கரிகால் வளவன்/வெண்ணிப் போர்

விக்கிமூலம் இலிருந்து
4. வெண்ணிப் போர்

“சின்னஞ் சிறு குழந்தை; இன்னும் உலக இயல்பை அறியும் பிராயம் வரவில்லை. அதற்குள் சிங்காதனம் ஏறிவிட்டான். இவ்வளவு காலமும் அரண்மனையில் வளரவில்லை. அரச குலத்துக்குரிய சிறப்போடு வாழவில்லை. கற்கவேண்டிய கலைகளையும் முறைப்படி கற்கவில்லை. இன்னும் காலில் உள்ள காப்பை வாங்காத பருவத்தில் செங்கோல் பிடிக்கும்படி இறைவன் திருவருள்செய்துவிட்டது. இனி அந்தத் திருவருளே துணையாக இருந்து அரசை நடத்தினாலாழியச் சோழநாடு பண்டைப் பெருமை குன்றாமல் இருப்பது அரிது” என்றார் ஒருவர்.

“என்ன, அப்படிச் சொல்கிறீர்கள்? பகைவர்களுடைய தீம்புகளுக்கும் வஞ்சகச் செயல்களுக்கும் தப்பி வந்திருக்கிறான் நம் மன்னன். மறைந்திருந்த மாணிக்கத்தைக் கண்டெடுத்தாற் போலப் பட்டத்து யானை சோழர்குலத் தோன்றலைக் கண்டுபிடித்து எடுத்து வந்திருக்கிறது. இவ்வளவு காலம் இந்தக் குழந்தையை ஊரார் அறியாமல் வளர்த்து வந்தாரே இரும்பிடர்த் தலையார்; அவர் இருக்கும்போது மன்னனுக்கு என்ன குறை? எல்லா வகையிலும் சிறந்த பேரறிஞராகிய அவர் அரசனுக்கு வேண்டிய கல்வியைக் கற்பித்திருப்பார். அன்றியும், நாதனற்று அலமந்த சோழநாட்டை இந்த இடைக்காலத்தில் பாதுகாத்த அமைச்சர்களும் சான்றோர்களும் இருக்கிறார்கள். அவர்களுடைய பெருந்துணை கரிகால் வளவனுக்கு இருக்கும்போது என்ன பயம்?” என்றார் மற்றொருவர்.

“இப்போது உள்ளபடி இருந்தால் அச்சம் ஒன்றும் இல்லை, ஆனால் சோழ நாட்டின் பெருவளத்தில் நாட்டமுடைய மன்னர்கள் பலர் இருக்கிறார்கள், பல குறு நில மன்னர்கள் சமயமறிந்து வீழ்த்துவதற்குக் காத்திருக்கிறார்கள். எந்தச் சமயத்தில் யார் படையெடுப்பார்களோ!”

“அரசன் ஒருவன் இருக்கிறான் என்ற தைரியம் மக்களுக்கு வந்துவிட்டது. எந்தப் பகைவன் வந்தாலும் எதிர்த்து நிற்கும் ஆற்றல் சோழநாட்டுப் படைவீரர்களுக்கு உண்டு. மன்னன் இளையவனாக இருந்தாலும் அரசியல் வேலைகளிலே கண்ணுங் கருத்துமாய் இருப்பதாகச் சொல்கிறார்கள். பாருங்கள்: முடிசூடியவுடன் அவன் செய்த முதல் வேலை, படைப்பலத்தை அதிகமாக்கும் செயல்தான்.”

இவ்வாறு சோழ நாட்டு மக்கள் கரிகாலனைச் சிறப்பித்துப் பேசுவாரும், பகைவர் வந்து படையெடுப்பார்களே என்று அஞ்சுவாருமாக இருந்தனர். சிங்காதனத்தை எளிதிலே கைப்பற்றி விடலாம் என்று. எண்ணிய பகைவர் இப்போது போர் செய்தாலன்றித் தம் எண்ணம் கைகூடாதென்று தெரிந்துகொண்டனர். ஆகவே, அவர்கள் தம் படைப்பலத்தைப் பெருக்கிக் கொண்டார்கள்.

சோழ நாட்டைச் சார்ந்திருந்த வேளிர் பலர் கரிகாலன் பலம் பெறுவதற்கு முன்பே போரிட்டு அவன் சிங்காதனத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று நினைத்தனர். இந்த எண்ணம் உடையவர்கள் அங்கங்கே இருந்தரர்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துச் சோழ நாட்டைக் கைப்பற்ற என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள். பதினொரு பேர் இந்தக் கூட்டத்தில் சேர்ந்தனர்.

“நாம் எதிர்த்தால் அதற்குரிய படைப்பலம் நமக்கு இல்லை. பெரிய மன்னன் ஒருவனுடைய உதவி இருந்தாலொழியப் போரை நடத்த இயலாது. அப்படி நாம் வென்றாலும் நம்கீழ்ச் சோழ நாடு அமைதியாக இராது. வேறு வேளிர்கள் நம்மை எதிர்ப்பார்கள். ஆகையால் பேரரசன் ஒருவனுடைய ஆதரவை நாடி நம் சூழ்ச்சியை நிறைவேற்றலாம்” என்ற கருத்து அவர்களிடையே எழுந்தது. முதலில் பாண்டிய மன்னனுடைய உதவி கிடைக்குமா என்பதை அறிய எண்ணினர்.

சில வேளிர்கள் பாண்டி நாடு சென்று, சோழ அரசன் இளையவனென்றும், பேருக்கு அரசனாக இருக்கிறானென்றும், சோழ நாட்டு அரசியல் பொம்மை நாடகமாக இருக்கிறதென்றும் சொன்னார்கள். “எவ்வளவோ பாண்டியர்கள் சோழ நாட்டையும் தம் ஆட்சிக்கீழ் வைத்து ஆண்டிருக்கிறார்கள். உங்களை அந்தப் பாக்கியம் வலிய வந்து அடைய இருக்கிறது. நாங்கள் பதினொருவர் உங்களுக்கு உதவி செய்வோம். சோழ நாட்டு மக்களுக்கும் தக்க அரசன் தங்களுக்கு இல்லையே என்ற குறை இருக்கிறது. போர் தொடங்கினால் அவர்கள் நம்மை எதிர்க்கமாட்டார்கள். சிலர் நம் படையில் சேரக்கூட வருவார்கள் இத்தகைய சத்தர்ப்பம் எப்போதும் கிடைக்காது” என்று சொன்னார்கள்.

பாண்டியன் யோசித்துப் பார்த்தான். தன் படைப்பலத்தில் அவனுக்கே நம்பிக்கை இல்லை. போரைத் தொடங்கிய பிறகு, வெற்றி காணாவிட்டால் பாண்டி நாட்டின் அமைதிக்கே இடையூறு நேர்ந்துவிடும். சிறிய சிறிய இடங்களை உடைய வேளிர்கள் தங்கள் நாட்டை இழக்கச் சித்தமாக இருக்கலாம். வழிவழி வந்த புகழையுடைய பாண்டிய மன்னன் அவ்வாறு இருக்க முடியுமா? நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்று தெரிந்தால் இந்தப் போரை நடத்தலாம். இல்லையானால் சும்மா இருப்பதே நலம்.

பாண்டியனுடைய சிந்தனை இவ்வாறு ஓடியது. அதனாடே மண்ணாசை குறுக்கே வந்தது. ‘சோழ நாடு நம் கையில் கிடைப்பதென்றால் எத்தனை இலாபம்! சோறுடைய சோணாட்டைப் பெற்றவன் மனித குலம் அத்தனைக்கும் அரசன்போல இருப்பானே! இவ்வளவு பெரிய நாட்டைப் பெறுதற்குரிய சமயம் வந்திருக்கிறது. துணை புரிவதாக வலிய வந்து வேளிர் பலர் உறுதி கூறுகின்றனர். வலிய வந்த சீதேவியை உதைத்துத் தள்ளுவதா?’ இந்த எண்ணம் அவனைப் பின்னும் சிந்தனையில் ஆழச் செய்தது. போரில் வெற்றி காணமுடியுமோ என்ற ஐயமும், இவ்வளவு அரிய சந்தர்ப்பத்தை இழப்பதா என்ற ஆசையும் அவன் உள்ளத்தே எழுந்து போராடின. ஆசை தான் மிகவும் வலிமை உடையதாக இருந்தது. எவ்வளவு படைகளைப் புதிதாகச் சேர்க்கலாம் என்று யோசித்தான்.

திடீரென்று புதிய யோசனை ஒன்று தோன்றியது. தன்பால் வந்த வேளிர்களைப் பார்த்துச் சொல்லலானான்:

“நீங்கள் நம்மிடம் வந்ததைப் பாராட்டுகிறோம். போர் செய்வதானால் நம்முடைய பலத்தையும் துணையாக வருபவர் பலத்தையும் மாற்றான் பலத்தையும் சீர்தூக்கிச் செய்யவேண்டும். சோழ நாட்டு மக்கள் எளிதில் நம்மை ஆதரிப்பார்கள் என்று சொல்வதற்கு இல்லை. ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு மேலே போர் பெரியதாகி விட்டால் தளராது முன் நின்று போரிடுவதற்கு ஏற்ற பெரிய படை வேண்டும். சிறிது தளர்ச்சியிருந்தாலும் தோல்விக்கு இடம் உண்டு. ஆகவே-”

“போர் வேண்டாம் என்று நினைக்கிறீர்களோ?”

“இல்லை, இல்லை. நீங்கள் இதைப் போலத் தக்க செவ்வி கிடைக்காது என்று சொல்வதை நாம் நன்கு உணர்கிறோம். போர் செய்து சோழ நாட்டைக் கைப்பற்றுவது நமக்கு உடம்பாடான செயலே. ஆனால், இன்னும் படைப்பலம் சேர்த்துக்கொண்டு போரில் முனைவதே நலமென்று தோன்றுகிறது.”

“சிலகாலம் பொறுத்துப் போர் தொடங்கலாமென்பது தங்கள் கருத்தோ? அதற்குள் கரிகாலன் படைப்பலத்தைச் சேர்த்துக் கொள்ளுவானே!”

“இல்லை, இல்லை. போரை மிக விரைவில் தொடங்க வேண்டியது தான். தக்க துணையைத் தேடிக்கொள்ள வேண்டும் என்றுதான் சொல்லுகிறோம் சேரனுடைய துணை கிடைக்குமானால் வெற்றி கிடைப்பது உறுதி. அம் மன்னனிடம் சென்று நம் கருத்தைக் கூறலாம். நாமும் வருகிறோம். அம் மன்னன் துணைபுரிய உடன்பட்டால் அன்றே சோழ அரசன் ஒழிந்தான் என்று நிச்சயம் செய்து கொள்ளலாம்.”

பாண்டியன் யோசனை பலித்தது. சேரநாட்டை ஆண்டு வந்த பெருஞ்சேரலாதன் சோழ நாட்டின் மீது படையெடுக்க உதவுவதாக ஒப்புக்கொண்டான். அவனே தலைமை பூண்டு, போரை நடத்துவதாகக் கூறினான். பதினொரு வேளிரும் பழம் நழுவிப் பாலில் விழுந்தது என்று மகிழ்ச்சி கொண்டனர், பாண்டியனும் போருக்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்யலானான்.

சோழ நாட்டின் மேல் சேரன் படையெடுத்திருக்கிறான் என்ற செய்தி எங்கும் பரவியது. சேரன் தன் நாட்டிலிருந்து படையெடுக்காமல் பாண்டி நாட்டின் வழியே படையைச் செலுத்தி, அந்த நாட்டுப் படையையும் வேளிர் படையையும் சேர்த்துக்கொண்டு தென் திசையிலிருந்து படையெடுத்தான். சோழ நாட்டின் தென்பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டு வடக்கு நோக்கிப் படையைச் செலுத்தினான். இப்படி ஒரு நிலை வரும் என்பதை முன்பே சிந்தித்திருந்த கரிகால் வளவன் ஏற்ற வகையில் படையைத் திரட்டியிருந்தான். அந்தப் படையுடன் பூம்புகாரிலிருந்து புறப்பட்டான். பகைப்படை காவிரிப்பூம்பட்டினத்தை முற்றுகையிடும் வரையில் காக்கக்கூடாதென்று வேகமாகச் சென்றான். அவனுடைய மன வலியைக் கண்டு படைத்தலைவர்கள் வியந்தனர். படை வீரர்களுக்கு மிக்க ஊக்கம் உண்டாகிவிட்டது. அங்கங்கே உடல்வலிமை பெற்ற மக்கள் தாமே வந்து படையில் வலியச் சேர்ந்தனர்.

சோழப் பெரும்படையும் சேரபாண்டியர் படைகளும் சந்தித்தன. சோழர் படைக்குத் தலைவன் கரிகாலன் ஒருவனே. மாற்றார் படையிலோ, சேரனும், பாண்டியனும், பதினொரு வேளிரும் தலைவர்கள். அவர்கள் தங்கள் தங்கள் படைக்குத் தலைமை வகித்தார்கள். இருபுறத்துப் படைகளும் சந்தித்தன. போர் மூண்டது; வெண்ணி யென்னும் ஊரில் இரு படைகளும் நின்று போர் செய்தன.

சோழ சரித்திரத்திலே நிகழ்ந்த பெரிய போர்களுள் வெண்ணிப் போர் ஒன்று. ஓர் அரசனை இரண்டு பெரிய மன்னர்களும் பதினொரு குறு நில மன்னராகிய வேளிரும் எதிர்த்தார்கள். சோழ அரசனாகிய கரிகாலனோ இளையவன். ஆனாலும் அவனுடைய விறல் எல்லோரினும் சிறந்திருந்தது. சோழர் படையில் இருத்தவர்களுக்குச் சோழ நாட்டுப் பற்று மிகுதியாக இருந்தது. இரும்பிடர்த்தலையார் சோழ நாட்டு மக்கள் உள்ளத்தில் தேச பக்திக் கனல் பொங்கும்படி செய்தார். அதனால் நாள்தோறும் நாட்டு மக்களுடைய ஆதரவு அதிகமாயிற்று.

மாற்றான் படை அளவில் பெரியதாக இருந்தாலும், வெவ்வேறு தலைவரின் கீழ்ப் போரிட்டது. சில சமயங்களில் யார் பகைவர், யார் தம் கட்சியினர் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. வேளிர்களின் கீழிருந்த படைவீரர்கள் வெறும் கூலிப் படைஞர்கள். அவர்களுக்குத் தேசபக்தியோ வேறு உயர்ந்த கொள்கையோ இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாகப் போர் நடப்பது சோழ நிலம். சோழ நாட்டில் சோழப் படைக்குத்தான் பலம் அதிகம் என்பதைச் சொல்லவா வேண்டும்? மாற்றார் படைக்கு உணவு முதலியன சுருங்கிவிட்டால் பாண்டி நாட்டிலிருந்தோ சேர நாட்டிலிருந்தோ வரவேண்டும். சோழ நாட்டில் உள்ள மக்கள் மறைவாகவோ, வெளிப்படையாகவோ தமக்கு உதவி புரிவார்கள் என்று வேளிர்கள் எதிர்பார்த்தார்கள். அப்படி நடக்கவில்லை. சோழ நாட்டுப் படை ஒருமுகமாகப் போர் செய்தது. கரிகாலன் தெய்வத்தின் திருவருள் பெற்ற தேவன் என்ற எண்ணம் வீரர்களுக்கு இருந்தது. பெரிய யானையின்மேல் இளங்கதிரவன் எழுவது போல அல்லவா போருக்குப் புறப்பட்டு முன்னே நின்றான்? ஆத்தி மாலையைச் சூட்டிக்கொண்டு வீறு பெற்று அவன் புறப்பட்ட வேகம் எல்லா மக்கள் உள்ளத்திலும் வீரக் கனலை மூட்டியது. தானே நேரில் சென்று போரை அந்த இளங் குழந்தை நடத்துவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆகவே, அவன் புறப்பட்டான் என்ற செய்தியைக் கேட்டு ஆண்மையுள்ள மக்களெல்லாம் படையில் சேர்ந்து புறப்பட்டுவிட்டார்கள்.

போர் கடுமையாக நடந்தது. முதல் முதலில் வேளிர் படையில் சலசலப்பு உண்டாயிற்று. எங்கே தளர்ச்சி உண்டாகிறதோ அந்தப் பகுதியிலே மேலும் மேலும் மோத வேண்டுமென்ற தந்திரம் கரிகாலனுக்குத் தெரியும். வேளிர்படை இருந்த பக்கத்தில் ஊன்றித் தாக்கினான். என்ன இருந்தாலும் கூலிப் படைதானே? வரிசை வரிசையாகக் கால் வாங்கத் தொடங்கியது. பலர் சோழப் படைவீரருடைய படைக்கலங்களுக்கு இரையாயினர். வேளிர் பதினொருவரும் ஒருவர்பின் ஒருவராக மாய்ந்தனர். அடுத்தபடி பாண்டியன் படையைத் தாக்கினான் கரிகாலன் சேரன் படையோடு தளர்வின்றி ஒருபால் சோழப் படையினர் போரைத் தொடுத்துக்கொண்டிருந்தனர். அங்கே யாருக்கு வெற்றி, யாருக்குத் தோல்வி என்று அறியவொண்ணாத நிலை இருந்தது. பாண்டியன் படையை அதிக வேகத்தோடு எதிர்ப்பதில் கரிகாலன் முனைந்தான். பாண்டி நாட்டுப் படையும் தளர்ந்தது. பாண்டியன் பட்டான்.

இப்போது பின்னும் ஊக்கத்தோடு சோழ மன்னன் சேரப் பெரும்படையை எதிர்க்கத் தொடங்கினான். பல போரில் வென்ற சேரன் பெருஞ்சேரலாதனுக்கு முன்னே கன்னிப் போரைச் செய்யும் கரிகாலன் நின்றான். சேரனுக்குப் படைப் பலமும், அநுபவமும் துணை நின்றன. கரிகாலனுக்கு வீரரின் அன்பும், திருவருளும், இணையில்லாத ஊக்கமும், அறிவுப்பலமும் துணை நின்றன. சோழப் படையில் இருந்த தளபதிகள் குலை நடுங்கினர். கரிகாலனுக்கு ஏதாவது நேர்ந்தால் என்ன செய்வதென்று பயந்தனர். கரிகாலனே மிடுக்குடன் போரிட்டான். கடைசியில் அவன் விட்ட அம்பு பெருஞ்சேரலாதனுடைய மார்பிலே பாய்ந்தது. அவன் வீழ்ந்தான். வீழ்ந்தவனை அவனுடைய படைத்தலைவர்கள் தூக்கிச் சென்றனர். வீழ்ந்தவர்களோடு போர் செய்தல் அறமன்று. ஆகவே, போர் நின்றது. சோழ மன்னனுக்கு வெற்றி கிடைத்தது.

பெருஞ்சேரலாதன், அம்பு பட்டு வீழ்ந்தவன் இறந்து படவில்லை. அவனை வஞ்சிமா நகரம் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். கரிகாலன் விட்ட அம்பு அவன் மார்பைத் துளைத்து உடம்பை ஊடுருவி முதுகு வழியே சென்றுவிட்டது. சுத்த வீரர்களுக்கு மார்பில் புண் இருப்பது அழகு; முதுகில் புண் இருப்பது இழுக்கு. போரில் புறங்காட்டி அப்போது பாய்ந்த அம்பினால் புறப்புண் அமைதல் வீரத்துக்கு இழுக்கு என்று சொல்லுவார்கள். ஆனால் எந்த வகையிலும் புறத்தே புண் உண்டானால் அதனாலே வாழ்தல் தவறு என்று பெருஞ்சேரலாதன் எண்ணினான். “அந்த அம்பு என் உயிரை வாங்காவிட்டாலும் என் புறத்தே புண்ணே நிறுத்திவிட்டுப் போயிற்று. புறப்புண்ணை வைத்துக்கொண்டு வாழமாட்டேன். விரதம் இருந்து உயிரை விடப்போகிறேன்” என்றான். உடன் இருந்தவர்கள் என்ன என்னவோ சொல்லிப் பார்த்தார்கள். மான வீரனாகிய சேரன் அவற்றைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. வடக்கிருந்து உயிர் நீக்க நிச்சயித்துவிட்டான். அப்படியே தன் நகரத்துக்கு வடக்கே நெடுந்துாரம் சென்று ஓரிடத்தில் அமர்ந்து உணவும் நீரும் இன்றி உடம்பை வாட்டிப் புகழுடம்பு பெற்றன்.

கரிகாலன் கன்னிப் போரில் வெற்றி மகளைக் கைப்பற்றினான். அவன் புகழ் எங்கும் பரவியது.