கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை/புரட்சி வீரர்

விக்கிமூலம் இலிருந்து


புரட்சி வீரர்
பாரிஸ்டர் வ. வே.ஸு. ஐயர்

1910 அக்டோபர் 9-ம்தேதி மாலை சூரியன் மறையும் நேரம்.

புதுச்சேரி துறைமுகத்தில் அப்பொழுதுதான் வந்து நங்கூரம் பாய்ச்சி நின்ற கப்பலிலிருந்து இறங்கிய ஒரு முஸ்லீம் கனவான் ஒரு சிறிய கைப்பெட்டியுடன் தேசீயப் பத்திரிகை “இந்தியா” காரியாலயத்தை நோக்கி விரைந்து, அதன் உரிமையாளரான ஸ்ரீ. ஸ்ரீ. ஸ்ரீனிவாசாரியாரிடம், ரோமாபுரியிலிருந்து தான் அனுப்பிய மஹாகவி தாந்தேயின் “தெய்வீக நாடகம்” என்ற புஸ்தகம் வந்து சேர்ந்ததோ என வினாவிய போதுதான் லண்டனிலும், பிரான்ஸிலும் பிரிட்டிஷ் ஸ்காட்லண்ட் ஒற்றர்களால் இடையராது இரண்டு வருஷங்களுக்கு மேலாக கண்காணிக்கப்பட்டிருந்தும், லண்டன் முதல் புதுச்சேரி வரை 10,000 மைல்கள் பஞ்சாபி சிங் போலவும், முஸ்லீம் போலவும், பற்பல வேடங்கள் பூண்டு, வேடனுக்குத் தப்பி குகைக்குள் புகும் சிங்கம் போன்று வந்தவர் வ.வே. ஸு. ஐயர் என அவரது நண்பர்களாலேயே பரிந்துகொள்ள முடிந்தது.

திருச்சி கரூரை அடுத்த சின்னாளபட்டி கிராமத்தில் 1881 ஏப்ரல் 2-ம் தேதி பிறந்த வரகனேரி வேங்கிடேச ஸுப்ரஹ்மண்ய ஐயர் தகப்பனாருக்கு முதல் புதல்வர். வளர்ந்தது திருச்சி வரகனேரி, படித்தது ஸெயின்ட் ஜோஸப் கல்லூரி. 12-ம் வயதில் மாகாணத்தில் முதலாக மெட்ரிகுலேஷன் தேறிய வருடமே அத்தை மகளைத் திருமணம் செய்து கொண்டார். 16-ம் வயதில் B. A. வகுப்பில் மாகாணத்தில் முதலாகத் தேறி, 19-ம் வயதில் வக்கீல் தொழில் துவங்கி 5 வருடங்கள் திருச்சியிலும், 1906-ல் ரங்கூனில் தொழில் செய்து தன் மைத்துளரான ”ரங்கூன் பசுபதி "ஐயரால் 1907-ல் பாரிஸ்டர் படிப்புக்காக லண்டன் அனுப்பப்பட்டார். ஆனால் அங்கு சென்ற சில நாட்களுக்குள் மாபெரும் தேச பக்தரும், தேசத்திற்காக 14 ஆண்டுகள் அந்தமான் தீவில் சிறை இருந்த வீரருமான சாவர்க்காரின் நட்பு, ஐயரையும் ஒரு எரிமலை ஆக்கியது.

இங்கிலாந்திலேயே பிரிட்டிஷாருக்கு எதிராகப் பற்பல சதிசெய்ததிற்காகவும், அங்கேயே மதன்லால் திங்கரா என்ற பஞ்சாயி மாணவனைக்கொண்டு ஸர் கர்ஸன் வைவி என்ற . ஆங்கிலேய அதிகாரியை சுட்டுக்‌ கொல்லத்‌ தாண்டியதற்‌காகவும்‌, கைது செய்யப்படும்‌ தறுவாயில்‌, பஞ்சாப்‌ சிக்கியர்‌ போன்ற தன்‌ தோற்றத்தால்‌ V. V. 5. என்ற எழுத்துக்கள்‌ ”வீர்‌ விக்ரம்‌ சிங்‌” என்ற தன்‌ பெயரைக்‌ குறிப்பதாக அவ்‌வொற்றர்களிடையே கூறி, அசர வைத்து, பிரான்ஸ்‌ தேசம்‌ தப்பிச்‌ சென்றபோது அவர்‌ தன்னிடம்‌ பத்திரமாக எடுத்துச்‌ சென்றது சிறிது ரொக்கமும்‌, ஒரு மாற்று உடையும்‌, இந்தியாவிலிருந்து தான்‌ இங்கிலாந்துக்கு எடுத்துச்சென்ற கம்பராமாயணமும்‌ மட்டுமே எனின்‌, அவரது கம்பன்‌ பற்று எத்தனை என்பது ஒருவாறு ஊகிக்கலாகும்‌.

பிரான்ஸிலிருந்து, ரோம்‌, கீரீஸ்‌, துருக்கி, எகிப்து வழியாக, பலவித வேடங்கள்‌ புனைந்து புதுச்சேரி வந்து சேர்ந்தது ஒரு தனிப்பெரும்‌ கதையாகும்‌.

1914 - 1918 முதல்‌ ஐரோப்பிய யுத்தம்‌ குமுறிக்‌ கொண்டிருந்த சூழ்நிலை. பிரிட்டிஷாரின்‌ வற்புறுத்தலால்‌, ஆப்பிரிக்காவிலுள்ள பிரஞ்சு அல்ஜீரிய நாட்டிற்கு ஐயரை நாடு கடத்திவிடுவதாக அரசு அச்சுறுத்தின சமயம்‌, அவசர அவசரமாக, அவர்‌ திருக்குறள்‌ 1990-ஐயும்‌ 1914இல்‌ ஆங்கிலத்தில்‌ மொழி பெயர்த்தும்‌, கம்பராமாயணத்தின்‌ ஒரு பகுதியை சந்தி பிரித்து, குறிகளுடனும்‌ 1917இல்‌ வெளியிட்டபோது எழுதிய கம்பராமாயண ஆராய்ச்சிக்‌ கட்டுரைதான்‌ இந்த வெளியீடு.

கரிபால்டி, மாஜினி, சந்திரகுப்த சரித்திரம்‌, புக்கர்‌ வாஷிங்டன்‌ சரித்திரம்‌, இலக்கியத்‌ துறையில்‌ ”மங்கையற்‌கரசியின்‌ காதல்‌ முதலிய கதைகள்‌” என்ற கொத்து, நெப்போலியனது யுத்த தந்திரங்களையும்‌, பாரதத்தில்‌ வரும்‌ யுத்த வ்யூக விபரங்களையும்‌ கோர்த்து, சுயராஜ்யத்திற்காக கொரில்லா யுத்தம்‌ நடத்த ரரணுவ சாஸ்திர புஸ்தகம்‌ ஒன்று, தேசபக்தி மக்களுக்கு பீரிட்டு எழவேண்டுமென இவர்‌ எழுதியவற்றில்‌ சிலவாகும்‌.

யுத்தம் முடிந்தபின்‌ எல்லா அரசியல்‌ கைதிகளுக்கும்‌ 1920-ல்‌ பிரிட்டிஷ்‌ அரசு பொது மன்னிப்பு அளித்தபோது புதுச்சேரியை விட்டு சென்னை வந்து ”தேசபக்தன்‌” என்ற தமிழ்த்‌ தினசரியின்‌ ஆசிரியராக இருந்து ராஜ்‌ துவேஷமாக எழுதிய குற்றத்திற்கு பெல்லாரிமில்‌ சிறை இருந்தபோது ஆங்கிலத்தில்‌ கம்பராமாயணத்தை உலக மகா காவியங்‌களுடன்‌ ஒப்பிட்டு 4000 செய்யுள்களுக்குமேல்‌ ஆங்‌கில கவிதைகளாகவே புனைந்தும்‌ எழுதிய ஆராய்ச்சிநூல்‌ முன்னர்‌

தில்லி தமிழ்ச்‌ சங்கத்தாராலும்‌, தற்போது, பம்பாய்‌ பாரதீய வித்யாபவன்‌ வெளியீடாகவும்‌ வந்திருக்கிறது.

அவரது குறள் ஆங்கில மொழி பெயர்ப்பு சமீபத்தில்தான் அமெரிக்க கலிபோர்னியாவிலும், நியுயார்க்கிலும், லண்டனில் இரு கம்பெனிகளாலும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

44 ஆண்டுகள் மட்டும் உலகில் வாழ்ந்த இந்த இலக்கிய மேதை, தியாக வீரர், திருநெல்வேலி ஜில்லா சேர்மாதேவியில் தமிழ் குருகுலம் நடத்திவந்த சமயம் அம்பா சமுத்திரம், பாபநாசத்தில், கல்யாணதீர்த்தத்தில் தவறி விழுந்த தன் மகள் சுபத்திராவைக் காக்க முயற்சிக்கையில், 3-6-1925-ல் தானும் வீரமுடிவு அடைந்தார். “ஸ்ரீ ஐயர் அவர்கள் இணையற்ற தீரர் ஒரு மாபெரும் தபஸ்வி, மகான், மேதை, சீலம் மிக்கவர். பண்பென்ற சொல்லுக்கே இலக்கணமாய் அமைந்தவர். நெருப்பு போன்ற ஒழுக்கம் உடையவர். மகாயோகீச்வார். பிழம்பை அடக்கிவைத்து இருக்கும் எரிமலை போன்றவர். மனித உருவில் உலகில் உலவிவந்த தெய்வம். கல்வியைக் கரைகண்டவராயினும் கல்விச் செறுக்கற்றவர். அன்பு அவரது மென்மையான இதயத்தின் நாதம். வீரம் அவர் கண்களில் வீசிய ஒளி.”

2-4-1971.

டாக்டர் வ. வே. ஸு கிருஷ்ணமூர்த்தி.