கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி/"கடைதிறப்பின்" உட்பொருள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

"கடைதிறப்பின்" உட்பொருள்' டைதிறப்பு ' என்பது பரணி என்னும் பிரபந்தத்தின் உறுப்புக்களுள் ஒன்று என்பதையும் இதுபற்றி இரண்டு கருத்துக்கள் நிலவுகின்றன என்பதையும் மேலே குறிப்பிட்டோம். அக் கருத்துக்களை இங்கு ஆராய்வோம்.

அவை :

ஒன்று : கலிங்கப் போருக்குச் சென்ற வீரர்களுடைய மனைவியர் தம் கணவரின் பிரிவால் கவன்றும் ஊடியும் தம் வாயிற் கதவுகளை அடைத்துக் கொண்டு வீட்டினுள்ளேயிருக்க, சயங்கொண்டார் அவர் வீட்டு முன்புறம் சென்று தாம் பாடும் கலிங்க வெற்றியைக் கேட்கக் கதவு திறக்குமாறு வேண்டுதல் எனபது.

மற்றொன்று : முதற் குலோத்துங்கன் அடைந்த கலிங்க வெற்றியைக் கொண்டாடும் விழாவுக்கு நகரத்துப் பல்வேறு மகளிரும் அதிகாலையில் எழுந்து ஒருவரை யொருவர் துயிலெழுப்புவது என்பது.

இந்த இரண்டிலும் முன்னது அமைவுடையதன்று. போருக்குச் சென்றிருந்த தம் கணவன்மார் திரும்பி வருவதற்குக் காலம் தாழ்த்தினமையால் அவர்தம் மனைவிமார் கதவுகளை அடைத்துக்கொண்டு கவலையுற்றிருந்தனர் என்று கருதுவதற்கு ' கடைதிறப்பு ' என்ற பகுதியுள் வரும் செய்யுட்களில் யாதொரு குறிப்பும் காணப் பெறவில்லை. ஆனால், அதற்கு மாறாக மகளிர் தத்தம் கொழுநருடன் இருந்து அவர்களுடன் ஊடல் கொண்டும் கூடல் புரிந்தும் மகிழ்கின்ற நிலையில் அம்மகளிரைக் கடை திறக்கும்படி வேண்டும் பாடல்களே மிகுதியும் காணப் பெறுகின்றன. மகளிரின் கலவி புலவிகளை ஆடவர் எடுத்துக் கூறி அவர்களை விளித்தல் அசம்பாவிதம். ஒருகால் கற்பனைக் கதையுள்ள இலக்கியத்தில் அவ்வாறு கொள்ளல் மரபாக இருந்தாலும், வரலாற்று நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட இலக்கியத்தில் அவ்வாறு மரபாகக் கொள்ளுதல் சிறிதும் பொருத்தமன்று. அதிலும் சயங்கொண்டார் அத்தகைய சூழ்நிலையை உண்டாக்க ஒருப்பட்டார் என்று கருதுவது பெரியதோர் அபவாதமாகும். தக்கயாகப் பரணி, இரணியவதைப் பரணிகளுள் வரும் 'கடைதிறப்பு’க்களில் வானர மகளிர், நீரர மகளிர், மேரு, கயிலைகளில் வாழும் மகளிர் முதலியோர் கடை திறக்குமாறு விளிக்கப் படுகின்றனர். கவிஞரே அவ்வாறு விளிப்பதாகக் கொள்ளின் ஒட்டக்கூத்தரும் இரணியவதைப் பரணியாசிரியரும் வானம், மேரு, கயிலை முதலிய இடங்களுக்குச் சென்று அவ்விடங்களில் தூக்கத்தினுல் பகலில் கதவடைத் திருக்கும் மகளிரைக் கதவு தட்டுபவராகக் கூற வேண்டும். இது எவ்வாற்றானும் பொருந்தாது என்பது எண்ணிப் பார்ப்பார்க்கு எளிதில் புலனாகும். அன்றியும், இரவில் நிகழ்ந்த ஊடல் கூடல் முதலிய செய்கைகளால் அயர்ந்து துயிலெழாது வைகறையில் உறங்கிக் கிடக்கும் மகளிரை அவர்கள் செயல்களைப் பலபடியாகவும் அசதியாடிக் கூறித் துயிலுணர்த்தும் உரிமை தாமே அவரே என்ற வேற்று மையின்றிப் பழகும் தோழியர்க்கன்றி அவர்களுடன் அங்ஙனம் பழக வாய்ப்பே இராத ஆடவர்க்கு யாங்ஙனம் இயலும்?

இரண்டாவது கருத்துதான் மிகவும் பொருத்த முடையது; கொள்ளக்கூடியது. அது திருப்பாவை, திருவெம்பாவைகளின் அடிப்படைக் கருத்துக்களை யொட்டியுமிருக்கின்றது. கோகுலத்திலுள்ள ஆய்ச்சியர் கண்ணபிரானின் பேர்பாடி மகிழ்வதற்குத் தம் தோழியரின் முன்றிலிற் சென்று அழைப்பதை,

"நாயகப் பெண்பிள்ளாய்
நாரா யணன் மூர்த்தி
கேசவனப் பாடவும்நீ
கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்!
திற[1]

என்றும்,

"பந்தார் விரலி நின்
மைத்துனன் பேர்பாட
செந்தா மரைக்கையால்
சீரார் வளையொலிப்பு
வந்து திறவாய்'[2]

என்றும் அழைப்பதாக ஆண்டாள் கூறுகிறார், திருவெம்பாவையிலும் சிவபெருமானின் புகழ் பாடுமாறு திருவண்ணாமலையிலுள்ள மகளிர் ஒருவரை
 1. திருப்-7
 2. திருப்-18
யொருவர் வேண்டுவதாக மணிவாசகப் பெருமான் பேசுகிறார்,

முத்துஅன்ன வெண்ணகையாய்!
முன்வந்து எதிர்எழுந்து, என்
அத்தன், ஆனந்தன்
அமுதன் என்று அள் ஊறித்
தித்திக்கப் பேசுவாய்;
வந்துஉன் கடைதிறவாய்![1]

என்றும்,

கேழில் பரஞ்சோதி
கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள்
பாடினுேம் ; கேட்டிலையோ?
வாழி! ஈது என்ன
உறக்கமோ? வாய் திறவாய் ;
ஆழியான் அன்புடைமை
ஆம்.ஆறும் இவ்வாறோ ?
ஊழி முதல்வனாய்
நின்ற ஒருவனை
ஏழைபங் காளனேயே
பாடேல் ஓர் எம்பாவாய் ![2]

என்றும் அவர் பாடியுள்ளதைக் காண்க. இங்கு குலோத்துங்கனின் வெற்றியைச் சிறப்பித்துப் பாடுவதற்கு நகரத்து மகளிர் ஒருவரையொருவர் சென்று அழைப்பதாகச் சயங்கொண்டார் அமைத்துள்ளார். பெண்களின் இயற்கையழகு, செயற்கையழகு, மென்மைத்தன்மை, கணவன்மாருடன் அவ்ர்கள் ஊடியும் கூடியும் அனுபவித்த இன்பம் முதலியவற்றை
 1. திருவெம்-3
 2. திருவெம்-8
நேரில் எடுத்துக்கூறி அவர்களைத் துயிலுணர்த்துதல் மகளிர்க்கே இயல்பான செயலாகும்.

காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த
கலவி மடவீர் ! கழற்சென்னி
காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த
களப்போர் பாடத் திறமினோ[1]

[காஞ்சி-இடை அணி, காஞ்சிபுரம்; கலிங்கம்- உடை, கலிங்க நாடு; குலைந்த-நிலைபெயர்ந்து கிடந்த, அழிந்த.]


இலங்கை எறிந்த கருணா கரன்தன்
இகல்வெஞ் சிலையின் வலிகேட்பீர்
கலிங்கம் எறிந்த கருணா கரன்தன்
களப்போர் பாடத் திறமினோ.[2]

[இலங்கை எறிந்த கருணாகரன்-இராமன்; களப்போர்-கலிங்கக்களப்போர்.]

என்ற தாழிசைகளால் கலிங்க வெற்றியைப் பாடுதற்கே நகரத்து மகளிர் அழைக்கப்படுகின்றனர் என்பதை அறியலாம்.

வைகறையில்

திருப்பாவை திருவெம்பாவைகளில் இங்ஙனம் மகளிர் ஒருவரை யொருவர் எழுப்புதல் விடியற் காலையில் நடைபெறுதல் போலவே, கடைதிறப்பிலும் வைகறையிலேயே நடைபெறுகிறதாக சயங்கொண்டார் கூறுகிறார்.


 1. தாழிசை-63,
 2. தாழிசை-54.

மெய்யே கொழுநர் பிழைநலிய
வேட்கை நலிய விடியளவும்
பொய்யே யுறங்கும் மடநல்லீர்!
புனைபொற் கபாடம் திறமினோ"[1]

[கொழுநர்-கணவர்: வேட்கை-(கலவி) ஆசை; நலியமனத்தை வாட்ட]

போக அமளிக் களிமயக்கில்
புலர்ந்த தறியா தேகொழுநர்
ஆக அமளி மிசைத்துயில்வீர்
அம்பொற் கபாடம் திறமினோ."[2]

[போகம்-கலவியின்பம்; அமளி-படுகை; புலர்ந்தது. விடிந்தது; அகம்-மார்பு]

வருவார் கொழுநர் எனத்திறந்தும்
வாரார் கொழுநர் எனவடைத்தும்
திருகும் குடுமி விடியளவும்
தேயும் கபாடம் திறமினோ."[3]

[திருகும்-சுழலும் ; குடுமி-வாயிலின் மேற்புறத் தமைந்த குழிவிடத்தோடு பொருத்தப்பெறும் கதவின் தலைப்பகுதி]

என்ற தாழிசைகளால் இதனை அறியலாம்.எல்லா மங்கலங்களும் தொடங்குவதற்கு ஏற்றதாகிய காலைப் பொழுதே பரணி விழாவின் தொடக்கத்திற்கும் உரியது என்பது மிகவும் பொருத்தமானதொன்று. கடைதிறப்புப் பகுதியிலுள்ள தாழிசைகளை ஊன்றிப் படித்தால் இங்ஙனம் துயிலெழுப்பியவர்கள், உயர் குல மகளிர், அரசனும் தலைவரும் விழைந்த மகளிர், சிறையாகவும் திறையாகவும் பெற்ற மகளிர், ஓதுதல் போன்ற காரணம் பற்றிக் கணவனைப் பிரிந்து நிற்கும் மகளிர், பொது மகளிர் ஆகிய எல்லா வகுப்பைச் சார்ந்தவர்களும் இதில் பங்கு கொள்வதை அறியலாம். நாட்டு அரசன் வெற்றி எல்லோருடைய வெற்றியல்லவா? தக்கயாகப் பரணி, இரணிய வதைப் பரணிகளுள் வரும் கடைதிறப்புக்களில் வானரமகளிர், நீரரமகளிர், மேரு, கயிலைகளில் வாழும் மகளிர் முதலியோர் கடை திறக்குமாறு விளிக்கப்பட்டிருப்பது ஈண்டு கருதத் தக்கது.

வேறு இலக்கியச் சான்றுகள்

இவ்வாறு கொற்றவை பொருட்டுப் பரணி நட்சத்திரத்தில் கொண்டாடப் பெறும் விழாவில் மகளிர் கூழும் துணங்கையும் கொடுத்து காடு கெழு செல்வியை வழிபடும் வழக்கம் பண்டையது என்பதை முன்னர்க் குறிப்பிட்டோம். அவ்விழாவின் பொழுது துணங்கை, குரவை முதலிய கூத்துக்களையும், அம்மானை பந்து ஊசல் முதலிய ஆட்டங்களையும் மேற்கொண்டு தம் அரசனைப் பாட்டுடைத் தலைவனாக்கி அவன் வெற்றித் திறன்களைக் கொண்டாடுவர்; வெற்றிக்குரிய அரசனையும் அவனது நாட்டையும் வாழ்த்துவர். பண்டையில் இவ்வழக்கம் உண்டென்பதை குறுந்தொகை, மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் ஆகிய நூல்களாலும் அறியலாம். காவிரிப்பூம் பட்டினத்திலுள்ள மறக்குடிப் பெண்டிர் நாளங்காடி பூதத்திற்குப் பூவும் பொங்கலும் சொரிந்து குரவையாடி அரசனை வாழ்த்துவதை,

காவற் பூதத்துக் கடைகெழு பீடிகை
புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து

துணங்கையர் குரவையர் அணங்கெழுந் தாடிப்
பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும்
பசியும் பிணியும் பகையும் நீக்கி
வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி.[4]

[நோலை - எள்ளுருண்டை; விழுக்குடைமடை - நிணத்துடன் கூடின சோறு; அணங்கு-தெய்வம்; வசி-மழை]

என்ற சிலப்பதிகாரப் பகுதியால் அறியலாம் அன்றியும், செங்குட்டுவனது வடநாட்டு வெற்றியை அறிந்த ஆயச் செவிலியர் அதிகாலையில் அரண்மனைக்குச் சென்று துயிலெழுப்பி யுணர்த்திப் பாட்டொடு தொடுத்து வாழ்த்தியதையும்,

வெயிலிளஞ் செல்வன் விரிகதிர் பரப்பிக்
குணதிசை குன்றத் துயர்மிசைத் தோன்றக்
........................................
துணையணை பள்ளித் துயிலாற்றுப் படுத்தாங்கு
எறிந்துகளங் கொண்ட இயறேர்க் கொற்றம்
அறிந்துரை பயின்ற ஆயச் செவிலியர்
தோட்டுனை துறந்த துயரீங் கொழிகெனப்
பாட்டொடு தொடுத்துப் பல்யாண்டு வாழ்த்த[5]

இளங்கோவடிகள் சுட்டுகிறார்,எனவே,சயங்கொண்டாரும் செருக்களத் தியல்புகளை மகளிர்க் கூற்றில் வைத்துச் சிறப்பித்தார். அங்ஙனம் கூறுவது பண்டைய மரபை யொட்டியே உள்ளது.

சில காதல் நிகழ்ச்சிகள்

கடை திறப்புப் பாடல்கள் அனைத்தும் 'காதல் ரஸம்' சொட்டும் அற்புதப் பாக்கள். அவற்றுள் ஒருசிலவற்றை ஈண்டு காண்போம்.

பட்டப்பகலைப்போல் நிலவு வீசும் இரவில் மேல்மாடியில் மங்கையொருத்தி கலவியின்பத்தில் திளைத்த பிறகு தூங்கி விடுகிறாள். அவள் அணிந்திருந்த ஆடை நெகிழ்ந்துபோய் விடுகிறது. அரைத் துக்கத்தில் நிலவொளியை ஆடையென நினைத்துக் கொண்டு அதைப் பற்றி இழுத்து உடுத்திக் கொள்ள முனைகிறாள். இதைக் கவிஞர்,

கலவிக் களியின் மயக்கத்தால்
கலைபோய் அகலக் கலைமதியின்
நிலவைத் துகிலென்று எடுத்துடுப்பீர்
நீள்பொற் கபாடந் திறமினோ.[6]

என்று காட்டுகிறார்.

கலவிப் போரில் ஒருத்தியின் கொங்கையில் எப்படியோ நகக்குறி ஏற்பட்டுவிடுகிறது. அந்தக் குறியை அடிக்கடி பார்க்கும் பொழுதெல்லாம் கலவியில் தான் பெற்ற இன்பத்தை அடைகிறாள். நித்திய தரித்திரன் ஒருவனுக்கு எதிர்பாராத வண்ணம் நிறைந்த பொருட் குவியல் கிடைத்தால் அவன் அச்சத்தின் மிகுதியால் அப்பொருட் குவியலைப் பிறர் அறியாவண்ணம் பார்த்துப் பார்த்துப் பெரு மகிழ்ச்சியுறுதல் போல, தன் கொங்கையில் புதியனவாய்த் தோன்றியுள்ள தம் கொழுநரின் நகக் குறியை நாணம் மிகுதியால் தனியிடத்திற்குச் சென்று அங்குப் பார்த்துப் பார்த்து மகிழ்கின்றாள். இதனைச் சயங்கொண்டார்,


 1. தாழிசை-36
 2. தாழிசை-37
 3. தாழிசை-69
 4. சிலம் - 5 : 67.73,
 5. சிலப் 27: 195-212.
 6. தாழிசை-34,

முலைமீது கொழுநர்கைந் நகமேவு குறியை
முன்செல்வ மில்லாத அவர்பெற்ற பொருள்போல்
கலைநீவி யாரேனும் இல்லாவி டத்தே
கண்ணுற்று நெஞ்சங்க ளிப்பீர்கள் திறமின்.[1]

[கொழுநர்-கணவர் ; கல்-மேலாடை ; நீவி-விலக்கி]

என்று காட்டுகிறார்.

அழகிய மங்கை ஒருத்தி காலில் அணிந்துள்ள சிலம்புகள் ஒலிக்குமாறு ஒய்யார நடை போட்டுக் கொண்டு நடந்து வருகின்றாள். அவள் கொங்கை பாரத்தை அவள் நுண்ணிய இடை தாங்க முடியாது போகும் என்று சிலம்புகள் எண்ணி " அபயம், அபயம்” என்று ஒலிக்கின்றன என்று கவிஞர் காட்டுகின்றார்.

உபய தனம் அசையில் ஒடியும் இடைநடையை
ஒழியும் ஒழியுமென ஒண்சிலம்பு
அபயம் அபயமென அலற நடைபயிலும்
அரிவை மீர்கடைகள் திறமினோ.[2]

என்ற தாழிசையைப் படித்துப் படித்துச் சுவைக்க. இயல்பாக எழும் சிலம்பு ஒலிக்கு கற்பனைத் திறத்தால் கவிஞர் புதுப்பொருள் கற்பித்துச் சிறப்பிக்கும் திறனை எண்ணி மகிழ்க. தாயுமான அடிகளும் இத் தாழிசையின் கருத்தை அடியொற்றி அப்படியே,

மின்போலும் இடைஒடியும்
ஒடியுமென மொழிதல்போல்
மென்சிலம்பு ஒலிகள்ஆர்ப்ப
வீங்கிப் புடைத்துவிழு
சுமையன்ன கொங்கைமட
மின்னார்கள்.[3]

என்று தன் பாடலில் ஆண்டிருப்பது எண்ணி மகிழ்வதற்குரியது.

இரவில் ஒரு மங்கையும் அவள் கணவனும் கலவிப்போர் நிகழ்த்திய பொழுது காமம் மீதுார மனங்கனிந்து முறை பிறழ்ந்து காதற் சொற்களைப் பேசிக்கொண்டிருந்தனர். அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த அவள் வளர்த்த கிளி, 'சொன்னதைச் சொல்லுமாம் கிளி' என்ற தன் குணத்திற்கேற்பப் பகலில் அவற்றைச் சொல்லத் தொடங்கிற்று. அவற்றைக் கேட்ட அம்மங்கை மிகவும் நாணி கிளியை மேலும் பேசவிடாது அதன் வாயைப் புதைத்தாள். இதனைக் கவிஞர்,

நேயக் கலவி மயக்கத்தே
நிகழ்ந்த மொழியைக் கிளியுரைப்ப
வாயைப் புதைக்கும் மடநல்லீர்
மணிப்பொற் கபாடந் திறமினோ[4]

என்று காட்டுகிறார், பிற்காலத்தில் இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி அவர்களும் சதாவதானம் சரவணப் பெருமாள் கவிராயரும் வினாவிடையாக அமைத்துப் பாடிய

தத்தை யொருத்திதன்கைத்
தத்தையையோ யாதடித்த
வித்தையென்ன தென்முகவை
வேல்வேந்தே-மெத்தையின்மேல்
புல்லினவென் மன்னன்
புகன்மொழிகற் றுச்சகிபால்
சொல்லினையே என்று துடித்து[5]

என்ற வெண்பாவில் மேற்கூறிய தாழிசையின் பொருள் அமைந்திருக்கின்றது. இம்மாதிரியாக கலவிப்போர் நிகழ்ச்சிகளை வருணிக்கும் பாடல்கள் இப்பகுதியில் பலவுள்ளன. அன்பர்கள் அவற்றினைப் படித்துச் சுவைப்பார்களாக.

புறத்தில் அகம்

இனி, புறப்பொருளாகிய போர், வெற்றி முதலியவற்றைப் பாடவந்தவிடத்து அகப்பொருள் சுவைகளைப் பாடியதன் கருத்துதான் என்ன என்று பார்ப்போம்.

நூலில் கடைதிறப்பை அடுத்து வரும் உறுப்புக்களுள் இராசபாரம்பரியம் 'அவதாரம்' என்ற இரண்டைத் தவிர ஏனையவைகள் குரூரமான அம்சங்களையே வருணித்துச் செல்லுகின்றன. பேயும் பிடாரியும், பிணமும் நினமும், இடுகாடும் சுடுகாடும், அறுபட்ட தலையும் மிதிபட்ட உடலும், செங்குருதி வெள்ளமும் சினமறவர் வீரமும், போர்க்களத்திலுள்ள பல்வேறு பயங்கர நிகழ்ச்சிகளும், கேட்டாரிடம் அச்சத்தை விளைவிக்கும் பேய்கள் கூழ் அட்டு உண்ணும் காட்சிகளும் காணக் கிடக்கின்றன. இவற்றிற்கு முன்னதாக துவரத் துறந்த ஞானியர் உள்ளத்தையும் ஈர்க்கவல்ல இன்பப் பாடல்களைத் தக்க முறையில் பொருத்திப் பாடினுல், வீரச்சுவையும் உவகைச் சுவையும் (சிருங்காரம்) சிறக்கும் என்றே கவிஞர் இவற்றிற்கு இடம் தந்திருக்க வேண்டும். அன்றியும், நிமிர்ந்த செல்வமும் நிறைந்த இளமையும் உள்ள வீரர்கள் தம் காதலியரைத் துறந்து போர்க்காதலில் ஈடுபட்டார்கள் என்றால், அவர்கள் வீரத்தை என்னென்று சொல்வது ? இது சிறந்த தியாகம் அல்லவா? இந்த நிலையைக் காட்டிய பிறகு அவர்களின் வீரத்தையும் காட்டினால் அவர்களுடைய மனப்பான்மையும் உடற்பான்மையும் எளிதில் புலனாகும் என்று எண்ணித்தான் போர் பாடும் நூலில் கலவிப் போர்க் குறிப்புக்களையும் கவிஞர் காட்டினர் என்று கருதுவதில் தவறு ஒன்றும் இல்லை.

இன்னொரு விதமாகவும் கருதலாம். எல்லாச் சுவைகளிலும் சிறந்தது சிருங்காரம் ; எல்லா உயிர்ப் பிராணிகளிடமும் பரம்பரை வாசனையாய் அமைந்து கிடப்பது; அவற்றின் இனப் பெருக்கத்துக்கும் பெருந்துணை புரிவது, ஆண்டவன் படைப்பில் அற்புதமாக அமைந்து கிடப்பது படைப்பின் பெருவிசையாக உள்ளதும் இதுவே. தவிர, தாவர உலகத்திலுள்ள ஒரு செய்தியை அறிந்தால் இதை இன்னும் நன்கு உணரலாம். தாவரங்களில் சிலவற்றின் இனப் பெருக்கத்திற்குத் துணை புரிபவை வண்டுகள். அவ்வண்டுகளைத் தம்பால் ஈர்ப்பதற்கு அவற்றின் மலர்கள் பல்வேறு வண்ணங்களுடனும், மணங்களுடனும் அமைந்துள்ளன ; அன்றியும், அவை வண்டுகளின் உணவாகிய தேனையும், மகரந்தங்களையும் கொண்டுள்ளன. தம் இனப் பெருக்கத்தின் உயிர்நாடியே வண்டுகளின் உணவாக அமைந்திருப்பது படைப்பின் விந்தை என்று கருத வேண்டும். படைப்பின் இந்த இரகசியத்தை அறிந்த கவிஞர்கள் சிறுமதியினரையும் இன்பச் சுவையால் ஈர்த்து விடலாம் என்று கருதியே தம் நூல்களில் அகப்பொருள் துறைகளையமைத்துப் பாடுகின்றனர். இதைக் கருதி நூலினைப் படிப்போர் நூலில் காட்டும் பேருண்மைகளையும் பிறவற்றையும் அறிந்து பெரும்பயன் எய்துகின்றனர். நூலிற்கு அகப்பொருட் சுவையூட்டுவது கொயினா மருந்திற்குச் சருக்கரைப்பாகு ஊட்டிச் செய்வது போன்ற முறையாகும். இந்த முறையை மேற் கொண்டே சயங்கொண்டாரும் போரைக் குறிக்கும் தம் நூலில் கலவிப் போரையும் காட்டினார் என்று கொள்ளுவது ஏற்புடைத்தாகும். 1. தாழிசை-47
 2. தாழிசை-58,
 3. தாயுமானவர்:தேசோமயானந்தம்-செய். 10,
 4. தாழிசை-67,
 5. தனிச் செய்யுள் சிந்தாமணியிலுள்ளது இப்பாடல்.