உள்ளடக்கத்துக்குச் செல்

கரிகால் வளவன்/உறையூரின் தோற்றம்

விக்கிமூலம் இலிருந்து
6. உறையூரின் தோற்றம்

"தமிழ் நாட்டில் இதுகாறும் ஆண்ட மன்னர்களில் இவனைப்போல வீரமும் புகழும் உடைய மன்னர் யாரும் இல்லை” என்பதே தமிழுலகு முழுவதும் பேச்சாக இருந்தது. சோழப் பேரரசை மீண்டும் நிலைநாட்டியதோடு வட நாட்டுக்கும் சென்று, இமயத்தில் புலிக்கொடியை நாட்டிய திருமா வளவனுடைய புகழ் கடல் கடந்து சென்றது. இயற்கையாகவே சோழ நாட்டு வளத்தைக் காணவும், சோழ நாட்டுக் கரும்பையும், நெல்லையும், துகிலையும், கலனையும் வாங்கிச் செல்லவும் அயல் நாட்டு மக்கள் வருவார்கள். கரிகாலன் காலத்தில் பின்னும் அதிகமாக வந்தார்கள்.

சோழ நாட்டின் வளத்தைப் பெருக்கும் முயற்சிகளில் கரிகாலன் ஈடுபட எண்ணினான். முதலில் காவிரியின் நீரை ஒழுங்குபடுத்த நினைத்து அதன் இருமருங்கும் கரை கட்டத் தொடங்கினான். சோழ நாட்டுக்கு மேற்கே உள்ள இடங்களிலும் ஆற்றுக்குக் கரை கட்ட வேண்டும். கரிகாலன் ஆங்காங்கு உள்ள மன்னர்களுக்குத் தன் விருப்பத்தைத் தெரிவித்தான். தங்கள் தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காவிரிக்கு உறுதியான கரையைக் கட்டிவிட்டால் எல்லாருக்கும் ஊதியம் உண்டென்பதை அவன் எடுத்துக் காட்டினான். கரை கட்டும் வேலையில் உதவச் சோழ நாட்டிலிருந்து தொழிலாளிகளையும் அனுப்புவதாகத் தெரிவித்தான். அரசர்கள் யாவரும் அவனுடைய விருப்பத்துக்கு இணங்கிக் கரையெடுக்க முற்பட்டார்கள்.

அந்த மன்னர்களில் உருத்திரன் என்பவன் ஒருவன். அவன் முதலில் கரிகாலனது வேண்டுகோளைச் சட்டை செய்யவில்லை. நெற்றியில் கண் உடைய உருத்திரமூர்த்தியின் வழிவந்தவர்கள் தன் குலத்தவர் என்று பெருமை பேசிக்கொள்பவன் அவன். அதற்கு அறிகுறியாக நெற்றியில் கண்ணைப் போன்ற குறியை அணிந்துகொள்ளும் வழக்கம் அந்த மரபினருக்கு இருந்தது.

உருத்திரன் தன் வேண்டுகோளுக்கு விடை அளிக்காமல் இருப்பது கரிகாலனுக்குத் தெரிந்தது. அந்த அரசனை அடக்கி விடுவதென்பது மிகவும் சிறிய காரியம். இதற்காகப் படை எடுப்பதா? கரிகாலன் ஓர் ஓவியனை அழைத்தான். உருத்திரனைப்போல ஒரு படம் எழுதச் சொன்னான். அதில் நெற்றிக் கண்ணையும் அமைக்கச் செய்தான். கரிகாலனிடம் அந்தப் படம் சென்றது. எதற்காக இந்தப் படம் எழுதச் சொன்னான் அரசன் என்பது யாருக்கும் தெரியாது.

படத்தை இடக்கையில் எடுத்தான் திருமா வளவன், வலக்கையில் வேலை எடுத்தான். அந்தப் படத்தில் காட்டியுள்ள நெற்றிக் கண்ணை வேலால் குத்தினான். ஓவியக் கிழியில் நெற்றிக் கண் உள்ள இடம் பொத்தலாயிற்று. “இந்தா, இந்தப் படத்தை உருத்திரனுக்கு அனுப்பி வை; அவன் இதைப் பார்த்துப் புத்தியுள்ளவனாக இருந்தால் பிழைக்கட்டும்; இல்லையானால் படத்துக்கு நேர்ந்த கதி அவனுக்கும் நேரும்” என்று சொல்லி அனுப்பினான்.

படத்தை உருத்திரனிடம் சேர்ப்பித்தார்கள். சிறந்த முறையில் அமைந்த ஓவியத்தைக் கண்டு அவன் முதலில் வியந்தான். அதில் நெற்றிக் கண்ணைக் குத்தியிருப்பதைப் பார்த்தான். “நெற்றியிலே கண் முளைத்துவிட்டதாகக் கர்வம் அடையாதே! அதை ஒரு கணத்தில் வேலால் குத்தி விடுவேன்!” என்று திருமா வளவன் அந்தப் படத்தின் மூலம் எச்சரிப்பதாக அவன் உணர்ந்தான். கரிகாலனைப் பகைத்துக்கொண்டு உலகில் வாழ முடியுமா? பாண்டியனும் சேரனும் பிற அரசர்களும் சாதிக்க முடியாததை இந்தச் சிறிய அரசன் சாதிக்க இயலுமா? - அவன் நன்றாக யோசனை செய்தான். இறுதியில் தானும் காவிரிக்கரை கட்டும் பணியில் ஈடுபடுவதாகச் செய்தி சொல்லி அனுப்பினான்.

காவிரிக்கு ஒழுங்கான கரை அமைந்தது. சோழ நாட்டின் வளம் பின்னும் பெருகும் என்ற நம்பிக்கை. யாவருக்கும் உண்டாயிற்று. கரை கட்டி முடிந்த பிறகு ஒரு முறை அந்தக் கரையைக் காண வேண்டும் என்ற நினைவு சோழ மன்னனுக்கு எழுந்தது. ஒரு நாள் தன் பட்டத்து யானையின் மீது ஏறிப் படைவீரரும் பிறரும் புடை சூழப் புறப்பட்டான். கரைபெற்ற காவிரியின் அழகைப் பார்ப்பதோடு கரையற்ற சோழ நாட்டு மக்களின் பேரன்பையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் அவனை அன்புடன் வரவேற்றனர். அவனுடைய பெருமைகளைக் கதை கதையாக மக்கள் நாடு முழுவதும் சொல்லிக் கொண்டிருந்தனர். அந்தக் கதைகளின் தனி நாயகனை நேரே பார்க்கும்போது அவர்களுக்கு உண்டான ஆனந்தத்துக்கு அளவேது? கரை ஏது? அந்தப் பகுதிகளில் உள்ள ஊர்க்காரர்களெல்லாம் ஆளிட்டுக் கரையை உறுதிப்படுத்தியிருந்தார்கள். ஆயிரக்கணக்கான பொன் கூலி கொடுத்துத் தொழிலாளர்களை வைத்து இந்தக் காரியத்தைச் செய்தாலும், இவ்வளவு சிறப்பாக நிறைவேறியிராது. அந்த அந்த ஊர்க்காரர்கள் தங்கள் வயல்களில் பெருகப்போகும் வளத்தை நினைந்து, இந்த வேலை தம்முடைய சொந்த வேலை என்றே எண்ணி ஊக்கம் கொண்டார்கள். ஆகையால் கரை அருமையாக அமைந்தது.

கரிகாலன் கரையையும் காவிரியையும் சோழ நாட்டையும் நாட்டு மக்களையும் கண்டு கண்டு உவகை அடைந்தான். இறைவன் திருவருளை வியந்தான். ஒவ்வோர் ஊராகத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தான். திருச்சிராப்பள்ளிக்கு வந்தான். அங்கே திருவரங்க நாதனையும் திருவானைக்காவுடைய பிரானையும் தாயுமானவரையும் வழிபட்டு இன்புற்றான். மீண்டும் பட்டத்து யானையின்மேல் ஏறி மேற்குத் திசை நோக்கிப் புறப்பட்டான்.

சிறிது தூரம் வந்திருப்பான். அப்போது பெரிய சேவல் ஒன்று அயலில் ஓரிடத்திலிருந்து ஓடி வந்தது. கரிகாலன் ஏறிச் செல்லும் பட்டத்து யானை சற்றே நின்றது. அந்தக் கோழி படபடவென்று சிறகை அடித்தது. கழுத்து மயிரைச் சிலிர்த்துக்கொண்டது, வெகு வேகமாக ஓடி வந்து கரிகாலன் ஊர்ந்து சென்ற பட்டத்து யானையின் காலைக் கொத்தியது. அது வந்த வேகமும் கொத்திய கோபமும் யானையைத் திடுக்கிடச் செய்துவிட்டன. மாறி மாறி நாலு காலிலும் கொத்தியது, கோழி. கரிகாலன் அதைப் பார்த்து மருண்டான். உடன் இருந்த வீரர்கள் கோழியை அடிக்க முயன்றபோது கரிகாலன் அவர்களைக் கை அமர்த்தினான்.

சில கணம் இப்படி யானையைத் தாக்கிய கோழி பிறகு ஓடி மறைந்து விட்டது. இந்த நிகழ்ச்சி கரிகாலனுடைய உள்ளத்தைக் கலக்கியது. அவன் யானைமீதிருந்து கீழே இறங்கினான். பெரிய போரிலும் மயங்காத யானை மயங்கி நிற்பதும், அதன் காலில் கோழியின் மூக்குப் பட்ட இடங்களில் இரத்தம் கசிவதும் கரிகாலன் கண்களிலே பட்டன. அவனுக்கு அவமான உணர்ச்சியோ கோபமோ உண்டாகவில்லை. வியப்புத்தான் உண்டாயிற்று. ‘சின்னஞ் சிறு கோழி இவ்வளவு பெரிய யானையை, மக்கள் புடைசூழ்த்திருக்கும் சமயத்தில் தைரியமாக வந்து கொத்துகிறதே! அதற்கு எவ்வளவு நெஞ்சுரம் இருக்க வேண்டும்! இந்தக் கோழியே இவ்வளவு வலிமை உடையதானால் இந்தப் பக்கத்து மனிதர்கள் எப்படி இருப்பார்கள்! இந்த நிலத்தில் ஏதோ தனிச்சிறப்பு இருக்கிறது’ என்று கரிகாலன் எண்ணலானான்.

உடன் வந்தவர்களைக் கொண்டு அங்கே அருகில் ஏதேனும் ஊர் இருக்கிறதா என்று விசாரிக்கச் சொன்னான். அருகில் உறையூர் என்ற சிறிய ஊர் இருப்பதாகத் தெரிய வந்தது. ‘இந்தப் பூமி வீரம் செறிந்தது. இந்தக் கோழி நம்முடைய போக்கைத் தடுத்தது இறைவன் செயலே. இதனால் நம்முடைய ஊக்கம் குறையக்கூடாது. இந்த இடத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பல இடங்களைப் பார்த்து வரும் நமக்கு இந்த இடத்தின் சிறப்பைப் புலப்படுத்தவே திருவருள் இப்படிச் செய்தது போல் தோன்றுகிறது’ என்று அவன் சிந்தித்தான்.

அரசர்களுக்குக் கடற்கரை நகரம் மாத்திரம் சிறந்திருந்தால் போதாது. உள் நாட்டிலும் ஒரு நகரம் சிறப்பாக அமையவேண்டும். வியாபாரம் முதலியவற்றிற்குக் கடற்கரை நகரம் வசதியாக இருந்தாலும் கோட்டை கொத்தளங்களுடன் அமைய உள் நாட்டு நகரம் ஒன்றும் வேண்டும். இத்தகைய எண்ணம் கரிகாலனுக்கு முன்பே இருந்தது. ஆகவே, உள் நாட்டிலும் ஓர் இராசதானி நகரத்தை அமைக்க வேண்டுமென்ற விருப்பம் இருந்தது. எந்த நகரத்தைத் தேர்ந்தெடுப்பது? கரிகாலன் ஒரு முடிவுக்கும் வராமல் இருந்தான்.

நடுவழியில் கோழியால் யானை தாக்குண்டு யாவரும் செயலற்று நின்ற இப்போது, கரிகாலன் உள்நாட்டு நகரத்தைப்பற்றி உறுதியான முடிவுக்கு வந்துவிட்டான். ‘இறைவன் இந்த இடம் சிறந்தது என்று கோழியின் வாயிலாகக் குறிப்பிடுகிறான். இந்த நிலத்தின் பெருமையை நாம் கண் கூடாக உணர்ந்தோம். இதுகாறும் சில மக்கள் உறையும் இந்தச் சிற்றூர், இனிச் சோழ மன்னர் உறையும் ஊராகவும் விளங்க வேண்டும்’ என்று தீர்மானித்தான்.

மேலே மிக்க வேகமாகக் காவிரிக் கரையைப் பார்த்துவிட்டுப் புகார் நகரம் அடைந்தான். நாட்டின் வளத்துக்கு உதவியாகக் காவிரிக்கரை ஒழுங்குப்பட்டது. இனி நகரம் ஒன்றை அமைக்கும் வேலையில் முனைந்தான் கரிகால் வளவன்.

கரிகாலன் நினைக்கும் காரியம் சிறப்பாக நிறைவேற என்ன தடை? சோழ நாடு முழுவதுமே உறையூர் நிர்மாணத்தில் ஈடுபட்டதென்று தான் சொல்லவேண்டும். வெறும் மரமடர்ந்த காடாக இருந்த இடம் மாடமாளிகை கூடகோபுரங்கள் நிரம்பிய நகரமாயிற்று. அழகிய தெருக்கள், அலங்காரமான பொழில்கள், எழில் நிரம்பிய முடுக்குகள் அமைந்தன. அழகான அரண்மனையையும் கட்டினார்கள், உறையூர் பெரிய நகரமாகிவிட்டது.

கரிகாலன் நல்ல நாளில் உறையூரில் உள்ள அரண்மனையில் புகுந்தான். அந்த மாநகரத்தில் ஒரு சிவாலயத்தை எழுப்பினான். சோழ நாட்டின் கடற்கரைப் பெருநகரம் காவிரிப்பூம்பட்டினம். அதற்குச் சிறிதும் அளவிலும் அமைப்பிலும் குறைவற்ற உள் நாட்டு இராசதானி உறையூர். கரிகாற் சோழன் இரண்டு நகரங்களிலும் மாறி மாறி வாசம் செய்து வந்தான்.

கோழியினால் குறிப்பிக்கப் பெற்ற இடத்தில் எழுந்த நகரமாதலின் அதற்குக் கோழி என்ற பெயர் அமைந்தது. கோழியின் மூக்கினால் யானை தடைப்பட்டமையால் அந்நகரில் உள்ள சிவாலயத்துக்கு மூக்கீச்சரம் என்ற பெயர் வழங்கியது.

கரிகாலன் பகைவரை வென்றான்; காவிரிப்பூம் பட்டினத்தை அழகு படுத்தினான்; காவிரிக்குக் கரை கட்டினான்; உறையூரை நிறுவிப் பெருநகராக்கினான். சோழ நாட்டின் சிறப்பை உலகமெல்லாம் போற்றியது.

அவனுடைய தந்தை அழுந்தூர் வேளின் மகளை மணம் செய்து கொண்டான். அதுபோலவே அவனும் வேளாண் செல்வர் ஒருவருடைய மகளை மணம் புரிந்துகொள்ள எண்ணினான். சீகாழிக்கு அருகில் உள்ள நாங்கூரில் கல்வி கேள்வி அறிவு ஒழுக்கங்களால் சிறந்த வேளாண் செல்வர் ஒருவர் இருந்தார். அவருடைய திருமகளைக் கரிகாலன் மணந்தான். பராக்கிரமத்தாலும், பெருஞ் செயலாலும் கரிகாலன் தெய்வத்துக்குச் சமானமாய் உள்ளவன். அவனுக்கும் தமக்கும் நெடுந்தூரம் என்று ஒரு வகையில் எண்ணினர் மக்கள். ஆனாலும் அவ்வளவு தூரத்தில் இருப்பதற்குரிய அவன், கருணையினால் தெய்வம் எளியருக்கும் எளியனாய் வருவது போலத் தன் அன்பினால் குடிமக்களுக்குச் சமீபத்தில் உள்ளவனாக, அவர்களுடைய உள்ளக் கோயிலில் உறைபவனாக விளங்கினான். அவன் நாங்கூர் வேளின் மகளை மணந்து கொண்ட செயல் இந்த அன்பையும் அணிமையையும் பின்னும் அதிகமாக்கியது.