உள்ளடக்கத்துக்குச் செல்

கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்

விக்கிமூலம் இலிருந்து

பூபதியின்

ஒருநாள்அலுவல்

"தோ எனக்கொன்று கொஞ்சம் சொத்து இருக்கிறது பிரதர்! நான் ஒன்றும், அலைந்து திரிய வேண்டிய அவசியமில்லை நிம்மதியாக வாழ எனக்கு வசதியிருக்கிறது. ஆண்டவன் அப்படி ஒன்றும், என்னை உழைத்து உருக்குலையும்படியான நிலையிலே விட்டு வைக்கவில்லை. வாழ் வதற்காக வதைபடு என்று என் தலையில் ஒன்றும் எழுதியில்லை" என்று கூறினார், ஓய்வூர் மிட்டாதாரர் ஓயிலானந்த பூபதி. கொஞ்சம் கோபத்துடன், அவரிடம் பேசிக் கொண்டிருந்த "பிரதர்" துரைசிங்கம் என்பவர். துரைசிங்கம் பூபதியிடம், கொஞ்சம் சுறுசுறுப்பாக வேலை செய்து, யுத்தக்கடன் பத்திரங்களை அதிகமாக விற்று, 'கவர்னர் பெருமாள்' ஓய்வூருக்கு வரும்போது இந்தப் பக்கத்திலேயே, அதிகமாக யுத்த உதவி செய்தவர் மிட்டாதாரர் தான் என்கிற கியாதியை அடைய வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருந்தார். யுத்தக் கடன் பத்திரங்ககளை விற்பது, யுத்த உதவிநிதி சேர்ப்பது இரண்டும் முதலிலே ஓயிலானந்த பூபதிக்குச் சந்தோஷமாக இருந்தது. அதிலும், மேற்படி நிதிக்காசு,சங்கீதக் கச்சேரிகள் முதலியவற்றை ஏற்பாடு செய்யும்போது, ரொம்பக் குஷி, பூபதிக்கு இந்தச் சந்தோஷத்துடன், கொஞ்சம் சுறு சுறுப்பாகவும் வேலை செய்தால் பலன் உருவாகும் என்பது, துரைசிங்கத்தின் எண்ணம். யுத்த உதவித் தொகையின் அளவு உயர உயரத் தனக்கும் 'ராவ் சாகிபு' பட்டத்துக்கும் இடையே உள்ள 'தொலைவு' குறையும் என்பது துரைசிங்கத்தின் எண்ணம். எனவே பூபதியைச் சுற்று அதிகமான சுறு சுறுப்புக் காட்டும்படி கேட்டுக் கொண்டார். பூபதிக்குக் கொஞ்சம் கோபம். இவன் அலையட்டும்! சர்க்கார் இவனை யுத்தப் பிரசாரகர் என்று நியமித்திருக்கிறார்கள் ; மாதம் 500 சம்பளமும் தருகிறார்கள் ; இவன் அலைய வேண்டியது சரி; என்னை எப்படி இவன் அதிகமாக வேலை செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கலாம்" என்று கருதியே கோபித்துக் கொண்டு, தனது அந்தஸ்த்தைச் சுட்டிக் காட்டினார், துரைசிங்கத்திடம்.

" ஏன் ஊர் சுற்றித் திரியமாட்டான்! குடித்துவிட்டுக் கூத்தாடத்தான் செய்வான். ஏதாவது "வித்து விசனம்" கவலை கஷ்டம் இருந்தால்தானே. காளை மாடுபோலச் சுற்றி வருகிறான், இருப்பது பாழாகாதபடி பார்த்துக் கொள்ளவும், இவனுக்குச் சொத்து சுகம் தேடிக் கொடுக்கவும் நான் பாடுபட்டேன், அவன், அந்தத் தைரியத்திலே, உலகத்தைப் பற்றியே கவலை இல்லை என்று மதோன் மத்தனாகத் திரிகிறான். எந்த விலை ஏறினால் அவனுக்கென்ன, இறங்கினால் அவனுக்கென்ன! அவன் உண்டு, நண்பர்கள் உண்டு, என்று இருக்கிறான். விளைந்து வருகிறது, விற்றுப் பணத்தைக் குவிக்கிறார், செலவு செய்துகொண்டு குஷாலாக இருப்போம் எனறு உறவுகிறான். பாடுபட்டுப் பணத்தைச் சேர்க்கிற எனக்கல்லவா தெரியும், அதனுடைய அருமை”

பூபதி, புவனேஸ்வரியின் நடனக் கச்சேரியை ஏற்பாடு செய்யப் போயிருக்கிறார்; கல்யாணி என்ற பாடகியை அழைத்துவரப் போயிருக்கிறார், என்ற செய்திகளை அடிக்கடி கேட்டுக் கோபங்கொண்டார் பெரிய மிராசுதாரர், பொன்னுராமர். தன் மகன் சர்க்கார் காரியமாகப் போயி ருக்கிறான். சண்டைக்குப் பணம் திரட்டும் காரியமாகத்தான் போயிருக்கிறான். யுத்தநிதி உதவிக் கச்சேரிகளுக்காகத்தான் புவனேஸ்வரி, கல்யாணி ஆகியோரைத் தேடிச் சென்றானேயொழிய வேறு சொந்த வேடிக்கைக்கு அல்ல என்று பொன்னுராமரிடம் கூறப்பட்டது என்ற போதிலும், அவர் சமாதானம் அடையவில்லை. யுத்தவேலை நிதி திரட்டுவது என்று என்ன பேர் வேண்டுமானாலும் வைக்கட்டும், பூபதி இப்போது சதா சர்வகாலம், இந்தச் "சிரிப்புக் காட்டிகள்" இருக்கும் இடத்திலே உலாவுகிறான், அது தவறு, அது கூடாது, என்று கூறியபடி இருந்தார். அவருக்குத் தன் பாலியகால நினைவு. அவர் காலத்தில் யுத்த நிதி வசூலிக்கும் வேலை இல்லை; ஆனால் 'நவராத்திரி உற்சவ ஏற்பாடு' இருந்தது. பொன்னுராமர் அதிலே தீவிரமாகச் சேவை செய்தபோதுதான், திலகாவும், அன்னமும் அவருக்குச் சினேகிதமானது. "இலேசாக, படுக்கப் போகும் போது கொஞ்சம் உசத்தி சரக்கு" சாப்பிடக் கற்றுக்கொண்டதும் அந்தச் சமயத்திலேதான். ஆகவே பொன்னுராமர், யுத்தநிதி வசூல் வேலைக்குத்தான் போயிருக்கிறான் ஓயிலானந்தன் என்று சொன்னவர்கள், மீது சீறிவிழுந்தார், தனக்கு "நவராத்திரி" தன் மகனுக்கு 'யுத்தநிதி வசூல் வேலை' என்று மாறி இருக்கிறது என்று எண்ணினார்.

"ராஜாபோல, நிம்மதியாக இருக்க வேண்டியவன் வீடு இருக்கிறது அரண்மனை போல, தோட்டம் இருக்கிறது நந்தவனம் போல, என்ன குறை இவனுக்கு. எந்த வேலைக்குத்தான் இவனுக்கு இங்கே ஆள் இல்லை. நிம்மதியாக இருக்கக் கூடாதா? பகவான், நமக்கு ஒரு குறையும் செய்யவில்லை, சகல சம்பத்தும் கொடுத்திருக்கிறார். இதை அனுபவித்துக்கொண்டு, வீட்டோடு சந்தோஷமாக ஏன் இருக்கக் கூடாது? என்னமோ, பாடுபட்டு ஜீவிக்க வேண்டியவனைப்போல், சதா அலைச்சல், வீடு தங்குவதுகிடையாது; வேளா வேளைக்குச் சாப்பிடுவது கிடையாது; உடம்பைக் கவனித்துக்கொள்வது கிடையாது; கண்டவர்களிடம் பேசிப் பேசி, தொண்டையைக் கூடப் புண்ணாக்கிக் கொள்வான் போலிருக்கிறது. ஏனம்மா? இவனுக்கு இந்தக் கஷ்டம்? இவன் தலையிலே நல்ல எழுத்து எழுதி இருக்க, எதற்காக இவன் அலைந்து கொண்டிருக்கவேண்டும்? வீட்டோடு, நிம்மதியாக இருக்கக்கூடாதா" என்று, பூபதியின் தாயார் வருத்தப்பட்டுக்கொண்டார்கள். எப்போது பார்த்தாலும் பூபதி வெளியே சுற்றிக்கொண்டே இருப்பதைக்கண்டு தாய்க்கு, மகன் இப்படி அலைந்து உடம்பைப் பாழாக்கக்கொள்கிறானே என்று சோகம், அவர்களுக்குகென்ன தெரியும், மகன், உல்லாச வேட்டையாடுகிறானே தவிர, ஊருக்கு உபகாரம் செய்ய ஒரு துளியும் வேலை செய்யவில்லை என்பது, அலைந்து தீரவேண்டும். திரிந்து கிடக்கவேண்டும், பாடுபட்டுப் பணம் தேடியே, ஜீவித்தாகவேண்டும் என்ற நிலையில் பலர் இருப்பதற்குக் காரணம். அவர்கள் தலையிலே ஆண்டவன் அப்படி எழுதினான், என்பது மிட்டாதாரணியின் எண்ணம். மகன் ஏதோ பாடுபடுகிறான் மற்றவர்களுக்காக என்று வருத்தப்பட்டார்கள் அந்த அம்மையார். இரவெல்லாம் குடித்து விட்டு கிடப்பதால், பூபதியின் உடல் இளைத்தது, அதை அம்மையார், மகன் ஊருக்கு உழைத்து அப்படியானான் என்று எண்ணிக் கொண்டார்கள்.

"உன் அந்தஸ்த்துக்கும், செல்வத்துக்கும்" இது ஒரு பிரமாதமா? நேற்றுத் தோன்றியவர்களெல்லாம், 'ஷெவர்லேயில்' போகும்போது, நீ ஏன் 'ரோல்ஸ்ராயில்' போகக் கூடாது? அந்தப் பயல், 'ரேஸ் கிளப்' பிலே, ஆயிர ரூபாய் நோட்டை அலட்சியமாக வீசி எறிகிறான், நூறு ரூபாய் நோட்டு எடுப்பதென்றால் உனக்குக் கை நடுக்கம் பிறக்கிறது. உன் அந்தஸ்துக்கு ஏற்றபடியா உடை இருக்கிறது? 'ட்வீட்' இல்லாமல், டாக்டர் தாமோதர் வெளியே கிளம்புவதில்லை, உன் உடையைப் பார் ! சேச்சே! என்ன இருந்தாலும், நீ இப்படி உன்னுடைய செல்வநிலைக்குக் குறைவாக, மட்டமாக வாழ்க்கையை நடத்தக்கூடாது. மதிக்கமாட்டார்களே ஜனங்கள்! 'என்னடா மகாபிரமாதம்! அவன் பெரிய ஆசாமியின் மகன் என்று சொல்லுகிறாய், அவனுந்தான் '555' பிடிக்கிறான். நம்முடையதும், அதே ரகச் சிகரட்தான்' என்று அன்று 'ஒரு நாள் அப்ரகாம் சொன்னான், எனக்கு வெட்கமாகத்தான் இருந்தது. எவ்வளவு செலவு செய்தாலும் உனக்குத் தகும்".

செல்வவான்களின் செருக்கு, அவர்களையே அழிக்கும் நெருப்பாக மாறும். ஆகவே அவர்கள் உள்ளத்திலே அந்த நெருப்புக் குறையாதபடி நாம் அடிக்கடி தூண்டி விட்டுக்கொண்டே இருக்கவேண்டும்; அதிகமாகச்செலவு செய்கிறோம், அனாவசியமாகச் செலவு செய்கிறோம் என்ற எண்ணமே, அந்தச் சீமானுக்குத் தோன்றக்கூடாது. எவ்வளவு செலவு செய்தாலும் கெடுதி இல்லை, தகும். மேலும் அப்படிச் செலவு செய்வதுதான் நமது அந்தஸ்த் துக்கு ஏற்றது. ஜனங்கள் அப்போதுதான் நம்மைக் கண்டால் மதிப்பார்கள். செலவிலே சுருக்க ஆரம்பித்தால் கேவலமாக நினைத்துவிடுவார்கள் என்ற இப்படிப்பட்ட எண்ணம், சீமானின் மனதிலே முளைத்தபடி இருக்க வேண்டும், அந்தப் பயிர் செழிப்பாக இருக்க முகஸ்துதி என்ற தண்ணீரை நாம் பாய்ச்சியபடி இருக்கவேண்டும் என்ற தத்துவம், கோடீஸ்வரனுக்குப் பெயர் கோடீஸ்வரன், நிலைமை மகாமோசம், ஆசாமியோ பலே பேர்வழி. மரத்திலேதான் பழம் இருக்கும், நாம் நடந்து செல்லும் பாதையிலேயா இருக்கும்? பாதையிலே, முள்ளும் கல்லும் தான் இருக்கும். நமக்கு இந்தக் கல்தான் கிடைக்கும், கனி தோட்டக்காரனுக்குத்தானே கிடைக்கும். நாம் பாட்டையிலே போகவேண்டியவரானோம் என்று சொல்பவன் பைத்தியக்காரன், கிடைக்கிற கல்லை எடுத்துத் தொலை விலே தொங்கும் பழத்தை நோக்கி வீசினால் பழம் கீழே விழுகிறது, கல்லை விட்டுவிடு, கனியை எடு. சாப்பிடு! இதுதானே புத்திசாலி செய்யவேண்டிய காரியம்? பாதையிலே நடந்துகொண்டே, காலிலே கல் தடுக்கினால் கஷ்டப் பட்டு, அதே நேரத்திலே, மேலே அண்ணாந்து பார்க்கும் போது, மரத்திலே கனி குலுங்கக் கண்டு ஏக்கமடைந்து கிடப்பவன் ஏமாளி. மேலே பழம், உன் காலடியிலே கல்! கைக்கும் கருத்துக்கும் கொஞ்சம் வேலை கொடு, கனி பிறகு உனக்குத்தான். மரத்துக்கா, தோட்டக்காரனுக்கா?—இந்தத் தாக்கம் செய்பவன் கோடீஸ்வரன். பணம், பணக்காரனிடம் இருக்கிறது, மரத்திலே பழம் இருப்பதுபோல! ஏழையிடம் பணம் இல்லை, ஆனால் பணக்காரனிடம் உள்ள பணத்தைப் பறிக்கும் 'வித்தை' கூடவா இல்லை. அவன் மூளைக்குக் கொஞ்சம் வேலை கொடுத்தால்தானே என்பான் கோடீஸ்வரன். அந்த முறையிலே சீமான்களின் தோழனா இருந்தான், இலாபத்துடன், சீமான்களின் மனது குளிரும்படி பேசுவான், கெஞ்சுவதில்லை ; பணம் ஒரு பிரமாதமா என்று சொல்வான். சீமான் எவ்வளவு செலவு செய்தாலும் இது என்ன சாதாரணச் செலவுதான் என்று கூறுவான். வேறு பல சீமான்களின் நடைநொடி பாவனைகளைத் தன் வலையில் வீழ்ந்த சீமான் முன் புகழ்ந்து பேசுவான். அதன் மூலம் தன் நண்பனான சீமானின் மனதிலே, "ரோஷ" உணர்ச்சி உண்டாகச்செய்வான், அந்த ரோஷஉணர்ச்சி ஷெவர்லே காராகக் காட்சி அளிக்கும், ட்வீட் சூட்டாகத் தோற்றமளிக்கும், உயர்தரமான ஓட்டல்களுக்கு இழுத்துச் செல்லும், சினிமா நாடகங்களிலே, சோபாவிலே கொண்டு போய் உட்காரவைக்கும்! அதிகமாக அவசியமற்ற செலவு செய்து வருகிறோம் என்று பூபதி கொஞ்சம் கவலைப்பட்ட போது, "ரோஷ" உணர்ச்சி ஊட்டுவதற்கு, உபயோகித்த உபதேசம் மேலே குறிப்பிடப்பட்டது. அந்தப் பேச்சின் பயனாகப் பூபதிதான் உண்மையிலேயே தன் அந்தஸ்த்துக்கு ஏற்றபடி செலவு செய்யவில்லை என்று எண்ணவும், கொஞ்சம் வெட்கப்படவும் கூட நேரிட்டது. கோடீஸ்வரன், பூபதியின் ரோஷ உணர்ச்சியை அவ்வளவு சாமர்த்திய மாகக் கிளறி விட்டான், அதன்பலன், அன்று ரமாமணி வீட்டிலே ரசமான விருந்து பூபதிக்கு! கோடீஸ்வரனிடம் கொஞ்சிக்கொண்டிருந்தாள், கோகிலா, ரமாமணியின் தங்கை. 'உங்களுக்கென்ன குறைச்சல்! மிட்டாதாரர்தான் நீங்கள் போட்ட கோட்டைத் தாண்டுவதில்லையாமே" என்றாள் கோகிலம். கோடுபோடுவது நான், புதியவீடு கட்டுவதுவோ" என்றான் கோடீஸ்வரன் வேடிக்கையாக. "அந்த வீடு உங்களுக்கும் சொந்தம் தானே” என்று பாத்யதையைக் கவனப்படுத்தினாள் கோகிலம்.

"உனக்கு என்னப்பா குத்தலும் குடைச்சலும், பெட்டியிலே பணம் இருக்கிறது ஏராளமாக வட்டி வட்டி மூலம் அதனை வளர்க்கச் சரியான தந்தை இருக்கிறார். நீ சுற்றலாம், ஆனந்தமாக. விலையைப்பற்றிக் கவலை இல்லாமல் சாமான்களை வாங்கலாம். காலத்தைப் பற்றிய கவலையின்றி, வேடிக்கையாக இருக்கலாம். எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம். நீ கஷ்டபட்டுச் சம்பாதித்தது என்ன கெட்டுவிட்டது! எப்படியோ சொத்துச் சேர்ந்து விட்டது, சுகமாக வாழ முடிகிறது. நீ எதற்குப் பாடுபடப் போகிறாய், மற்றவர்களைப் போல நீயும் கஷ்டப்பட்டுப் பணம் சேர்ந்திருந்தால், உனக்கும் தெரியும் அதனுடைய பலன்! சீமானுக்குப் பிறந்தாய், சுகம என்ற தொட்டிலிலே வளர்ந்தாய் இப்போது ஆனந்தம் என்ற அம்ச தூளிகா மஞ்சத்திலே புரள்கிறாய் உனக்கு, ஊரின் கஷ்டம் என்ன தெரியும். பணம் தேடி அலுப்பவனின் பதைப்பு எப்படிப் புரியும், பாடுபடுபவனின் தொல்லையை எப்படி நீ தெரிந்து கொள்ளப்போகிறாய். உன் கவலை பூராவும், வித விதமான களியாட்டங்களைத் தேடுகிற அளவுதானே. பூபதியின் நண்பர்களிலே இவன் ஒரு தனி ரகம். பணக்காரனிடம் பணம் இருக்கிறது. மலரிலே கணம் இருப்பது போல, நாம் பச்சிலை, நாளாவட்டத்திலே சருகு ஆகிவிடுவோம். மலருக்கு இருக்கும் மணம் தனக்கு இருக்கவேண்டுமென்று பச்சிலை எதிர்பார்க்கலாமா, என்ற வாதம் புரிபவன், வக்கில் அல்ல, வியாபாரி, வியாபாரியினும், நஷ்டக் கணக்கையே அடிக்கடி கண்டு நொந்தவன்; பூபதியுடன் ஒரு காலத்திலே படித்தவன் என்ற முறையிலே, சந்திப்பு ஏற்படும். அப்போதும், தன் சஞ்சலத்தை மறக்க மாட்டான். பூபதியும் கோடீஸ்வரனும், ஆனந்தமாக விளையாடிவிட்டு வருகிறபோது, கண்டான்; நண்பன் என்ற முறையிலே, பூபதியின் சந்தோஷத்தின் சூட்சமத்தைப் பற்றியும், தன் சஞ்சலத்தைப் பற்றியும் பேசினான், அதுவும், மற்றப் பணக்காரர்களிடம் பேச முடியாதல்லவா "போடா சுடு மூஞ்சி" என்று கேலி பேசிவிட்டு, முதுகைத் தட்டிக் கொடுத்துவிட்டு, அவனிடம் பேசுவதற்காக அதுவரை நிறுத்தி வைத்திருந்த மோட்டாரை, ஓட்டலானான் பூபதி. வளமில்லாத வியாபாரம் செய்து வந்த வரதராஜன் தன் "கூட்டாளி" காதரிடம், பூபதியின் செல்வம், செல்வாக்கு ஆகியவைப்பற்றிப் பெருமையாகப் பேசிக்கொண்டே நடந்தான். காதர், பணக்காரர் உயர்ந்தவர்கள், ஏழை மட்டம் என்ற கொள்கையை ஏற்றுக் கொள்பவனல்ல. ஆகவே பூபதியைத் தன் நண்பன் புகழ்ந்தது பிடிக்கவில்லை எவன்தன் சாமார்த்தியத்தால், உழைப்பால், முயற்சியால், வாழ்கிறானோ அவனைத்தான் பாராட்டவேண்டுமே தவிர, பணத்தை யாரோ, எப்படியோ திரட்டிக் கொடுத்துவிட, அதை வைத்துக்கொண்டு படாடோப வாழ்வு நடத்துபவனைப் புகழ்வது, மதியீனம் என்பது காதர் கொண்டிருந்த கருத்து ஆகவே பூபதியின் மோட்டார், போகிற வேகத்தைக் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு, "கிடக்கிறான் தள்ளப்பா! என்ன புகழ்வது அவனை! மோட்டாரில் சவாரி செய்கிறானாம் அதிலே இருக்கிற ஒரு சிறிய ஆணியை விலை கொடுத்து வாங்கத்தேவைப்படும் பணத்தைக்கூட அவன் சம்பாதித்ததில்லை—சம்பாதிக்க முடியாது—சம்பாதிக்க வழி கிடையாது, என்னமோ, பணக்காரனுக்குப் பிள்ளையாகப் பிறந்து விட்டான், அகப்பட்டதை வைத்துக்கொண்டு ஆட்டம் ஆடுகிறான். இது ஒரு பெரிய கீர்த்தியா! இவன் தன்னுடைய புத்தி சாதுர்யத்தாலும், உழைப்பினாலும், இந்தச் சொத்துச் சேர்த்தானா; திறமைசாலி என்று இவனை புகழ, அவன் மட்டும், அந்தச் சீமானுக்கு மகனாகப் பிறக்காதிருந்தால், அரை ரூபா சம்பாதிப்பானா அன்றாடம்! விரலை மடக்கு, அவனுக்குப் பிழைக்கும் மார்க்கம் இன்னது தெரியு மென்று. படாடோபத்தோடு சரி, படிப்பு கிடையாது. மிரட்டத் தெரியும், ஒரு வேலையும் தெரியாது. எப்படிப் பிழைப்பான், என்ன வேளைக்கு இலாயக்கு. கூலி வேலை கூடச்செய்ய முடியாதே, உடவிலே அதற்கு வலிவு ஏது. ஒன்றுக்கும் பயனற்றவன். ஏதோ அங்கே பிறந்ததால், ஆடுகிறான் ஆட்டம். இதிலே பெருமையில்லை, இதற்காக இவனை நான் மதிக்கத் தயாராக இல்லை! என்னைக் கேட்டால், அவன் கையாலாகாதவன். பிழைக்கத் தெரியாதவன், அப்பா சேர்த்து வைத்திருப்பதைச் செலவிட்டுக் கொண்டு திரியும் ஒரு வீன் ஜம்பக்காரன் என்றுதான் சொல்லுவேன்." என்று வெறுப்பு, அலட்சியம் இரண்டையும் ஏராளமாகக் கலந்து பேசினான். பேசிவிட்டு 'அக்பர்ஷா' சிகரட்டைப் பற்றவைத்தான், ஆனந்தமாக.

"குட்மார்னிங் மிஸ்டர்! உட்காருங்கள் உங்களைப் போன்ற உயர்ந்த அந்தஸ்த்துக்காரர்கள் தான் ஊருக்கே மதிப்புத்தரவேண்டியவர்கள். உங்களுடைய உதவியும் திறமையும் தானே ஊருக்கே பொதுச்சொத்து. நீங்களெல்லாம், நினைத்தால் எந்தக் காரியமும் சாத்தியமாகும். நீங்கள்தான் ஊர் ஜனங்களைத் தலைமை தாங்கி நடத்திச் செல்லவேண்டும். ஜனங்கள் நல்வழிப்பட, நாகரிகம்பெற, அறிவு பெற, நீங்கள்தான் வேலை செய்யவேண்டும்." டிப்டி கலெக்டர், J ஈஸ், பங்களா எதிரே வந்துநின்றது, மிட்டாதாரர் பூபதியின் மோட்டார் என்பதை டபேதார் சொன்னதும், புதிய நாற்காலியைப் போடச் சொன்னார். பூபதி கொஞ்சம் வெட்கத்துடன் உள்ளே வரக்கண்டு, புன் சிரிப்புடன் வரவேற்றார்; கைகுலுக்கினார், கொஞ்சநேரம் 'லோக' விஷயம் பேசினார், பிறகு, பூபதி யுத்தநிதி சம்பந்தமாக மேலும் கொஞ்சம் மும்முரமாக வேலை செய்ய வேண்டும் என்பதற்காக, அவனைத் தூண்ட ஆரம்பித்தார். பூபதிக்குக் கொஞ்சம் 'ஸ்துதி' செய்தால் போதும், சொல்கிறபடி ஆடுவான் என்று J. ஈஸ், நினைத்தார். ஆகவே தான், பூபதியின் பெருமையைப் பூபதிக்குக் கவனப்படுத்தினார். பூபதிக்கு ஆனந்தம்; விடைபெற்றுக்கொண்டு வெளியே வரும்போது, தன் வீட்டிலே ஏதோ விசேஷத்துக்குச் சமயல் செய்த வேதாந்தாச்சாரி வரக்கண்டான் பங்களாவுக்குள். "ஐயர்! இங்கே என்ன வேலையாக வந்தீர்?” என்று பூபதி கேட்க, ஐயர் சிரித்துக்கொண்டே வேலையா? இது என், மருமான் ஆமன்னே!" என்றார் 'என்ன என்ன?' என்று திடுக்கிட்டுப் போய்க் கேட்டான் பூபதி, "ஜெமீன்தார்வாள்! டிப்டிக் கலெக்டர் யாருன்னு நினைச்சீர். அவருக்கு என் தமயனாரின் மகளைத்தான் கொடுத்திருக்கு" என்று கூறிப் பந்துத்துவத்தை விளக்கினார் வேதாந்தாச்சாரி விளங்கவில்லை. கொஞ்சம் விபரீதமாகவும் இருந்தது அந்தப்பேச்சு, பூபதிக்கு, சூட்சமத்தைத் தெரிந்துகொண்டார் வேதாந்தாச்சாரி "ஓ அதனாலே மிரள்கிறீரா? டிப்டிக் கலெக்டர், எங்களவாதான் ஜெமீன்தாரவாள்! பெயர் J. ஈஸ், என்று இருக்கவே, கிருஸ்தவான்னு எண்ணிண்டீர் போலிருக்கு. J. ஈஸ், என்பது, ஜெகதீஸ் என்ற பெயரின், ரத்னச் சுருக்கம். அவர் பெயர் ஜெகதீசாச்சார். சீமையிலே, J. ஈஸ்னு பெயரை வைச்சிண்டார். உத்தியோகத்துக்கும் அதே பெயர், ஓட்டிண்டது, அவ்வளவுதான்" என்று விளக்கம் கூறினார். பூபதி, வேதாந்தாச்சாரியாருக்கு, வழக்கத்தை விடச் சற்று அதிகமான மரியாதைகாட்டிவிட்டு பூபதி மோட்டாரில் புறப்பட்டார் வீடு நோக்கி. கோடீஸ்வரன், வேறு வேலை இருப்பதாகக் கூறிவிட்டுப் போய்விட்டான், "டாக்சியில்".

"பூபதி, பெரிய குடும்பம். நேக்கு அவா குடும்பத்திடம் ரொம்ப நாளாகப் பரிச்யம்" என்று கூறிக் கொண்டே, வந்தார், வேதாந்தாச்சாரி டிப்டி கலெக்டர், ஆனபிறகு உனக்கு இப்படிப்பட்ட சீமான்களின் சினேகம் கிடைத்தது. எனக்கு, இவர்களுடைய சினேகிதம் நெடுநாட் களாக உண்டு என்று கூறிக்கொள்வதிலே அவருக்கு ஒரு வகையான சந்தோஷம். டிப்டி கலெக்டர், ஆரம்பித்தார் தமது அர்ச்சனையை.

"இடியட்! கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தான், கொஞ்சம்கூட மட்டுமரியாதை தெரியாமல் சுத்த ஞான சூன்யம். வைசிராயின் பெயர் தெரியவில்லை. இன்னமும் விலிங்டன் தான் வைசிராயாக இருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கிறான். இவனெல்லாம், ஊருக்குத் தலைவர்களாக வேண்டும் இந்த உதவாக்கரைக்கு ராவ்பகதூர் வேண்டுமாம்!! எப்படியோ, பணம் சேர்ந்துவிட்டது, ஊரை ஏமாற்றிச் சேர்த்துக்கொண்டான். பணம் இருப்பதாலேயே, இவனுக்கு நாமெல்லாம் மதிப்புத் தரவேண்டுமாம். மடையன்! ஒரு சாதாரண கிளார்க்குக்குத் தெரிந்த விஷயஞானம் கூட இவனுக்கு என்ன தெரியும், மளமளவென்று அளக்கிறான், அந்த ஆபீசர் தெரியும், இந்தக் கலெக்டர் தெரியுமென்று. தெரிந்து என்ன, தெரியாமற்போனால் என்ன? எழுத்துப் பிழையில்லாமல் இன்னமும், தன்கையெழுத்தைப் போடக் கூடத் தெரியாது. நாமும் உத்யோகம் செய்கிறோம்; தலை நரைக்கிறவரையில், என்ன காண்கிறோம்! அந்த இடியட் 'இன்கம்டாக்ஸ்' நான்தான் இந்த ஜில்லாவிலேயே அதிகம் கட்டுகிறேன் என்று பெருமையாகப் பேசிக்கொள்கிறான். இவனுக்கு எஸ்டேட் மானேஜர், பி.ஏ.வாம் ! எவ்வளவு அலட்சியமாகப் பேசுகிறான் தெரியுமோ? பணம் போய் எப்படியோ மாட்டிக்கெண்டு இப்படிப்பட்ட இடியட்டுகளை நம்ம வாயினாலேயே புகழ்ந்து பேசவேண்டிய நிலைமையைக் கூட உன்டாக்குகிறது!" என்று சுடச்சுடப் பேசினார், மிஸ்டர் J.ஈஸ்.

"பணம் இருக்கலாம், நீர் பெரிய பங்களாவிலே வாழலாம், அதை எல்லாம் இங்கே சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை, உம்மிடம் சொத்து இருப்பதாலேயே, மதிப்புத்தர வேண்டுமென்ற அவசியம் கிடையாது. சட்டம், உம்மையும் சாதாரண மனிதனையும் சமமாகத்தான் நடத்தும், உளறாமல், கேட்ட கேள்விகளுக்கு, ஒழுங்காக, உண்மையை ஒளிக்காமல் பதில் சொல்லவேண்டும். குடித்துவிட்டு, நிலைதவறி, மோட்டார் ஓட்டிக்கொண்டு போனது, முதல்குற்றம்; மோட்டார் ஓட்ட லைசென்சு வாங்கவில்லை; அது இரண்டாவது குற்றம்; நாலு காலன் பெட்ரோல் டின் உமது மோட்டாரில் இருந்தது, அதற்கு உமக்கு "கோட்டா" இல்லை, பிளாக் மார்க்கட் பெட்ரோல் அது; மூன்றாவது குற்றம்; ஏன் உன்னை நான் சார்ஜு செய்யக்கூடாது?" அன்று மாலைதான், சார்ஜு எடுத்துக் கொண்டார், சப்-இன்ஸ்பெக்டர் சாப்ஜான்; அவருக்கு, கனம் ஆகாகான் தூரபாத்யம்; ஆகவே, அவர் சாதாரணமாக எந்தச் சீமானாக இருந்தாலும், நமக்கென்ன என்று கூறுபவர்; பூபதியின் பூர்வோத்திரம் தெரியாது. தெரிந்தாலும் அதற்காகச் சப்-இன்ஸ்பெக்டர் தன் டீக்கைக் குறைத்துக்கொள்ளுகிறவரல்ல. டிப்டி கலெக்டரிடம் கை குலுக்கிய ஜோரில், மோட்டாரைக் கொஞ்சம் வேகமாக ஓட்டினார் பூபதி. ஒரு சிறுவன், சிக்கிக்கொள்ள இருந்தான்; திடீரென்று, 'பிரேக்' போட்டார். ஜனங்கள் கூவினார்கள், இவ்வளவும், போலீஸ் ஸ்டேஷனுக்கு வெகு சமீபத்திலே நடந்தது. சப்-இன்ஸ்பெக்டர் சேதி என்ன என்று பார்க்கச்சொன்னார், ஜவானை. அவன், மோட்டரை நிறுத்தச் சொல்லிவிட்டு, ஐயா கூப்பிடுகிறார்! என்று சொன்னான் பூபதியிடம். பூபதிக்குப் பழைய சப்-இன்ஸ்பெக்டரே அங்கு இருப்பதாக எண்ணம், ஆகவே, நாளைக்கு வீட்டண்டை வரச்சொல் என்று கூறினார். சப்-இன்ஸ்பெக்டர் சாப்ஜான், இதை ஜவான், சொன்னதும் ஒரு முறைப்பிலே, ஜவானின் குலையை நடுங்கவைத்தார். வெளியே போனார், தங்கப் பிறம்பை ஆட்டிக் கூப்பிட்டார் பூபதியை. புதிய ஆசாமியாக இருக்கவே, பூபதி ஸ்டேஷனை நோக்கி வரவேண்டி இருந்தது. "உள்ளே போய் இரும்" என்று கூறிவிட்டு, கும்பலை விரட்டும்படி ஐவான்களை அனுப்பி விட்டு நேரே, மோட்டார் இருக்குமிடம் சென்று சோதனை போட்டு, பெட்ரோல் டின்னைக் கண்டுபிடித்து அதைத் தூக்கிக்கொண்டு வரும்படி வேறோர் கான்ஸ்டெபிளுக்கு உத்தரவு செய்துவிட்டு, கோபமாக உள்ளே நுழைய, அங்கே "ரைட்டர்" பூபதி எதிரே, நின்றுகொண்டிருக்கவும், பூபதி டி.எஸ்.பி. போல, உட்கார்ந்திருக்கவும் கண்டு, ஒரு களைப்பினால், ரைட்டரை, அவருடைய ஆசனத்துக்குத் துரத்திவிட்டு விசாரணையைத் துவக்கினார். பூபதி தன்னுடைய மிட்டாதாரர் நிலைமையை ஜாடை காட்டவே, சாப்ஜான், கோபம் அதிகரித்து பணக்காரர் என்றபதவி, ஏழைகளை மிரட்ட உதவுமே தவிரப், பொறுப்பாகவும், தயவு தாட்சணியம் பார்க்காமல் நேர்மையாகவும் நடந்து கொள்ளும், அதிகாரியை அடக்கப் பயன்படாது என்பதை விளக்கவேண்டும். காரசாரமாகப் பேசி, சார்ஜும் செய்து விட்டார்.

கோபம், ஆனால் யார் மீது காட்டுவது! பூபதி மோட்டாரை ஓட்டிக்கொண்டு, நேரே சப்-கலெக்டரிடமே போகலாமா, இந்த சப்-இன்ஸ்பெக்டரைப் பற்றிக் கூறிவிட்டு வருவோமோ, என்று எண்ணினார், பிறகு "பெட்ரோல் டின்" கவனம் வந்தது. நேரே பங்களா போவது, பிறகு என்ன செய்வது என்று யோசிப்பது என்று தீர்மானித்து, மோட்டாரைக் கொஞ்சம் குறைந்த வேகத்திலேயே ஓட்டிக் கொண்டு போனார். வழியிலே இரண்டு கூலிக்காரர்கள். மோட்டாரில் போகும் பூபதியைக் கண்டனர். அதிலே ஓருவன், கும்பிட்டான், பூபதியை. மற்றவன் "ஏன்? யார் அவர்?" என்று கேட்டான், கும்பிடு போட்டவன் சொன்னான்.

"மனுஷ ஜென்மமெடுத்தா, இப்படி எடுக்கவேண்டும். நாம் இருக்கிறோம் நாய் படாதபாடு பட்டுக்கொண்டு. அதோ பார்டா, போகிறான், மகாராஜன், புண்யசாலி, போன ஜென்மத்திலே, என்ன பூஜை செய்தானோ, இந்த ஜென்மத்திலே, இவ்வளவு அந்தஸ்தோடு, வாழறான் கடவுள் கடாட்சமா" என்று, மற்றவன், அதை மறுத்தும் பேசவில்லை, ஆதரித்தும் பேசவில்லை. நிலக்கடலையைக் கொரித்துக்கொண்டே இருந்தான். இன்னும் இரண்டொரு வீதிகளே இருந்தன வீடு போக. வேகத்தைக் குறைத்தார் பூபதி; மறுபடியும் யோசனை வந்தது, யுத்தப் பிரசாரகரை போய் பார்த்து விஷயத்தைச் சொல்வேமா என்று, போவதா வேண்டாமா என்ற யோசனையிலே ஈடுபட்டு, மோட்டாரின் வேகத்தைக் குறைத்துக்கொண்டே இருந்தார். இரண்டு ஆலைத் தொழிலாளர்கள், நடுப் பாதையில் சென்றுகொண்டிருந்தனர்; மோட்டார் ஊது குழலைப் பலமுறை அழுத்தவேண்டி நேரிட்டது பூபதிக்கு. ஆலைத் தொழிலாளர், நிதானமாக மோட்டாரை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, பாதை ஓரம் சென்றனர், மோட்டார், பிறகு அவர்களைத் தாண்டிச் சென்றபோது, ஒரு தோழன், மற்றவனிடத்திலே, "போரான் பார்டா பொதிமாடு மாதிரி. நாம்ப வேகாத வெயிலிலே பாடுபட்டுவிட்டு, தள்ளாடி நடக்கிறோம். எப்படிப்போகிறான் பார்த்தயா மோட்டார்லே. அந்த மோட்டார் சவாரியிலே கூட அவருக்குக் களைப்பு வந்தூட்டுது, கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைக்கிறான். நாம்ப, உடம்புபூரா மண், வீட்டிலே போய்க் கழுவவேணும். தெருக்கோடியிலே தண்ணிவந்தா" என்று சொன்னான். பூபதியின் மாளிகை இருக்கும் தெருக் கோடியிலே, ஏதோ கூட்டம்; ஒருவன், உரத்த குரலில் பேசிக்கொண்டிருக்கக் கண்டான் பூபதி. ஒரு சமயம் யுத்த நிதிக் கூட்டமோ என்று எண்ணினான்; பிறகு "செ! யுத்தநிதி கூட்டம் இப்படி ஏன் நடுத்தெருவிலே நடக்கப் போகிறது?" என்று எண்ணினான். எதற்கும் கவனிப்போம் என்று எண்ணி, மோட்டாரை மிக மொதுவாக ஓட்டிக் கொண்டு சென்றான். பிரசங்கி ஆவேசமாகப் பேசுவது தெரிந்தது. ஜனங்கள், மோட்டார் வருவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு, பிரசங்கத்தைச் சரியாகக் கவனிக்காமலிருந்தனர் பிரசங்கி, ஒரு விநாடி பேச்சை நிறுத்தினான், மோட்டாரைப் பார்த்தான். அதிலே இருந்த பூபதியையும் பார்த்தான். ஆரம்பித்தான், ஆவேசமாக ஜனங்களின் கண்ணும் கருத்தும், பேச்சாளி பக்கம் திரும்பிவிட்டது. "பாடுபடுபவர்களே! மேனி கருத்தவர்களே!" என்று வார்த்தைகள் கணீர் கணீரெனக் கிளம்பிற்று. பூபதியின் முகத்திலே வெறுப்புக்குறி தோன்றிற்று. தொழிலாளிகள் கூட்டம் போலிருக்கு என்று மெள்ளக் கூறிக்கொண்டே மோட்டாரைச் சற்று வேகமாக ஓட்டலானான். ஆனால் பிரசங்கியின் குரல் வேகமாக, அழுத்தமாக, ஆவேசத்துடன், மோட்டாரைத் துரத்திக்கொண்டு வருவதுபோல் இருந்தது. கூட்டத்திலே ஒலிபெருக்கி இருக்கவே பூபதியின் செவியிலே, ஒட்டி உடல் உலர்ந்து "ஏன் நாம்ப இருக்கிறோம், பாடுபடாமலா இருக்கிறோம், ஏன் பசியாரச் சாப்பிடக்கூட முடியலேன்னு கேள்வி கேட்கறயேப்பா, அதோ பார், போறான், உழைப்புறுஞ்சி! அதுபோன்ற ஜென்மங்களைக் கொழுக்கவைக்கத்தான் நாம்ப பரம்பரையாப் பாடு பட்டுப் பாடுபட்டு, இந்தக் கதியானோம். தெரியுதா? நாம்ப இப்படி இருக்கக் காரணம், அவனுங்க அப்படி இருக்கிறதாலேதான்" என்று அந்தப் பிரசங்கி பேசியது தெளிவாகக் கேட்டது. கோபம் அதிகரித்து பூபதிக்கு, மோட்டாரின் வேகமும் அதிகரித்தது. வேகம் பங்களா வாயற்படிக் கதவைத் தாக்கிற்று, கோபம், தோட்டக்காரன் முதுகிலே சுரீல் எனப் பாய்ந்தது. ஆனால் அன்று இரவு, பூபதியின் தலையணை நனைந்து விட்டது வெட்கம், கோபம், துக்கம், யாவும் ஒரே சமயத்திலே தாக்கியதால் மனம் கண்வழியாக நீரைச் சொரிந்தது! தூங்க முயற்சித்தான் முடியவில்லை, "உழைப்பை உறுஞ்சுபவன்! போகிறான் பார்! அந்த ஜென்மங்களை நாம் கொழுக்க வைக்கிறோம்." என்ற சத்தம், அவன் செவியைத் துளைத்துக்கொண்டே இருந்தது.சோடா குறைவாகக் கலந்து, விஸ்கியைச் சாப்பிட்ட பிறகும் அந்தச் சத்தம் கேட்டபடி இருக்கவே, பூபதி ரேடியோவைத் திருப்பினான்.

"பஞ்சம் பரவி, பட்டினி அதிகரிக்கவே, பாட்டாளிக் கூட்டம் படைபோலத் திரண்டு, மாளிகைகளில் நுழைந்து, கொள்ளை அடிக்கவும், தடுத்தவர்களைத் தாக்கவும், கைது செய்ய வந்த போலீசாரைப் பார்த்து நீங்களும் ஏழைகள் தானே என்று சொந்தம் கொண்டாடவும் தொடங்கிற்று. சீமான்கள் அலறி ஓடினர். சக்திக்கேற்ற உழைப்பு! தேவைக்கேற்றவசதி! என்ற முழக்கம் எங்கும் கேட்டது..." என்று ரேடியோவிலே, யாரோ, பிரஞ்சுப் புரட்சியையோ, ரஷியப் புரட்சியையோ, விளக்கிப் பேசிக்கொண்டிருக்கவே, விஸ்கி பாட்டிலை ரேடியோ மீது அடித்துவிட்டு, பூபதி பெருங் கூச்சலிட்டான். ஓடோடி வந்த தாயார், "என்னப்பா பூபதி!" என்று கதறினார்கள். "கெட்ட சகவாசம் வேண்டாமென்றால் கேட்கிறானா" என்றார் தகப்பனார். டெலிபோன் மூலம் சேதிகேட்டு விரைந்து வந்த டாக்டர் தினகர், "ஒன்றும் இல்லை, ரொம்பக்களைத் திருக்கிறார். ஒரு மாதம், ஊட்டி போய் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும்" என்று மருந்து இருக்குமிடத்தைக் கூறிவிட்டுப் போனார். பங்களாத் தோட்டக்காரச் சிறுவன்.

"வடக்கே ருஷிய நாடொன்றிருக்குதாம்

அங்கே.................."

என்ற பாட்டைப் பாடினான். விஸ்கியுடன் டாக்டர் கொடுத்த மருந்தும் சேர்ந்து, பூபதிக்கு மயக்கத்தைத் தந்தது. பாட்டுக் காதிலே பட்டதும் படாததுமாக இருக்கையிலேயே, படுக்கையில் சாய்ந்துவிட்டான்.