியவள்‌ எவள்‌?

நெருங்குவதற்கு அரிய கொடிய மனம்‌ கொண்ட கூனி.

அந்நகர்‌– அந்த அயோத்தி நகரத்தை; அணிவுறும்‌– அலங்கரிக்கின்ற; அமலை– பேர்‌ ஆரவாரத்தினால்‌; வானவர்‌ பொன்னகர்‌ இயல்பு என– தேவலோக நகரின்‌ இயல்பு போல; பொலியும்‌ ஏல்‌ வையில்‌– விளங்கும்‌ சமயத்தில்‌; இன்னல்‌ செய்‌– (எவ்வுலகுக்கும்‌) துன்பமே செய்கின்ற; இராவணன்‌ இழைத்த தீமைபோல்‌– இராவணன்‌ முற்பிறப்பில்‌ செய்த தீமையெல்லாம்‌ ஒரு உருக்கொண்டு தோன்றியது போல்‌; துன்‌ ௮ரும்‌– பெறுதற்கு அரிய; கொடு மனக கூனி– கொடுமை கொண்ட மனத்தினளான; கூனி (மந்தரை) தோன்றினாள்‌– வெளியே போத்தாள்‌..

தோன்றிய கூனியும்‌ துடிக்கும்‌ நெஞ்சினாள்‌
ஊன்றிய வெகுளியாள்‌ உளைக்கும்‌ உள்ளத்தாள்‌
கான்று எரி நயனத்தாள்‌ கதிக்கும்‌ சொல்லினாள்‌
மூன்று உலகினுக்கும்‌ ஓர்‌ இடுக்கண்‌ மூட்டுவாள்‌.

கூனி எக்காட்சி வழங்குகிறாள்‌? துடிக்கின்ற நெஞ்சினள்‌; உள்ளத்தை அமுக்கிக்‌ கொண்டிருக்கும்‌ கோபத்தாள்‌; குழம்புகின்ற மனத்தாள்‌; கோபத்தால்‌ சிவந்து தீப்பொறி கக்கும்‌ கண்ணினள்‌; மூன்றுலகுக்கும்‌. துன்பமூட்டும்‌ இயல்பினள்‌.

தோன்றிய கூனியும்‌– அவ்வாறு வெளிப்‌ போந்த கூனியும்‌ (அந்நகர்‌ அலங்கரிக்கப்படுதல்‌ கண்டு) துடிக்கும்‌ நெஞ்சினாள்‌– கோபத்தால்‌ துடிக்கின்ற மனம்‌ உடையாளாய்‌; ஊன்றிய வெகுளியாள்‌– நிலைத்த கோபத்‌தளாய்‌; உளைக்கும்‌ உள்ளத்தாள்‌– வேதனைப்படுகின்‌ற உள்ளம்‌ கொண்டவளாய்‌; எரி கான்ற நயனத்தாள்‌– தீ உமிழ்கின்ற கண்கள்‌ உடையவளாய்‌; கதிக்கும்‌ சொல்லினாள்‌– தடுமாறும்‌ சொல்‌ உடையாளாய்‌; மூன்று உலகுக்கும்‌ ஓர்‌ இடுக்கண்‌ மூட்டுவாளாய்‌– மூன்‌றுலகுக்கும்‌ ஓர்‌ ஒப்பற்ற துன்பத்தை ஏற்படுத்துபவளாய்‌ தோன்றினாள்‌.

ஆழ்ந்த பேர்‌ அன்பினாள்‌ அனைய கூறலும்‌
சூழ்ந்த தீவினை நிகர்‌ கூனிசொல்லுவாள்‌
‘வீழ்ந்தது நின்‌ நலம்‌; திருவும்‌ வீந்தது
வாழ்ந்தள்‌ கோசலை மதியினானல்‌’ என்றாள்‌.

இவ்வாறு தோன்றிய கூனி என்ன செய்தாள்‌? கைகேயி இருந்த மாளிகைக்குச்‌ சென்றாள்‌. படுக்கையிலே படுத்‌திருந்தாள்‌ கைகேயி. அவளது பாதங்களை மெல்ல வருடினாள்‌ கூனி. கண்‌ திறந்தாள்‌ கைகேயி.

‘கிரகணம்‌ பிடிக்கும்‌ வரையில்‌ எவ்வித களங்கமும்‌ இல்லாமல்‌ ஒளி வீசும்‌ சந்திரன்‌ போல்‌ இருக்கிறாய்‌.’

உனக்குப்‌ பெருந்துன்பம்‌ வரப்‌ போகிறது. அப்படியிருந்தும்‌ அதை அறியாமல்‌ தூங்குகிறாய்‌” என்று இடித்துக்‌ கூறினாள்‌ கூனி.

“நால்வர்‌ பிள்ளைமார்‌ இருக்கும்‌ போது எனக்கு எத்தகைய துன்பம்‌ வரப்‌போகிறது” என்று பதில்‌ கூறினாள்‌ கைகேயி, அவ்விதம்‌ கைகேயி கூறவும்‌,

“வீழ்ந்தது உன்‌ நலன்‌; வீழ்ந்தது உன்‌ செல்வம்‌; கோசலை புத்திசாலி. வாழ்வும்‌ திருவும்‌ பெற்று விட்டாள்‌” என்று இலேசாக வத்தி வைத்தாள்‌ கூனி.

ஆழ்ந்த பேர்‌ அன்பினாள்‌–இராமனிடத்து ஆழ்ந்த பேரன்பு கொண்ட சைகேயி; அனைய கூறலும்‌–அவ்வார்த்தை கூறலும்‌; சூழ்ந்த தீவினை நிகர்‌ கூனி; தீவினை சூழ்ந்தது போன்ற கூனி; சொல்லுவாள்‌–பின்வருமாறு சொல்லத்‌ தொடங்கினாள்‌; வீழ்ந்தது நின்‌ நலம்‌–உனது நலன்‌ அழிந்தது; திருவும்‌ வீழ்ந்தது–செல்வமும்‌ அழித்தது; கோசலை மதியினால்‌ வாழ்ந்தனள்‌–கோசலை தன்‌ புத்தியினால்‌ வாழ்ந்தாள்‌; என்றாள்‌–என்று சொன்னாள்‌.

சிவந்த வாய்ச்‌ சீதையும்‌
        கரிய செம்மலும்‌
நிவந்த ஆசனத்து இனிது
        இருப்ப, நின்‌ மகன்‌
அவந்தனாய்‌ வெறு நிலத்து
        இருக்கல்‌ ஆனபோது
உவந்தவாறு என்‌ இதற்கு?
        உறுதியாது? என்றாள்‌.

சிவந்த வாயினை உடைய சீதையும்‌, கார்முகில்‌ வண்ணனாகிய இராமனும்‌ சிங்காதனத்திலே இனிது அமர்ந்து இருக்க உனது மகன்‌ பரதன்‌ தரையிலே நிற்கும்‌ கதி வந்துவிட்டது. இதற்கு நீ மகிழ்ந்தது ஏன்‌? உனது மன உறுதி என்ன?

சிவந்த வாய்‌ சீதையும்‌– சிவந்த வாயினை உடைய சீதையும்‌; கரிய செம்மலும்‌– க௫ நிறத்தை உடைய இராமனும்‌; நிவந்த ஆசனத்து– உயர்ந்த சிங்காதனத்தில்‌; இனிது இருப்ப– இனிமையாக வீற்றிருக்க. நின்‌ மகன்‌–உனது மகன்‌ பரதன்‌; அவந்தனாய்‌– ஒன்றும்‌ இல்லாதவனாய்‌; வெறு நிலத்து– தரையிலே; இருக்கல்‌ ஆனபோது– இருக்கும்‌ கதி வந்து விட்ட பிறகு; உவந்த ஆறு– மகிழ்ந்த காரணம்‌; என்‌?– என்ன? இதற்கு உறுதி யாது– இதற்கு நீ கொண்ட மன உறுதி என்ன?

அரசர்‌ இல்‌ பிறந்து பின்‌
        அரசர்‌ இல்‌ வளர்ந்து
அரசர்‌ இல்‌ புகுந்து
        பேர்‌ அரசி ஆன நீ
கரை செயற்கு அரும்‌
        துயர்க்‌ கடலில்‌ வீழ்கின்றாய்‌
உரை செயக்‌ கேட்கிலை
        உணர்தியோ? என்றாள்‌.

சாதாரண குடும்பத்திலே பிறந்தவளாகயிருந்தால்‌ அவளுக்கு அரசியல்‌ தெரியாது எனலாம்‌. மாற்றாள்‌ மகன்‌ அரசன்‌ ஆதல்‌ குறித்து மகிழ்வடைகிறாள்‌ எனலாம்‌,

ஆனால்‌ நீயோ அரச குடும்பத்திலே பிறந்தவள்‌. அரச குடும்பத்திலே வளர்ந்தவள்‌. அரச குடும்பத்திலே புகுத்தவள்‌; பட்டத்து அரசி வேறு,

இத்தகைய நீ மாற்றாள்‌ மகன்‌ அரசனாவது குறித்துச்‌ சிறிதும்‌ கவலையில்லாது இருக்கிறாயே! அதனால்‌ உனக்கும்‌ பெருந்துன்பமுண்டாகும்‌ என்பதை அறியாது இருக்கிறாயே! சொன்னாலும்‌ கேட்க மாட்டேன்‌ என்கிறாயே!

அரசர்‌ இல்‌ பிறந்து–அரச குடும்பத்தில்‌ தோன்றி; அரசர்‌ இல்‌ வளர்ந்து–அரச குடும்பத்திலே வளர்ந்து; அரசர்‌ இல்‌ புகுந்து– அரச குடும்பத்திலே வாழ்க்கைப்பட்டு; பேர்‌ அரசி ஆன நீ–பெரிய பட்டத்து அரசியாகிய நீ; கரை செயற்கு அரும்‌– கரை காண அரிதாகிய; துயரக்‌ கடலில்‌–துன்பக்‌ கடலில்‌; வீழ்கின்றாய்‌– வீழ்ந்து விடப்‌ போகின்‌றாய்‌; உரை செயக்‌ கேட்கிலை–சொன்னாலும்‌ கேட்க மாட்டேன்‌ என்கிறாய்‌; உணர்தியோ–நீ– யாகவும்‌ உணரவில்லை.

எனக்கு நல்லையும்‌ அல்லை;
        நீ; என்‌ மகன்‌ பரதன்‌
தனக்கு நல்லையும்‌ அல்லை;
        அத்‌ தருமமே நோக்கின்‌
உனக்கு நல்லையும்‌ அல்லை
        வந்து ஊழ்வினை தூண்ட
மனக்கு நல்லன சொல்லினை
        மதியிலா மனத்தோய்‌.

அறிவில்லாதவளே! எனக்கு நல்லது செய்வது போல்‌ ஏதோ சொல்கிறாய்‌. அது எனக்கு நல்லது அன்று; என்‌ மகன்‌ பரதனுக்கும்‌ நல்லது அன்று; உனக்கும்‌ நல்லது அன்று. விதி உன்‌ மதியைத்‌ தூண்ட ஏதோ சொல்கிறாய்‌.

எனக்கு நல்லையும்‌ அல்லை– எனக்கு நல்லவளும்‌ அல்ல; என்‌ மகன்‌– எனது மகன்‌; பரதன்‌ தனக்கு– பரதனுக்கு; நல்லையும்‌ அல்லை– நல்லவளும்‌ அல்ல; அத்‌தருமமே நோக்கின்‌– அந்த அரச நீதியையே நோக்கினால்‌; உனக்கு நல்லையும்‌ அல்லை– உனக்கு நல்லது செய்து கொள்பவளும்‌ இல்லை; வந்து ஊளழ்வினை தூண்ட– உனது முன்னை வினை தூண்ட; மனக்கு நல்லன– மனத்‌திலே நல்லனவாக இருப்பவற்றை; சொல்லினை– சொன்‌னாய்‌; மதியிலா மனத்தோய்‌– அறிவு இல்லாதவளே

மந்தரை பின்னரும்‌
        வகைந்து கூறுவாள்‌
அந்தரம்‌ தீர்ந்து உலகு
        அளிக்கும்‌ நீர்மையால்‌
“தந்தையும்‌ கொடியன்‌
        நல்தாயும்‌ தீயளால்‌
எந்தையே! பரதனே!
        என்‌ செய்வாய்‌?” என்றாள்‌.

“ஐயோ? பரதா! உன்‌ தந்தையாகிய தசரதனோ உன்னிடம்‌ அன்பின்றி ஒருதலையாக இராமனுக்கு முடி சூட்டுகிறான்‌, இந்த கைகேயியாவது அதைத்‌ தடுத்‌து உனக்கு முடி சூட்ட முயலலாமே, அதுவுமில்லை, சொல்‌லியும்‌ கேட்கவில்லை. இராமன்‌ முடி சூடுதல்‌ கேட்டு மகிழ்கிறாள்‌. இப்படி, உன்‌ தந்தையும்‌ கொடியனாய்‌, தாயும்‌ கொடியவளாய்‌ இருக்கின்றார்களே! பாவம்‌, நீ என்ன செய்வாய்‌!”

இவ்வாறு கூறி பரதனுச்கு இரங்குவாள்‌ போல்‌ நடித்து கைகேயி மனத்தில்‌ விஷவித்து ஊன்ற முயல்‌கிறாள்‌ கூனி.

மந்தரை– அந்தக்‌ கூனி; பின்னரும்‌– மீண்டும்‌; வகைந்து– வகைப்படுத்திக்‌ கூறுவாள்‌– சொல்வாள்‌ ஆயினாள்‌; அந்தரம்‌ தீர்ந்து– உலகு– இராமனுக்கே முடி சூட்ட வேண்டும்‌ என்று இரகசியமாக மனத்தின்‌ உள்ளே தீர்மானம்‌ செய்துக்‌கொண்டு; உலகு அளிக்கும்‌ நீர்மையால்‌– அரசு கொடுத்த தன்மையால்‌; தந்தையும்‌ கொடியன்‌– தந்தையாகிய தசரதனும்‌ உனக்குக்‌ கொடியவன்‌ ஆனான்‌; நல்‌ தாயும்‌ தீயள்‌– அது கேட்டு மகிழும்‌ உனது தாயும்‌ கொடியவள்‌ ஆனாள்‌; பரகனே– பரதா! எந்தையே என்‌ அப்பா; என்‌ செய்வாய்‌– நீ என்ன செய்வாய்‌?

“மறந்திலள்‌ கோசலை
        உறுதி; மைந்தனும்‌
சிறந்த நல்திருவினில்‌
        திருவும்‌ எய்தினான்‌
இறந்திலன்‌; இருந்தனன்‌;
        என்‌ செய்து ஆற்றுவான்‌
பிறந்திலன்‌ பரதன்‌ நீ
        பெற்றதால்‌” என்றாள்‌.

இராமன்‌ கோசலை மகனாகப்‌ பிறந்தான்‌, தனது நலனையும்‌ தனது மைந்தன்‌ நலனையும்‌ அவள்‌ மறக்கவில்லை. சமயம்‌ பார்த்துத்‌ தன்‌ மகனுக்கு அரசை வாங்கிக்‌ கொடுத்து விட்டாள்‌.

நீயும்‌ பரதனைப்‌ பெற்றாய்‌? என்ன பயன்‌? நீ அவனைப்‌ பெற்றதும்‌ பெறாததும்‌ ஒன்றே. சாவுமில்லை வாழ்வுமில்லை என்ற நிலை அவனுக்கு.

கோசலை– கோசலை; உறுதி– நன்மையை; மறத்திலள்‌– மறந்தாள்‌ இல்லை; (அதனால்‌) மைந்தனும்‌– –அவள்‌ மகனும்‌; திருவினில்‌– செல்வத்தில்‌; சிறந்த அரச செல்வத்தைப்‌ பெற்றான்‌; பரதன்‌– பரதனோ; இறந்திலன்‌– சாகவுமில்லை; இருந்தனன்‌– உயிரோடு இருக்கிறான்‌; என்‌ செய்து ஆற்றுவான்‌– என்ன செய்து தன்‌ துயர்‌ போக்கிக்‌ கொள்வான்‌; நீ பெற்றதால்‌– –நீ அவனைப்‌ பிள்ளையாகப்‌ பெற்றதால்‌; பிறந்திலன்‌– பிறவாததற்குச்‌ சமம்‌ ஆனான்‌.

பாக்கியம்‌ புரிந்திலாப்‌
        பரதன்‌ தன்னைப்‌ பண்டு
ஆக்கிய பொலன்‌ கழல்‌
        அரசன்‌ ஆணையால்‌
தேக்கு உயர்‌ கல்‌ அதர்‌
        கடிது சேணிடைப்‌
போக்கிய பொருள்‌ எனக்கு
        இன்று போந்ததால்‌.

பாவம்‌! துரதிர்ஷ்டசாலியான பரதனை கேகய தேசத்‌திற்குப்‌ போகுமாறு தசரதன்‌ ஏன்‌ அனுப்பினான்‌?

அதன்‌ ரகசியம்‌ இப்போதுதான்‌ எனக்கு விளங்குகிறது. இராமனுக்கு முடி சூட்டவே.

பாக்கியம்‌ புரிந்திலா– –அரனாகும்‌ நல்ல பாக்கியம்‌ செய்யாத; பரதன்‌ தன்னை– பரதனை; பொலன்‌ ஆக்கிய கழல்‌ அரசன்‌– பொன்னால்‌ செய்யப்‌ பெற்ற வீரக்‌ கழல்‌ அணிந்த தசரதன்‌; ஆணையால்‌– உத்தரவு பிறப்பித்து; தேக்கு உயர்‌ கல்‌ அதர்‌– தேக்கு மரங்கள்‌ உயர்ந்த மலை சார்ந்த நெடுஞ்சாலை வழியே; சேண்‌ இடை– வெகு தூரத்தில்‌ உள்ள கேகய நாட்டிற்கு; கடிது– விரைவாக; போக்கிய பொருள்‌– அனுப்பியதன்‌ பொருள்‌; இன்று எனக்குப்‌ போந்ததால்‌– இன்று தான்‌ எனக்கு விளங்கிற்று.


“போதி என்‌ எதிர்‌ நின்று
        நின்‌ புன்‌ பொறி நாவை
சேதியாது இது பொறுத்தனன்‌
        புறம்‌ சிலர்‌ அறியின்‌
நீதி அல்லவும்‌ நெறி முறை
        அல்லவும்‌ நினைந்தாய்‌
ஆதி; ஆதலின்‌ அறிவிலி
        அடங்குதி” என்றாள்‌.

‘போ! என்‌ எதிரில்‌ நில்லாதே! தகாக சொல்‌ கூறிய உன்‌ நாவைத்‌ துண்டிக்காமல்‌ பொறுத்தேன்‌.

வேறு எவரேனும்‌ அறிந்தால்‌ நீதியற்ற முறையற்ற செயல்களை நினைப்பவள்‌ என்று ௨ன்மீது குற்றம்‌ சுமத்துவார்கள்‌,

தண்டனைக்கும்‌ உள்ளாவாய்‌.

எனவே உன்‌ நாவை அடக்கு!’ என்றாள்‌ கைகேயி.

என்‌ எதிரில்‌ நின்று போதி– என்‌ எதிரிலிருந்து அப்பால்‌ போ; நின்‌ புன்‌ பொறி நாவை– கீழ்த்தரமான சொற்களைச்‌ சொன்ன உன்னுடைய நாக்கை; சேதியாது– துண்டிக்காமல்‌; இது பொறுத்தனன்‌– இதைப்‌ பொறுத்துக்‌ கொண்டேன்‌; புறம்‌ சிலர்‌ அறியின்‌– வேறு எவராவது இதை அறிந்தால்‌; நீதி அல்லவும்‌, நெறி முறை அல்லவும்‌– நியாயமற்றவும்‌, முறையற்றவும்‌ ஆகியவற்றை; நினைந்‌தாய்‌ ஆதி– கருதிய குற்றத்துக்கு ஆளாவாய்‌; ஆதலின்‌– ஆதலால்‌; அறிவிலி– அறிவில்லாதவளே அடங்குதி– வாயை மூடு; என்றாள்‌– என்று சொன்னாள்‌ கைகேயி.

(கூனி ஓடவில்லை. நின்று சிறிது சிறிதாகக்‌ கைகேயின்‌ மனத்தை மாற்றினாள்‌)

கூனி போன பின்‌ குல மலர்க்‌
        குப்பை நின்று இழிந்தாள்‌
சோனை வார்‌ குழல்‌ கற்றையில்‌
        சொருகிய மாலை
வான வார்‌ மழை நுழை தரு
        மதி பிதிர்ப்பாள்‌ போல்‌
தேன்‌ அவாவுறு வண்டினம்‌
        அலமரச்‌ சிதைத்தாள்‌.

கூனியின்‌ சதி நன்கு பலித்து விட்டது. கைகேயி மனம்‌ மாறினாள்‌; தன்‌ மலர்‌ படுக்கையை விட்டு இறங்‌கினாள்‌; தன்‌ கூந்தலிலே சூடியிருந்த மலர்‌ மாலையை எடுத்தாள்‌; பிய்த்து எறிந்தாள்‌.

கூனி போன பின்‌– மந்தரை போன பின்பு; குல மலர்க்‌குப்பை நின்று– சிறந்த மலர்க்‌ குவியலாகிய படுக்கையிலிருந்து; இழிந்தாள்‌– இறங்கினாள்‌; சோனைவார்‌ குழல்‌கற்றையில்‌– பெருமழை பொழியும்‌ மேகம்‌ போன்று தனது கரிய கூந்தல்‌ தொகுதியில்‌; சொருகிய– சொருகிக்‌ கொண்‌டிருந்த; மாலை– பூ மாலையை ; வானம்‌ வார்‌ மழை நுழைதரும்‌ மதி பிதிர்ப்பாள்‌ போல்‌– ஆகாயத்திலிருக்கின்‌ற பெரிய கார்கால மேகத்தில்‌ நுழைந்திருக்கின்ற பூரணசந்திரனை சொரிவிப்பவள்‌ போல; தேன்‌ அவா உறுவண்டு இனம்‌– மதுவின்‌ மீதுள்ள ஆசையால்‌ வண்டுக்‌ கூட்டம்; அலமர– சுழலிடும் படும்; சிதைத்தாள்–சிதைத்து எறிந்தாள்;

விளையும் தன் புகழ் வல்லியை
        வேர் அறுத் தென்னக
கிளை கொள் மேகலை சிந்தினள்
        கிண் கிணியோடும்
வளை துறந்தனள்; மதியினில்
        மறுத்துடைப்பாள் போல்
அளக வான் நுதல் அரும்
        பெறல் திலகமும் அழித்தாள்.

வளரும் புகழ்க்கொடியை அறுத்து எறிந்தது போல தனது மேகலாபரணத்தை எடுத்து வீசினாள். காலில் அணிந்திருந்த கிண்கிணியை எடுத்து எறிந்தாள்; கையில் அணிந்திருந்த வளைகளைக் கழற்றி வீசினாள்; நெற்றியில் இருந்த திலகத்தை அழித்தாள்.

விளையும் தன் புகழ் வல்லியை– வளர்கின்ற தனது புகழாகிய கொடியை; வேர் அறுத்து என்ன– வேரோடு அறுத்தால் போல; கிளை கொள் மேகலை– ஒளி பொருந்திய தன் மேகலாபரணத்தை; சிந்தினாள்–சிதறினாள்; கிண்கிணியோடும்– பாத கிண்கிணியோடும்; வளை துறந்தனள்– கைவளைகளையும் எறிந்தாள்-மதியினில்– சந்திரனிடத்தே உள்ள; மறு களங்கத்தை; துடைப்பாள் போல்- அழிப்பவள் போல; அளகவாள் நுதல்- கூந்தலை அடுத்த ஒளி மிகும் நெற்றியில் உள்ள; அரும் பெறல் திலகமும்– பெறுதற்கு அரிதான திலகத்தையும்; அழித்தாள்- துடைத்தாள். 

தா இல் மா மணிக் கலன்
        முற்றும் தனித்தனி சிதறி
நாவி நன்குழல் நானிலம்
        தை வரப் பரப்பிக்
காவி உண் கண்கள்
        அஞ்சனம் கான்றிடக் கலுழாப்
பூ உதிர்ந்தது ஓர் கொம்பு
        எனப் புவிமிசைப் புரண்டாள்.

இரத்தினம் பதித்த அணிகள் யாவும் நாலா பக்கமும் சிதறிக்கிடந்தன. கஸ்தூரி வாசனை வீசும் தனது கூந்தலை அவிழ்த்தாள்; தலைவிரி கோலமானாள்; அழுதாள்; அதனால் கண்களில் தீட்டப்பட்ட மை கலங்கியது; கரைந்து ஓடியது. மலர் உதிர்த்த பூங்கொம்பு போல பூமியிலே கிடந்தாள் கைகேயி.

தா இல் மா மணிக்கலன்-குற்றமற்ற பெரிய இரத்தின மயமான நகைகள்; முற்றும்-முழுவதும்; தனித்தனி சிதறி— தனித்தனியாகச் சிதறி; நாவி நன்குழல்– கஸ்தூரி அணிந்த கூந்தலை, நானிலம் தை வரப் பரப்பி– பூமியிலே கிடந்து புரளும்படி அவிழ்த்து விட்டு; காவி உண் கண்கள்– நீலோத்பலம் போன்ற மையுண்ட கண்கள்; அஞ்சனம் கான்றிட- மை கரைந்து ஓட; கலுழா– அழுது கொண்டு; பூ உதிர்ந்தது ஓர் கொம்பு என- மலர் உதிர்த்த கொடி போல; புவி மிசைப் புரண்டாள்– தரையிலே புரண்டாள்.

நவ்வி வீழ்ந்தென நாடக
        மயில் துயின்றென்னக்
கவ்வை கூர்தரச் சனகியாம்
        கடி கமழ் கமலத்து



அவ்வை நீங்கும் என்று
        அயோத்தி வந்து அடைந்த அம்மடந்தை
தவ்வை ஆம் எனக் கிடந்தனள்
        கேகயன் தனயை.

துள்ளித் திரிகின்ற மான் அதை விட்டு பூமியில் படுத்து புரள்வது போலவும் மகிழ்ச்சியுடன் ஆடும் அழகிய மயில் அதை விட்டு ஓய்ந்து கிடப்பது போலவும், சீதையாகிய இலட்சுமி வனம் செல்வது அறிந்து அவள் இருந்த அயோத்திக்கு மூத்தவளாகிய மூதேவி வந்துவிட்டது போலவும் கிடந்தாள் கைகேயி.

கேகயன் தனயை– கேகயன் புதல்வியாகிய கைகேயி; கவ்வை கூர்தர– துன்பம் மிகுதலால்; நவ்வி வீழ்ந்தது என– மான் விழுந்தது போலவும்; நாடக மயில் துயின்றென்ன– குலாவிக் கூத்தாடும் மயில், அஃது ஒழிந்து ஒடுங்கிக்கிடந்தது போலவும்; சனகியாம்-சீதையாகிய; கடி கமழ் கமலத்து அவ்வை– மணம் வீசும் தாமரையில் வீற்றிருக்கும் இலட்சுமி, நீங்கும் என்று– காடு செல்வாள் என்று அறிந்து; அயோத்தி வந்து அடைந்த– அயோத்தி வந்து சேர்ந்த; அம்மடந்தை– இலட்சுமியின்; தவ்வை– மூத்தவளாகிய மூதேவியாம்; எனக் கிடந்தனள்– என்று சொல்லும்படியாக படுத்திருந்தாள்.

பட்டாபிஷேகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் கவனித்து விட்டு இரவு கைகேயி அரண்மனைக்குச் சென்றான் தசரதன்.

அங்கே என்ன கண்டான்? கைகேயி இருந்த அலங்கோலம் கண்டான், கண்டு பதைத்தான். அவளை எடுத்து ஆறுதல் மொழி பல கூறினான்.

கைகேயியும் இதுதான் தருணம் என்று எண்ணினாள். தசரதன் முன்பு அளித்திருந்த வரங்கள் இரண்டையும் இப்போது அளிக்கும்படி கேட்டாள்.

பரதனுக்கே முடிசூட வேண்டும் என்பது ஒரு வரம். இராமன் பதினான்கு ஆண்டுகள் காடு செல்ல வேண்டும் என்பது மற்றொரு வரம்.

இந்த மொழிகளைக் கேட்ட உடனே மன்னன் தசரதன் உற்ற நிலையை இங்கே நமக்குக் காட்டுகிறார் கவி.

உலர்ந்தது நா; உயிர்
        ஓடல் உற்றது; உள்ளம்
புலர்ந்தது; கண்கள் பொடித்த
        பொங்கு சோரி
சலம் தலை மிக்கது; தக்கது
        என் கொல் என்று என்று
அலைந்து அலையுற்ற அரும்
        புலன்கள் ஐந்தும்.

நாக்கு வறண்டது; உயிர் பிரியும் போல் ஊசலாடிற்று; மனம் வாடியது; கண்கள் இரத்தம் சொரிந்தன; கோபம் தலைக்கு ஏறியது; “என்ன செய்யலாம்?” என்று எண்ணி எண்ணிப் புலன்கள் ஐந்தும் குழம்பின; கலங்கின.

நா உலர்ந்தது–நாக்கு வறண்டது. உயிர் ஓடல் உற்றது–உயிர் போகத் தொடங்கியது; உள்ளம் புலர்ந்தது; மனம் தளர்ந்தது; கண்கள் பொங்கு சோரி பொடித்த–கண்கள் பொங்கி மிகுந்த இரத்தம் சிந்தின; சலம் தலை மிக்கது–துன்பம் தலைக்கேறியது; அரும்புலன்கள் ஐந்தும்– அரிய புலன்கள் ஐந்தும்; தக்கது என் கொல்– இப்போது என் செய்வது என்று எண்ணி; அலைந்து அலையுற்ற– திரிந்து குழம்பின.

மேவி நிலத்தில் இருக்கும்;
        நிற்கும்; வீழும்;
ஓவியம் ஒப்ப உயிர்ப்பு
        அடங்கி ஓயும்;
பாவியை உற்று எதிர் பற்றி
        எற்ற எண்ணும்
ஆவி பதைப்ப அலக்கண்
        எய்துகின்றான்.

உயிர் பதைக்கிறது; துன்பத்தால் துடிக்கிறான்; தரையில் உட்காருவான்; பின்னர் எழுந்து நிற்பான்; நின்றபடியே தரையில் வீழ்வான்; உயிர்ப்பு அடங்கப் பெற்றுச் சித்திரம் போல் ஓய்ந்து கிடப்பான். பாவியாகிய கைகேயியைப் பிடித்துத் தரையில் மோதிவிடலாமா என்று எண்ணுவான்.

ஆவி பதைப்ப– உயிர் துடிக்க அலக்கண்–துன்பம்; எய்துகின்றான்– அடைகின்ற தசரதன்; மேவி– அத்துன்பத்தினின்றும் மனத்தைத் தேற்றிக் கொண்டு; நிலத்தில் இருக்கும்–எழுந்து உட்காருவான்; நிற்கும்– பின் எழுந்து நிற்பான்; வீழும்– மீண்டும் தரையில் வீழ்வான்; உயிர்ப்பு அடங்கி– மூச்சுப் பேச்சு இல்லாமல்; ஓவியம் ஒப்ப– பதுமை போல; ஓயும்– ஓய்ந்து கிடப்பான்; பாவியை– பாவியாகிய கைகேயியை; எதிர் உற்று– எதிரே போய்; பற்றி– இரு கைகளாலும் பிடித்து; எற்ற– தரையிலே மோத; எண்ணும்– எண்ணுவான். 

பூதலம் உற்று அதனில்
        புரண்ட மன்னன்
மாதுயரத்தினை யாவர்
        சொல்ல வல்லார்?
வேதனை முற்றிட வெந்து
        வெந்து கொல்லன்
ஊது உலையில் கனல் என்ன
        வெய்து உயிர்த்தான்.

தரையிலே விழுந்து புரண்டு கொண்டிருக்கும் அத்தசரதனின் பெருந் துயரத்தினை எவரே சொல்லவல்லார்? யாரும் இலர். மனவேதனை பெருகப் பெருக உளம் மேலும் மேலும் வேதனையடைகிறது. கொல்லன் உலைக்களத்திலே ‘புஸ் புஸ்’ என்ற சப்தத்துடன் எரியும் தழல் போல் ‘புஸ்’ என்ற பெருமூச்சு விட்டு வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான்.

பூதலம் உற்று–தரையிலே விழுந்து; அதனில் புரண்ட– அதிலே புரண்டு கொண்டிருந்த; மன்னன்– தசரத மன்னனின்; மா துயரத்தினை– பெரும் துன்பத்தை; யாவர் சொல்ல வல்லார்– சொல்ல வல்லவர் எவர்? (ஒருவரும் இல்லை) வேதனை முற்றிட– துன்பம் அதிகரிக்க; வெந்து வெந்து– மனம் வெதும்பி வெதும்பி; கொல்லன் ஊதுலையில்– கொல்லனுடைய உலைக்களத்திலே எழுகின்ற; கனல் என– நெருப்புப் போல; வெய் துயிர்த்தான்– பெருமூச்சு விட்டான்.

கையொடு கையைப்
        புடைக்கும்; வாய் கடிக்கும்
‘மெய்யுரை குற்றம்’ எனப்
        புழுங்கி விம்மும்;



நெய் எரி உற்றென நெஞ்சு
        அழிந்து சோரும்;
வையகம் முற்றும் நடந்த
        வாய்மை மன்னன்.

கையொடு கை தட்டுகிறான்; கோபத்தால் உறுமி உதட்டைக் கடிக்கிறான்; ‘மெய் சொல்வதே குற்றம்’ என்று மனம் புழுங்குவான்; விம்முவான்; நெருப்பிலே வார்க்கப்பட்ட நெய் போல் உருகினான், வையம் முழுவதும் வாய்மைக்குப் புகழ் பெற்ற மன்னன்.

வையகம் முற்றும்– பூமி முழுவதும்; நடந்த புகழ் சென்ற; வாய்மை மன்னன்– சத்தியசீலனாகிய தசரத மன்னன்; கையொடு கையைப் புடைக்கும்– அங்கையிலே புறங்கை மடக்கிக் குத்திக் கொள்வான்; வாய் கடிக்கும்– உதட்டைக் கடிப்பான்; மெய் உரை குற்றம்– மெய் பேசுதல் குற்றம்; என– என; புழுங்கி– மனம் புழுங்கி; விம்மும்– விம்முவான்; நெய் எரி உற்று என– நெருப்பிலே வார்க்கப்பட்ட நெய் போல; நெஞ்சு அழிந்து– மனம் உருகி; சோரும்– சோர்வு அடைவான்.

நாகம் எனும் கொடியாள்
        தன் தாவின் ஈந்த
சோக விடம் தொடரத்
        துணுக்கம் எய்தா
ஆகம் அடங்கலும் வெந்து
        அழிந்து அராவின்
வேகம் அடங்கிய வேழம்
        என்ன வீழ்ந்தான்.



நல்ல பாம்பு போலும் கொடியவள் கைகேயி. அவள் தன் நாக்கினால் அளித்த விஷம் தலைக்கு ஏற நடுங்கி உடல் முழுவதும் துன்ப வெப்பத்தினால் வெதும்பி அழியப் பாம்பு விடத்தின் வேகம் அடங்கி வீழும் யானை போலத் தரையில் வீழ்ந்தான் தசரதன்.

நாகம் எனும்– நல்ல பாம்பு என்று சொல்லத்தக்க; கொடியாள் தன்– கொடியவள்; தனது நாவில் ஈந்த– நாக்கினால் அளித்த; சோக விடம்– துன்ப விஷம்; தொடர– தலைக்கு ஏறிய அளவிலே; துணுக்கம் எய்தா– நடுங்கி; ஆகம் அடங்கலும்– உடல் முழுவதும்; வெந்து– வெதும்பி; அழிந்து– சோர்ந்து; அராவின்– பாம்பினால் வேகம் அடங்கிய; வேழம் என்ன– யானை போல வீழ்ந்தான்.

இரவு முழுவதும் இவ்வாறு துடித்துக் கொண்டிருந்தான் தசரத மன்னன்.

மறுநாள் பொழுது விடிந்தது. பட்டாபிஷேக ஏற்பாடுகளை எல்லாம் செய்துவிட்டு மன்னனை அழைத்துச் செல்ல வந்தான் மந்திரி சுமந்திரன்.

வந்த மந்திரியை நோக்கி கைகேயி சொல்கிறாள்.

“இரவு முழுவதும் பட்டாபிஷேகம் பற்றியே பேசி இருந்து இப்பொழுதுதான் தூங்குகிறார் அரசர். அவரை எழுப்புவது இயலாது. எனவே நீர் போய் இராமனை அழைத்து வருக.”

மந்திரியும் “அங்ஙனமே ஆகுக” என்று கூறிச் சென்று இராமனை அழைத்து வந்தான்.

‘ஆழி சூழ் உலகம் எல்லாம்
        பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இரும் சடைகள் தாங்கித்
        தாங்க அரும் தவம் மேற்கொண்டு
பூழி வெம் கானம் நண்ணிப்
        புண்ணியத் துறைகள் ஆடி
ஏழிரண்டு ஆண்டில் வா’ என்று
        இயம்பினன் அரசன் என்றாள்.

“கடல் சூழ்ந்த உலகம் முழுவதையும் பரதனே ஆள, நீ நீண்ட சடாமுடி தரித்து அரிய தவம் மேற்கொண்டு காடு சென்று, புண்ணிய நதிகளில் நீராடி வா. ஓராண்டினில் அல்ல, ஈராண்டுகளில் அல்ல, பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வா. இது மன்னவன் இட்ட கட்டளை.”

இராமனை அழைத்து வரச் செய்து இவ்வாறு கூறினாள் கைகேயி.

ஆழி சூழ் உலகம் எல்லாம்– கடல் சூழ்ந்த இவ்வுலகம் அனைத்தையும்; பரதனே ஆள– பரதனே ஆண்டு கொண்டிருக்க; நீ போய்– நீ போய்; தாழ இரும் சடைகள் தாங்கி– தொங்குகின்ற பெருஞ்சடை தரித்து; தாங்க அரும்– தாங்குதற்கு அரிய; தவம் மேற்கொண்டு– தவத்தை மேற்கொண்டு; பூமி வெங்கானம்–புழுதியடைந்த வெப்பம் மிகுந்த காட்டை; நண்ணி– அடைந்து; புண்ணியத் துறைகள் ஆடி– புண்ணிய நதிகளில் நீராடி; ஏழு இரண்டு ஆண்டில்– பதினான்கு ஆண்டுகள் சென்றபின்; வா– திரும்பி வா; என்று இயம்பினன் அரசன் என்றாள்.

மன்னவன் பணியன்றாகில்
        நும் பணி மறுப்பனோ? என்

பின்னவன் பெற்ற செல்வம்
        அடியனேன் பெற்றது அன்றோ?
என் இனி உறுதி அப்பால்?
        இப் பணி தலை மேல் கொண்டேன்
மின் ஒளிர் கானம் இன்றே
        போகின்றேன்; விடையும் கொண்டேன்.

மன்னவன் இட்ட கட்டளையானால் என்ன? தாங்கள் பிறப்பித்த உத்தரவானால் என்ன? எதுவானால் என்ன? தாங்கள் சொன்னால் அதை நான் மறுப்பேனோ? நான் முடிசூடினால் என்ன? என் தம்பி பரதன் முடி சூடினால் என்ன? இரண்டும் ஒன்று தானே. இதோ இப்போதே காடு செல்வேன். விடை பெறும் வரை கூடக் காத்திரேன். விடை பெற்றுக் கொண்டேன்.

மன்னவன் பணி அன்று ஆகில்–அரசனுடைய கட்டளை அன்று ஆயினும்; நும் பணி மறுப்பனோ?– உமது கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுப்பேனோ?; என் பின்னவன் பெற்ற செல்வம்– என் தம்பியாகிய பரதன் பெற்ற செல்வம்; யான் பெற்றது அன்றோ– நான் அடைந்தது அன்றோ; அப்பால்– பிறகு; இதனினும்– இதனிலும் மேலான உறுதி– நன்மை; என்– யாது?; இப்பணி– எனக்கு இடப்பட்ட இக்கட்டளையை; தலை மேல் கொண்டேன்– தலை மேல் ஏற்றுக் கொண்டேன்; மின் ஒளிர் கானம்– மின்னல் விளங்கும் காட்டிற்கு; இன்றே போகின்றேன்– இன்றே செல்கிறேன்; விடையும் கொண்டேன்.

இராமன் முடி சூடப் போவதில்லை. காடு செல்கிறான் என்பது கேட்டான் இளையவனாகிய இலட்சுமணன். சினம் கொண்டான். 

அந்த இலட்சுமணன் எந்நிலையில் இருந்தான் என்பதை கம்பர் இங்கே நமக்குச் சொல்கிறார்.

கண்ணில்கடைத்தீ உக
        நெற்றியில் கற்றை நாற
விண்ணில் சுடரும் சுடர் வீய,
        மெய் நீர் விரிப்ப
உள் நிற்கும் உயிர்ப்பு எனும்
        ஊதை பிறக்க நின்ற
அண்ணல் பெரியோன் தனது
        ஆதியின் மூர்த்தி ஒத்தான்.

இலட்சுமணனுடைய கண்களில் இருந்து தீப்பொறிகள் பறந்தன. எத்தகைய தீப்பொறி ஊழித் தீ போன்ற தீப்பொறிகள். புருவ மயிர் கற்றைகள் நெற்றிக்கு ஏறின. உடம்பில் வியர்வை பொங்கிற்று. சண்டமாருதம் போல் சீறினான். தனது பழைய உருவாகிய ஆதிசேஷனைப் போல் விளங்கினான் இலட்சுமணன்.

கண்ணில் கடைத் தீ உக– கண்ணில் ஊழித் தீப்போன்ற தீப்பொறிகள் சிந்த; நெற்றியில் கற்றை நாற– புருவ மயிர் கற்றைகள் நெற்றியில் சென்று விளங்க; விண்ணில் சுடரும் சுடர் வீய– வானில் விளங்கும் சூரியன் ஒழிய; மெய் நீர் விரிப்ப– உடம்பிலே வெள்ளம் போல் வியர்வை பெருகிட; உள் நிற்கும் உயிர்ப்பு எனும் ஊதை பிறக்க– உடம்பின் உள்ளே நிற்கின்ற உயிர்ப்பு என்கிற சண்டமாருதம் தோன்றவும்; அண்ணல் பெரியோன்– பெருமை மிகு பெரியோன் ஆகிய இலக்குவன்; தனது ஆதியின் மூர்த்தி ஒத்தான்– தனது பழைய உருவாகிய ஆதிசேஷனை ஒத்தான். 

புவிப்பாவை பாரம் கெடப்
        போரில் வந்தோரை எல்லாம்
அவிப்பானும் அவித்து அவர்
        ஆக்கையை அண்டம் முற்றக்
குவிப்பானும் எனக்கு ஒரு
        கோவினைக் கொற்ற மெளலி
கவிப்பானும் நின்றேன்; இது
        காக்குநர் காமின் என்றான்.

“இராமன் முடி சூடுவதை எதிர்த்து எவர் வந்தாலும் வருக! அவரை எல்லாம் போரிலே கொன்று அவர் உடலையெல்லாம் பெரும் குவியலாகக் குவித்து அவ்வெற்றியினால் கிடைத்த மகுடத்தை என் தலைவனாகிய இராமனுக்குச் சூட்டுவேன். இதைத் தடுக்க எவர்வரினும் வருக.” என்று முழக்கம் செய்து கொண்டு தெருவிலே வந்தான் இலக்குமணன்.

போரில் வந்தோரை எல்லாம்– என்னை எதிர்த்துப் போரிட வந்தவர்களை எல்லாம்; புவிப் பாரம் கெட அவிப்பானும்– பூமி தேவியின் பாரம் நீங்கும்படியாக அவித்து; அவர் ஆக்கையை– அங்ஙனம் அழித்த அவர் தம் உடலை; அண்டம் முற்ற– உலகம் முழுவதும்; குவிப்பானும்– குவிப்பவனும்; என் கோவின்– எனது ஒரே தலைவனாகிய இராமனை; கொற்ற மெளலி–வெற்றித் திருமுடி; கவிப்பானும்– சூடுபவனும்; ஆக– உறுதி கொண்டு; நின்றேன்– இது காக்குநர் காமின் என்றான்– இதனைத் தடுக்கும் வலியுடையார் தடுப்பீர் என்றான்.

விண்ணாட்டவர் மண்ணவர்
        விஞ்சையர் நாகர் மற்றும்



எண் நாட்டவர் யாவரும்
        நிற்க ஓர் மூவர் ஆகி
மண் நாட்டுநர் காட்டுநர்
        வீட்டுநர் வந்தபோதும்
பெண் நாட்டம் ஒட்டேன் இனிப்
        பேருலகத்துள் என்னா

“கைகேயிக்கு ஆதரவாக தேவரே வந்தாலும் சரி; மானுடரே வந்தாலும் சரி; நாகர் வந்தாலும் சரி; வித்தியாதரர் வந்தாலும் சரி; படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் செய்யும் அந்த மும்மூர்த்திகளே வந்தாலும் சரி, இனி இந்தப் பெண்மணியின் சதி நிறைவேற விடமாட்டேன்!” என்று முழங்கினான்.

(பின்னும் இலக்குமணன்) விண் நாட்டவர்– தேவரும்; மண்ணவர்; பூமியில் உள்ளவரும்; விஞ்சையர்– வித்யாதரரும்; நாகர்– பாதாள உலகத்தவரும்; மற்றும் எண் நாட்டவரும்– இன்னும் எண்ணத்தக்க பலவாகிய நாட்டில் உள்ளவர்; யாவரும்– எல்லோரும்; நிற்க– வந்து நிற்கட்டும்; மண் நாட்டுநர்– உலகை படைப்பவரும்; காட்டுநர்– காப்பவர்; வீட்டுநர்– அழிப்பவரும்; (ஆகிய) ஓர் மூவர்– ஒப்பற்ற மும்மூர்த்திகளும்; வந்த போதும்– வந்து எதிர்த்த போதிலும்; இனி– இனிமேல்; இப்பேருலகத்துள்– இப்பெரிய உலகத்திலே; பெண் நாட்டம்– பெண்ணாகிய கைகேயி தன் நோக்கத்துக்கு; ஒட்டேன்– இடம் கொடேன்.

சிங்கக் குருளைக்கு இடு
        தீஞ்சுவை ஊனை, நாயின்
வெங்கண் சிறு குட்டனை
        ஊட்ட விரும்பினாளால்



நங்கைக்கு அறிவின் திறம்
        நன்று இது! நன்று இது! என்னாக்
கங்கைக்கு இறைவன்
        கடகக்கை புடைத்து நக்கான்.

சிங்கக் குட்டிக்கு வைக்க வேண்டிய நல்ல ருசி மிகு மாமிசத்தை நாய்க்குட்டிக்கு ஊட்ட விரும்பினாள் இந்த கைகேயி; “என்னே இவள் அறிவீனம்! என்னே இவள் அறிவீனம்!” என்று கூறி கை கொட்டிச் சிரித்தான் இலக்குவன்.

சிங்கக் குருளைக்கு இடு தீஞ்சுவை ஊனை– சிங்கக்குட்டிக்கு இடுதற்கு உரிய நல்ல சுவையுடைய ஊனை; வெங்கண் சிறு குட்டனை ஊட்ட விரும்பினாளால்– வெம்மையான சிறு கண்களை உடைய இளங்குட்டிக்கு ஊட்ட விரும்பினாள்; நங்கைக்கு– கைகேயியின்; அறிவின் திறம்– அறிவின் திறமை; நன்று இது– இது மிக நன்றாயிருக்கிறதே! என்னா– என்று கூறி; கங்கைக்கு இறைவன்– கங்கை கொண்டு வந்த பகீரதன் வழித்தோன்றலாகிய லட்சுமணன்; கடகக்கை புடைத்து– வீர கங்கணம் அணிந்த தன் கைகளைக் கொட்டி; நக்கான்– பின்வருமாறு கூறினான்.

“ஆகாதது அன்றால் உனக்கு
        அவ்வனம் இவ் அயோத்தி
மாகாதல் ராமன் நம் மன்னவன்
        வையம் ஈந்தும்
போகா உயிர் தாயர் நம் பூங்குழல்
        சீதை என்றே
ஏகாய் இனி; இவ்வயின் நிற்றலும்
        ஏதம்” என்றாள்.



“இலட்சுமணா! இங்கே வா! இராமன் செல்கிற அந்த வனம் உனக்கு ஆகாதது அன்று. உனக்கும் அதுவேயாகும். இராமன் செல்கிற அந்த வனமே உனது அயோத்தி. “இராமனே நம் தசரத மன்னன். சீதையே நம் தாய்” என்று கருதிய வண்ணம் செல்வாய். புறப்படு. இனி இங்கு நிற்பதும் தவறு” என்றாள் சுமித்திரை தன் மைந்தன் இலக்குவனை நோக்கி.

உனக்கு ஆகாதது அன்று– இராமன் செல்கின்ற வனம் உனக்கு ஆகாதது அன்று (ஆனதே) அவ்வனம் இவ்வயோத்தி– இராமன் செல்கின்ற அவ்வனமே உனது அயோத்தியாகும்; மா காதல் இராமன்– உன்னிடம் மிக்க அன்புடைய இராமன்; நம் மன்னவன்– நம் தசரத மன்னன் ஆவான்; நம் பூங்குழல் சீதை– பூ அணிந்த கூந்தலை உடைய நம் சீதையே நம்தாய்; என்றே– என்று கருதிய வண்ணம்; ஏகாய் புறப்பட்டுச்செல்; இவ்வயின் நிற்றலும் ஏதம்– இனி இங்கே நிற்பதும் தவறு.

பின்னும் பகர்வாள்; ‘மகனே! இவன்
        பின் செல்’; தம்பி
என்னும்படி அன்று; அடியாரினில்
        ஏவல் செய்தி
மன்னும் நகர்க்கே இவன் வந்திடில்
        வா; அது இன்றேல்
முன்னம் முடி; என்றனள்; பால்
        முலை சோர நின்றாள்.

மேலும் அவள் சொல்கிறாள்; ‘மகனே! இவன் பின் செல். எப்படி? தம்பி எனும் முறை பற்றியன்று. இராமனுக்கு அடியார் என்ற முறையில் ஏவல் செய். இராமன் மீண்டும் இந்நகருக்கு வந்தால் அவனுடன் நீயும் வா. அவன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அந்தச் செய்தி கொண்டு நீ மட்டும் வராதே. அவனுக்கு முன் நீ உயிர் விடு.”

அவளுடைய தனங்கள் பால் சொரிந்தன. எதனால்? மகன் மீதுள்ள தாயன்பினால்.

பின்னும்– மீண்டும்; பகர்வாள்– சொல்வாள்; மகனே– இவன் பின் செல்– இராமனைத் தொடர்ந்து செல்வாயாக; தம்பி எனும்படி அன்று– தம்பி என்கிற முறையில் அன்று; அடியாரினில் ஏவல் செய்தி– அடிமையைப் போல ஏவிய செயல்களைச் செய்வாய்; இவன்– இந்த இராமன்; மன்னும் நகர்க்கே வந்திடில் வா– வளம் நிலைத்த இந்த அயோத்திக்குத் திரும்பி வந்தால் வா; இன்றேல்– அவ்விதம் இல்லையேல்; முன்னம் முடி– அவனுக்கு முன்னால் நீ உன் உயிரை விடு; என்றாள்– என்று சொன்னாள்; பால் முலை சோர நின்றாள்– மார்பிலிருந்து பால் சொரிய நின்றவளாகிய சுமித்திரை.

கிள்ளையொடு பூவை
        அழுத; கிளர் மாடத்து
உள் உறையும் பூசை அழுத;
        உரு அறியாப்
பிள்ளை அழுத; பெரியோரை
        என் சொல்ல
வள்ளல் வனம் புகுவான் என்று
        உரைத்த மாற்றத்தால்

இராமன் காடு செல்வது கேட்டுக் கிளிகள் அழுதன; நாகண வாய்ப் பறவைகள் அழுதன; உயர் மாளிகைகளில் இருக்கும் பூனைகள் அழுதன; இராமன் உருவத்தைக் கண்டிராத சிறு பிள்ளைகள் அழுதன; அவ்விதமிருக்க இராமனை நன்கு அறிந்த பெரியவர் பற்றி என் சொல்ல?

வள்ளல்– வள்ளலாகிய இராமன்; வனம் புகுவான்– காட்டிற்குச் செல்வான்; என்று உரைத்த மாற்றத்தால்– என்று சொல்லக் கேட்ட அக்கணமே; கிள்ளையோடு பூவை அழுத– கிளிகளும் நாகணவாய் பறவைகளும் புலம்பின; கிளர்மாடத்துள் உறையும்– விளங்குகின்ற வீடுகளில் வசிக்கின்ற பூசை– பூனை; அழுத– அழுதன

உரு அறியாப் பிள்ளை அழுத– இராமன் உருவத்தை அறியாத குழந்தைகள் அழுதன; (எனில்) பெரியோரை என் சொல– இராமனை நன்கு அறிந்த பெரியோரைப் பற்றி என்ன சொல்வது?

ஆவும் அழுத; அதன் கன்று அழுத
        அன்று அலர்ந்த
பூவும் அழுத; புனல் புள் அழுத
        கள் ஒழுகும்
காவும் அழுத; களிறு அழுத
        கால் வயப் போர்
மாவும் அழுதன; அம் மன்னவனை
        மானவே.

பசுக்கள் அழுதன; கன்றுகள் கதறின; அன்று அலர்ந்த மலர்கள் கண்ணீர் வடித்தன; நீர் நிலைகளில் உள்ள பறவைகள் அழுதன; தேன் சொரியும் மலர்ச் சோலைகள் அழுதன; யானைகள் அழுதன; காலில் வலுவுடைய போர்க் குதிரைகளும் அழுதன. எவர் போல்? தசரத மன்னன் போல.

அம்மன்னவனைமான– இராமனுடைய பிரிவு பொறுக்கமாட்டாமல் வருந்தும் தசரத சக்கரவர்த்தியைப் போலவே; ஆவும் அழுத– பசுவும் அழுதன; அதன் கன்று அழுத– அப்பசுக்களின் கன்றுகளும் அழுதன; அன்று அலர்ந்த பூவும் அழுத– அன்று மலர்ந்த மலர்களும் அழுதன; புனல் புள் அழுத– நீர் வாழ் பறவைகளும் அழுதன. தேன் ஒழுகும் கரவும் அழுத– தேன் சொரியும் சோலைகளும் அழுதன; களிறு அழுத– யானைகள் அழுதன; கால் வயப் போர் மாவும் அழுதன– தேரில் பூட்டப்படும் வலிமை பொருந்திய போர்க் குதிரைகளும் அழுதன.

வெய்யோன் ஒளி தன் மேனியில்
        விரி சோதியில் மறையப்
பொய்யோ எனும் இடையாளொடும்
        இளையானோடும் போனான்;
மையோ? மரகதமோ? மறிகடலோ?
        மழை முகிலோ?
ஐயோ இவன் வடிவு என்பது ஓர்
        அழியா அழகு உடையான்.

‘அஞ்சனமோ! மரகதமணியோ! அலை புரண்டு வரும் கடலோ! மழை பொழிய எழுந்த மேகமோ!’ என்று சொல்லத் தக்க ஒப்பற்ற அழியாத அழகுடையவனாகிய இராமன் தன் திருமேனியினின்று பரவி எழும் பசிய ஒளியினால் சூரியனுடைய செவ்வொளி மறையும்படி, உளதோ இலதோ என்று ஐயுறத்தக்க இடையுடைய சீதையோடும், இளையவனாகிய இலட்சுமணனோடும் போனான். அந்தோ! பரிதாபம்!.

இவன் வடிவு– இவனது திருமேனியின் நிறம்; மையோ– அஞ்சனமோ; மரகதமோ– மரகத ரத்தினமோ; மறி கடலோ– புரண்டு அலை வீசும் கடலோ; மழை முகிலோ– மழை பெய்யும் நிலையில் உள்ள கார் மேகமோ; என்பது– என்று சொல்லத்தக்க; அழியா– என்றுமே அழியாத; ஓர் ஒப்பற்ற அழகுடையான்– அழகுபடைத்த இராமன்; வெய்யோன் ஒளி– சூரியனின் ஒளி; தன் மேனியின் விரிசோதியின் மறைய– தன் மேனியினின்று வெளிப்பட்டு பரவுகிற ஒளிக்குள் புகுந்திட; பொய்யோ– இல்லை என்று சொல்லும் படியான; இடையாளோடும்– இடைக்கொண்ட சீதையுடனும்; இளையானோடும்– இலக்குமணனுடனும்; போனான்– சென்றான்.

மூவரும் கங்கைக் கரையை அடைந்தனர். பொழுது போயிற்று. இருள் வந்தது. புற்களைக் கொண்டு படுக்கை ஒன்று செய்து கொடுத்தான் இலட்சுமணன்.

சிருங்கிபேரம் என்ற ஊரைச் சேர்ந்தவன் ஒருவன். அவன் பெயர் குகன்; வேடர் குலத் தலைவன். கங்கையின் இரு கரையும் சொந்தமாக உடையவன். ஏராளமான ஓடங்களை உடையவன். அவன் வந்து இராமனை வணங்கினான்.

தும்பியின் குழாத்தில் சுற்றும்
        சுற்றுத்தன்; தொடுத்த வில்லன்;
வெம்பி வெந்து அழியா நின்ற
        நெஞ்சினன்; விழித்த கண்ணன்;

தம்பி நின்றானை நோக்கித்
        தலைமகன் தனிமை நோக்கி
அம்பியின் தலைவன் கண்ணீர்
        அருவிசோர் குன்றில் நின்றான்.

ஓடங்கள் வைத்திருக்கும் தலைவனாகிய குகன் எப்படிப்பட்டவன்? யானைக் கூட்டங்கள் சுற்றிக்கொண்டு இருப்பன போல் சுற்றுகின்ற இனத்தாருடையவன்; நாணேற்றிய வில்லினை உடையவன்; அந்த வில்லினைக் கையில் ஏந்தி இரவு முழுவதும் உறக்கம் கொள்ளாமல் காவல் புரிகிறான்.

இராமன் புல் தரையில் படுத்திருப்பதைப் பார்க்கிறான்; அருமை தம்பியாகிய இலட்சுமணன் தன்னந்தனியனாக நின்றுக் கொண்டு காவல் புரிவதைக் காண்கிறான்.

கண்ணீர் அருவிபோல் பெருக்கெடுத்து ஓட நிற்கிறான்.

அம்பியின் தலைவன்– ஓடங்கள் வைத்திருக்கும் தலைவனாகிய குகன்; தும்பியின் குழாத்தில் சுற்றும் சுற்றத்தன்– யானைக் கூட்டம்போல் சுற்றிக் கொண்டுள்ள இனத்தார் உடையவன்; தொடுத்த வில்லன்– நாணேற்றிய வில்லினை உடையவன்; வெம்பி வெந்து அழியா நெஞ்சினன்– வருந்திக் கொதித்து நிலை குலையும் மனம் உடையவன்; விழித்த கண்ணன்– உறக்கமும் கண்கொட்டுதலும் இன்றி விழித்திருக்கும் கண்களை உடையவனாகி; தம்பி நின்றானை நோக்கி– நிற்கின்ற தம்பியைப் பார்த்து; தலைமகன் தனிமை நோக்கி– இராமன் தரையிலே படுத்திருக்கும் தன்மையையும் பார்த்துக் கண்ணீர் சொரிந்தான்.

அதிகாலையிலே எழுந்திருந்து, கங்கையைக்‌ கடப்பதற்கு ஓடம்‌ கொண்டு வரச்‌ சொல்லி, இராமன்‌, இலட்சுமணன்‌, சீதை ஆகிய மூவரும்‌ அதில்‌ ஏறிக்‌கொண்டார்கள்‌. ஓடத்தை மறு கரைக்குக்‌ கொண்டு சேர்த்தான்‌ குகன்‌. கரை சேர்ந்தவுடனே இராமன்‌ குகனைப்‌ பார்த்துக்‌ கேட்டான்‌.

தேன்‌ உள; தினை உண்டு
        ஆல்‌ தேவரும்‌ நுகர்வதற்கு ஆம்‌
ஊன்‌ உள; துணை நாயேம்‌
        உயிர்‌ உள விளையாடக்‌
கான்‌ உள புனலாடக்‌
        கங்கையும்‌ உளது அன்று
நான்‌ உளதனையும்‌ நீ இனிது
        இரு; நட எம்பால்‌

இங்கே தேன்‌ இருக்கிறது; தினை இருக்கிறது. தேவர்‌களும்‌ விரும்பி உண்ணத்‌ தக்க ஊன்‌ உள்ளது. நாய்‌களாகிய நாங்கள்‌ துணைக்கு இருக்கிறோம்‌. விளையாடுவதற்குப்‌ பொழில்கள்‌ இருக்கின்றன. நீராடுவதற்குக்‌ கங்கையும்‌ இருக்கிறது. என்‌ உயிர்‌ உள்ள அளவும்‌ நீ இங்கேயே இரு. “வா! என்‌ பின்‌ நட” என்று வேண்டினான்‌ குகன்‌.

தேன்‌ உள– எம்மிடம்‌ தேன்‌ இருக்கிறது; தினை உண்டு– தினையும்‌ இருக்கிறது; தேவரும்‌ நுகர்தற்கு ஆம்‌ ஊன்‌ உள– தேவர்களும்‌ உண்ணத்தக்க சுவையுள்ள. மாமிசம்‌ இருக்கிறது; துணை– உமக்குப்‌ பக்க பலமாக; நாயேம்‌ உயிர்‌ உள– நாயாகிய இந்த ஜீவன்கள்‌ உள; விளையாட– பொழுது போக்கி விளையாடுவதற்கு; கான்‌ உள– காடுகள்‌ உள்ளன; புனல்‌ ஆட– நீராடுவதற்கு; கங்கையும்‌ உள– கங்கா நதியும்‌ இருக்கிறது; நான்‌ உளதனையும்‌– என்‌ மூச்சுள்ள வரைக்கும்‌ நீ இனிது இரு– நீ எங்களிடத்தில்‌ சுகமாக இருப்பாயாக; எம்‌ பால்‌– எங்கள்‌ இடத்துக்கு; நட– எழுந்தருள்வாயாக.

அத்திசை உற்று ஐயன்‌
        அன்பனை முகம்‌ நோக்கி
“சித்திர கூடத்தில்‌ செல்‌
        நெறி பகர்‌” என்னப்‌
பத்தியின்‌ உயிர்‌ ஈயும்‌
        பரிவினன்‌ அடி தாழா
“உத்தம அடி நாயேன்‌
        ஓதுவது உளது” என்றான்‌.

கங்கையைக்‌ கடந்து கரை சேர்ந்தார்கள்‌. சேர்ந்த பிறகு சித்திரகூடம்‌ செல்கிற வழியைச்‌ சொல்‌ என்று கேட்கிறான்‌ இராமன்‌. யாரைப்‌ பார்த்து? குகனைப்‌ பார்த்து.

இராமனிடத்தில்‌ ஆழ்ந்த பக்தி கொண்டவனும்‌ அந்த பக்தியினாலே தன்‌ உயிரையும்‌ கொடுக்கக்கூடியவனாகிய குகன்‌, பின்‌ என்ன செய்தான்‌?

இராமனை அடிபணிந்து நாயேன்‌ சொல்லிக்‌ கொள்ள எண்ணியிருக்கும்‌ விண்ணப்பம்‌ ஒன்று உள்ளது என்கிறான்‌.

ஐயன்‌– இராமன்‌; அத்திசை உற்று– கங்கையின்‌ அக்கரை அடைந்து; அன்பனை முகம்‌ நோக்கி– தன்‌ பால்‌ அன்பு கொண்ட குகனைப்‌ பார்த்து; சித்திர கூடத்தில்‌ செல்‌ நெறி பகர்‌ என– சித்திர கூட மலை செல்லும்‌ வழி சொல்‌ என; பக்தியின்‌ உயிர்‌ ஈயும்‌ பரிவினன்‌– பத்தியுடன்‌ உயிரும்‌ தரவல்ல அன்புடைய அக்குகன்‌; அடி தாழா– இராமனது திருவடிகளில்‌ வணங்கி; உத்தம– மேலோய்‌! அடி நாயேன்‌– அடியேனும்‌ நாய்‌ போல்‌ கடமைப்பட்டவனுமாகிய நான்‌; ஓதுவது உனது– தேவரீரிடத்துக்‌ கூற வேண்டுவது உள்ளது! என்றான்‌.

தோல்‌ உள; துகில்‌ போலும்‌
        சுவை உள தொடர்‌ மஞ்சம்‌
போல்‌ உள பரண்‌; வைகும்‌
        புரை உள; கடிது ஓடும்‌
கால்‌ உள; சிலை பூணும்‌
        கை உள; கலி வானின்‌
மேல்‌ உள பொருளேனும்‌
        விரைவொடு கொணர்வேமால்‌

உடுத்திக்‌ கொள்வதற்குரிய நூலாடைபோல்‌ மெல்லிய தோல்‌ உளது. இன்பந்தரும்‌ மஞ்சம்‌ போன்ற பரண்‌ உளது. இருப்பதற்குக்‌ குடில்கள்‌ உள்ளன. வேகமாக ஓடக்கூடிய வலிவுள்ள கால்கள்‌ உள்ளன. விண்ணிலே உள்ள பொருளாயினும்‌ விரைவிலேயே கொண்டு வந்து தருவோம்‌.

எனவே தன்‌ இடத்திலேயே இராமன்‌ தங்கி இருக்கு வேண்டினான்‌ குகன்‌.

துகில்‌ போலும்‌– (உடுத்திக்‌ கொள்வதற்கு) மெல்லிய பட்டு ஆடை போன்ற; தோல்‌ உள– தோல்கள்‌ உள்ளன; சுவை உள்ள– இனிய தின்பண்டங்கள்‌ பல உள; (தூங்குவதற்கு) தொடர்‌ மஞ்சம்‌ போல்‌ பரண்‌ உள– சங்கிலியால்‌ பிணைத்துக்‌ தொங்கவிடப்பட்ட ஊஞ்சல்‌ போன்ற பரண்கள்‌ உள்ளன; வைக– இருப்பதற்கு; புரை உள– குடிசைகள்‌ உள்ளன; (அன்றியும்‌) கடிது ஓடும்‌ கால்கள்‌ உள– விரைந்து ஓடும்‌ சக்தி வாய்ந்த கால்களும்‌ உள்ளன; சிலை பூணும்‌ கை உள–வில்‌ பிடித்த கைகளும்‌ உள; கலிவானின்‌– (நீ விரும்புவது) ஓசை பெற்ற வானத்தின்‌ மேல்‌ உள்ள பொருளேனும்‌; விரைவொடு கொணர்வேமால்‌ கொண்டு வருவேன்‌– விரைந்து கொண்டு வருவேன்‌.

நெறி இடு நெறி வல்லேன்‌;
        நேடினேன்‌ வழுவாமல்‌
நறியன கனி காயும்‌ நறவு
        இவை தர வல்லேன்‌
உறைவிடம்‌ அமைவிப்பேன்‌
        ஒரு நொடி வரை உம்மைப்‌
பிறிகிலென்‌ உடன்‌ ஏகப்‌
        பெருகுவன்‌ எனில்‌ நாயேன்‌.

“நாயேனாகிய நான்‌ உன்னுடன்‌ வரப்‌ பெறுவனேல்‌ பெரு வழியும்‌ சிறு வழியும்‌ அறிந்து சொல்வேன்‌. நல்லகாயும்‌ கனியும்‌ கொண்டு தருவேன்‌. தங்குமிடம்‌ நன்கு அமைப்‌பேன்‌. ஒரு நொடிப்‌ பொழுது உம்மைப்‌ பிரியேன்‌.

ஆகவே என்னையும்‌ உடன்‌ அழைத்து செல்க” என்று வேண்டினான்‌.

நாயேன்‌– தாய்‌ போல்‌ கடைப்‌ பட்டவனாகிய நான்; உடன்‌ ஏகப்‌ பெருவன்‌ எனில்‌– உன்னுடன்‌ வரும்‌ பேறு பெறுவனாகில்‌; நெறி இடு நெறி வல்லேன்‌ (செல்லுவதற்கு அரிய வழியில்‌) இனிது செல்லுமாறு வழி உண்டாக்கும்‌ திறம்‌ வல்லவன்‌; நறியன— மிகச்‌ சிறந்தனவாகிய; கனி காயும்‌— காய்‌ கனிகளும்‌; நறவு— தேன்‌; இவை—ஆகிய இவைகளை; நேடினேன்‌ வழுவாமல்‌—தேடி தவறாமல்‌ தர வல்லேன்‌; உறைவிடம்‌ அமைப்பேன்‌— வசிப்பதற்கு ஏற்றபடி உறைவிடம்‌ அமைத்துத்‌ தர வல்லேன்‌; ஒரு நொடி வன— ஒரு கணமேனும்‌; உம்மை— உங்களை; பிறிகிலென்‌— பிரிந்து வாழப்‌ பெறேன்‌.

கல்லுவென்‌ மலை மேலும்‌
         கவலையின்‌ முதல்‌ யாவும்‌
செல்லுவென்‌ நெறி தூரம்‌
         செறி புனல்‌ தர வல்லேன்‌
வில்லினம்‌ உளென்‌ ஒன்றும்‌
         வெருவலன்‌ இரு போதும்‌
மல்லினும்‌ உயிர்‌ தோளாய்‌
         மலர்‌ அடி பிரியேனால்‌

“குன்றுகளிலே உள்ள கவலைக்‌ கிழங்குகளைத்‌ தோண்டி எடுப்பேன்‌. நீண்ட வழியாயினும்‌ செல்வேன்‌. மலைமேல்‌ உள்ள தண்ணீர்‌ கொண்டு வருவேன்‌. இரவிலும்‌ சரி பகலினும்‌ சரி, அஞ்சேன்‌. விற்பிடித்த கூட்டம்‌ ஒன்று என்‌ பின்னே உளது எனவே நானும்‌ உன்னுடன்‌ வருவேன்‌. உன்னைப்‌ பிரியேன்‌.”

கவலையின்‌ முதல்‌ யாவும்‌ கவலைக்‌கிழங்கு முதலிய எவ்வகைக்‌ கிழங்கும்‌; மலை மேலும்‌ கல்லுலேன்‌— மலை மேலும்‌ தோண்டி எடுத்துத்‌ தருவேன்‌; நெறி தூரம்‌ செல்லுவேன்‌— எவ்வளவு தூரமாயினும்‌ சென்று; செறி புனல்‌ தர வல்லேன்‌— (உயிர்‌ தங்குவதற்குரிய) தண்ணீர்‌ கொண்டு வந்து தர வல்லேன்‌; வில்‌ இனம்‌ உளேன்‌– வில்‌ வல்ல கூட்டத்தினர்‌ உடையேன்‌; ஒன்றும்‌ வெருவலன்‌– எதற்கும்‌ அஞ்ச மாட்டேன்‌; மல்லினும்‌ உயர்‌ தோளாய்‌– மற்போர்‌ புரிவதினும்‌ மேம்பட்ட தோளினை உடையவளே; மலர்‌ அடி பிரியேனால்‌– மலர்‌ அடி ஒரு போகும்‌ பிரியேன்‌.

இவ்வாறு உளம்‌ கரைந்து குகன்‌ கூறிய மொழி கேட்டான்‌ இராமன்‌. குகன்‌ பால்‌ அன்பு கொண்டான்‌.

“என்‌ மனைவியான இந்தச்‌ சீதை உன்‌ தோழி; என்‌ தம்பியான இந்த இலக்குமணன்‌ உன்‌ தம்பி; நீ என்‌ உயிர்‌ தோழன்‌; இது வரை நாங்கள்‌ நால்வரே உடன்‌ பிறந்தவராயிருந்தோம்‌. இப்பொழுது உன்னுடன்‌ ஐவரானோம்‌; உன்‌ சுற்றம்‌ என்‌ சுற்றம்‌. அவர்கள்‌ உன்னைப்‌ பிரிந்து வருந்தலாகாது; அவர்களைப்‌ பாதுகாக்க யாருளர்‌? நான்‌ அயோத்தி நீங்கி வந்து விட்டேன்‌. அங்கு உள்ளவரைப்‌ பாதுகாக்க பரதன்‌ இருக்கிறான்‌ நீ இங்கே இரு; வடக்கு நோக்கி வரும்‌ போது உன்னிடம்‌ வருவேன்‌”, என்று கூறி குகனை நிற்கச்‌ செய்தான்‌ இராமன்‌.


தீயன சுவை யாவும்‌
        திசை செல நூறித்‌
தூயன உறை கானம்‌
        துருவினன்‌ வர வல்லேன்‌
மேயின பொருள்‌ நாடித்‌
        தருகுவென்‌ வினை மற்றும்‌
எயின செய வல்லேன்‌
        இருளினும்‌ நெறி செல்வேன்‌.

“தீய விலங்குகளை எல்லாம்‌ திசை தொறும்‌ விரட்டி நல்ல விலங்குகள்‌ உள்ள காடு எது என்று அறிந்து வந்து சொல்வேன்‌. நீங்கள்‌ விரும்பும்‌ பொருள்‌ தேடிக்‌ கொண்டு வந்து தருவேன்‌. இட்ட கட்டளைகளை எல்லாம்‌ செய்வேன்‌. இருளாயிருந்தாலும்‌ அஞ்சாது செல்வேன்‌.

தீயன– தீயனவாகிய; சுவையாவும்‌– சுவையுள்ள; புலி முதலியவற்றை எல்லாம்‌; திசை செல நூறி– நீங்கள்‌ வசிக்கும்‌ இடத்தைச்‌ சுற்றி இல்லாது பிற திசைகளுக்கு ஓட அழித்து; தூயன– பரிசுத்தமான மான்‌ போன்ற, பிராணிகள்‌; உறை– வாழ்கின்ற; கானம்‌– காட்டினிடத்தை; துருவினன்‌– ஆராய்ந்து கண்டுபிடித்து; வர வல்லேன்‌– தர வல்லேன்‌; மேயின பொருள்‌– நீங்கள்‌ விரும்பிய பொருளை; நாடித்தர வல்லேன்‌– தேடிக்‌ கண்டு பிடித்துக்‌ கொண்டு வருவேன்‌; ஏயின்‌ வினை மற்றும்‌– நீங்கள்‌ கட்டளையிட்ட எந்த செயலையும்‌; செயவல்லேன்‌– செய்து முடிக்கும்‌ வல்லமை உடையேன்‌; இருளினும்‌ நெறி செல்வேன்‌– இரவிலும்‌ வழிச்‌ செல்ல வல்லேன்‌.

இவ்வாறு குகன்‌ சொல்லவே, அவனுக்கு சமாதானம்‌ சொல்லி அங்கேயே இருக்கச்‌ சொல்லிவிட்டு, சீதை இலட்சுமணன்‌ ஆகியோருடன்‌ சித்திர கூட பர்வதம்‌ சென்று இருந்தான்‌ இராமன்‌.

அயோத்தியில்‌ என்ன நடந்தது? இராமன்‌ காடு சென்றான்‌ என்று கேட்டு உயிர்‌ விட்டான்‌ தசரத மன்னன்‌.

அவனுடைய உடலை எடுத்து பத்திரம்‌ செய்து விட்டு பரதனுக்குச்‌ சொல்லியனுப்பினார்‌ மந்திரி. தூதுவர்‌களும்‌ விரைந்து சத்துருக்னன்‌ ஆகிய இருவரையும்‌ அழைத்து வந்தனர்‌.

பரதன்‌ வந்தான்‌. தன்‌ தாய்‌ கைகேயி இருந்த அரண்மனைக்குச்‌ சென்றான்‌.

“தந்தை எங்கே? அண்ணன்‌ எங்கே?” என்று கேட்டான்‌.

“உன்‌ தந்தை இறந்தார்‌. இராமன்‌ வனம்‌ சென்றான்‌,” என்றாள்‌ கைகேயி.


‘வனத்தினன்‌’ என்று அவள்‌
        இசைத்த மாற்றத்தை
நினைத்தனன்‌ இருந்தனன்‌
        நெருப்பு உண்டான்‌ என
‘வினைத்திறம்‌ யாது இனி
        விளைப்பது? இன்னமும்‌
எனைத்துள கேட்பன
        துன்பம்‌ யான்‌’? என்றான்‌.

இராமன்‌ காடு சென்றான்‌ என்பது கேட்டான்‌ பரதன்‌. தீ உண்டவன்‌ போல்‌ துடித்தான்‌. “இன்னும்‌ எத்தனை கெடுதல்கள்‌ உள்ளன? கேட்க வேண்டிய துயரச்‌ செய்திகள்‌ இன்னும்‌ எத்தனை?” என்று அலமந்தான்‌.

வனத்தினன்‌– இராமன்‌ காடு சென்றான்‌; என்று– என்று; அவள்‌ இசைத்த– அந்தக்‌ கைகேயி சொன்ன; மாற்றத்தை– சொல்லை நினைத்தனன்‌– எண்ணி– எண்ணிப்‌ பார்த்து; நெருப்பு உண்டான்‌ என– நெருப்பை உட்கொண்டவன்‌ போல; இருந்தனன்‌– மிக்க பெரும்‌ துன்பத்துடன்‌ இருந்த; வினைத்திறம்‌ யாது?– இனியும்‌ விளையப்‌ போகும்‌ தீவினை யாது உண்டோ?– இன்னமும்‌ எனைத்துள கேட்பன துன்பம்‌ யான்‌– நான்‌ இன்னும்‌ கேட்க வேண்டிய துயரச்‌ செய்திகள்‌ எத்தனை பாக்கி உள்ளன என்றான்‌.

துடித்தன கபோலங்கள்‌;
        சுற்றும்‌ தீச்சுடர்‌
பொடித்தன மயிர்த்தொளை
        புகையும்‌ போர்த்தது
மடித்தது வாய்‌; நெடு மழைக்‌
        கை மண்பக
அடித்தன; ஒன்றொடு ஓன்று
        அசனி அஞ்சவே

கன்னங்கள்‌ துடித்தன. மயிர்த்‌ துவாரங்கள்‌ தீயுமிழ்ந்தன; வாய்‌ மடித்தது. கைகள்‌ ஒன்றை ஒன்று அடித்துக்‌ கொண்டன.

கபோலங்கள்‌– கன்னங்கள்‌; துடித்தன– துடித்தன; மயிர்த்‌ தொளை– மயிர்த்‌ துவாரங்கள்‌; சுற்றும்‌– நாற்புறமும்‌; தீச்சுடர்‌– அனல்‌ கொழுந்தை; பொடித்தன– அரும்பின; புகையும்‌ போர்த்தது– புகையும்‌ நாலாபக்கமும்‌ பரவியது; வாய்‌ மடித்தது– வாய்‌ மடித்துக்‌ கொண்டது; மழை நெடுகை– மேகம்‌ போன்ற வன்மைக்‌ குணம்‌ கொண்ட நீண்ட கைகள்‌; அசனி அஞ்ச– இடியும்‌ அஞ்சும்படி; மண்பக– பூமி பிளக்கும்படி (பேரொலி செய்து) ஒன்றோடு ஒன்று; அடித்தன– ஒன்றை ஒன்று அடித்துச்‌ கொண்டன.

சூடின மலர்க்கரம்‌
        சொல்லின்‌ முன்‌ செவி

கூடின; புருவங்கள்‌ குதித்துக்‌
        கூத்து நின்று
ஆடின; உயிர்ப்பினோடு
        அழல்‌ கொழுந்துகள்‌
ஓடின; உமிழ்ந்தன உதிரம்‌
        கண்களே.

கைகேயி சொன்ன அந்தச்‌ சுடு சொற்கள்‌ காதிலே விழுவதற்கு முன்‌ அவனுடைய தாமரை மலர்‌ போன்ற கைகள்‌ காதுகளை மூடிக்‌ கொண்டன; புருவங்கள்‌ துடித்தன; கண்கள்‌ சிவந்தன– அனல்‌ கக்கின.

சூடின மலர்க்‌கரம்‌– வணங்கும்‌ போது குவிந்திருந்த தாமரை மலர்‌ போன்ற பரதனது கைகள்‌; சொல்லின்‌ முன்‌– கைகேயி சொன்ன அச்சுடு சொற்கள்‌ காதிலே விழுமுன்‌; செவி கூடின– காதைப்‌ பொத்தின; புருவங்கள்‌ குதித்து நின்று கூத்தாடின– புருவங்கள்‌ நெறிப்புற்று மேலும்‌ கீழும்‌ சென்றன; உயிர்ப்பினோடு அழல்‌ கொழுந்‌துகள்‌ ஓடின– தோன்றின பெருமூச்சுடனே நெருப்புச்‌ சுவாலைகள்‌ வெளி வந்தன; கண்கள்‌ உதிரம்‌ உமிழ்ந்தன– அவனது கண்கள்‌ ரத்தம்‌ கக்கின.

ஏங்கினன்‌ விம்மலோடு
        இருந்த ஏந்தல்‌ அப்‌
பூங்கழல்‌ காவலன்‌
        வனத்துப்‌ போயது
தீங்கு இழைத்ததினோ?
        தெய்வம்‌ சீறியோ?
ஓங்கிய விதியினோ?
        யாதினோ? எனா

விம்மி விம்மி அழுது கொண்டிருந்தான்‌. அந்த விம்மலோடு சொன்னான்‌ “இராமன்‌ வனம்‌ போனது எதனால்‌? ஏதாவது தீங்கு செய்தானா? தெய்வத்தை இகழந்தானா? விதியினாலா? எதனால்‌?” என்று கேட்டான்‌ பரதன்‌.

ஏங்கினன்‌– ஏக்கம்‌ கொண்டவனாய்‌; விம்மலோடு இருந்த ஏந்தல்‌– மன வருத்தத்தோடு இருந்த புருஷோத்தமனாகிய பரதன்‌; அப்பூங்கழல்‌ காலவன்‌– வீரக்‌ கழல்‌ அணிந்த மலர்‌ போலும்‌ திருவடியுடைய அந்த இராமன்‌ வனத்துப்‌ போயது– காட்டுக்குப்‌ போனது; தீங்கு இழைத்ததினோ– தீய செயல்‌ செய்ததனாலோ?; தெய்வம்‌ சீறியோ– தெய்வம்‌ கோபித்ததாலோ?; ஓங்கிய விதியினோ?– யாவற்றினும்‌ மேம்பட்ட ஊழ்வினையினாலோ? யாதினோ?– எதனால்‌; எனா– என்று வினவி.

“குருக்களை இகழ்தலின்‌
        அன்று; குன்றிய
செருக்கினால்‌ அன்று; ஒரு
        தெய்வத்தாலும்‌ அன்று
அருக்கனே அனைய அவ்‌
        அரசர்‌ கோமகன்‌
இருக்கவே வனத்து அவன்‌
        ஏகினான்‌” என்றாள்‌.

இராமன்‌ வனம்‌ சென்றது பெரியோர்களை இகழ்ந்ததால்‌ அன்று; கர்வத்தால்‌ அன்று; தெய்வத்தாலும்‌ அன்று.

அரசன்‌ உயிருடன்‌ இருந்த போதே அவன்‌ கான்‌ சென்றான்‌ என்றாள்‌.

(இராமன்‌ வனம்‌ சென்றது)

குருக்களை இகழ்தலின்‌ அன்று– பெரியோர்களைப்‌ பழித்த குற்றத்தினால்‌ அன்று; குன்றிய செருக்கினால்‌ அன்று– கர்வத்தின்‌ உயர்வால்‌ அன்று; ஒரு தெய்வத்‌தாலும்‌ அன்று– ஒரு தெய்வம்‌ சீறியதாலும்‌ அன்று; அருக்கனே அனைய அரசர்‌ கோமகன்‌– சூரியனே போன்ற தசரத சக்கரவர்த்தி; இருக்கவே– உயிருடன்‌ இருக்கவே; அவன்‌ வனத்து ஏகினான்‌– அவன்‌ காட்டுக்குப்‌ போனான்‌” என்றாள்‌.


“குற்றம்‌ ஒன்றும்‌ இல்லையேல்‌
        கொதித்து வேறுளோர்‌
செற்றதும்‌ இல்லையேல்‌
        தெய்வத்தால்‌ அன்றேல்‌
பெற்றவன்‌ இருக்கவே
        பிள்ளை கான்‌ புக
உற்றது என்‌? பின்‌ அவன்‌
        உலந்தது என்‌?” என்றான்‌.

“குற்றம்‌ ஏதும்‌ இல்லை என்றால்‌; கோபித்தவர்‌ எவரும்‌ இல்லை என்‌றால்‌; தெய்வம்‌ சீறவில்லை என்றால்‌ பெற்றவன்‌ இருக்கும்‌ போதே பிள்ளை கான்‌ சென்றது ஏன்‌? அவன்‌ சென்ற பின்‌ தந்‌தை வான்‌ சென்றது ஏன்‌?” என்றான்‌ பரதன்‌.

குற்றம்‌ ஒன்றும்‌ இல்லையேல்‌– இராமன்‌ செய்த குற்றம்‌ ஒன்றும்‌ இல்லையாகில்‌; கொதித்து வேறுளோர்‌ செற்றதும்‌ இல்லையேல்‌– மாற்றார்‌ கொதித்துப்‌ போர்‌ செய்து விரட்டியதும்‌ இல்லையேல்‌; தெய்வத்தால்‌ அன்றால்‌– தெய்வக் குற்றமும்‌ அன்று ஆயின்‌; பெற்றவன்‌ இருக்கவே– பெற்ற தகப்பன்‌ உயிரோடு இருக்க; பிள்ளை கான்‌ புக உற்றது என்‌?– பிள்ளை காடு சென்றது எதனால்‌? பின்‌ அவன்‌ ௨லந்தது என்‌– பின்னே அவன்‌ (தசரதன்‌) உயிர்‌ நீங்கியது எதனால்‌?” என்றான்‌.


“தீயன இராமனே செய்யுமேல்‌ அவை
      தாய்‌ சொல்‌ அல்லவோ
தலத்துள்ளோர்க்கு எலாம்‌
      போயது தாதை விண்‌
புக்க பின்னரோ?
      ஆயதன்‌ முன்னரோ
அருளுவீர்‌” என்றான்‌.

அப்படியே இராமன்‌ தீயன செய்திருப்பினும்‌ அதனால்‌ என்ன? தாய்‌ தன்‌ மக்களைக்‌ கோபிப்பதில்லையா? வருத்தி அடக்குவதில்லையா?

சரி; அவன்‌ வனம்‌ சென்றது மன்னர்‌ இறப்பதன்‌ முன்னரோ? பின்னரோ?

தீயன– தீய செயல்களை; இராமனே செய்யுமேல்‌– இராமனே செல்வானேயானால்‌; அவை– அச்செயல்கள்‌– தலத்து உளோர்க்கு எலாம்‌– இவ்வுலகத்தலர்க்கு எல்லாம்‌; தாய்‌ சொல்‌ அல்லவோ– தாயின்‌ சொல்‌ அல்லவோ?; போயது– இராமன்‌ வனம்‌ போனது; தாதை– தந்‌தையாகிய தசரத சக்ரவர்த்தி; விண்‌ புக்க பின்னரோ ஆயதன்‌ முன்னரோ அருளுவிர்‌– இறந்ததன்‌ முன்போ அல்லது அதற்குப்‌ பிறகோ சொல்வீர்‌ என்‌றான்‌.

“வாக்கினால்‌ வரம்‌ தரக்‌ கொண்டு
        மைந்தனைப்‌
போக்கினேன்‌ வனத்திடைப்‌
        போக்கிப்‌ பார்‌ உனக்கு
ஆக்கினேன்‌, அவன்‌ அது
        பொறுக்கலாமையால்‌
நீக்கினன்‌ தன்‌ உயிர்‌
        நேமி வேந்து” என்றாள்‌.

“இரண்டு வரங்கள்‌ தருவதாக வாக்களித்திருந்தார்‌ உன்‌ தந்தை; அந்த வாக்கைக்‌ கொண்டு இரண்டு வரங்‌களையும்‌ இப்போது பெற்றேன்‌. அவற்றுள்‌ ஒன்றினால்‌ இராமனை வனத்திற்குப்‌ போக்கினேன்‌. மற்றொன்றினால்‌ இந்த அரசை உனது ஆக்கினேன்‌. அது பொறாது அரசன்‌ தன்‌ உயிர்‌ போக்கிக்‌ கொண்டான்‌” இவ்வாறு கூறினாள்‌ கைகேயி,

வாக்கினால்‌– மன்னவன்‌ சொன்ன வாக்கினால்‌; இரண்டு வரம்‌ தர– இரண்டு வரங்கள்‌ தர; கொண்டு– அவற்றைப்‌ பெற்றுக்‌ கொண்டு மைந்தனை வனத்திடைப்‌ போக்கினேன்‌– இளம்‌ வயதினனாகிய இராமனைக்‌ காட்டுக்கு அனுப்பினேன்‌; போக்கி– அனுப்பி விட்டு; பார்‌ உனக்கு ஆக்கினேன்‌– பூமியை உனக்காகவைத்துளேன்‌ ;நேமி வேந்து– ஆக்ஞா சக்கரத்தைஉடைய அந்த வேந்தன்‌; அது பொறுக்கலாமையால்‌– மைந்தனைப்‌ பிரிந்த அந்ததுயரம்‌ தாங்கு முடியாமல்‌; நீக்கினன்‌ தன்‌ உயிர்‌– தன்‌ உயிரை விட்டான்‌; என்றாள்‌.

இவ்வாறு மனம்‌ வெம்பி நொந்து கொண்டிருந்த பரதனை நோக்கி மேற்கொண்டு நடக்க வேண்டிய காரியங்களைக்‌ கவனிக்குமாறு வசிஷ்டர்‌ கூறினார்‌.

மந்திரி சுமந்திரனும்‌ தசரத மன்னனுக்கு வேண்டிய ஈமக்‌ கடன்‌ ஏற்பாடுகளைச்‌ செய்வித்தான்‌.

பிறகு பரதன்‌ சபை கூட்டி “நான்‌ அரசனாக முடிதரிக்க மாட்டேன்‌ காடு சென்று ராமனை அழைத்து வருவேன்‌,” என்று கூறினான்‌.

படைகள்‌ புறப்பட்டன. அயோத்தி மக்களும்‌ புறப்‌பட்டார்கள்‌. எல்லாரையும்‌ அழைத்துக்‌ கொண்டு கானகம்‌ புறப்பட்டான்‌ பரதன்‌.

எல்லாரும்‌ கங்கைக்‌ கரை அடைந்தார்கள்‌, படைகளின்‌ வருகையையும்‌ பரதன்‌ வருகையையும்‌ கேள்வியுற்றான குகன்‌.

அஞ்சன வண்ணன்‌ என்‌ ஆருயிர்‌
        நாயகன்‌ ஆளாமே
வஞ்சனையால்‌ அரசு எய்திய
        மன்னரும்‌ வந்தாரே!
செஞ்சரம்‌ என்பன தீ
        உமிழ்கின்றன செல்லாவோ
உஞ்சு இவர்‌ போய்‌ விடின்‌ ‘நாய்‌
        குகன்‌” என்று எனை ஓதாரோ

எனது ஆருயிர்த்‌ தலைவன்‌ மைவண்ணன்‌ இராமன்‌ நாடாளாது தடுத்து வஞ்சனை புரிந்து அரசு பெற்ற இந்த மன்னரும்‌ வந்தாரே!

தீ உமிழ்கின்ற அம்புகளை நான்‌ இவர்‌ பால்‌ செலுத்தினால்‌ அவை இவர்‌ மீது பாயாது போய்‌ விடுமோ?

என்னைக்‌ கடந்து இவர்‌ உயிருடன்‌ போய்‌ விட்டால்‌ நன்றி கெட்ட நாய்‌ குகன்‌ என்று என்னைக்‌ கூற மாட்டாரோ! என்று குகன்‌ தன்‌ கூட்டத்தாருடன்‌ பேசிக்‌கொண்டு பரதனின்‌ படைகளை சமாளிப்பதற்கு சித்தமாக நிற்கிறான்‌.

என்‌ ஆருயிர்‌ நாயகன்‌– எனது ஆருயிர்த்‌ தலைவன்‌; அஞ்சன வண்ணன்‌– மை போலும்‌ கரு நிறம்‌ உடைய இராமன்‌; ஆளாமே– அரசு செய்யாமல்‌; வஞ்சனையால்‌– வஞ்சித்து; அரசு எய்திய– ஆட்சியைப் பற்றிய மன்னரும்‌– அரசரும்‌; வந்தாரே– வந்து வட்டாரே; தீ உமிழ்கின்‌றன– தீயினைச்‌ சொரிகின்றனவாகிய; செஞ்சரம்‌ என்பன சிவந்த அம்பு என்பன; செல்லாவோ?– இவர்‌ மீது செல்லமாட்டாவோ? இவர்‌ உஞ்சு போய்விடின– இவர்‌ எனது கணைக்குத்‌ தப்பிப்‌ போய்‌ விட்டால்‌; நாய்‌ குகன்‌– நன்றி கெட்ட நாயாகிய குகன்‌; என்று எனை ஓதாரோ– என்று என்னைச்‌ சொல்ல மாட்டாரோ?


முன்னவன்‌ என்று நினைந்திலன்‌;
        மொய்புலி அன்னான்‌ ஓர்‌
பின்னவன்‌ நின்றனன்‌ என்றிலன்‌;
        அன்னவை பேசானேல்‌
என்‌ இவன்‌ என்னை இகழ்ந்தது?இவ்‌
        எல்லை கடந்துதோ அன்றோ?
மன்னவர்‌ நெஞ்சினில்‌, வேடர்‌
        விடும்‌ சரம்‌ பாயாவோ?

வனம்‌ புகுந்த இராமன்‌ தன்‌ முன்னவன்‌ என்பதனை எண்ணாமல்‌ படையுடன்‌ வந்திருக்கிறானே!

இராமரின்‌ பின்னவனான இலக்குமணன்‌ இருக்கின்‌றான்‌ பாயும்‌ புலி போல என்பதும்‌ எண்ணவில்லை.

என்னை இவன்‌ இகழ்ந்தது எவ்வாறு? இந்த எல்லை கடந்த பின்னன்றோ?

மன்னவர்‌ நெஞ்சில்‌ வேடர்‌ விடும்‌ அம்பு பாயாதோ?

“பார்க்கிறேன்‌ ஒரு கை” என்று சவால்‌ விடுத்த வண்ணம்‌ நிற்கிறான்‌ குகன்‌.

இவன்‌– இப்‌ பரதன்‌; முன்னவன்‌ என்று நினைத்திலன்‌– இராமன்‌ தன்‌ அண்ணனாயிற்றே என்று கருதினான்‌ இல்லை; மொய்‌ புலி அன்னான்‌– வலிமை கொண்ட புலி போன்ற; ஓர்‌ பின்னவன்‌: ஒப்பற்ற தம்பியாகிய இலக்குமணன்‌; நின்றான்‌– உடன்‌ இருக்கின்றான்‌; என்றிலன்‌– என்று எண்ணினான்‌. இல்லை; அன்னவை பேசானேல்‌– அவ்வாறெல்லாம்‌ எண்ணாவிடினும்‌ போகட்டும்‌; என்னை இகழ்ந்தது ஏன்‌– இங்கே இருக்கின்‌ற என்னை ஒரு பொருளாக மதியாமல்‌ இகழ்ச்சியாக நினைத்‌ தெனால்‌? இவ்‌ எல்லை கடந்தன்றோ?– இவன்‌ வல்லமை எல்லாம்‌ இந்த எனது எல்லையை கடந்தால்‌ அன்றோ நிலை நிற்கும்‌? வேடர்‌ விடும்‌ சரம்‌– வேடர்‌ விடுகின்‌ற அம்பு; மன்னவர்‌ நெஞ்சில்‌ பாயாவோ– அரசர்‌ மார்பில்‌ பாயமாட்டாவோ?

ஆழ நெடுந்திரை ஆறு
        கடந்து இவர்‌ போவாரோ?
வேழ நெடும்‌ படை கண்டு
        விலங்கிடும்‌ வில்‌ ஆளோ?
தோழமை என்று அவர்‌ சொல்லிய
        சொல்‌ ஒரு சொல்‌ அன்றோ?
“ஏழைமை வேடன்‌ இறந்திலன்‌”
        என்று எனை ஏசாரோ?

ஆழம்‌ மிக்கதும்‌, அலை மோதுகின்றதுமான இந்தக்‌ கங்கை ஆறு கடந்து இவர்‌ போய்‌ வடுவாரோ? எப்படிப்‌போவார்‌ எனது தயவு இல்லாமல்‌? படகு விட நான்‌ அனுமதி தந்தால்‌ தானே இவர்‌ கங்கையைக்‌ கடத்தல்‌ இயலும்‌? யானை, குதிரை, தேர்‌ முதலிய படைகளுடன்‌ வந்து விட்டால்‌ விலகி வழி விடுவேனோ?

“நீ என்‌ தோழன்‌” என்று அந்த இராமன்‌ கூறிய சொல்‌ ஓர்‌ ஒப்பற்ற சொல்‌ அன்றோ?

இவருக்கு நான்‌ வழி விட்டால்‌ “ஏழை வேடன்‌ இறந்‌திலனே! உயிரோடு உள்ளானே! தடுத்து நிறுத்தாமல்‌ வழி விட்டானே என்று என்‌னை ஏசமாட்டாரோ?”

ஆழம்‌– அழமும்‌; நெடு– நீண்டதும்‌; திரை அலைமிக்கதும்‌ (ஆகிய) ஆறு கடந்து– இந்த கங்கையைத்‌ தாண்டி; இவர்‌ போவாரோ– இவர்‌ போய்‌ விடுவாரோ? வேழ நெடும்‌ படை– யானைகளை உடைய பெரிய சேனையை; கண்டு– பார்த்து; விலங்கிடும்‌– அஞ்ச ஒதுங்கிப்‌ போகும்‌; வில்‌ ஆளோ– வில்‌ வீரனோ? தோழமை– என்று அவர்‌ சொல்லிய சொல்‌ ஒரு சொல்‌ அன்றோ?– நீ எனது தோழன்‌ என்று அத்த இராமன்‌ சொல்லிய சொல் நன்கு மதிக்கத்‌ தக்க சொல்‌ அன்றோ? ஏழைமை வேடன்‌ இறந்‌திலன்‌ என்று எனை ஏசாரோ?– எளிய, ஏழையான வேடனாகிய நான்‌ (குகன்‌) இங்ஙனம்‌ மானங்கெட வாழ்தலை விட இறந்திருக்கலாமே என்று எனை உலகத்தார்‌ பழிக்க மாட்டாரோ?

கங்கை இருகரை உடையான்‌
        கணக்கு இறந்த நாவாயான்‌
உங்கள்‌ குலத்‌ தனி நாதற்கு
        உயிர்த்‌ துணைவன்‌; உயர்‌ தோளான்‌

வெம்‌ கரியின்‌ ஏறு அனையான்‌
        வில்‌ பிடித்த வேலையினான்‌
கொங்கு அலரும்‌ நறும்‌ தண்தார்க்‌
        குகன்‌ என்னும்‌ குறி உடையான்‌

இப்படியாக குகன்‌ தன்‌ கூட்டத்தினரை எல்லாம்‌ சேர்த்து வைத்துக்கொண்டு யுத்தத்துக்குத்‌ தயாராக நிற்கும்போது அந்தக்‌ கரையில்‌ என்ன நடக்கிறது?

மந்திரியாகிய சுமந்திரன்‌ பரதனிடம்‌ என்ன சொல்‌கிறான்‌? யாரைப்‌ பற்றி? குகனைப்‌ பற்றி.

“இதோ தம்‌ எதிரே காணப்படுகிற இவன்‌ குகன்‌ என்ற பெயர்‌ உடையவன்‌; கங்கையின்‌ இரு கரைகளும்‌ அவனுக்குச்‌ சொந்தம்‌.

அவனுக்குக்‌ கணக்கற்ற ஓடங்கள்‌ உள்ளன. அவன்‌ இராமனுக்கு உற்ற நண்பன்‌” என்றான்‌.

கங்கை இரு கரை உடையான்‌– கங்கா நதியின்‌ இரு கரைகளையும்‌ தனக்கு உரிமையாக உடையவன்‌; கணக்கு இறத்த நாவாயான்‌– அளவற்ற படகுகளை உடையவன்‌; உங்கள்‌ குலத்‌ தனி நாதற்கு– உங்கள்‌ குலத்தில்‌ தோன்றிய ஒப்பற்ற தலைவனாகிய இராமனுக்கு; உயிர்த்‌துணைவன்‌– உயிர்‌ நண்பன்‌; உயர்‌ தோளான்‌– உயர்ந்த தோள்களை உடையவன்‌; வெம்‌ கரியின்‌ ஏறு அனையான்‌– மதத்தால்‌ வெவ்விய ஆண்‌ யானையை ஒப்பான்‌; வில்‌பிடித்த வேலையினான்‌– வில்‌ ஏந்திய படை கடல்‌ போல உடையவன்‌; கொங்கு அலரும்‌– தேன்‌ சொரியும்‌; நறு– வாசனை வீசும்‌; தன்‌ தார்‌– குளிர்ந்த மாலை அணிந்தவன்‌; குகன்‌ என்னும்‌ குறி உடையான்‌– குகன்‌ என்னும்‌ பெயர்‌ கொண்டவன்‌.

வற்கலையின்‌ உடையானை
        மாசு அடைந்த மெய்யானை
நற்கலை இல்‌ மதி என்ன
        நகை இழந்த முகத்தானைக்‌
கல்‌ கனியக்‌ கனிகின்ற
        துயரானைக்‌ கண்ணுற்றான்‌
வில்‌ கையினின்று இடை வீழ
        விம்முற்று நின்று ஒழிந்தான்‌

பரதனைப்‌ பார்க்கிறான்‌ குகன்‌. மரவுரி உடுத்திக்‌ கொண்டு, முகத்திலே வருத்தம்‌ உடையவனாய்‌, புழுதி படிந்த மேனியாய்‌, கல்லும்‌ கரைந்துருகும்படி துயர்‌ வடிப்பவனாய்‌ நின்ற பரதனைப்‌ பார்க்கிறான்‌.

இதுவரை அவன்‌ கொண்டிருந்த கருத்து மாறுகிறது.

‘ஆகா’ தவறு செய்து விட்டேன்‌ என்று நினைக்‌கிறான்‌. கலங்குகிறான்‌, வில்‌ அவன்‌ கையிலிருந்து நழுவி விழுந்தது; முந்தின உறுதி குலைந்தது.

வற்கலையின்‌ உடையானை– மரவுரியை உடுத்தவனை; மாசு அடைந்த மெய்யானை– புழுதி படிந்த உடம்பு உடையவனை; நல்கலை இல்‌மதி என்ன– அழகிய கலைகள்‌ இல்லாத சந்திரன்‌ போல; நகை இழந்த முகத்தானை– ஒளி இல்லாத முகம்‌ உடையவனை; கல்‌ கனிய கனிகின்ற துயரானை– கல்லும்‌ குழைந்து உருகும்படி பொங்கி வரும்‌ துன்ப முடையானை; (பரதனை) கண்ணுற்றான்‌– கண்டான்‌; வில்‌ கையினின்று இடை வீழ– வில்‌ தன்‌ கையிலிருந்து கீழே விழும்படி; விம்முற்று நின்று ஒழிந்தான்‌– கலங்கிச்‌ செயலற்று நின்றான்‌.

நம்பியும்‌ என்‌ நாயகனை
        ஒக்கின்றான்‌; அயல்‌ நின்றான்‌
தம்பியையும்‌ ஒக்கின்றான்‌;
        தவவேடம்‌ தலை நின்றான்‌
துன்பம்‌ ஒரு முடிவில்லை
        திசை நோக்கித்‌ தொழுகின்றான்‌
எம்பிரான்‌ பின்‌ பிறந்தார்‌
        இழைப்பரோ பிழைப்பு என்றான்‌.

ஆடவரில்‌ சிறந்த இவன்‌ எனது தலைவன்‌ இராமன்‌ போலவே இருக்கிறான்‌. பக்கத்தில்‌ இருப்பவனோ இலட்சுமணன்‌ போலவே இருக்கிறான்‌. தவக்‌கோலம்‌ தரித்துள்ளான்‌. அவனது துன்பத்திற்கு ஓர்‌ எல்லை இருப்‌பதாகத்‌ தெரியவில்லை. இராமன்‌ சென்ற தென்‌ திசை நோக்கித்‌ தொழுகின்றான்‌. இராமபிரான்‌ தம்பிமார்‌ தவறும்‌ செய்வரோ என்று நினைக்கிறான்‌ குகன்‌.

நம்பியும்‌– ஆடவரில்‌ சிறந்த இப்‌பரதனும்‌; என்‌ நாயகணை– எனது தலைவனாகிய இராமனை; ஒக்கின்றான்‌– ஒப்ப இருக்கின்றான்‌; அயல்‌ நின்றான்‌– அருகே நிற்கின்ற சத்துருக்கனன்‌; தம்பியையும்‌ ஒக்கின்றான்‌– இலட்சுமணனை ஒப்ப இருக்கின்றான்‌; தவ வேடம்‌ தலை நின்றான்‌– தவ வேடம்‌ மேற்கொண்டு உள்ளான்‌; துன்பம்‌ ஒரு முடிவு இல்லை– இவனுடைய துன்பத்துற்கு ஓர்‌ எல்லை இல்லை; திசை நோக்கி தொழுகின்றான்‌– இராமன்‌ சென்ற தென்திசை நோக்கி வணங்குகின்றான்‌; எம்பிரான்‌– எம்பிரானாகிய இராமனின்‌; பின்‌ பிறந்தார்‌– பின்னே தோன்றிய தம்பிகள்‌; பிழைப்பு இழைப்பரோ?– பிழை செய்வார்களோ? என்றான் குகன்‌.

உடனே ஓர்‌ ஓடத்தின்‌ மீது ஏறிக்கொண்டு பரதனிடம்‌ வந்து அவன்‌ காலிலே விழுந்து வணங்குகிறான்‌ குகன்‌. பரதனும்‌ அவனைத்‌ தூக்கி, தந்தையை விட மிகுந்த மகிழ்ச்சியுடனே அணைத்துக்‌ கொண்டான்‌.

தான்‌ வந்த நோக்கத்தைக்‌ குகனிடம்‌ கூறினான்‌ பரதன்‌. பரதனைத்‌ தன்‌ ஓடத்தில்‌ ஏற்றிக்‌ கொண்டு மறுகரையில்‌ சேர்த்தான்‌ குகன்‌. குகனுடைய இனத்தார்‌ எல்லாரும்‌ பரதனுடைய படைகளைத் தங்கள்‌ ஓடங்களில்‌, ஏற்றிக்‌ கொண்டு மறு கரையில்‌ சேர்‌த்தார்கள்‌.

கரை சேர்ந்த பரதன்‌ குகனை நோக்கி அன்றிரவு இராமன்‌ எங்கே துயில்‌ கொண்டான்‌ என்று வினவினான்‌. அப்போது குகன்‌ இராமன்‌ துயில்‌ கொண்ட இடத்தைக்‌ காட்டுகிறான்‌.

அல்லை ஆண்டு அமைந்த மேனி
        அழகனும்‌ அவளும்‌ துஞ்ச
வில்லை ஊன்றிய கையோடும்‌
        வெய்துயிர்ப்‌ போடும்‌ வீரன்‌
கல்லை ஆண்டு உயர்த்த தோளாய்‌!
        கண்கள்‌ நீர்‌ சொரியக்‌ கங்குல்‌
எல்லை காண்பளவும்‌ நின்றான்‌;
        இமைப்பு இலன்‌ நயனம்‌” என்றான்‌

இலட்சுமணன்‌ எங்கிருந்தான்‌? என்று கேட்டான்‌ பரதன்‌.

“கார்‌ முகில்‌ வண்ணனாகிய இராமனும்‌ சீதையும்‌ இங்கே உறங்க, கையிலே வில்‌ தாங்கி, கண்ணீர்‌ மல்க, அனல்‌ கக்கும்‌ பெருமூச்சுடன்‌ இரவு மூழுதும்‌ கண்‌ இமையாது காவல்‌ புரிந்தான்‌ என்றான்‌ குகன்‌.

கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய்‌– மலை ஒத்த தோள்களை உடையவனே!; அல்லை ஆண்டு அமைந்த மேனி– இருளையும்‌ வென்றதாக அமைந்த கருமேனி உடைய; அழகனும்‌– அழகனாகிய இராமனும்‌; அவளும்‌– சீதையும்‌; துஞ்ச– தூங்க; வீரன்‌– சுத்த வீரனாகிய இலட்சுமணன்‌; வில்லை ஊன்றிய கையோடும்‌– வில்‌ தரித்த கையுடனும்‌; வெய்து உயிர்‌ போகும்‌– வெம்மையுடைய பெரு மூச்சோடும்‌; கண்கள்‌ நீர்‌ சொரிய– கண்கள்‌ தாரை தாரையாக நீர்‌ சொரிய; கங்குல்‌ எல்லை காண்பனவும்‌– பொழுது விடியும்‌ வரை; நயனம்‌ இமைப்பிலன்‌– கண்‌ மூடாதவனாய்‌ (சிறிதும்‌ துயில்‌ கொள்ளாமல்‌); நின்றான்‌– காவல்‌ புரிந்து நின்றான்‌; என்றான்‌– என்று குகன்‌ பரதனுக்குக்‌ கூறினான்‌.

கார்‌ எனக்‌ கடிது சென்றான்‌;
        கல்‌ இடைப்‌ படுத்த புல்லின்‌
வார்‌ சிலைத்‌ தடக்கை வள்ளல்‌
        வைகிய பள்ளி கண்டான்‌;
பார்‌ மிசைப்‌ பதைத்து வீழ்ந்தான்‌:
        பருவரல்‌ பரவை புக்கான்‌;
வார்‌ மணிப்‌ புனலான்‌; மண்ணை
        மண்ணு நீர்‌ ஆட்டும்‌ கண்ணான்‌

கேட்டான்‌ பரதன்‌. மேகம்‌ போல விரைந்து ஓடினான்‌. இராமன்‌ கற்கள்‌ மத்தியிலே புல்லில்‌ படுத்‌திருந்த இடத்தைக்‌ கண்டான்‌; துடி துடித்தான்‌; கண்ணீர்‌ வடித்தான்‌. அப்படியே நிலத்தில்‌ விழுந்து புரண்டான்‌. அந்த இடத்தைக்‌ கண்ணீரால்‌ நனைத்தான்‌.

கார்‌ என– மேகம்‌ என்று சொல்லும்படியாக; கடிது சென்றான்‌– விரைந்து சென்றான்‌; வார்‌ சிலைத்‌ தடக்‌ கை நீண்ட வில்‌ ஏந்தியவனும்‌; பெரிய கைகளை உடையவனும்‌; வள்ளல்‌– வரையாது கொடுப்பவனும்‌ ஆகிய இராமன்‌; கல்‌ இடைப்படுத்த புல்லில்‌ வைகிய பள்ளி கண்டான்‌– கல்‌ இடையே பரப்பிய புல்லால்‌ ஆகிய படுக்கையைக்‌ கண்டான்‌; (கண்டு) பதைத்து– வருத்தமுற்று, அல்வருத்தம்‌ தாங்க முடியாமல்‌ துடித்து; பார்‌ மிசை வீழ்ந்தான்‌– பூமியிலே விழுந்தான்‌; வார்‌ மணிப்‌ புனலால்‌– பெருகுகின்ற முத்துப்‌ போன்ற கண்ணீரால்‌; மண்ணை மண்ணு நீர்‌ ஆட்டும்‌ கண்ணான்‌– தரையை நீராட்டும்‌ கண்‌ உடையவன்‌ ஆனான்‌; பருவரல்‌ பரவை புக்கான்‌– சோகக்‌ கடலில்‌ மூழ்கினான்‌,

இராமன்‌ சென்று தங்கியிருக்கும்‌ இடத்தைத்‌ தனக்குக்‌ காட்டுமாறு குகனை வேண்டினான்‌ பரதன்‌.

குகனும்‌ பரதனுடைய வேண்டுதலுக்கு இணங்கி, அவனை அழைத்துக்‌ கொண்டு படைகள்‌ பின்‌ தொடர, சித்திரகூட பர்வதம்‌ சேர்ந்தான்‌.

சித்திரகூட பர்வதத்திலே இராமனைக்‌ கண்டான்‌ பரதன்‌. அவன்‌ அடிகளிலே வீழ்ந்து வணங்கினான்‌; அழுதான்‌; அரற்றினான்‌.

இராமன்‌ பரதனை தூக்கி எடுத்து அணைத்துக்‌ கொண்டு ஆறுதல்‌ மொழி பல கூறினான்‌.

பரதனும்‌ ஒருவாறு தேறி அயோத்‌தியில்‌ தசரத மன்னன்‌ இறந்த செய்தியைக்‌ கூறினான்‌.

தந்தை இறந்த செய்தி கேட்டான்‌ இராமன்‌– பெரிதும்‌ துன்புற்றான்‌; வசிட்டர்‌ இராமனை அழைத்துக்கொண்டு மந்தாகினி ஆற்றின்‌ கரை சென்று, இறந்து போன அரசனுக்குச்‌ செய்ய வேண்டியவற்றைச்‌ செய்தார்‌.

பிறகு எல்லாரும்‌ இராமன்‌ இருப்பிடம்‌ சேர்ந்தனர்‌.

“எனக்கு ராஜ்யம்‌ வேண்டாம்‌; தாங்கள்‌ திரும்பிவாருங்கள்‌; ராஜ்யத்தை ஏற்றுக்‌ கொள்ளுங்கள்‌” என்று அழைத்தான்‌ பரதன்‌; கெஞ்சினான்‌; மன்‌றாடினான்‌.

இராமன்‌ அதற்கு இணங்கவில்லை.

“தந்தை சொல்லைக்‌ காத்து ஈரேழு ஆண்டுகள்‌ இந்த வனத்திலே கழித்து, பிறகே நாட்டுக்கு வருவேன்‌” என்‌று உறுதியாகச்‌ சொல்லி விட்டான்‌.

ராமனோ இப்படிச்‌ சொல்கிறான்‌. பரதனோ தனக்கு ராஜ்யம்‌ வேண்டாம்‌ என்கிறான்‌.

அரசன்‌ இல்லாவிட்டால்‌ நாடு என்ன ஆகும்‌? குடிகள்‌ என்ன ஆவார்கள்‌?

இந்தச்‌ சிக்கலைத்‌ தீர்ப்பது எப்படி?

சிக்கல்‌ தீர ஒரு வழி சொன்னார்‌ வசிட்டர்‌.

“ராஜ்யம்‌ இராமனுடையதாகவே இருக்கட்டும்‌. இராமன்‌ அயோத்திக்கு வராவிட்டால்‌ அவனுடைய பாதுகைகளைக்‌ கொடுக்கட்டும்‌. இராமனின்‌ பிரதிநிதியாக பரதன்‌ ராஜ்ய காரியங்களைக்‌ கவனிக்கட்டும்‌.” என்றார்‌ வசிட்டர்‌.

சிக்கல்‌ தீர்ந்தது. இராமன்‌ இணங்கினான்‌; பரதனும்‌ சம்மதித்தான்‌.

அடித்தலம்‌ இரண்டையும்‌
        அழுத கண்ணினான்‌
முடித்தலம்‌ என்ன
        முறையில்‌ சூடினான்‌

படித்தலத்து இறைஞ்சினன்‌
        பரதன்‌ போயினான்‌
பொடித்தலம்‌ இலங்குறு
        பொலம்‌ கொள்‌ மேனியான்‌.

இராமனுடைய பாதுகைகள்‌ இரண்டையும்‌ பெற்றுக்‌ கொண்டான்‌ பரதன்‌; தலை மேல்‌ காத்துக்‌ கொண்டான்‌. இதுவே நமக்குக்‌ கிரீடம்‌ என்று எண்ணிக்‌ கொண்டான்‌; இராமனை வணங்கினான்; திரும்பிச்‌ சென்றான்‌.

அழுது கண்ணினான்‌–அழுத கண்களை உடையவனும்‌; தலம்‌ பொடி இலங்குறு மேனியன்‌– நிலத்தின்‌ புழுதி படிந்து விளங்கும்‌ மேனி உடையவனும்‌; பரதன்‌– (ஆகிய) பரதன்‌; அடித்தலம்‌ இரண்டையும்‌– அந்தப்‌ பாதுகைகள்‌ இரண்டையும்‌; முடித்தலம்‌ இவை என– கிரீடங்கள்‌ இவையே என்று கொண்டு; முறையில்‌ சூடினான்‌– முறைப்படி சிரமேல்‌ கொண்டவனாய்‌; படித்தலத்து இறைஞ்சினான்‌– தரையில்‌ விழுந்து வணங்கி; போனான்‌– திரும்‌பிச்‌ சென்றான்‌.

நந்தியம்‌ பதியிடை
        நாதன்‌ பாதுகம்‌
செந்தனிக்‌ கோல்‌ முறை
        செலுத்தச்‌ சிந்தையன்‌
இந்தியங்களை அவித்து
        இருத்தல்‌ மேயினான்‌
அந்தியும்‌ பகலும்‌ நீர்‌
        அழுத கண்ணினான்‌

அந்தப்‌ பாதுகைளை எடுத்துக்கொண்டு பரதன்‌ அயோத்திக்குப்‌ போகவில்லை; அரண்மனைக்கும்‌ போகவில்லை.

அயோத்திக்குச்‌ சற்றுத்‌ தொலைவிலே உள்ள நத்தி கிராமம்‌ என்ற இடத்திலே சிம்மாசனத்தின்‌ மீது வைத்தான்‌.

கண்ணீர்‌ சொரிந்தவனாய்‌, ஐம்பொறிகளையும்‌ அடக்கியவனாய்‌, இராமனின்‌ பிரதிநிதியாக அரசு செலுத்தி வந்தான்‌.

நந்தி அம்‌ பதியிடை– நந்திக்‌ கிராமம்‌ எனும்‌ இடத்‌திலே; நாதன்‌ பாதுகம்‌– தலைவனான இராமன்‌ பாதுகைகளை; செம்‌ தணிகோல்‌ முறை செலுத்த– ஒப்பற்ற செங்கோலை முறைப்படி செலுத்த; அந்தியும்‌ பகலும்‌– இரவும்‌ பகலும்‌; நீர்‌ அழுத கண்ணினான்‌– நீர்ப்‌ பெருக்கு வற்றாக கண்களை உடையவனாய்‌; சிந்தை யான்‌ இந்திரியங்களை அவித்து– மனத்தினால்‌ ஐம்பொறிகளையும்‌ அடக்கி; இருத்தல்‌ மேயினான்‌– அங்கு தங்கினான்‌ பரதன்‌.

அயோத்தியா காண்டம்‌ முற்றிற்று.

கம்பனின்‌ அயோத்தியா காண்டம்‌

அயோத்தியா காண்டத்தைப்‌ படிப்போர்‌ முன்‌ நிலைமாறிய கதாபாத்திரங்களை கொண்டு வந்து திறம்பட நிறுத்துகிறார்‌ கவிச்‌ சக்கரவர்த்தி கம்பன்‌. சூழ்ச்சியில்‌ சிக்கிய சிற்றன்னை கைகேயியைக்‌ காண்கிறோம்‌; தசரதனைப்‌ போல நாமும்‌ துடிக்கிறோம்‌; எதிர்பாராத ஏமாற்றம்‌ எதிர்‌ கொண்ட போதும்‌, சமநிலை மாறாத இராகவனைப்‌ போற்றுகிறோம்‌; உணர்ச்சிக்‌ குவியலாகும்‌ இலட்சுமணனைக்‌ கண்டு வியக்கிறோம்‌; கல்யாணராமன்‌ மரவுரி உடுத்து, வனம்‌ புகுதலைக்‌ கண்டு மனம்‌ புழுங்குகிறாம்‌. அவனைத்‌ தொடரும்‌ சீதாப்‌ பிராட்டியாரின்‌ பண்பை போற்றுகிறோம்‌. இலட்சுமணனை அண்ணனுக்கு ஏவல்‌ செய்யும்‌ பணியாளனாக அனுப்பும்‌ சுமித்திரையின்‌ அருங்குணத்திற்கு அஞ்சலி செலுத்துகிறோம்‌; அன்புக்கு இலக்கணமாக விளங்கும்‌ இராகவனின்‌ தம்பி குகனுக்கு அறிமுகமாகிறோம்‌; மாறுபட்ட சூழ்நிலையில்‌ தடுமாறும்‌ பரதனைப்‌ பார்க்கிறோம்‌; அண்ணனின்‌ பாதுகைகளைத்‌ தலையில்‌ வைத்துக்‌ கொண்டு, இரகுவீரனுக்காக அரசு செலுத்தும்‌ கொள்கை வீரன்‌ பரதனை, சிரம்‌ தாழ்த்தி வணங்குகிறோம்‌.

மாறுபட்ட அயோத்தி, நிலை மாறிவிட்ட கதா– பாத்திரங்கள்‌, புதுப்புது சூழ்நிலைகள்‌ ஆகியவற்றைக்‌ கம்பன்‌ தவிர வேறு யாரே சுவை குன்றாமல்‌ சித்தரிக்கக்‌ கூடும்‌?

அல்லல்‌ தரும்‌, அவலம்‌ மிகுந்த இத்துன்பம்‌ நிறைந்த மாய உலகைக்‌ கடந்து, கரையேற்றுவான்‌ இறைவன்‌ என்ற கூற்றைக்‌ குகன்‌ மூலம்‌ காட்டுகிறாரோ கம்பநாடன்‌, அயோத்தியா காண்டத்தில்‌?