கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு
அவர் எழுதிக் கொடுத்தார், விசாலாட்சி விவாகம், என்று. நான் விசாலாட்சி விவாதம் என்று அச்சுக்கோர்த்தேன்! தூக்கவேலை, கொஞ்சம் துக்கமுங்கூடத் தான். எனவே தவறுமேல் தவறாகிவிட்டது.
சாமி காவடியானந்தர், என்று தெளிவாகத்தான் அவர் எழுதினார், நானோ அதை,
காமி சாவடியானந்தர் என்று பிழையுடன் அச்சிட்டேன். அது போலவே,
காசுமாலை
காமாலை
✽✽✽
மணி அரசு
பிணி அரசு
✽✽✽
விசாலம்
விசாரம்
✽✽✽
வேதம்
பேதம்
✽✽✽
மொய்
பொய்
என்று பல பிழைகள் ஏற்பட்டுவிட்டன, என் அஜாக்ரதையினால். துண்டு விஷயந்தான் இவ்வளவுக்கும் அதிலும், எங்கள் ஆசிரியர் மணி மணியாக எழுதுவார்—அதாவது எழுத்துக் கோர்வையாக, அச்சுப் போலவே இருக்கும் விஷயம் இருக்கட்டும், அது தானா முக்கியம், அவருக்குப், பக்கம் பக்கமாக எழுதவேண்டிய வேலை கிடையாது. சுருங்கக் கூறுவதே சூட்சமம் என்பது அவருடைய இலட்சியம்! பத்திரிகையின் பக்கங்கள், பேனாவின் தயவினாலே அல்ல, காரியாலயக் கத்தரிக்கோலின் கருணையால், அழகாக இருக்கும்.
"தம்பீ ! இது ஒரு பிரபல திருமணம். அழகாக அச்சிட்டு, இந்த விலாசத்துக்கு ஐம்பது பிரதிகள் அனுப்பி வைக்க வேண்டும், தெரிகிறதா" என்று கூறித் தாளைக் கொடுத்தார். நாளை மறுநாள் வருகிறேன் என்று துணை ஆசிரியருக்குக் கூறினார், துரிதமாக வெளியே சென்றார். தீபாராதனைக்குக் கற்பூரம் சரியாகக் கிடைக்காது கஷ்டப் பட்ட பக்தர்களின் தூதுக் கோஷ்டி, அன்று கலெக்டர் பிரவுன் துரையைக் காணப் புறப்பட்டது. அவர், ஒரு கிராம வைத்தியசாலைத் திறப்பு விழாவுக்குச் சென்றிருந்தார். அந்தக் கிராமத்துக்குக் கிளம்பிற்று தூதுக் கோஷ்டி. எங்கள் ஆசிரியர், அந்தத் தூதுக் கோஷ்டிக்குத் தலைவர்! பெயரும் பொருத்தந்தான். அனுமந்தராவ்! அவருடைய திருநாமம்! சில சமயம் வீட்டிலே அவர் சிரமப்படுவதுண்டு, தன் மனைவியைப் பெயரிட்டு அழைக்க அம்மையாருக்குச் சீதாலட்சுமி என்று பெயர் இருந்தது!! ஆமாம், இவ்வளவு கூறின நான், பத்திரிக்கையின் பெயரைக் கூறவில்லையே; பாருங்கள் அவ்வளவு மறதி எனக்கு! "வியாசர்" எங்கள் பத்திரிகையின் பெயர்.
"வியாசர்" பத்திரிகை ஆசிரியர் அனுமந்தராவ், தன் பாரியை சீதாலட்சுமியிடம் விடை பெற்றுக்கொண்டு, துணை ஆசிரியர் கருடாழ்வார் முதலியாரை நிர்வாகத்தைக் கவனிக்கும் பொறுப்பிலமர்த்தியதும், கிண்டிக் குதிரைப் பந்தயத்திலே அந்தக் கிழமை ஓடும், அசுவ இலட்சண விளக்கப் புத்தகத்திலே அவர் ஈடுபட்டு, ஆசிரியர் தந்த செய்தியை நான் அவசரத்திலே அச்சுப் பிழையுடன் செய்து கொடுத்தபோது, "ஏண்டா! தம்பீ! (என்ன எல்லோரும் தம்பி, தம்பி என்று கூப்பிடுகிறார்களே இவன் சிறு பயலோ என்று சந்தேகிக்காதீர்கள். எனக்கு வயது 40 என் பெயர் தம்பி முதலியார்!) சரியாகத்தானே செய்தாய்?" என்று கேட்டுவிட்டு, ஒரு முறை ஒப்புக்கு அதைப் பார்த்து "சரி போடு!" என்றார். மெஷின், அந்த அபத்தத்தை ஏற்க மறுக்குமா என்ன! அச்சுப் பிழை மட்டுமா, அது எவ்வளவோ, கருத்துக் கோளாறுகளைத் தாங்கித் தாங்கி, உரம்பெற்றதாயிற்றே; அது மள மள வென்று, அடித்துத் தள்ளிவிட்டது. பொழுது பல பலவென விடிந்ததும், பத்திரிகையைப் பார்சல் செய்யும் வேலை மட மட வென்று நடந்தது.
இரண்டாம் நாள் இரவு, தட தடவென்று கதவைத் தட்டினான் ஆபீஸ் பையன். திறந்தேன், திடுக்கிட்டேன்; அவசர அழைப்பு ஆசிரியரிடமிருந்து; ஓடினேன், கிடு கிடு வென்று!
"தம்பி! தலையிலே கல்போட்டாயே !" என்றார் ஆசிரியர் அனுமந்தராவ். கருடாழ்வாரைக் காணோம். பத்திரிகைக்கு அவர் கொடுத்த தாளை எடுத்துவரச் சொன்னார், கொண்டு வந்தேன், படி என்றார், படித்தேன். அது இது.
பிரபல திருமணம்
பலசரக்குக் கடையின்றிப் பிரபஞ்சம் நிலைக்குமா? முடியாது! நமது ஊரிலே பலசரக்குக் கடைகள் பல இருந்தாலும், பண்டரி விலாஸ் கடைக்கு ஈடாகுமா? ஆகாது ! அந்தக் கடைக்கு முடிசூடா மன்னராக விளங்கும், முகுந்த ராஜா முதலியாரின் மூத்த குமாரி, சௌபாக்யவதி விசாலாட்சி அம்மாளின் விவாகம், விமரிசையாக இன்று காலை நடைபெற்றது மணமகன் மணி அரசு முதலியார், ஜெகஜோதியான வைரக் கடுக்கன்கன் அணிந்து காட்சி அளித்தார். ஸ்ரீமதி விசாலம் புதிய காசுமாலையுடன் காட்சி தந்தது, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஸ்ரீமான் முதலியாரின், வைதிக சிரத்தையை அறிந்த பிராமண சிரேஷ்டர்கள், காலையிலே, வேதம் ஓதினர் ! இது புதிய முறையல்ல. பழைய ராஜாக்கள் காலத்திலே இதுவே சம்பிரதாயம்! மாங்கலியதாரணம், முதலிய சர்வ சம்பிரதாயக் காரியங்களும் இனிது நிறைவேறிய பிறகு, உள்ளூர் வெளியூர்ச் சீமான்கள், மொய் எழுதினர். மாலையிலே அருமையான சங்கீதக் கச்சேரி நடைபெற்றது. ஆனால் ஒரு விஷயம் இங்கு குறிப்பிட வேண்டி இருக்கிறது. சங்கீதம் சாஸ்திரோக்தமாக இல்லை, அது என்னமோ தமிழ் இசை என்று சிலர் கூறுகிறார்களே, அதுவாம் அது. ஊர்வலம் நடைபெற்றது ஊரெங்கும் இதே பேச்சு, இவ்வளவுக்கும் சிகரம் வைத்தது போல இருந்தது, காலையும் மாலையும் கலியாணத்துக்குச் சாமி காவடியானந்தர் விஜயம் செய்தது. அவர் நமது ஆசிரியர் அனுமந்தராவிடம் அன்யோன்யமாகப் பேசியது கண்டு, "கற்றாரைக் கற்றாரே காமுறுவர்" என்று பலர் கூறினர். முகஸ்துதியில் பிரியமில்லாத நமது ஆசிரியர், அந்தப் புகழுரையைக் கேட்டும் கேட்காதவர் போலிருந்தது, குறிப்பிடத் தக்கது.
இது தான் ஆசிரியர் தந்தது. இதிலே தான் விசாலம் விசாரமாகி, விவாகம் விவாதமாகி, சாமி காவடி யானந்தர் காமி சாவடியானந்தராகி, காசுமாலை காமாலையாகி, மணி அரசு பிணி அரசாகி, வேதம் பேதம் என்றாகி, மொய் பொய் என்றாகி வெளிவந்தது, எல்லாம் அச்சுப் பிழை தான். ஆனால் ஆசிரியர் அனுமந்தராவ், "தம்பி! என் வாழ்க்கையையே வதைத்துவிட்டாய்" என்று போட்ட கூச்சல், உண்மையாகவே, நான் செய்த பிழை மிக மிகக் கொடுமையானது என்று உணர்த்திற்று. உரத்த குரலிலே கூறிவிட்டார். "உன் கணக்குத் தீர்த்தாகிவிட்டது. வேலைக்கு வேண்டாம் இனி, போ வெளியே" என்றார். வெளியே சென்றேன், வேறென்ன செய்யமுடியும் ! ஒரு துண்டு விஷயத்தை இவ்வளவு பிழைகளுடன் வெளியிட்டால், அச்சுக் கோர்ப்பவனுக்கு அச்சகத்திலே, அலுவல் கிடைக்கத்தான் செய்யாது. என்ன செய்வது! ஏக்கம் கொண்டேன் தூக்கம் வரவில்லை. போக்கிடமின்றித் தவித்தேன்.
வேலை இல்லை என்ற உடனே வேலாத்தா — என் மனைவிக்குக் குல தெய்வத்தின் பெயரையே வைத்து விட்டார்கள் — கொண்ட கோபம் இருக்கிறதே, இவ்வளவு அவ்வளவு என்று சொல்லி முடியாது. "ஒரு நாளைக்கு, ஒரு வேளை சோத்திலே, தப்பித் தவறி ஒரு கல் இருந்துவிட்டா, என்னா கோபம் வருது உங்களுக்கு. இத்தனை காலமா அச்சாபீசு வேலையிலே இருக்கறிங்க, இவ்வளவு தப்புச் செய்யறிங்க எவன் கொடுப்பான் வேலை" என்று பேசினாள். பேசினாள் என்று ஒப்புக்குச் சொல்றேன், அவ போட்ட கூச்சல் இருக்கே, வேலாத்தாளே (குலதெய்வம்) வந்தது போலிருந்தது. என்னால் வேதனையைத் தாங்க முடியவில்லை. சே! குடும்பமும் வேண்டாம், இந்தக்குத்தல் குடைச்சலும் வேண்டாம், பேசாமே சன்யாசி ஆகிவிட வேண்டியதுகான் என்று தீர்மானித்து வேகமாக வீட்டை விட்டு வெளியேறினேன். நடந்துகொண்டேயோசித்தேன், வேலாத்தா போல, ஊரிலே எத்தனையோ அம்மணிகள் இருப்பார்களே, அவர்களிடந்தானே போய் பிச்சை கேட்கணும். "தடியனாட்டம் இருந்துகொண்டு, பிச்சை எடுக்க வந்து விட்டாயா?" என்று ஏசுவார்களே, என்ற பயம் பிறந்தது. சரி நிஜமாகவே சன்யாசி ஆகவேண்டியதில்லை ஒரு நாளைக்காவது, வீட்டுக்குப் போகாமலிருப்போம் வேலாத்தா "என்னமோ ஏதோ" என்று அழட்டும் என்று எண்ணினேன். எங்கெங்கோ சுற்றி விட்டு, இரவு பத்து மணி சுமாருக்கு, ஊர்க்கோடி சாவடியிலே போய்ப் படுத்தேன். அரைத் தூக்கம், அந்தச் சமயத்திலே "நமச்சிவாயம் !" என்று சத்தம் கேட்டது. சாவடிக்கு சாமி காவடியானந்தர் வந்தார். நான் படுத்திருந்த மூலையிலிருந்து எழுந்திருக்கவுமில்லை, பேச்சுக் குரலும் கொடுக்கவில்லை, நல்ல வேளையாக அவர் என்னைப் பார்க்கவில்லை. பார்த்துவிட்டால் என்ன செய்வது என்ற திகில் எனக்கு. "அடே பயலே! நீ தானே, என்னை, காமி சாவடியானந்தர் என்று அச்சடித்தது" என்று கேட்டு ஏதாவது மந்திரம் போட்டு விட்டால் என் கதி என்ன ஆகும்! நானோ பிள்ளை குட்டிக்காரன்! வாய் திறவாமல் சுருட்டிப் படுத்துக்கொண்டிருந்தேன்.
"ஏன் சாமி!" என்று வேறோர் குரலும் கேட்டது. நான், 'சாமியார், நமசிவாயம்' என்று சொன்னதும், ஆண்டவன் பெயரைச் சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். அது ஒரு ஆசாமியினுடைய பெயர் என்று அப்போது தான் தெரிந்தது. அவனும் சாமியாரும் ஏதேதோ பேசி விட்டு, அந்தக் கலியாணப் பேச்சையே ஆரம்பித்துவிட்டனர், எனக்குப் "பகீர்" என்றாகிவிட்டது சரி, நம்மைத்தான் திட்டப் போகிறார்கள் என்ற நினைப்பிலே, அதற்கு தகுந்தாப்போல, "யாரு சாமி! பேப்பரிலே, எழுதினவன், தாறுமாறாக" என்று வேறு நமசிவாயம் கேட்டுத்தொலைத்தான். சாமியார் சிரித்துவிட்டு, எழுதினவன் பேரில் தவறு இல்லை. அவனிடம் இருக்கிற கம்பாசிட்டர் ஒரு குருட்டுப்பயல் போலிருக்கு, அவன் அச்சுக் கோர்த்த போது தப்பும் தவறுமாகச் செய்துவிட்டான்” என்றார் சாமியார். "சிரிக்கிறீரே சாமி! அந்தப் பயல் செய்த காரியத்துக்கு, என் எதிரே கிடைத்தானானா....." என்றான் நமசிவாயம். ஐயோ! வேலாத்தாளின் கோபமே, பரவாயில்லையே, அடிபட்டாலும் வசவு கேட்டாலும், நம்ம மனைவிதானே என்ற சமாதானமாவது இருக்கும். இந்தப் பயல் யாரோ, வழியே போகிறவன், இவனல்லவா ' கருவுகிறான்' என்று தோன்றிற்று என்ன செய்வது. இடபேதம்! பேசாமல் கிடந்தேன். சாமியார் என் பக்கம் பரிந்து பேசலானார்! "அவன் செய்த தவறிலே கூட எவ்வளவோ உண்மை இருக்கிறது நமசிவாயம். உண்மையைச் சொல்லவேணுமானா, நான், காவடி கைங்கரியம் நடத்தி இந்தச் சாவடியைக் கட்டிச், சாமி காவடியானந்தர் என்று பெயரெடுத்தேன். அந்தக் கம்பாசிடர் கைதவறுதலாக, காமி சாவடியானந்தர் என்று அச்சடித்துவிட்டான். அது ஒன்று தவிர, மற்றது, பெரும்பாலும், உண்மையே தான்!" என்றார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. நமசிவாயத்துக்கும் அப்படித்தானே இருந்திருக்கும். நான் பேச முடியாத நிலை, அவனுக்கென்ன பயம், பேசினான், கோபமாகவே. "வேடிக்கை பேசுகிறீர் சாமியாரே! அந்த முட்டாள், விசாலாட்சி விவாகம் என்பதை, விவாதம் என்று அச்சடித்திருக்கிறான், அவனுக்குப் பரிந்து பேசுகிறீர்களே!” என்று கேட்டான். முட்டாளாம், நான்! என்ன செய்யலாம்! அவளும் அதையேதான் வேறே பாஷையிலே சொன்னாள். "உங்க புத்தி இருக்கே, உலக்கைக் கொழுந்து" என்று சொன்னாள், கோபம் வந்தது எனக்கு, இவன் என்னை முட்டாள் என்று அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறான், போறாத காலம். சாமியார், "நமசிவாயம்! விவாகம் என்று அச்சடிப்பதைவிட, விவாதம் என்று அச்சு அடித்ததுதான் பொருத்தம். ஏனென்றால், இந்தக் கலியாணம், விசாலாட்சிக்குக் கொஞ்சம் கூட இஷ்டம் கிடையாது. அவள் தாயாரிடம் இதுபற்றி விவாதித்தாள், புத்தி சொல்லப்போன என்னிடங்கூட விவாதித்தாள். ஆகவே, அவன் விவாகம் என்பதை விவாதம் என்று அச்சடித்தது, உண்மை, அவன் கை தவறுதலாலே, வெளிவந்தது என்று தான் அர்த்தம்," என்றார். "ஏன் விசாலாட்சிக்கு இஷ்டம் இல்லை?” என்று கேட்டான் நமசிவாயம். சாமியார் கேட்டார், 'மாப்பிள்ளை பெயர் என்ன?” என்று. "மணி அரசு" என்றான் நமசிவாயம். அதைத்தானே அந்தப் பயல் "பிணி அரசு" என்று அச்சடித்தான் என்று கேட்டார் சாமியார். அதற்காகத்தான் அந்தப் பிரகஸ்பதியைப் பாராட்டுகிறீரா? என்று நமசிவாயம் கேட்டான். சாமியார் "அவன் கை தவறி, மணி அரசு என்பதை பிணி அரசு என்று அச்சுக் கோர்த்தான். ஆனால் தெரிந்தே அப்படி அச்சடித்தாலும் தவறு இல்லை. ஏனென்றால் உண்மையிலேயே மாப்பிள்ளை நோயாளிதான். அவனுக்குக் 'காமாலை வியாதி' என்றார் சாமியார். நான் பூரித்துப்போனேன். "நோயாளியை மணம் செய்துகொள்ளும் பெண்ணின் பெயர் விசாலம் என்று இருந்தால் என்ன, அவன் தவறாக அச்சடித்தானே விசாரம் என்று, அது தான் பொருத்தம் என்று சாமியார் கூறினார். நமசிவாயத்தின் வாய் அடங்கி விட்டது. எனக்கோ துடிதுடிப்பு! எழுந்து போய் சாமியார் காலிலே விழவேண்டும் என்று. அடக்கிக்கொண்டு படுத்திருந்தேன், "யோசிக்கப்போனால் அந்தக் கம்பாசிட்டர் செய்தது ஒன்று கூடத் தவறு கிடையாது. "காசு மாலை மாப்பிள்ளை போட்டது, அவன் காமாலைக்காரன், ஆகவே காசு மாலை என்று அச்சிடாமல், காமாலை என்று அச்சிட்டதிலே எழுத்திலே பிழையே தவிர உண்மையிலே, பிழையல்ல. வேதம் என்பதை பேதம் என்று அச்சடித்தான். வேதம் உண்மையிலேயே, ஜாதி குலம் முதலிய பேதத்தை ஏற்படுத்தத் தோன்றியதே. அது மட்டுமில்லை, அன்றுவேதம் ஓதினார்களே பார்ப்பனர்கள், அவர்கள் ஓதியது, சரியான வேதமல்ல, ரொம்ப ரொம்பப் பேதம் இருந்தது, அந்த அரைகுறை ஆசாமிகளின் வேத பாராயணத்திலே. மொய் எழுதினாரே, அதிலே பெரும்பகுதி பொய்தான் வெறும் கௌரவத்துக்காக, எந்தெந்த ஊரிலிருந்தோ யாராரோ, ஐம்பதும் நூறும் மொய் அனுப்பினதாகப் பொய் சொன்னார், ஆகையால், மொய் என்பதற்குப் பதில் பொய் என்று அச்சடித்ததும் சரியே!" என்றார் சாமியார் நமசிவாயத்தின் கோபம் என் மீது இருந்தது போய்விட்டது. முகுந்தராஜ முதலியார் மீது பாய்ந்தது. "பெண்ணை ஒரு நோயாளிக்கா கலியாணம் செய்துகொடுத்தான் பாவம்! அந்தப் பெண் வேண்டாமென்று மறுத்துமா அதன் தலையிலே அந்தக் காமாலைக்காரனைக் கட்டி வைத்தான்" என்று நம சிவாயம் ஏசலானான். "இப்படிப்பட்ட தவறுகள் நடைபெறுவதை, அனுமதிக்கிறோம், ஆசீர்வாதம் செய்கிறோம், அவர் இஷ்டம் என்று கூறுகிறோம். அதனதன் விதிஎன்று கூறுகிறோம். இரண்டு பேருடைய வாழ்க்கையை அந்த ஒரு ஆசாமி தன் இஷ்டத்துக்கு ஏற்றபடி வளைத்து விட்டான். அதைத் திருத்தவும் முடியாது, கண்டிப்பதும் கூடாது. பாவம்! அந்தக் கம்பாசிட்டர், என்னமோ கை தவறித் தப்பாக அச்சுக் கோர்த்துவிட்டான், அவனை நான் மடையன், குருடன் என்றெல்லாம் திட்டினேன். விஷயத்தைப் பார்க்கப்போனா அவன் கைக்குத் தங்கத் தோடா அல்லவா போடணும் போல இருக்கு" என்று கூறினான். நமசிவாயம், எனக்கு ஆனந்தம்! அவன் தங்கத் தோடா கூடப் போடத்தேவையில்லை, அவன் சொன்ன வார்த்தை, வைரத் தோடா போலே இருந்தது, என் மனது குளிர்ந்தது. பிறகு வேறு ஏதோ தேவாரம் திருவாசகம் முதலிய சத் விஷயங்களைப் பேசிவிட்டு, நமசிவாயம் விடை பெற்றுக்கொண்டு போனான். எனக்கு, இனியாவது எழுந்திருந்து போய்ச் சாமி காலிலே விழுந்து கும்பிடுவோமா என்ற எண்ணம் உண்டாயிற்று. ஆனால் ஒரு பயம் இருந்தது. நான் செய்த எல்லாத் தவறுகளுக்கும் சாமியாரே சமாதானம் சொல்லிவிட்டார், ஆனால் நானோ சாமியாரையே, காமி சாவடியானந்தர் என்றல்லவா......
காமி சாவடியானந்தருக்கு தூக்கம் வரவில்லை படுத்துக் கொண்டே பாடிக்கொண்டிருந்தார். பனிரண்டு மணி சுமாருக்கு, யாரோ வரும் சத்தம்!
"ஏது பாட்டு, பலே ஜோரா இருக்குதே" என்று ஓரு குரல்கேட்டது திடுக்கிட்டுப் போனேன் பெண் குரல்! பேசியது பச்சை! எனக்குத்தெரிந்தவள்!! பலசரக்குக் கடையைக் கூட்டி மொழுகிச் சுத்தம் செய்பவள் அவள் வருகிறாள் சாவடிக்கு நடுநிசியில்! காமி சாவடியானந்தனே தான் இவன் ! இதிலேகூட நான் அச்சடித்ததிலே என்ன தவறு? செச்சே! அதற்கு மேலே, அங்கே நடந்த பேச்சை நான் எப்படிச் சொல்ல முடியும். சாமியாராம்! காவடியானந்தராம்! காமி, சாவடியிலே ஆனந்தராக இருந்தார். தேவாரமா பாடினார்! தில்லானா பாடினார்! பச்சை, சாமியாரிடம் விபூதிப் பிரசாதமா கேட்டாள், 'எடு எடு ! பணத்தை! ஏழுநாளா ஏச்சிக்கிட்டே வாராயே' என்றாள். விபூதிப் பையிலே இருந்து கல கலவென்று ரூபாயைக் கொட்டினான் அந்தக் காமி. ஐந்து ரூபாயைக் கொடுத்தான் பச்சையிடம்.
"மிச்சத்தை இப்படிப்போடு சாமி" என்று கூறிக்கொண்டே நான் போய் நின்றேன் பக்கத்திலே. அலறிப் போனான் அந்த ஆண்டி அவளும் ஆந்தை போல விழித்தாள். சாமியாரை நான் பேசவிடவில்லை."மகா யோக்யர் போல நான் செய்த மற்றத் தப்பெல்லாம் சரி என்று நமசிவாயத்துக்குச் சொன்னாயே, உன் பெயரை சாமி காவடியானந்தர் என்று அச்சடிக்கணும், காமி சாவடியானந்தர் தானே நீ" என்று கேட்டேன். ஆசாமி கைப்பிடியாக அகப்பட்ட பிறகு பயமென்ன. பயம் போய் விடவே, புத்தியும் கொஞ்சம் தீட்சணியமாக வேலைசெய்ய ஆரம்பித்தது. "கைதவறி மாற்றி மாற்றி அச்சடித்தேன் என்று தானே சொன்னே. தவறிச் செய்ததில்லை, சகல விஷயமும் தெரிந்துதான் அச்சடித்தேன். மரியாதையா பணத்தைப் போடு" என்றேன். என்னடா இது, கொள்ளை அல்லவா அடிக்கிறேன் என்று கோபமாக உங்களுக்கு. இந்தக் கூத்திக் கள்ளன் சாமியார் வேஷத்திலே அடிச்ச கொள்ளையிலே, இது எந்த மூலை? பணத்தைக் கொடுத்தான். விட்டேனா? "சரி" எங்க அச்சாபீஸ்காரன் உனக்குச் சினேகிதனாச்சே, அவனிடம் எப்படியாவது சொல்லி, மறுபடியும் நம்மை வேலையிலே சேர்த்துக்கொள்ளச் சொல்லணும் தெரியுதா? என்றேன் சரி என்றான் அழுகுரலில்.
இருட்டு, நடுநிசி, ஒருபயமும் இல்லாமல், வீட்டுக்கு நடந்தேன். அந்த இரண்டு சனியன்களும் கொஞ்சம் தொலைவாகவே என் பின்னால் வந்தார்கள். வீட்டுக்குப் போனேன், வேகமாக கதவைத் தட்டினேன், கொஞ்சம் அதிகாரக் குரலிலேயே, "வேலாத்தா! வேல்! வேலா! டீ, வேலாத்தா!" என்று பல ரகத்திலே, பல சுருதியிலே கூப்பிட்டேன். எனக்கென்ன பயம், எட்டு ரூபா இருக்கு அந்தக் கொட்டை கட்டி கொடுத்த பணம். "ஏது அதிகாரம் தெருவே தூக்குது" என்று அர்ச்சனை செய்து கொண்டே கதவைத் திறந்தாள் வேலாத்தா; வழக்கமாகப் பயத்தைக் காட்டும் என் கண்களிலே அதிகாரப் பார்வையைக் கண்டாள். அவளாலே கோபத்தை அடக்க முடியவில்லை. "வேலை போச்சின்னு கொஞ்சமான கவலை இருக்குதா உனக்கு விடிய விடிய ஊர்சுத்திவிட்டு வர்ரயே" என்றாள். "சீ" கழுதே! வேலை போச்சாம் வேலை! வேளைன்னு சொல்லுடி! நமக்கு இருந்த போறாத வேளை போச்சுன்னு சொல்லு" என்று கூறிக்கொண்டே எட்டு ரூபாயைக் கொட்டினேன்! அவள் பார்த்த பார்வை இருக்கே, என்னவென்று சொல்லுவேன்! நாளைக்கு வேலைக்கும் போவேண்டி !" என்றேன். ஏன்? எப்படி? ஏது? என்று அவள் எத்தனையோ தடவை கேட்டாள். ரொம்ப காலத்துக்கு முன்னாலே கொஞ்சுவாளே."ராசா இல்லை! கண்ணு இல்லை!" என்று, அந்த பழையது கூடப் போட்டாள். கடைசியில் பூராவிஷயமும் சொன்னேன். அவளுக்கு வந்த சந்தோஷத்திலே—வெட்கமாகக்கூட இருக்கும் சொல்ல—குமரி போல—என்னையும் புதுமாப்பிள்ளைக் கோலத்திலே இருப்பதுபோலவே—எண்ணிக் கொண்டு "அட என் ராசா!" என்று சொல்லி.........ஒரு முத்தம்கூடக் கொடுத்தாள்!!